வன்முறையான சைக்கோபாத்கள் தங்களது மூர்க்கத்தனத்தை தங்கள் மீதே காட்டிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சைக்கோபாத்கள் மனோதத்துவ சிகிச்சைக்குப் பிறகு தங்களது குணாதிசயம் கொடுத்த குற்றவுணர்ச்சியின் காரணமாக மிகவும் மோசமான முறையில் தற்கொலை செய்து இறந்துள்ளார்கள். அவர்கள் தங்களது உயிருக்கு மதிப்பே இல்லையென கருதுவதும், இனி வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோமென ஒடுங்கிப்போவதுமே இத்தகைய கொடூரமான தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகிறது.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
சாந்திவனம்…
நவநீதம் பனியில் உறைந்த பதுமை போல அமர்ந்திருந்தாள். பொன்மலையின் குளிர்ந்த சீதோஷ்ணம் கூட அவளது வியர்வை உற்பத்தியைக் குறைக்கவில்லை. விசாரணைக்காக ஒரு அறையில் வீடியோ எடுப்பதற்கான ஆயத்தத்தோடு அவளெதிரே அமர்ந்தாள் இதன்யா.
அரண்டு போயிருந்த நவநீதம் மிரட்சியோடு, தான் சொல்லப்போவதெல்லாம் வீடியோவாகப் பதிவாகுமா எனப் பார்த்தாள்.
இதன்யா விசாரணையைப் பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பியதும் ஆசுவாசமுற்றவள் அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் அவள் வந்து நிற்கவும் கதிகலங்கிப் போனாள். இனி என்ன செய்வதென புரியாமல் அவள் தவித்தபோதே இதன்யாவின் விசாரணை ஆரம்பித்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“முருகையாவ கொலை பண்ணுனது ஜான் தான்னு ப்ரூவ் ஆகிடுச்சு… அவரும் ஒத்துக்கிட்டார்… உனக்கும் ஜானுக்கும் என்ன சம்பந்தம்?”
“அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லங்கம்மா… இந்த வீட்டுல அவரும் என்னை மாதிரி ஒரு சர்வென்ட் தானுங்க… அதை வச்சு தான் பழக்கம்”
“ஓ! இனிமே இப்பிடி நடந்துக்கிட்டிங்கனா அப்பா கிட்ட சொல்லிடுவேன்னு இனியா உன்னையும் ஜானையும் எச்சரிச்சிருக்காங்க… அப்பிடி எச்சரிக்குற அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன தப்பு பண்ணுனிங்க?”
“நாங்களா? நாங்க ஒன்னுமே பண்ணலையே மேடம்”
பொய் சொல்லித் தடுமாறினாள் நவநீதம். இதன்யாவின் பார்வையில் கடுமை தெரியவும் எச்சிலை விழுங்கியவள் “ஒரு தடவை கொஞ்சம் பணம் திருடிட்டோம்மா” என்று சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள் நவநீதம்.
“அது மட்டும் தான் காரணமா?” சந்தேகமாக இதன்யா வினவவும் திருதிருவென விழித்தாள் அவள்.
“நீயும் ஜானும் சர்ச் பக்கத்துல இருக்குற ரகசியப்பாதைல போனதை நான் பாத்தேன்… அது சாத்தான் வழிபாடு பண்ணுற கும்பல் யூஸ் பண்ணுற பாதையாச்சே… அங்க உங்களுக்கு என்ன வேலை?”
ஏற்கெனவே ரோஷணின் வாக்குமூலத்தில் அவர்களும் சாத்தான் வழிபாட்டுக்குழுவின் உறுப்பினர்கள் என்று காவல்துறைக்குத் தெரிந்திருக்குமென ஊகிக்காமல் மீண்டும் நவநீதம் பொய் சொல்ல ஆரம்பித்தாள்.
“அது… நான் ஜானை என் கூடப் பிறந்த பொறப்பா பாத்தேன் மேடம்… அவர் கூப்பிட்டாரேனு நம்பி அங்க போனேன்… ஆனா அந்தாளு… என் கிட்ட..” கண்ணீரே வராத கண்ணைக் கசக்கி பரிதாபமாக நடித்தாள் அவள்.
இதன்யா அவள் பேசுவது உண்மையா பொய்யா என தனியாக ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை. சில ஆட்களின் குணாதிசயமே இதுதான். கூடவே இருந்து எல்லா தவறுக்கும் உதவி செய்வார்கள். கூட்டாளி ஒருவர் மாட்டிக்கொண்டால் அவர்களைக் கழட்டிவிட்டுத் தான் மட்டும் தப்பிக்கப் பார்ப்பார்கள். மாட்டிக்கொண்டவர் மீதே தன் தவறையும் சுமத்திச் சாமர்த்தியமாக ஒளிந்துகொள்வார்கள்.
இப்போது ஜான் குற்றம் புரிந்து காவல்துறையிடம் மாட்டிக்கொண்டதால் அவர் மீது என்னப் பழி போட்டாலும் காவல் துறை நம்பிவிடும், தான் தப்பித்துக்கொள்ளலாமென எண்ணி நவநீதம் பொய் சொல்வதைக் கூடவா இதன்யாவால் கண்டுபிடிக்க முடியாது!
“அந்தாளு எதுக்காக உன்னை அங்க கூப்பிட்டான்? அதை மட்டும் சொல்லு”
“அது…”
காரணம் என ஒன்று இருந்தால் தானே சொல்வதற்கு. திணறியவளைப் பார்வையால் கொல்லும் சக்தி மட்டும் இதன்யாவிற்கு இருந்திருந்தால் ஆயிரம் முறை கொன்றிருப்பாள்.
“உண்மைய சொல்ல யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல… ஆனா பொய் சொல்லணும்னா ஆயிரம் தடவை யோசிச்சு அடுத்தவங்களுக்குச் சந்தேகம் வராத மாதிரி சொல்லணும்… பாவம், உனக்கு யோசிக்கத் தெரியல நவநீதம்… நான் அமைதியா கேக்குறப்பவே உண்மைய சொல்லிட்டா உனக்கு நல்லது”
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டாள் இதன்யா. நவநீதம் இதற்கு மேல் பொய் சொன்னால் தப்பிக்க இயலாதென புரிந்து கொண்டாள்.
“நானும் ஜானும் சாத்தான் வழிபாடு கூட்டத்துல கலந்துக்கணும்னு அங்க போனோம் மேடம்”
“அங்கனா எங்க?”
“காட்டுக்குள்ள இருக்குற குகைக்கு”
“போலீஸ் என்கொயரி பண்ணுன இடத்துக்குப் போறதுக்கு உங்களுக்குலாம் எப்பிடி தைரியம் வந்துச்சு” உறுமிய இதன்யா தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு “ரோஷண் இறந்துட்டான்.. இப்ப உங்க குரூப்புக்கு யார் தலைவன்?” என்று கேட்க
“மு…முத்து” என்றாள் நவநீதம்.
முத்துவா? இந்தப் பெயர் ஜானின் நண்பனுடைய பெயராயிற்றே! அப்படி என்றால் இவளுக்கும் அவனைத் தெரிந்திருக்கிறது. ரோஷணின் தற்கொலைக்குக் காரணமானவன் முத்து. அவனை இந்த ஊரில் யாருக்குமே தெரியாதென்று தானே மார்த்தாண்டன் விசாரிக்கும்போது ஊரார் சொல்லியிருந்தார்கள்.
“அவன் யாரு? இந்த ஊர்க்காரனா?”
“இல்ல மேடம்… அவனுக்குப் பூங்குன்றம்… ஜானுக்குத் தெரிஞ்ச பையன்”
“பையனா? ஜானோட ஃப்ரெண்ட் இல்லையா அவன்?”
“ஜானை விட ஏழு வயசு சின்னவன் மேடம்… எனக்கும் அவன் இளையவன் தான்… ரோஷணுக்கு அடுத்து அவனுக்குத் தான் சாத்தான் வழிபாடு பத்தி எல்லாமே தெரியும்… அவன் எங்க குரூப்ல சேர்ந்து ஒரு வருசம் தான் ஆகுது”
“ஓ! எதுக்காக அவன் சேர்ந்தான்னு தெரியுமா?”
“அவன் பாம்பேல டிவி சீரியல் எடுக்குற ஸ்டூடியால மேக்கப் போடுற வேலை பாத்தப்ப அங்க ஏதோ திருட்டுவேலை பண்ணி மாட்டிக்கிட்டான்… நல்ல சம்பளம் தான்… அவனுக்குத் திருடுனா ஏதோ ஒரு சந்தோசம் வருமாம்… த்ரில்லுக்காகவும் சந்தோசத்துக்காகவும் திருடி மாட்டுனதுக்கு அப்புறம் பாம்பேல எந்த வேலையும் கிடைக்கலனு பூங்குன்றத்துக்கே திரும்பி வந்தவன் எப்பிடியோ சாத்தான் வழிபாடு குரூப்ல சேர்ந்துட்டான்”
“அவன் இங்க வந்து என்ன வேலை பாத்தான்?”
“அவன் கார் ஓட்டுவான்னு ஜான் சொல்லிருக்காரு மேடம்”
“அவனுக்கும் ரோஷணுக்கும் எதுவும் பிரச்சனை வந்துச்சா?”
“இல்ல மேடம்… எங்க குரூப்ல இருக்குற எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் சினேகிதமா இருப்போம்… யாரும் சண்டை போட்டுக்கமாட்டோம்”
“ஓ.கே! இப்ப முத்துவை விடு… முருகையாவுக்கும் ஜானுக்கும் என்ன பகை? முத்துவை முருகையாக்கு எப்பிடி தெரியும்? அவரைக் கொல்லுற அளவுக்கு அவங்க ஏன் துணிஞ்சாங்க?”
“முருகையாவ இங்க இருக்குற யாருக்குமே பிடிக்காது மேடம்… எங்க யாருக்கும் முதலாளி குடும்பம் மேல விசுவாசம் இல்லனு சொல்லுவாரு அந்தாளு… அதை வச்சு தான் அடிக்கடி சண்டை வரும்”
இதன்யா ஜான் சொன்ன விவரம் ஒன்றை உறுதிபடுத்திக்கொள்ள நவநீதத்திடம் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“இனியாவும் நிஷாந்தும் காதலிச்சது முருகையாக்குத் தெரியுமா?”
“இந்த வீட்டுல இருக்குற வேலைக்காரங்க யாருக்குமே அந்த விவகாரம் தெரியாது மேடம்… முருகையா மேல இனியா பாசமா இருக்கும்… ஆனா அவர் கிட்ட கூட அது காதல் விவகாரத்தைச் சொல்லல… சொல்லிருந்தா கட்டாயம் அவரு இவ்ளோ தூரம் போக விட்டுருக்க மாட்டாரு… எனக்கு அவரைப் பிடிக்காது… ஆனா அவருக்கு எங்க முதலாளி குடும்பம் மேல இருந்த விசுவாசமும், இனியா பொண்ணு மேல இருந்த பாசமும் பொய்னு சொன்னேன்னா என் நாக்கு அழுகிப்போயிடும்”
அப்படி என்றால் இனியாவின் காதலுக்கு முருகையா உதவினார் என ஜான் சொன்னது பச்சைப்பொய். அடுத்து குமாரி சொன்னதை உறுதிபடுத்த வேண்டிய நேரம்.
“இந்த வீட்டோட ஹவுஸ்கீப்பர் குமாரி உன்னையும் ஜானையும் பத்தி நல்லவிதமா எதுவும் சொல்லல… நீங்களும் போன தடவை விசாரணைல அந்தம்மாவ பத்தி தப்பா பேசிருக்கிங்க… நீங்களும் ஜானும் திருடுனதை அவங்க தான் இனியா கிட்ட சொல்லிருக்காங்க… அதனால அவங்களைப் பத்தி தப்பா பேசுனிங்கனு குமாரி சொல்லுறாங்க… உண்மைலயே என்ன விசயம்?” என இதன்யா கேட்டது தான் தாமதம் நவநீதத்தின் முகம் ஜிவுஜிவுவென சிவந்து போனது.
“நானும் ஜானும் காசு திருடுனது உண்மை தான் மேடம்… அந்தப் பணத்தை வச்சு நாங்க ஒன்னும் கார் பங்களானு வாழ நினைக்கல… ஜானுக்கு அவசரமா கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு… அவரோட மகளுக்கு மூளைல இருந்த கட்டிய ஆபரேஷன் பண்ணி எடுக்க லச்சக்கணக்குல காசு தேவைப்பட்டுச்சு… முதலாளி ஐயா கிட்ட ஜான் கேட்டாரு… கிளாராம்மா கிட்ட வாங்கிக்கனு சொல்லிட்டு முதலாளி ஐயா வெளிநாட்டுக்குப் போயிட்டாரு… ஜானோட மகளுக்குக் குடுக்கணும்னு முதலாளி ஐயா கிளாராம்மா கிட்ட குடுத்த பணத்தை பசப்புக்காரி குமாரி அவளோட தேவைக்கு வாங்கிக்கிட்டா… ஜானோட மக உயிரைக் காப்பாத்த வேற வழி தெரியல… அதனால தான் குமாரி வச்சிருந்த ஏழு லச்ச ரூபாயை நான் திருடி ஜானுக்குக் குடுத்தேன்… அதை இனியா பொண்ணு கிட்ட குமாரி போட்டுக் குடுத்துடுச்சு… இனியா பொண்ணும் என்னனு விசாரிக்காம கோவத்துல எங்க கிட்ட கத்துச்சு… நாங்க உண்மைய சொல்ல எவ்ளோவோ முயற்சி பண்ணுனோம்… ஆனா அந்தப் பொண்ணு காது குடுத்து கேக்கல… குமாரியும் கிளாராம்மாவும் சொன்னதை நம்பிட்டு எங்களுக்குத் திருட்டுப்பட்டம் கட்டுச்சு… அப்புறம் நாங்க சொன்னதும் விசயம் புரிஞ்சு அமைதியாகிடுச்சு… ஆனா பிரச்சனை முதலாளி ஐயா காதுக்குப் போனா குமாரியோட குட்டு வெளிய வந்துடும்னு மேற்கொண்டு கிளாராம்மா எதையும் பேசல”
ஜான் மீது இனியா திருட்டுப்பட்டம் கட்டியிருக்கிறாள். அவரை வார்த்தையால் அவமதித்திருக்கிறாள். கொலைக்கான நோக்கம் அல்லது கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கான நோக்கம் இதோ தெரிந்துவிட்டது. ஆனால் குமாரிக்கு ஏன் கிளாரா இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கேள்விக்குப் பதில் வேண்டுமே இதன்யாவுக்கு. அதையும் நவநீதத்திடமே கேட்டாள்.
நவநீதம் சுற்றும் முற்றும் பார்த்தாள். அறையின் ஜன்னலுக்கு வெளியே யாரும் நிற்கிறார்களா எனப் பார்த்து உறுதிபடுத்திக்கொண்டவள் இரகசியக்குரலில் இதன்யாவிடம் காரணத்தைக் கூற ஆரம்பித்தாள்.
“சொல்ல கொஞ்சம் சங்கடமா தான் இருக்கு… ஆனா வேற வழியில்ல… கிளாராம்மாக்கு பக்கத்துவீட்டு ஏகலைவன் ஐயா மேல ஒரு கண்ணு… அவரைத் தன் வலையில விழவைக்க அந்தம்மா என்னென்னமோ செஞ்சு பாத்தும் ஒன்னும் நடக்கல… அவரை வசியப்படுத்த தான் அந்தம்மா சாத்தான் வழிபாட்டுல இறங்குச்சு… நானும் ஜானும் தான் அந்தம்மாக்கு எங்க குரூப்புல சேர உதவி பண்ணுனோம்”
இதன்யா அருவருப்பாகப் பார்க்கவும் நவநீதத்தின் முகத்தில் அவமானப்பட்ட பாவனை வந்துவிட்டது.
“அப்பிடி பாக்காதிங்க மேடம்… அதுக்காக தான் அந்தம்மா குரூப்புல சேர வருதுனு எனக்குத் தெரியாது… அதோட நடவடிக்கை சந்தேகமா இருந்தாலும் நான் பெருசா அந்தம்மாவ கண்காணிச்சதில்ல… ஜானோட மக ஆபரேஷனுக்குக் குடுக்க இருந்த பணத்தை குமாரி அவ அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்குனால்ல, அதுக்குப் பழிவாங்கவும் கிளாராம்மாவையும் குமாரியையும் பிரிக்கவும் தான் அந்தாளு கிளாராம்மாவ சாத்தான் குரூப்புல சேர்த்து விடலாம்னு என் கிட்ட சொன்னாரு… எனக்கும் குமாரி மேல இருந்த வெறுப்புல சரினு ஒத்துக்கிட்டேன் மேடம்… ஆனா பாருங்க, சாத்தான் வழிபாட்டுல சேர்ந்தும் அந்தம்மா வலையில ஏகலைவன் ஐயா விழல… கலிங்கராஜன் ஐயாக்கு அந்தம்மா அடிக்கடி சாத்தான் குரூப் மீட்டிங்ல கலந்துக்கப்போற விவகாரம் எப்பிடியோ தெரிய வந்திருச்சு… அதனால தொழில் சரிவுக்காக போறேன்னு பொய் சொல்லி அவரையும் அதுல சேர்த்துவிடப்பாத்துச்சு… இனியா பொண்ணு தான் அப்பவும் ரோஷணை மிரட்டி அவரையும் அந்தம்மாவையும் பாதில குரூப்பை விட்டு விலக வச்சுது… நானும் ஜானும் தான் கிளாராம்மாவ சாத்தான் குரூப்புல சேர்த்துவிட்டோம்னு இனியா பொண்ணு கிட்ட சொல்லிடுவேன்னு குமாரி என்னையும் ஜானையும் அடிக்கடி மிரட்டுவா… அதுக்கு அப்புறம் இந்த வீட்டுல அவ ராஜ்ஜியம் தான் நடந்துச்சு… அந்தக் குமாரி கிளாராம்மாக்குத் தூரத்து உறவு வேற… சொன்னா நம்ப மாட்டிங்க, கிளாராம்மாவோட ஆசைக்கு அவளும் உடந்தை”
இதன்யாவுக்கு இதையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றியது. ஒரு இளம்பெண்ணின் படுகொலைக்குப் பின்னே இத்துணை பெரிய உண்மைகள் மறைந்திருக்கின்றனவே!
“கிளாராம்மாவும் ஏகலைவன் ஐயாவும் பேசுறதை இனியா பொண்ணு ஒரு தடவை பாத்துடுச்சு… அதுவும் வயசுக்கு வந்த பொண்ணு தானே… சித்தியம்மாவோட பார்வை மாறுறதை அதால புரிஞ்சிக்கமுடியாதா என்ன? நோட்டம் விட்டு கண்டுபிடிச்சுடுச்சு அந்தப் பொண்ணு… அந்தப் பொண்ணுனா கிளாராம்மாக்கு உயிரு… அதனால அப்பா கிட்ட சொல்ல முடியாம தவிச்சுது… நேரா கிளாராம்மா கிட்டவே சண்டை போட்டுச்சு… கிளாராம்மா இனியாவை அறைஞ்சு என் சொந்த வாழ்க்கைல நீ தலையிடாதனு மனசு நோக பேசிடுச்சு… கிளாராம்மாவை சுதாரிப்பா இருக்கச் சொன்னதும் அந்தக் குமாரி தான் மேடம்”
நவநீதம் தனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லிவிட்டதாகக் கூற இதன்யா அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்தாள்.
“இவ்ளோ விசயம் நடந்தும் நீங்களும் ஜானும் கலிங்கராஜன் கிட்ட இந்த உண்மைய மறைச்சிருக்கிங்க… உண்மையாவே முருகையாவோட விசுவாசம் உங்களுக்கு இல்ல” என்றாள் அவள்.
நவநீதத்தின் கண்களில் கண்ணீர் சுரந்தது.
“அவருக்குக் குடும்பம் குட்டினு யாருமில்ல மேடம்… ஐயா இல்லாத நேரம் கிளாராம்மாவும் குமாரியும் அடிச்ச கூத்தை அவர் முதலாளி கிட்ட சொல்லி கிளாராம்மா வேலைய விட்டு அனுப்புனாலும் பெருசா கவலைப்படமாட்டார்… நானும் ஜானும் அப்பிடி இல்ல மேடம்… அந்தாளுக்கு அவரோட மக தான் உசுரு… பொண்டாட்டி செத்ததுல இருந்து அவளுக்காக தான் வாழுறாரு… எனக்கு வயசு ஆகுது முப்பத்தேழு… இப்ப வரைக்கும் கல்யாணம்காட்சினு எதுவும் என் வாழ்க்கைல நடக்கல… ஜானை நான் மனப்பூர்வமா நேசிச்சேன்… ஊரறிய கல்யாணம் பண்ணி அந்தாளோட மகளை என் புள்ளையா வளக்கணும்னு ஆசைப்படுறேன்… அந்தப் புள்ளையோட மூளைல இருக்குற கட்டியால அவ உயிருக்கு ஆபத்துனு டாக்டர் சொன்னாங்க… எல்லாம் தெய்வமும் கை விட்டுடுச்சேங்கிற விரக்தில தான் ரோஷணோட சாத்தான் வழிபாட்டு குரூப்புல சேர்ந்தோம் மேடம்… அந்தப் புள்ளைக்கும் ஆபரேஷன் முடிஞ்சு நல்லபடியா ஆகிட்டா… எங்களுக்குச் சாத்தான் மேல குருட்டுத்தனமான நம்பிக்கை அப்ப தான் வந்துச்சு… நாங்க காசு பணத்துக்காக அங்க போகல மேடம்… எதை தின்னா பித்தம் தீரும்ங்கிற நிலமைல அந்தக் குரூப்புல சேர்ந்தோம்… நான் சொன்ன எதையும் கிளாராம்மா கிட்ட சொல்லிடாதிங்க மேடம்”
கெஞ்சி கை கூப்பிய நவநீதத்திடம் இதற்கு மேல் பேச எதுவுமில்லை எனத் தோன்றியது இதன்யாவுக்கு. அவரவருக்கு அவரவர் நியாயம். கடவுள் ஏழைபாழைகளுக்குப் பூரண உடல்நலத்தையாவது கொடுக்கக்கூடாதா என்ற கேள்வியோடு சாந்திவனத்தை விட்டு வெளியேறினாள் அவள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

