தனிமையால் கொலை செய்வது நமக்கு வேண்டுமானால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையையும் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட தன்மையையும் சகிக்க முடியாத வேதனை என்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு சாடிஸ்டான உலகத்தை உருவாக்கிக்கொண்டு தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களான நிராகரிப்பு, வன்கொடுமை, அவமானம், அலட்சியம் மற்றும் உணர்வுரீதியான பாதிப்புகளுக்குப் பழி தீர்க்கத் தொடங்கினார்கள். டாமரும் நீல்சனும் கொலை செய்வது தங்களுக்குச் சந்தோசத்தைத் தருவதில்லை என்கின்றனர். அவர்களிடம் சிக்கியவர்களை வதைப்பதும், தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதுமே சந்தோசத்தைக் கொடுக்கும் என இரு சைக்கோபாத்களும் கூறுகிறார்கள். டாமர் என்பவன் தன்னிடம் சிக்கியவர்களுக்குத் தூக்கமாத்திரை கொடுத்து அரைமயக்கத்தில் ஆழ்த்திய பிறகு அவர்களின் மூளைக்குள் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி ஜாம்பி ஆக்கி ரசிப்பதை வழக்கமாக வைத்திருந்தானாம். நீல்சனோ உயிரோடு இருப்பவர்களை விட இறந்த உடல்கள் தன்னைத் தனிமையில் விட்டுப் போகாது என நம்பியிருக்கிறான். இறந்த உடல்களோடு பேசுவதையும் அவர்களுக்காக கவிதை எழுதுவதையும் தொடர்ந்திருக்கிறான் அவன். சைக்கோபாத்களின் தனிமையும் வேதனையும் எவ்வளவு ஆழமாக அவர்களைப் பாதிக்கிறதோ அதே அளவு அவர்கள் கொடூரமாகத் தன்னிடம் சிக்கியவர்களை சித்திரவதைக்கு ஆளாக்குவார்களாம்.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
பொன்மலை காவல் நிலையம்…
விசாரணை அறையில் மார்த்தாண்டன் தனது ஒட்டுமொத்த கோபத்தையும் ஜானிடம் காட்டிக்கொண்டிருந்தார்.
“ராஸ்கல் பெரியவரைக் கொலை பண்ணிட்டுப் பொய்யா சொல்லுற? உண்மைய சொல்லுடா”
காவல்துறையின் லத்தி சிகிச்சையின் உபயத்தால் ஜானின் உடல் ஆங்காங்கே வீக்கம் கண்டது. வேதனை தாளாமல் துடித்தவர் அப்போது கூட வாயைத் திறப்பேனா என சாதிக்க மார்த்தாண்டனின் கோபம் இன்னும் அதிகரித்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தனது ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி ஜானை அவர் அடிக்க போகையில் “மார்த்தாண்டன் சார்” என இதன்யாவின் குரல் அதிகாரத்துடன் ஒலித்தது.
உடனே லத்தியை இறக்கியவர் “மேடம் இவன் தான் முருகையாவ…” என ஆரம்பிக்க “மகேந்திரன் டி.என்.ஏ டெஸ்ட் ரிப்போர்ட்ல வந்த ரிசல்ட் என்னனு சொல்லிட்டார்” என முடித்தாள் இதன்யா.
“டி.என்.ஏ ரிப்போர்ட்லயே முருகையாவோட உடம்புல கிடைச்ச பயாலஜிக்கல் எவிடென்ஸ் ஜானோடதுனு தெளிவா இருக்கு… இப்பிடி அடிக்கிறதால என்ன ஆகப்போகுது? நீங்க வெளிய போங்க.. இந்த கேஸ் இப்ப என் அதிகாரத்துக்குள்ள வந்தாச்சு” என்றாள் கூடுதலாக,.
“மேடம்” ஏதோ சொல்ல வந்தவரை “முருகையாக்கு இறுதி சடங்கு செய்ய கலிங்கராஜன் ரெடியா இருக்கார்… உங்களுக்கு அவரோட ஃபேஸை கடைசியா பாக்கணும்னா போகலாம் மார்த்தாண்டன்… நான் ஜானை விசாரிக்குறேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தாள் இதன்யா.
அவர் போனதும் வேதனையில் கலங்கி போயிருந்த ஜானை அமரும்படி பணித்தவள் அவருக்குத் தண்ணீர் கொண்டு வருமாறு மகேந்திரனை அனுப்பி வைத்தாள்.
“நான் எஸ்.ஐ ஆனது இவனுக்குத் தண்ணி கொண்டுவரவா?” என அதிருப்தியுடன் முனகியபடி மகேந்திரன் வெளியேறியதும் ஜான் பக்கம் திரும்பினாள் இதன்யா.
அவளைப் பார்க்கத் தவிர்த்தவரிடம் “என் கிட்ட நவநீதம் எல்லா உண்மையையும் சொல்லிட்டாங்க… இனிமே கடவுளே வந்தாலும் உங்களை இந்த கேஸ்ல இருந்து காப்பாத்த முடியாது…. ப்ச்…. நீங்கலாம் கடவுளை நம்புற ஆளுங்க இல்லல்ல” என பொய் ஒன்றை சொல்லித் தலையை மறுப்பாக ஆட்டியவள் பார்வையில் கடுமையேறியது.
பின்னர் தணிந்த குரலில் “ஒழுங்கு மரியாதையா செஞ்ச தப்பை ஒத்துக்க… இல்லனா என் ஸ்டைல்ல உண்மைய வரவைக்க வேண்டியதா இருக்கும்… இதுவரைக்கும் இந்த கேஸ்ல சம்பந்தப்பட்ட எந்த சஸ்பெக்டையும் நான் அடிச்சு விசாரிச்சதில்ல… அவங்களும் சேதாரம் இல்லாம கோர்ட்டுக்குப் போனாங்க… உனக்கு எப்பிடி வசதி?” என அவள் கேட்கவும் ஜானின் உடல் நடுங்கியது.
அப்போது மகேந்திரன் உள்ளே வரவும் தன்னைச் சாதாரணமாகக் காட்டிக்கொண்டாள் இதன்யா.
ஜான் நடுங்கிய கரத்துடன் தண்ணீர் தம்ளரை வாங்கி பருகினார்.
பின்னர் பயத்தோடு “நான் தான் முருகையாவ கொலை பண்ணுனேன் மேடம்… ஆனா” என்று பாதியில் முடிக்கும்போதே
“நீ கில்லர்னு எங்களுக்குத் தெரியும்… எங்களுக்கு வேண்டியது கொலைக்கான மோட்டிவ் அண்ட் உனக்கு இதுல துணையா இருந்தது யாருங்கிற விவரம்… அதை சொன்னா நல்லது” என்றாள் அவள்.
“நானும்…”
“நீயும் நவநீதமும் சேர்ந்து முருகையாவை ஏன் கொன்னிங்க?”
ஜானின் கண்களில் திடுக் பாவனை வந்து போனது.
“நவநீதமா? அவ ஒன்னுமே பண்ணல மேடம்… நானும் முத்துவும் சேர்ந்து தான் முருகையாவைக் கொன்னோம்” என்றார் அவர்.
இதன்யா கவனமாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். விசாரணையை வீடியோ பதிவு செய்யும் நடைமுறையும் ஆரம்பித்தது.
மகேந்திரன் இதன்யாவுக்கு அனுப்பிய வாட்சப் செய்தியில் இருந்தது முருகையாவைக் கொன்னவர் ஜான் என்ற உண்மையே. டி.என்.ஏ ரிப்போர்ட் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி ஜான் மட்டுமே முருகையாவைக் கொன்றிருக்க முடியாதென கூறியது.
அவரது உடலில் இரு வேறு மனிதர்களின் கைரேகைப்பதிவுகள் கிடைத்திருக்கின்றன என்றது தடவியல் துறை கொடுத்த அறிக்கை. கூடவே குகையில் கிடைத்த அமில பாட்டில் மற்றும் கூர்மையான கத்தி போன்ற கருவியிலும் இருவிதமான கைரேகைகள் இருந்தன. அவற்றில் ஒன்று ஜானுடயது என ருசுவானது. ஜானின் கைரேகையோடு நூறு சதவிகிதம் பொருந்தியது.
இது வரை மார்த்தாண்டன் வசம் இருந்த வழக்கின் அதிகாரம் திடுமென இதன்யாவின் வசம் வரக் காரணம் அந்தக் கைரேகையோடு சேர்ந்திருந்த இன்னொரு மனிதனின் கைரேகை.
ஆம்! அந்த இன்னொரு மனிதனின் கைரேகை இதற்கு முன்பு இனியா வழக்கில் விசாரிக்கப்பட்ட விசாரணை கைதி ரோஷணுக்குக் கொடுக்கப்பட்ட ஹாக்சா ப்ளேடிலிருந்த கைரேகையோடு பொருந்தியது. கூடவே மாத்திரையையும் ஹாக்சா ப்ளேடையும் வைத்து கொடுத்த கவரிலிருந்த கைரேகையும் முருகையா உடலில் சேகரிக்கப்பட்ட இரு கைரேகைகளில் ஜானுடையது தவிர்த்து மிச்சமிருந்த ஒரு கைரேகையும் கட்டாயம் ஒரே நபருடையது என்றது தடவியல் துறை அறிக்கை.
இவ்விதமாக முருகையா கொலை வழக்கு, இனியாவின் கொலையில் நடந்த உண்மையை மறைக்க நடந்த கொலையாகக் கருதப்பட்டு இதன்யாவின் அதிகாரத்துக்குள் வந்தது.
மகேந்திரனிடம் “இந்தாள் சொல்லுறதை பாத்தா அந்த முத்துவும், ரோஷணுக்கு மாத்திரைய மாத்தி ஹாக்சா ப்ளேடைக் குடுத்துட்டுப் போன செங்கோடனும் ஒரே ஆள் தான்… அவன் பக்கத்து ஊர்க்காரனா இருந்தாலும் யாருக்கும் அவனை அடையாளம் தெரியல… சோ அவன் அடிக்கடி இந்த ஊர்ப்பக்கம் வரக்கூடியவன் இல்லனு தெரியுது” என்றவள் ஜானிடம் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“உனக்கும் முத்துக்கும் முருகையா மேலயும் ரோஷண் மேலயும் ஏன் கோவம்னு சொல்லு”
ஜான் தடுமாறி “முருகையாவ மட்டும் தான் அவன் கூட சேர்ந்து கொலை பண்ணுனேன் மேடம்… ரோஷண் கொலை பத்தி எனக்குத் தெரியாது” என்றார்.
அதை இதன்யாவும் மகேந்திரனும் நம்பவில்லை.
“சரி… அதை விடு… ஏன் முருகையாவ கொலை பண்ணுனிங்க?”
“அந்தாளு.. என்னை… நவநீதத்தை…” ஜான் தடுமாறவும் மகேந்திரனின் பொறுமை எல்லையைக் கடந்தது.
“டேய் நீ..” என அவரை அடிக்கப் பாய்ந்தவரைப் பொறுமை காக்குமாறு தடுத்தாள் இதன்யா.
பின்னர் ஜானிடம் “பொய் சொல்லாம உண்மைய சொன்னா எல்லாருக்கும் நல்லது ஜான்… ரோஷண் தற்கொலையிலயும் உனக்குப் பங்கு இருக்கணும்… அதுக்கு எந்தச் சாட்சியும் இல்லனு பொய் சொல்லாத… செங்கோடன்ங்கிற பேருல முத்து அவனுக்கு ஹை டோஷ் மாத்திரையைக் குடுத்ததோட ஹாக்சா ப்ளேடையும் குடுத்துட்டுப் போயிருக்கான்… ஏன் அவன் வேற ஒரு பேரோட வந்தான்? அதுல உன் பங்கு என்ன? மறைக்காம சொல்லிடு” என்று அவள் கேட்க ஜான் மௌனம் காத்தார்.
இது வேலைக்கு ஆகாது என புரிந்து எழுந்த இதன்யா “முதல்ல அந்த முத்துவோட ஃபோட்டோ இந்தாளோட மொபைல்ல இருக்குதானு செக் பண்ணுங்க… இந்தாளுக்கும் நவநீதத்துக்கும் ஏதோ லிங்க் இருக்கு… அதை நான் கண்டுபிடிக்குறேன்… சப்போஸ் இந்தாள் கிட்ட அவன் போட்டோ இல்லனா இவனை முத்து அலையஸ் செங்கோடனோட அடையாளத்தைச் சொல்ல வச்சு ஸ்கெட்ச் வரைய ஏற்பாடு பண்ணுங்க மகேந்திரன்… இன்னொரு அப்பாவியோட ரத்தம் இந்தப் பூமில சிந்துறதுக்கு முன்னாடி அந்த முத்து நம்ம கஷ்டடிக்கு வரணும்” என்று மகேந்திரனிடம் கட்டளை பிறப்பித்தாள்.
எதுவும் பேசாமல் ஊமைக்கோட்டான் போல உட்கார்ந்திருந்த ஜானைக் கோபப்புன்னகையுடன் பார்த்தவள் “நான் நவநீதத்தை இனி தான் விசாரிக்கப்போறேன்… அவ மூலமா ஏதாச்சும் உண்மை தெரிய வந்து இனியா கொலைக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்குனு தெரிஞ்சுதுனா இதே மாதிரி அமைதியா உன்னை நான் விசாரிக்க மாட்டேன்” என எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அதே நேரம் முருகையாவின் சடலத்தை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியிலிருந்து பெற்றுக்கொண்டார் கலிங்கராஜன். அவரோடு மார்த்தாண்டனும் இருந்தார்.
மருத்துவ வாகனத்தில் உடல் ஏற்றப்பட்டு ஊருக்குள் கொண்டு செல்லப்பட்டது. கலிங்கராஜனின் காரும் மார்த்தாண்டனின் பைக்கும் அந்த வாகனத்தைத் தொடர்ந்தன. கலிங்கராஜனின் பணியாட்கள் சுடுகாட்டில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க முருகையாவின் உடல் நேரே அங்கேயே எடுத்துச் செல்லப்பட்டது.
சிதையில் அவரது உடல் கிடத்தப்பட்ட போது அவர் தன்னிடம் கூறிய வார்த்தை மார்த்தாண்டனின் நினைவுக்கு வந்தது.
“உங்க வேலைக்கு எதுவும் ஆகாது… உங்களை மாதிரி நல்ல அதிகாரிங்க இல்லனா என்னை மாதிரி சாமானியனுக்குப் போலீசு மேல உள்ள நம்பிக்கையே போயிடும்… உங்களை வேலைய விட்டு தூக்கணும்னு நினைக்குறவங்க மனசை பொன்மலை முருகன் மாத்துவான்… நீங்க உங்க கையால எங்க சின்னம்மாவ கொன்னவனை கைது பண்ணுவிங்க… நம்பிக்கையா இருங்க… நான் போயிட்டு வர்றேன்”
தனக்கு எதிராக விசாரணை கமிசன் அமைக்கப்பட்டபோது துறைரீதியான நடவடிக்கை எல்லாம் எடுக்கமாட்டார்கள் என நம்பிக்கையாய் உரைத்தவர், இனியாவைக் கொன்றவனைக் கைது செய்வீர்கள் என உறுதியாய் சொன்னவர் அன்று கிளம்பியது போல இன்றும் கிளம்பத் தயாரானார்.
இம்முறை அவர் திரும்பியெல்லாம் வரப்போவதில்லை. இந்த உண்மை மார்த்தாண்டனை வினோதமான விதத்தில் பாதித்தது. கலிங்கராஜன் உணர்ச்சியற்ற முகத்தோடு முருகையாவின் சடலத்திற்கு நெருப்பு வைத்தார்.
நெருப்பு எரிய எரிய முருகையா என்ற முதியவரின் நினைவுகளும் அதோடு சேர்ந்து எரியத் தொடங்கின.
காரியம் முடிந்து வீட்டுக்குக் கிளம்பிய கலிங்கராஜன் மார்த்தாண்டனிடம் மனம் வலிக்க சொன்னது ஒன்றே ஒன்று தான்.
“என் வீட்டைச் சுத்தி இருக்குறவங்க, என் வீட்டுக்குள்ள இருக்குறவங்களால தான் என் மகளும் பெரியவரும் இறந்திருக்காங்கனு எனக்குத் தோணுது சார்… மூத்தவ போயிட்டா… மத்த குழந்தைங்களையாச்சும் நான் பத்திரமா பாத்துக்கணும்… ஆனா எனக்குப் பயமா இருக்கு சார்… அந்தக் கொலைகாரன் எங்கயோ மறைஞ்சு இருந்து என் வீட்டைக் கண்காணிக்கிறான்னு பயமா இருக்கு… ஒரு தகப்பனா என் பிள்ளைங்க உயிரை நினைச்சுக் கவலையா இருக்கு… என் கிட்ட இவ்ளோ பணம் இருந்தும் என்ன புண்ணியம்? என் பாசத்துக்காக ஏங்குன மகளையும் விசுவாசமான பெரியவரையும் இழந்துட்டு நிக்குறேன் நான்”
முடிக்கும்போது வெடித்து அழுதுவிட்டார் கலிங்கராஜன். மார்த்தாண்டனால் அவருக்கு என்ன ஆறுதல் கூறிவிடமுடியும்?
“கவலைப்படாதிங்க கலிங்கராஜன்” என்று மட்டும் கூறினார்.
“என் பிள்ளைங்க உயிரை நினைச்சு எனக்குக் கவலையா இருக்கு சார்… நீங்க எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?”
“என்ன?”
“என் வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் ஒருத்தரோட பாதுகாப்பு வேணும் சார்… எனக்காக கேக்கல… என் பிள்ளைங்க, அவங்களும் அல்பாயுசுல போயிடுவாங்களோனு ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழுறேன் சார்… நான் அதுக்கு என்ன பண்ணனும்?”
கலிங்கராஜனின் கவலையும் பயமும் நியாயமாகவே தோன்றியது மார்த்தாண்டனுக்கு. ஒரு பெண்ணை பறிகொடுத்ததோடு விசுவாசமான பணியாளையும் இழந்திருக்கிறார். அவருக்குப் பயம் வரத் தானே செய்யும். ஆனால் பிள்ளைகளின் பாதுகாப்பை மட்டும் எண்ணி வருந்தியவர் மருந்துக்குக் கூட மனைவி கிளாராவைப் பற்றி குறிப்பிடாதது தான் மார்த்தாண்டனுக்கு விசித்திரமாக இருந்தது.
இருப்பினும் வாய் விட்டுக் கேட்காமல் ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவரை அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு கொடுக்க அனுப்புவதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ அதை கலிங்கராஜனிடம் கூறத் தொடங்கினார் மார்த்தாண்டன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

