அன்றைய தினத்துக்குப் பிறகு வேதவதியும் அட்சரனும் கவனமாகவே இருந்தார்கள். இனி இணைந்திருந்தால் தங்களுக்குள் தகிக்கும் காதலுக்கு முத்தமும் அணைப்பும் மட்டும் போதாதெனப் புரிந்துவிட்டது. அதற்கேற்றாற்போல பெரியவர்களும் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். எளிமையாய் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு வரவேற்பை மட்டும் கொஞ்சம் பெரிதாய் நடத்தலாமென்று ஏற்பாடு.
திருமணத்திற்கான புடவை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், வரவேற்பு உடை என அனைத்திலும் வேதவதிக்கும் அட்சரனுக்கும் அவர்களது தோழமைகள் உதவியாய் நின்றார்கள். யாழினியும் அவளது ஆச்சியும் கஜேந்திரன் – கனகவல்லியோடு வந்து சேர்ந்தார்கள் சென்னைக்கு. திருமணத்துக்கு முந்தைய நாள்தான் வந்திருந்தார்கள். கஜேந்திரனுக்கும் யாழினிக்கும் அதிகநாட்கள் விடுமுறை கிடைக்காது என்பதால் வேதவதியும் புரிந்துகொண்டாள். மகளைச் சம்பந்தியம்மாள் நடத்தும் விதமும், மருமகன் தங்களிடம் நடந்துகொள்ளும் விதமும் கனகவல்லிக்கும் கஜேந்திரனுக்கும் மனதை நிறையச் செய்வதாய்!
மறுநாள் வடபழனி முருகன் கோவிலில் பெரியவர்கள், நண்பர்கள் சூழ வேதவதியின் கழுத்தில் மங்கலநாண் அணிவித்தான் அட்சரன். இலக்கியா, சஞ்சயுடன் அருள்மொழியும் வானதியும் வந்திருந்தார்கள். யாழினி பிரியம்வதாவோடு சேர்ந்த நான்கு பெண் தோழமைகளோடு சேர்ந்து அவர்களை வரவேற்றாள். அனைவரும் தம்பதிகளுக்கு அட்சதை தூவிய மாங்கல்யதாரணம் அழகாய் அரங்கேறியது.
“மிசஸ் அட்சரன் க்யூப்! கொஞ்சம் தலையைக் குனிங்க. இல்லனா பொண்ணுக்கு வெட்கம் வரலனு யாரும் பஞ்சாயத்தைக் கிளப்பப் போறாங்க” என்று கிசுகிசுத்தபடி அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்தான் அவன்.
“உங்களைத் தவிர வேற யாரும் என்னைக் கிண்டல் பண்ணமாட்டாங்க.”
இருவரும் கிசுகிசுத்துக்கொள்ளப் பெரியவர்கள் அடுத்து மெட்டி அணிவிக்கச் சொன்னார்கள். அனைத்தையும் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து திருமணத்திற்கே உரித்தான சில சடங்குகளுக்குப் பிறகு மணமக்களைத் தனியே அழைத்துப் போனான் சஞ்சய்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஃபோட்டோஷூட் டைம். வேற யாரும் குறுக்க வராதீங்க” என்று அறிவிப்பும் கொடுத்துவிட்டான்.
வீட்டின் முன்னே இருக்கும் பெர்கோலாவின் பின்னணியில் படிகளில் அமர்ந்திருந்தார்கள் வேதவதியும் அட்சரனும்.
“ப்ரோவோட கன்னத்துல கிஸ் பண்ணுங்க சிஸ்டர். ஜஸ்ட் ப்ளேஃபுல் கிஸ் தான்” என்று போட்டோகிராபர் சொல்ல, வேதவதி தனது உதடுகளை அட்சரன் கன்னத்தில் சிரிப்போடு ஒற்றியெடுக்க, அவனும் மகிழ்ச்சியாய் சிரிக்க அழகான அத்தருணம் புகைப்படக்கருவிக்குள் சேமிக்கப்பட்டது.

மதியவிருந்து தடபுடலாய் நடந்தேறிய பிறகு வரவேற்புக்கான மேக்கப் ஆரம்பித்தது வேதவதிக்கு. சாம்பெய்ன் வண்ண டிசைனர் புடவையில் தேவதைப்பெண்ணாக மிளிர்ந்தவளுக்கு ஏற்ற தேவதூதனாக அழகான எம்ப்ராய்டரியுடன் கூடிய கறுப்பு பிளேசர் உடையில் அட்சரன் ஜொலித்தான்.

சதானந்தன் அழைப்பு விடுத்ததால் ஜெயசந்திரனும் கயல்விழியும் வருகை தந்திருந்தார்கள்.
ஜெயசந்திரன் அட்சரனிடம் குயுக்தியானப் புன்னகையோடு, “வாழ்த்துகள்! உங்களை வாழ்க்கைல முதல் முறை சேர்த்து வச்சவங்கல்ல நானும் ஒருத்தன்ங்கிற முறைல எனக்கு இந்தக் கல்யாணத்துல பரிபூரண சந்தோஷம்” என்க வேதவதிக்கு வயிற்றில் புளியைக் கரைக்காத குறை. இவர் சீண்டி இவன் மலை ஏறிவிட்டால் என்ன செய்வது?
அவள் தவிக்க, அட்சரனோ விஷமப்புன்னகை பூத்தான்.
“உங்க வாழ்க்கைல நீங்க செஞ்ச அல்பசொல்ப நல்ல காரியங்கள்ல எங்களைச் சேர்த்து வச்ச காரியமும் ஒன்னு. தாராளமா சந்தோஷப்படுங்க சார்” என்றான்.
ஜெயசந்திரன் இறுகிய தாடையோடு புன்னகைக்க, நண்பன் மாமனாரைச் சீண்டியதில் அருள்மொழிக்கு அதீத மகிழ்ச்சி.
திருமணமும் வரவேற்பும் எவ்விதக் குறையுமில்லாமல் முடிவடைய, மறுநாள் தேன்மலைக்குத் திரும்ப ஆயத்தமானார்கள் கஜேந்திரனும் கனகவல்லியும்.
“இதுக்கு மேல லீவ் கிடைக்காதும்மா” என்று சொல்லிவிட்டார் கஜேந்திரன். இந்த முறை அவர் வேதவதியிடம் எந்த உறுதியும் கொடுக்கவில்லை. அன்பும் அரவணைப்புமான உறவுகள் மகளைச் சுற்றியிருக்கையில் இந்த வாழ்க்கையில் அவள் மகிழ்ந்திருப்பாள் என்ற நம்பிக்கை அவருக்கு வந்துவிட்டது.
அட்சரனும் வேதவதியும் சேர்ந்து கஜேந்திரனையும் கனகவல்லியையும் யாழினியோடு இரயில் ஏற்றிவிட்டு வந்தார்கள். வரும் வழியில் அட்சரன் காரை நிறுத்தி ஏதேதோ வாங்கினான். என்ன வாங்கினான் எனக் கவனிக்கக் கூட விடாமல் வேதவதியிடம் வம்பு வளர்த்தபடி வீட்டுக்கும் காரை ஓட்டிக்கொண்டு வந்துவிட்டான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் வேதவதி கொஞ்சம் சோர்வாய் கீழ்த்தளத்து சோஃபாவில் அமர்ந்துவிட்டாள். அட்சரன் மட்டும் குட்டி போட்ட பூனையாய் அவனது அறைக்குள் ஏதோ குட்டி கலாட்டா செய்துகொண்டிருந்தான்.
ராஜேஸ்வரி மருமகளிடம் மேல்தளத்தைக் காட்டினார்.
“ஏதோ பெருசா வேலை பாக்குறான் போல. போய் என்னனு பாரு.”
வேதவதியும் என்னவாக இருக்குமென்ற யோசனையோடு அறைக்குள் எட்டிப் பார்த்தவள், அந்த அறையை அவன் அலங்கரித்திருந்த விதத்தில் விழிகளை இமைக்க மறந்தாள். அறையின் ஒரு மூலையில் அழகான சிறிய மெத்தை தலையணைகளுடன் வெண்ணிற மெல்லிய துணியாலான கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதே மூலையின் சுவரில் ‘LOVE’ என்று ஆங்கில வாக்கியம் பலூனாக ஒட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே இதய வடிவ பலூன்கள் கிடக்க, மெத்தையில் ரோஜா இதழ்கள் சிதறிக் கிடந்தன.
“என்ன இது?”
ஆச்சரியமாய்க் கேட்டவளைக் கரம் பற்றி கூடாரமருகே இழுத்து வந்தான் அட்சரன்.
“பிடிச்சிருக்கா?” என்றான்.
“ம்ம்.. ரொம்ப அழகா இருக்கு” என்றவள் கூடாரத்தின் பார்டர் போல மின்னிய எல்.ஈ.டி பல்புகளையும் பசிய இலையுடன் கூடிய கொடிகளையும் ரசனையாய் பார்த்தாள்.
அட்சரன் அவள் முன்னே முழங்காலிட்டவன் “ஐ லவ் யூ” என்க வேதவதியின் முகம் விகசித்தது.

குனிந்து அவனது கன்னத்தைப் பற்றியவள் “லவ் யூ டூ” என்று சொன்னதோடு நெற்றியில் முத்தமிட்டாள்.
“நம்ம நெட்ஃபிளிக்ஸ் டேட் செலிப்ரேட் பண்ணுவோமா?”
“அப்பிடினா?…”
அவள் புரியாமல் விழிக்கையிலேயே, “நைட் டின்னர் வேண்டாம்மா எனக்கும் வேதாக்கும்” என்று சத்தமாய் அன்னையிடம் சொல்லிவிட்டுக் கதவை அடைத்தான். பால்கனியின் கதவுகளும் மூடப்பட்டுத் கூடாரத்திற்குள் அமர்ந்துகொண்டார்கள் இருவரும்.
இது புதியதொரு அனுபவம் வேதவதிக்கு. அட்சரன் இரயில் நிலையத்திலிருந்து திரும்பியபோது வாங்கியிருந்த சிற்றுண்டிகளைக் கடை பரப்பினான்.
“என்ன சீரீஸ் பாக்கலாம்?”
“ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், அதுல ஸ்டீவ் வருவான்ல, அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்”
ஆவலோடு சொன்னவளைப் பார்த்துத் தலையிலடித்துக்கொண்டான் அட்சரன்.
“ரொமாண்டிக்கான சீரீஸ் எதாச்சும் சொல்லுவனு பாத்தா ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்னு சொல்லுற.”
“ப்ளீஸ்! எனக்கு உங்களோட சேர்ந்து பாக்கணும்னு ஆசை.”
அட்சரன் தனது கன்னங்களை ஏந்தி ஆசையாய்ச் சொன்னவளை ஆழ்ந்து பார்த்தான். பழைய வேதவதிதான். ஆனால் கழுத்தில் கிடந்த மாங்கல்யமும் வகுட்டில் சின்னக்கோடாய் இருந்த குங்குமமும் அவள் மீதான அவனது உரிமையை இன்னும் அதீதமாய் பறைசாற்றுவதாய் உணர்ந்தான்.
ஆசை என்று அவள் சொன்ன பிற்பாடும் மறுக்கத் தோன்றவில்லை அவனுக்கு. காதலும் தாபமும் கடந்து கணவன் மனைவிக்கிடையே இம்மாதிரியான நட்பானத் தருணங்களும் அவசியம். அவையே நாட்பட நாட்பட இல்லற வாழ்க்கையை ரசிக்க வைக்கும். அதை உணர்ந்தவனாகத் தலையணையை முதுகுக்குக் கொடுத்துச் சாய்ந்துகொண்டு அவளைத் தனது தோளில் சாய்த்துக்கொண்டான்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் இசை ஐபேடில் ஆரம்பிக்க, சிற்றுண்டிகளைக் கொறித்தபடி ஒருவருக்கொருவர் கமெண்ட் அடித்தபடி பார்ப்பது கூட புதியதொரு அனுபவமாய்!
செவ்வானத்தின் செந்தூரம் கரையும் அந்தி நேரத்தில் அவர்களின் வாழ்க்கையில் இனி வரும் அத்தியாயங்கள் அனைத்தும் அழகிய அட்சரங்களால் தீட்டப்படுவதற்கான உதாரணமாய் அத்தருணம் இரவை நோக்கி நகர, வேதவதியும் அட்சரனும் அணைப்பில் பிணைந்து அற்புதமான அந்த அனுபவத்தை ரசிக்கத் தொடங்கினார்கள்.

இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

