“நைட் ரொம்ப நேரம் முழிச்சது தலைவலிக்குது அத்தை”
பொய் சொல்லிச் சமாளித்தவள் ஹெல்வட்டாஸுக்குக் கிளம்ப ஆயத்தமாகிச் சாப்பிட வந்த அட்சரன் அக்கறையாய் நெற்றி கழுத்தில் கை வைத்து உடல்நலனைச் சோதித்தபோது இறுகிப்போனாள்.
“உடம்பு சூடு இல்லையே! எனக்காக முழிச்சிருந்தல்ல? அதான் தலை வலிக்குது. சாரி”

“இட்ஸ் ஓகே” அவனது கரத்தை விலக்கிவிட்டவள் ஏறிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தாள்.
கிளம்பும்போது சதானந்தனிடம் “இன்னைக்கு என்னால சூப்பர் மார்க்கெட் போக முடியுமானு தெரியல மாமா” என்க
“நீ எக்ஸாம் எழுதிட்டு வந்து ரெஸ்ட் எடுடா” என்று தோளில் தட்டி அனுப்பிவைத்தார் அவர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எப்போதும் அட்சரனுக்குக் கையசைத்து விடைபெறுபவள் அவனது முகத்தைப் பாராது விடைபெற்றது அவனது நெஞ்சைப் பிசைந்தது.
‘குடிச்சிட்டு ஏதாச்சும் சண்டை போட்டுட்டேனா? ஒன்னுமே ஞாபகத்துக்கு வந்து தொலைக்க மாட்டேங்குதே’
மனம் அலைபாய்ந்ததில் அவனும் சரியாகச் சாப்பிடவில்லை. அரைமனதாய் ஹெல்வட்டாஸுக்குப் போனவனுக்கு வேலை ஓடவில்லை.
“ஆர் யூ ஓகே வேதா? நேத்து நான் உன்னை எதுவும் ஹர்ட் பண்ணிட்டேனா? லஞ்சுக்கு வர்றப்ப உன்கூடப் பேசணும். தூங்கிடாத”
வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பிவிட்டு இலக்கியா அவனுக்காக வாங்கி வந்த தேநீரை அருந்திவிட்டு வேலையைப் பார்த்தான்.
மதியவுணவுக்கு அவன் கிளம்பும் வரை அவனால் அனுப்பப்பட்ட செய்தி வேதவதியால் படிக்கப்படாமல் கிடந்தது வாட்ஸ்அப்பில்.
வீட்டுக்கு வந்தபோதோ அவளது அறை பூட்டியிருந்தது.
“வேதா எங்கம்மா?” எனக் கேட்டவனிடம்
“அவ சாப்பிட்டுட்டுப் படுத்துட்டா அச்சு” என்றார் ராஜேஸ்வரி சாப்பாட்டைப் பரிமாறியவராய்.
ஏனோ உணவு இறங்க மறுத்தது அட்சரனுக்கு.
“தயிர் ஊத்திக்கலையா அச்சு?”
“வேண்டாம்மா” என்றவன் கை கழுவிவிட்டு வேதவதியின் அறைக்கதவைத் தட்டினான்.
“வேதா! முழிச்சிருந்தா கதவைத் திற.”
சில நிமிட காத்திருப்புக்குப் பிறகு கதவு திறந்தது. வேதவதியின் முகம் கண்கள் எல்லாம் சிவந்திருக்கப் பதறிவிட்டான் அட்சரன்.
“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்குற? உடம்பு எதுவும் சரியில்லையா?”
அவனது அக்கறையை முழு மனதாக ஏற்கவே முடியவில்லை அவளால்.

தனது தோளைப் பற்றியிருந்த கைகளை நாசூக்காக விலக்கிவிட்டாள்.
“ஒன்னுமில்ல விடுங்க”
அவன் விடவில்லை. இன்னும் இறுகப் பற்றினான்.
“பொய் சொல்லாத. என்ன பிரச்சனை? நேத்து நைட் நான் எதுவும் தப்பாப் பேசிட்டேனா? சண்டை எதுவும் போட்டேனா? உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா? எதுவா இருந்தாலும் சொல்லு”
வேதவதியின் விலகலை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வளர்ந்த மனிதன் குழந்தைப் பையனாய்த் தவித்தான்.
அந்தத் தவிப்பும் அக்கறையும் கொடுத்த இதத்தை விட அவனது ஈகோவால் அடைந்த காயம்தானே வேதவதிக்குப் பெரிதாகத் தெரிந்தது. ஜீவனற்ற விழிகளால் அவனை ஏறிட்டாள்.
“பிருந்தாவ நீங்க காதலிக்கல. பொய் சொல்லிருக்கீங்க என்கிட்ட. காதலே இல்லாம ஒரு ப்ரேக்கப் கதை வேற. ஒரு நிமிஷம் நீங்க என்னைப் பத்தி யோசிச்சுப் பாத்தீங்களா?”
சோர்வான குரலில் வினவினாள் வேதவதி.
அட்சரன் கல்லாய்ச் சமைந்துவிட்டான் அவளது கேள்வியில். அதே நேரம் இது அவ்வளவு பெரிய விஷயமில்லை என்ற அலட்சியம். அதை அவளைக் காயப்படுத்தாமல் சொல்ல முயன்றான்.
“பொய்தான் வேதா, என்னால அவ்ளோ ஈசியா உன்னை என் வாழ்க்கைக்குள்ள அனுமதிக்க முடியல. அதுக்காகச் சொன்ன பொய். பட் இப்பதான் எல்லாம் சரியாகிடுச்சே! மறந்துடு”
“எதை மறக்கணும்? கொஞ்சம் வாங்க” அவனது கையைப் பிடித்து அழைத்துப் போனவள் அவளது தலையணையைக் காட்டினாள்.
“இந்தப் பில்லோ எத்தனை ராத்திரி என் கண்ணீரைச் சுமந்திருக்கு தெரியுமா? உரிமையில்லாத இடத்துல உரிமையில்லாத ஒருத்தனோட பொண்டாட்டியா இருக்குற நெலைமை வந்துடுச்சேனு என் மனசு நொந்து போச்சே! அதுவாச்சும் தெரியுமா? ஒவ்வொரு தடவையும் நான் பிருந்தாவப் பத்தி எரிச்சலாப் பேசுறப்ப நீங்க மனசுக்குள்ள சிரிச்சிருப்பீங்கல்ல. எனக்கு இப்ப அதை நினைச்சா எம்பாரஸிங்கா இருக்கு. அதுவாச்சும் புரியுதா உங்களுக்கு?”
அட்சரனுக்குப் பதில் சொல்லத் திணறல்! ஆனால் சமாளித்துக்கொண்டான் துரிதமாக.
“வேதா! லுக் அட் மீ! அதெல்லாம் ஏதோ ஈகோல பண்ணிட்டேன். ஐ லவ் யூ மேட்லி. இப்ப இந்த நொடில நீதான் எனக்கு எல்லாவுமாத் தெரியுற. அதெல்லாம் மறந்துடேன்”
அவளது கன்னங்களைப் பற்றி மெதுவாகச் சொன்னான் அவன்.
வேதவதி அவனது கரங்களை விலக்கித் தள்ளினாள்.
“இப்பவும் நீங்க செஞ்சது தப்புனு ஏத்துக்கல”
இடுப்பில் கையூன்றி அவளை ஆயாசமாய்ப் பார்த்தான் அவன்.
“எனக்குப் புரியல. என்ன தப்பு?” என்றான் சாதாரணமாய்.
“தேன்மலைல நடந்த சம்பவத்துல நீங்களும் நானும் விக்டிம். அதனால மட்டும்தான் நீங்க கத்துனப்ப, அசிங்கப்படுத்துனப்ப நான் அதைப் பொறுத்துக்கிட்டேன். ஆனா நீங்க இங்க வச்சுச் சொன்ன பொய்களால நான் மட்டும்தான் மனவேதனைய அனுபவிச்சிருக்கேன். அது தப்பில்லாம என்ன?”
“வேதா இன்னைக்கு நெலைமைக்கு நான் உன்னைக் காதலிக்குறேன்..”
“மண்ணாங்கட்டி! என் மனவேதனைக்கு முன்னாடி உங்க காதல் ஒன்னுமேயில்ல”
தனது காதலை அவள் மரியாதைக்குறைவாகப் பேசவும் அட்சரனுக்கும் கோபம் வந்துவிட்டது.
இருவரும் சத்தமாய்ச் சண்டை போடுவதைக் கேட்டுக் கீழ்த்தளத்தில் இருந்து ராஜேஸ்வரியும் சதானந்தனும் மேலே வந்துவிட்டார்கள்.
“வார்த்தைய கவனமா விடு வேதா! இப்ப நீ என்னை ஹர்ட் பண்ணுற”
“உங்க பொய்யால நான் அனுபவிச்ச வலியை விட இந்த வலி ஒன்னும் கொடுமையா இருக்காது. அனுபவிங்க! எல்லாத்தையும் விடவும் தன்னோட ஈகோதான் பெருசுனு நினைக்குறவங்களுக்குக் காதல் எல்லாம் பெருசாத் தெரியாது”
“ஏய்…”
கடுஞ்சீற்றத்தில் அவன் உறுமியதும் வாயடைத்துப் போனாள் வேதவதி. அட்சரனால் அவள் தனது காதலைக் குறைத்து மதிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தந்தையும் தாயும் வந்து நிற்பதைக் கண்டும் அவன் குரலை உயர்த்தினான் என்றால் அந்தளவுக்குக் கோபத்தின் தீவிரம் அதீதமாய் இருந்தது.
“இதோ நிக்குறாரே! எங்கப்பா, இவரோட நான் பேசி நைன் இயர்ஸ் ஆகுது. ஏதோ நீ வந்த அப்புறம்தான் அரைகுறையாப் பேசிக்கிறோம். இல்லனா எங்களுக்குள்ள கான்வர்சேஷனே நடக்காது. காரணம் என்ன தெரியுமா? நான் செய்யாத ஒரு விஷயத்தைச் செஞ்சதாச் சொல்லி இவர் என் கன்னத்துல அறைஞ்சார். எனக்கு ஸ்மோக் பண்ணுற பழக்கமே கிடையாது. கிளாஸ் பையன் எவனோ ஒருத்தன் சொன்னதை நம்பி என்னை அறைஞ்சார். ஒருத்தன் மேல சிகரெட் ஸ்மெல் வந்தா அவன் ஸ்மோக் பண்ணிருக்கணும்னு அவசியமில்ல. பசங்க கலாட்டா பண்ணி வாய்ல வச்சிட்டானுங்க. அன்னைக்கு எனக்கு நிக்கோடினால நெஞ்சு எரிஞ்சதை விட எங்கப்பா நான் செய்யாத தப்புக்கு அறைஞ்சிட்டாரேங்கிற வருத்தத்துல மனசு எரிஞ்சதுதான் அதிகம். ஒரு வாரம் இவர் என்கூடப் பேசல. நான் சொல்ல வந்த எதையும் கேக்கல. எல்லாரும் சொல்லுறீங்களே, அட்சரன் பெரிய ஈகோயிஸ்ட்னு. அந்த ஈகோயிஸ்ட் உருவானது அங்கதான். ஒரு வாரம் கழிச்சு என்கிட்ட பேச வந்தார் நான் பேசல. ஒரு மாசம் ஒரு வருஷம்னு ஒன்பது வருஷமாகியும் என்னால அதை மறக்க முடியல, பேசல. செய்யாத விஷயத்துக்கு அடிச்சீங்களே, இப்ப உங்க கண்ணு முன்னாடி செய்யுறேன், என்ன பண்ணிடுவீங்கங்கிற ஈகோல ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சேன். வேணும்னாதான் பண்ணுனேன். செயின் ஸ்மோக்கரா இருந்தா போய்ச் சேந்துடுவோம்ங்கிற அறிவு வந்த அப்புறம் ஸ்மோக்கிங்கை என் டென்ஷனைக் குறைக்குற டூலா மட்டும் வச்சுக்கிட்டேன். ஆனா இவரால உண்டான வருத்தமும் மறையல. என் ஈகோவும் குறையல. எப்பவும் குறையாது. இதுதான் நான்”
கோபத்தோடு சொல்லி முடித்தவன் சதானந்தனைப் பார்த்த பார்வையில் கொஞ்சமும் இளக்கமுமில்லை. ஆனால் அவரோ நொந்து போனார்.
பதின்வயதில் மகனுடைய மனதில் பதியும் இனம்புரியாத விரக்தி ஈகோவாய் வளர்ந்து நிற்பது ஒரு தந்தையாய் அவரது தோல்வி. கலங்கிப் போனார் மனிதர்.

அவர் தடுமாறவும் வேதவதியின் கண்கள் இன்னுமே விலகலைப் பிரதிபலித்தன.
“இதைச் சொல்ல நீங்க வெக்கப்படணும். உங்க ஈகோவால அப்பாகூடச் செலவழிச்சிருக்க வேண்டிய அழகான தருணத்தை இழந்திருக்கீங்க. இதுல என்ன பெருமை? நீங்க சொன்ன பொய்யால நான் என்ன மாதிரியான மனவுளைச்சலுக்கு ஆளானேன்னு தெரிஞ்சும் அந்தப் பொய்யைக் கடைசிவரைக்கும் சொன்னீங்க பாருங்க. என்னால அதை ஏத்துக்கவே முடியாது”
“இப்ப நான் என்ன செய்யணும்? உன் கால்ல விழணுமா? தேன்மலைல எனக்கு நடந்த அவமானத்தோட பலனாதான் நான் உன்னைப் பாத்தேன். அங்க நான் அனுபவிச்ச மனவுளைச்சலுக்கு நீயும் ஒரு காரணம்னு நினைச்சேன். அதான் பொய் சொன்னேன். இப்ப வரைக்கும் அந்தப் பொய்க்காக நான் வருத்தப்படல. பொய்னு தெரிஞ்சுப்போச்சுல்ல. அதை மறந்துடு. அவ்ளோதான்”
“அவ்ளோதானா? என் மனவுளைச்சலுக்கு நீங்க என்ன பதில் சொல்லப்போறீங்க?”
“யாருக்கும் பதில் சொல்ல எனக்குப் பிடிக்காது. என்னை இப்பிடியே ஏத்துக்குறதா இருந்தா இரு. இல்லனா உன் இஷ்டம்.”
அட்சரனை விட அட்சரனின் ஈகோ பெரியது என அடிக்கடி வானதி கூறுவாள். இன்று அதைக் கண் முன்னே பார்த்துவிட்டாள் வேதவதி.
“என்னால ஏத்துக்க முடியாது. தைரியமா இருக்கணும், எனக்காகப் பேசணும்னு கத்துக் குடுத்தது நீங்கதான். இப்ப நான் பேசுறது எனக்காக. இப்பப் பேசலனா உங்க ஈகோவுக்காக நீங்க கத்துறதும், நான் அதுக்குப் பணிஞ்சு போறதும் நமக்குள்ள வாடிக்கை ஆகிடும். யூ ஷூட் ஹேவ் டு அக்சப்ட் யுவர் மிஸ்டேக்ஸ்”
அட்சரன் கோபமிகுதியில் சிரித்தவன் பற்களைக் கடித்தபடியே “இன் யுவர் ட்ரீம்ஸ்.” என்றான் திமிராக.

அவளது உயரத்துக்குக் குனிந்தவன் “நான் நானா இருக்குற உறவுலதான் எனக்கும் விருப்பம். இன்னொருத்தனா மாறுனாதான் உறவைத் தக்கவச்சிக்க முடியும்னா அப்பிடியொரு உறவே தேவையில்ல எனக்கு” என்று சொல்ல வேதவதியின் முகம் வேதனையில் இன்னுமே கசங்கியது.
“எவ்ளோ ஈசியாப் பேசுறீங்கல்ல?”
“பேச வச்சது யாரு? நம்மளோட ரிலேஷன்ஷிப் நீடிக்கணும்னா உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் – என் ஈகோவ டச் பண்ணாத வேதா. அதுக்கு வேதாவும் தெரியாது, சதாவும் தெரியாது”
நோகடிக்கிறோமென்ற புரிதலின்றி அவன் உதிர்த்த வாக்கியங்களின் உக்கிரம் நேசிப்பவளையும் பெற்றோரையும் காயப்படுத்துகிறது என்ற எண்ணமே இல்லாமப் பேசி முடித்தவன் அங்கே நிற்கப் பிடிக்காமல் போய்விட்டான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

