விண்மீன் உதிரும் விசித்திர இரவில்
தாபங்கள் தீர்க்கும் காதலின் தாண்டவம்!
உள்ளுயிரை ஈர்க்கும் ஸ்பரிசத்தின் தேடலில்
பிரியாதப் பிணைப்பில் பிறந்ததொரு மோகம்!
பின்னியக் கைகளும் மயங்கிய இதயங்களும்
விழுமிய உறவாய் காதலின் தழுவலாய்!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
-அட்சரனின் வேதா
“நீ போய்த் தூங்குடா வேதா! இந்தப் பையன் பர்த்டே பார்ட்டி வச்சான்னா வீட்டுக்கு வர மிட் நைட்டுக்கு மேல ஆகிடும். நாளைக்கு உனக்கு எக்ஸாம் வேற. முழிச்சிருந்தா எப்பிடி ஒழுங்கா எழுத முடியும்?”
அட்சரனுக்காகக் காத்திருந்த வேதவதியை உறங்கச் சொன்னார் ராஜேஸ்வரி. அவளுக்கு உறங்க மனமில்லை. குறைந்தபட்சம் அவனது ‘குட் நைட்’ இல்லாமல் அவளது கண்கள் இப்போதெல்லாம் உறங்குவதில்லையே!
“பரவால்ல அத்தை. எனக்கும் இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு. நான் படிச்சு முடிக்குறதுக்குள்ள அவர் வந்துடுவார்னு நினைக்குறேன்”
“உறக்கம் கெட்டுச்சுனா நாளைக்குப் பரிட்சை எழுதுறப்ப தலைவலி தூக்கம்னு பெருந்தொல்லையா இருக்கும். இதெல்லாம் யோசிச்சாவது உன் மகன் சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கலாம்.”
சதானந்தன் கடிந்துகொண்டார் அட்சரனை. எப்படியும் வேதவதி அவன் வராமல் உறங்கமாட்டாள் என்பது தெரிந்துபோனதால் மனைவியை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
“பால்கனி குளிர்ல உக்காந்திருக்காதம்மா. உள்ள உக்காந்து படி. அவன் வந்தா கார் சத்தம் கேக்கும்” என்று அக்கறையாய்ச் சொல்லிவிட்டுத்தான் போனார் அவர்.
அட்சரன் மாலையில் ஹோட்டலுக்குக் கிளம்பியபோது வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியதோடு சரி! பின்னர் அவனிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை.
வேதவதியும் சதானந்தன் சொன்னபடி அறைக்குள் அமர்ந்து புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். மனம் காகிதங்களின் மீதுள்ள எழுத்துகளில் பதிந்தால்தானே!
நேரம் கடந்து சரியாகப் பன்னிரண்டரைக்குக் கார் சத்தம் கேட்டதும் வேகமாகப் பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தாள். வந்தது அட்சரனின் கார் இல்லை. கேப்!

அதிலிருந்து இறங்கியவனின் தள்ளாட்டம் பார்ட்டியில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை அவளுக்குக் காட்டிவிடக் கடுப்போடு கீழ்த்தளத்தை அடைந்து கதவைத் திறந்தாள்.
அவனோ பாக்கெட்டைத் துழாவிக்கொண்டிருந்தான். கதவு திறந்து வேதவதி வந்து நின்றதைக் கண்டதும் அசட்டுச்சிரிப்பு அட்சரனிடம்.
சிரிப்பும் பார்வையும் எக்ஸ்ட்ரா குழைந்ததிலேயே தெரிந்துவிட்டது மதுவின் பிடியில் அவன் இருப்பது.
“இதுதான் கொஞ்சமா குடிக்குறதா?” என்று சீறியவளின் கன்னத்தைப் பற்றியவன்
“கத்தாத வேதா! நீதான் பெஸ்ட்ட்டஸ்ட் பொண்டாட்டினு சொல்லிட்டு வந்திருக்கேன்டி. கொஞ்சம் அதிகமாகிடுச்சு. நான் குடிக்குறதே வருஷத்துல ஒரு நாள்தான்” என்றவனின் பேச்சிலிருந்த தெளிவு அவனது உடல்மொழியில் இல்லை.
மீண்டும் பாக்கெட்டில் கை வைத்துத் தேடினான்.

“எதைத் தேடுறீங்க?”
“சாவி”
குழந்தையாய் அவன் விழிக்க வேதவதிக்கோ பொறுமை பறந்துவிட்டது.
“லூசு! லூசு! அது கார்லதானே இருக்கும். நீ கேப்ல வந்து இறங்கிருக்க. அப்ப எப்பிடி பாக்கெட்ல சாவி இருக்கும்? நான் தூங்கியிருக்கணும். உனக்காக முழிச்சிருந்தேன் பாரு!”
ஒருமையில் திட்டியவள் அவன் சிரிக்கவும் “சரி! வீட்டுக்குள்ள வாங்க” என்று கைப்பிடித்து இழுக்க அவனும் நல்லப்பிள்ளையாக வந்தான்.
“மாடிப்படி ஏறிடுவீங்களா? இல்ல…”
“ஏய்… நீஈஈஈ என்னை மொடாக்குடிகாரன் மாதிரி…”
பட்டென கரம் குவித்தாள் வேதவதி.
“நீங்க தயவுபண்ணி பேசாதீங்க. சத்தத்துல மாமாவும் அத்தையும் முழிச்சுக்கப் போறாங்க”
வாயை மூடி உதட்டில் ஆட்காட்டிவிரலை வைத்துக்கொண்டவனைப் பார்க்கையில் சிரிப்பும் கோபமும் ஒருசேர வந்தது அவளுக்கு.
கீழ்த்தளத்தின் கதவை அடைத்து விளக்கை அணைத்து அவனை மேலே அழைத்துச் சென்றாள்.
அவன் நேராய் படுக்கையில் போய் விழுந்ததும் “டிரஸ் சேஞ்ச் பண்ணலையா? இதுல எப்பிடித் தூங்குவீங்க?” என்று கேட்டாள் அவள்.
“நோ ப்ராப்ளம். ஐ கேன் மேனேஜ்” சிரிப்போடு சொன்னவன் தன்னருகே படுக்கையைத் தட்டிக் காட்டினான்.
“உக்காரேன் வேதா! கொஞ்சம் பேசணும்”
மதுவின் பிடியில் இருக்கும் ஆண்களிடம் பேச்சு கொடுப்பதும் சுவரில் தலையை முட்டிக்கொள்வதும் ஒன்று. சொன்னதையே சொல்லி சாகடிப்பார்கள். முக்கியமாக அந்த நேரத்தில் எக்ஸ்ட்ரா அன்பைக் கொட்டுகிறேன் பேர்வழியாகப் பொறுமையை வேறு சோதிப்பார்கள். சோஷியல் ட்ரிங்கர் என்று சொல்லிக்கொள்ளும் ஆண்களின் வீட்டில் இந்தக் கலவரம் கட்டாயம் நடக்கும்.
பாவம்! இதெல்லாம் வேதவதிக்குத் தெரியாதே! அவன் சொன்னதும் அமர்ந்துவிட்டாள்.
அட்சரன் அவளது மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டவன் செல்லமாய் அவள் கன்னத்தைக் கிள்ளினான்.

“வலிக்குது” என அவள் சொல்லவும்
“சாரி! சாரி! நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல. சாரி!” என்றான்.
“பரவால்ல! நீங்க தூங்குங்க. மீதியக் காலையில பேசிக்கலாம்”
“ம்ஹூம்! நான் இப்பப் பேசணும். நீ கேக்கணும்.”
“சரி பேசுங்க! கேட்டுத் தொலைக்குறேன்”
சாரி சாரி எனப் படித்த பாட்டையே அவன் மீண்டும் மீண்டும் பாடியதில் வேதவதியின் காதுகள் இரணமானதுதான் மிச்சம்.
‘எந்தன் காதுகள் பாவமில்லையா?’ என்ற ரீதியில் அவள் பார்த்தாலும் அவனுக்கு அது புரியவேண்டுமே.
“அந்தச் சாந்தா பொம்பளை பண்ணுன வேலையாலதான் எல்லாமே. எனக்கு எப்பவுமே உன் மேல நிறைய்ய்ய மரியாதை உண்டு தெரியுமா?”
“அப்பிடியா?”
“ஆமா! நீ அப்பாவி. நான்தான் கோவக்காரன், இடியட், ஈகோயிஸ்ட். என் ஈகோவ திருப்திப்படுத்த நான் பொய் சொல்லிருக்கேன். அது தப்புதானே?”
“விடுங்க! பாத்துக்கலாம்”
“ஹான், அப்பிடியெல்லாம் விடமுடியாது.” என்றபடி எழுந்து அமர்ந்தவன் அவளது கன்னங்களைப் பற்றிக்கொண்டான்.
“நீ என்னைப் லவ் பண்ணுறல்ல! ஆனா உனக்கு முன்னாடியே நான் லவ் பண்ணுறேன் தெரியுமா”
“தெரியுமே! பிருந்தாவதானே?” அசிரத்தையாய்க் கேட்டவளின் விழிகள் கடிகாரத்தில் பாய்ந்தது.
“சை! அவளையா? நானா? இங்க பாரு வேதா! எனக்கு யார் மேலயும் லவ் வந்ததேயில்ல. அதுக்கெல்லாம் நான் செட் ஆகமாட்டேன்டி. ஏதோ அம்மா புண்ணியத்துல நீ என் வாழ்க்கைக்குள்ள வந்ததால இன்னைக்கு நான்… குடும்பஸ்தன் ஆகிட்டேன். நமக்கும் லவ்வுக்கும் இவ்ளோஓஓஓ தூரம்”
கைகளால் அவன் அளந்து காட்டியதில் கடிகாரத்தில் நிலைத்திருந்த வேதவதியின் விழிகள் அட்சரன் பக்கம் திரும்பின.
“என்ன? புரியல”
“புரியலையா? கேளு! நான் பிருந்தாவக் காதலிக்கல. வற்புறுத்தி என் வாழ்க்கைக்குள்ள திணிக்கப்பட்டவளை ஏத்துக்கணுமாங்கிற ஈகோல காதலிச்சேன்னு உன்கிட்ட பொய் சொன்னேன். உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு சொன்ன பொய் அது.”
வேதவதியின் விழிகள் இமைக்க மறந்து அவனையே ஏறிட்டன.
“அப்ப ப்ரேக்கப்?” தடுமாறியது அவளது குரல். அட்சரன் சத்தமாகச் சிரித்தான்.
“காதலே இல்ல. ப்ரேக்கப் எங்க இருந்து வந்துச்சாம்? உன்கிட்ட ஈசியா மயங்கிட்டேன்னு நீ நினைச்சுக்கக்கூடாதுங்கிறதுக்காகச் சொன்ன பொய் அது. நான் முதலும் கடைசியுமாக் காதலிச்ச பொண்ணு நீ மட்டும்தான்”
சொன்னவன் அவளை அணைத்துக்கொள்ள வேதவதியின் உடலோ இறுகிப்போனது.

அட்சரனின் முதலும் கடைசியுமான காதல் தன்மீதுதான் என்றதும் மனம் பூரித்தாலும் அவன் சொன்ன பொய்கள், அந்தப் பொய்களால் அடைந்த மனவுளைச்சல், அதை அவனிடம் காட்டிய விதத்தை நினைத்துப் பார்க்கையில் வலித்தது வேதவதிக்கு.
பெண்களின் உணர்வுகள் மென்மையானவை. எளிதில் காயப்படக்கூடியவை. ஆண்களுக்குப் பெரிதாகத் தெரியாத சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெண்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமான ட்ராமாவைக் கொடுக்கவல்லவை.
அட்சரனுக்கு அவை விளையாட்டுத்தனமான பொய்களாக இருக்கலாம். ஆனால் வேதவதிக்கு அந்தப் பொய்களால் அவள் அடைந்த மனவுளைச்சலும் வருத்தமுமே பெரும் வேதனையாய்!
அவன் காட்டிய கனிவு, அவனது பெற்றோரின் பாசம், சின்னச் சின்னப் பரிசுகளைக் கூட முழு மனதோடு ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் அவள் தவித்த நாட்கள் இந்த ஆறு மாதத்தில் அநேகம்.
சில நாட்கள் இரவில் உறக்கம் கூட வந்ததில்லை அவளுக்கு.
இதே வீட்டில் இன்னொருத்தி மருமகளாய் வளைய வரவேண்டிய இடத்தில் நான் இருக்கிறேனே என்று அவள் நொந்துகொள்ளாத நாட்களே இல்லை.
இவ்வளவு ஏன்? அட்சரனின்பால் அவளது மனம் சரியத் தொடங்கியபோது எப்படியெல்லாம் தன்னைத்தானே திட்டியிருப்பாள்? அவனிடம் ஒவ்வொரு முறை பிருந்தாவைப் பற்றிக் கடுப்பாய்ப் பேசும்போதும் இந்த அட்சரன் மனதுக்குள் நிச்சயம் சிரித்திருப்பான்தானே! மொத்தத்தில் உணர்வுகள் காயம்பட்ட கோமாளியாய்த் தன்னை எண்ணிக்கொண்டவளுக்குச் சத்தம் போட்டு அழவேண்டும் போல இருந்தது.
இதெல்லாம் அனுபவித்தவளுக்கு மட்டுமே புரியக்கூடிய வேதனை. வார்த்தைகளால் விவரித்தாலும் எதிரிலிருப்பவருக்குப் புரியாது.
வேதவதியின் கண்கள் கலங்கின. அட்சரன் ஏதோ பேசிக்கொண்டிருக்க அவனைத் தலையணையில் படுக்குமாறு சொல்லிவிட்டு எழுந்தாள்.
அவனும் அடம்பிடிக்காமல் படுத்துக்கொண்டான்.
“குட் நைட் வேதா! லவ் யூ”
அவனது ‘லவ் யூ’வில் மனம் முழுதாய் உருக மறுத்தது. கண்ணீர்தான் வந்தது அவளுக்கு.
“தூங்குங்க”
சுருக்கமாய்ச் சொல்லிவிட்டு விளக்கை அணைத்தவள் கதவைச் சாத்திவிட்டுத் தனது அறைக்குள் வந்ததும் வெடித்து அழ ஆரம்பித்தாள்.
‘வற்புறுத்தி என் வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டவளை நான் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?’
‘உன்னிடம் சுலபத்தில் மயங்கியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’
இந்த இரண்டு காரணங்களும் அட்சரனுக்கு வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம். வேதவதிக்கு அது அவனது ஈகோவின் உச்சபட்சம் என்றே தோன்றியது.
‘எனக்கு முன்னே அவன் மனதில் காதல் நுழைந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லக்கூட அந்த ஈகோ அவனை அனுமதிக்கவில்லை என்றால் எனக்கு அவனது வாழ்க்கையில் என்னதான் முக்கியத்துவம் இருக்கிறது? இதே போல ஒவ்வொன்றுக்கும் அவனது ஈகோவுக்குக் குடை பிடித்தால் என் நிலைமை?’
இந்த வீட்டில் அவள் காலடி எடுத்து வைத்தபோது வாழ்க்கை சூனியமாகத் தெரிந்தது. இப்போது தெளிவாகத் தெரிந்தாலும் சொல்லவொண்ணா பாரமொன்று மனதில் ஏறியமர்ந்ததால் இதைத் தொடரும் வலுவை இழந்ததைப் போல உணர்ந்தாள்.
அழுகை நின்றது. விரக்தி வென்றது அந்த இடத்தில். விரக்தியால் சூழப்பட்ட மனிதன் விலகலைத் தனது குணமாக்கிக்கொள்வான். அதை விடிந்ததும் அட்சரனைப் பார்த்த நொடியிலிருந்தே புரிந்துகொண்டாள் வேதவதி.
தேர்வுக்குத் தயாராகி முகமெல்லாம் வாடிப்போய் உணவு மேஜையில் அமர்ந்தவளைக் கவலையோடு என்னவென விசாரித்தார் ராஜேஸ்வரி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

