நக்கலாகச் சிரித்தபடி மாடிப்படியேறியவனின் செவிகளில் “நீ எங்கயும் போகக்கூடாது. இது உன் வீடு. அவன் செயினைக் கழட்டிட்டா எல்லாம் முடிஞ்சுதா? அது என்ன மோதிரம், வளையல் மாதிரி ஒரு நகைனு நினைச்சுக்கிட்டானா?” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மைந்தனின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினார்.
அட்சரன் கோபத்தோடு அவனது அறைக்குப் போய்விட, வேதவதியிடம் அவளது உடைமைகளை அடுக்கி வைத்துவிட்டாளா என விசாரித்தார்.
“நான் பேக்கை எடுத்தப்ப அவங்க வந்துட்டாங்க”
“சரி! நீ போய் ட்ரஸ் எல்லாத்தையும் வார்ட்ரோப்ல எடுத்து வை.”
அட்சரனின் அறைக்குச் செல்ல அத்துணை பயமாக இருந்தது அவளுக்கு. ஆனால் மனதில் இருந்த தெளிவு மட்டும் குறையவில்லை. ‘நானும் தப்பு. அவனும் தப்பு. அவன் முன்னே நான் தலைகுனியக்கூடாது’
மாடிப்படியில் ஏறும்போது மந்திரம் போல உருப்போட்டுக்கொண்டே சென்று அட்சரனின் அறைக்குள் நுழையப்போன வேதவதியின் கால்களுக்குச் சற்றுத் தள்ளி வந்து விழுந்தது, சைனா களிமண்ணில் செய்த சிறிய பூஜாடி ஒன்று. கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் கட்டாயம் அவளது காலைப் பதம் பார்த்திருக்கும் அந்தப் பூஜாடி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஜாடி விழுந்த அதிர்ச்சியில் அறையின் வாயிலில் அதிர்ந்து போய் நின்றுவிட்டாள் அவள். உள்ளே ரௌத்திரகாரமாய் நின்று கொண்டிருந்த அட்சரன் அவளைப் பார்த்ததும் இன்னும் கோபமானான். அவளது பேக்கையும் எடுத்து வெளியே எறிந்திருந்தான்.
“எவ்வளோ தைரியமிருந்தா என் ரூமுக்கே நீ வருவ? எப்படி வந்தியோ அப்படியே திரும்பிப் போயிடு. இல்லனா நான் மனுஷனா இருக்கமாட்டேன்”
அவனது எச்சரிக்கும் தொனியே மிரட்டலாக உருவெடுத்து அவளை உலுக்கிவிட, பயத்தின் ரேகைகள் அவளது விழிகளில் படர்ந்தன.
“உன்னைப் போகச் சொன்னேன்!” கர்ஜனையாய் ஒலித்தது அவனது குரல்.
அதில் கண்கள் எல்லாம் கலங்க, கீழே கிடந்த பேக்கை எடுத்து அதன் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் வேதவதி.
இவ்வளவு நேரம் ஹெல்வட்டாசில் அமைதியாகக் காட்டிக்கொண்டவனுக்கு, வீட்டுக்கு வந்ததும் அவளைப் பார்த்ததும் கரையுடைத்த நதியாய்க் கட்டுக்கடங்காமல் வெடித்தது கோபம். அவனது சுழித்த புருவங்களில், இறுகிய தாடையில், நரம்போடிய கரங்களில், எஃகாய் மாறிய உடலில் கோபத்தின் ஜுவாலை!
“அது… அத்தை… இங்க…” என்றவளுக்கு வார்த்தைகள் தடுமாறின; குரல் குழறியது. தொண்டையை ஏதோ இறுக்குவது போன்றதொரு மாயை. அவனை ஏறெடுத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது.
“யாரு யாருக்கு அத்தை? ஏய்! உனக்கு அவ்வளோதான் லிமிட். இதுதான் சாக்குனு உறவு கொண்டாடுறியாடி?”
சும்மா நின்றவனுக்குக் கொம்பு சீவிவிட்டது போல, அவனது அன்னையை அவள் ‘அத்தை’ என விளித்துவிட, ஆவேசமாய் அவளை நெருங்கியவனின் கரங்கள் இரும்பை விடக் கடினமாய் அவளது தோள்களில் பதிந்தன.
நமது மனதை ஆட்கொள்ளும் உணர்வுகள் நமது ஸ்பரிசத்தைப் பாதிக்குமாம். அட்சரனது மனதில் மூண்டிருக்கும் வெறுப்பெனும் நெருப்பின் வெம்மை அவனது கரம் வழியே தனது தோள்பட்டைகளை எரிப்பதாய் உணர்ந்தாள் வேதவதி.
“ஹவ் டேர் யூ வேதா? என்னையே முட்டாள் ஆக்கிட்டல்ல நீ. உன்னை அப்பாவி, பொறுமைச்சாலினு என் அம்மாவும் அப்பாவும் நம்பலாம். ஆனா எனக்குத்தான் நீ ஒரு கடைஞ்செடுத்த சந்தர்ப்பவாதினு தெரியும். உன்னை மாதிரி ஒருத்தி என் ரூம்ல இருந்தா, ஒவ்வொரு நாளும் நான் முட்டாள் ஆன அந்த நொடி எனக்குள்ள உறுத்தலை உண்டாக்கிட்டே இருக்கும். போ! போடி”
பலமாய் அவளது தோள்களைப் பிடித்து அட்சரன் தள்ளியதில், கீழே தடுமாறி விழப்போனவளை நல்லவேளையாக வந்து தாங்கிக்கொண்டார் ராஜேஸ்வரி. வேதவதி அதிர்ச்சியில் என்ன செய்வதெனத் தெரியாமல் கண்ணீரை உகுக்க, “அழாதடா வேதா!” என்று நைந்த குரலில் சொன்னவர், மகனை ஏறிட்டபோது அவரது விழிகளில் ஏமாற்றத்தின் வேதனை தெரிந்தது.
‘எனது வளர்ப்பா இவன்? சூழ்நிலைக்கைதியானப் பெண்ணை வார்த்தைகளால் கூறு போடுகிறானே. தனியே விட்டால் பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என்ற எனது கணிப்பையும் உடைக்கிறானே!’ அன்னையின் முகபாவனையை வைத்தே அவரது எண்ணவோட்டத்தைக் கண்டுகொண்டான் அட்சரன்.
“இவளை மாதிரி சந்தர்ப்பவாதி உங்களோட அன்புக்குத் தகுதியானவ இல்லம்மா. இவளோட இந்த அப்பாவி மூஞ்சியைப் பாத்து என்னை மாதிரி நீங்களும் ஏமாந்துடாதிங்க” என்றான் அட்சரன் தணலாய்க் கொதித்தபடி.
“அச்சு!” அவனை அதட்டிய ராஜேஸ்வரி,
“நான் அந்த ஊர்க்காரங்க முன்னாடி கஜேந்திரன் அண்ணாகிட்ட சத்தியம் பண்ணிருக்கேன். என் மேல மரியாதைனு ஒன்னு நிஜமாவே இருந்துச்சுனா, வேதாவை இங்க இருக்க விடு” என்றார்.
“எமோஷனல் பிளாக்மெயிலா? யாரைக் கேட்டு நீங்க சத்தியம் பண்ணுனீங்க? உங்க சத்தியத்துக்காக இவளை மாதிரி ஒருத்திய நான் சகிச்சுக்கணுமா? ரிடிகுலஸ்மா” என உறுமியவன், வேதவதியைப் பார்த்த பார்வையில் அத்துணை விரோதம்.
“இந்த வீட்டுல இவ இருந்தா நான் இருக்கமாட்டேன். நானா இவளான்னு முடிவு பண்ணுங்க” என்று அன்னையிடமே சவால் விட்டுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தவன், வாயிலருகே நின்றுகொண்டிருந்த வேதவதியை அவமானக் கன்றலோடு பார்த்தான்.
அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “அங்க நீ பேசிருக்கணும் வேதா. உன் மௌனத்தால இன்னைக்கு நான் கறைபட்டு நிக்கிறேன். இந்த வீண்பழியை உன்னால எப்பவுமே துடைக்க முடியாதுடி” என்று கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பிவிட்டு அங்கிருந்து விருட்டெனப் போய்விட்டான்.

ராஜேஸ்வரி எதையோ தீர்மானித்தவராக அவளது பேக்கை வாங்கிக்கொண்டார். “நீ வா என் கூட” என்று அழைத்துப் போனவர் அதே தளத்தில் விருந்தினர் வந்தால் தங்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தார்.
“இனி இந்த ரூம் உன்னோடது. உனக்கு இந்த இண்டீரியர் பிடிச்சிருக்கா? வேற ஏதாச்சும் வேணும்னா சொல்லுடா. உன் மாமாவை வாங்கிட்டு வரச் சொல்லுறேன்”
“நீங்க ஏன் என் முகத்தைப் பாக்கமாட்றிங்க அத்தை?”
திரும்பியவரின் விழிகளில் கண்ணீர் படலம்.
“அழுறிங்களா?” என வேதவதி பதற விம்மலோடு மெத்தையில் அமர்ந்தார் ராஜேஸ்வரி.
பெருமூச்சும் சேர்ந்தே வர “நான் தான் தப்பு பண்ணிட்டேனா வேதா? இந்தப் பையனுக்கு நியாயபுத்தி இருக்கும்னு நினைச்சேனே. என் நினைப்பைப் பொய்யாக்கிட்டுப் போறான். உன் அப்பா கிட்ட உன்னை வாழ வைக்குறேன்னு சத்தியம் பண்ணுனேன். ஆனா உன்னை இந்த வீட்டுல தங்க வைக்குறதுக்கே இவ்ளோ போராட வேண்டியதா இருக்குதே” என்றவர் ஒரு மூச்சு அழுதார்.

யாழினி சொன்னது வேறு நினைவுக்கு வந்தது அவருக்கு.
“நீங்க அழாதிங்க. இங்க சரியா வரலனா எங்கப்பா என்னை ஊருக்கு வரச் சொல்லிட்டார் அத்தை. உங்களுக்குக் குற்றவுணர்ச்சி வேண்டாம்”
மெல்லிய குரலில் அவள் சொல்லும்போதே அழுதுகொண்டிருந்த ராஜேஸ்வரி மூர்ச்சையாகி மெத்தையில் சரிந்துவிட்டார்.
“அத்தை…” என்று பதறிய வேதவதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரது கன்னத்தைப் பிடித்துத் தட்டிப் பார்த்தாள். ராஜேஸ்வரி எழவில்லை என்றதும் அட்சரனைத் தேடி ஓடினாள்.
அலைய குலைய அவள் மாடிப்படியில் இறங்கி வருவதைக் கண்டதும் அவனுக்கு எரிச்சல்.
“அத்தை…”
“அத்தையா?” என்று அவன் கோபத்தில் கையை உயர்த்தியபோதே வேகமாகத் தடுத்தவள் “அத்தை அங்க மயங்கி விழுந்துட்டாங்க” என்றாள் கல்லாய் இறுகிப்போன முகத்தோடு.
அட்சரன் பதறிப்போய் படிகளில் ஏறிச் செல்வதைப் பார்த்தபடி நின்றவளுக்கு மன அமைதியே பறிபோன நிலை.
அட்சரன் ராஜேஸ்வரியைத் தூக்கிக்கொண்டு படிகளில் இறங்கியவன் “ஏய்! என் கார் கீ அங்க இருக்குப் பாரு. போய் காரை ஓப்பன் பண்ணு” என்று கத்த, வேதவதியும் கார்ச்சாவியை எடுத்துப் போய் அவனது ரேஞ்ச் ரோவரின் கதவைத் திறந்தாள்.
பின்னிருக்கையில் தனது அன்னையைப் படுக்க வைத்தவன் “போய் அம்மா கிட்ட உக்காரு” எனக் காருக்குள் தள்ளாத குறை.
அவனது கையைத் தட்டிவிட்டவள் “சொன்னாலே எனக்குப் புரியும்” என்று சீறிவிட்டுக் காருக்குள் அமர்ந்தாள். அமர்ந்தவள் ராஜேஸ்வரியைத் தனது தோளில் சாய்த்துக்கொண்டாள்.
அட்சரனுக்கு அன்னையைப் பற்றிய கவலையில் வேதவதியின் சீற்றம் மனதில் பதியவில்லை. கார் வேகமெடுத்து அருகிலிருக்கும் மருத்துவமனையில் நின்றது மட்டும்தான் வேதவதிக்குத் தெரியும். பின்னர் ராஜேஸ்வரியை அங்கே அனுமதித்தது, மருத்துவரிடம் ஓடியது என அவள் பார்த்தது புது அட்சரனை. அன்னை மீது அன்பு கொண்ட ஒருவனை.
“நான் எழுப்பிப் பாத்தேன் டாக்டர். முகத்துல தண்ணி கூட தெளிச்சுப் பாத்தேன். அவங்க மயக்கம் தெளியல” பதற்றத்தோடு அட்சரன் மருத்துவரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஏனோ வேதவதிக்கு அவன் மீது கோபம் தான் வந்தது. ‘நான் என்ன இவனிடம் அபலைப்பெண் போல அழுது நாடகம் போடவா வந்தேன்? ஒரு மாதமோ இரண்டு மாதங்களோ இருந்துவிட்டு செட் ஆகவில்லை என்று சொன்னால் பெரியவர்கள் புரிந்துகொள்வார்கள். அதைச் செய்யாமல் வீணாக அத்தையைப் பதற்றத்துக்கும் குற்றவுணர்ச்சிக்கும் ஆளாக்கி இப்படியொரு நிலையில் தள்ளிவிட்டானே!’
நகம் கடித்தபடி அவனை முறைத்துக்கொண்டு நின்றவள், அவனது பார்வை தன் பக்கம் திரும்பியதும் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
மருத்துவர் சொல்வது அவளது காதில் விழுந்தது. “பிபி ஷூட் அப் ஆகியிருக்கு. அந்த ஷாக்ல ஹார்ட் ரேட் ஏறி மயங்கிட்டாங்க. பிபி குறைய இன்ஜெக்சன் போட்டாச்சு. ட்ரிப் ஏறிட்டிருக்கு. பயப்படுற மாதிரி ஒன்னுமில்ல”
“டாக்டர் ஸ்ட்ரோக் மாதிரி எதுவும்… “ முழுதாக முடிப்பதற்குள் அட்சரனின் குரல் நடுங்கியது.
“நோ நோ! இது ஹை பிபி சின்கோப்னு மெடிக்கல் லாங்வேஜ்ல சொல்லுவோம். பயப்படவேண்டாம்”
அதைக் கேட்ட பிறகு அட்சரன் மட்டுமில்லை, வேதவதியுமே அமைதியானாள்.
மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தவனிடம் “மாமா கிட்ட இன்ஃபார்ம் பண்ணுனிங்களா?” என்றாள் மெதுவாக.
“மாமானு சொல்லாத”
“அப்ப பெரியப்பானு கூப்பிடவா?”
இருக்கிற கடுப்பில் வேண்டுமென்றே கேட்டுவிட்டாள் வேதவதி.
“எங்க பேசணுமோ அங்க வாய்ல பெவிகால் ஊத்துன மாதிரி கமுக்கமா நில்லு. எங்க தேவையில்லயோ அங்க மட்டும் வக்கணயா பேசு” என்று குத்திக் காட்டிப் பேசியவன் “அப்பா கிட்ட பிறகு சொல்லிக்கலாம். இப்ப சொன்னா அவரும் டென்சன் ஆவார்” என்றான் வேண்டாவெறுப்பாக.
“உள்ள அட்மிட் ஆகியிருக்குறது அவரோட ஒய்ப். அவருக்குச் சொல்லணும். அவங்களுக்குச் சின்ன ஹெல்த் இஷ்யூ வந்தாலும் அதைத் தெரிஞ்சிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கு” சின்னதொரு பிடிவாதம் வேதவதியின் குரலில்.
அட்சரன் ‘எனக்கென்ன’ என்பது போல கடக்கப் போகவும் “எல்லாரும் பொறுப்பைத் தட்டிக் கழிச்சிடமாட்டாங்க” என்றாள் அவனைப் போலவே குத்திக் காட்டினாள்.
அட்சரனின் கால்கள் நின்றன. அவளிடம் வந்தவன் விழிகளில் கடுமை பூசி அதில் கொஞ்சம் ஆச்சரியம் கலந்து அவளைப் பார்த்தான்.
“இப்பிடியெல்லாம் பேசுனா எனக்குக் குற்றவுணர்ச்சி வந்து உன்னை ஏத்துப்பேன்னு நினைக்குறியா?” என்றான் கேலியாக.
“நான் இந்தச் சூழ்நிலைய ஏத்துக்கிட்டேன். உங்களோட வலுக்கட்டாயமா திணிக்கப்பட்ட உறவை இல்ல. நானே ஏத்துக்காத உறவை நீங்க ஏத்துக்கணும்னு நான் ஏன் நினைக்கப்போறேன்?”
முகம் வாடியிருந்தாலும் நிதானமாய் நீளமாய் பேசியவளின் தொனியில் இருந்த உறுதி அவள் பொய் சொல்லவில்லை என்பதை அட்சரனுக்குப் புரியவைத்துவிட்டது.
“இந்தத் தெளிவு, இந்த சாமர்த்தியம் அந்தப் பொம்பளை பேசுறப்ப எங்க போச்சு? அங்க பேசிருக்கணும் நீ. பேசாம இருந்து… சை”

“நம்ம கையை மீறி ஒரு விசயம் போகுதுனா கோவத்துல கொந்தளிச்சு தன்னோட மன அமைதியையும் சுத்தி இருக்குறவங்க மனநிம்மதியையும் கெடுக்குறது உங்களோட குணமா இருக்கலாம். நான் அந்த மாதிரி சூழல்ல அமைதியாகிடுவேன். அது என் இயல்பு. அதை உங்களுக்காக நான் மாத்திக்கணும்னு எப்பிடி எதிர்பாக்குறிங்க? யார் நீங்க எனக்கு?”
“உன்னால ஒருத்தன் கேரக்டர் தப்பா பேசப்படுறப்ப நீ வாயைத் திறக்கமாட்ட. ஹவ் செல்ஃபிஷ் யூ ஆர்” புகழுவது போல மட்டம் தட்டினான் அட்சரன்.
“நான் சுயநலவாதினா நீங்க பொதுநலவாதியா? சம்பந்தமே இல்லாம என் பேரைச் சபைல இழுத்துவிட்டது யாரு?” என்றவள் சலிப்போடு “மாமாக்குக் கால் பண்ணி சொல்லுங்க. அவ்ளோதான். எனக்கு உங்க கிட்ட பேசவோ உங்க முகத்தைப் பாக்கவோ பிடிக்கல” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சற்று தள்ளி கிடந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
இரண்டு நாட்களாக எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்த அட்சரனைச் சில நிமிடத் தெளிவானப் பேச்சால் அமைதியாக்கிவிட்டாள் வேதவதி. அவளை முறைத்தபடியே அருகில் சென்றவன் தனது மொபைல் லாக்கை நீக்கி அவளிடம் கொடுத்தான்.
‘என்ன?’ என்பது போல கண்களை உருட்டியவளிடம், “அப்பாவோட நம்பருக்குக் கால் பண்ணி சொல்லு” என்றான் அதிகாரமாய்.
வேதவதி அமைதியாக அவனது மொபைலை எடுத்தவள், அழைப்பு ஏற்கப்பட்டதும் “ஹலோ மாமா…” என்று பேசத் தொடங்கினாள்.
அமைதியாக அவளைப் பார்த்தபடி எதிரிலிருந்த தூணில் ஒரு காலை ஊன்றி, மறுகாலை தரையில் ஊன்றி, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான் அட்சரன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

