“பலவீனமான ஆண் ஜெயிக்கிறதுக்கு அதிர்ஷ்டத்தையும், சூழ்நிலையையும் நம்புவான்… ஆனா பலசாலியான ஆணோ காரணத்தையும் விளைவுகளையும் மட்டுமே நம்புவான்… இந்தக் காரியத்தை நான் செய்யுறதுக்கான காரணம் என்ன? இதைச் செஞ்சா உண்டாகுற விளைவுகள் எனக்குச் சாதகமா அமையுமானு யோசிச்சு சரியான நேரத்துல சரியான காரியத்தைச் செஞ்சா கட்டாயம் ஜெயிக்கலாம்… இதுல ஏன் பெண்களைச் சேர்க்கலனு உங்களுக்குக் கேள்வி வரலாம்… யோசிச்சு செயல்படுறது எல்லாம் பெண்களோட அகராதிலயே கிடையாதுங்கிறது என்னோட ஒபீனியன்”
-ராகவர்தன்
“கடைசி நேரத்துல பேச்சு மாறிட மாட்டியே ராகவ்? என் ஃப்ரெண்டோட பொண்ணுடா… ரொம்ப சாது… அவ மனசுல ஆசைய வளர்த்துட்டேன்”
தனலெட்சுமி சந்தேகமாகக் கேட்க ராகவர்தன் சூடம் அணைத்துச் சத்தியம் செய்யாதக் குறை!
“இன்னொரு தடவை இதே சந்தேகம் வந்துச்சுனா கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமானு நான் மறுபடி யோசிக்க ஆரம்பிச்சிடுவேன்… எப்பிடி வசதி?”
“ஐயோ! அப்பிடி எதையும் செஞ்சு எனக்கும் கவிதாக்கும் இடையில இருக்குற ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் குண்டு வச்சிடாத மகனே… சௌமி ரொம்ப சாதுவான பொண்ணு… உன் அழுத்தமானக் குணத்துக்கு ஏத்தவ”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தனலெட்சுமி சொல்ல சரியென்றவன் “அப்ப நான் பொண்ணு பாக்குறதுக்கு மட்டும் வந்தா போதும் தானே?” என்று வார்த்தையில் கொக்கி போட்டு நிறுத்தவும் மறுமுனையின் நீண்ட அமைதி.
“போடா… நான் சொன்னா மட்டும் நீ முன்னாடியே வரவா போற?” என்ற அன்பானக் குறை கூறல்!
வயதாக ஆக பெற்றோர் குழந்தைகளாகி விடுகிறார்கள்.
ராகவர்தன் சத்தம் எழுப்பாமல் சிரித்தவன் “சரி! உங்களுக்காக இன்னும் ரெண்டு நாள்ல வர்றேன்… எனக்குமே திருநெல்வேலி கமிஷ்னர் கிட்ட ஒரு கேஸ் சம்பந்தமா சில டீடெய்ல்ஸ் கேக்கணும்… அதனால தான் வர்றேன்… அதோட சேர்த்துப் பொண்ணு பாக்குறதையும் முடிச்சிடுங்க… என்னை அங்கயே தங்க வச்சிடலாம்னு நினைச்சுடாதிங்க”
“சரிடா… நீ வந்துட்டு உன் வேலை முடிஞ்சதும் கிளம்பிடு… உன்னை நான் கம்பெல் பண்ணித் தங்க வைக்கமாட்டேன்… ப்ராமிஸ்”
அன்னை சத்தியம் செய்ததும் சத்தமாகவே சிரித்தான் ராகவர்தன்.
அவரிடம் இன்னும் இரண்டு வார்த்தைகள் ஆதுரமாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அவர் அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தான்.
‘சௌமித்ரா’ அதுதான் அவளுடைய பெயர்.
அழகாக இருந்தாள். வசீகரமானச் சிரிப்பு குடிக்கொண்டிருந்த அந்த முகத்துக்குச் சொந்தக்காரி சாதுவாக இருக்க வாய்ப்பில்லை என்று மட்டும் ராகவர்தனின் உள்ளம் சொல்லிக்கொண்டே இருந்தது.
ஏனோ வார்த்தைக்கு வார்த்தை வாயாடும் பெண்ணோடு தனது வாழ்நாளைக் கழிப்பதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கு தானே! வார்த்தைப்போரில் ஈடுபடவதற்கு இல்லையே!
இத்தகைய மனநிலை உள்ளவனுக்கு ஏற்ற பெண்ணாகத் தேடிச் சலித்துப் போன தனலெட்சுமிக்கு லட்டு போல கிடைத்த பெண் தான் சௌமித்ரா.
அவரது தோழியின் பெண்! அமைதியானவள், கணினி பொறியியல் படித்துவிட்டுச் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறாள். மகனும் இப்போது சென்னையில் இருப்பதால் இருவருக்கும் பணியிடப் பிரச்சனைகூட வராது.
இதெல்லாம் தனலெட்சுமி மைந்தனைச் சம்மதிக்க வைக்க முயற்சித்தபோது கூறிய தகவல்கள்.
மறுப்பு சொல்ல காரணங்கள் பெரிதாக இல்லை என்பதால் ராகவர்தனும் சம்மதித்துவிட்டான். அதற்கு மட்டும் தானா?
அவனது உள்ளம் மட்டுமே அறிந்த உண்மை அது. அழுத்தக்காரன் நம்மிடம் கூட கூறமாட்டான்.
அன்னையிடம் பேசிவிட்டு காவல் உதவி ஆணையர் அலுவலகத்துக்குக் கிளம்பியவனுக்குத் தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் காத்திருக்க பெண் பார்க்கும் வைபவத்தை மறந்தே போனான்.
மமிதா கொலை வழக்கு முடிந்ததுமே அடுத்து இன்னொரு தீவிரமான வழக்கு வந்து சேர்ந்திருந்தது.
தொழில்நுட்பம் தெரிந்த பெண்ணொருவர் கணவரை டார்க்நெட்டில் தொழில்முறை கொலைகாரன் ஒருவனை வைத்து கொலை செய்ததாக அப்பெண்ணுடைய கணவரின் இளைய சகோதரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு அது!
எந்த வழக்கில் ‘டார்க்நெட்’ குறுக்கிடுகிறதோ அந்த வழக்கில் அவ்வளவு சீக்கிரம் சாட்சிகளோ ஆதாரங்களோ சிக்காது.
மரணமடைந்தவரின் இளைய சகோதரன் தனது அண்ணியின் கணினியை எதேச்சையாகத் திறந்து பார்த்தபோது ‘டார்க்நெட்’டுக்குள் செல்ல பயன்படுத்தப்படும் தேடுபொறி இருக்கவும் ஏதோ பொறி தட்டி அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்திருக்கிறான்.
அந்தப் பெண்ணும் சந்தேகத்துக்கு இடமான வகையில் கணவனது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தில் பெருந்தொகை ஒன்றை ‘டார்க்நெட்’ மூலம் யாருக்கோ க்ரிப்டோ கரன்சியாக அனுப்பி வைக்க அவனது சந்தேகம் வலுத்தது. காவல்துறையிடமும் புகாரளித்துவிட்டான்.
சம்பந்தப்பட்டப் பெண்ணோ காவல்துறை கைது செய்யும் முன்னரே தலைமறைவாகியிருந்தார். அவரது உறவினர்கள் திருநெல்வேலி, கன்யாகுமரி பகுதியில் வசிப்பதால் அந்தச் சரகத்தைச் சேர்ந்த காவல் ஆணையரிடம் வழக்கு குறித்து சிலரை விசாரிப்பதற்கான உதவியைக் கேட்கவும், விசாரிக்கவும் ராகவர்தன் எப்படியும் திருநெல்வேலி செல்ல வேண்டும்.
அதோடு சேர்த்து பெண் பார்க்கும் படலத்தையும் முடித்துக்கொண்டால் தனியே அதற்கென அலையவேண்டாமே!
ராகவர்தன் இப்படியெல்லாம் கணக்கு போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அனுக்ரஹாவும் பிரபாவதியும் முகுந்தனிடம் அனுமதி பெற்று அனுக்ரஹாவின் ஊரான பாளையங்கோட்டை செல்ல ஆயத்தமானார்கள்.
“நீங்க சரியான கஞ்சூஸ் அண்ணா… ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணுவிங்கனு பாத்தா ட்ரெயின்ல ஏத்தி விடுறிங்களே… இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது” என்று போலியாக அழுதபடி நெல்லை எக்ஸ்ப்ரசில் ஏறிய பிரபாவதியையும் அனுக்ரஹாவையும் புன்னகையோடு வழியனுப்பி வைத்தான் முகுந்தன்.
பெண்கள் ஒன்றும் தனியே செல்லவில்லை. ஷாமும் வித்யூத்தும் அவர்களுடன் செல்கிறார்கள். காரணம் அனுக்ரஹாவின் யோசனை!
சும்மா விடுமுறை எடுத்து ஊருக்குச் செல்வதால் யாருக்கு என்ன பிரயோஜனம்?
அதனால் தான் சோசியல் மீடியா குழுவின் இரண்டு உறுப்பினர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டாள்.
“நம்ம ஆபிஸ்ல இருந்து செய்யுற யூடியூப் வீடியோஸை எங்க ஊர்ல போய் ஷூட் பண்ணலாம்… எங்க ஊர்ச்சமையல்ல என்ன ஸ்பெஷல், யாருல்லாம் அங்க ஃபேமஸ் குக்னு தேடிப் பார்த்து அவங்களை வச்சு வீடியோ பண்ணிடலாம்… இதனால நம்ம சாமானிய மக்களுக்கு இன்னும் நெருக்கமா வருவோம்… ஹூ னோஸ்? அங்க இருக்குற ரெசிபீஸ் கூட நமக்கு அடுத்தக்கட்ட புராடக்டுக்கான ஐடியாக்களை குடுக்கலாம்”
முகுந்தனுக்கு அனுக்ரஹாவின் இந்த யோசனை பிடித்திருந்தது.
“உன் மூளையே மூளை அனு… எனிஹவ், நாங்களும் உன் அம்மாவ பாக்கணும்… அடிக்கடி ஆன்ட்டி வீட்டுக்கு இன்வைட் பண்ணிட்டே இருக்காங்க… சோ நாங்க கரெக்டா வளைகாப்புக்கு வந்துடுறோம்” என்று சொல்லிவிட்டான்.
அலுவலகத்திலும் வேலை தடைபடாது. கூடவே சமூக வலைதளங்களிலும் அவர்களின் செயல்பாடு தொடரும்.
தங்களது கம்ப்பார்ட்மெண்டைத் தேடி அமர்ந்தவர்கள் அரட்டையடித்தபடியே இரயில் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
பேச்சினிடையே அனுக்ரஹாவின் மொபைல் சிணுங்கியது.
அழைத்தவன் சின்னா. இவனுக்கு என்னவாயிற்று?
புருவம் சுருக்கிக்கொண்டவள் அழைப்பை ஏற்றாள்.
“என்னடா ஆச்சு?”
“சௌமிக்கு மாப்பிள்ளை பாத்துட்டாங்க அனு” என்று மூக்கால் முகாரி பாடினான் அவன்.
“பொண்ணுனு இருந்தா மாப்பிள்ளை பாக்க தான் செய்வாங்க… நீயும் சௌமியும் சீக்கிரம் உங்க லவ்வை வீட்டுல சொல்லுங்க” என்றாள் அனுக்ரஹா.
“சொன்னாலும் வேலைக்கு ஆகாதுடி… அந்த ஆன்ட்டிக்குச் சாப்ட்வேர் லைன்ல உள்ள மாப்பிள்ளை வேண்டாமாம்… உனக்கு இன்னொரு விசயம் தெரியுமா?”
அழாதக் குறையாக அவன் சொன்ன செய்தியில் அனுக்ரஹாவின் முகம் பலவித மாறுதல்களுக்குப் போய் இயல்பானது.
நிதானமாகக் காட்டிக்கொண்ட குரலில் “அதுக்கு நான் ஒன்னுமே செய்யமுடியாது சின்னா… பெட்டர் நீ நேர்ல போய் பேசு… இல்லனா எங்கப்பா கிட்ட சொல்லு… அவர் உனக்காக பேசுவார்… நான் இப்ப வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்… முடிஞ்சா கவிதா ஆன்ட்டி கிட்ட பேச்சு குடுக்குறேன்… வேற எதுவும் என்னால செய்ய முடியாது… சாரி” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் பெருமூச்சை எடுத்து விட்டாள்.
இரயிலின் வேகத்தில் வெளியே தெரிந்த காட்சிகள் வெளிச்சப்புள்ளிகளாய் நகர்ந்துகொண்டிருந்தன.
“சிப்ஸ் வேணுமா அனு?”
ஷாமிடம் வேண்டாமென்றவள் ஜன்னலின் ஜில்லிட்ட இரும்பு கம்பியில் முகத்தைப் பதித்துக்கொண்டாள்.
மனதில் என்னவோ சலனம்!
இந்தச் சலனத்தை அடியோடு வெறுப்பவள் அவள்! அதே நேரம் இரசிக்கவும் செய்வாள்! விசித்திரமாக இருக்கிறதல்லவா! மனிதர்களே விசித்திரப்பிறவிகள் தானே! எதை வெறுக்கிறோமோ அதை ஒரு காலத்தில் விரும்பவும் செய்திருப்போம். வெறுப்பின் அலைகளுடைய விளிம்பில் பழைய விருப்பம் ஜிகினா பூச்சுகளாக ஒட்டிக்கொண்டிருப்பதை நம்மால் தவிர்க்கவும் தடுக்கவும் முடிவதில்லை.
அலைபாய்ந்த மனதை விட காதுகளில் ஏர்பாட்சின் தயவில் கசிந்த இசை கொடுத்த சலனத்தின் தீவிரம் சற்று அதிகம்.
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றால் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை… பேசும் பூ மேடை மேலே
கண்களை மூடிக் கொண்டால் திரைப்படமாய் ஆயிரம் காட்சிகள் வரிசை கட்டி ஓட அதற்கு பின்னணி இசையை எந்தக் காப்புரிமையும் கேட்காமல் இலவசமாக இளையராஜா அவளது காதுகளில் ஈந்து கொண்டிருந்தார்.
“இளையராஜா சாங்ஸ்ல தொலையுற பைத்தியக்காரத்தனம், வெஸ்பா ஸ்கூட்டி கனவு, அடிச்சு ஊத்துற மழைல நடக்குற லூசுத்தனமான ஆசை, உலகம் டெக்னாலஜில எங்கயோ போறப்ப சமையலே சகலம்ங்கிற உளறல் – மொத்தத்துல நீ வினோதமான விண்டேஜ் ஃபீல் குடுக்குற அரிய வகை ஜந்து”
சொன்னவனின் குரலில் மட்டம் தட்டும் தொனி இருந்தாலும் அனுக்ரஹாவுக்கு அந்த வார்த்தைகள் தங்கமெடல் போட்ட மகிழ்ச்சியைக் கொடுக்கும் இப்போதும். காரணம் அவள் அப்படி தான்!
உலகமே அனிருத்தின் இசையில் துள்ளாட்டம் போட்ட சமயத்தில் அவளுக்கு இளையராஜா இசையின் இதமே போதுமானதாக இருந்தது.
கார் ஓட்டுவது, அலுவலகத்தில் கோலோச்சுவது இதெல்லாம் பெண் சுதந்திரத்தின் அங்கமென சமூகம் ஒரு கட்டமைப்பை உருவாக்கியபோது ‘எனக்கு வெஸ்பாவும், நான் படிக்கிற சமையல் கலையுமே போதும்’ என்றவள் அவர்களின் கண்களுக்கு அரியவகை ஜீவராசியாகத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.
தன்னை நோக்கி வந்த விமர்சனங்களைப் புறந்தள்ள அவள் கற்றுக்கொண்டாள். ஆனால் விமர்சித்தவர்களை, இல்லையில்லை, விமர்சித்தவனைப் புறந்தள்ள இன்னும் அவளுக்குப் பயிற்சி போதவில்லை என்றே சொல்லலாம்.
சில திடீர் நிகழ்வுகள், ஏதோ ஒரு பாடல், யாரோ ஒருவருடனான தொலைபேசி உரையாடல் அவள் எடுக்கும் புறந்தள்ளும் பயிற்சியை நீர்த்துப் போக வைத்துவிடுகிறது.
தனக்கு என்ன வேண்டுமெனத் தெரிவு செய்யத் தெரிந்த தெளிவானப் பெண் அனுக்ரஹா! தனக்கு என்ன வேண்டாமென்பதை ஒதுக்கும் அறிவும் அவளுக்கு இருந்தது.
‘வேண்டாம்’ என்று வாய் விட்டுச் சொல்லும் சுதந்திரத்துக்காக அவள் போராடியது அவளுடைய தந்தையுடன் மட்டுமில்லை, இன்னும் ஒருவனுடனும் தான்.
“என்னை நான் பாத்துக்குறேன்! என்னோட படிப்பு, என்னோட பாதுகாப்பு இதெல்லாம் ப்யூர்லி பெர்ஷனல்… அதுல தலையிடுறது எனக்கு அசௌகரியத்தைக் குடுக்குதுனு ஏன் உங்க யாருக்கும் புரியல?”
அவளது வாதங்கள் சிறுபிள்ளையின் பிடிவாதங்களாகத் தெரிந்தன சிலருக்கு. அவளுக்கு முதிர்ச்சியில்லை, வயதுக்கோளாறால் தடுமாறிப் போகிறாள் என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அடுக்கப்பட்டதை அனுக்ரஹாவால் என்றுமே மறக்க முடியாது.
அமைதியான, தேவைக்கு மட்டுமே கோபம் கொள்ளும் குணம் கொண்ட, தன்னைச் சுற்றியிருப்பவர்களுடன் நல்லுறவு வேண்டுமென விரும்பிய பதின்வயது அனுக்ரஹா சிலரின் கண்களுக்கு மட்டும் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளையாகத் தெரிந்தது யாருடைய குற்றம்?
அவள் தவறே செய்யாதவள் என்று சொல்லிவிட முடியாது. சராசரி மனிதர்கள் செய்யும் தவறுகளை அவளும் செய்திருக்கிறாள். அதிலிருந்து அனுபவப்பாடமும் கற்றிருக்கிறாள். சில நேரங்களில் சறுக்கியிருக்கிறாள். சில நேரங்களில் பயந்து பின்வாங்கியிருக்கிறாள். அவள் ஒன்றும் ‘மிஸ் பெர்ஃபெக்ட்’ இல்லை.
ஆனால் அவள் அப்படி இருக்கவேண்டுமென விரும்பியவர்களுக்கு அது ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ!
முடிவு என்னவோ கசப்பு தான். ஆனால் அதற்காக அனுக்ரஹா துளியும் வருந்தவில்லை.
“இட்ஸ் ஆல் இன் த கேம்” என்று அந்தக் கசப்பைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்டாள்.
ஆனாலும் நடந்து முடிந்த நிகழ்வுகளுடன் ஏதோ ஒரு மயிரிழை பிணைப்பு இன்னும் மிச்சமிருக்கிறது போல! அவ்வபோது அது நினைவுக்கு வந்துவிடுகிறது! அனுக்ரஹாவும் அதை அசைபோட ஆரம்பித்துவிடுவாள் இப்போது போல.
கண் மூடிச் சாய்ந்திருந்தவளின் செவிக்குள் இன்னும் ஜானகி அம்மாவின் ரீங்காரம் கேட்டுக்கொண்டிருந்தது.மாலை நிலா பூத்ததம்மா
மௌனமொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனை
வந்து பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாடும் கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ….
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


