“மனுச வாழ்க்கையோட நோக்கத்தைப் பலர் சரியா புரிஞ்சிக்கிறதில்ல… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை, கனவு, திறமை இருக்கலாம்… என் ஆசைய நிறைவேத்திக்கணும்னா அதுக்காகக் கடுமையா உழைக்க நான் தயங்கக்கூடாது… அந்த நேரத்துல என்னை நோக்கி எய்யப்படுற ஒவ்வொரு அம்பையும் நான் எதிர்கொள்ளத் தயாரா இருக்கணும்… எனக்குனு ஒரு கனவு இருக்குனு வச்சுக்கோங்க, அதை நிஜமாக்க நான் மேற்கொள்ளுற பயணத்துல ஒரு எல்லைக்கு மேல அடுத்தவங்களோட தலையீடு இல்லாம சுயமா என்னோட பயணத்தைத் தொடருற தைரியம் எனக்கு இருக்கணும்… அதே நேரத்துல எனக்கு இருக்குற திறமைய நான் மெருகேத்தி வெளிப்படுத்தவும் நான் தயங்கக்கூடாது… இது எல்லாத்தையும் நான் எனக்காகச் செய்யணுமே தவிர யாரோ ஒருத்தருக்கு என்னை நிரூபிக்கணும்ங்கிறதுக்காகச் செய்யக்கூடாது… அப்பிடி செஞ்சா என் வாழ்க்கை முழுக்க அடுத்தவங்களுக்கு என்னை நிரூபிக்கிறதுலயே ஓடிடும்… எனக்காக நான் என்ன செஞ்சேன்ங்கிற கேள்விக்கு விடை தெரியாமலே நான் வாழ்க்கையோட கடைசி பக்கத்துக்கு வந்துடுவேன்… எனக்குள்ள நான் அடிக்கடி சொல்லிக்கிற கோட்ஸ் – Don’t waste your time trying to prove yourself”
-அனுக்ரஹா
“கிருஷ்ணா ஹாஸ்பிட்டல் ஸ்டாப் இறங்குங்க”
நடத்துனரின் குரலோடு விசில் சத்தம் கேட்க அனுக்ரஹாவும் பிரபாவதியும் இருக்கையிலிருந்து எழுந்தார்கள்.
நெல்லையில் இயங்கும் தனியார் பேருந்துகளின் வேகத்தைப் பற்றி முன்னரே அறிந்தவள் என்பதால் பக்கவாட்டுக்கம்பியை இறுக்கமாகப் பற்றிக்கொண்ட அனுக்ரஹா பிரபாவதியையும் அவ்வாறு செய்யச் சொல்ல வேகமான குலுக்கலோடு பேருந்து நின்றது.
இருவரும் ஏனைய பயணிகளோடு சேர்ந்து இறங்கிகொண்டதுமே வானம் தூறல் போட்டது. காற்றில் குளுமையோடு மண் வாசனையும் சேர்ந்து வீசியது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதை உள்ளிழுத்து அனுபவித்தபடி நடந்தார்கள் இருவரும்.
“வாவ்! என்ன ஒரு அரோமா… செமல்ல”
ஸ்ரீ மதுரம் ஹோட்டலைத் தாண்டியபோது பிரபாவதி வாசம் பிடித்துச் சொல்ல அனுக்ரஹாவின் நாசியும் ஹோட்டலில் இருந்து வந்த சொதி, இஞ்சி பச்சடியின் நறுமணத்தை உணர்ந்தது.
வெள்ளிகிழமை என்றால் அந்த ஹோட்டலில் சொதி சாப்பாடு ஸ்பெஷல்!
வட இந்திய ரொட்டிகளுக்கும், பிரியாணிக்கும், புலாவுக்கும் நகரங்களின் உணவகங்கள் தாவிக்கொண்டிருக்க நெல்லையின் ஹோட்டல்கள் மண்ணிற்குரிய சமையலை மறக்காமல் இன்றளவும் சிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. அதில் அனுக்ரஹாவுக்கு ஒரு கர்வம்!
“சொதியோட வாசனை… சென்னைக்குப் போறதுக்குள்ள உனக்கு நான் செஞ்சு தர்றேன்… ஒரு தடவை சாப்பிட்டனா அதுக்கு நீ அடிமை ஆகிடுவ”
தோழிக்கு வாக்கு கொடுத்தபடி இழுத்துச் சென்றாள் அவள்.
அவளும் தோழமைகளும் பாளையங்கோட்டைக்கு வந்து இரண்டு நாட்கள் கழிந்திருந்தன.
அனுக்ரஹாவின் அன்னைக்கு மகளுடைய தோழமைகளைப் பிடித்துப் போனது. கறாரான மகிழ்வண்ணநாதன் கூட அவர்களிடம் இயல்பாகப் பேச அவளுக்கும் வீட்டின் சூழல் மாறியிருக்கிறதென்று தோன்றியது.
அவளுடைய தம்பி அர்ஜூன் தமக்கையிடம் வழக்கம் போல உயரத்தைச் சொல்லிக் காட்டி கலாய்க்க பழைய மாயை திரும்பியது போல உணர்ந்தவளுக்குக் கசப்பாக எதுவும் நடந்தேறாததே பெரும் நிம்மதி.
துவாரகா அவளுடைய தந்தையுடைய நண்பரின் மருமகள். பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் அனுக்ரஹாவின் சீனியர். அதனால் தனது வளைகாப்புக்கு அனுக்ரஹா வரவேண்டுமென விரும்பினாள்.
வளைகாப்புக்கு வராமல் இருக்க அவளுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. வருவதற்கு இருந்த ஒரே ஒரு காரணம் துவாரகா மீது அனுக்ரஹாவுக்கு இருக்கும் மரியாதை.
தன்னைக் கேலியாகப் பார்ப்பாரோ என்று எண்ணிய தந்தை “வா! உன்னோட ஃப்ரெண்ட்சுங்களா? வாங்கப்பா” என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டார்.
அதன் பின்னர் அனுக்ரஹாவுக்கும் எந்த அசௌகரிய உணர்வும் எழவில்லை.
இரு நாட்கள் அன்னையின் அன்பில் அழகாய்க் கழிந்திருந்தன. மூன்றாம் நாளான அன்று துவாரகாவின் வளைகாப்பில் அவளுக்கு அணிவிக்க தங்கக் காப்பு வாங்க பிரபாவதியைத் தன்னோடு அழைத்துச் சென்றிருந்தாள் அனுக்ரஹா.
“எதுக்கு பஸ்ல போகணும்? கார் இங்க வெட்டியா நிக்குது”
யாரிடமோ சொல்வது போல தந்தை முணுமுணுப்பது காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் தோழியுடன் கிளம்பிப் போனவள் தங்கக் காப்புகளை வாங்கிக்கொண்டு பேருந்தில் திரும்பியதும் பாதி வழியில் இறங்கிக்கொண்டாள்.
ஆம்! அவளது வீடு இருக்கும் அண்ணா நகர் பகுதிக்கு இன்னும் தூரம் இருக்கிறது. இருப்பினும் இறங்கிக்கொண்டாள். காரணம் அந்தச் சாலை வழியில் நடப்பதில் அவளுக்கு அலாதி ப்ரியம்.
சாலையின் இரு மருங்கிலும் வீடுகள், பள்ளி, வணிக வளாகமென கட்டிடங்கள் முளைத்திருந்தாலும் பசுமைக்குப் பஞ்சமிருக்காது. அதிலும் ஒரு பங்களா வீடு உண்டு. அங்கே இருக்கும் காம்பவுண்ட் சுவரில் ஒவ்வொரு கிறிஸ்துமசுக்கும் சிறியளவில் குடில் ஒன்றை விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.
அந்தக் குடில் வைக்கும் இடத்திற்கு அருகே ரங்கூன் மல்லி படர்ந்திருக்கும். சிவப்பும் இளஞ்சிவப்பும், வெண்மையுமாய்க் கொத்தாக மலர்ந்திருக்கும் ரங்கூன் மல்லி மலர்கள் பதின்வயது அனுக்ரஹாவின் ரசிக மனதைக் கொள்ளை கொண்டதன் காரணத்தாலேயே அதனருகிலிருக்கும் குடிலும் அவளது காட்சியைக் கவர்ந்தது எனலாம்.
இதோ டிசம்பர் மாதத்தின் வெயிலற்ற மதிய நேரத்தில் அந்தச் சாலையினோரமாக நடந்து செல்வதற்கும் அந்த ரசிகமனமே காரணம்.
நடக்கும் சிரமம் பெண்களுக்குத் தெரியக்கூடாதென வானம் வேறு தூறல் போட, சும்மாவே மழைப்பிரியையான அனுக்ரஹாவிற்கு வந்த சந்தோசத்தைக் கேட்கவா வேண்டும்?
“நான் கூட நீ நடக்கணும்னு சொன்னதும் அட பைத்தியமேனு நினைச்சேன்… பட் இந்தக் க்ளைமேட், இங்க இருக்குற வீடுகளோட வடிவமைப்பு, இந்த மரம் செடி கண்ணுக்குக் குடுக்குற குளிர்ச்சி இதெல்லாம் வேற லெவல்… நீ ரசிக்கிறதுல மட்டுமில்ல, அடுத்தவங்களை ரசிக்க வைக்குறதுலயும் கில்லாடி அனு”
பிரபாவதி நடந்தபடியே சொல்ல அனுக்ரஹா மெல்ல சிரித்தாள்.
“அதுதான் நான் படிச்ச ஸ்கூல்… அங்க தான் துவாக்காவ ஃபர்ஸ்ட் மீட் பண்ணுனேன்”
தான் படித்த பள்ளியைக் காட்டினாள். தான் தனது தோழிகளுடன் மாலைப்பொழுதைக் கழிக்க வரும் சிறிய காபி ஷாப்பைக் காட்டினாள்.
“அது தான் திருநெல்வேலி கமிஷ்னரோட வீடு, இன்னும் கொஞ்ச தூரத்துல கலெக்டரோட வீடு வரும்… அந்த ரோட்ல நேரா போய் திரும்புனா மாஜிஸ்திரேட் வீடு வரும்…. அதுக்கு முன்னாடி மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் வந்துடும்”
ஒவ்வொன்றாகக் காட்டிக்கொண்டே வந்தவளின் முகத்தில் தான் அத்துணை கனிவு!
பிரபாவதி அதைக் கவனித்து முறுவலிக்கவும் அனுக்ரஹா நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“ரொம்ப க்ரிஞ்ச் பண்ணுறேனாடி?”
“சேச்சே! இதெல்லாம் ரசிக்கிற அளவுக்கு உனக்குள்ள இருக்குற ரசிகமனசைப் பாராட்டுறேன்… சிலரால மட்டும் தான் பாக்குற எல்லாத்தையும் கொண்டாடவும் ரசிக்கவும் முடியும்… நீ அப்பிடிப்பட்டவங்கள்ல ஒருத்தி அனு”
மனம் விட்டுச் சொன்ன தோழியின் பாராட்டில் நாணியவள் பேச்சு சுவாரசியத்திலா அல்லது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் டீக்கடையில் முண்டியடித்த கூட்டத்தால் இடிபட்டதாலோ தடுமாறி சாலையோரத்தை விட்டு வாகனங்கள் செல்லும் பகுதிக்கு வந்துவிட அவளை உரசுவது போல வந்து சடன் ப்ரேக்கிட்டு நின்றது ராயல் என்ஃபீல்ட் பைக் ஒன்று.
கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்தேறியதில் பதறிப்போய் நின்ற அனுக்ரஹாவுக்கு என்ன செய்வதென்றே புரியாத கணம் அது.
“ரோடைக் கவனிக்காம அரட்டையடிச்சிட்டே வந்தா இப்பிடி தான் ஆகும்”
குற்றம் சாட்டும் தொனியில் சொன்ன குரலை உணர்ந்து வெடுக்கெனத் தலையுயர்த்திப் பார்த்தவளைத் தனது கண்களால் எரித்தபடி நின்றவன் ராகவர்தன்.
பிரபாவதிக்கு அவனை அங்கே கண்டதும் நாக்கு உலர்ந்து போனது. விசாரணை என்ற பெயரில் ‘பார்பேக்யூ சிக்கனைப்’ போல தங்களை ‘ஸ்க்யூவரில்’ குத்தி வாட்டாதக் குறையாக விட்டவனைக் கண்டால் சிரித்து குசலம் விசாரிக்கவா தோன்றும்?
“சாரி சார்… அவங்க இடிச்சதால…” என்று பிரபாவதி சொல்லும்போதே
“நடந்துதான் வருவேன்னு பிடிவாதமா வந்தவங்களுக்கு இந்தக் கூட்ட நெரிச்சல் இங்க சகஜம்னு கூட தெரிஞ்சிருக்கணுமே?” என்று மீண்டும் குற்றம் சாட்டினான் ராகவர்தன்.
சுள்ளென்று எதுவும் சொல்லிவிடலாமா என்று துடித்த நாவைக் கட்டுப்படுத்தி “கவனிக்காம உங்க பைக்ல விழப்போனது தப்பு தான்… மன்னிச்சிடுங்க” என்று பணிவு போல சொல்லிவிட்டுப் பிரபாவதியின் கையைப் பற்றிக்கொண்டு விறுவிறுவென அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள் அனுக்ரஹா.
ராகவர்தனும் அவன் போக்கில் பைக்கைக் கிளப்பினான். அவர்களை அவன் கடந்துபோகும் வரை பிரபாவதிக்கு உயிர் கையில் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
போய்விட்டானா என்று ஒன்றுக்கு மூன்று முறை பார்த்துவிட்டு “என்னடி இது ராமேஷ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாதுங்கிற கதையா இருக்கு” என்று சொல்ல
“சனி பகவான் கூட ஏழு வருசம் சோதிச்சிட்டு, போகுறப்ப நல்லது பண்ணுவார்… இந்த ராக… இந்த ஏ.சி.பி அப்பிடிப்பட்ட ஆள் இல்ல” என்று கறுவினாள் அனுக்ரஹா.
மனம் சொத்தெனப் போனது அவளுக்கு. இவ்வளவு நேரம் சின்ன சின்ன விசயங்களைக் கூட தேடிப் பிடித்த ரசித்த மனதை சில நிமிடங்களில் சோர்வடையச் செய்துவிட்டானே! கிராதகன்!
திட்டியபடியே நடந்தவளுக்கு ஏனோ கால்களில் தெம்பில்லாத உணர்வு. சரியாக ரவுண்டனா பகுதிக்கு வந்ததும் இரு பெண்களும் சாலையைக் கடக்காமல் நின்று விட்டார்கள்.
காரணம் காருடன் வந்த அர்ஜூன்.
அவனுக்கு ஏதோ உள்ளூர் விடுமுறை! கல்லூரிக்குப் போகாமல் வீட்டிலிருந்தவன் திடுமெனக் காரில் வந்ததும் இரு பெண்களுக்கும் எதுவும் புரியவில்லை.
காரை அவர்கள் அருகில் நிறுத்தியவன் பின்பக்கத்து கதவைத் திறந்தும் விட்டான்.
“நீ என்ன இந்தப் பக்கம் வந்திருக்க?”
விசாரிக்கும் தொனியில் கேட்ட தமக்கையின் முகத்தை ‘ரியர்வியூ மிரரில்’ பார்த்த அர்ஜூனோ “பாளை மேட்டுத்திடலில் வேடிக்கை பார்த்தபடி வந்த சுண்டெலியும், குள்ளக்கத்திரிக்காயும் சாலைவிதிகளை மதிக்காமல் போனதால் கடும் விபத்து’னு நியூஸ்ல சொன்னாங்க… அதான் ஓடோடி வந்தேன்… உங்க உயரத்துக்கு இந்தக் காரை ஆம்புலன்சா நினைச்சுக்கோங்க” என்று கிண்டல் செய்ய அவன் தலையில் நறுக்கெனக் குட்டினாள் அனுக்ரஹா.
“கொசு கடிச்சா நம்ம திருப்பி கடிக்கவா செய்யுறோம்? அது போல நினைச்சுக்க வேண்டியதுதான்”
தனக்குத் தானே பேசியபடி காரைக் கிளப்பினான் அர்ஜூன்.
நடந்த இரு சம்பவங்களில் பெரிதும் குழம்பிப் போனவள் பிரபாவதி.
சொல்லி வைத்தாற்போல ராகவர்தன் அங்கே வந்து நின்றது, அவன் சென்ற சில நிமிட இடைவெளியில் அர்ஜூன் காருடன் வந்தது இதெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சம்பவங்களாக இருக்குமோ?
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறோமோ என்று அமைதியாகியும் போனாள் அவள்.
மறுநாள் துவாரகாவின் வளைகாப்புக்குக் குடும்பம் தோழமைகளுடன் கிளம்பினாள் அனுக்ரஹா.
காரில் பயணித்து அனைவரும் இலஞ்சியின் வாஞ்சி நகரை அடைந்ததும் ஏதோ ஒரு பரபரப்பு அவளுக்குள்! என்னவெனக் கண்டறியத் தெரியவில்லை.
‘மகாலெட்சுமி பவனம்’
பவளமல்லியின் நறுமணம் நாசியில் கும்மென்று ஏறியது கார் போர்டிகோவில் நுழையும் போது.
“தோட்டத்துல எக்ஸ்ட்ரா நிறைய செடிகள் இருக்குதே!” அகல்யா கண்களில் ஆர்வத்தோடு சுற்றி இருந்த மலர்ச்செடிகளை நோக்கினார்.
“எது வந்தாலும் அந்தப் பவளமல்லிய ஜெயிக்க முடியாது” இது அனுக்ரஹா.
“ஆரம்பிச்சிட்டிங்களா அம்மாவும் மகளும்? மரமும் செடியும் பறந்து போயிடாது… இங்க தான் இருக்கும்… வாங்க”
மகிழ்வண்ணநாதனின் கறார்க்குரல் கேட்கவும் அனைவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
பூந்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீடு தனித்த அழகுடன் தெரிந்தது.
உள்ளே நுழைந்ததும் “டேய் மகிழ்! சொன்ன டைமுக்கு வந்துட்டியே” என்ற உற்சாகக்குரல் கேட்டது.
துவாரகாவின் மாமனார் ஓடோடி வந்து வரவேற்றார்.
அடுத்து ஒரு பெண்மணியின் தலை தெரிந்தது. மகாலெட்சுமி பவனத்தின் உரிமையாளினியே அவர் தான்.
“வாங்கண்ணா! வா அகல்! வாங்க மகாராணி… டேய் அர்ஜூன் கண்ணா”
‘மகாராணி’ என்ற விளிப்பு தனக்கானது என்றதும் அனுக்ரஹாவின் முகத்தில் சிறிது காட்டம் ஏறியது. பிரபாவதி அவளது காதில் “என்னடி ஆன்ட்டி உன்னை இவ்ளோ நக்கலா கூப்பிடுது?” என்று கேட்க
“ப்ச்! அப்பா ஃப்ரெண்டோட ஒய்ப்… சின்ன வயசுல இருந்தே சொந்தக்காரங்க போல பழகுனவங்க… என் மேல ஏதோ ஒரு வருத்தம்… அடிக்கடி மகாராணினு கிண்டலா கூப்பிட்டு அந்த வருத்தத்தை டேலி பண்ணிப்பாங்க” என்று கிசுகிசுத்தாள் அனுக்ரஹா.
“அப்பிடி என்ன பஞ்சாயத்து?” ஷாம் ஆர்வமாகக் கேட்டான்.
“இப்பவே சொல்லிட்டா ஆர்வம் குறைஞ்சிடும்… ஃபங்சன் முடியட்டும்… அப்புறமா சொல்லுறேன்”
பெற்றோர் அவர்களது தோழமைகளோடு அங்கிருந்து நகர அனுக்ரஹாவும் தனது நட்புகளுடன் பேசியபடியே ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்.
வளைகாப்பு பெண்ணும் அவளுடைய கணவனும் அமர மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணைகள் இருந்தன. ஆங்காங்கே சொந்தக்காரர்களின் தலைகள் தெரிந்தன.
“ஹேய் அனு”
கண்ணோரங்கள் புன்னகையில் சுருங்க அன்போடு அவர்களை நோக்கி வந்தான் வளைகாப்பு பெண்ணான துவாரகாவின் கணவன்.
“எப்பிடி இருக்கிங்கண்ணா?” என்றவளைத் தோளோடு அணைத்தவன் “தேங்க்ஸ் ஃபார் கமிங்டா” என்றான் மெய்யான நன்றியோடு.
“நான் வராம எப்பிடி?” என்ற அனுக்ரஹா “இவங்க எல்லாரும் என்னோட ஃப்ரெண்ட்ஸ்ணா” என்று தனது நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
அனைவரிடமும் மரியாதையும் அன்புமாக அறிமுகமாகி கைகுலுக்கிக்கொண்டான் அவன்.
“துவா உனக்காக வெயிட்டிங்” என்றான் அனுக்ரஹாவிடம்.
“ஹே கய்ஸ்… நீங்க என் கூட வாங்க… காபி வித் கொஞ்சம் கடலை போடலாம்” என்று ஷாமையும் வித்யூத்தையும் தன்னோடு அழைத்துக்கொண்டான்.
பிரபாவதி அவனுடைய கலகலப்பானச் சுபாவத்தை மெச்சவும் “அண்ணா எப்பவும் அப்பிடி தான்… இன்ஃபேக்ட் இந்தக் குணம் பிடிச்சுப் போய் தான் துவாக்கா அண்ணாவ காதலிச்சாங்க… மேட் ஃபார் ஈச் அதர் அவங்க ரெண்டு பேரும்” என்று பெருமிதமாகச் சொன்னவள் துவராகாவின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள்,
பீச் வண்ண மென்பட்டில் ஏழு மாத வயிற்றுடன் முகம் பூரிக்க அமர்ந்திருந்த துவாரகாவுக்கு ஒப்பனை அப்போது தான் முடிந்திருந்தது.
பிரபாவதியுடன் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்த அனுக்ரஹாவைக் கண்டுவிட்டவள் “அனு” என உற்சாகமான அழைப்புடன் வேகமாக எழுந்திருக்க அனுக்ரஹா ஓடோடிப் போய் அவளை அணைத்துக்கொண்டாள்.
“எப்பிடி இருக்கிங்க அக்கா?”
“இதுக்குலாம் குறைச்சல் இல்லடி… ஐந்தாம் மாசத்துல இருந்தே உன்னைப் பாக்கணும்னு வாட்சப்ல எத்தனை தடவை சொல்லிருப்பேன்? அய்யோ நான் அவ்ளோ பிசினு சீன் போட்டவ, இப்ப மட்டும் எப்பிடி ஃப்ரீ ஆனியாம்?”
உரிமையானக் கோபத்தோடு கேட்டவளிடம் சரணடைந்து போனது அனுக்ரஹாவின் அன்பான இதயம்.
“யூ லுக்ஸ் கார்ஜியஸ்”
நெட்டி முறித்து அவளுக்குத் திருஷ்டி கழித்தவளிடம் “அடுத்த வருசம் இந்த இடத்துல நீ இருப்படி தங்கம்” என்றார் துவாரகாவின் அன்னை.
“உங்களுக்கு ரொம்ப தான் ஆசை” என அவரிடம் போலியாய்க் கோபப்பட்டபடி பிரபாவதியை அறிமுகப்படுத்தினாள்.
“மேடமுக்கு ஆள் ரெடியா இருக்கான்… உங்க மணைக்குப் பக்கத்துல இன்னும் ரெண்டு மணை போட்டு ‘கட்றா தாலிய’னு சொன்னா இப்பவே கட்டிருவான்… இந்த வாழ்த்தை இவளுக்குச் சொல்லுங்க” என்று கூடுதலாகக் கோர்த்துவிட்டாள் அனுக்ரஹா.
“அப்பிடியா?” என்று கண்களை விரித்த துவாரகாவின் பேச்சில் பிரபாவதி முகம் சிவக்க
“பார்றா! வரலாற்றில் முதல் முறையா பிரபா வெக்கப்படுறா… அப்பிடியே வெக்கத்தோட போஸ் குடு… போட்டோ எடுத்து ஷாமுக்கு அனுப்புறேன்”
அனுக்ரஹா அவளைக் கலாய்க்க அங்கே இதமானச் சூழல் உருவானது.
அவளைப் பார்த்த துவாரகாவின் பார்வையில் கனிவும் ஆதுரமும் இருப்பதைப் பிரபாவதி கவனித்தாள்.
“எனக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்க?” – துவாரகா.
“உங்களுக்காகச் சென்னைல இருந்து அடிச்சி பிடிச்சு ஓடிவந்திருக்கேனே, நானே உங்களுக்குப் பெரிய கிப்ட் தான் அக்கா” – அனுக்ரஹா சளைக்காமல் வாயாடினாள் அவளிடம்.
சிலரிடம் மட்டும் தானே நமது இயல்பை மறந்து சகஜமாகப் பழகமுடியும். அனுக்ரஹா அப்படி பழகும் சிலரில் துவாரகா முதலிடம்.
“கூடுனா போல ரெண்டு நாள் இருப்பியா? இல்ல பிசினு கதை சொல்லிட்டு ஓடிருவியா?” என்ற துவாரகாவின் விழிகள் திடுமென வாயிலைக் கவனித்ததும் பளிச்சிட்டன.
நிலை உயரத்துக்கு யாரோ வந்திருக்க வேண்டும். நிழலாடிய விதத்தில் அறிந்துகொண்ட அனுக்ரஹாவின் இதயத்தில் பரபரப்பு அலைகள் எழுந்தது.
“வாங்க கொழுந்தனாரே! இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?”
துவாரகா இவ்வாறு சொன்னதும் அனுக்ரஹா உதட்டைக் கடித்தபடி கண்களை மூடிக்கொண்டாள். அவளருகே நின்ற பிரபாவதி அவளது கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
“ஒரு கேஸ் விசயமா திருநெல்வேலிக்கும் கன்யாகுமரிக்கும் அலைஞ்சிட்டிருக்கேன் மதினி” என்று சொன்ன குரலுக்குரியவன் அறைக்குள் நுழைந்து தன்னைக் கடந்து துவாரகாவுடன் நிற்கையில் கண்களைத் திறந்தாள் அனுக்ரஹா.
வந்து நிற்பவன் ராகவர்தனே தான்!
துவாரகாவின் கணவன் விஷ்ணுவர்தனின் இளைய சகோதரன். தியாகராஜன் – தனலெட்சுமி தம்பதியின் இளைய புதல்வன்.
கூடுதல் தகவல் – அனுக்ரஹாவின் தந்தை மகிழ்வண்ணநாதனின் ஆழமான நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவன்.
ஏனோ அவனது பிரசன்னம் தனக்குள் அமைதியின்மையைத் தோற்றுவிப்பதாக உணர்ந்த அனுக்ரஹா “நான் இன்னும் காபி குடிக்கலக்கா… தலை கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்கு” என்று நழுவப் பார்த்தாள்.
துவாரகாவோ “காபி தானே? விச்சுவ கொண்டு வரச் சொல்லுறேன்… உங்க ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து பாக்குறது குதிரை கொம்பு… நான் விடப்போறதில்ல” என்க அங்கே நின்று கொண்டிருந்த பிரபாவதிக்குத் தான் பயத்தில் மாரடைப்பு வருவது போன்ற உணர்வு.
ராகவர்தனின் பார்வை துவாரகாவை அன்புடனும், அனுக்ரஹாவை அலட்சியத்துடனும் தொடருகையில் தோழியை மனதுக்குள் வறுத்தெடுத்தாள் அவள்.
“ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரிஞ்சும் தெரியாத மாதிரியே ட்ராமா போட்டிருக்குதுங்க பக்கிஸ்”
துவாரகா கணவனிடம் காபி கொண்டு வருமாறு சொல்லிவிட்டு இருவரிடமும் திரும்பினாள்.
“அப்புறம் ரெண்டு பேருக்கும் கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சாச்சு… இனியும் ஒருத்தருக்கொருத்தர் முகம் குடுத்துப் பேசாம முரண்டு பிடிப்பிங்களா என்ன?”
துவாரகா கேட்ட கேள்வியின் அனுக்ரஹாவின் இதயம் வெடிக்காதக் குறை! அவள் சட்டென ராகவர்தனைப் பார்த்தாள்.
அவனோ அலட்டிக்கொள்ளாமல் “காபி வந்தாச்சு” என்றான் விஷ்ணுவர்தனைக் காட்டி.
என்ன நடக்கிறது இங்கே என்று அவள் குழம்ப அவளது குழப்பத்தைக் கண்டுகொள்ளாமல் தமையன் கொடுத்த காபியைப் பருகினான் ராகவர்தன். அவனது விழிகள் பசை போட்டாற்போல ஒட்டியிருந்தது என்னவோ அனுக்ரஹாவின் மீதே! ஏனோ அவளை அலட்சியம் செய்வது போல காட்டிக்கொண்டாலும் அந்த அலட்சியத்தில் துளி கூட நேர்மை இல்லை என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


