“என்னோட உலகம் ரொம்ப ரொம்ப சின்னது… அதனாலயே என்னால பெர்ஃபெக்டா அதுல இருக்குற நபர்கள் கூட நல்லவிதமா உறவை மெயிண்டெயின் பண்ண முடியுது… தேவையில்லாத எதையும் இழுத்துப் போட்டு என் உலகத்தை நான் காம்ப்ளிகேட் பண்ணிக்கிறதில்லை… என் சக்திக்கு மீறுன எதுலயும் என் கவனத்தைத் திருப்புறதுமில்ல… எனக்கான கம்ஃபர்டபிள் ஜோன்ல நான் மகாராணியா வாழ்ந்துட்டிருக்கேன்… இதை விட லைஃப்ல பெரிய ஆசிர்வாதம் வேற என்னவா இருக்க முடியும்?”
-அனுக்ரஹா
“அப்ப ஏ.சி.பி கொஞ்சம் கூட மனசு இரங்கலயா? சே! கல்நெஞ்சக்காரனா இருப்பான் போலயே”
பிரபாவதி தேங்காயை சிறு சிறு துண்டங்கள் போட்டபடி கேட்டாள்.
அவளருகே ஒரு நாற்காலியில் இரு கால்களையும் கட்டிக்கொண்டு முகத்தை அதில் தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்த அனுக்ரஹா உதட்டைப் பிதுக்கி தனது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் காட்டினாள்.
“பத்து நாளா நம்ம பத்து பேர் மூளையையும் ஃப்ரீயா சாப்பிடுறான்… முடியல… வார்த்தைக்கு வார்த்தை ட்ரக் யூஸ் பண்ணிருக்கிங்கனு சொல்லுறான்… என்னால எதுவும் பேச முடியல… தாமஸ் சாருக்காக நம்ம பார்ட்டிக்குப் போனது வரைக்கும் சரி… அங்க எதையும் சாப்பிட்டிருக்கக்கூடாது பிரபா… இப்ப பாரு, கண்டவன்லாம் நம்மளைக் கொலைகாரினு சொல்லாதக் குறை”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஹான்! அது எப்பிடி அவன் நம்மளை அப்பிடி நினைக்கலாம்?” ஆதங்கத்துடன் கேட்டவள் பின்னர் அமைதியாகிவிட்டாள்.
“ப்ச்! சரி தான்… நம்ம போனோமா விஷ் பண்ணுனோமானு இல்லாம கூல் ட்ரிங்ஸ்னு நினைச்சு ஆல்கஹால் எடுத்தது தப்பு… அதுல எந்த எருமையும் ட்ரக் கலந்து நம்மளை மர்டர் கேஸ்ல மாட்டிவிடும்னு நம்ம என்ன கனவா கண்டோம்? ஏன் திடீர்னு லைஃப் ரொம்ப காம்ப்ளிகேட் ஆன மாதிரி சின்ன சின்ன செயல் கூட இமாலய தப்பா தோணுது அனு?” என்று பரிதாபமாகக் கேட்க வேறு செய்தாள்.
அனுக்ரஹாவுக்கும் அதுதான் புரியவில்லை. தெளிந்த நீரோடையாய் போன வாழ்க்கை திடுமென இப்படி ஒரு எதிர்பாரா காட்டாற்று வெள்ளத்தைச் சந்திக்குமென யாரெனும் ஆரூடம் சொல்லியிருந்தால் கூட அவள் நம்பியிருக்க மாட்டாள்.
“லைஃப் இஸ் அன்ப்ரிடிக்டபிள்… எப்ப என்ன நடக்கணும்னு நீயோ நானோ ஊகிக்கவே முடியாது பிரபா”
பிரபாவதியும் உச்சு கொட்டினாள்.
திடுமென அவளது முகத்தில் பரிதாப உணர்ச்சி!
“மமிதா பாவம்ல… அவளைக் கொல்லுற அளவுக்கு யாருக்கு இவ்ளோ பழிவெறி இருந்திருக்கும்?”
அனுக்ரஹாவுக்கும் அதுதான் புரியவில்லை. தாமஸ் குரியனோடு இரண்டொரு முறை மமிதாவை அவளும் சந்தித்திருக்கிறாள்.
“சேச்சி!” என்று அன்போடு கட்டிக்கொள்ளும் பெண்ணுக்குச் சிறிதளவுக்குக் கூட பணத்திமிர் கிடையாது. சொல்லப்போனால் அப்போது அவள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள்.
அதனால் தானோ என்னவோ அவள் பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாடுகையில் கூட அனுக்ரஹாவுக்கும் ஏனைய ‘மெல்டிங் பாட்’ குழுவுக்கும் அவளைப் பெரிய மனுசியாக எண்ணத் தோன்றவில்லை.
அவள் மது கோப்பையைக் கையில் எடுத்தபோது கூட முகுந்த் எச்சரித்தானே!
“ஆல்கஹால் எப்பிடி இருக்கும்னு எனக்குள்ள ஒரு க்யூரியாசிட்டி இருக்குண்ணா… ப்ளீஸ்! ஒரு சிப்” என்று ஆட்காட்டி விரலின் மேல்நுனியைக் காட்டி அவள் கெஞ்சிய விதம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது அனுக்ரஹாவுக்கு.
எங்கே தவறு நேர்ந்தது? அவளைத் தனியே விட்டுவிட்டு தாங்கள் அனைவரும் விலகிச் செல்லும் அளவுக்கு என்ன தான் நடந்திருக்கும்? ஏன் யாருக்குமே எதுவுமே நினைவில்லை?
பழக்கமற்ற போதைப்பொருளால் குறிப்பிட்ட நேரத்து நினைவு கூடவா மறந்து போகும்?
சிந்தனைகளின் வலையில் அனுக்ரஹா சிக்கிக்கொள்ளவிருந்த தருணத்தில் மொபைல் சிணுங்கி அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டது.
தொடுதிரையில் பார்த்தாள். அழைப்பவர் அன்னை. உடனே அழைப்பை ஏற்றாள்.
“சொல்லும்மா”
“இன்னைக்கு நைட் என்ன டின்னர்?”
“தோசை… பிரபா சட்னி அரைக்க ரெடியாகுறா… நீ சாப்பிட்டியா?”
“இனிமே தான்… எனக்குப் கொஞ்சநாளா மனசு ஏதோ பாரமா இருக்கு அனு… என்னனு தெரியல… உங்கப்பாக்கு வேலையில எந்தப் பிரச்சனையும் இல்ல… ஆடிட் அது இதுனு அந்த மனுசன் சாதாரணமா தான் இருக்கார்… உன் தம்பியும் அவன் படிப்பு உண்டு அவன் உண்டுனு இருக்கான்… எனக்கு உன்னை நினைச்சு தான் கவலையா இருக்கு… நீயும் பத்து நாளா சுரத்தேயில்லாம பேசுற… எதுவும் பிரச்சனையாடி அனு?”
கவலையாய்க் கேட்ட அன்னையிடம் தனது மண்டையைப் பிளக்க வைக்கும் பிரச்சனையைக் கொட்டிவிடலாமா என்று கூட ஒரு நொடி அனுக்ரஹாவுக்குத் தோன்றியது.
அடுத்த நொடியே ‘வேண்டாம்! பின்னர் இதையே சாக்காக வைத்து எனது கனவு நோக்கிய பயணத்துக்கு வேகத்தடை வந்து சேரும்’ என்று அமைதியாகிப் போனாள்.
“ஒரு பிரச்சனையுமில்லம்மா… புது இன்வெஸ்டார்ஸ் வந்திருக்காங்க… அவங்க கூட மீட்டிங், புதுசு புதுசா புராடக்ட் லான்சிங்னு நான் பிசி… என்னால சரியா தூங்க கூட முடியலம்மா… அந்த டயர்ட்ல தான் நான் சோர்வா பேசுறேன்”
“பிரச்சனை எதுவுமில்ல தானே? உனக்கு எதாச்சும் வேணும்னா நம்ம சின்னா மெட்ராஸ்ல தான் இருக்கான்… அவன் கிட்ட உதவி கேளு”
அவ்வளவு தான்! அனுக்ரஹாவின் பொறுமை தொலைந்தது.
“அவன் கிட்ட கேக்குறதுக்கு நான் பிரச்சனையிலயே உழண்டு பைத்தியமாகிடலாம்… போம்மா… என் கிட்ட அவனைப் பத்தியோ உன் புருசனைப் பத்தியோ பேசாத”
மறுமுனையில் அவளது அன்னை அகல்யா வாயடைத்துப்போனார்.
“டி அனு! இன்னுமா உனக்குக் கோவம் குறையல?”
“இது கோவமில்ல… வைராக்கியம்… இங்க என்ன பிரச்சனை வந்தாலும் நான் தனியா இருந்து சமாளிச்சுப்பேன்… சும்மா அவன் கிட்ட உதவி கேளு, இவன் கிட்ட உதவி கேளுனு என்னைப் பலகீனமாக்க பாக்காத… என் பிரச்சனைய நானே ஃபேஸ் பண்ணிக்குற அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி இருக்கு”
“சரிடி… ஒரேயடியா கோவிச்சுக்காத… நீ ரொம்ப ஸ்ட்ராங்கானவ தான்மா… அம்மா ஒத்துக்குறேன்… போதுமா?”
அன்னை சரணடைந்ததும் யாரிடமோ உள்ள கோபத்தை அவரிடம் காட்டிவிட்டோமோ என்று குற்றவுணர்ச்சி எட்டிப் பார்த்தது அவளிடம்.
“சாரிம்மா! நான் தான் சொன்னேன்ல… பத்து நாளா என் மைண்ட் நிலையா இல்ல… பட் சீக்கிரமே எல்லாம் பழையபடி மாறிடும்”
“எல்லாமேவா?”
ஆர்வமாகக் கேட்டார் அகல்யா. அவரது குரலில் இருந்த ஆர்வம் அனுக்ரஹாவுக்குச் சிரிப்பு மூட்டியது.
“எல்லாவுமே தான்… பட் டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளைட்”
“போடி… நான் என்னமோ நினைச்சேன்… நீ என்னை வழக்கம் போல ஏமாத்துற… எனக்காக கொஞ்சம் இறங்கி வரமாட்டியா?”
அகல்யாவின் இந்தக் குரல் தான் அனுக்ரஹாவின் பலவீனம். அன்னை அன்பாகக் கேட்டுவிட்டார் என்றால் அவளால் மறுக்க முடியாது.
“இப்ப உனக்கு என்ன வேணும்னு சொல்லு”
“வேற ஒன்னுமில்லடி… துவாரகாவோட வளைகாப்பு அடுத்த மாசம் வருது… நீ வந்தா அவ சந்தோசப்படுவா… வயித்துப்புள்ளைக்காரி ஆசைப்பட்டுக் கேக்குறா அனு”
அனுக்ரஹா உதடு கடித்து யோசித்தாள். பின்னர் எதையோ தீர்மானித்தவள் “சரிம்மா… நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டாள்.
அகல்யாவுக்குச் சந்தோசம் தாங்கவில்லை.
“வந்துடு… அப்பிடியே உன் ஃப்ரெண்ட்சுங்களையும் அழைச்சிட்டு வா… பிரபா பொண்ணு என் கண்ணுக்குள்ளவே நிக்குது”
வெகுளியாய்ப் பேசி அழைப்பைத் துண்டித்தார் அகல்யா.
அனுக்ரஹா சிரித்தாள்.
“துவாரகாவோட வளைகாப்புக்கு அம்மா கூப்பிடுறாங்க… போகலாமாடி?”
“ஓஹ்! போலாமே”
பிரபாவதி கண்களில் பிரகாசம் மின்ன கூறவும் அனுக்ரஹா புன்னகைத்தாள். ஏனோ ராகவர்தன் கொடுக்கிற குடைச்சல் எல்லாம் மறந்து போன நிலை!
அதே நேரம் ராகவர்தனோ மமிதா குரியனின் கொலை வழக்கு பற்றி அன்று கிடைத்த முக்கியத் தகவலை இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்த தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘மெல்டிங் பாட்’ குழுவினர் யாரும் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றாலும் முடிந்தளவு அவர்களிடம் தகவல்களை வாங்கியிருந்தான். ஆனால் ஒரே ஒரு தகவல் மட்டும் விடுபட்டிருந்தது.
அதன்படி மமிதா குரியனின் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு வருகை தந்த திரை பிரபலங்கள், தொழில்துறை நிபுணர்கள், பண முதலைகள் அனைவரின் பெயரும் பட்டியலிடப்பட்டிருந்தது. அதில் விடுபட்ட ஒரு நபரின் பெயரை யாருமே விசாரணையின்போது கூறவில்லை. ஆனால் அந்நபரின் பெயரை பிறந்தநாளன்று பார்ட்டி ஹாலில் பணியாற்றிய ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் விசாரணையின் போது கூறிவிட்டார்.
அப்போது ராகவர்தனின் மூளைக்குள் சந்தேகம் முளைத்தது.
‘மெல்டிங் பாட்’ நிறுவனத்தின் ஏஞ்சல் இன்வெஸ்டார்கள் தாமஸ் குரியன் மற்றும் லோகநாதன். இருவருமே ‘வென்சர் கேப்பிடல் ஷார்க்ஸ்’ என்று தொழில்துறையில் அழைக்கப்படும் பெரும்புள்ளிகள்.
அவர்கள் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்களோ அந்நிறுவனம் வளராமல் போனதேயில்லை.
இருவரும் நீண்டநாள் நண்பர்கள் கூட. அவர்கள் கூட விசாரணையின்போது அந்நபர் பார்ட்டிக்கு வந்ததைச் சொல்லவில்லையே! ஒருவேளை அவர்களுக்குத் தெரியாமல் போயிருக்குமா? பார்ட்டி நடைபெற்ற இடத்தில் புகைப்படக்கருவிகளுக்கும், மொபைல் போன்களுக்கும் அனுமதி இல்லை என்று ஹோட்டல் சிப்பந்தி சொல்லியிருந்தார்.
“அந்த ஆள் பேர் கெஸ்ட் லிஸ்டுல இல்ல சார்… நாங்க உள்ள விட யோசிச்சோம்… அப்புறம் அவர் யார்னு தெரிஞ்சதும் உள்ள விட்டோம்… ஒருவேளை அவர் வந்தது அவங்க யாருக்கும் தெரியாம கூட இருந்திருக்கலாம்” என்று சொல்லியிருந்தார் அவர்.
அந்த விடுபட்ட நபர் தான் கொலை செய்தவன் என்றால் கட்டாயம் கிடைத்த பத்து நிமிட இடவெளியில் தான் அவன் மமிதாவைக் கொன்றிருக்க முடியும்.
எந்தவித வன்முறையும் இல்லாமல் அளவுக்கதிகமாகப் போதைப்பொருளை அவள் வாயில் திணித்து அவளை உட்கொள்ள செய்திருக்கிறான் என்றால் அவ்வளவு நேரம் மமிதாவை ஏன் யாருமே வந்து பார்க்கவில்லை? குறிப்பாக ‘மெல்டிங் பாட்’ குழுவினர்.
அவர்கள் இருவரையும் தனியே விட்டுச் சென்றிருந்தால் மட்டுமே இது சாத்தியம். தனிமையில் சந்திக்கும் அளவுக்கு மமிதாவுக்கும் அவனுக்கும் உறவு இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருந்தான் ராகவர்தன்.
அந்நபரின் பெயரைச் சொல்லாத ‘மெல்டிங் பாட்’ குழுவினர் மீது வந்த ஆத்திரத்துக்கு அளவேயில்லை.
அடுத்து அவன் செய்ய வேண்டியது மமிதாவுக்குச் சொந்தமான மொபைல், மடிக்கணினியைக் கையகப்படுத்தி ஏதாவது சாட்சி சிக்குமா என்று சோதிப்பதே!
தாமஸ் குரியன் என்ன தான் தொண்டையை அடைக்கும் துக்கத்திலிருந்தாலும் இம்முறை அதை அவன் செய்யாமல் விடப்போவதில்லை. அந்நபர் தனது மகளின் பெயருக்குக் களங்கம் வந்துவிடக்கூடாதென வழக்கை முடக்கப் பார்ப்பதில் ராகவர்தனுக்கு ஏக அதிருப்தி. அவரது தலையீட்டால் தான் ‘மெல்டிங் பாட்’ குழுவினர் கூட தனது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையோ என்ற சந்தேகம்.
எதுவாயினும் மமிதா குரியனின் இறப்பு திட்டமிட்ட கொலை என்பதற்கான சாட்சியை அவன் தேடி கண்டறிய வேண்டுமெனத் தீர்மானித்த ராகவர்தன் அந்த வேலையை ஆய்வாளர் ஸ்ரீதரிடம் ஒப்படைத்தான்.
“நாளைக்குக் கமிஷனர் சாரைப் பாத்து பெர்மிசன் வாங்கிட்டு நீங்க கேரளா கிளம்புங்க… நானும் ட்ரிப்ளிகேன் டி.சி.பி ராதா கிருஷ்ணனும் நாளைக்கு மெல்டிங் பாட்டுக்கு டேரக்டா விசிட் பண்ணி எங்க விசாரணைய நடத்துறோம்… நீங்க போறதுக்கு முன்னாடி டாக்டர் அரவிந்தன் கிட்ட எனக்கு ஒரு ஸ்பெஷல் அப்பாயிண்ட்மெண்ட் வேணும்னு மட்டும் இன்ஃபார்ம் பண்ணிடுங்க”
ஸ்ரீதர் கிளம்பியதும் ராகவர்தனும் தனது ஃப்ளாட்டுக்குக் காவல் வாகனத்தில் கிளம்பினான்.
அன்று முழுவதும் சரியாகச் சாப்பிடாமல் தலை வலித்தது.
காவல் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போதே அவனது மொபைல் இசைத்தது.
‘அப்பா காலிங்’
‘கால் யூ லேட்டர்’ என்ற செய்தியை அனுப்பிவிட்டு சாலையில் கவனம் செலுத்தினான்.
வாகனம் ஓட்டும்போது மொபைல் பேசக்கூடாதென்ற விதியைக் காவல்துறை அதிகாரியான அவனே மீறினால் பொதுமக்கள் எப்படி கடைபிடிப்பார்கள்?
இத்தனைக்கும் அவன் தங்கியிருக்கும் வீடு அமைந்திருக்கும் பூசலா கெங்கு ரெட்டி தெரு அவ்வளவு தூரம் எல்லாம் இல்லை. எனவே வீட்டுக்குப் போனதும் பேசிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தான்.
வீட்டுக்கு வந்ததும் சீருடையைக் கூட மாற்றாமல் தந்தையிடம் பேசவும் ஆரம்பித்தான்.
“ஏ.சி.பி கிட்ட பேச லேட் ஆகும்னு நினைச்சேன்” என்று ஆரம்பித்தார் அவனது தந்தை தியாகராஜன்.
சிரித்தான் அவன்.
“ட்ரைவிங்ல நான் கால் அட்டெண்ட் பண்ண மாட்டேன்னு தெரியாதாப்பா?”
“நல்ல விசயம் தான்… நான் உன் கிட்ட பேச கூப்பிட்டதும் ஒரு நல்ல விசயத்தைச் சொல்லுறதுக்காக தான்… உன் அம்மா உனக்குப் பொண்ணு பா…”
“கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லப்பா… இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்”
“ஏன்டா இந்தக் கேள்விக்கு இன்ஸ்டெண்டா பதில் வச்சிருப்பியா? முப்பத்திரண்டு ஆகுதுடா… இன்னமும் ஏன் தள்ளிப் போடுற? ஒருவேளை உன் மனசுல…”
தியாகராஜன் பீடிகை போடவும் சட்டென அதற்கு மறுப்பு தெரிவித்தான் ராகவர்தன்.
“அப்பிடி யாரும் என் மனசுல இல்ல… காதல், கல்யாணம் எல்லாம் ரொம்ப சென்சிடிவான டாபிக்… அதை பத்தி யோசிக்க எனக்கு டைம் இல்ல” என்று படபடவென பொரிந்துகொண்டே போனவன் தந்தை பேச்சுவாக்கில் சொன்ன புது தகவலில் பேச்சை நிறுத்தினான்.
“என்ன சொல்லுறிங்கப்பா?”
“நீ நம்புனாலும் நம்பலனாலும் அதான் உண்மை ராகவ்”
சிறிது யோசித்தவன் “என்ன சொன்னாலும் எனக்குக் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்பா… நான் ஒரு கேஸ்ல பிசியா இருக்கேன்… அதனால எதையும் என்னால உறுதியா சொல்ல முடியாது… நீங்க சாப்பிட்டுட்டுத் தூங்குங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
தந்தை சொன்ன தகவலை அவனால் நம்ப முடியவில்லை. தந்தை தன்னிடம் பொய் சொல்லமாட்டார் என்பது நிச்சயம்!
அதிக நேரம் அவர் சொன்ன செய்தி அவனது மூளையைக் குழப்பவில்லை. மமிதா குரியனின் வழக்கினால் கவனிக்காமல் விட்ட அவனுடைய வயிறு ‘என்னைக் கவனிடா’ என்று கூக்குரலிடவே இரவுணவு சமைக்க ஆயத்தமானான் ராகவர்தன் ஐ.பி.எஸ்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


