“எனக்கு அதிகமா பேசுறதும், அதிகமா பேசுறவங்களையும் எப்பவுமே பிடிக்கிறதில்ல… A superior man is modest in his speech; but exceeds in his actions… கன்ஃபூசியஸ் சொன்ன கோட்ஸ் இது… நான் ரொம்ப மதிக்குற ஒரு நபர் எனக்குச் சரியான நேரத்துல குடுத்த அட்வைஸ் தான் இந்தக் கோட்ஸ்… அப்ப இருந்தே வார்த்தைய குறைச்சு செயல்ல கவனம் செலுத்துற பழக்கத்தை நான் கத்துக்க ஆரம்பிச்சேன்… இன்னைக்கு அது என்னோட குணமாவே மாறிடுச்சு”
-ராகவர்தன்
மெல்டிங் பாட் ப்ரைவேட் லிமிட்டட் அலுவலகம், பல்லாவரம்…
முகுந்தனின் அலுவலக அறையில் அமர்ந்து ஒவ்வொருவராக விசாரித்துக் கொண்டிருந்தான் ராகவர்தன். அவனோடு சேர்ந்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர்களின் உடல்மொழியில் எதுவும் மாற்றம் தெரிகிறதா எனக் கவனித்துக்கொண்டிருந்தார் திருவல்லிக்கேணி துணை ஆணையரான ராதாகிருஷ்ணன். காவல்துறையில் சிக்கலான வழக்குகளின் முடிச்சுகளைக் கூட தனது சாதுரியத்தாலும், குற்றவாளிகளின் கண் பார்வையிலிருந்தே அவர்களுக்கு அக்குற்றத்தில் சம்பந்தமுள்ளதா என்பதா கணிக்கும் திறனாலும் முடித்து வைத்துவிடுவார்.
அதனாலேயே காவல்துறை ஆணையர் மமிதா குரியனின் வழக்கை விசாரிக்கும் குழுவில் அவரையும் ஒரு விசாரணை அதிகாரியாக நியமித்திருந்தார்.
அனுக்ரஹாவைத் தவிர அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. அவளைத் தனது அலுவலகத்தில் விசாரித்ததே போதும் என்ற எண்ணம் ராகவர்தனுக்கு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளைத் தவிர்த்து மிச்சமிருக்கும் ஒன்பது நபர்களையும் அவளை விசாரித்த பாணியிலேயே விசாரித்து முடித்தவன் இறுதியாக அனைவரையும் உள்ளே வருமாறு அழைத்தான்.
பத்து பேரும் அமர்ந்ததும் அனுக்ரஹா அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே கிடந்த மேஜையிலிருந்த கோப்பினை எடுத்துத் தருமாறு கேட்டான்.
அவளும் அதை எடுத்து ஷாமிடம் கொடுத்து “சார் கிட்ட குடு” என்று சொல்ல அவன் வாங்குவதற்குள்
“உங்க கால்ல மருதாணி வச்சிருக்கிங்களா மிஸ் அனுக்ரஹா?” என்ற கேள்வி ராகவர்தனிடமிருந்து வர அவளோ மலங்க மலங்க விழித்தாள்.
இது என்ன சம்பந்தமற்ற கேள்வி என்பது போல அனைவரும் பார்க்கும்போதே “நாலு ஸ்டெப் எடுத்து வச்சு என் கிட்ட ஃபைலை குடுக்க முடியாத அளவுக்கு உங்க கால்ல என்ன பிரச்சனை?” என்று மீண்டும் அவன் கேட்க அனுக்ரஹா பற்களை நறநறத்தபடி கோப்பினை அவனிடம் கொண்டு போய் நீட்டினாள்.
வாங்கிக்கொண்டவன் அவர்கள் அனைவரும் விசாரணையில் சொல்ல தவறிய நபரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.
அந்நபர் ‘மெல்டிங் பாட்டின்’ இன்னொரு முதலீட்டாளரான லோகநாதனின் தமக்கை மைந்தனான பிரதீப். வயது பத்தொன்பது.
அவனைக் குறிப்பிட்டதும் அங்கிருந்த அனைவரின் முகங்களிலும் குழப்ப ரேகைகள் ஓடின!
“பிரதீப்?”
“அவன் பார்ட்டிக்கு வந்தானா? ஹான்….”
“ப்ளாக் கலர் ஜாக்கெட், ஒய்ட் டீசர்ட் போட்டு வந்தது பிரதீப் தானா?”
“நீ பாத்தியா? எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல”
அவர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ராதாகிருஷ்ணனும் ராகவர்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“உங்களுக்குள்ளவே பேசுனா எப்பிடி? அவன் வந்தானா வரலையா?” ராதாகிருஷ்ணன் கேட்டதும் முகுந்தன் நெற்றியைத் தேய்த்துவிட்டவாறு பேச ஆரம்பித்தான்.
“நாங்க எல்லாரும் மமிதா கூட பேசிட்டிருந்தப்ப அவன்… அவன் அங்க வந்ததா ஞாபகம்… ப்ளாக் கலர் ஜாக்கெட், ஒய்ட் டீசர், டெனிம் ஜீன்ஸ் போட்டிருந்தான்… அவன் வந்ததும் என்னமோ சொன்னான்”
அவன் யோசிக்கையிலேயே மற்றவர்களின் கண்களிலும் குழப்பம்!
அடுத்து விஜயின் முறை!
“அண்ணா அவன் மமிதா கிட்ட பெர்ஷனலா பேசணும்னு சொன்னதா ஞாபகம்… நாம எல்லாரும் கூட அவங்களைக் கலாய்ச்சோம்.. எல்லாமே மங்கலா ஞாபகம் வருதுண்ணா”
விஜய் சொன்னதும் முகுந்தனின் விழிகளிலும் பளிச் மின்னல்.
“யெஸ்! அவன் மமிதா கிட்ட பெர்ஷனலா பேசணும்னு சொன்னான்… அதான் நாங்க அங்க இருந்து போனோம்”
அவர்கள் இருவருக்கும் நினைவிற்கு வந்தது கூட மற்றவர்களுக்கு வரவில்லை. யாரோ வந்தார்கள் என்பது வரை மட்டுமே நினைவுக்கு வந்திருந்தது.
ராகவர்தன் அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
“டீனேஜ் பசங்களைத் தனியா பேசட்டும்னு விட்டுட்டுப் போயிருக்கிங்க… என்ன காரணம்?”
“அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறதா பிரதீப் எங்க கிட்ட சொல்லியிருந்தான் சார்… இன்ஃபேக்ட், மமிதாவோட எய்ட்டீன்த் பர்த்டே அன்னைக்கு ப்ரபோஸ் பண்ணப்போறதாவும் நியூ இயர் பார்ட்டில நாங்க மீட் பண்ணிக்கிட்டப்ப அவன் சொன்னான்.. சோ நாங்க அந்த எண்ணத்துல தான் அங்க இருந்து போனோம்”
எல்லாவற்றையும் சொன்னாலும் முகுந்தனுக்கு ஒரு குழப்பம்! தங்களுக்கு ஏன் நடந்த எதுவும் நினைவில் இல்லை? ஒவ்வொன்றாக மங்கலாக நினைவுக்கு வருவது ஏன்?
ராகவர்தனின் பார்வை அவனை அளவிடுவதை அனுக்ரஹா கவனித்துவிட்டாள்.
“முகுந்த் அண்ணாவும் விஜயும் பொய் சொல்லுறதா தோணுதா உங்களுக்கு?” என்று கேட்டாள் சூடாக.
ராகவர்தனின் தலை மறுப்பாக அசைந்தது.
“இங்க வர்றதுக்கு முன்னாடி டாக்டர் அரவிந்தனைப் பாத்து சில டீடெய்ல்ஸ் கேட்டேன்… அன்னைக்குப் பார்ட்டில நீங்க எல்லாரும் குடிச்ச டிரிங்ஸ்ல அளவுக்கதிகமா கலந்திருந்த ட்ரக் உங்க எல்லாருக்கும் ‘ப்ளாக் அவுட்’டை ஏற்படுத்திருக்கலாம்னு அவர் சொன்னார்”
ராகவர்தன் முடிக்க ராதாகிருஷ்ணன் தொடர்ந்தார்.
“அளவுக்கதிகமா ட்ரக் யூஸ் பண்ணுனா சில குறிப்பிட்ட நேரத்துல நடக்குற சம்பவங்கள் நமக்கு மறந்துடும்… அதை தான் ப்ளாக் அவுட்னு மெடிக்கல் லாங்வேஜ்ல சொல்லுவாங்க… சிலருக்கு போதைல இருந்தப்ப என்ன நடந்துச்சுங்கிறது கடைசி வரைக்கும் ஞாபகம் வராமலே போயிடும்…. அதை ‘en bloc blackout’னு சொல்லுவாங்க… உங்கள்ல சிலருக்குச் சுத்தமா எந்தச் சம்பவமும் ஞாபகம் இல்லாம போனதுக்கு இது காரணமா இருக்கலாம்… அதே நேரம் மிஸ்டர் முகுந்தனுக்கும், விஜய்க்கும் வந்தது ‘fragmental blackout’… யாராச்சும் அந்த நேரத்துல நடந்ததை ஞாபகப்படுத்துனா கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு நினைவு வரும்… உங்க யாருக்கும் போதை பழக்கம் இல்லனு சொல்லுறிங்க… அதனால உங்களோட மறதிய நாங்க நாடகம்னு நினைக்கல.. மெடிக்கல் சயின்ஸ்ல அதுக்கு ஆதாரம் இருக்கு.. ப்ளஸ் நீங்க எல்லாரும் பேசுறப்ப உங்க பாடி லாங்வேஜை நான் கவனிச்சேன்… யூஸ்வலா பொய் சொல்லுறவங்களுக்கும், மறந்து போன விசயத்தை ஞாபகப்படுத்திக்கிறவங்களுக்கும் பாடி லாங்வேஜ் வித்தியாசப்படும்… அதுக்காக ஒரேயடியா இந்தக் கேஸ்ல இருந்து நீங்க ஃப்ரீ ஆகிடமாட்டிங்க”
விசாரணை முடிந்து இருவரும் எழுந்ததும் ‘தொல்லை விட்டது’ என்று தற்காலிக நிம்மதி பெருமூச்சு அனைவரிடமும் எழுந்தது.
ராகவர்தன் அவர்கள் அனைவரையும் ஒரு முறை கூர்ந்து பார்த்தவன் “அப்பிடி ஒரேயடியா இவங்களை நம்பிட முடியாது… பெட்டர் லை டிடெக்டிங் டெஸ்ட் எடுத்துடலாம்… இவங்க மட்டுமில்ல, பார்ட்டி அட்டெண்ட் பண்ணுன எல்லாருக்குமே” என்று ராதாகிருஷ்ணனிடம் கூற
“என்னோட கணிப்பு சரியா இருந்துச்சுனா அதுக்கான அவசியம் வராது சார்… ஸ்ரீதர் மூலமா முக்கியமான ஆதாரம் கிடைக்கும்னு நம்புவோம்” என்றார் அவர்.
இருவரும் அங்கிருந்து வெளியேறியதும் அன்றாட வேலைகளைக் கவனிக்க முடியாத அளவுக்கு ஒருவித சங்கடம் மொத்த அலுவலகத்தையும் சூழ்ந்திருந்தது.
ராகவர்தனின் பார்வையிலிருந்த குற்றம் சாட்டும் பாவனை இன்னும் மாறவில்லை என்பது அனைவருக்கும் புரிந்தது.
இதையே நினைத்துக் கொண்டிருந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?
மெதுவாக அலுவலகச்சூழல் மாறத் தொடங்கியது.
அவர்களின் யூடியூப் சேனலுக்கான சமையல் வீடியோ படப்பிடிப்பு ஆரம்பமானது.
சமீபத்தில் அவர்கள் சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்த ‘ரெடி டூ ஈட்’ பனீர் பட்டர் மசாலா மற்றும் ருமாலி ரொட்டி செய்வதாக முன்னரே திட்டமிட்டிருந்தார்கள்.
பிரபாவதியும் ஷாமும் சமைக்க ஆரம்பிக்க அதை சோசியல் மீடியா குழுவிலிருந்த வித்யூத் பதிவு செய்ய ஆரம்பித்தான்.
அவர்களின் வீடியோக்களும் ரீல்ஸ்களும் வழக்கமான சமையல் நிகழ்ச்சிகள் போலிருக்காது.
சகஜமாக கலாய்த்தபடி அவர்கள் சமைப்பதைப் பார்க்க ஏதோ நகைச்சுவை நிகழ்ச்சி போன்ற உணர்வைக் கொடுக்கும். எனவே வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு பார்வையாளர்களும் அவர்க்ளின் வீடியோக்களைப் பார்ப்பதுண்டு.
அதன் மூலமாக ‘மெல்டிங் பாட்’டின் தயாரிப்பு பொருட்களின் விற்பனை சூடு பிடித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு பக்கம் வீடியோ ஷூட் நடந்து கொண்டிருக்கையில் இன்னொரு பக்கம் முகுந்தனுடன் அடுத்து சந்தையில் வெளிவரப்போகிற அவர்களின் தயாரிப்பான ‘ரெடி டூ ஈட் பிசிபேளாபாத்’ எத்தகைய தயாரிப்பு வழிமுறைகளைக் கடக்க வேண்டுமென்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள் அனுக்ரஹா.
“இதை ஒரு தடவை ப்ரிப்பேர் பண்ணி தெர்மல் ப்ராசஸ் செஞ்சு பாத்துட்டோம்னா செல்ஃப் லைஃப் எவ்ளோ நாள்னு டிசைட் பண்ணிடலாம் அண்ணா… அதுக்கு அப்புறம் லேப் டெஸ்டுக்கு அனுப்பிடலாம்”
‘தெர்மல் ப்ராசசிங்’ என்பது பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் பாக்டீரியா வளராமல் தடுக்கவும், அந்த உணவுப்பொருள் கெட்டுப்போகாமலிருக்கவும் உபயோகப்படுத்தப்படும் வழிமுறை ஆகும்.
பாக்டீரியா வளர வேண்டுமென்றால் குறிப்பிட்ட ஈரப்பதமும், ஆக்சிஜனும் தேவை. ‘தெர்மல் ப்ராசசிங்கில்’ தயாரிக்கப்பட்ட உணவுப்பொருளானது 120 சென்டி க்ரெடு வெப்பநிலையில் ப்ரஷர் குக்கர் போன்ற கொள்கலனில் வைக்கப்படுகிறது. இப்படி தயாராகும் ‘ரெடி டூ ஈட்’ உணவுப்பொருட்கள் அறை வெப்பநிலையில் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்கும்.
ஜப்பானியர்கள் பயன்படுத்தும் ‘retort processing’ முறையிலும் சில உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த இரண்டு முறைகளிலும் தயாரிக்கப்படும் ‘ரெடி டூ ஈட்’ உணவுகளில் ப்ரசர்வேட்டிவ் கலக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
இந்த இரண்டு வழிமுறைகளையும் தான் ‘மெல்டிங் பாட்’ நிறுவனமும் கடைபிடிக்கிறது. பிசிபேளாபாத் மட்டும் சந்தையில் வெற்றிகரமான தயாரிப்பாக மாறிவிட்டால் அடுத்தக் கட்ட தயாரிப்பு திட்டங்களை வேகமாகச் செயல்படுத்திவிடலாம் என்பது முகுந்தனின் எண்ணம்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரத்தியேகமான சமையல் இருக்கும். உணவு வகைகளும் இருக்கும். அவை அனைத்துமே ‘மெல்டிங் பாட்’ தயாரிப்புகளாக வெளிவர வேண்டுமென்பது முகுந்தனின் கனவு.
அதற்கான வழிமுறைகளைத் தேடி தேடி அறிவது, அந்த வழிமுறைகளைச் சிறியளவில் சோதனை செய்து பார்த்து எந்த உணவைப் பெரியளவில் தயாரித்துச் சந்தையில் விற்பனை செய்யலாமெனத் தீர்மானிக்கும் அதிகாரம் அனுக்ரஹாவிடம் இருந்தது.
அவளும் ஆர்வத்தோடும் ஆசையோடும் பணியாற்றினாள் எனலாம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது காதல் வரும். அனுக்ரஹாவுக்குச் சமையலின் மீது தீராக்காதல்.
அவளது தந்தை மகிழ்வண்ணநாதனுக்கு மகள் தன் பேச்சைக் கேட்காமல் சமையல் கலையைப் படிப்பாகத் தேர்ந்தெடுத்ததே பிடிக்கவில்லை.
சமையல் எல்லாம் வீட்டிலேயே கற்றுக்கொள்ளலாம். அதற்கு போய் பணம் கட்டிப் படிக்கவேண்டுமா என்ற எண்ணம்.
தன்னைப் போல பட்டயக்கணக்காளருக்குப் படித்து மகள் சிறந்த தணிக்கையாளராக வரவேண்டுமென்ற அவரது கனவைத் தனது ஆசையால் பின்னுக்குத் தள்ளிவிட்டாள் அனுக்ரஹா.
படித்து முடித்ததும் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வேலை பார்த்து பின்னர் கிடைத்தது தான் மெல்டிங் பாட்டில் ‘ப்ராடக்ட் மேனேஜர்’ வாய்ப்பு.
அலுவலக வேலை என்ற காரணத்தால் மட்டுமல்ல, தன்னைக் கட்டுப்படுத்த நினைக்கும் தந்தையிடமிருந்து விலகி நிற்கும் வாய்ப்பாக அதைப் பற்றிக்கொண்டாள் அனுக்ரஹா.
அவளுக்குப் பின்னர் தான் மற்ற அனைவரும் நிறுவனத்துக்குள் வந்து சேர்ந்தார்கள். நட்பும் ஆதரவான தட்டிக்கொடுத்தலுமாக வேலை நேரங்கள் இனிமையாகவே கழிந்தன, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரை.
முகுந்தனுடன் ஆலோசித்தப் பிறகு தனது கேபினுக்குள் சென்று அமர்ந்தவள் அடுத்தடுத்த வேலைகளில் ஆழ்ந்தாள்.
மாலையில் ஃப்ளாட்டுக்குத் திரும்பியதும் அவளுக்காக இன்னொரு தலைவலி காத்திருந்தது. அந்தத் தலைவலியின் பெயர் சின்னா. அனுக்ரஹாவின் அன்னையுடைய அண்ணன் மகன்.
அனுக்ரஹாவையும் பிரபாவதியையும் கண்டதும் குதூகலமாக “ஹாய்” என்றவனுக்குப் பதிலுக்கு “ஹாய்” வந்தது என்னவோ பிரபாவதியிடமிருந்து மட்டுமே.
அனுக்ரஹா அவனை முறைக்க சின்னா நெளிந்தான்.
“அத்தை தான் கால் பண்ணி உன்னைப் பாத்துட்டு வரச் சொன்னாங்க அனு… முறைக்காத”
“உள்ள வா”
சிடுசிடுத்துவிட்டு ஃப்ளாட்டுக்குள் அழைத்துக்கொண்டாள் அவனை.
வந்தவனுக்குப் பிரபாவதி தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள்.
அதை அருந்தியவன் “சீரியஸ்லி உனக்கு எதுவும் பிரச்சனை எதுவும் இல்லையே?” என்று கேட்க
“நேத்து அம்மா கிட்ட தெளிவா சொன்னேன்… அப்பிடி சொல்லியும் உன்னை இங்க வரச் சொல்லிருக்காங்கனா எவ்ளோ திமிரு இருக்கணும்?” என அனுக்ரஹா தனது மூன்றாவது கண்ணைத் திறந்தாள்.
“ஹே! அத்தை பாவம்டி அனு… உனக்கும் மாமாக்கும் இடையில சிக்கித் தவிக்குறாங்க… இண்டிபெண்டண்டா இருக்குறதுனா குடும்பத்தை ஒதுக்கிட்டு இருக்குறதுனு அர்த்தமில்லையே?”
சின்னா வைத்த வாதத்தை முறைப்புடன் கேட்டுக்கொண்டவள் “இதை உன் சௌமித்ரா கிட்ட கேளு… அவ தான் மூச்சுக்கு மூச்சு ஃபெமினிஷம் பேசுவா… இப்பிடி நீ பேசுனது அரசல் புரசலா அவளுக்குத் தெரிஞ்சா கூட ப்ரேக்-அப் கன்ஃபார்ம்” என்று மிரட்ட
“அம்மா தாயே! அத்தை மகளுக்குப் பிரச்சனையேனு ஓடி வந்தேன்… இதை மனசுல வச்சு என் லவ் லைஃப்ல கும்மி அடிச்சிடாத… எனிஹவ், என்னை வாசலோட துரத்தி விடாம வீட்டுக்குள்ள கூப்பிட்டு தண்ணி எல்லாம் குடுத்ததால தான் ‘உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே’னு டவுட்டா கேட்டேன்” என்றான் சின்னா.
அனுக்ரஹாவின் இதழோரம் புன்னகை துளிர்த்தது.
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… இதை நீ உன்னோட அத்தை கிட்ட மட்டும் சொன்னா போதும்”
“மாமா…”
“உன் மாமா என்னைத் தண்ணி தெளிச்சு விட்டு நாலு வருசம் ஆகுது… எனக்குப் பிரச்சனைனா அவர் சந்தோசப்படுவார்… தவிக்க மாட்டார்”
“எந்த அப்பாவும் அப்பிடி இருக்கமாட்டாங்க அனு”
அனுக்ரஹாவின் பார்வையில் மீண்டும் உஷ்ணம் ஏறியது.
“நீ அவருக்குச் சப்போர்ட் பண்ணுவனு தான் உன் கூட நான் டச் இல்லாம இருக்கேன் சின்னா… ப்ளீஸ்! அவரைப் பத்தி பேசுறதை அவாய்ட் பண்ணு”
சின்னாவின் விழிகளில் ஆதுரம்!
“உனக்கு மெமரி பவர் அதிகம்னு சின்ன வயசுல அத்தை சொல்லுவாங்க… அப்ப அது வரமா இருந்திருக்கலாம்… இந்த வயசுல அது உனக்குச் சாபம் அனு… உறவுகளுக்குள்ள நடக்குற நல்லதை மட்டும் நினைவுல வச்சுக்கிட்டு கெட்டதை மறந்துடுறது நம்ம அந்த உறவுகளுக்குப் பண்ணுற நியாயம்டி”
“நான் எனக்கு மட்டும் நியாயமா இருந்துக்குறேன் சின்னா… டீ ஆர் காபி? என்ன சாப்பிடுற?”
அனுக்ரஹா விருந்தோம்பலில் இறங்க சின்னாவும் மேற்கொண்டு வற்புறுத்தாமல் நீண்டநாட்கள் விலக்கியே வைத்திருந்த அத்தை மகளிடம் அவள் விரும்பாத விஷயங்களைத் தவிர்த்து பொதுவான உரையாடலில் ஈடுபடலானான்.
அதே நேரம் மமிதா குரியனின் சொந்த உபயோகத்துக்குரிய மொபைல், லேப்டாப், டேப்ளட் கருவிகளை ராகவர்தன் வசம் ஒப்படைத்தார் ஸ்ரீதர்.
“தாமஸ் குரியன் முதல்ல ஒத்துக்கல… ரொம்ப கஷ்டப்பட்டு அவரைச் சம்மதிக்க வச்சேன் சார்”
“குட் ஜாப் ஸ்ரீதர்… இதை சைபர் டிப்பார்ட்மெண்டுக்கு அனுப்பி உபயோகமான தகவல் கிடைக்குதானு பாக்கணும்” என்றான் அவன்.
காவல் ஆணையரின் பரிந்துரையின்படி அந்த உடைமைகள் சைபர் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு சந்தேகப்பட்டியலில் இருப்பவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்த ஆலோசனை நடைபெற்றது.
உண்மை கண்டறியும் சோதனையில் கிடைக்கும் முடிவுகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளாது. ஆனால் குற்றம் பற்றிய வெளிவராத தகவல்களை அறியவும், குற்றவாளிகள் மறைத்த உண்மைகளைக் கண்டறியவும் இம்முறையை விட்டால் வேறு வழி இல்லை.
“சைபர் டிப்பார்ட்மெண்ட்ல இருந்து யூஸ்புல்லான எந்தத் தகவலும் கிடைக்கலனா லை டிடெக்டிங் டெஸ்டுக்காக கோர்ட்டுல பெர்மிசன் வாங்கலாம் ராகவர்தன்… ‘மெல்டிங் பாட்’ ஸ்டாப்சை ரொம்ப பயமுறுத்திட்டிங்க போல… அவங்களை இந்தக் கேஸ்ல இருந்து ரிலீஸ் பண்ண நிறைய ப்ரஷர் வருது எனக்கு”
இதைக் கேட்டதும் ராகவர்தனின் முகத்தில் கடுப்பேறியது.
“அதனால தான் அவங்க மேல எனக்குச் சந்தேகம் அதிகமாகுது சார்… எந்தத் தப்பும் செய்யலனா என்கொயரில இருந்து தப்பிக்க ஏன் இவ்ளோ துடிக்குறாங்க?”
“அவங்களோட கம்பெனியோட க்ரோத்தை நினைச்சுப் பயப்படுறாங்க ராகவர்தன்”
“எனக்கு ஒரு விசயம் சுத்தமா புரியல சார்… விக்டிமோட ஃபாதர் அவங்களோட இன்வெஸ்டார்… அந்த ஆளுக்கும் பொண்ணோட மரணத்தைப் பத்தி அக்கறை இல்ல… அவ இறப்புல ட்ரக் சம்பந்தப்பட்டதால தன்னோட அந்தஸ்துக்குக் குந்தகம் வந்துடும்னு யோசிக்குறார்… மெல்டிங் பாட் ஆளுங்களுக்கு அவங்க தொழில் தான் முக்கியம்… இவங்கள்ல யாருமே மமிதாவோட இறப்புக்குக் குறைஞ்சபட்ச கவனத்தைக் கூட குடுக்கலங்கிறது தான் என் சந்தேகம் அதிகமாகுறதுக்கு முக்கியமான காரணம்… எனி ஹவ், சைபர் டிப்பார்ட்மெண்ட் ரிப்போர்ட் முடிவை வச்சு அடுத்தக் கட்ட விசாரணையை கொண்டு போகலாம்னு இருக்கோம்”
“ஓ.கே… கேரி ஆன்”
காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து வெளியேறி தனது காவல் வாகனத்தில் ஏறி வீடு நோக்கி பயணித்த ராகவர்தனுக்கு மீண்டும் ‘மெல்டிங் பாட்’ நிறுவனம் மீது கசப்புணர்ச்சி உண்டானது. அதன் ஒவ்வொரு உறுப்பினர்களும் குற்றவாளியாகத் தெரிய தொடங்கினார்கள் அவன் மனக்கண்ணில்!
வீட்டுக்குள் அடியெடுத்து வைத்ததும் மொபைலில் வாட்சப் செய்தி வந்தது. அன்னை தனலெட்சுமி தான் அனுப்பியிருந்தார்.
அது ஒரு புகைப்படம்! திருமணத்துக்குப் பார்த்த பெண்ணாக இருக்கலாம்!
பார்க்கவே தோன்றவில்லை அவனுக்கு. பார்க்காவிட்டாலோ அடுத்த சில நிமிடங்களில் மொபைல் அழைப்பு வரும்.
‘எமோஷ்னலான’ பேச்சுகளில் அவனுக்கு இப்போது விருப்பமில்லை. புகைப்படத்தைப் பார்த்தான்.
கீழே பெண்ணைப் பற்றிய விபரங்கள் இருந்தன. சுவாரசியமில்லாமல் வாசித்தான். பின்னர் என்ன தோன்றியதோ தெரியவில்லை.
“உங்களுக்குப் பிடிச்சிருந்தா எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்லம்மா… பேசி முடிங்க”
அடுத்த நொடியில் தனலெட்சுமியிடமிருந்து சிரிக்கும் எமோஜிகள் பதிலாக வர ராகவர்தனின் உதடுகளும் முறுவலித்தன.
‘இந்த அன்னையரைத் தான் எவ்வளவு சுலபத்தில் சந்தோசப்படுத்தி விட முடிகிறது. எல்லாம் அவர்கள் விருப்பப்படி நடந்துவிட்டால் சந்தோசத்தில் மனம் குளிர்ந்துவிடுவார்கள். இல்லையெனில் புலம்பித் தீர்த்து விடுவார்கள். இரண்டு உணர்வுகளையுமே அதீதமாகத் தான் வெளியிடுவார்கள் போல!’
மாலையில் சாப்பிட்ட சிற்றுண்டியே வயிற்றை நிறைத்திருக்க உறங்க ஆயத்தமானான் ராகவர்தன். திருமணத்துக்குச் சம்மதித்திருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்குள் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


