“இன்னைக்குச் செம மழை. ஸ்கூல் பேண்ட்ரில நான் மட்டும் போய் ரோஸ் மில்க் குடிச்சேன். அதுவும் தனியா. நீயும் நானும் சேர்ந்து உக்காந்திருக்குற பெஞ்ச் என்னைச் சோகமா பாக்குற மாதிரி தோணுச்சு அருள். அந்த மழையும் ரோஸ் மில்க்கும் ஒரு மாதிரி ஏஸ்திட்டிக்கா இருந்தாலும் அதை ரசிக்க முடியல. எனக்குப் பக்கத்துல நீ இருக்க வேண்டிய இடத்துல வெற்றிடம் இருக்குறப்ப என்னால எப்பிடி ரசிக்க முடியும்டா?”
–வானதியின் கடிதம்…
காலையுணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் முகிலகவாசிகள்.
“எனக்கு நல்ல அட்வகேட் ஒருத்தரை ஏற்பாடு பண்ணுங்கப்பா.”
வானதி சாப்பிட்டபடியே சொல்லவும், உணவு மேஜையில் அவளோடு காலையுணவில் மும்முரமாகியிருந்த ஜெயசந்திரனும், ஆதித்யனும் அதிர்ந்து குழம்பினார்கள். அவர்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்த கயல்விழியோ செய்வதறியாது திகைத்துப் போனார்.

இவ்வளவு ஏன்? அவளருகே அமர்ந்திருந்த அருள்மொழியே அவளை ஏறிட்டுப் பார்த்தான். அனைவரின் பார்வையும் தன் மீது குவிவதை உணர்ந்தவள் புன்னகைத்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க? இவன் என்னைக் கோர்ட்டுக்கு இழுத்திருக்கான்ல. என் சார்பா வாதாட டேலண்டான நேர்மையான அட்வகேட் ஒருத்தர் வேணும்” என்றாள் கமுக்கமாகச் சிரித்தபடி.
ஆதித்யன் அவளை முறைத்தான்.
“நீ எதுக்குத் தேவையில்லாத வேலை எல்லாம் செய்யுற? உன்னால எப்பவும் அப்பாக்குத் தலைவலிதான்.”
“என்னாலயாச்சும் தலைவலிதான். உன்னால முதுகுவலி. புரியல? நீ அப்பா முதுகுல வேதாளம் மாதிரி தொத்திக்கிட்டிருக்க. நீ எப்ப இறங்குவனு அவரும் காத்திருக்கார். அப்பிடித்தானேப்பா?”
வானதி ஆதித்யன் காலை வாரிவிட அவன் முறைத்தான். அவர்களது உரையாடலைக் கண்ணுற்ற அருள்மொழிக்கு வானதியின் வாய்த்துடுக்கில் சிரிப்பு வந்தாலும், பிள்ளைகளின் இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்தபடி உணவருந்தும் ஜெயசந்திரனின் முகத்தில் தெரியும் பூரிப்பில் வெறுப்புதான் மிஞ்சியது.
ஜெயசந்திரன் தொண்டையைச் செருமியவர், “அந்தக் கேஸ், கோர்ட் எல்லாம் உங்களோட தொழில் ரீதியான விவகாரம். அதைக் குடும்பத்துக்குள்ள கொண்டு வராத வானும்மா. அது உங்க உறவுக்கு நல்லதில்ல. இன்னொன்னு, மருமகன் உன்னை விட மூணு வயசு பெரியவர். மரியாதையா பேசணும்” என்றார் அழுத்தமாய்.
வானதி தன்னருகே அமர்ந்திருந்தவனை உதட்டை ஒரு பக்கம் சுழித்துப் பார்த்தாள். “உன்னை வாங்கனு போங்கனு கூப்பிடணுமா?” என்று இரகசியமாக வினவினாள்.
“உனக்கு வராத விசயத்தை ட்ரை பண்ணாத” என்றான் அருள்மொழி அடக்கப்பட்ட சிரிப்போடு.
இருவரும் அவரவர் அலுவலகங்களுக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். அங்கே போனதும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனக்கு வந்த நோட்டீஸை விஷ்ணுபிரகாஷிடம் கொடுத்தாள் வானதி.
“இந்தக் கேஸ்ல ஜஸ்டிஸ் டுடே அட்வகேட் கூட என்னோட அட்வகேட்டும் சேர்ந்து அப்பியர் ஆனா பெஸ்டா இருக்கும்னு நினைக்குறேன் சீஃப்.”
“ஆர் யூ ஷ்யூர்?”
“இதுதான் ஃபைனல் ஹியரிங்கா இருக்கும், ஜட்ஜ்மெண்டும் ஃபைனல் ஹியரிங்குல வந்துடும்னு அருள் கான்பிடென்டா சொல்லுறான். அவனோட கான்பிடன்ஸ் எனக்கு பி.பிய இன்கிரீஸ் பண்ணுது சீஃப்.”
வானதி படபடவெனப் பொரிய அங்கே இருந்த ஸ்ராவணியும் யசோதராவும் சிரித்தார்கள்.
“ப்ளீஸ்! சிரிக்காதிங்க. நம்ம கொள்கைக்கும் நம்ம லைஃப் பார்ட்னரோட கொள்கைக்கும் சுத்தமா ஒத்துப்போகலனா என்ன வாழ்க்கை” எனச் சலித்துக்கொண்டாள் வானதி.
விஷ்ணு பிரகாஷுக்கும் அவளது சலிப்பில் சிரிப்புதான் வந்தது.
“அவங்க அப்பிடி இருந்தாதான் லைஃப் சுவாரசியமா இருக்கும் வானதி. வா! பேசலாம்” என இருவரும் அவளைத் தனியே அழைத்துப் போனார்கள்.
ஸ்ராவணி மூவருக்கும் காபியோடு வந்து அமர வானதி புலம்பாதக் குறை.
“எனக்கு இந்தக் கல்யாணமே அதிர்ச்சி. அருள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். பட் லவ், அந்த மாதிரி ஃபீல் எல்லாம் கிடையாது. அவனுக்கும் எனக்குமான பிரண்ட்ஷிப் அம்மாக்கும் குழந்தைக்கும் இடையில இருக்குற அன்புக்கு ஈக்குவலானது. அவனுக்கு என்னை ஞாபகம் இல்லனு சொன்னதை ஏத்துக்குறதுக்கே எனக்கு ரொம்ப வருஷம் ஆச்சு. எப்பிடியாச்சும் ஞாபகம் வந்துடாதானு இந்த டிஜிட்டல் வேர்ல்டுலயும் அவனுக்கு லெட்டர் எழுதித் தள்ளிருக்கேன் பன்னிரண்டு வருஷமா. ஆனா அவன் முன்ன மாதிரி இல்ல. நிறைய பொய், நிறைய மேனிபுலேஷன்னு ஆளே மாறிட்டான். அதை என்னால சீரணிக்கவே முடியல. எனக்கு வந்த மெயிலை எனக்கே தெரியாம செக் பண்ணிருக்கான் ராஸ்கல். கூடவே ஒரு எதிரியை வச்சுக்கிட்டு வாழுற மாதிரி இருக்கு.”
வாய் விட்டுப் புலம்பியவளின் தோளில் தட்டிக் கொடுத்தாள் யசோதரா.
“கொஞ்சம் கஷ்டம்தான். நாங்களும் இந்த மாதிரி சிச்சுவேஷனைக் கடந்துதான் இன்னைக்குக் குழந்தையும் குட்டியுமா இருக்குறோம்.”

“அதான் எப்பிடி? நம்ம கிழக்குத் திசைல போனா அவங்க மேற்குத் திசைல போறாங்க. சிந்தனையும் எண்ணங்களும் சந்திக்காத ரெண்டு பேர் எப்பிடி மனசார வாழ முடியும்? ஐ திங்க் திஸ் கொயட் இம்பாசிபிள். ஒன்னு சொல்லட்டுமா? நேத்து நைட் அவனுக்கு என் மேல அட்ராக்சன் இருக்குனு உருட்டுறான். இது உண்மையா உருட்டாங்கிறது வேற கதை. ஆனா அட்ராக்சன், லவ் இதெல்லாம் நினைச்சாலே சைக்!”
வானதி முகத்தை அஷ்டகோணலாக்கவும் அவளது புஜத்தில் அடித்தாள் ஸ்ராவணி. “
அதென்ன மூஞ்சி அப்பிடி போகுது? லவ் இஸ் அன் அமேஸிங் ஃபீல். எதுலயும் நம்ம கூட ஒத்துப்போகாத ஒரு ஆண் நம்ம மேல காதல்ல விழுறதெல்லாம் ஒரு மாதிரி ஜிவ் பீலிங். உன்னால இப்போதைக்கு அந்தக் காதலைப் பிரதிபலிக்க முடியலனாலும் அதை வேல்யூ பண்ணக் கத்துக்க. இந்தக்காலத்துல நிறைய ஆண்களுக்குப் பொண்டாட்டி மேல இருக்குற காதலை வெளிக்காட்டவே தெரியுறதில்ல. அந்த வகைல வீ ஆர் லக்கி” என்றாள் அவள் தோள்களைக் குலுக்கியவளாய்.
“வீ ஆரா? என்னை உங்க கேங்குல சேக்காதிங்கப்பா. நான் அப்பாவி” என்று பரிதாபமாய்ச் சொன்னாள் வானதி.
யசோதரா நமட்டுச்சிரிப்போடு அவளது காபி கோப்பையில் தனது கோப்பையை இடித்தாள்.
“இந்த மாதிரி அப்பாவினு சொன்ன நிறைய பேர் கல்யாணம் ஆன அடுத்த மாசமே பிரக்னன்சி கிட் வாங்குனதைப் பாத்துட்டோம் நாங்க.”
“அவ்வா! என்னெல்லாம் பேசுறீங்க?” வாயிலடித்துக்கொண்டாள் வானதி. இருவரும் சிரித்தார்கள். வானதியும் கையில் இருந்த காபியைக் குடித்தாள்.
“அருளோட லவ் எனக்கு மேனிபுலேஷன் கேம் மாதிரி தோணுது. ஆல்ரெடி மெமரி லாஸ் கேம்லயே நான் ரொம்ப அடிபட்டுட்டேன். மறுபடி இன்னொரு தடவை என்னால ஏமாற்றத்தைத் தாங்கிக்க முடியாதுக்கா. அவனோட எனக்கு இருக்குற பாண்டிங்னு வந்துட்டா நான் ரொம்ப பலவீனமா முட்டாளா ஆகிடுறேன். ஒரு உறவோ உணர்வோ உண்மையா இருந்தா என்னால அதுல தீவிரமா இருக்க முடியும். அதுவும் சதியாங்கிற சந்தேகம் வர்றப்ப என்னால அந்த உறவை நல்லவிதமா அணுகவே முடியறதில்ல. பட் நீங்க சொன்ன ஒரு பாயிண்டை நான் ஒத்துக்குறேன். அருளோட லவ்வை நான் ஏத்துக்கலனாலும் அதை நான் மதிக்கணும். இனிமே மதிக்க ட்ரை பண்ணுறேன். ஓகே?”
“குட் கேர்ள்” இருவரும் ஒரே குரலில் பாராட்டினார்கள் வானதியை.
அதே நேரத்தில் அருள்மொழியின் அலுவலகத்தின் முன்னே பெரிய பெயர்ப்பலகை மாட்டப்பட்டது.
AXON LEGAL CHAMBERS (In Strategic Partnership with Meridian Legal Associates, London)

அருள்மொழிக்கு பார் கவுன்சில் தேர்வுக்கு இன்னும் ஐந்து மாதம் இருக்கிறது. அதற்கிடையே இந்தியாவில் தனது அலுவலகத்தைத் திறப்பதற்கான முன்னெடுப்புகளைச் செய்து முடித்திருந்தான். இந்தியாவில் வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனமாக (Limited Liability Partnership) தனது நிறுவனத்தைப் பதிவு செய்துவிட்டான். இந்த நிறுவனம் லண்டனில் அவன் பணியாற்றும் மெரீடியன் லீகல் அசோசியேட்சுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டிருந்தது.
மெரீடியன் லீகல் அசோசியேட்சுக்கு வரும் இந்தியா சார்ந்த வழக்குகளை இனி அருள்மொழியின் ஆக்சான் லீகல் சேம்பர்ஸ் கவனிக்கலாம் என்பதே ஒப்பந்தம்.
அதற்கான முழு வேலைகளும் முடிவடைந்து பெயர்ப்பலகையும் வைத்தாயிற்று! அடுத்து தனக்காகச் சில பணியாட்களை நியமிக்க நேர்க்காணல் தொடர்பான விளம்பரம் ஒன்றை தனது தனிப்பட்ட வலைதளத்தில் பதிவேற்றிவிட்டு நிம்மதியாய் தனது சுழல் நாற்காலியில் சாய்ந்தான்.
வேலை ஒரு பக்கம், திருமண வாழ்க்கை ஒரு பக்கம், அவனுடைய நீண்டகாலத் திட்டம் ஒரு பக்கமென மூன்று விதமான மனரீதியான சுமைகள் அவனுக்குள்!
சரியாக அந்நேரத்தில் தர்மலிங்கம் அவனது மொபைலுக்கு அழைத்தார். நியூசிலாந்திலிருந்து அவரும் மெகன் ப்ரவுனும் லண்டனுக்குத் திரும்பிவிட்டத் தகவலைக் கூறியவர், அருள்மொழியின் திருமண புகைப்படங்களைப் பார்த்து ரசித்ததையும் குறிப்பிட்டார்.
“உன் ஆன்ட்டி நீயும் வானதியும் இங்க வரணும்னு ஆசைப்படுறா அருள். ஹனிமூன் ட்ரிப் ப்ளான் பண்ணிட்டியா? பண்ணலனா இங்க வந்துடு.” அருள்மொழிக்கும் இது நல்ல யோசனையாகத் தோன்றியது. உடனே சம்மதித்தான்.
“என்னப்பா வானதி கிட்ட ஒரு வார்த்தை கேக்கனும்ல?” தர்மலிங்கம் கேலி செய்ய,

“நான் சொன்னா அவ ஒத்துப்பா மாமா. ஆனா உடனே வரமுடியாது. டெல்லில கேஸ் நடக்குதுல்ல. அடுத்த ஹியரிங்குக்கு நானும் வானதியும் டெல்லி கிளம்பணும்.”
“ஹூம்! புருஷனும் பொண்டாட்டியும் எதிர் எதிரா நின்னா வாழ்க்கை என்னாகுறது?” பெருமூச்சு விட்டார் தர்மலிங்கம்.
அன்றைய தினம் அருள்மொழிக்கு வேலை என்னவோ மும்முரமாகவே நகர்ந்தது.
இரவில் அவன் வீடு திரும்பியபோது வானதி அவளது அட்வகேட்டிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் வேகமாகப் பால்கனிக்கு ஓடிப்போய்க் கண்ணாடி கதவை அடைத்துக்கொண்டாள்.
கண்ணாடிக்கதவின் மறுபக்கம் நின்று ‘என்ன இது?’ என்று இரு கைகளையும் விரித்து அவன் சைகையால் கேட்டதற்கு ‘நீ ஒட்டு கேட்பாய்’ என்று சைகையால் பதில் சொன்னாள் அவள். அவன் நகர அவளும் அட்வகேட்டிடம் பேசி முடித்தாள்.

“இந்தக் கேஸ்ல தோக்குறேனோ ஜெயிக்கிறேனோ, நான் திரட்டுன எல்லா ஆதாரத்தையும் கோர்ட்ல சப்மிட் பண்ணிடணும்ங்கிறதுல நான் உறுதியா இருக்குறேன்” இதுதான் அவரிடம் அவள் சொன்னது.
மெதுவாய் கதவைத் திறந்து உள்ளே வந்தவள் அவன் உடை மாற்றியிருக்கவும் முந்தைய தினம் நடந்ததைக் குறிப்பு காட்டி பேச்சை ஆரம்பித்தாள்.
“நேத்து நீ என்னமோ லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொன்னியே! அது உண்மையா?” கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு அவள் கேட்டாள் அமர்த்தலான தொனியில்.
“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இல்ல. அது மாதிரினு சொன்னேன். நீதான் சீச்சீனுட்டு போனியே. இப்ப என்ன?”
“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்!” என்றவள் யோசனையோடு, “நீ லண்டன்ல இருந்திருக்க. ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் கூட ஏன் இல்ல?” என்று விசாரிக்க,
“எனக்குக் கேர்ள் ஃப்ரெண்ட் வேணும்னு தோணுனது இல்ல. மே பி உன்னோட சாபமா கூட இருக்கலாம். உன்கிட்ட பேசாம இருந்ததுக்கு எனக்கு லண்டன்ல ஃப்ரெண்ட்ஸே அமையக்கூடாதுனு ஒரு தடவை கூடவா நீ என்னைச் சபிச்சிருக்க மாட்ட?” என்றான் அவன் விஷமப்பார்வையோடு.

“பாயிண்ட்! நிறைய தடவை சபிச்சிருக்கேன். எனக்குக் கரிநாக்கு. அது கூட உனக்குப் பலிச்சிருக்கலாம். சரி அதை விடு! ஒரு பொண்ணு கூடவா உன்னை அட்ராக்ட் பண்ணல?”
அருள்மொழி அவளைக் குறுகுறுவெனப் பார்த்தான்.
“எனக்குச் சைக்கியாட்ரிக் ட்ரீட்மெண்ட் குடுத்த ஆன்ட்டி மெகன் மேல அட்ராக்சன் உண்டு. உடனே தப்பா யோசிக்காத. அவங்க கண்கள் ரொம்ப அழகா இருக்கும். பிரின்சஸ் டயானா மாதிரி அவ்ளோ அழகு அவங்க.”
“தர்மலிங்கம் சித்தப்பா ஒய்ப் தானே அவங்க?”
“ம்ம். மாமா அவங்க மேல காதல்ல விழுந்ததுல ஆச்சரியமே இல்ல. அந்த மாதிரி பொண்ணை யாருக்குத்தான் பிடிக்கும்.”
“எந்த மாதிரி பொண்ணு?” கொஞ்சம் கடுகடுப்பு அவளது குரலில்.
“என்ன பிரச்சனைனு அன்பா கேக்கணும். குரல்ல மட்டுமில்ல, பேச்சுல கூட இதம் இருக்கணும். அவங்க கண்ணை நாம பாத்தாலே மனசுல இருக்குற எல்லாத்தையும் அப்பிடியே உருக்கமா சொல்லிடணும்னு தோணனும். லைக் ஒரு அம்மா கிட்ட சொல்லுற மாதிரி.”
“யூ மீன் அம்மா மாதிரி பொண்ணு கிடைச்சா பசங்களுக்குப் பிடிக்கும்… அதானே?”
“ஆமா! அதான்.” வானதி மீண்டும் முகத்தைச் சுளித்தாள்.
“சீ! க்ரிஞ்ச் ப்ரோ மேக்ஸ். அது எப்பிடி உங்க அம்மா மாதிரி எங்க இருந்தோ வர்ற ஒரு பொண்ணு இருக்க முடியும்? உங்கம்மாவ மாதிரி நீதான் இருக்கணும். இல்லனா உனக்குத் தங்கச்சி அக்கானு யாராச்சும் இருந்தா அவங்க இருக்கணும். ஒய்ப் எப்பிடி அம்மா மாதிரி இருக்க முடியும்? இந்த எதிர்பார்ப்பே லாஜிக் இல்லாத ஒன்னுனு தோணல? ஆனா ஒன்னு, பசங்க என்னதான் படிச்சாலும் பாரிஸ்டராவே ஆனாலும் இந்த விசயத்துல பூமரா தான் இருப்பிங்கல்ல? இங்க பாரு! நானெல்லாம் கொஞ்சம் ஸ்வீட்டான ஆளு தான். ஆனா நீ எதிர்பாக்குற மாதிரி கண்ணுல கனிவு, பேச்சுல இதம், சிரிப்புல சங்கீதம்னு இருக்குற டைப் இல்ல. என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்க சைக்காலஜிக்கலா தயாராகு. நீதான் என்னை பிடிவாதமா கல்யாணம் பண்ணிருக்க. புரியுதா?”
விரல் நீட்டி எச்சரிக்கும் விதமாய்க் கேட்டவளிடம் நமட்டுச்சிரிப்போடு தலையாட்டினான் அருள்மொழி. விளையாட்டுப் பேச்சை ஓரங்கட்டியவள்,
“எனக்குச் சில விசயங்களை நினைச்சா கில்டியா பீல் ஆகும். உனக்கு எப்பிடி அஞ்சு பேர் செத்துப்போனதை நினைச்சு துளியூண்டு கூட கில்டியா பீல் ஆகல? நீ எங்க கூடவே தானே இருந்த? அப்புறம் எப்பிடி அங்க அஞ்சு பேர் கன் ஷாட்ல செத்தாங்க?” என்று விசாரிக்க,
“இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசத்தை என்கிட்டயே ட்ரை பண்ணுறியா? ஒரு வார்த்தை கூட உன்னால என்கிட்ட இருந்து வாங்க முடியாது. போதைல கூட உளறமாட்டேன்” என அமர்த்தலாகச் சொன்னவன், “செத்த அஞ்சு பேரும் அந்த மாதிரியான கொடூரமான மரணத்துக்குத் தகுதியானவங்கதான். எனக்குக் கில்டியா பீல் ஆகல” என்று தோள்களைக் குலுக்கினான்.
“அதிசயப்பிறவிதான்! ஆனா ஒன்னு, இன்னைக்கு நாம பெருசா அடிச்சிக்காம, ஒருத்தரை ஒருத்தர் கேஸ்லைட் பண்ணாம பேசிக்கிட்டோம். இது கூட நல்லா தான் இருக்கு” என்று சொன்னவள் ஜெயந்தனைத் தேடிப் போய்விட அருள்மொழிக்கும் அதே உணர்வுதான்.
கோபம், அழுகை, ஆதங்கம் இதெல்லாம் கடந்து இந்தச் சில நாட்களில் தங்களுக்குள் இயல்பாய் இதமாய் நடந்தேறும் உரையாடல்கள் அவனுக்கும் சுவாரசியமாய்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

