“உன் டிபன் பாக்ஸ்ல நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன் தேவா. நீ இன்னும் ஒரு தோசை சாப்பிடு”
மருமகளுக்கு மதியவுணவை டிபன் பாக்சில் எடுத்து வைத்தபடி கூறினார் கனகவல்லி.
சாதம், கதம்பச் சாம்பார், சிறுகிழங்கு பொறியல் என டிபன் பாக்ஸ் அடுக்குகளில் வைத்துப் பூட்டியவர் “தயிர் மட்டும் கடையில வாங்கிக்க. ஊறுகா இந்தச் சின்ன டப்பால வச்சிருக்கேன்” என்று சொல்ல
“எதுக்கு அத்தை எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்யுறிங்க? ஒரே சாதமா வச்சிருக்கலாமே?” என்றாள் அவரது மருமகள்.
“ஒரே சாதத்துல என்ன சத்து இருக்கு? இப்ப உனக்காகச் சமைக்குறேன்கிற பேருல காலை சாப்பாட்டையும் மதியச் சாப்பாட்டையும் செஞ்சிட்டேன். இனிமே எனக்கும் வேலை இல்ல. இந்தச் செடிகளுக்குத் தண்ணி பாய்ச்சிட்டுக் குளிச்சேன்னா அக்கடானு சீரியல் பாத்துட்டுக் கண்ணசர வேண்டியதுதான்”

பேசிக்கொண்டே நல்லெண்ணெய் மணக்க மணக்க அடுத்த தோசையை அவளது தட்டில் போட்டார் கனகவல்லி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அவர் மதியம் ஆறிப்போன சாப்பாடு சாப்பிடணும்ல”
ஓரக்கண்ணால் பார்த்தபடி தேவயானி சொல்லவும் அவர் நமட்டுச்சிரிப்பை விழுங்கிக்கொண்டார்.
“அவனுக்குச் சாப்பாடு இருந்தா போதும். ஆறிடுச்சு, சூடா இல்லனுலாம் சொல்லமாட்டான்”
மருமகளுக்கு மகன் மீதிருக்கும் அக்கறை அவரது மனதைத் தொட்டது.
பேசியபடியே சாப்பிட்டு முடித்தவள் கொஞ்சம் பெரிய கைப்பைக்குள் சாப்பாடு கட்டிய டிபன் பாக்சை வைத்துக்கொண்டாள். சமையலறையில் கனகவல்லி ஒரு முருகன் புகைப்படம் வைத்திருப்பார். அதன் முன்னே திருநீற்று மரவை ஒன்று இருக்கும். முருகனைக் கும்பிட்டுவிட்டுத் திருநீறை நெற்றியில் இருக்கும் பொட்டின் மேலே சிறு கீற்றாகப் பூசிக்கொண்டபோதே “தேவா கிளம்பலாமா?” எனக் கேட்டவாறு சட்டையின் ஸ்லீவை மடித்துக்கொண்டு வந்தான் சரவணன்.
“போகலாம்ங்க”
கூந்தலைக் கொண்டையாகக் கட்டி நெற்றி வகிட்டில் குங்குமம் மின்ன, வேலைக்குரிய சீருடையில் அழகோவியமாக நின்ற மனைவியை ரசனைப்பார்வை பார்த்தபடி அன்னையிடம் விடைபெற்றான் சரவணன்.
அவனது பைக்கில் இருவரும் கிளம்பியதும் அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டார் கனகவல்லி. மனம் என்னவோ அவர்களின் ஒற்றுமை மீது யார் கண்ணும் பட்டுவிடக்கூடாதென்று அனைத்து தெய்வங்களிடமும் வேண்டுதல் வைத்துக்கொண்டிருந்தது.
மகனும் மருமகளும் இரண்டு வாரங்கள் கொடைக்கானலில் தேனிலவுக்குப் போய்விட்டு வந்தததுமே அவர்களுக்குத் திருஷ்டி கழித்திருந்தார் அவர்.
“எந்தக் கடனும் இல்லாம வீட்டைக் கட்டி, கல்யாணமும் முடிச்சிட்டான்னு உன் மேல ஊர்க்காரவியளுக்கு ஒரு கண்ணு. எல்லா கண்ணும் நல்ல கண்ணா இருக்கணும்னு அவசியமில்லையே. அதான் திருஷ்டி கழிச்சேன். தினமும் வீட்டுக்கு வந்ததும் மறக்காம சூடம் சுத்தி வச்சிடு தேவா. உனக்கும் சேர்த்துதான்” என்று சொல்லியிருந்தார்.
அவரது மருமகளும் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மாமியார் சொல்லிவிட்டதால் தினமும் இரவு தனக்கும் கணவனுக்கும் கற்பூரம் சுற்றி திருஷ்டி கழித்துக்கொண்டாள்.
இருவரும் பைக்கில் செல்லும்போதே வாடிக்கையாளர் ஒருவர் சரவணனின் மொபைலில் அழைத்தார். தேவயானியிடம் அழைப்பை ஏற்குமாறு கூறிவிட்டுச் சாலையில் கவனமானான் சரவணன்.
“சொல்லுங்க” என்றாள் அவள் அழைப்பை ஏற்றுவிட்டு.
“எங்க வீட்டு கிரைண்டர்ல ட்ரம் சுத்தவே மாட்டிக்குது. அண்ணனைக் கொஞ்சம் வீடு வரைக்கும் வந்து பாக்கச் சொல்லுறிங்களா?” என்று எதிர்முனையில் ஒரு வாலிபக்குரல் கேட்டது.
“அவர் வீட்டுக்குலாம் வரமாட்டார். நீங்க கடைக்குக் கொண்டு வந்திடுங்களேன்”

“இது பழைய லெட்சுமி கிரைண்டர். தூக்கிட்டு வர்றது சிரமம். ஆட்டோல கொண்டு வந்தா அதுக்குத் தனியா காசு கேப்பாங்க”
“உங்களை மாதிரி நிறைய பேர் குடுத்த மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் அவரோட கடைல ரிப்பேர் பண்ணுறதுக்காகக் கிடக்குதுங்க. அதுக்காக ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய் அவரால பாக்க முடியுமா? சிரமம் பாக்காம கடைக்குக் கொண்டு வந்துடுங்க”
“விக்னேஷ் வீட்டுக்குனு சொன்னா அண்ணன் வருவாரு”
‘விக்னேஷ்’ என்று அந்த ஆண்குரல் சொன்னதும் தேவயானியின் மூளை விழித்துக்கொண்டது. விக்னேஷ் அந்தப் பவித்ராவின் அண்ணன் பெயராயிற்றே! ஒருவேளை அவன்தான் அழைக்கிறானோ?”
“நீங்க எங்க இருந்து போன் பண்ணுறிங்க?”
“வி.கோவில்பத்து”
சந்தேகமே இல்லை, பேசுபவன் பவித்ராவின் தமையனே! தேவயானிக்குப் பற்றிகொண்டு வந்தது. ஏன் இந்த மகாராஜா ஆட்டோவுக்குக் கூலி கொடுத்து கடைக்குக் கொண்டு வந்தால் இவரது படைபரிவாரங்கள் கோபித்துக்கொள்ளுமோ!
கோபத்தை அடக்கிக்கொண்டு “கோவில்பத்துக்கு எல்லாம் அவர் வரமாட்டார்ங்க. வேணும்னா கடைக்குக் கொண்டு வாங்க” என்று கறாராகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். மனம் ஆழிப்பேரலை கண்ட கடலாகப் பொங்கி சீற ஆரம்பித்தது.
“யார் கால் பண்ணுனது?” சரவணன் பைக்கை அவனது கடைக்குச் செல்லும் பாதையின் பக்கம் திருப்பியபடி கேட்டான்.
“எல்லாம் உங்க எக்ஸோட அண்ணன்தான்”
சட்டெனப் ப்ரேக் போட்டுப் பைக்கை நிறுத்தினான். மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
“விக்னேஷா?”
“ஆமா. அவங்க வீட்டு கிரைண்டர் ட்ரம் ஓடலையாம். வீட்டுக்கு வந்து பாக்க முடியுமானு கேட்டார். கடைக்குக் கொண்டு வாங்கனு சொல்லிட்டேன்”
கடுகடு முகத்தோடு மனைவி சொல்லவும் அமைதியாக அவளையே பார்த்தான்.
“நீ ஏன் இவ்ளோ சிடுசிடுனு இருக்குற?”
“புருசனோட முன்னாள் காதலியோட அண்ணன் கிட்ட பேசுறப்ப சிடுசிடுனு இருக்காம சிம்லால இருக்குற மாதிரியா இருக்கணும்?”
அவனிடமும் வெடித்தாள் தேவயானி.
“ப்ச்! கோவப்படாத தேவா. என் கடைக்கு வர்ற எத்தனையோ கஸ்டமர்ல விக்னேஷும் ஒருத்தன்”
“அதைத்தான் நானும் சொன்னேன். என் புருசன் வீடு வீடா வந்து பொருளை ரிப்பேர் பாக்குறவர் இல்ல. வேணும்னா உங்க கிரைண்டரை எங்க கடைக்குக் கொண்டு வாங்கனு சொல்லிட்டேன்”
அவள் மூச்சு வாங்க நிறுத்தினாள். சரவணன் அவளது ஹேண்ட்பேக்கைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.
“நீங்க அவங்க வீட்டுக்குப் போகமாட்டிங்கல்ல?” தண்ணீரைக் குடித்தபடி கேட்டாள் தேவயானி.
“கொஞ்சம் பெரிய கிரைண்டர் அது. அவங்கம்மா மாவு அரைக்குற பிசினஸ் பாக்குறாங்க. கிரைண்டர் ஓடலனா ஒரு நாள் வருமானம் போயிடும்” எனப் பொறுமையாய் சரவணன் விளக்கமளிக்க
“அது அவங்க பாடு. அதுக்கு நீங்க ஏன் அவங்க வீட்டுப்படி ஏறியிறங்கணும்?” எனக் கடுகடுத்தாள் தேவயானி. கூடவே சரவணன் விக்னேஷின் வீட்டுப்பக்கமே போகக்கூடாதென சத்தியம் வாங்காதக் குறை.
“நான் போகமாட்டேன் தேவா” என்று அவன் சொன்னதும்தான் அவனிடமிருந்து விடைபெற்றாள் தேவயானி.
மனைவி ரங்கநல்லூர் புறநகர் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகநடை போடுவதைப் பார்த்தபடி பைக்கைக் கடையை நோக்கிச் செலுத்தினான் சரவணன். தேவயானி சொல்லாவிட்டால் கூட அவன் விக்னேஷின் வீட்டுப்படி ஏறியிருக்கமாட்டான்.
அவனால் மறக்க முடியாத அரும்பெரும் காரியங்களைச் செய்தவர் விக்னேஷ் – பவித்ராவின் அன்னையான முல்லை.
“எங்க வீட்டுப்பொண்ணு ஒன்னும் அவனைக் காதலிக்கல. அந்தச் சரவணன் பய என் மவ பின்னாடி அலைஞ்சிருக்கான். அவன் கடை வழியா அவ கோச்சிங் கிளாசுக்குப் போறப்ப வழிமறிச்சு என்னைக் காதலிக்கணும்னு மிரட்டிருக்கான். இப்ப அவனுக்குப் பயந்துதான் என் மவளை எங்க அக்கா வீட்டுல கொண்டு போய் விட்டிருக்கேன்” என்று காண்போரிடமெல்லாம் பொய்ச்செய்தியைப் பரப்பியவர் அந்தப் பெண்மணி.
இதெல்லாம் நடந்தது அவர்களின் காதல் முதல் முறை முறிந்தபோது. முதல் முறையா என நீங்கள் குழம்பலாம். ஆம்! தன்னுடனானக் காதலைக் குடும்பத்துக்குத் தெரியாமல் மறைத்து குடும்பத்தினரிடம் என்னவோ சரவணன் மட்டுமே தன்னைச் சுற்றி சுற்றி வந்தது போல கதை கட்டிவிட்ட பவித்ராவை ‘விட்டது சனி’ எனச் சரவணன் மறந்துவிடவில்லை.
அவளது பெற்றோரிடம் தாங்கள் இருவரும் காதலித்தது, திருச்செந்தூர் கோவில், சாய்பாபா கோவில், திரையரங்கு என்று தன்னோடு அவள் சுற்றியது எல்லாவாற்றையும் புகைப்படம் எடுத்து வைத்திருந்ததைக் காட்டித் தன் மேல் மட்டும் குற்றமில்லை என நிரூபித்த பிற்பாடே சரவணன் பவித்ராவை விட்டு ஒதுங்கினான். இதுதான் முதல் முறை அவர்களில் காதல் முறிந்த வரலாறு! அந்நேரத்தில் வீடு கட்டும் வேலையும் ஜரூராகப் போய்க்கொண்டிருந்தது.
சரியாக ஏழாவது மாதத்தில் ரங்கநல்லூர் சிவன் கோவிலில் தன்னைச் சந்திக்க வருமாறு தனது ஒன்றுவிட்ட தங்கை மூலம் சரவணனுக்குத் தூது அனுப்பினாள் பவித்ரா, அவனுமே விட்ட குறை தொட்ட குறையாக இருந்த காதலால் உந்தப்பட்டு அங்கே போனான். போனவனிடம் கண்ணீர் விட்டுக் கதறினாள் பவித்ரா.

“எங்கம்மா அப்பாக்குக் காதலிக்குறது பிடிக்காதுனுதான் முழுப்பழியையும் உங்க மேல போட்டேன்ங்க. மத்தபடி நான் இப்பவும் உங்களைக் காதலிக்குறேன். நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது. எங்க வீட்டுல அப்ப எனக்கு என் அத்தை மகனைக் கல்யாணம் பண்ணுற ஐடியால இருந்தாங்க. அந்தச் சம்பந்தம் முறிஞ்சிடுமோனு பயந்து அம்மா உங்களைப் பத்தி எல்லார் கிட்டவும் தப்பா சொல்லிட்டாங்க. அவங்க சொன்னதை நினைச்சு நான் மனசுக்குள்ள எவ்ளோ அழுதேன் தெரியுமா?”
அழுது அழுதே சரவணன் மனதைக் கலைத்தாள் பவித்ரா. கூடவே ரத்தினவேலுவைத் தனது தந்தை சிதம்பரத்திடம் பெண் கேட்கச் சொல்லுமாறு சரவணனிடம் வேண்டியும் கொண்டாள்.
“போன தடவை மாதிரி இந்தத் தடவையும் நீ பல்டி அடிச்சிட்டா எனக்குத்தான் அசிங்கம்” என்றவனைக் கண்ணீரால் கரைத்தாள்.
சரவணனும் மனம் மாறினான். இருவரும் மீண்டும் காதலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். ரத்தினவேலு மூலம் சிதம்பரத்திடம் பவித்ராவைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு பெண் கேட்கவும் செய்தான்.
“இப்ப குடும்பத்துக்குள்ள பங்காளி சண்டை போவுது ரத்தினம் அண்ணே. இதெல்லாம் முடியட்டும். நம்ம ஒன்னா உக்காந்து பேசுவோம்” என்று சிதம்பரமும் சொல்லிவிட்டார்.
காதல் பயிரை இருவரும் வளர்த்துக்கொண்டார்கள். மீண்டும் காதல் வானில் சிறகடித்தார்கள். தூத்துக்குடி கடற்கரை, பாபநாசம் அருவி, மணிமுத்தாறு அணைக்கட்டு, திருநெல்வேலியின் திரையரங்குகள் என அவர்கள் செல்லாத இடமே இல்லை இரு மாவட்டங்களிலும்.
சூடுபட்டப் பூனை என்பதால் இம்முறை சரவணன் மிகவும் கட்டுப்பாடாக இருந்தான். கூடவே பவித்ராவைக் கண்காணிக்கவும் செய்தான். தன்னை விட்டு அத்தை மகனை மணக்கச் சம்மதித்த விவகாரம் அவன் மனதைத் தாக்கியிருந்ததால் அவளை முழுவதுமாக நம்ப முடியாமல் அவள் எங்கே போகிறாள், யாரைச் சந்திக்கிறாள் என்பதை எல்லாம் கேட்டு வைப்பான்.
பவித்ராவுமே அனைத்தையும் அவனிடம் சொல்வாள். இந்த மாதிரி சூழலில்தான் சாய்பாபா கோவிலில் தேவயானியிடம் சரவணன் சொன்ன சம்பவங்கள் அரங்கேறின.
சரவணனைக் காதலிப்பதாகச் சொல்லிக்கொண்டு இன்னொரு வாலிபனோடு இன்ஸ்டாகிராமில் உரையாடுவது, அவனோடு திரையரங்கம், திருநெல்வேலியிலிருக்கும் மால்களுக்குச் செல்வது என பவித்ரா சுற்றித் திரிந்தாள்.
அவனிடம் பேச்சுவார்த்தையையும் குறைத்துக்கொண்டாள். ஒரு நாள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வரை செல்ல வேண்டிய சூழல் வந்தது சரவணனுக்கு.
ஒயரிங் வேலை பற்றிய காண்ட்ராக்ட் ஒன்றை வாங்கிக்கொண்டு புதியபேருந்து நிலையத்துக்குள் வந்தவன் அங்கே பவித்ராவும் இன்னொரு வாலிபனும் சிரித்தபடி திருச்செந்தூர் பேருந்தில் ஏறியதைப் பார்த்தான்.
அவசரமாகத் தனது பைக்கை அங்கிருந்த வாகனத்தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டுப் பேருந்தில் ஏறியவன் இருவரும் திருச்செந்தூர் வந்திறங்கும் வரை அவர்களுக்குத் தெரியாமல் அதே பேருந்தில் பயணித்தான்.
திருச்செந்தூர் கடலில் இருவரும் விளையாடியது, கடற்கரையில் உலாவியது அனைத்தையும் இரு கண்களால் பார்த்தான். அப்போதும் அவளைச் சந்தேகிக்கவில்லை. அது குறித்து பவித்ராவிடம் பேசவும் இல்லை. ஆனால் அவளது தமையன் விக்னேஷ் அவள் சிறப்பு பயிற்சி வகுப்புக்குப் போயிருப்பதாகச் சொல்லவும்தான் வீட்டில் பொய் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள் என்பதே புரிந்தது சரவணனுக்கு.
அதன் பின்னர் அவளைப் பின்தொடர்ந்ததில் அதே வாலிபனோடு திரையரங்கத்தில் ஒன்றாய் அமர்ந்து படம் பார்த்தது, அவன் தோளில் சாய்ந்தது, அவன் பவித்ராவின் கரத்தை எடுத்து முத்தமிட்டது என அனைத்தையும் தனது கண்களால் பார்த்துவிட்டான் சரவணன்.
அன்றைய தினமே ரங்கநல்லூர் சிவன் கோவிலின் குளக்கரையில் வைத்து இனி பவித்ராவுக்கும் தனக்கும் இடையே எந்த உறவுமில்லை என்று சொல்லி இரண்டாம் முறையாகக் காதலை முறித்துக்கொண்டான்.
பவித்ரா அவனைச் ‘சந்தேகப்பிராணி’ எனக் குத்திக்காட்டினாள். ‘குறுகிய மனம் படைத்தவன்’ எனக் குற்றம் சாட்டினாள். தப்பு செய்து மாட்டிக்கொண்டவர்கள் எதிராளி மீதே தவறைத் திருப்புவது வாடிக்கைதானே! ஒரு கட்டத்தில் அவளே செய்த தவறை ஒப்புக்கொண்டாள்.
“ஒரு வாரமா அவர் கூட நான் பழகுறேன். உங்களை மாதிரி இல்ல அவர். நல்ல ஜாப். என் கூட ஜாலியா பேசுனார். அதனால…”

“இந்தத் தடுமாற்றம் நல்லது இல்ல பவித்ரா. இப்பிடி நிலையில்லாத மனசுள்ள உன்னை எப்பிடி என்னால நம்பி வாழ்க்கைய உன் கூட பிணைச்சுக்க முடியும்? உனக்கும் எனக்கும் செட் ஆகாது. இதோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்”
அன்று அவளிடம் சொன்னதோடு விக்னேஷிடமும் பவித்ராவின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றிவிட்டான் சரவணன். அவன் அதை வீட்டில் சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆனது. அப்போதும் சரவணனைக் குற்றம் சாட்டித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள திட்டமிட்டாள்.
தனது நடத்தை மீது சரவணன் பழி சுமத்தி தன்னைக் கழற்றிவிடப் பார்ப்பதாகப் பெற்றோர், தாய் மாமாவிடம் சொல்லி அழுதாள். அவளது தந்தையும் தாய்மாமாவும் ரத்தினவேலுவைத் தனியே சந்தித்து மிரட்டாதக் குறை.
“ஒழுங்கா இருந்த எங்க வீட்டுப் பிள்ளை மனசைக் கலைச்சு விட்டுட்டான். இப்ப நல்லா ஊர் சுத்திட்டுக் கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லுறான். இதுல்லாம் நியாயமா?” சிதம்பரம் கொதித்தார்.
பிரிவோமென நினைத்தவனை மீண்டும் சந்தித்து தன்னைப் பெண் கேட்குமாறு சொன்னதிலிருந்து, சரவணனிடமும் இன்னொரு வாலிபனிடமும் ஒரே நேரத்தில் காதலை வளர்த்தது வரை அனைத்தும் பவித்ராவின் தவறுகள் என்று ரத்தினவேலுவும் அடித்துக் கூறினார்.
அதற்கு சாட்சியாகச் சரவணனின் மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சிதம்பரத்திடம் சாட்சியாகக் காட்டப்பட்டன. இனி தனது மகளிடம் சரவணன் பழக்ககூடாதெனச் சிதம்பரம் கூற, இனி தனது மகனைச் சந்தித்து காதல் நாடகம் ஆடக்கூடாதென அவளைக் கட்டுப்படுத்துமாறு ரத்தினவேலு கண்டித்தார்.
இப்படித்தான் பவித்ராவிடமிருந்து சரவணன் தப்பித்தான். ஆனால் அவனது காதல் கொண்ட மனம் வலித்து மரத்துப் போனது. மனதளவில் அவளை மனைவியாகவே நினைத்தவனுக்கு, வெறும் சுவாரசியத்துக்காகக் காதல் நாடகம் ஆடியவளால் பெண்கள் மீதான நம்பிக்கையும், காதல் மீதான நம்பிக்கையும் உடைந்து போனது.
அதை தேவயானிதான் மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறாள். அவளது பேச்சை மீறுவானா அவன்? கட்டாயம் மீறமாட்டேன் என்று தீர்மானம் எடுத்தவனாகப் பைக்கைக் கடையில் கொண்டு நிறுத்தினான் சரவணன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

