“இன்னும் கொஞ்சம் தொவரன் வச்சுக்கோங்க மாப்பிள்ளை. உங்களுக்குச் சீனியவரைக்கா தொவரன்னா ரொம்ப இஷ்டம்னு மதினி சொன்னாங்க”
காமாட்சி அள்ளி வைத்த தொவரனைச் சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டான் சரவணன்.
“நல்லா இருக்கு அத்தை”

மருமகனின் பாராட்டில் மனம் குளிர்ந்து போனது காமாட்சிக்கு. மகளுக்கும் மருமகனுக்கும் தடபுடலாக மறுவீட்டு விருந்து சமைத்திருந்தார். மகள் மருமகனோடு பெருமாளைத் தரிசனம் செய்ய ஆவலாக இருந்ததால் அசைவம் சமைக்கவில்லை.
மகள் மணமானப் பிறகு முதல் முறை வீட்டுக்கு வருகிறாள் என்பதால் கைலாசநாதன் அன்றைய தினம் வேலைக்குச் செல்லவில்லை. மறுவீடு வந்த பெண் மீண்டும் புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது அவளது வீட்டிலிருந்து பலகாரங்கள் கொடுத்து விடுவது அவர்கள் பக்கத்தில் வழக்கம். அந்தப் பலகாரங்களின் எண்ணிக்கையை வைத்து பெண்ணின் குடும்ப வளத்தைக் கணக்கிடுவார்கள்.
“அவங்க மவ மறுவீட்டுக்கு வந்துட்டுப் போனப்ப நூத்தியெட்டு முறுக்கு, நூத்தியெட்டு லட்டு, நூத்தியெட்டு அதிரசம் குடுத்தாவ. பெரிய இடம் போல”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இம்மாதிரி பேச்சுகளை அந்த வட்டாரத்தில் வழக்கமாகக் கேட்க முடியும். இந்த லட்டு, முறுக்கு, அதிரசம் எண்ணிக்கை குறைந்ததால் புகுந்தவீட்டில் எள்ளி நகையாடப்பட்டப் பெண்கள் ஏராளம். தங்களுடைய மகளைக் குறைத்துப் பேசிவிடக்கூடதெனப் பெற்றவர்கள் பலகாரங்களின் எண்ணிக்கையில் கவனமாக இருப்பார்கள்.
கனகவல்லியும் ரத்தினவேலுவும் அப்படிப்பட்ட நபர்கள் இல்லைதான். ஆனாலும் அவர்களின் உறவினர்களுக்கும் பெருந்தன்மையான மனம் இருக்குமெனச் சொல்ல முடியாதே! எனவே கைலாசநாதன் ரங்கநல்லூரில் இருக்கும் பிரபல பலகாரங்கள் விற்கும் கடையிலிருந்து பெட்டிகளில் பலகாரங்களை வாங்கி வந்திருந்தார். கணவனும் மனைவியும் அதை எண்ணி மீண்டும் அடுக்கி வைத்தார்கள்.
“கைச்சுத்து முறுக்கு ஃப்ரெஷ்சா செய்யச் சொல்லி வாங்குனேன் காமாட்சி. இல்லனா காம்பிப் போன வாடை வந்துடும்ல”
மகள் மீது கைலாசநாதன் வைத்திருந்த பாசத்தை அவரது குரலே காட்டிக்கொடுத்தது. அதை எண்ணி பெட்டியில் வைத்து கயிறால் கட்டிவிட்டு மருமகனிடம் வந்தார் கைலாசநாதன்.
“நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை. சாயங்காலம் எழுந்திருச்சு கோயிலுக்குப் போகலாம்” என்றார்.
“ரெஸ்ட் என்ன மாமா ரெஸ்ட்? எனக்கு நாள் முழுக்க கடைல வேலை பாத்து பழகுனதால பகல்ல தூக்கம் வராது. வாங்க, நம்ம அந்தப் பக்கம் உக்காந்து பேசலாம்” எனத் திண்ணையைக் கைகாட்டினான் சரவணன்.
மூத்தவள் தேம்பாவணியின் கணவனான சேகரன் இப்படி இலகுவாகப் பேசும் இரகமில்லை. திருமணமாகி அத்தனை ஆண்டுகள் ஆகியுமே இப்போது வீட்டுக்கு வந்தால் கூட மாப்பிள்ளை முறுக்கு காட்டுவான். மருமகன் என்றால் கடவுளின் அவதாரம் என்ற மமதை அவனுக்கு.
சரவணன் முன்பு போல இப்போதும் இயல்பாக, சகஜமாகப் பேசியதில் கைலாசநாதனுக்கு மனம் நிறைந்து போனது.
“அடுத்த வாரம் காயல்பட்டினத்துல ஒரு வீட்டுக்கு வயரிங் பண்ணனும்னு கேட்டிருக்காங்க மாமா. இன்னும் டைல்ஸ் பதிக்கல. சரியான ஆள் கிடைக்கலனு காண்ட்ராக்டர் சொன்னார். நீங்க பேசிப் பாக்குறிங்களா? நம்பர் தரட்டுமா?”
இப்படியாகத் தொழில்ரீதியான பேச்சுவார்த்தை கொஞ்சம்!
“தேவாக்கு இறால்னா உசுரு மாப்பிள்ளை. ஆனா காமாட்சிக்கு ஆகாதுனு சாப்பிடமாட்டா.”
இப்படி தேவயானியைப் பற்றிய பேச்சுகள் கொஞ்சம்!
“கடைக்கு முன்னாடி போட்டிருக்குற ஆஸ்பெஸ்டாசைக் கழட்டிட்டுக் கூலிங் ஷீட் வாங்கி போடுங்க மாப்பிள்ளை. ஆஸ்பெஸ்டாஸ் சூடு உடம்புக்கு நல்லதில்லயாம்”
சரவணனின் உடல்நலன் குறித்த அக்கறையான ஆலோசனைகள் கொஞ்சம்!
மொத்தத்தில் மாமனாரும் மருமகனும் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய சமாச்சாரங்களைப் பேசினார்கள்.
அதே நேரம் அன்னையின் மடியில் படுத்து அன்றைய தினம் மாமியார் வீட்டில் நடந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தாள் தேவயானி.
“அத்தை என்னை அவங்க பொண்ணு மாதிரினு சொன்னதும் எப்பிடி இருந்துச்சு தெரியுமா? அவங்க கூட பிறந்தது எல்லாம் பிடாரியா இருக்குதுங்க. ஆனா அத்தை சொக்கத்தங்கம்”

மகள் அவளுடைய மாமியாரைப் பற்றி புகழ்வதைக் கேட்டு மனம் நிறைந்து போனது காமாட்சிக்கு.
மாலையில் தேவயானியின் ஆசைப்படி ஆழியூர் மலையில் இருக்கும் பெருமாளைத் தரிசனம் செய்தார்கள் அவளும் சரவணனும். அந்த மழையிலிருந்து கீழே தெரிந்த ஆழியூரை ரசிக்கப் பிடிக்குமெனத் தேவயானி சொல்ல சரவணனுக்கும் அது பிடித்துப்போனது.
இருவரும் கிளம்பியபோது ஆட்டோவை வரவழைத்திருந்தார் கைலாசநாதன்.
“ஆட்டோ எதுக்கு மாமா?”
“பலகாரம் எல்லாம் கொண்டு போகணுமே மாப்பிள்ளை. பெட்டியைப் பைக்ல வைக்க முடியாது”
“எதுக்கு இப்ப வீண்செலவு?”
“நீங்களும் என் பிள்ளையும் சாப்பிடத் தானே செலவு பண்ணுறேன்.”
ஆட்டோவில் மூன்று பெட்டிகள் ஏற்றப்பட்டன.
பைக்கை உதைத்த சரவணன் “சீக்கிரமே ஒரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்கணும் தேவா” என்றான் யோசனையோடு. அவன் இடுப்பில் ‘நறுக்’கெனக் கிள்ளினாள் தேவயானி.
“அவுச்! என் இடுப்பு மேலயே கண்ணா இருக்கடி நீ”
“திருநெல்வேலி அல்வாத்துண்டு இடுப்பு பாருங்க உங்களுக்கு”
“அப்புறம் எதுக்குக் கிள்ளுறியாம்?”
“கார் அது இதுனு இப்ப எதுக்கு வீண்செலவு?”
“நீயே பாத்தல்ல? பைக்ல உன்னையும் என்னையும் தவிர எக்ஸ்ட்ராவா ஒரு பேக் கூட வைக்க முடியாது. கார் இருந்தா எங்கயாச்சும் போக வர சுலபமா இருக்கும்ல?”
“அதுவும் சரிதான். இப்ப கல்யாணத்துக்கு ஒரு தொகை செலவாகிருக்கும்ல. உடனே எதுக்குக் கார் வாங்கணும்?”
பைக் காற்றைக் கிழித்துக்கொண்டு போக கணவனின் முதுகில் கன்னம் வைத்து சாய்ந்துகொண்டே கேட்டாள் தேவயானி.
“செலவு வாழ்க்கை முழுக்க வரும் தேவா. அதுக்காக நம்ம வசதிய குறைச்சுக்கக் கூடாதுல்ல? என் பொண்டாட்டி ராணி மாதிரி கார்ல உக்காந்து வரணும்னு நான் ஆசைப்படக்கூடாதா?”
“ஐயோ மக்கு மடச்சாம்பிராணி! கார்ல நீ ஒரு சீட்ல இருப்ப. நான் ஒரு சீட்ல இருப்பேன். பைக்ல அப்பிடியா? இப்பிடி இறுக்கமா கட்டிப்பிடிச்சுட்டுக் காத்தாட பைக்ல போற சுகம் அந்தக் கார்ல போறப்ப வருமா? தத்தி தத்தி!”
பின்னே இருந்தபடி அவனது தலைமுடியைச் செல்லமாகப் பிடித்து உலுக்கினாள் தேவயானி. சரவணனுக்குள் மெல்லிய கிளர்ச்சி. க்ஷணப்பொழுதும் விடாமல் அவனையே சுற்றிவரும் அஞ்சனவிழிகள்! இதோ இப்படி விளையாட்டாக உரிமையாகப் பேசும் ஒரு பெண்! உனக்கு நான் இருக்கிறேன் என்று அவள் கொடுக்கும் நம்பிக்கை!
வாழ்க்கையே புதிதாகத் தோன்றியது அவனுக்கு. இத்தனை நாட்கள் இல்லாத உணர்வு இது. தன்னந்தனியனாகக் கழித்த ஆண்டுகள் ஏதோ போன ஜென்மம் போன்ற எண்ணம் கூட அவ்வபோது வந்துபோனது. திருமணம் என்ற நிகழ்வால் நேர்ந்த ஒரு பெண்ணின் பிரவேசம் இத்தகைய மாற்றங்களை ஒரு ஆண்மகனின் மனதுக்குள் உண்டாக்குமா?
ஆச்சரியத்தை மனதுக்குள் பூட்டியவனாக மனைவியோடு வீடு வந்து சேர்ந்தான் சரவணன். திருமணத்திற்காக வந்திருந்த உறவுக்கூட்டம் மறுவீடு சென்று வந்த மருமகள் என்ன பலகாரம் கொண்டு வந்தாள் என்று தெரிந்துகொள்ள மூக்கு வேர்த்து காத்திருந்தது.
பைக்கின் பின்னே வந்த ஆட்டோவிலிருந்து இறங்கிய மூன்று பெட்டி பலகாரங்களை மகனும் மருமகளும் வீட்டில் எடுத்து வந்து வைத்ததும் கனகவல்லி கேட்ட முதல் கேள்வி “எதுக்கு வீண்செலவு?” என்பதே!
அந்தக் கேள்வியில் மாமியாரின் மனதைப் புரிந்துகொண்டாள் தேவயானி. அவருடன் பிறந்த அரிய ஜீவராசிகளோ அவரை அதிருப்தியாய்ப் பார்த்தன.
“என்னத்த குடுத்து விட்டிருக்காங்க? இதெல்லாம் மூனு நாள்ல காலியாகிடும். நம்ம சௌந்தரி மவனுக்குப் பொண்ணெடுத்த வீட்டுல முறுக்கு, லட்டு, முந்திரிக்கொத்து, அதிரசம், மனோகரம்னு வகை வகையா பலகாரம் குடுத்து விட்டாங்க. இது என்ன தொட்டுக்க துடைச்சிக்கனு இருக்கு”
ஒரு பெண்மணி சத்தமாகவே முணுமுணுக்கத் தேவையானியின் முகம் சுண்டிப்போனது. விற்கிற விலைவாசியில் இதெல்லாம் ஒரு பெண்வீட்டில் எதிர்பார்ப்பதே அற்பத்தனம். செய்தாலும் குறை சொல்வது என்ன மாதிரியான மனநிலை? அந்தப் பெண்மணிக்குச் சூடாய்ப் பதிலளிக்க அவள் நாக்கு துடித்தச் சமயத்தில் சரவணனின் குரல் ஹாலில் ஒலித்தது.
“சடங்கு, சீர் எல்லாம் மனுசங்க நாம உருவாக்குனது. அதை விட அற்புதமானது உறவுகள். இந்த முறைய விட எனக்கும் என் அப்பா அம்மாக்கும் என் பொண்டாட்டியும் அவ வீட்டாளுங்களும் முக்கியம். இன்னொரு தடவை அது சரியில்ல இது சரியில்லனு பேசாதிங்க சித்தி. கேக்குறதுக்கு நல்லா இல்ல”
“எய்யா! ஊருல இல்லாததையா என் தங்கச்சி சொல்லிட்டா?” அவனது பெரியம்மா அடுத்து ஆரம்பித்தார்.
“ஊருல ஆயிரம் மூடத்தனமான முறை இருக்கும். அதுக்காக எல்லாத்தையும் முதுகுல தூக்கிச் சுமக்க முடியாது. காலம் மாறிடுச்சு. அதுக்கேத்த மாதிரி நம்ம மாறலனா கஷ்டம் பெரியம்மா”
அதிகாரமாக ஒலிக்காவிட்டாலும் சரவணனின் குரலில் இருந்த உறுதி அங்கிருந்த அனைவரையும் அமைதியாக்கியது. அந்த அமைதியை அசௌகரியமாக உணர்ந்த கனகவல்லி ஏதோ பேசி பழைய உற்சாகத்தை அங்கே கொண்டு வந்தபடியே மகனிடம் மருமகளை அழைத்துச் செல்லுமாறு கண் காட்டினார்.
தங்களது அறைக்குள் வந்ததும் சட்டையைக் கழற்றிய சரவணனின் தோளோடு வந்து ஒட்டிக்கொண்டாள் தேவயானி.
“ஹேய்! என்னாச்சு?”
பசை போட்டாற்போல அவளது கன்னம் அவனது தோளில் பதிந்திருந்தது. கைகளோ முன்பக்கமாக அவனது இடையை வளைத்து அணைத்திருந்தது.

“ரெண்டு நாளா உங்களைத் தவிர வேற யாரைப் பத்தியும் யோசிக்கவிடாம செய்யுறிங்க சரவணன். உங்களோட ஒவ்வொரு பரிமாணமும் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைக் குடுக்குது. நான் இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்ங்க. ரொம்ப ரொம்ப”
சொன்னவளின் ஈர உதடுகள் அவனது முதுகை முத்தமிட்டதும் உடலில் இருந்த ஒவ்வொரு அணுவும் விழித்துக்கொண்டது சரவணுக்கு.
முன்பக்கம் தன்னை வளைத்து அணைத்திருந்த கரங்களைத் தன் கையால் விலக்கி முத்தமிட்டான்.
“சாய்பாபா கோயில்ல உன் கிட்ட பேசுன நாள்ல இருந்து நான் உன்னைப் பத்தி மட்டும்தான் யோசிக்குறேன் தேவா. உன் மனசு கோணாம எப்பிடி நடந்துக்குறது? உன்னை எப்பிடி சந்தோசமா வச்சுக்குறது? இதே யோசனைதான்.”
“இப்பவே நீங்க என்னைச் சந்தோசமாதான் வச்சிருக்கிங்க. என் மனசு கோணக்கூடாதுனா ஒன்னு செய்யணும்”
“என்ன?”
திரும்பி நின்று கேட்டவனின் கழுத்தில் கரங்களைப் பிணைத்துத் தன்னை நோக்கி இழுத்தவள் அவனது கண்களை ஊன்றி கவனிக்கவும் சரவணன் சட்டெனப் பார்வையைத் தணித்தான்.
“என்ன?” குறும்புச்சிரிப்போடு தேவயானி வினவ
“அப்பிடி பாக்காத. ஆம்பளைங்களால பொண்ணுங்க குறுகுறுனு பாத்தா இயல்பா இருக்கமுடியாது” என்றான் சன்னச்சிரிப்போடு.
“ஓஹ்! வெக்கமா?” தலையைப் பொம்மை போல ஆட்டியவளின் மோவாயை இறுகப் பற்றி அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன் “இப்பிடி ஏதாச்சும் ஏடாகூடமா செய்யணும்னு தோணும். அதனாலதான் பாக்காதனு சொன்னேன்” என்றான்.
தேவயானி திகைப்புடன் விழிக்க “நீ மட்டும்தான் புண்ணியம் தேடிக்கணுமா? நானும் தேடிக்கணும்ல” என விசமப்பேச்சு பேசி அவளைச் சிவக்க வைத்தான் சரவணன். அடுத்தடுத்து புண்ணியங்களை அவர்கள் செய்துகொள்ள அழகாய் நகர்ந்தது அந்த மாலைவேளை!
இரவில் வீட்டுக்கு வந்த உறவினர்கள் எல்லாம் கிளம்பினார்கள். மருமகளிடம் தனது சகோதரிகளின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் கனகவல்லி. அவளோ சிரித்தாள்.
“போய் தூங்குங்க அத்தை. இதுல்லாம் ஒரு விசயம்னு வருத்தப்படுறிங்களே!”
“அதில்ல தேவா. அந்த நேரத்துல நம்ம மாமியா அமைதியா நின்னாளேனு நீ பிற்காலத்துல வருத்தப்பட்டுடக்கூடாதுல்ல?” மெய்யானக் கவலை அவருக்கு.
“எனக்கும் சூழ்நிலை புரியும் அத்தை. நீங்க எனக்காகக் காலையில அவங்க கிட்ட பரிஞ்சு பேசுனதைக் கேட்டேன். இது வெறும் பொம்பளைங்குள்ள நடக்குற பேச்சா இருந்தா அப்ப நீங்க எனக்காகப் பேசிருப்பிங்க. ஹால்ல எல்லாரும் இருக்கப்ப பேச்சு வரவும் உங்களுக்கு என்ன செய்யணும்னு புரியல. எனக்கு ஆதரவா பேசுனா உங்க அக்கா தங்கச்சி வருத்தப்படுவாங்க. உங்க நிலமை எனக்குப் புரிஞ்சுது. எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்ல”
“என் ராஜாத்தி! எவ்ளோ புத்திச்சாலியா இருக்க” நெட்டி முறித்து திருஷ்டி கழித்துவிட்டுச் சென்றார் கனகவல்லி.
அன்றைய பிரச்சனைகளை அன்றே பேசித் தீர்த்துவிட்டால் நெடுநாட்கள் புரையோடும் இரணங்கள் குடும்ப உறவுகளில் தவிர்க்கப்படும். அதைச் செய்ய மறந்துவிடுகிறோம் நாம்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

