“இந்த லெட்டர்ல நான் அட்டாச் பண்ணிருக்குற ஹேண்ட் மேட் கார்ட் அச்சுவுக்கும் சஞ்சய்க்கும் ஃபேர்வெல் டேக்காக நானும் இலக்கியாவும் ரெடி பண்ணுனோ அருள். நீ இங்க இல்லல்ல. அதான் உனக்கு அனுப்பிருக்கேன். நீ இங்க இருந்திருந்தா நல்லா இருக்கும்னு இப்பலாம் அடிக்கடி தோணுது அருள். நீயும் லண்டன்ல உன்னோட ஸ்கூலிங்கை முடிச்சிருப்பல்ல. அடுத்து என்ன பண்ணப்போற? உனக்கு லா படிக்கனும்னு ஆசைல்ல.”
-வானதியின் கடிதம்…
மூவரும் அதிர்ச்சியோடு பார்க்கவும் அருள்மொழி கொஞ்சம் சுதாரித்தான். மானசீகமாகத் தன்னை வறுத்தெடுத்தது தனிக்கதை. அதை மறைத்தபடியே சமாளிக்க ஆரம்பித்தான்.
“உனக்குச் சீ-ஃபுட் அலர்ஜினு அத்தை சொன்னாங்க.”
மற்ற இருவரும் அதை நம்பினாலும் வானதியால் நம்ப முடியவில்லை. “அப்பிடியா? எப்ப சொன்னாங்க?” என விசாரிக்கும் தொனியில் வானதி வினவ,
“ஒரு நாள் சாப்பிடுறப்ப சொன்னாங்க. நீ என்ன சி.ஐ.டி மாதிரி விசாரிக்குற?” என்றவனின் குரலில் அசௌகரியமான உணர்வொன்று எட்டிப் பார்த்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

“நான் ஜஸ்ட் கேட்டேன். உனக்கு ஏன் விசாரிக்குற மாதிரி தோணுது?” எனத் தோளைக் குலுக்கியவள்,
“நான் வாய் தவறி பிரான் பெப்பர் ப்ரைனு சொல்லிட்டேன். சிக்கன் பெப்பர் ப்ரை போதும் எனக்கு” என்றாள்.
இலக்கியாவும் சஞ்சயும் வானதியை ஓரக்கண்ணால் பார்த்தார்கள். ‘நீ நம்புறியா?’ என்ற கேள்வி அவர்களின் விழிகளில் இருக்க, ‘நம்பித்தானே ஆகணும்’ எனப் பதில் அவளது உடல்மொழியில் தெரிந்தது.
ஆர்டர் செய்த உணவு வந்ததும் அரட்டை அடித்தபடி சாப்பிட்டார்கள்.
“அச்சு போன வேலை என்னாச்சு?” அருள்மொழி மெதுவாக அட்சரனைப் பற்றி விசாரித்தான்.
“போய் அஞ்சு நாளாகுது. அந்த ரைட்டர் பிருந்தாவோட கதைல சின்ன மாற்றங்கள் செய்யணும்னு இவ சொல்லிருந்தா. அதெல்லாம் முடிச்சு வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாளாரும்” என்றான் சஞ்சய்.
“இன்னும் ரெண்டு நாளா? இன்னைல இருந்து ரெண்டாவது நாள் நாங்க தேன்மலையில இருக்கணும். அன்னைக்கு ஈவ்னிங்கே ஏதோ பூஜை அது இதுனு அம்மா சொன்னாங்க”
அதிருப்தியாய் சொன்னவளின் பார்வை அருள்மொழியின் தட்டிலிருந்த சிக்கன் டிக்கா மீது ஆவலாய்ப் படிந்தது. அவளது பார்வையைக் கண்டுகொண்டவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை.
“வேணுமா?” என்று கேட்டான்.
“நீ வேணுமானு கேட்டதே தப்…” என்பவள் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னர் அவளது வாயில் சிக்கன் துண்டு திணிக்கப்பட்டது. அதை ருசித்து மென்றவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

“நீ தேவையில்லாம நிறைய பேசுற” என்று குட்டு வைத்தவனை மற்ற இருவரும் விஷமப்பார்வை பார்த்துவிட்டுத் தங்களுக்குள் ஹை-பை கொடுத்துக் கொண்டார்கள்.
“என்னடா ரெண்டு பேரும் சீக்ரெட் கோட் எதுவும் கண்டுபிடிச்சிருக்கீங்களா?” – அருள்மொழி.
“சேச்சே! அதெல்லாம் இல்ல. கல்யாணப் பேச்சு வந்ததும் நீ வானு கிட்ட கொஞ்சம் சாந்தமா நடந்துக்குற. அதைத்தான் பேசிக்கிட்டோம் நாங்க” – இலக்கியா.
அருள்மொழி கொஞ்சம் சத்தமாகவே நகைத்தான். “நான் என்ன ராட்சசனா? எனக்கு இவளை ஞாபகமில்ல. அதனால பட்டும் படாமலும் பேசுனேன். இப்பதான் கல்யாணம் ஆகப்போகுதுல்ல. இனி பட்டும் படாமலும் பேசுனா நல்லாவா இருக்கும்?”
“பார்றா! அருளுக்கு ஞானம் பிறந்த தருணம். நீ கலக்கு மச்சி” என்று அவனது தோளில் பெருமையாகத் தட்டிக்கொடுத்தான் சஞ்சய்.
வானதிக்குத் தான் மனம் தாங்கவில்லை.
“ஏன்? கல்யாணப் பேச்சு வந்ததும் நான் உன் கண்ணுக்கு மனுஷியா தெரியுறேனா? இப்பவும் என்னைக் கரிச்சுக் கொட்ட வேண்டியதுதானே?”
அருள்மொழி மறுப்பாய்த் தலையசைத்தான்.
“நீ என்னை இன்னும் புரிஞ்சிக்கல.”
“புரிஞ்சிக்கிற மாதிரி நீ நடந்துக்கலனு சொல்லு. புரியாத புதிரா இருக்குறதுல பெருமை ஒன்னும் இல்ல. அதுவும் நம்மளை நேசிக்குறவங்ககிட்ட புரியாத புதிரா நடந்துக்குறதெல்லாம் அயோக்கியத்தனம்.”
அருள்மொழி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளை ஒரு நொடி புருவச்சுழிப்புடன் பார்த்தவன், பழச்சாற்றை வானதி பக்கம் நகர்த்தி வைத்தான்.
“குடி! சிக்கன் டிக்காவோட காரம் கண்ட மாதிரி உன்னைப் பேச வைக்குது.”
அவள் பழச்சாற்றை அவன் பக்கமே நகர்த்திவிட்டாள்.
“நானெல்லாம் பிறவிலேயே ‘ஸ்வீட் கேர்ள்’. என்னை எந்தக் காரமும் எதுவும் செய்யாது.”
“ரொம்ப மட்டமான ஜோக். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த மாதிரி கண்றாவியான ஜோக்கை வேற நான் கேட்டுத் தொலையணுமா?”
“ரசனைக் கெட்டவங்களுக்கு அழகான உண்மை கூட ஜோக் மாதிரி தான் தெரியும்.”
“எது அழகான உண்மை? நீ ஸ்வீட் கேர்ள்ங்கிறதா? ஸ்வீட் கேர்ள்தான் ஒருத்தனை புரட்டி புரட்டி அடிச்சியா?”
“அது.. அவன்..” என்று பதிலடி கொடுக்க வந்த வானதி பெருமூச்சு விட்டாள்.
அருள்மொழி ஆலு பராத்தா விள்ளலை வாய்க்குள் அதக்கிக்கொண்டவன், “என்கிட்ட ஆர்கியூமெண்ட்ல நீ வின் பண்ணவே முடியாது” என்றான் கர்வச்சிரிப்புடன்.
“அதுவும் சரிதான். அதையே தொழிலா வச்சிருக்குறவனாச்சே!”
அருள்மொழியும் வானதியும் பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டது இலக்கியாவுக்கும் சஞ்சய்க்கும் படுசுவாரசியமாக இருந்தது. இந்த உரையாடல்களாவது அவர்களிடையே இருக்கும் பிணக்கைத் தீர்க்கட்டுமென்ற எண்ணம் நண்பர்களுக்கு. சாப்பிட்டு முடித்து அனைவரும் கிளம்பியபோது வானதியின் கார் நகராமல் அடம்பிடித்தது.
“என்னாச்சு உனக்கு? வர்றப்ப நல்லாதானே இருந்த” என்று பேசிக்கொண்டே வெளியே வந்தவள் தமையனின் காரை ஓட்டும் டிரைவரின் எண்ணுக்கு அழைத்தாள்.
“ஹலோ! ரூபன் அண்ணா! என் கார் ஏதோ பிரச்சனை பண்ணுதுண்ணா. நான் தாஜ்ல இருக்கேன். என்னை அழைச்சிட்டுப் போறீங்களா?”
அவள் பேசும்போதே அருள்மொழியின் கார் அவளருகே வந்து நின்றது.
“என்னாச்சு?”
காதில் போனை வைத்தபடியே “ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது. ரூபன் அண்ணாவை வரச் சொல்லிருக்கேன்” என்றாள் வானதி.
“போனைக் குடு” கையை அசைத்தான் அவன். ஏனோ அவனது உடல்மொழியில் கூட திமிர் தெரிந்தது வானதிக்கு. அவனது பார்வையில் கூர்மை ஏறவும் மொபைலைக் கொடுத்துவிட்டாள்.
“அண்ணா, நான் அருள் பேசுறேன். நீங்க கார் கொண்டு வரவேண்டாம். கேப்ல மெக்கானிக் யாரையாச்சும் அழைச்சிட்டு வாங்க. போதும். வானதியை நான் என் கார்ல அழைச்சிட்டு வந்துடுறேன்.”
பேசிவிட்டு மொபைலைக் கொடுத்தவன், “அங்க வாலே நிப்பார். அவர் கிட்ட சாவியைக் குடுத்துட்டுப் பிரச்சனையைச் சொல்லு. ரூபன் அண்ணா கிட்ட அவர் கார் சாவியைக் குடுத்துடுவார். நீ என்கூட வா” என்றான்.
வானதியும் அவன் சொன்னபடி வாலேயிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டு அருள்மொழியின் காரில் அமர, கார் வேகமெடுத்தது.
கார் சிறிது தூரம் போனதும், “நாளைக்கு என்னோட பெரியம்மா வருவாங்க. அவங்க கூடக் குறைய பேசுனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க” என்றான் சாலையில் கண் பதித்தவனாய்.
வானதி திகைப்போடு, “கூடக் குறைய மீன்ஸ்?” என்று கேட்க,
“அவங்களுக்கு என்னை லண்டன் அனுப்பி வச்ச வருத்தம் இருக்கு. உங்க ஃபேமிலி என் ஃபேமிலிக்கு அநியாயம் பண்ணிட்டீங்கனு நினைக்குறாங்க. அதனால அவங்க பேச்சுல அந்த ஆதங்கமும் வருத்தமும் வெளிப்படலாம். நீ அதுக்கு பிரிப்பேர் ஆகிக்க” என்றான் அவன்.
“இல்ல! எனக்குப் புரியல. இதுல நான் எங்க கனெக்ட் ஆகுறேன்? என் ஃபேமிலி உனக்கு எப்ப அநியாயம் பண்ணுனாங்க? நீ உன் பெரியம்மா கூட போயிருந்தனா இந்த எஜுகேஷன், இந்த ஸ்டேட்டஸ், இந்த மரியாதை எல்லாம் உனக்குக் கிடைச்சிருக்குமா? அவங்க இதை நினைச்சுச் சந்தோஷப்படணும்! அட்ஜஸ்ட் பண்ணணுமாம்! மை ஃபுட்!”
“வானதி…” அருள்மொழியின் குரல் உயரவும், வெட்டுவதைப் போல முறைத்தாள் வானதி.
“என்ன? எங்களால நீ வாழுறனு சொன்னா கோவம் வருதுல்ல? அதே மாதிரி எங்களாலதான் உன் வாழ்க்கைல அனர்த்தம் நடந்துச்சுனு சொன்னா எனக்கும் கோவம் வரும். நாங்க ஒன்னும் இரும்புக்கவசம் அணிஞ்சுக்கிட்டு நடமாடல. கூர்மையான வார்த்தை உடம்பை விட மனசை ரொம்ப ரணமாக்கும்.”
“இழப்பைச் சந்திச்சவங்களோட வார்த்தை கூர்மையா தான் இருக்கும் வானதி.”
“இசிட்? அதை இழப்புக்குக் காரணமானவங்க கிட்ட மட்டும் காட்டணும். அதுதானே நியாயம்?”
“நியாயம் தர்மம் இதெல்லாம் அவங்கவங்க பெர்ஸ்பெக்டிவ், உனக்கு நியாயம்னு தோணுறது எனக்கு அநியாயமா தெரியலாம்.”
இப்போதும் வானதியால் அவனை வாதத்தில் வெல்ல முடியவில்லை. உதட்டைக்குவித்து பெருமூச்சை வெளியிட்டாள். “நமக்குக் கல்யாணம் ஆனா டெய்லி இதுதான் வழக்கமா இருக்கும்ல. நீ ஒன்னு சொல்ல நான் ஒன்னு சொல்ல… த எண்ட்லெஸ் ஆர்கியூமெண்ட்ஸ். ஷப்பா!”
வானதியின் சலிப்பு அருள்மொழியிடமிருந்த இறுக்கத்தைக் குறைத்தது. அவனது இதழ்க்கடையில் சன்னச்சிரிப்பு உதயமானது.
“டோண்ட் வொரி. என்கூட வாழப்போற லைஃப் அவ்ளோ கொடுமையா இருக்காது. அதுக்காக லவ்வி டவ்வி (Lovey-dovey) மாதிரியும் நாம வாழப்போறதில்ல. உங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்கம்மா வாழலையா? நானெல்லாம் ‘பேர் மினிமம்’ (Bare minimum). நீ ரொம்ப லக்கி.”
“அதென்ன எல்லாத்துக்கும் எங்கப்பாவ இழுக்குற? லீவ் இட். பேர் மினிமமா இருக்குறதுல என்ன பெருமை உனக்கு?”

“உங்கப்பா அந்த பேர் மினிமம்ல கூட வரமாட்டார்மா. அப்ப நான் பெருமைப்பட்டுக்கலாம்ல.”
“எல்லாத்தையும் விடு. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதால எனக்குப் பெருசா என்ன நன்மைனு சொல்லேன்.”
அவன் பக்கம் திரும்பிச் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள் வானதி. அவனது பதிலைக் கேட்கும் ஆவல் அவளது விழிகளில்!
“ம்ம்ம்! நான் உன்னைக் கண்ட்ரோல் பண்ண மாட்டேன். எதுக்காகவும் உன்னைக் கட்டாயப்படுத்தவும் மாட்டேன். எல்லாத்தையும் விட ஐ அம் ஆல்வேய்ஸ் லாயல் டூ மை விமன்”
“விமன்?” உதட்டுப்புன்னகையை ஒளித்துவைத்து கண்களின் மலர்ச்சியைக் கட்டுப்படுத்தியபடி புருவங்களை ஏற்றியிறக்கி அவள் வினவ,
“நீ தான்” என்றான் அருள்மொழி.
சூடான உணவுக்குப் பிறகு ஜில்லென்ற ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நாவுக்கும் நெஞ்சுக்கும் ஒரு இதம் கிடைக்குமே, அப்படியொரு இதம் அவனது பேச்சைக் கேட்ட பிறகு.
“இப்ப உன் டர்ன். எனக்கு என்ன கிடைக்கும்?”
“நான் சொல்ல ஆரம்பிச்சா எனக்கு வாய் வலிக்கும், உனக்குக் காது வலிக்கும். அவ்ளோ பாயிண்ட்ஸ் இருக்கு. சுருக்கமா சொல்லணும்னா ஐ வில் பி அ குட் பிரண்ட் அண்ட் அன் ஆவரேஜ் ஒய்ப். பிலோ ஆவரேஜ்னு கூட சொல்லலாம். ஏன்னா எனக்கே தெரியும் நான் ஒய்ப் மெட்டீரியல் இல்ல.”
“அஹான்!”
“ம்ம்! ஆமா! அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு துவர்ப்பு கார்ப்புனு எதுவுமே எனக்குக் கிடையாது. காலையில குளிச்சுட்டு ஈரம் சொட்டுற முடியோட உன்னை எழுப்பி காபி குடுக்குற பொண்டாட்டிய நீ எதிர்பார்த்தனா சத்தியமா நீ ஏமாந்து போவ. ஐ அம் நாட் தட் சோ கால்ட் பிராணநாதா டைப். ஆனா ஒன்னு, ஐ வில் பி லாயல் டூ மை மேன். நீ தான்.”

அவனைப் போலவே அவள் சொல்லிக் காட்ட, வாய் விட்டே சிரித்தான் அருள்மொழி. சொல்லப்போனால் இருவருக்குமே இந்தத் திருமண உறவில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லை.
அருள்மொழிக்கு ஜெயசந்திரனின் குடும்பத்துக்குள் தவிர்க்க முடியாத உறுப்பினனாக நுழைய இத்திருமணம் ஒரு துருப்புச்சீட்டு. வானதிக்கோ இளம்பிராயத்து நண்பனை மீட்க அவளுக்குக் கிடைத்திருக்கும் உன்னதமான வாய்ப்பு.
பிற தேவைகளுக்காகத் திருமண உறவில் இணைய ஒப்புக்கொண்ட இருவருக்கும் திருமண உறவுக்கே உரித்தான சில விஷயங்கள் குறித்துப் பெரிதாக எந்த யோசனையும் இல்லை. அருள்மொழி காரை ஓட்டிக்கொண்டே செல்ல, வானதி அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“உனக்குப் பழசு எதுவும் ஞாபகம் வரலனா கூட பரவால்ல. இப்ப பேசுனல்ல, இதே மாதிரி நமக்குள்ள கோவமும் சிரிப்புமா நாட்கள் நகர்ந்தா கூட எனக்குப் போதும். நான் எதிர்பாக்குற பேர் மினிமம் இதுதான் அருள்.”
காரை ஓட்டியவனிடம் சின்னதாய் ஒரு தடுமாற்றம். எப்போதுமே வருவதுதான். வானதியிடம் மட்டும் தான் காட்டும் கடுமையும் விலகலும் சற்று அதீதமானவையோ என்ற கேள்வியே அத்தடுமாற்றத்தை அவனுக்குள் உருவாக்கும்.
அதைச் சமாளித்தவனாய், “எதிர்பாக்குற எல்லாம் எப்பவும் கிடைச்சுடாது. அதுதான் வாழ்க்கை. அந்த ஏமாற்றத்தை முழுங்கிட்டு வாழணும். அதுதான் சர்வைவல் டெக்னிக் (Survival technique). நான் அப்பிடித்தான் வாழுறேன்” என்றான். இம்முறை அவனது வார்த்தைகள் எதுவும் அவளைக் காயப்படுத்தவில்லை.
முகிலகமும் வந்துவிட்டது. காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தவர்களிடம் முகமலர்ச்சியோடு கயல்விழி ஒரு நற்செய்தியைக் கூறினார்.
“நான் ரமா மதினி கிட்ட பேசிட்டேன். அவங்க முதல்ல தயங்குனாலும் அப்புறம் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. அவங்களும் அண்ணாவும் அருளுக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து கல்யாணத்தைப் பண்ணி வைக்குறதா சொல்லிட்டாங்க. நாளைக்கே அவங்களை இங்க வரச் சொல்லிட்டேன். நாளை மறுநாள் நல்லநாள். அன்னைக்கு முகூர்த்தப்புடவை எடுத்துட்டு அப்பிடியே தேன்மலைக்குக் கிளம்பிடலாம்.”

“அத்தை அப்ப பிளவுஸ் ஸ்டிட்சிங்?” ஸ்ரீநிதி பெரிய கவலையொன்றை வெளியிட்டாள்.
“ஒரு டிசைனர் கிட்ட பேசிருக்கேன். அவங்க வேலையை முடிச்சிடுவாங்க ரேகா” என்றார் கயல்விழி.
“ரேகா? உங்களுக்கு ரெண்டு பேரா?” அருள்மொழி புருவம் சுருக்க,
“ரேகா கூப்பிடுற பேர் அருள். என் தாத்தாவோட பேர் ஸ்ரீனிவாசன். அந்தக்காலத்துல புருஷன் பேரைப் பொண்டாட்டிங்க சொல்ல மாட்டாங்களாம். ஸ்ரீநிதினு சொன்னா பாட்டிக்குத் தாத்தாவோட பேரைச் சொன்ன மாதிரி ஆகிடும்னு ரேகானு கூப்பிட ஆரம்பிச்சாங்க. என்னை ஸ்ரீநிதினு வாய் நிறையக் கூப்பிடுறது ஆதி மட்டும்தான். என் புள்ளையே என்னை ரேகானு தான் கூப்பிடுது” என்றாள் அவள் கேலியாக.
ஸ்ரீநிதியின் கண்கள் ‘ஆதி’ என்கையில் அதீதமாய்க் கனிவதை சங்கடத்துடன் பார்த்தான் அருள்மொழி. அகத்தியன் இப்போது விசாரிக்கும் விவகாரம் மட்டும் உண்மை எனத் தெரியவந்தால் இவளது நிலை?
யோசனையோடு நின்றவனிடம், “உன் பெரியம்மா சம்மதிச்சிட்டாங்க. இப்ப சந்தோஷமா அருள்?” என வினவினார் கயல்விழி.
ஆதித்யன் விவகாரத்தை மறந்தவன் சம்மதமெனத் தலையசைத்தான்.
“நான் சொன்னதை மறந்துடாத வானதி.”
பெரியம்மாவிடம் கொஞ்சம் நீக்குபோக்காக நடந்துகொள்ளுமாறு காரில் வந்தபோது சொன்னதை நினைவுறுத்திவிட்டுத் தனது அறையை நோக்கிச் சென்றுவிட்டான் அருள்மொழி.
வானதிக்கு அதில் உடன்பாடு இல்லைதான். ஆனால் அவளது அன்னையும் அருள்மொழியைப் போலவே அறிவுரை சொல்லவும், ஆதங்கத்தோடு தலையாட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
“அவங்களுக்கு அருளை அவங்களோடவே வச்சுக்கணும்னு ஆசை வானும்மா. ஆனா உங்கப்பா சம்மதிக்கலையே. இங்கயே இருந்தா அப்பா அம்மாவோட இழப்பு அருளுக்குப் பெருசா தெரியும், அவன் மனநிலை பாதிக்கப்படும்னு என்னென்னமோ சொல்லி அவனைத் தர்மா கூட லண்டனுக்கு அனுப்பிவச்சிட்டார். அந்த வருத்தம் ரமா மதினிக்கு நிறைய இருக்கு. அது நியாயம் தானே? மீனா மேல அவங்களுக்கு உயிர். அவ மகனைத் தன்னோட மகனா வளர்க்க அவங்க தயாரா இருந்தாங்க. அவனைத் தன்னோட வச்சுக்க முடியாத ஏமாற்றம் அவங்களுக்குள்ள இப்ப வலியா, கோவமா உருமாறியிருக்கு. ஒரேயடியா எடுத்தெறிஞ்சு பேசமாட்டாங்க. குணமானவங்க தான். அப்பப்ப சலிப்புல வார்த்தையை விட்டாலும் கொஞ்சம் பொறுத்துக்க வானும்மா.”
“சரிம்மா.”
அரைகுறை மனதோடு சொன்னவள் அன்றைய தினம் காலையில் வந்து நின்ற ரமா – கணேசன் தம்பதியைப் பார்த்ததும் அயர்ந்துதான் போனாள்.
ஏனெனில் வந்ததுமே தன்னைப் பார்த்தும் வானதி எழுந்து நின்று “வாங்க” என்று வரவேற்காததைச் சொல்லிக் காட்டினார் அந்தப் பெண்மணி.
“இதுக்கெல்லாமா அண்ணி பேசுவாங்க?” நம்ப முடியாமல் ஸ்ரீநிதியின் காதைக் கடித்தாள் அவள்.

“அம்மாடி நான் இங்க இருக்குறேன்! மதினிக்காரி கிட்ட என்ன இரகசியம் பேசுற?” என அதையும் கேள்வி கேட்டவரிடம்,
“வாங்க ஆன்ட்டி! வாங்க அங்கிள்” என்று சிரித்து வைத்தாள் வானதி.
“எல்லாத்தையும் கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு” என்று பெருமூச்சு விட்டவர், அருள்மொழியைக் கண்டதும் மெய்யாகவே உருகிவிட்டார்.
அவருக்காவது உடன்பிறந்த தங்கை மகன் என்ற இரத்தப்பாசம் என்று வைத்துக்கொள்ளலாம். கணேசனின் கண்களும் அவனைக் கண்டதும் கலங்கிப் போயின. அவனோ வந்ததும் அவர்களின் கால்களைத் தொட்டு ஆசி வாங்கிக்கொண்டான்.
“ஏன்டா இதெல்லாம்? நீ எப்பவும் ராஜா மாதிரி சௌக்கியமா இருப்ப” என்றார் கணேசன் மனம் நிறைய.
“இப்ப நானும் கால்ல விழணுமா அண்ணி?”
“தெரியலையே.”
ரமா அதையும் கவனித்துவிட்டார். அவர் வானதியிடம் பேசும் முன்னரே காபியும் கயல்விழியும் வந்துவிடப் பேச்சு தற்காலிகமாக நின்றது.
கயல்விழியிடம் அவர் எந்தவிதச் சிடுசிடுப்புமில்லாமல் பேசுவதைக் கண்ட வானதிக்கு, “இவங்களுக்கும் அருள் மாதிரியே என்னை மட்டும் ஆகாது போல” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
அன்றைய காலையுணவில் உணவு மேஜை ஆட்களாலும் கலகலப்பான அரட்டையாலும் நிரம்பி வழிந்தது. உறவுகள் கூடினால் அங்கே உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவேது? தனது நிறுவனத்துக்குக் கிளம்பும் முன்னர் ரமாவிடம் கார்டு ஒன்றைக் கொடுத்துவிட்டான் அருள்மொழி.
“முகூர்த்தப்புடவையும், மாங்கல்யமும் நீங்க பாத்து வாங்கிடுங்க பெரியம்மா.”
“சரிடா!” என்றவர், “எம்மா வானதி! உனக்கு என்ன கலர் பிடிக்கும்?” என்று கேட்க,
“எனக்கு பர்ப்பிள் பிடிக்கும் ஆன்ட்டி” என்றாள் அவள் ஆவலாய்.
“அந்தக் கலர்ல எல்லாம் முகூர்த்தப்புடவை எடுத்தா நல்லா இருக்காது. தக்காளிச் சிவப்புல எடுப்போம். என்ன சொல்லுற கயல்?” என்று கயல்விழியிடம் பேச ஆரம்பித்துவிட்டார் ரமா.
வானதிக்கோ கடுப்பு. “அப்ப எதுக்கு என்கிட்ட கேக்கணும்?” என முணுமுணுத்தபடியே இடத்தைக் காலி செய்தாள் அவள். மறுநாளில் ஆரம்பித்து ஏழு நாட்களுக்கு அவள் விடுப்புக்கு விண்ணப்பித்திருக்கிறாள்.

விறுவிறுவென அவள் போவதைக் கவனித்த ரமா, அருள்மொழியைப் பார்க்க, “அவளுக்கு ஆபீஸ்க்கு டைம் ஆகுதுல்ல” என்றான்.
ரமா வாயில் கை வைத்து ஆச்சரியப்பட்டார்.
“இப்ப நான் என்ன கேட்டேன் உன்கிட்ட? கல்யாணம் ஆகல இன்னும், அதுக்குள்ள பொண்டாட்டிக்குச் சப்போர்ட்!” என அவர் வியப்போடு சொல்ல, அருள்மொழி நாக்கைக் கடித்துச் சிரிப்பை உதட்டுக்குள் பூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

