“அருள்! உங்க மூணு பேருக்கும் டென்த் போர்டு எக்ஸாம் டைம் – அப்ப நீங்க ரொம்ப சீரியஸா படிப்பீங்க. நானும் இலக்கியாவும் உங்களை வெறுப்பேத்துறதுக்குச் சைக்கிளை எடுத்துட்டுச் சுத்துவோம். அப்ப ஸ்கூல் டார்மிட்ரி ஜன்னல் கண்ணாடி வழியா நீங்க மூணு பேரும் எங்களை ஏக்கமா பார்ப்பீங்க. நீ ரொம்ப படிப்சா இருந்த அப்ப. இப்பவும் அப்பிடித்தானா? அட்வகேட் ஆகிட்ட. ஆனா ஒவ்வொரு கேஸுக்கும் நீ நிறைய ரெஃபரன்ஸ் எடுக்கணும்ல?”
–வானதியின் கடிதம்…
“அருளுக்கு ஏனோ என்னைப் பிடிக்கல. அதுவே எனக்குக் கியூரியாசிட்டியை கிளப்புது யாழு. அவன் என்னோட குளோஸ் பிரண்ட். இப்ப உங்கள்ல யாராச்சும் என்னை ஒதுக்கி வச்சீங்கனா எனக்கு வலிக்கும்ல. அப்பிடித்தான் அவன் விலகி நிக்குறப்ப வலிக்குது. எனக்கு அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல பிரச்சனை இல்ல. ஆனா அவன் முன்னாடி இருந்த அருள் மாதிரி தெரியல.”
மடமடவெனத் தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் வானதி. அவள், யாழினி, வேதவதி என மூவர் மட்டும் இருக்கும் வாட்ஸ்அப் குழுமத்தில் யாழினியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.
வேதவதி கல்லூரியில் இருக்கும் நேரம் என்பதால் யாழினியும் வானதியும் மட்டும் ஆன்லைனில் இருந்தார்கள். திருமணம் நின்று போன விவகாரத்தைத் தோழியரிடம் பகிரவேண்டுமென நினைத்தவளுக்குத் திடீர் திருமணம் முடிவான விஷயமும் சேர்ந்துகொள்ள அதைக் கேட்ட யாழினிக்கோ தலை கிறுகிறுவெனச் சுற்றியது.
“அரேஞ்ச்ட் மேரேஜ் மாதிரி நினைச்சுக்க வானு.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

“ம்ம்! சுந்தர் மாமா ரொம்ப நேர்மையான ஆள் தெரியுமா? இவன் கிட்ட அந்த நேர்மை இல்ல. அது எனக்கு உறுத்தலா இருக்கு யாழு.”
“புரியுது வானு. ஆனா எல்லா இடத்துலயும் பின்-பாயிண்ட்டா நேர்மையை எதிர்பாக்க முடியாதுல்ல. ஒருத்தர்கிட்ட இருக்குற சின்னச் சின்ன குறைக்காகப் பெரிய நல்லதை மறக்கக்கூடாதுடி.”
யாழினி சொன்னதும் மனதிலிருந்த உறுத்தல் மெதுவாக மறையத் தொடங்கியது வானதிக்கு.
‘ஆதர்ஷ் என்ற ஒருவனைத் திருமணப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகவியலாளனாகக் கூட எனக்குப் பரிச்சயம் கிடையாது. இருப்பினும் அவனை மணமுடிக்கச் சம்மதித்தேன். அருள்மொழி எனது நண்பன். அவனுக்கு என்னை நினைவில்லை என்றாலும் எனக்கு அவனுடனான அழகான தருணங்கள் நன்றாக நினைவிருக்கிறதே!’
மனம் கொஞ்சம் தெளிவாக ஆரம்பித்தது அவளுக்கு.
வானதி தனது தோழியரிடம் திருமணத் தகவலைப் பகிர்ந்து கொண்ட அதே நேரத்தில், அருள்மொழி இந்திய நீதிமன்றங்களில் வாதாடுவதற்கான தேர்வுக்காகப் படிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் அவனது அலுவலகத்தில்.
அவனது திட்டத்தை நிறைவேற்ற இந்தத் திருமணம் ஒரு கருவியே தவிரப் பெரிதாகத் திருமணத்தில் ஆர்வமெல்லாம் இல்லை அவனுக்கு. ‘வானதி தானே மணமகள்’ என்ற அலட்சியமும் அவனது ஆர்வக்குறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.
திருமணச் செய்தி உறுதியானதும் காரில் வரும்போதே அட்சரனிடம் சொல்லிவிட்டான். அவனோடு இலக்கியாவும் சஞ்சயும் கான்பரன்ஸ் காலில் இருந்ததால் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அனைவருக்கும் ஆதர்ஷ் மீது அப்படியொரு கொலைவெறி. அட்சரன் ஒரு கேரள எழுத்தாளரைச் சந்திக்கக் கொச்சிக்குச் சென்றிருந்தான். இல்லையென்றால் ஆதர்ஷை அவன் புரட்டி எடுத்திருப்பான். இந்த முரட்டுத்தனத்தில் வானதியும் அட்சரனும் ஒத்துப்போவார்கள்.
அவன் இல்லாதக் குறைக்கு இலக்கியாவும் சஞ்சயும் ஆதர்ஷைச் சபித்துக் கொட்டினார்கள். நண்பர்களிடம் உரையாடும்போதே தேர்வுக்குப் படிப்பதைச் சொல்லிவிட்டான் அருள்மொழி.
“படிக்கப் போறியா? கல்யாணத்துக்கான பரபரப்பு இல்லையா மச்சி?” – சஞ்சய் வேண்டுமென்றே சீண்டினான்.
“பொண்ணு நம்ம நதி தானேனு சாருக்கு அலட்சியம். இங்க பாரு அருள்! பிரண்டைக் கல்யாணம் பண்ணுனா லைஃப் ஈஸியா போகும்னு நினைக்காத. பிரண்ட்ஷிப் தனி ட்ராக். கல்யாண வாழ்க்கை தனி ட்ராக். நதி அதுல தெளிவா இருப்பா” என்று பயமுறுத்தினாள் இலக்கியா.
“என்னடா பேய்க்கதை சொல்லுற மாதிரி பயம் காட்டுறீங்க? நான் கல்யாணம் தான் பண்ணிக்கப் போறேன், என்னமோ பேய் பங்களாவுக்குக் குடி போற மாதிரி இவ்ளோ அட்வைஸ் பண்ணுறீங்க. வானதி தானே? அவளை என்னால சமாளிக்க முடியும்” என்று சொல்லிவிட்டான் அருள்மொழி.
அவன் புத்தகங்களை இணையத்தில் தேடியபடியே சம்பந்தப்பட்ட இணையதளத்தைப் பார்வையிட்டான். ஜூனில் தேர்வு எனப் பார் கவுன்சில் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். பிப்ரவரியில் பதிவு செய்யச் சொல்லியிருந்தார்கள். தேர்வுக்கு அதிக நாட்கள் அவகாசம் இருப்பதால் கொஞ்சம் ஆசுவாசமுற்றான் அருள்மொழி. அன்று மதியம் வரை அதிலும் மான்கடா குழும வழக்கு குறித்த விவகாரங்களிலும் நேரம் செலவானது.

என்ன வேலையிருந்தாலும் அவனும் ஆதித்யனும் மதியவுணவுக்குக் கட்டாயம் முகிலகம் வந்துவிடவேண்டும் என்பது கயல்விழியின் கட்டளை. அங்கிருந்து கிளம்பியபோதே அகத்தியனிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது அருள்மொழிக்கு.
“சொல்லுங்கண்ணா.”
“ஈவினிங் நாலு மணிக்கு நம்ம கட்சி ஆபீஸ்க்கு வந்துடு அருள். உங்க கல்யாணம் பத்தி கட்சிக்காரங்ககிட்ட தலைவர் முறையா அறிவிப்பு குடுக்கணும்னு ஆசைப்படுறார்.”
“கல்யாணத்துக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்ணா?” – அருள்மொழிக்கு நிஜமாகவே குழப்பம்.
“கல்யாண மாப்பிள்ளை மாறியிருக்குற விவகாரத்தைப் பகிர்ந்துக்கணும்னு நினைச்சிருப்பாரோ? எனக்கும் நோ ஐடியா அருள். நீ வாயேன், என்னனு தெரிஞ்சிப்போம்.”
“சரிண்ணா.”
முகிலகத்துக்கு வந்தவன் அங்கே மதியவுணவின் போது ஆதித்யனிடம் மெதுவாக விசாரித்தான்.
“கல்யாணம் பத்தி பேசணும்னு மாமா என்னை கட்சி ஆபீஸ்க்கு வரச் சொல்லிருக்கார். இதெல்லாம் எதுக்காக? கண்டிப்பா இதெல்லாம் அறிவிக்கணுமா என்ன? பேமிலி மேட்டரை ஏன் கட்சியாளுங்களுக்குச் சொல்லணும்ணா?”
“அப்பா சொன்னார்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும் அருள். உனக்கு எதுவும் வேலை இருந்தா அப்பா கிட்ட சொல்லு.”
“இல்லண்ணா! நான் வந்துடுறேன்.”

“அடேய், முதல்ல என்னை அண்ணானு சொல்லுறதை நிறுத்து. நீ என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கப்போற. முறையை மாத்தாதடா.”
ஆதித்யன் கேலியாகக் குறிப்பிடவும் அருள்மொழி தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.
“சின்ன வயசு பழக்கம். கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேன்.”
ஸ்ரீநிதி ஜெயந்தனுக்குப் பருப்பு சாதம் ஊட்டிக் கொண்டிருந்தவள், அவன் அடம்பிடிக்கவும் அருள்மொழியைத் காட்டினாள்.
“நீ சாப்பிடலனா அருள் மாமா உன்னை லண்டன் கூட்டிட்டுப் போகமாட்டான்.”
“ம்மாமா…” உதட்டைப் பிதுக்கிய குழந்தை அப்பாவியாய் விழிக்கவும், கேள்விக்குறியாய் இருந்த மனம் சட்டெனக் குளிர்ந்து போனது அருள்மொழிக்கு.
“குட்டி, நீ பொறுமையா சாப்பிடு. மாமா உனக்காக லண்டனையே இங்க கொண்டு வந்துடுறேன்” என்று சொல்லி அவன் கண் சிமிட்டவும் ஜெயந்தன் சிரித்தான் கைகளைத் தட்டியபடி.
ஜெயந்தனுடனான பேச்சால் மதியவுணவு நேரம் மனதுக்கு இதமாக நகர்ந்தது. ஜெயந்தனிடம் பேசி விளையாடிவிட்டு நேரடியாகத் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான் அருள்மொழி. வருங்கால மருமகனைப் பூரிப்போடு வரவேற்றார் ஜெயசந்திரன்.
“வாங்க வாங்க மாப்பிள்ளை! இராஜேந்திரண்ணே! மாப்பிள்ளையை மீட்டிங் ரூமுக்கு அழைச்சிட்டுப் போங்க.”
அருள்மொழிக்கே அவரது பாசத்தில் வழுக்கி விழுந்துவிடுவோமோ என்ற சந்தேகம் வருமளவுக்கு அத்துணை அன்பாய்ப் பேசினார் ஜெயசந்திரன்.
இராஜேந்திரனோடு மீட்டிங் அறையில் போய் அமர்ந்தவன், அங்கே கட்சியின் முக்கிய உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்களும் குழுமியிருப்பதைப் பார்த்தபடி அமர்ந்தான். அகத்தியன் ஓடோடி வந்தான் அவனிடம்.
“சிரிச்ச மாதிரி இரேன்டா. அதென்ன கிரைம் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் ஆபீசர் மாதிரி விறைப்பா இருக்குற?”
அருள்மொழி சிரிக்க முயற்சி செய்தான். அதே அறையின் பின்னணியில் அவனது தந்தை புகைப்பட உருவமாகச் சிரிப்பதைப் பார்த்த பிறகு அவனால் எப்படி முழு மனதோடு சிரிக்க முடியும்? பெயருக்கு உதட்டை இழுத்து வைத்தான். சிறிது நேரத்தில் ஜெயசந்திரனும் ஆதித்யனும் உள்ளே வர அனைவரும் எழுந்தார்கள். சிலரெல்லாம் வயது வித்தியாசமின்றி ஆதித்யனிடம் கைகூப்பினார்கள்.
இதென்ன அரசியல் கலாச்சாரம்? இவர்கள் வயதென்ன, ஆதித்யனின் வயதென்ன? ஒருவித ஒவ்வாமை எழுந்தது அருள்மொழிக்கு. ஜெயசந்திரன் வந்ததும் அமராமல் அருள்மொழியைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

“என் மகள் வானதிக்கும் என் நண்பன் சுந்தரமூர்த்தியோட மகன் அருள்மொழிக்கும் என் பூர்வீகம் தேன்மலையில கல்யாணம். கட்சியில இருக்குற உங்க எல்லாரையும் நான் என் குடும்பமா தான் பாக்குறேன். கல்யாணத்துல நடந்த குளறுபடி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதனால தான் இந்த மாற்றம். உங்கள்ல நிறைய பேருக்கு என் மேல கடந்தகால வருத்தம் நிறைய இருக்கும். கட்சித்தலைமைக்குச் சுந்தரமூர்த்தியா, ஜெயசந்திரனானு கேள்வி வந்தப்ப உங்கள்ல சிலர் சுந்தரமூர்த்தி பக்கம் நின்னிங்க. அவங்களுக்குச் சுந்தரமூர்த்தியோட இறப்பு பெருத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் குடுத்திருக்கும். உங்களோட இத்தனை வருஷ வருத்தத்தை இந்தக் கல்யாணம் போக்கும்னு நம்புறேன். நானும் சுந்தரமூர்த்தியும் இப்ப ஒரே குடும்பம். எனக்கு என் மகனும் மருமகனும் வேற வேற இல்ல.”
கர்வமாகச் சொன்னவரை இறுகியத் தாடையோடு பார்த்தான் அருள்மொழி.
‘இந்த மனிதர் மகளின் திருமணத்தில் கூட அரசியல் ஆதாயம் தேடுகிறார். என் தந்தைக்கு ஆதரவான மனநிலையில் இருப்பவர்களைத் தன் பக்கம் திருப்புவதற்கு இந்தத் திருமணத்தைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துகிறார்.’
“தலைவரே! மாப்பிள்ளைக்கு ஸ்வீட் குடுங்க”
ஸ்வீட் பாக்ஸோடு வந்தார் இராஜேந்திரன். ஜெயசந்திரன் லட்டு ஒன்றை எடுத்து அருள்மொழிக்கு ஊட்டிவிட, அவனோ வேப்பங்காயாக எண்ணி அதை விழுங்கி வைத்தான். அது கட்சிக்காரர்களுக்கு அவர் கொடுக்கும் அல்வா என்பது புரியாதளவுக்கு அருள்மொழி என்ன தத்தியா?
“தலைவரே! ராமசாமி வந்திருக்குறார்” இராஜேந்திரன் ஜெயசந்திரனை அழைத்துப் போய்விட, அருள்மொழியிடம் மரியாதையாய் உரையாட வந்தார்கள் சிலர்.
“சுந்தரமூர்த்தி ஐயா எங்களுக்கு ரோல் மாடல். அரசியல்ல வளர்ந்து வந்த நேரத்துல ஏதோ அசம்பாவிதம். இப்ப உங்களைப் பாக்குறப்ப அவரே வந்து நிக்குற மாதிரி இருக்கு தம்பி. ஐயாவை நம்ம கழகம் மறக்கல இன்னும். ஐயாவோட வாரிசான உங்களையும் எப்பவும் மறக்காது. கைவிடவும் செய்யாது.”
உரிமையாய், அன்பாய், மரியாதையாய் எத்தனை உள்ளங்கள் அவனை வாழ்த்தின என்பதைக் கணக்கிடக் கூட மறந்து போனான் அருள்மொழி. இத்தனை மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருந்த தந்தை மீது பிரமிப்பும் உண்டானது. அந்தச் சூழலின் கசப்பைத் தந்தையின் ஆதரவாளர்களின் அன்பு குறைத்தாலும் போக்கிவிடவில்லை.
சுந்தரமூர்த்திக்கு வேண்டிய சிலர் அருள்மொழியிடம் வந்து வாஞ்சையோடும் மரியாதையோடும் உரையாடுவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஜெயசந்திரனிடம் வந்தார் இராஜேந்திரன்.
“எப்பிடி தலைவரே, இத்தனை வருஷம் இருந்த பிரச்சனையை ஒரு கல்யாணத்தால தீர்த்து வச்சீங்க! உங்களை அரசியல் சாணக்கியன்னு சொல்லுறதுல தப்பேயில்ல.”
“நான் நினைச்சா இருபத்து நாலு மணி நேரத்துல என் மகளுக்கு இவனை விட நல்ல மாப்பிள்ளையைக் கொண்டுவர முடியும்ணே. ஒரு அரசியல்வாதி சின்னதா ஒரு காரியம் பண்ணுனாலும் அதுல அவனுக்கு அதிகபட்ச ஆதாயம் இருக்குற மாதிரி பாத்துக்கணும். நேத்து நைட் முழுக்க யோசிச்சு எடுத்த முடிவு இது. இனிமே என் மகனைத் துணை முதலமைச்சர் ஆக்குனா யாரும் எதிர்ப்பு தெரிவிப்பாங்கனு நினைக்கிறீங்க?”
கர்வமாகச் சொன்னவர், அருள்மொழியை அந்த இடத்தில் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்பதே உண்மை.
அங்கிருந்த அனைவரிடமும் விடைபெற்ற அருள்மொழி அவனது அலுவலகத்தை அடைந்ததும் ஒட்டுமொத்தக் கோபத்தையும் அவனது மேஜையில் கையைக் குத்தி வெளிப்படுத்தினான்.
முந்தைய தினம் வானதியிடம் சொல்லியிருந்தானே – உன் தந்தை பகுதி நேர தந்தையாகவும் முழு நேர அரசியல்வாதியாகவும் இருப்பவரென. அது எத்துணை தூரம் உண்மையென ஜெயசந்திரன் அருள்மொழிக்கு அனுபவத்தில் புரியவைத்துவிட்டார்.
‘நான் அந்தாளைக் குறைச்சு எடை போட்டுட்டேன். அந்தத் தப்பைத் திருத்திக்கணும். அந்தாளைப் பழிவாங்கணும்னா நான் அந்தாள் மாதிரியே யோசிக்கணும். அந்தாளை மாதிரியே செயல்படணும். முக்கியமா பேமிலி சென்டிமெண்ட்டுக்கு நடுவுலயும் எனக்கான ஆதாயத்தை யோசிச்சுக் காய் நகர்த்தணும்.’
குறுக்கும் நெடுக்குமாக நடந்தவனுக்குக் கோபம் தீரவில்லை.
பன்னிரண்டு ஆண்டுகள்! ஒரு தவம் போல அவன் தீட்டிய திட்டம் இது. தனது குடும்பத்தைச் சீரழித்து இல்லாமல் ஆக்கியவனின் குடும்பத்துக்குள் தவிர்க்க முடியாத நபராக நுழைவது இறுதி நேர திருத்தம் மட்டுமே! மற்றபடி எந்த அரசியலுக்காக அவனது தந்தை பழியானாரோ, அந்த அரசியலை விட்டு ஜெயசந்திரனைத் துரத்துவதும், அவரை அரசியல் அனாதை ஆக்குவதும் மட்டுமே அருள்மொழியின் பன்னிரண்டு ஆண்டுகால லட்சியமாக இருந்தது.
தன்னை அவர் நம்ப வேண்டுமென எத்துணை கச்சிதமாய் நடித்து, பழக்க வழக்கங்களில் தந்தையைப் பிரதிபலிக்காமல் இருந்ததற்கான பலனை அறுவடை செய்யவேண்டும் என்றால் அவன் ஜெயசந்திரனின் இன்னொரு அவதாரமாக மாறவேண்டும்.
யோசித்துப் பார்த்தவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. அதையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயசந்திரன் தான். உடனடியாக அகத்தியனின் மொபைல் எண்ணுக்கு அழைத்தான் அருள்மொழி.
“சொல்லுடா அருள்.”
“ஒரு சின்ன ஹெல்ப். இன்னைக்குக் கட்சி ஆபீஸ்க்கு வந்தவங்கள்ல என் அப்பாவுக்கு நெருக்கமானவங்க, விசுவாசமானவங்க யார்? அவங்க விவரம் எல்லாம் எனக்கு வேணும்ணா. இன்னொரு விதமா சொல்லணும்னா யாருக்கெல்லாம் கட்சியோட தலைமை ஆதித்யனை துணை முதல்வராக்குற முடிவை எடுத்ததுல அதிருப்தி இருக்குதோ அவங்க எல்லாரோட விவரமும் வேணும். ஏன் எதுக்குனு கேக்காதிங்க. இந்தக் கட்சிக்காக என் அப்பா உழைச்சிருக்கார். அவரோட விசுவாசம் எனக்குள்ளவும் இருக்கு. என் விசுவாசம் கட்சிக்குத்தானே தவிர கட்சித்தலைமைக்கோ தலைமையோட வாரிசு அரசியலுக்கோ இல்ல.”
“என்னென்னவோ பேசுறியேடா. தலைமை சொல்லுறதை செஞ்சே பழகிட்டோம் நாங்க. நீ பேசுறது புதுசா, வினோதமா இருந்தாலும் சுந்தரமூர்த்தி ஐயாவுக்காக நான் உனக்குத் துணையா இருப்பேன். கட்சி பேருக்கு எந்தக் களங்கமும் வந்துடக்கூடாது அருள். அதுல கவனமா இரு.”
“நிச்சயமா வராதுண்ணா. நான் தான் சொன்னேனே, எனக்கும் இந்தக் கட்சி மேல விசுவாசம் இருக்கு.”
“நீ கேட்ட தகவல் எல்லாம் இன்னைக்கு நைட் உனக்கு வரும்.”
அகத்தியனிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு மனதெல்லாம் எப்படியாவது ஜெயசந்திரனை வலிக்க வலிக்க அடிக்க வேண்டுமென்ற வெறியே!
அவனது மனநிலை இப்படி என்றால் வானதிக்கோ தந்தையின் பேச்சை மீறமுடியாத நிலையும், நண்பனுக்குத் தன்னை நினைவு வந்துவிடாதா என்ற நப்பாசையும் மனதை ஆட்டிப் படைத்தன.
ஜஸ்டிஸ் டுடேவில் அவளது திருமண விவகாரம் அனைவருக்கும் பரவியது. தங்களை நீதிமன்றத்துக்கு வரவழைத்தவனைத்தான் அவள் மணக்கப்போகிறாள் என்ற செய்தி கிடைத்ததும் விஷ்ணு பிரகாஷுக்கு ஆச்சரியம். ஆனால் தவறான ஒருவனிடம் அவள் மாட்டிக்கொள்ளாத நிம்மதியும் அவனுக்கு இருக்கவே மனதார வாழ்த்தினான் வானதியை.
வீட்டுக்குக் கிளம்பியபோது இலக்கியாவிடமிருந்து மொபைல் அழைப்பு.
“எங்களுக்கு இப்பவே ட்ரீட் வேணும்.”
“கல்யாணச் சாப்பாடே போடப்போறோம். தனியா எதுக்கு ட்ரீட்?”
“ஹான்! அதெல்லாம் கிடையாது. எங்களோட பிரண்ட்ஸ் வாழ்க்கைல ஒன்னு சேரப் போறாங்க. இப்ப எங்களுக்கு டபுள் சந்தோஷம். அதனால டபுள் ட்ரீட் வேணும்.”
“நான் ஒன்னு சொல்லட்டுமா? வாங்குற சம்பளத்துல பாதி உங்களுக்கு ட்ரீட் வச்சே காலியாகுது.”
“பஞ்சப்பாட்டு படிக்காம வந்து சேரு தாஜ் கோரமண்டலுக்கு.”
தோழியிடம் வாயாடிவிட்டுக் காரைக் கிளப்பினாள் வானதி. அவள் வந்து சேர்ந்த நேரத்தில் அருள்மொழியும் வந்து சேர்ந்தான். இருவரும் ஒரே நேரத்தில் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது பார்த்துக் கொண்டார்கள்.
“ஹாய்” கையசைத்தாள் அவனிடம்.

“பில் நீ பே பண்ணுறியா? நான் பண்ணட்டுமா?” என வினவினான் அருள்மொழி.
“நான் உனக்கு ஹாய் சொன்னேன். பதிலுக்கு ஹாய் சொல்லணும்ங்கிற பேசிக் மேனர் கூட தெரியாதா? லண்டன்ல இதெல்லாம் கத்துக்கலையா நீ?”
“நீயும் நானும் ஒரே வீட்டுலதான் இருக்குறோம். ஒரு நாளுக்குப் பன்னிரண்டு மணி நேரம் ரேண்டமா பாத்துக்குறோம். இதுல ஹாய் ஹலோக்கு என்ன அவசியம்?”
“எப்பவும் இதே மாதிரிதான் இருப்பியா? கொஞ்சமாச்சும் நார்மலா என்கூட பேசலாம்ல?”
“நார்மலா பேசு, பழைய மாதிரி இருனு நீ எல்லாத்தையும் என்கிட்ட கேட்டு வாங்கணும்னு பிரயத்தனப்படுற வானதி. சில மாற்றங்கள் தானா வரணும். அதை வற்புறுத்தி வர வைக்கப் பாக்குற நீ.”
அவளிடம் பேசும்போதே அருள்மொழிக்கு மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருந்தன. நோட்டிபிகேஷன் வந்துகொண்டே இருக்கவும் அதைப் பார்ப்பதும் வானதியிடம் பேசுவதுமாக இருந்தான் அருள்மொழி.
“ஒன்னு போனைப் பாரு, இல்லனா என்னைப் பாரு. ரெண்டையும் ஒரே நேரத்துல மேனேஜ் பண்ண முடியாது.”
கண்டிப்பானக் குரலில் வானதி சொன்னதும், உச்சு கொட்டிய அருள்மொழி மொபைலைத் தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.
“போகலாமா?” என்று உள்ளே கை காட்டினான்.
“ம்ம்.”
இருவரும் சேர்ந்து ரெஸ்டாரண்டை அடைந்தார்கள்.
“ஹேய் வெல்கம் கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளை!” – ஓடோடி வந்து அணைத்துக் கொண்டார்கள் இலக்கியாவும் சஞ்சயும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நட்பு வட்டத்தோடு இணைந்து நேரம் செலவளிக்கக் கிடைத்த வாய்ப்பு அருள்மொழியின் மனதுக்கு ஒரு மாற்றமாக இருந்தது.
“நதி போன தடவை ட்ரீட் குடுத்தப்ப உன்னை நாங்க ரொம்ப மிஸ் பண்ணுனோம். இதே ஹோட்டல், இதே ரெஸ்டாரண்ட், அப்ப நீ இல்ல. இப்ப அச்சு இல்ல” என்றான் சஞ்சய்.
“மேரேஜ் முடிஞ்சு சென்னை வந்ததும் இன்னொரு ட்ரீட் வைப்போம். அப்ப அஞ்சு பேரும் சேர்ந்து என்ஜாய் பண்ணலாம்” என்றான் அருள்மொழி.
“நிஜமாவா? பிராமிஸ்?” இலக்கியா ஆர்வத்தோடு அவனிடம் கை நீட்ட,
“உன் பக்கத்துல இருக்குறவன் மேல பிராமிஸ்” என்று சொல்லி கண் சிமிட்டி அவளது உள்ளங்கையில் அடித்துச் சத்தியம் செய்தான் அவன்.
அவர்கள் மூவரும் சிரிக்க, அங்கே அந்நியப்பட்டுப் போனாள் வானதி. இதே போல நேசமும் கேலியுமாகத் தன்னிடம் பேச அருள்மொழிக்கு ஏன் தோன்றவில்லை என்ற எண்ணமே அவளை அந்நியப்படுத்தியது இந்தச் சூழலில் இருந்து.
‘எதையும் கேட்டு வற்புறுத்தி வாங்காதே’ அருள்மொழி சொன்ன அறிவுரை பாரசிட்டமால் மாத்திரையாகக் கசந்தாலும் அதை விழுங்கி வைத்தாள் மானசீகமாக.
“நீ ஆர்டர் பண்ணலையா நதி?” இலக்கியா உலுக்கியபடி மெனு கார்டை அவளது கரத்தில் திணித்த பின்னரே இயல்புக்குத் திரும்பினாள், தனியே யோசனையில் கரைந்திருந்த வானதி.
“ஹான்! பிரான் பெப்பர் ப்ரை வித் சாஃப்ரான் ரைஸ்.”
தலையைக் குனிந்தபடி அவள் ஆர்டர் செய்ததுதான் தாமதம், அருள்மொழியின் முகம் மாறியது.
“பிரானா? உனக்கு சீ-ஃபுட் அலர்ஜியில்ல?”
மெனுவை ஆராய்ந்து கொண்டிருந்த வானதியின் தலை வேகமாக நிமிர்ந்தது. அவளது கண்கள் மட்டுமில்லை, இலக்கியா சஞ்சயின் கண்களும் அருள்மொழியைத் திகைப்பும் குழப்பமுமாக ஒருசேர நோக்கின.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் அல்லவா! இங்கே அகப்பட்ட அருள்மொழி சிக்கித் தவிப்பானா? அல்லது சாமர்த்தியமாகத் தப்பிப்பானா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

