“உனக்கு நம்ம ஈவினிங் டிவி டைம் ஞாபகம் இருக்குதா? அப்ப மாமா, அத்தை, நீ என் ஃபேமிலினு எல்லாருமே முகிலகத்துலதான் இருந்தோம். அந்த டிவி டைம்ல ஒரு யுத்தமே நடக்கும் நமக்குள்ள. நீ பென் டென் பாக்கணும்னு சொல்லுவ. சஞ்சய் டாம் அண்ட் ஜெர்ரிக்குச் சண்டை போடுவான். நானும் இலக்கியாவும் பவர் பஃப் கேர்ள்ஸ் பாக்கணும்னு ரிமோட்டைப் பிடுங்குவோம். அதெல்லாம் அழகான ஸ்கூல் டே மெமரிஸ் தெரியுமா?”
-வானதியின் கடிதம்…
அருள்மொழி கதவைத் திறந்துவிடுவதை முகச்சுணக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி. நிதானமாக உள்ளே வந்தவன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே மேலும் கீழுமாகப் பார்த்தான்.
“உனக்குச் சிவிக் சென்ஸ் இல்லையோனு ஏர்போர்ட்ல ஒரு டவுட் வந்துச்சு. இன்னைக்கு அதை நேர்லயே பாத்துட்டேன். செருப்பால அடிச்சிருக்க அவனை. இதெல்லாம் எப்பிடி கத்துக்கிட்ட? இல்ல ஜீன்ல உள்ளதா?”
வானதி ‘ஒரு நிமிடம்’ என அவனிடம் சைகை காட்டிவிட்டுக் குளியலறைக்குள் சென்றவள், திரும்பி வந்தபோது முகத்தில் தண்ணீர்த் துளிகள் ஒட்டியிருந்தன. டவலில் துடைத்தபடியே,
“உனக்கு நான் ஸ்கூல்ல சண்டை போட்டது எதுவும் ஞாபகம் இல்ல. ஆனா அங்க எப்பிடி குறுக்க புகுந்து தடுப்பியோ அதே மாதிரி இன்னைக்கும் நீ செஞ்சிருக்க. இதுக்குப் பேர் என்ன?” என்று கேட்க,
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

“மசில் மெமரினு வச்சுக்கலாம். நாம சில விஷயங்களை மறந்தாலும் நம்மளோட மசில் மெமரி மறக்காதுனு சொல்லுவாங்க” என்றான் அவன் திறமையாக.
“ஓஹ்! மசிலுக்கு இருக்குற மெமரி மூளைக்கு இல்ல. நிச்சயமா மிராக்கிள் தான்” போலியாக ஆச்சரியம் காட்டியவள், திடுமென “தேங்க்ஸ்” என்று சொல்லி அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.
“எதுக்கு?”
“இன்னைக்கு பிரஸ் மீட்ல அப்பா கிட்ட ஏடாகூடமா கேள்வி கேட்டவங்களைச் சமாளிச்சதுக்கு.”
“அந்த ரிப்போர்ட்டரை தான் கண்டவன்னு சொன்னியா?”
“இல்ல! லீடர் ஆஃப் ஆப்போசிஷன். அந்தாளைத்தான் சொன்னேன்.”
அருள்மொழி புருவங்களைச் சுருக்கினான்.
“அவருக்கும் உன் அப்பா வயசு வானதி.”
“சோ வாட்? எங்கப்பாவோட அரசியலைக் கேள்வி கேக்க அந்தாளுக்கு உரிமை இருக்கு. என் கல்யாண விஷயத்துல வந்த சறுக்கலை அரசியலோட இணைச்சுப் பேசுறது எவ்ளோ கேவலமான வேலை? அதைச் செய்யுறவனுக்கு மரியாதை ஒரு கேடு. என் அப்பா என்னோட ஹீரோ. அவர் இந்த விஷயத்துல கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டார். அதுக்காக எவன் வேணும்னாலும் எங்கப்பா மேல கல் எறிவானா?”
ஜெயசந்திரனுக்காக வானதி மூச்சு பிடிக்கப் பேசுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. சிறுவயதிலேயே அவள் அப்பா பெண்தான். ஜெயசந்திரனுக்கும் மகள் மீது ஸ்பெஷல் அன்பு உண்டு.
ஆனால் வளர வளர பெண்களுக்கு அன்னையின் மீது அந்த ஹீரோயிஸ பார்வை இடம் மாறும். வானதிக்கு இன்னும் அப்படிப்பட்ட மாற்றம் நடைபெறவில்லை எனப் புரிந்துகொண்டான் அருள்மொழி.
“எனக்குத் தேங்க்ஸ் எல்லாம் தேவையில்ல. உங்கப்பாக்கு நான் நன்றிக்கடன் பட விரும்பியதில்ல. ஆனா என் தலையெழுத்து என்னை நன்றிக்கடன்பட வச்சிடுச்சு. லண்டன்ல நான் வாழுற வாழ்க்கை யாரோட காசுல? உன் அப்பாவோட காசுலதானே? ஐவி மேனரோட ஓனர் தர்மலிங்கம் மாமானு உலகம் நம்புது. ஆனா அவர் லண்டன்ல உன் அப்பா பிசினஸையும் அந்த ஐவி மேனரையும் நிர்வகிக்குற பினாமினு எனக்கு நல்லா தெரியும். எனக்கு இவ்ளோ சௌகரியமான வாழ்க்கைய, நல்ல படிப்பை, லண்டன் ஹை சொசைட்டியில கௌரவமான இடத்தை குடுத்தவர் உன் அப்பா. அதுக்கான ஒரு சின்ன கைமாறு.”
வானதி அவனைக் கேலியாகப் பார்த்தவள், “அவரோட மக தான் நான். என்னைக் கோர்ட்டுக்கு இழுக்குற. இது நன்றிக்கடன்ல சேர்த்தியா?” என்க,
“அது என் வேலை. உன் இடத்துல யார் இருந்தாலும் நான் அதைத்தான் செய்வேன்” என்றான் அருள்மொழி நிமிர்வாக.
வானதி மறுப்பாய்த் தலையசைத்தாள்.
“இருந்தாலும் உனக்கு என் மேல ஏதோ ஒரு கோவம் இருக்கு. என்னால அதைப் புரிஞ்சிக்க முடியுது.”
அருள்மொழி அலட்சியமாய்த் தோள்களைக் குலுக்கியவன், “அது உன்னோட ஊகம். அதுக்கு நான் பொறுப்பில்ல” என்றவன் மேற்கொண்டு உரையாடலை வளர்க்காமல் கிளம்பிவிட்டான்.
அடுத்து என்ன செய்யவேண்டுமென அவனுக்குத் தெரியும். நேரே கயல்விழியைத் தேடிச் சென்றவன், அவரும் ஜெயசந்திரனும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க நேர்ந்தது.
“எல்லாரும் கல்யாணம் நின்னதை வச்சு கேலியா பேசுவாங்க. நான் எவ்ளோ பெருமையா என் சொந்தக்காரங்க எல்லாரையும் அழைச்சேன் தெரியுமா? உங்களுக்கும் இது தலைகுனிவுதான். இதை யோசிச்சு யோசிச்சே என் தலை வெடிக்குதுங்க.”

“புரியுது கயல். கல்யாணத்தை நிறுத்துறது நமக்கும் அசிங்கம்தான். ஆனா வானதிக்கேத்த மாப்பிள்ளைக்கு எங்க போறது? தேன்மலைக்குப் போக நம்மகிட்ட ரெண்டே நாள் தான் டைம் இருக்கு. அவசரத்துல கல்யாணம் பண்ணிச் சாவகாசமா உக்காந்து அழச் சொல்லுறியா?”
அவர்கள் பேசிக்கொண்டேயிருக்கையில் அந்த அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே பிரவேசித்தான் அருள்மொழி. அவனைக் கண்டதும் கயல்விழியின் கண்களில் சின்னதாய் ஒரு நப்பாசை.
அவன் ஜெயசந்திரனின் கண்களை நேரடியாகப் பார்த்தபடியே, “நான் வானதியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் எவ்வித தயக்கமும் இல்லாமல்.
ஜெயசந்திரனுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சிதான். உடனடியாகச் சம்மதிக்கவும் தோன்றவில்லை. சுந்தரமூர்த்தியின் மகன் என்ற ஒரு காரணம் மட்டுமே அவரது தயக்கத்துக்குக் காரணம்.
ஆனால் அதே காரணத்தை வைத்து மகளைத் தாராளமாக இவனுக்குத் திருமணம் செய்தும் வைக்கலாம். ஏனெனில் சுந்தரமூர்த்தி நேர்மையின் திருவுரு. மீனாட்சியைத் தவிர வேறொருத்தியைக் கனவில் கூட நினைத்தவர் இல்லை.
ஜெயசந்திரனின் அமைதியை வேறுவிதமாகக் கணித்தான் அவன்.

“நீங்க முதலமைச்சர். உங்க ஸ்டேட்டஸை வச்சு யோசிக்குறீங்கனு நினைக்கிறேன். நான் ஸ்டேட்டஸ்ல உங்களை விட எந்த விதத்துலயும் குறைஞ்சவன் இல்ல. லண்டன்ல இருக்குற ஃபேமஸ் பாரீஸ்டர்ல ஒருத்தன் நான். உங்க மக வருஷம் முழுக்கச் சம்பாதிக்குற பணத்தை நான் ரெண்டே கேஸ்ல சம்பாதிச்சிடுவேன். நான் இந்தக் கல்யாணப் பேச்சை எடுத்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு” என நிறுத்தியவன், “இன்னைக்கு நான் இருக்குற இந்த உயரத்துக்கு நீங்க ஒருவிதத்துல காரணம். மத்தபடி அன்பு பாசம்னு எனக்கு உங்ககிட்ட எதுவும் கிடையாது. ஏன்னா உங்களைப் பத்தி எந்த ஞாபகமும் எனக்கு இல்ல. யோசிங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டான்.
போகிறவனைப் பார்த்த கயல்விழி ஆர்வமாய்க் கணவரின் கையைப் பற்றினார்.
“நானும் இதைத்தான் சொல்லணும்னு நினைச்சேன்ங்க. நாம ஏன் நிச்சயிச்ச நாள்ல அருளுக்கும் வானும்மாக்கும் கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாது? அவங்க சின்ன வயசுல இருந்து ஒன்னா பழகுன ஃப்ரெண்ட்ஸ். அருள் கூட கல்யாணம் நடந்துச்சுனா நம்ம பொண்ணு வாழ்க்கையை நினைச்சு நாம என்னைக்கும் கவலைப்படுற மாதிரி சூழல் வராது. என்ன சொல்லுறீங்க? அருள் நல்ல பையன்.”
ஜெயசந்திரன் யோசனையில் ஆழ்ந்தார். மனைவியின் கவலை முகம் அவரை வருத்தியது.
“நீ கவலைப்படாத கயல். நான் இருக்கேன்ல. சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுக்குறேன்.”
மனைவியிடம் உறுதியளித்தவர் நேரே வந்தது நூலக அறைக்குத்தான். சற்றும் தாமதிக்காமல் தர்மலிங்கத்தின் மொபைல் எண்ணுக்கு அழைத்தார் மனிதர்.
“சொல்லுங்க தலைவரே! உங்ககிட்ட பேச முடியல. நியூசிலாந்து வந்திருக்கோம் நானும் மெகனும்.”
“வெகேஷன் நல்லா போகுதா தர்மா? இங்க ஒரு சின்னச் சிக்கல்.”
“என்னாச்சு தலைவரே?” பதறிவிட்டார் தர்மலிங்கம்.
“வானதியோட கல்யாணம் இப்ப சிக்கல்ல இருக்கு தர்மா” என்ற ஜெயசந்திரன் ஆதர்ஷின் வரலாறைச் சொல்லி முடித்தார்.

“சும்மாவா விட்டீங்க அந்தப் பயலை? எவ்ளோ தைரியம் இருந்தா இந்தக் கேவல வேலையைச் செஞ்சிட்டு உங்க குடும்பம் கூடச் சம்பந்தமும் வச்சிருந்திருப்பான்?”
“அவங்க மீடியா குடும்பம் தர்மா. அந்த ஒரு காரணத்துக்காக விட்டு வச்சிருக்கேன். இல்லனா என் பொண்ணு வாழ்க்கையைத் துச்சமா நினைச்ச ஒவ்வொருத்தரையும் சும்மாவா விட்டிருப்பேன்? எலக்சன் வேற இந்த வருஷம் வருது. அதுக்காகப் பல்லைக் கடிச்சிட்டிருக்கேன். நான் உனக்குக் கால் பண்ணுனது வேற ஒரு விஷயமா. நிச்சயிச்ச நாள்ல கல்யாணம் நடக்கலனா பெரிய அசிங்கமா போயிடும் தர்மா. சுந்தரமூர்த்தி மகனுக்கும் வானதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு உன் மதினி ஆசைப்படுறா. அவன் எப்பிடி? அவங்கப்பனை மாதிரி விவகாரம் பிடிச்சவனா?”
மறுமுனையில் தர்மலிங்கத்துக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர் கண்பார்வையில் வளர்ந்தவன் அருள்மொழி. அவர் அவனைக் கண்காணித்தவரைக்கும் ஊர்ஜிதமான அவனது குணாதிசயங்களை ஜெயசந்திரனிடம் விளக்கினார்.
“தம்பி தங்கம் தலைவரே! தொழில்ல கற்பூரம். சுந்தரமூர்த்தி ஐயா மாதிரி நேர்மை நியாயம்னு பேசிப் பிழைக்கத் தெரியாத ஆள் இல்ல. காசு விஷயத்துல கழுகு மாதிரி இருப்பான். இந்த ஊர்ப்பழக்கம் மாதிரி டேட்டிங் கீட்டிங்னு எந்தப் பக்கமும் திரும்பாத ஆளு. இன்னொரு முக்கியமான விஷயம் தலைவரே! அருள்மொழிக்கு உங்க மேல நன்றிக்கடன் அதிகம். அவனே அடிக்கடி சொல்லுவான். நீங்க தம்பிக்கு வானும்மாவை கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா எப்பவுமே அதுக்காக வருத்தப்படுற சூழல் வராது. நான் கேரண்டி தர்றேன்.”
“அப்பிடியா சொல்லுற?”
“தம்பி நான் பாத்து வளர்ந்த ஆளு தலைவரே! இனி தம்பிக்கு ஞாபகம் எதுவும் திரும்ப வர வாய்ப்பில்ல. மெகன்ல ஆரம்பிச்சு எல்லா டாக்டரும் சொன்னது இதைத்தான். நீங்க யோசிக்காம கல்யாணத்தை நடத்துங்க. ஆனா ஒன்னு, என்னால கல்யாணத்துக்கு வரமுடியாது. உங்க விவகாரமா சுவிஸ் போகவேண்டியது இருக்கு தலைவரே.”
“சரி தர்மா! நீ அந்த வேலையை பாரு. நானும் கொஞ்சம் யோசிக்கணும்.”
“நல்ல முடிவா எடுங்க தலைவரே. இந்தக் காலத்துல வெளியாளுங்களை நம்ப முடியுறதில்ல. அருள்மொழிக்கு வானும்மாவை கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா காலம் முழுக்க நம்ம கண்ணு முன்னாடி இருப்பாங்க ரெண்டு பேரும்.”
தர்மலிங்கம் வலியுறுத்தியதை மனதில் ஏற்றபடியே அழைப்பைப் பேசி முடித்தார் ஜெயசந்திரன். நூலக அறையின் சோஃபாவில் சாய்ந்துகொண்ட மனிதரின் முகத்தில் சோர்வு சூழ்ந்துகொண்டது.
“நீ மட்டும் என் வழியில குறுக்க வராம இருந்திருந்தா இந்நேரம் உரிமையா நாம சம்பந்தம் பண்ணியிருந்திருக்கலாம். உன் அவசரம் உனக்குச் சாவை வரவழைச்சிடுச்சு. ஹூம்! உன் மகன் தான் எனக்கு மருமகனா வரணும்னு எழுதி வச்ச கடவுள், நீ அல்பாயுசுல செத்துடக்கூடாதுனும் எழுதியிருக்கலாம்.”
காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி தன் எதிரே நிற்பதைப் போல் கற்பனை செய்துகொண்டு ஏளனமாகப் பேசியவர், நேரம் எடுத்து யோசித்ததில் அருள்மொழிக்கும் வானதிக்கும் திருமணம் செய்யும் முடிவை எடுத்துவிட்டார்.
மறுநாள் காலையில் வானதி அலுவலகம் கிளம்பும் அவசரத்திலிருக்க, அருள்மொழியும் அவனது அலுவலகத்துக்குச் செல்ல ஆயத்தமாகி வர, இருவரையும் அழைத்துத் தன் முன்னே அமர்த்தி வைத்துத் திருமணம் குறித்த தனது முடிவைக் கூறினார் ஜெயசந்திரன். கூடவே கயல்விழியும் முகமெல்லாம் பூரிப்போடு அமர்ந்திருந்தார்.
“கல்யாணம் நின்னுடுச்சுனா அது அப்பாக்குத் தலைகுனிவு வானும்மா. அதனால உனக்கும் அருளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நானும் உன் அம்மாவும் பேசி முடிவு பண்ணிருக்கோம்.”

அருள்மொழி இதமாய்த் முறுவலித்தான். ஆனால் வானதியின் முகத்தில் குழப்பம். “அருளா?” என்றவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
‘இவனுக்கு என்னை ஞாபகமில்லை, என் நட்பை உதாசீனப்படுத்துகிறான். ஏதோ ஒரு வெறுப்பு என்னிடம் இவனுக்கு. நிச்சயம் இவன் சம்மதிக்கமாட்டான்.’
அவள் யோசிக்கும்போதே, “எனக்குச் சம்மதம் மாமா. எனக்குச் சொந்தக்காரங்கனு இருக்குறது என் பெரியம்மா மட்டும்தான். அவங்ககிட்ட மட்டும் அத்தையை முறைப்படி பேசச் சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டான்.
வானதி அதிர்ச்சியோடு எழுந்தாள்.
“ஹேய்! நான் இன்னும் சம்மதம் சொல்லல.”
“சரி! இப்ப சொல்லு!”
“எதுக்குச் சொல்லணும்? உனக்குத்தான் என்னை ஞாபகமே இல்லையே.”
“பழசைப் பேசி கல்யாணத்தைத் தட்டிக் கழிக்கப்போறியா?”

“எது பழசு? என் ஃப்ரெண்ட்ஷிப் உனக்குப் பழங்கதையா தெரியுதா?”
சிறுபிள்ளைகள் போல அவர்கள் அடித்துக்கொண்டது ஜெயசந்திரனுக்கு ருசிக்கவில்லை. “கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா ரெண்டு பேரும்?”
அமைதியானார்கள் இருவரும். இருவரது பார்வையும் ஜெயசந்திரன் மீதே!
“இங்க பாரு வானும்மா! உன்னை மட்டுமில்ல, நம்ம யாரையும் அருளுக்கு ஞாபகம் இல்ல. அவன் தலையில பட்ட அடி அவனுக்கு எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சு. இது அவன் தப்பில்ல.”
“ஆனா அச்சு, இலக்கியா, சஞ்சய்யை மட்டும் இவனுக்கு எப்பிடி ஞாபகம் இருக்கு?” ஆதங்கமாய் வினவினாள் அவள்.
“எனக்கு மனுஷ மூளையைப் பத்தி எதுவும் தெரியாது வானும்மா. ஆதர்ஷை நான் சொன்னதுக்காக மட்டும் முழுமனசோட கல்யாணம் பண்ண நீ சம்மதிச்ச. ஆனா அருளைப் பத்தி உனக்கு எல்லாமே தெரியும். ஏன் இவனைக் கல்யாணம் பண்ண இவ்ளோ யோசிக்குற?”
“என் மேல டெல்லியில ஒரு கேஸ் நடக்குதே, அதுக்கு வாதாடப்போறதே இவன் தான். கொஞ்சமும் நேர்மை இல்லாத அட்வகேட் இவன். இவன் எப்பிடி எனக்கு நல்ல லைஃப் பார்ட்னரா இருப்பான்னு நீங்க நம்புறீங்க?”
“வானும்மா! நிதர்சனத்தைப் புரிஞ்சு பேசு. தொழில் வேற சொந்த வாழ்க்கை வேற. அவங்க குடுக்குற ஃபீஸ்க்கு இவன் வாதாடுறான். இதுல என்ன தப்பிருக்கு? இவனை விட பெஸ்ட்டா ஒரு அட்வகேட்டை வச்சு அந்த கேஸ்ல நீ ஜெயிச்சுக் காட்டு. அதோட எனக்கு எந்தக் கதையும் தேவையில்ல. சொன்ன தேதியில தேன்மலையில கல்யாணம் நடக்கணும். அதுவும் உன் முழு விருப்பத்தோட. ஏன்னா அரசியல், சொந்த வாழ்க்கை ரெண்டுலயும் என் கௌரவத்தைத் தீர்மானிக்கப்போற கல்யாணம் இது. அப்பா உனக்குக் கெட்டது நினைக்கமாட்டேன்னு நம்புறனா நீ சம்மதம் சொல்லு.”
வானதி கப்சிப்பாகிவிட்டாள். கயல்விழி மகளிடம் கண்களால் இறைஞ்சினார். அவள் அருள்மொழியைத் திரும்பிப் பார்த்தாள்.
“ஹூ நோஸ்? உன்னைக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம் நீ யார்னு எனக்கு ஞாபகம் வரலாம்ல?” அவளது காதோரம் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அருள்மொழி சொல்லவும், வானதியின் மனதில் சின்னதொரு நப்பாசை பூத்தது.

“சப்போஸ் வரலனா?”
“வந்தா நாம ஃப்ரெண்ட்ஸ் கம் கபிளா இருக்கலாம். இல்லனா நல்ல கபிளா மட்டும் இருக்கலாம்.”
இருவரும் அவர்களுக்குள் பேசிக்கொள்வதை ஜெயசந்திரன் கவனித்தார். வானதி பெருமூச்சுவிட்டாள். அருள்மொழியிடம் அவசரம் இல்லை, அலட்டலும் இல்லை; நிதானமாய் அவனது மனதிலுள்ளதைக் கூறிவிட்டான்.
தந்தை சொன்னது போல யாரென்றே தெரியாத ஆதர்ஷை மணக்க எந்தத் தைரியத்தில் சம்மதித்தாள்? அருள்மொழி என்ன யாரோ ஒருவனா? இவனை மணக்க ஏன் தயங்கவேண்டும்?
“சரிப்பா! எனக்குச் சம்மதம்” என்றவள் யாரிடமும் பேச விரும்பாமல் அலுவலகத்துக்குச் செல்ல அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

“நானும் கிளம்புறேன் மாமா” என்று எழுந்தான் அருள்மொழி. ஜெயசந்திரன் அவனது கையைப் பற்றிக் குலுக்கியவர், “தேன்மலைக்குப் போக இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. வேலை எதுவும் இருந்தா முடிச்சிருங்க மாப்பிள்ளை” என்க, சரியெனத் தலையசைத்தவன் அவனது உபயோகத்துக்காக முகிலகத்தின் தரிப்பிடத்தில் நிற்கும் காரில் ஏறி, ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் தனது நிறுவனத்துக்குக் கிளம்பினான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

