இனி இழப்பதற்கு ஏதுமில்லை
இனியவை பகிர நிறைய இருக்கிறது!
பயங்கள் துறந்த பாஷையிது
கடலில் கலக்கும் இரு நதிகள்
கரையைத் தழுவும் கடைசி நொடிகள்!
அர்த்தங்கள் ததும்பும் எளிய பேச்சில்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அழகியல் ஆயிரம் வசிக்கிறது மூச்சில்!
-அட்சரனின் வேதா
“இப்பதான் சாப்பிட்டு முடிச்சோம் ஆன்ட்டி. வேதாவோட அவியல் ருசி இன்னும் நாக்குலயே நிக்குது”
வேதவதியின் அறையில் அமர்ந்து அவளது மொபைலில் கனகவல்லியிடம் வீடியோ காலில் உரையாடிக்கொண்டிருந்தாள் வானதி. அவளும் அருள்மொழியும் விருந்துக்காக வருவதை அறிந்து வானதியின் நலன் விசாரிப்பதற்காக வீடியோ காலில் அழைத்திருந்தார் அவர்.

“மருமகன் நல்லா இருக்கார்ல? வீட்டுல அம்மா அப்பா அண்ணன் மதினி, குட்டிப்பையன் எல்லாரும் சொகமா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க. இங்க வேதாவும் சூப்பரா இருக்கா. அவளுக்குக் காலேஜ்ல புதுசா ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சிருக்காங்க. அவ இப்ப பழைய வேதா இல்ல. நல்ல மாற்றம் தெரியுது அவளுக்குள்ள. இந்த ஊர் அவளை இன்னுமே மாத்தும் பாருங்க”
வானதி பேசிக்கொண்டிருக்கையிலேயே அங்கே வந்த ராஜேஸ்வரி “பாயாசம் குடிக்காம வந்துட்டியாம். அருள் சொன்னான். இந்தா குடி. நான் கொஞ்சம் சம்பந்தியம்மா கிட்ட பேசணும்” என்று பாயாசம் நிரம்பிய கிண்ணத்தை அவள் கையில் திணித்துவிட்டு மொபைலை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
அவர் போனதும் பாயாசம் சாப்பிட்டபடியே வேதவதியிடம் உரையாட ஆரம்பித்தாள் வானதி.
“நீயும் அச்சுவும் இன்னைக்கு எங்களுக்கு ஒன்னா விருந்து பரிமாறுனீங்கல்ல. என் மனசு குளிர்ந்து போச்சு வேதா. இப்பிடியே எப்பவும் நீங்க ஒன்னா இருக்கணும்”
வேதவதி பெருமூச்சு விட்டாள்.
“நாங்க எங்க ரிலேஷன்ஷிப்புக்கு கூலிங் ஆஃப் பீரியட் குடுத்திருக்கோம்”
அவள் சொன்னதும் பாயாசத்தோடு வாயில் வைத்தக் கரண்டியை எடுக்காமல் அதிர்ச்சியாய் விழித்தாள் வானதி.

“என்னோட ஸ்டடீஸ் முடியுறதுக்கு இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு. அது முடிஞ்சதும் நாங்க பிரியுறோம்னு ஃபேமிலில அனவுன்ஸ் பண்ணிடுவோம்”
வானதியால் இந்த உண்மையைச் சீரணிக்க முடியவில்லை.
“யாருடி இந்த ஐடியாவ குடுத்தது? அச்சுவா?”
“ம்ம்”
“அவன் சொன்னா நீ தலையாட்டிடுவியா வேதா? ஏன் உன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை நீ அடுத்தவங்களை எடுக்க விடுற?”
“ஏன்னா எனக்கு என் முடிவுகள் மேல நம்பிக்கை இல்ல.” சுருக்கமாகச் சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள் வேதவதி.
“வேதா என்னடி இது?” மனம் பொறுக்கவில்லை வானதிக்கு.
“இது நல்ல ஐடியாதானே வானு? விருப்பமே இல்லாதக் கல்யாண பந்தத்துல எப்பிடி எங்களால இணைய முடியும் சொல்லு. யாழு சொன்னாளே, யாரோட மனசுக்கும் வாழ்க்கைக்கும் இன்னொருத்தர் பொறுப்பாக முடியாதுனு. அது நூறு சதவிகிதம் உண்மை. என் பேரண்ட்ஸ் புகுந்தவீட்டு உறவுக்கு ஒரு வாய்ப்பு குடுத்துப் பாருனு சொன்னாங்க. நான் வந்தேன். அட்சரன் ஒரு டைம் பீரியடுக்கு அப்புறம் பிரிஞ்சிடலாம்னு சொல்லுறார். அதுக்கும் சரினு சொல்லிட்டேன். ரெண்டுமே எனக்குப் பாதகமான முடிவுகளா தோணல வானு. எனக்கு வாழ்க்கையப் பத்தி நிறைய கனவு இருக்கு. அதே மாதிரி அவருக்கும் இருக்கும். கொஞ்சமும் பொருத்தமில்லாதவங்க நாங்க ரெண்டு பேரும். சமுதாயத்தோட அழுத்தத்துக்காக நாங்க சேர்ந்து வாழ்ந்தா எங்களால பாதிக்கப்படப்போறது வருங்கால சந்ததிதான். பிடிக்காத ரெண்டு பேர் புருசன் பொண்டாட்டியா வாழ்ந்துடலாம். ஆனா ஒரு குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தைக் குடுக்க முடியாது. மோசமான குடும்பச்சூழல்தான் அந்தக் குழந்தைக்குப் பரிசா கிடைக்கும். எனக்கும் அவருக்கும் அட்ஜஸ்ட் பண்ணி வாழுறதுல எல்லாம் உடன்பாடு இல்ல வானு. இந்த முடிவுதான் சரி”
வேதவதி இங்கே பேசிக்கொண்டிருந்த அதே விவகாரத்தைத்தான் அருள்மொழியிடம் அட்சரனும் சொல்லிக்கொண்டிருந்தான்.
“கூலிங் ஆஃப் பீரியட் எல்லாம் சரிதான்டா. ஆனா அதுக்கு அப்புறம் பிரிஞ்சே ஆகணும்னு என்ன கட்டாயம்? இதைச் சேர்ந்து வாழுறதுக்கான வாய்ப்பா மாத்திக்கலாமே?” ஆதங்கமாய் வினவினான் அருள்மொழி.
அட்சரனின் இதழ்களில் சன்னச்சிரிப்பு.
“அந்தப் பொண்ணோட டேஸ்டும் என் டேஸ்டும் ஒத்துவராது அருள். அவளோட கதைகள்ல வர்ற ஒவ்வொரு ஆசையும் எனக்கு அவளோட ஆசையாதான் தெரியுது. அதெல்லாம் எனக்குக் கிரிஞ்சா தோணுது. எங்களுக்குள்ள வைப் செட் ஆகாது மச்சி. அவளோட சின்னச் சின்ன கனவுகளை எவன் நிறைவேத்துவானோ அப்பிடி ஒருத்தன்கூட அவ வாழட்டுமே”
அருள்மொழியின் முகத்தில் அத்துணை அதிருப்தி.
“எனக்கும் வானதிக்கும் இடையில பெரிய விரிசல் இருக்கு. ஆனா என்னைக்கும் அவ கையை நான் விடமாட்டேன். நமக்கானவங்கனு ஆன அப்புறம் அவங்களை இன்னொருத்தருக்கு விட்டுக்குடுக்குறதெல்லாம் என்னால கற்பனை பண்ணவே முடியல. நீ எப்பிடி இதெல்லாம் சாதாரணமா சொல்லுற? ஷீ இஸ் மிஸஸ் அட்சரன். நாளைக்கு வேற எவனோட பேரோ அவ பேருக்குப் பின்னாடி வந்தா உனக்குக் கஷ்டமா இருக்காது?”
“அவளை நான் லவ் பண்ணல அருள்.”
“நானும் வானதிய லவ்வா பண்ணுனேன்? எங்களோடது அரேஞ்ச்ட் மேரேஜ்தான்”

“டேய்! அரேஞ்ச்ட் பை யூ. அதுதான் உண்மை. என்கிட்ட உன்னால எதையும் மறைக்க முடியாது”
“ஏதோ ஒன்னுடா. ஆனா நீ யோசிக்கணும் அச்சு! இது நல்லா இல்ல. ஒன்றரை வருஷத்துல ஒரு நிமிஷம் கூடவா உன்னால அவளை நேசிக்க முடியாதுனு நினைக்குற? லைஃப் இஸ் ஹைலி அன் – பிரடிக்டபிள். நாளைக்கு நடக்குறதையே நம்மளால கணிக்க முடியாதப்ப நீ எப்பிடி ஒன்றரை வருஷத்துல ரெண்டு பேர் மனசும் மாறாதுனு கணிச்ச?”
“ப்ச்! எனக்கு அவ மேல இன்ட்ரெஸ்ட் இல்ல இப்ப வரைக்கும். இனியும் வராதுனு ஒரு நம்பிக்கைதான். அவளுக்குப் பிடிச்ச ஒருத்தன்கூட வாழ்ந்துட்டுப் போகட்டுமே.”
“திடீர்னு என்ன கரிசனம் அந்தப் பொண்ணு மேல? தாம்தூம்னு குதிச்சவன் இவ்ளோ முன்ஜாக்கிரதையா திட்டமெல்லாம் போட்டிருக்குற?”
“என்கிட்ட வார்த்தைக்கு வார்த்தை சண்டை போட்டா என்னால பதிலடி குடுக்க முடியும். அவ அன்னைக்கு அழுதுட்டா. அவ என்கிட்ட திமிரா பேசுனா நானும் திமிரா பதிலடி குடுக்கலாம். கண்ணீருக்கு முன்னாடி என்னால எதுவுமே பண்ண முடியாதுடா அருள். இந்த அரேஞ்ச்மெண்ட் எங்க ரெண்டு பேருக்கும் நல்லது.”
முடிவாய் அட்சரன் சொல்லிவிட, அவனது மனதை மாற்றமுடியாத ஏமாற்றத்தோடு அருள்மொழி வானதியோடு விடைபெற்றான் அங்கிருந்து.
இதற்கடுத்த நாட்களில் அட்சரனுக்குச் சாதகமாய் நடந்தது ஒரு சம்பவம் வேதவதி அவளது மேனுஸ்கிரிப்ட்டை அவனிடம் கொடுத்தது மட்டும்தான்.
“இன்டர்நேஷனல் புக்ஃபேருக்கான வேலை இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சிடும். அதுக்கு அப்புறம் உன் புக்ல நாங்க ஒர்க் பண்ண ஆரம்பிச்சிடுவோம். அடுத்தக் கதை எப்ப எழுதுறதா உத்தேசம்?”
அட்சரன் கேட்டதற்கு எழுதமாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டாள் அவள்.
இந்நிலையில் ஒருநாள் கல்லூரி முடிந்ததும் அவளை அழைத்துச் செல்ல அட்சரனே வந்திருந்தான்.
“ஹாய் ப்ரோ! கதை படிக்குற வேலை எதுவும் இல்லையா?” என்று பிரியம்வதா குறும்பாய் வினவ மற்ற அனைவரும் நகைத்தார்கள், வேதவதியும்தான்.
“இது அவ்ளோ பெரிய ஜோக் இல்லையே. பேசாம உன் பேரை பிரியம்வதால இருந்து மொக்கை ஜோக் மினியன்னு மாத்திக்க” என்று அவளை பதிலுக்குக் கலாய்த்துவிட்டு வேதவதியைக் காரில் ஏறச் சொன்னான் அவன்.
வேதவதி காருக்குள் போகும் முன்னர் தடுத்தாள் பிரியம்வதா.
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ. பெரிய பெரிய புக்குல உள்ள கதை எல்லாம் படிக்குறீங்க. சிவல்ரி இல்லாம பிஹேவ் பண்ணுறீங்களே. ஒய்ஃபிக்கு ஹப்பி கார்க்கதவைத் திறந்துவிடணும். அதுதான் சிவல்ரி. வேதா அப்பாவிங்கிறதால நீங்க அதெல்லாம் ஃபாலோ பண்ணுறதில்லையா?”
அட்சரனுக்கு கையை மடக்கி நறுக்கென்று அவள் தலையில் குட்ட மனம் பரபரத்தது. தன்னை அடக்கிக்கொண்டவன் கார்க்கதவைத் திறந்துவிட்டான் வேதவதிக்காக.
அவள் உள்ளே அமர்ந்ததும் அவனும் அமர்ந்து காரைக் கிளப்பினான். வேதவதி இன்னும் சிரித்தவண்ணமாக இருக்கவும் “அந்த மினியன் கூட்டம் கூட சேர்ந்துக்கிட்டு கிக்கிபிக்கி பண்ணிட்டிருக்க. ஏன் மகாராணிக்குக் கார்க்கதவைக் கூட திறக்க முடியாதாக்கும்?” என்க
“ப்ரியா சொன்னதைக் கவனிக்கலையா நீங்க? ஹஸ்பெண்ட் ஒய்புக்குக் கார்க்கதவைத் திறந்துவிடணுமாம்” என்றாள் அவள் நமட்டுச்சிரிப்போடு.
அட்சரன் அவளைப் போல வேண்டுமென்றே சிரித்துக் காட்டியவன் “பொழைச்சுப் போங்க! இது மினியன்கள் துள்ளி விளையாடும் காலம்னு நினைச்சுட்டு அமைதியா இருந்துக்குறேன்” என்றவன் காரை வீட்டுக்குச் செல்லும் பாதையில் விடாமல் வேறு எங்கோ ஓட்டிச் செல்வதை வேதவதி கவனித்துவிட்டாள்.
“எங்க போறோம் நாம?”
“சர்ப்ரைஸ்”
“ஹான்?”
“ஹஸ்பெண்ட் ஒய்புக்கு சர்ப்ரைஸ் குடுக்கணுமாம். அதுவும் சிவல்ரிதானாம்” அவளைப் போலவே நமட்டுச்சிரிப்போடு சொன்னவன் காரைச் செலுத்திய இடம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம்.
அங்கே போய் சேர்ந்தபோது கூட வேதவதிக்கு எதற்காகத் தன்னை அழைத்து வந்திருக்கிறான் என்பது புரியவில்லை. முதல்முறையாக அங்கே வந்தவளுக்கு ஜனத்திரள் கொஞ்சம் மிரட்சியை உண்டாக்கியது.
அட்சரனை ஒட்டி அவனது சட்டை ஸ்லீவின் நுனியைப் பிடித்துக்கொண்டே நடந்து போனவள் சென்றடைந்தது புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடம்.
திருவள்ளுவர் சிலையோடும் எண்ணற்ற புத்தக அரங்குகளோடும் வரவேற்றது சென்னை புத்தகக் கண்காட்சி.
“நான் டை அப் வச்சிருக்குற பப்ளிகேஷன்ஸ் ஸ்டால் போட்டிருக்காங்க. சில புக் எனக்கு வாங்கணும். அதான் வந்தேன். அப்பிடியே உன்னையும் அழைச்சிட்டு வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு” என்றவன் அவளோடு சேர்ந்து நடந்தான்.
புத்தகக் கண்காட்சிக்கு வருவதெல்லாம் அவளது கனவு.
“என் கதை புக்கா பப்ளிஷ் ஆனதும் நம்ம மூணு பேரும் சென்னை புக் ஃபேருக்குப் போகணும்பா. அங்க ஸ்டால்ல என் புக் கூட சேர்ந்து போட்டோ எடுக்கணும்”
உறக்கம் வராத இரவுகளில் கஜேந்திரனோடு வேதவதி பேசிய கதைகள் இவை. அவள் வர விரும்பிய இடம் என்பதால் திகைப்பு மாறி குதூகலம் வந்து ஒட்டிக்கொண்டது வேதவதியிடம்.
“அந்தத் திருவள்ளுவர் சிலை கிட்ட என்னை ஒரு ஃபோட்டோ எடுக்குறீங்களா?” என்று தயங்கி தயங்கியே கேட்டாள் அவனிடம்.
“ஒய் நாட்? போய் நில்லு”
வேதவதி திருவள்ளுவர் சிலையருகே நிற்க அக்காட்சியைப் புகைப்படமாக்கினான் அட்சரன்.
“உங்களை நான் எடுக்கட்டுமா?”
“வேண்டாம்! உன் ஃபோட்டோகிராபில எனக்கு நம்பிக்கை இல்ல. நான் செல்ஃபி எடுத்துக்குறேன். விருப்பம்னா நீயும் வா. ஆனா ஒன்னு டோண்ட் டச் மீ அது இதுனு உருட்டுறதா இருந்தா வராத. ஷோல்டர்ல கை கூட போடாம எல்லாம் செல்ஃபி எடுக்க முடியாது”
அட்சரன் கறாராகச் சொல்லவும் சரியெனத் தலையசைத்துவிட்டு செல்ஃபிக்குப் போஸ் கொடுத்தாள் அவனோடு இணைந்து. அவனது கரம் தோளில் கனமாய் விழவும் கொஞ்சம் திக்கென்ற உணர்வுதான். ஆனால் வரம்பு மீறாத சினேகமான தோளணைப்பு என்பது புரிந்ததும் அந்த உணர்வு அகன்றது அவளிடமிருந்து. அவளது கையும் அவனது தோளை அணைத்துச் சட்டையின் நுனியைப் பற்றிக்கொண்டது.

இருவரும் புன்னகைக்க ‘திருவள்ளுவரோடு ஒரு செல்ஃபி’.
நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டுப் புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் நுழைந்தார்கள் இருவரும்.
ஒவ்வொரு அரங்காகப் பார்க்கப் பார்க்க கொஞ்சம் கொஞ்சமாய் வேதவதியின் கண்களுக்குள் புத்தகத்துக்கான ஆசை சுடர் விட ஆரம்பித்தது.
“என் புக் அடுத்த வருஷத்துக்குள்ள வந்துடும்ல?”
அட்சரன் மர்மப்புன்னகை பூத்தவன் “பப்ளிஷிங் ஹவுஸோட எடிட்டருக்கு உன் கதை பிடிச்சா வந்துடும்” என்றான்.
“பிடிக்கலனா?”
“சென்னைல ஏகப்பட்ட பப்ளிஷிங் ஹவுஸ் இருக்கு. ஒன்னு இல்லனா இன்னொன்னு”
“உங்களுக்கு நிஜமாவே என் கதை பிடிச்சிருக்குதானே? என்னைச் சமாதானப்படுத்துறதுக்காக என் கதைய வாங்கலையே?”
“உனக்கு ஏன் இப்பிடி எல்லாம் சந்தேகம் வருது? ஒரு கதை என்னைத் திருப்திப்படுத்தலனா அதை யார் எழுதுனாலும் ரிஜெக்ட் பண்ணிடுவேன். நிஜமா உன் கதைல ஒரு ஸ்பார்க் இருக்கு. உன்னோட கற்பனைத்திறன் நல்லா இருக்கு. முதல்ல நீ உன்னை நம்பு. அல்ப காரணத்துக்காக கதை எழுதமாட்டேன்னு வைராக்கியம் வளக்குறதை நிறுத்திட்டுக் கொஞ்சம் மனசை மாத்திக்க”
பேசிக்கொண்டே ஒவ்வொரு ஸ்டாலாகச் சென்றார்கள். அவனுக்கு நெருக்கமான பதிப்பக ஸ்டால்களில் நின்று பேசினார்கள்.
சில ஸ்டால்களில் பதிப்பகம் சார்பில் ஆட்கள் இருந்தார்கள். அவர்களிடம் அட்சரன் தங்குதடையின்றி பேசுவதை வேடிக்கை பார்த்தாள் வேதவதி.
அவளுக்கு ஏதாவது புத்தகம் வேண்டுமா என்று விசாரித்தான் அட்சரன்.
“இல்ல! வேண்டாம்” கண்கள் வேண்டுமென்று சொன்னதை அவன் கண்டுகொண்டான்.
அவளை இங்கே அழைத்து வந்ததன் நோக்கமே புத்தகங்கள் மீதான ஆசையைத் தூண்டி அவளை மீண்டும் எழுதவைத்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில்தான்.
ஏனோ தனது செயல்பாடுகளால் அவளுக்குள் இருக்கும் எழுத்தாளினி மறைவதை அவன் விரும்பவில்லை. சொந்தவாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் வேறு! படைப்பாளிக்கு நாம் கொடுக்கக்கூடிய மரியாதை வேறு! இவ்வாறு சிந்தித்தவனுக்குப் புத்தகக் கண்காட்சி ஒரு கச்சிதமான வாய்ப்பாகக் கிடைத்ததால் அழைத்து வந்துவிட்டான்.
“எந்த ரைட்டர் உன்னோட ஃபேவரைட்?” என்று அவளிடம் பேசிக்கொண்டே நடந்தான்.
“அகதா கிறிஸ்டி”
சட்டென அவனது நடை நின்றது.
“காதல் கதை எழுதுறவளுக்கு அகதா கிறிஸ்டிதான் ஃபேவரைட் ரைட்டர். வித்தியாசமா இருக்குதே உன் டேஸ்ட்”
“அப்பா ஒரு ப்ரைவேட் லைப்ரரில லைப்ரேரியனா இருக்காங்கல்ல. அங்க நிறைய புக்ஸ் வரும். அகதா கிறிஸ்டியோட புக் தமிழ் மொழிபெயர்ப்பு வர்றப்ப எல்லாம் நான் தவறாம படிச்சிடுவேன்”
பேசிக்கொண்டே இருவரும் கண்ணதாசன் பதிப்பகத்தின் அரங்குக்குள் நுழைந்தார்கள். அங்கே அகதா கிறிஸ்டியின் துப்பறியும் நாவல்களுடைய தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கும்.
அகதா கிறிஸ்டியின் ஓரியண்ட் எக்ஸ்ப்ரஸ், குரூர வீடு என்ற இரு புத்தகங்களை வாங்கிக்கொண்டாள் வேதவதி.
அதற்குப் பணம் செலுத்திவிட்டு ஒவ்வொரு அரங்காகச் சுற்றிப் பார்த்ததில் இருவருக்கும் பசி மறந்து போயிருந்தது.
இடையே ராஜேஸ்வரி வேதவதியின் மொபைலுக்கு அழைத்து இருவரும் சாப்பிட்டாயிற்றா என்று விசாரித்தபோதுதான் மதிய உணவை மறந்து புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் அவர்கள் நேரம் செலவழித்ததே நினைவுக்கு வந்தது.
“மறந்துட்டோம்மா!”
“டேய்! சாப்பிடக்கூடவா மறப்பீங்க?”
“ம்மா! புக் ஃபேர்ல நுழைஞ்சதும் வேற எதுவும் ஞாபகம் வரல”
“அங்கயே வெளிய ஃபுட் ஸ்டால் இருக்குமே! அதைப் பாத்துமா ஞாபகம் வரல? ஆல்ரெடி பட்டினியா இருப்பீங்க. வீடு வர்ற வரைக்கும் வேதா பசி தாங்கமாட்டாளே அச்சு”
“நாங்க என்ன சாப்பிடவும் டெல்லி அப்பளம் வாங்கவுமா இங்க வந்திருக்கோம்? இப்ப என்ன? உங்க மருமக வெறும் வயிறா வரக்கூடாது. நான் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போய் சாப்பிட வச்சிடுறேன். போதுமா?”
ராஜேஸ்வரியைச் சமாதானம் செய்துவிட்டு மொபைலை வேதவதியிடம் கொடுத்தான் அவன்.
“ஹோட்டல்ல சாப்பிட்டுட்டுப் போகலாமா? இங்க சாஸ்வதா கஃபேனு ஒரு ஹோட்டல் இருக்கு. இந்நேரத்துக்கு மீல்ஸ் இருக்காது. தோசை, மங்களூர் பன் மாதிரி டிபன் இருக்கும். உனக்கு ஓ.கேவா?”
சரியெனத் தலையாட்டியவளை அதே உணவகத்துக்கு அழைத்துச் சென்றான்.
அந்த நேரத்திலும் அமர்ந்து சாப்பிடும் இடங்கள் நிரம்பியிருந்தன. நின்றபடியே உணவருந்தும் மேஜைக்கு வேதவதியை அழைத்துப் போனவன் “உனக்கு என்ன வேணும்? மெனு பாரு” என்க
“நீங்களே ஆர்டர் பண்ணிடுங்களேன். எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கு” என்றாள் அவள் கண்களால் அந்த இடத்தை அலசியபடி.
ஒரு பக்கம் மக்கள் கூட்டம்! இன்னொரு பக்கம் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் சிலர்!
தேன்மலையில் இருந்த காலங்களில் கஜேந்திரன் அடிக்கடி மகள், மனைவியைத் தென்காசியில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதுண்டு. ஆனால் அந்த ஹோட்டல்களின் அமைப்பே வேறு மாதிரி இருக்கும்.
இங்கு போல நின்று கொண்டு சாப்பிடுவதும், பெரிய இருக்கையில் வரிசையாக எண்ணற்றவர்கள் அமர்ந்து சாப்பிடுவதெல்லாம் அவள் பார்த்தறியா காட்சிகள்.
அவள் ஒவ்வொன்றையும் கண்கள் விரிய பார்க்கையிலேயே இருவருக்கும் டிபன் வாங்கிய தட்டுடன் வந்து சேர்ந்தான் அட்சரன்.
“முதல்ல இதை டேஸ்ட் பண்ணு. இது மங்களூர் பன். கர்நாடகா ஸ்பெஷல். நல்லா இருக்கும். அப்புறமா தோசை சாப்பிடு”

தான் சொன்னதைப் போலவே அவள் செய்வதைக் கவனித்தபடியே சாப்பிட்டான் அட்சரன். இதழோரம் குறுஞ்சிரிப்பு முகிழ்த்தது. அதைக் கவனித்தவள் ஏனென வினவினாள்.
“இட் சீம்ஸ் லைக் அ தோசா டேட் (இது ஒரு தோசா டேட் மாதிரி தெரியுது)”
“டேட்? டேட்டிங்கா?” கேட்டவளின் கண்கள் கொஞ்சம் அதிர்ச்சி பூசிக்கொள்ள அட்சரனின் சிரிப்பு இன்னுமே விரிந்தது. அவள் தான் சொன்னபடி மங்களூர் பன்னைக் காலி செய்வதைக் கவனித்தான்.
“நான் சொல்லுறதை அப்பிடியே கேக்குறல்ல. கதையும் எழுதலாமே?”
கனத்ததொரு மௌனம் வேதவதியிடம். தனது மௌனத்தை அவன் மரியாதைக்குறைவாக எடுத்துக்கொள்வானோ என்று எண்ணியவளாக அடுத்த சில நிமிடங்களில் பேசவும் ஆரம்பித்தாள்.
“இதுக்காகத்தான் புக்ஃபேர் அழைச்சிட்டு வந்தீங்களா?”
“இதுவும் ஒரு காரணம். அதோட சமீப நாட்களா நம்ம லைஃப்ல ஏகப்பட்ட குளறுபடி ஆகிப்போச்சு. நம்ம ரெண்டு பேருக்கும் புத்தகம் மேல தனிப்பிரியம் இருக்கு. நாம சேர்ந்து போகக்கூடிய இடமா எனக்குத் தெரிஞ்சது புக்ஃபேர் மட்டும்தான். அதனால அழைச்சிட்டு வந்தேன். உன் முடிவுலயும் மாற்றம் வரும்னு சின்னதா ஒரு நம்பிக்கை.”
பேசியபடியே தோசை விள்ளலை சட்னியில் தோய்த்து வாய்க்குள் அதக்கிக்கொண்டான்.
“என்னால உடனடியா எழுத முடியும்னு தோணல”
“உடனே எழுத கதை ஒன்னும் மந்திரவித்தையால வர்றது இல்ல. முழு மனசோட எழுதுனாதான் கற்பனைக்குச் சரியான வடிவம் கிடைக்கும். டெய்லி கொஞ்சம் கொஞ்சமா எழுத முயற்சி பண்ணு. ஒரு நாள் உன்னோட ஆசை உன் ட்ராமாவ ஓவர் டேக் பண்ணும். அந்த நாள்ல இருந்து பழைய மாதிரி எழுத ஆரம்பிச்சிடு. என்ன? செய்யுறியா?”
அவனது குரல் அவளுக்கு ஆலோசனை வழங்குவது போல ஒலித்தாலும் மெய்யாகவே அதிலிருந்தது என்னவோ கட்டளைதான். அதைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு இல்லாததால் வேதவதியும் தலையசைத்தாள் “நான் முயற்சி பண்ணி பாக்குறேன்” என்று உறுதி கொடுத்தவளாய்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

