பழிகள் உரைக்காப் பக்குவமும்
பிரிவின் வழிகளுக்கு வரையறையும்
கசப்புகள் அகற்றும் கால அவகாசமும்
நிதானமாய் அறிந்தனர் தமது நிசப்தம்தனில்!
-அட்சரனின் வேதா
இலக்கியாவுக்கு அத்துணை கோபம்! சஞ்சய் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டுக்குக் கிளம்பினாள் அவள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அவன் கோவத்துல கத்துறது புதுசாடி? அதுக்குப் போய் மூஞ்சைத் தூக்கிட்டுக் கிளம்புற” என்று அவளைத் தடுக்கப் பார்த்தான்.
“வழி விடு சஞ்சய்! இருக்குற கடுப்புல உன்னைக் கடிச்சிடுவேன் பாத்துக்க”
மிரட்டியவளைக் கண்டு அவன் அஞ்சுவானா என்ன?
“அது புருசன் பொண்டாட்டி சண்டை. நாம என்ன பண்ண முடியும் இலக்கியா?”
“புருசன் பொண்டாட்டிக்குள்ள அவங்களை வச்சு சண்டை வரலாம். இவன் எவளோ ஒருத்தி அழுததுக்கு வேதாவ அழ வச்சு அனுப்பிருக்கான். ஸ்பைரலைத் தூக்கியெறிஞ்சதுல அந்தப் பொண்ணு முகமே சிவந்து போச்சு. அவ்ளோ வெறுப்பு இருக்குறவன் என்ன உரிமைல அவளைக் காயப்படுத்துனானாம்? அன்பா பண்பா நடத்துற புருசன் முறைச்சாலே டொமஸ்டிக் வயலன்ஸ்னு கேஸ் குடுக்குற பொண்ணுங்க இருக்குற உலகத்துல வேதா மாதிரி அமைதியானப் பொண்ணை இவன் ஓவரா ஆட்டிவைக்குறான்டா. பாவமா இருக்கு அவளை நினைச்சா. நான்தானே அந்தப் பிருந்தாவ திட்டுனேன். என்கிட்ட காட்ட வேண்டிய கோவத்தை வேதாகிட்ட காட்டிருக்கான்.”
“நீ ஏன் பிருந்தாவ திட்டுன?”
“ப்ச்! வாய்ல எனக்கு அசிங்கமா வருது. டேய் அவ அச்சுவ பாக்குற பார்வைல நேர்மை இல்ல. அவளை நான் தப்பு சொல்லமுடியாது. இவன் ஏன் வாய்ல ஒரு லாரி மண்ணை வச்சா அடைச்சிருக்கான்? எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்ல என்ன கேடு? அந்தக் கல்யாணத்தையே அவமானமா நினைக்குறானாம். பொண்டாட்டினு ஒருத்தி இருக்குறப்ப இவன் கூட இன்னொருத்தி கொஞ்சிக்கிட்டே திரிஞ்சா பாக்குற யாருக்கும் எரிச்சல் வரும் சஞ்சய். இது சாருக்கு அவமானமா இருக்காது போல”
சுனாமியாய்ப் பொங்கியவள் சஞ்சய் தடுத்தாலும் திமிறிக்கொண்டு ஹெல்வட்டாஸை விட்டு வெளியேறினாள்.
அலுவலக அறையில் தனது சுழல் நாற்காலியில் சாய்ந்திருந்த அட்சரனுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை.
சரியாய் வேதவதி வெளியேறுகையில் சஞ்சயும் இலக்கியாவும் ஹெல்வட்டாஸுக்கு வந்தார்கள். இருவரும் அவளது முகச்சிவப்பைப் பார்த்ததும் என்னவோ ஏதோ எனப் பதறி விசாரிக்க அவளோ நடுங்கும் குரலில் அட்சரன் செய்த காரியத்தைச் சொல்லிவிட்டாள்.
நல்லவேளையாகப் பிருந்தாவைக் காதலிப்பதாக அவன் சொன்னதை மட்டும் அவள் சொல்லவில்லை. அதுவே இப்போதைக்கு அட்சரனுக்குப் பெரும் நிம்மதி.
உண்மை என்னவென்றால் அவன் பிருந்தாவைக் காதலிக்கவே இல்லை.
தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேதவதியை நோகடிக்க எண்ணியபோது அவனது ஈகோ விழித்துக்கொண்டு உதிர்த்த பொய் அது.
பிருந்தாவைக் கண்ணீரும் கம்பலையுமாகப் பார்த்தபோது உண்டான பரிதாபத்தால் வேதவதி மீது அனிச்சையாக உதித்த கோபம் அநியாயம்தான்.
“அச்சுக்குக் கல்யாணம் ஆயாச்சு பிருந்தா. வேதா அவனோட ஒய்ப். நீங்க இப்பிடி அவன்கூட குளோஸா மூவ் ஆகுறது பாக்குறதுக்கு நல்லா இல்ல. ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப்கு நடுவுல தேர்ட் வீலா இருக்குறது ரொம்ப அசிங்கமான விசயம். நீங்க ஒரு நல்ல ரைட்டர். உங்க எழுத்துல இருக்குற பக்குவம் செயல்லயும் இருக்கும்னு நினைக்குறேன். அச்சுகிட்ட புரொபஷனல் ரிலேஷன்ஷிப்பை மட்டும் மெயின்டெய்ன் பண்ணுங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது.”
இலக்கியா சொன்ன வார்த்தைகளை அட்சரனிடம் பிசகாமல் பிருந்தா ஒப்பித்துவிட்டுச் சில துளி கண்ணீரையும் சிந்தியிருந்தாள் அவனிடம்.
“அவங்க இவ்ளோ பேசிருக்கவேண்டாம். அட்சரனுக்குக் கல்யாணமானது தெரிஞ்சிருந்தா நான் சில விசயங்களை அவாய்ட் பண்ணிருப்பேன்” என்று சொல்லிவிட்டுப் போனவளைப் பார்த்தபோது உண்டான பரிதாபம் ஹெல்வட்டாஸில் அவனது அறைக்குள் அடியெடுத்து வைத்த வேதவதியைக் கண்டதும் கோபமாக உருவெடுத்து அவளிடம் இப்படியொரு பொய்யைச் சொல்ல வைத்துவிட்டது அட்சரனை.
வேதவதி அவன் சொன்ன காதல் விவகாரத்தை இலக்கியாவிடம் உளறாமல் விட்டாளே என்று சின்னதொரு நிம்மதி அவனுக்கு. ஒருவேளை வீட்டுக்குப் போனவள் அங்கே தனது பெற்றோரிடம் கூறிவிட்டால்?
“உஃப்”
உதடு குவித்துக் காற்றை ஊதி வெளியேற்றியது போல தனக்குள் இருக்கும் குழப்பத்தையும் வெளியேற்ற முயன்றான் அட்சரன்.
சஞ்சய் வேகமாய் அவனது அலுவலக அறைக்குள் வந்தான்.
“உன் பங்குக்கு நீயும் அட்வைஸ் பண்ணப்போறியா?” சலிப்பாய் வினவினான் அட்சரன்.

மறுப்பாய்த் தலையசைத்தவன் “எதுவுமே தெரியாதவனுக்கு அட்வைஸ் பண்ணலாம். ஆனா எல்லாம் தெரிஞ்சும் ஈகோவ தூக்கிச் சுமக்குறவன்கிட்ட எந்த அட்வைசும் வேலை செய்யாது. எனக்குத் தெரிஞ்சது ஒன்னே ஒன்னுதான். உன்னால வேதா கூட வாழமுடியாதுனா லீகலா மூவ் பண்ணி எல்லாத்தையும் முடிச்சுக்க. அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும். அதுவரைக்கும் அந்தப் பொண்ணுகிட்ட ஒதுங்கியே இரு. அதுவும் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல மச்சி. தலையெழுத்துனுதான் கழுத்தை நீட்டுச்சு. அந்தக் கோவத்தை அது உன்கிட்ட காட்டுனா எவ்ளோ பைத்தியக்காரத்தனமா இருக்கும்? நீ அந்தப் பைத்தியக்காரத்தனத்தைத்தான் பண்ணிட்டிருக்க” என்று சொன்னதோடு சரி!
அந்த அலுவலகத்தில் அதன் பின்னர் வேதவதியின் பெயர் உச்சரிக்கப்படவில்லை. கவிநேசனின் புத்தகம் தொடர்பான மார்க்கெட்டிங் கேம்பெய்ன் குறித்த ஐடியாக்களில் சஞ்சய் மூழ்க அட்சரன் பிருந்தாவுக்கான பிட்ச் தயாரிப்பில் இறங்கினான்.
இரவில் வீடு திரும்புகையில் அன்னையும் தந்தையும் இயல்பாக வேதவதியோடு உரையாடிக்கொண்டிருப்பதைக் கண்டபோதே அவள் இன்னும் நடந்த எதையும் வீட்டாரிடம் சொல்லவில்லையெனப் புரிந்துகொண்டான் அட்சரன்.
“அச்சு உடம்பு எதுவும் சரியில்லையாடா? சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட?” என வினவிய ராஜேஸ்வரியிடம் ஏதோ பதில் சொல்லி மழுப்பிவிட்டுத் தனது அறைக்குள் வந்துவிட்டான்.
முகம் கழுவி இலகு உடைக்கு மாறியபோது கதவு தட்டப்பட்டது. அன்னை வந்திருப்பாரென எண்ணிக் கதவைத் திறந்தவன் காபி கோப்பையோடு வேதவதியைக் கண்டதும் ஒரு நொடி அமைதியாகிவிட்டான்.

அவனுக்கும் அவளுக்கும் இடையே நெருஞ்சி முள்ளாய் அவன் சொன்ன பொய் இருக்கிறதே! அது கொடுத்த அசௌகரியத்தால் முன்பு போல அவளிடம் கோபம் கொள்ளக் கூட அவனால் முடியாமல் போக வேதவதியோ அவனைக் கண்டுகொள்ளாமல் காபி கோப்பையை உள்ளே போய் வைத்துவிட்டு வெளியேறினாள்.
அப்படி ஒருவன் நிற்பதையே காணாதது போல ஒரு உடல்மொழி அவளிடம். கண்கள் கூட அவனை ஏறிடவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அட்சரனை அலட்சியம் செய்துவிட்டுக் கடந்திருந்தாள் அவள்.
சின்னதாய் ஒரு நெருடல் அட்சரனுக்குள்! அவன் அவளைத் திட்டியிருக்கிறான். அவளது குழந்தையாகப் பாவிக்கும் கதையை முகத்தில் விட்டெறிந்திருக்கிறான். அந்த நேரத்துக்கு அவளது வாயை அடைக்கப் பொய் வேறு சொல்லியிருக்கிறான்.
இது எதையும் வீட்டினரிடம் காட்டாமல் இயல்பாக வளைய வந்தவள் மீது சின்னதொரு பிரமிப்பும் எழுந்தது. ஆனால் அவனுக்குள் இருந்த நெருடலை அந்தப் பிரமிப்பு போக்கிவிடவில்லை. மாறாய் அம்பாய் மாறி அவனையே ‘ஈகோவுக்குப் பிறந்த இடி அமீனே’ என்று வதைத்தது.
அதை அதிகமாக்குவது போல அந்த வாரயிறுதியில் வந்து சேர்ந்தாள் வானதி.
“உன்னையும் அருளையும் விருந்துக்கு அழைக்கலாம்னு அங்கிளும் நானும் ப்ளான் பண்ணிருந்தோம். நீ என்னடானா தனியா வந்து நிக்குற” என்று செல்லமாக அங்கலாய்த்தபடி வரவேற்ற ராஜேஸ்வரியிடமிருந்து சிறப்பான கவனிப்பை அனுபவித்துவிட்டுத் தோழியைத் தேடி ஓடிவிட்டாள் அவள்.
அட்சரன் கல்லுக்குண்டு போல அதே லிவிங் அறையில் இருக்கும்போதே அவள் கண்டுகொள்ளாமல் போன விதம் ராஜேஸ்வரிக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அட்சரனோ திகைத்துப்போனான். ஆனால் வாய் திறந்து வானதியிடம் எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களில் அவளே மேல்தளத்தின் வராண்டாவிலிருந்து அவனை அழைத்தாள்.
“அச்சு! கொஞ்சம் மேல வாயேன்”
நிமிர்ந்து பார்த்த அட்சரன் முறைப்போடு “வந்த உடனே அவளைப் பாக்கத்தானே ஓடுன. இப்ப மட்டும் அச்சு பிச்சுனு?” என்று கேட்க
“வரலனா உனக்குத்தான் லாஸ்” என்று அவள் தூண்டில் போடவும் அவன் வேறு வழியின்றி படிகளில் ஏறினான்.
வானதி வேதவதியின் அறையைக் காட்டி வா என்று அழைத்ததும் “அவ ரூமுக்கா? நான் வரல” என்று திரும்பப் போனவனின் டீசர்ட்டின் பின்பகுதியைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் அந்த அறைக்குள் தள்ளி தானும் நுழைந்த பிறகு கதவை அடைத்தாள் வானதி.
திடுமென அட்சரன் உள்ளே வந்து விழவும் பதறியெழுந்தாள் வேதவதி.
வானதியை ‘என்ன இது’ என்பது போல கண்களால் ஜாடை காட்டிக் கேட்டாள் அவள்.
“தனித்தனியா உங்ககூட பேசுறதுக்கு எனக்கு நேரமும் இல்ல. சக்தியும் இல்ல. அதனால ஒன்னா உக்காரவச்சு பேசிட்டா நல்லதுனு தோணுச்சு”
“அப்பிடி என்ன பிரச்சனை?” அலட்சியமாகக் கேட்டவனிடம்
“இலக்கியா என்கிட்ட எல்லாத்தையும் சொன்னா. நீ என்ன முடிவுல இருக்குற அச்சு? இங்க பாரு! வேதா ரொம்ப சிம்பிளான பொண்ணு. நடந்தது சரினு அவ நினைக்கல. ஆனா அதை ஏத்துக்குற பக்குவம் அவளுக்கு இருக்கு. அந்த இடத்துலதான் நீ அவகிட்ட இருந்து வித்தியாசப்படுற. மனுசங்களோட ஈகோவ விட மனசு முக்கியம் அச்சு. இத்தனை வருசம் ஆகியும் உனக்கு அது புரியலையா?” என்றாள் வானதி.
அட்சரன் நெற்றியைக் கீறியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.
“இப்ப என்ன சொல்ல வர்ற? எல்லாத்தையும் நான் மறக்கணுமா? யாருக்காக மறக்கணும்? அப்பிடி மறக்கடிக்குற அளவுக்கு உன் ஃப்ரெண்ட் என் லைஃப்ல முக்கியமானவ இல்ல நதி”
நேர்ப்பட பேசுகிறேன் என்றெண்ணியவனாய் அவன் பேசிய விதம் முகத்திலடித்தாற்போல இருந்தது இரு பெண்களுக்கும்.
வானதியும் அவனது உத்தியையே கையாள முடிவு செய்தாள்.
“சரி! ஏதோ இவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்னு நினைச்சதாலதான் இங்க வந்தா. அதுக்கான சாத்தியக்கூறுகளை நீ இல்லாம பண்ணுற. பேசாம ஆறு மாசம் கழிச்சு மியூச்சுவல் டிவோர்ஸ் அப்ளை பண்ணி பிரிஞ்சிடுறீங்களா? அச்சோ! அதுக்கும் வாய்ப்பில்ல. உங்க மேரேஜை இன்னும் ரிஜிஸ்டர் பண்ணலல்ல. அப்ப குடும்பத்தாளுங்ககிட்ட பேசி பிரிஞ்சிடுங்க”
வேதவதிக்குத் தலை சுற்றிய உணர்வு. அட்சரனோ யோசிக்க ஆரம்பித்தான்.
“சொல்லுறதுக்கு நல்லா இருக்கு. ஆனா சென்டிமெண்ட்ல ஊறிப்போன எங்கம்மாவும் எதுக்கெடுத்தாலும் நியாயம் அநியாயம் பேசுற எங்கப்பாவும் இதுக்கு ஒத்துக்கவே மாட்டாங்க. அதோட இவ பேரண்ட்ஸ் அன்னைக்கு ரொம்ப அழுதாங்க. அதுவே எனக்கு ஒரு மாதிரி பேட் ஃபீல். இவங்க யாரையும் கஷ்டப்படுத்தப் பிடிக்கல” என்று சொல்லிவிட்டான் அவன்.
“அப்ப வேதாவ மட்டும் கஷ்டப்படுத்துவியா?”
இதற்கு அவனிடம் பதில் இல்லை.
“எல்லாத்துக்கும் லாஜிக்கா பதில் வச்சிருப்பியே அச்சு. இப்ப பேசு”
“ப்ச்! என்னத்த பேசுறது? நான் நிறைய பேசிட்டேன். இவ ஒருத்தி பேசாம இருந்ததால வந்த விளைவு இது. இது கஷ்டமா இருக்குனா இவ அனுபவிச்சுதான் ஆகணும்.”

வேதவதியின் முகம் மீண்டும் கோபத்தில் சிவந்துபோனது.
“அப்ப நான் பேசுறேன் வானு. என்னைக் குப்பை மாதிரி ட்ரீட் பண்ணுற ஒருத்தரை என் எதிர்காலம்னு நினைச்சு ரெண்டு குடும்பமும் கனவு காணுறாங்க. அது எனக்கும் அசிங்கம்தானே? இப்பிடியே இருந்து அசிங்கப்படணும்னு எனக்கு என்ன தலையெழுத்து? ஒரு தடவை முயற்சி பண்ணிப் பாரு, அந்தக் குடும்பத்துல உன்னால பொருந்த முடியலனா வந்துடுனு சொல்லித்தான் எங்கப்பா என்னை இங்க அனுப்பிவச்சிருக்கார். இது சரிவராதுப்பா, நான் ஊருக்கு வந்துடுறேன்னு சொல்லிட்டா சந்தோசமா என்னை அழைச்சுப்பார். நீ கேட்டுச் சொல்லு! நான் பேச ரெடியா இருக்கேன்”
“என்ன சொல்லுற அச்சு? வேதா பேசட்டுமா?”
“நான் இங்க இவ கண்ணு முன்னாடிதானே இருக்குறேன். இதுக்கு ஏன் மீடியேட்டர்? ஏன் இந்தம்மா என்கிட்ட பேசுனா இவளோட வெய்ட் குறைஞ்சிடுமா?” வெடித்தான் அவன் வேதவதியை முறைத்தபடி.
“எனக்கு யார்கிட்டவும் பேச விருப்பமில்ல வானு. பேசல பேசலனு இன்னும் எத்தனை நாள் என் மேல பழி போடுவாங்க? நான் இப்ப பேசத் தயாரா இருக்கேன். என் பேரண்ட்ஸே என்னைப் புரிஞ்சிக்கத் தயாரா இருக்குறப்ப எனக்கு என்ன பயம்? பயந்து யோசிச்சு தயங்கி பொறுமையா இருந்து நான் என்னத்தை சாதிச்சேன்? ஊர் முன்னாடி அசிங்கப்பட்டதுதான் மிச்சம். ஆனா இந்த மாதிரி தினந்தினம் அசிங்கப்படுறதுக்கு முன்னாடி அந்த அசிங்கம் ஒன்னுமே இல்ல”
அட்சரன் சட்டென அவளை நெருங்கவும் வேதவதியின் வாய் மூடியதே தவிர கண்களில் இருந்த கனல் குறையவில்லை.
“என்ன அசிங்கம்? என்னடி அசிங்கம்? அப்பிடி என்ன உன்னை அசிங்கப்படுத்திட்டோமாம்?” என்றவன் வானதியிடம் திரும்பி “நதி! நீ கொஞ்சம் வெளிய போ. நான் பேசணும் இவகிட்ட” என்றான் உறுதியாக.
“அவ ஏன் போகணும்? அவ இருக்கட்டும். நீங்க போடுற ஆட்டம் எல்லாம் அவளுக்கும் தெரியும்”
“நதி” மீண்டும் அவன் அழுத்தமாய் சொன்னான்.
வானதி பெருமூச்சு விட்டவள் வெளியே போய்விட அட்சரன் கதவை அடைத்துவிட்டு வந்து வேதவதியின் முன்னே நின்றான்.
“பேசுவேன்னு சொன்னியே! என்ன பேசுவ?” மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு வினவினான்.
“உங்களுக்கு என்னைப் பிடிக்கலனு சொல்லுவேன். வாய்ப்பு கிடைக்குறப்ப எல்லாம் நீங்க என்னை அசிங்கப்படுத்துனதைச் சொல்லுவேன்.”
“ஓஹ்! நீ சொல்லிட்டு உன் பேரண்ட்ஸ் கூட போறதாவே வச்சுக்கலாம். அப்புறம்?”
“அதைப் பத்தி உங்களுக்கு என்ன? ஃப்ரம் டே ஒன் நீங்க உங்களைப் பத்தி மட்டும்தானே யோசிக்குறீங்க. தப்பு தப்பு! உங்களோட ஈகோ. அதைப் பத்தி மட்டும்தானே யோசிக்குறீங்க. வற்புறுத்தி உங்க மேல மத்தவங்க என்னைச் சுமையா சுமத்திருக்கலாம். ஆனா இது தொடரணுமா வேணாமானு நான்தானே முடிவு பண்ணனும்? எனக்கு இப்பிடி இருக்கப் பிடிக்கல. எல்லாத்தையும் முடிச்சுக்கலாம். நான் எங்க ஊருக்கே போயிடுறேன். அங்க வர்ற பிரச்சனைய நான் சமாளிச்சு மீளுறதும் சமாளிக்க முடியாம சாகுறதும் என் தலையெழுத்துங்க. அதை நான் பாத்துக்குறேன்.”
தீர்மானமாய்ச் சொன்னவளின் விழிகளில் கண்ணீர் பளபளத்தது. இந்த வார்த்தைகளைக் கோர்த்து கோவையாக வெளியிட அவள் பட்ட கஷ்டம் அவளுக்கு மட்டும்தானே தெரியும்.
அட்சரனின் மனமோ அவனது அன்னையைப் பற்றி யோசித்தது. இந்த உறவில் அவனுக்கு இருக்கும் அதிருப்தி அனைத்தையும் கொட்டித் தீர்க்கும் பன்சிங் பேக் போல வேதவதியை நடத்திய விதம் மட்டும் அவருக்குத் தெரிய வந்தால் நிச்சயம் அவரது மனம் வேதனையடையும். கூடவே இல்லாதக் காதல் கதையை எல்லாம் சொல்லி வைத்திருக்கிறானே அவளிடம். இதெல்லாம் வெளியே கசிந்தால் தந்தை அவனைத் தலைமுழுகுவது உறுதி.
“சொல்லுங்க! நான் பேசட்டுமா?” அமைதியாய் யோசிப்பவனிடம் வினவினாள் வேதவதி.
“இப்ப வேண்டாம்”
“ஏன்? அதான் ஒருத்திய காதலிக்குறீங்கல்ல. எனக்கு உங்க காதலுக்கு நடுவுல மூணாவது மனுஷியா இருக்கப் பிடிக்கல. ஒரு மாதிரி அசிங்கமா அருவருப்பா… “

ஆவேசமாய் ஆரம்பித்து கோபத்தோடு தொடர்ந்து ஆதங்கத்தில் முடிக்கும் முன்னரே அழுதுவிட்டாள் வேதவதி. அவன் பார்க்கக்கூடாதென முகத்தை மூடிக்கொண்டவள் மௌனமாய் அழுத நொடியில் அட்சரனுக்குத் தேன்மலையில் நடந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
அந்த நொடியில்தான் தனது வாழ்க்கை மட்டுமில்லை, வேதவதியின் வாழ்க்கையும் கடந்த சில தினங்களில் அவுட் ஆஃப் கண்ட்ரோலாகப் போய்க்கொண்டிருப்பது அட்சரனுக்குச் செருப்பால் அடித்தது போல புரிந்தது.
இத்தனை நாட்கள் அவளைப் பார்க்கும்போது வரும் வெறுப்பும், விரக்தியும் மெதுவாய்க் கரைந்து போக ஆரம்பித்தன. இந்தக் கண்ணீருக்கு முன்னால் அவள் உகுத்த வார்த்தைகள் அவளும் பெரும் மனப்போராட்டத்திலும், ஊசலாட்டத்திலும் இருப்பதை அட்சரனுக்கு முதல் முறையாக உணர்த்தின.
எரிச்சலும் கோபமும் அடங்கி தன் முன்னே அழுபவளின் தோளைத் தொட்டான் அட்சரன்.
திடுக்கிட்ட வேதவதி சீற்றத்தோடு அவனது கையைத் தட்டிவிட்டாள்.
“தொடாதீங்க. இதை நான் எப்பவோ பண்ணிருக்கணும். பண்ணாம விட்டதாலதான் நான் மயங்கி கிடந்தப்ப நீங்க முத்தம்…” என்றவளின் வாயைத் தன் கையால் பொத்தினான் அட்சரன்.

“அது முத்தமில்லடி. சி.பி.ஆர். நான் சி.பி.ஆர் குடுக்கலனா உன் பல்ஸ் ரேட் குறைஞ்சு நீ மேல போயிருப்ப. அந்தப் பொம்பளைக்குத்தான் இதெல்லாம் தெரியாது. உனக்குமா தெரியாது?”
வேதவதி தனது கண்களால் அவனது கையை விலக்குமாறு சைகை காட்டினாள். அட்சரன் கையை எடுத்துக்கொண்டான்.
“நமக்கு இருக்குற ஆப்ஷன் ரெண்டே ரெண்டுதான். ஒன்னு இப்பவே பேரண்ட்ஸ்கிட்ட சொல்லி நாம பிரியணும். இல்லனா அர்த்தமே இல்லாத இந்த உறவை காலம் முழுக்கத் தொடரணும். எனக்கு ரெண்டாவது ஆப்ஷன்ல இஷ்டமில்ல. இன்னொருத்திய காதலிக்குறவன்கூட என்னால ஒரு நிமிஷம் கூட வாழமுடியாது”
கடைசி வாக்கியத்தைச் சொன்னபோது அத்துணை அருவருப்பு வேதவதியின் முகத்தில்.
அதைப் பொறுக்க முடியாத அட்சரன் ‘நிறுத்து’ என்பது போல கைகளை உயர்த்தினான்.
“ரெண்டுக்கும் நடுவுல இன்னொரு ஆப்ஷன் இருக்கு. அதுதான் கூலிங் ஆஃப் பீரியட் (Cooling – off period)”
“புரியல”
“இந்தச் சண்டை, வெறுப்பு, கோவம் இதெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவச்சிட்டு நம்ம ரெண்டு பேரும் நம்மளோட தனிப்பட்ட வாழ்க்கைல கவனம் வைப்போம். கொஞ்சகாலம் இப்பிடியே போகட்டும். ஒரு பீரியட் ஆஃப் டைமுக்கு அப்புறம் சரியான சந்தர்ப்பம் அமையுறப்ப இந்த ரிலேஷன்ஷிப்பை முடிச்சுக்கலாம். அந்தச் சமயத்துல நாம இன்னும் பக்குவப்பட்டிருப்போம். அப்ப ஃபேமிலிக்கு நாம பிரியறதை அனவுன்ஸ் பண்ணிடலாம்.”
“அதை இப்பவே…”
“இப்ப தீ அணைஞ்சாலும் இன்னும் நீறுபூத்த நெருப்பா பிரச்சனை கனலா இருக்கு. நம்ம முடிவு பேரண்ட்ஸை மட்டுமில்ல, நம்ம வாழ்க்கையையும் பாதிக்கும். நாம வீம்புக்குப் பிரியறதாத்தான் எல்லாரும் நினைப்பாங்க. நான் சொன்ன கூலிங் ஆஃப் பீரியட்தான் சரியான தீர்வு. என்ன சொல்லுற?”
வேதவதி சில நொடிகள் நகம் கடித்தபடி யோசித்தாள். அவளுக்குமே இந்தத் தீர்வு சரியானது என்று தோன்றியதும் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
“முகத்தைக் கழுவிக்க. அழுது வடிஞ்சது அப்பிடியே தெரியுது.” என்று சொல்லிவிட்டுக் கதவை நோக்கி நடந்தான்.
அவன் கதவைத் திறக்கும் முன்னர் “சப்போஸ் இந்த பீரியடுக்குள்ள உங்க காதலி உங்களைக் கல்யாணத்துக்கு அவசரப்படுத்துனா என்ன பண்ணுவீங்க?” என்று வேகமாகக் கேட்டாள் வேதவதி.

அட்சரன் திரும்பிப் பார்த்தவன் “அது என்னோட கவலை. நீ உன்னைப் பத்தி மட்டும் யோசி” என்று நிறுத்தியவன் சற்று நிதானித்தக் குரலில் “நான் ஸ்பைரலை எறிஞ்சது தப்புதான். தரைல விழட்டும்னு வீசுனது உன் முகத்துல படும்னு எதிர்பாக்கல. சாரி” என்று சொல்லிவிட்டுக் கதவைத் திறந்து வெளியேறினான்.
இத்தனை நாட்கள் எரிமலையாய்க் குமுறியவனின் இந்த மாற்றம் வேதவதிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
பாரசீகக் கவிஞர் ரூமியின் பிரபலமான மேற்கோள் ஒன்று உண்டு.
‘Somewhere beyond right and wrong, there is a garden. I will meet you there’
சரி, தவறுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு தோட்டத்தில் நான் உன்னைச் சந்திப்பேன் என்பதே அதன் அர்த்தம்.
சரி தவறுகளைப் பற்றி சிந்திக்காமல், யாரையும் குறை கூறாத, எடை போடும் பார்வை பார்க்காத மனித மனநிலைக்கு அவர் தோட்டத்தை உவமையாக்கியிருந்தார் என்று சிலர் கூறுவார்கள். அந்த மனநிலையில் நம்மால் நிதானமாய் எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல் மனிதர்களை அணுகமுடியுமாம்!
மனிதர்களின் செயல்களைச் சரி, தவறு என வரையறுக்கும் சமூகத்தின் விதிகளுக்கு அப்பாற்பட்ட மனநிலையில், எதையும் யாரையும் ஜட்ஜ் செய்யாமல் அன்றைய தினம் தங்களது வாழ்க்கையைச் சமர்ப்பித்திருந்தார்கள் அட்சரனும் வேதவதியும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

