கற்பனையில் ஆயிரம் காதல் கதைகள்
நினைவில் அதன் சுவடறியேன் நான்
எழுத்தில் இலயிக்கும் என் விரல்கள்
உயிர்ப்பில் வருமெனில் உருகுமோ காதலில்
-அட்சரனின் வேதா
அன்று வாரவிடுமுறை. காலையில் எழுந்ததும் அன்னை தன்னிடம் குறை கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே வாசல் தெளித்து அழகாய்க் கம்பி கோலம் போட்டிருந்தாள் வேதவதி. கூடவே கனகவல்லியின் அன்றாட வேலையான தையல் மெஷின்களைத் துடைக்கும் வேலையையும் செய்துவிட்டாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சரியாக அவள் காபி போடத் தயாராகுகையில் கனகவல்லி எழுந்துவிட்டார்.
“குட் மார்னிங்மா! காபி போடப்போறேன். நீ போய் பிரஷ் பண்ணு.”

கனகவல்லிக்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை. ஞாயிறு காலையில் எப்போதுமே சீக்கிரம் விழித்துவிடுவாள் வேதவதி. ஆனால், இப்படி வேலை எல்லாம் செய்திருப்பாளா என்று கேட்டால் அதற்கு ‘இல்லை’ என்றே பதில் வரும் அவரிடமிருந்து. அப்படிப்பட்டவள் இன்று காலையில் மடிக்கணினியைத் தூக்காமல் வீட்டுவேலைகளைப் பொறுப்பாகப் பார்த்திருக்கிறாள் என்றால் அவருக்கு ஆச்சரியம் தானே வரும். இதற்குப் பின்னே பெரிய காரணமிருக்கும் என அவரது மூளை சொன்னாலும், மனம் என்னவோ மகளின் கெட்டிக்காரத்தனத்தைப் புகழ்ந்தது.
கஜேந்திரனும் எழுந்துவிட, இருவருக்கும் சேர்த்து காபி போட்டுத் தனக்கும் அவர்களுக்கும் தனித்தனி தம்ளர்களில் ஊற்றி எடுத்துக்கொண்டவள், ஹாலில் கொண்டு போய்க் கொடுத்தாள்.
“அதிசயமா இருக்கேடா வேதா” – மகளைக் கிண்டல் செய்தபடி தம்ளரை வாங்கிக்கொண்டார் கஜேந்திரன்.
“ப்பா!” – சிணுங்கியவள் காபியைக் குடிக்கும்போதே பெற்றோரிடம் ஒரு விஷயத்துக்காக அனுமதி கேட்டாள்.
“இன்னைக்கு வானதியோட ஃபேமிலி இங்க வர்றாங்கப்பா. அடுத்த புதன் அவ கல்யாணம். அவ என்னை அவங்க வீட்டுக்கு வரச் சொல்லிருக்காப்பா. நான் போகட்டுமா?”
கனகவல்லிக்கு இப்போதே அடிவயிற்றில் சிறிய கலக்கம். காரணம் வானதியின் தந்தை இந்த மாநிலத்தின் முதலமைச்சர். அவரது வீட்டுத் திருமணம் என்றால் காவல்துறை கெடுபிடி அதிகம் இருக்கும். அரசியல்வாதியின் வீட்டுத் திருமணம் என்றால் பெரிய இடத்து ஆட்கள் வருவார்கள். அங்கே மகளை அனுப்ப கனகவல்லிக்குப் பயமாக இருந்தது.
கஜேந்திரன் அனுமதி கொடுக்கும் முன்னரே முந்திக்கொண்டார் அவர்.
“அதெல்லாம் போகவேண்டாம் வேதா. தெரியாத ஆளுங்க வரப் போக இருப்பாங்க. ஒன்னு கிடக்க ஒன்னு நடந்துச்சுனா என்ன செய்யுறது? அவங்க எல்லாம் பெரிய இடம்டி. இதுவரை எப்பிடியோ இனி விலகி நிக்க பழகு. வானதியும் அவங்கம்மாவும் வர்க்க பேதம் பாக்காதவங்களா இருக்கலாம். அவங்க வீட்டுக்கு வர்றவங்களும் அப்பிடி இருப்பாங்கனு என்ன நிச்சயம்? யாராச்சும் எதுவும் சொல்லிட்டா பதில் பேசக்கூட உனக்குத் தெரியாது.”
“நான் மட்டும் போகப்போறதில்லம்மா. யாழும் என் கூட வருவா. எங்க ரெண்டு பேரையும் வானதி பெர்சனலா இன்வைட் பண்ணிருக்காம்மா. நாங்க போகலனா அவ வருத்தப்படுவா.”
“ஏன்டி, நீங்க ரெண்டு பேரும் போகலனா கல்யாணமே நின்னு போயிடும்ங்கிற மாதிரில்ல பேசுற. போகக்கூடாதுனா போகக்கூடாது. நான் மீனாட்சி அத்தை கிட்ட சொல்லி யாழுவையும் போகவேண்டாம்னு சொல்ல வைக்குறேன்” – படபடத்தார் கனகவல்லி.
வேதவதி தந்தையின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள். “ப்ளீஸ்பா” – உதட்டைப் பிதுக்கி அவள் அப்பாவி போலக் கேட்டதும் கஜேந்திரனால் மறுக்க முடியவில்லை.
“விடு கனகு. சினேகிதி கல்யாணத்துக்குப் போகணும்னு ஆசைப்படுறா. போயிட்டு வரட்டுமே!”
கனகவல்லி கொதிப்போடு, “என் பயம் என்னனு உங்களுக்குப் புரியலையா? பெரிய இடத்துச் சமாச்சாரம் நமக்கு எதுக்குங்க?” என்று கேட்க,
“ஷ்ஷ்! ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற கனகு? நம்ம பொண்ணு என்ன கண் காணாத இடத்துக்கா போறா? ஜெயசந்திரனோட கெஸ்ட் ஹவுஸ் இந்த ஊருக்குள்ளதானே இருக்கு. அத்தனை ஏக்கர் இருக்குற வீட்டுல அப்பிடியென்ன நம்ம மகளோட பாதுகாப்புக்குக் குறை வந்துடப்போகுது? போதாக்குறைக்கு யாழினியும் இவளோட வர்றானு சொல்லுறாளே! யாழினி பொறுப்பானவ. அவ நம்ம பொண்ணைப் பத்திரமா பாத்துக்க மாட்டானு நினைக்குறியா?” என்று அவரது வாயை அடைத்துவிட்டார் கஜேந்திரன்.

அப்படியும் கனகவல்லி சமாதானமடையவில்லை. அவர் அரைமனதாகச் சம்மதித்தது வேதவதிக்குப் பெருங்குறையானது.
“ம்மா! நான் அங்கயே தங்கப்போறதில்ல. எனக்கும் காலேஜ் இருக்கு. யாழினிக்கு ரேஷன் கடைல வேலை இருக்கு. ஃப்ரீ டைம்ல வானதியோட கல்யாணத்துக்கான ஃபங்சன்ல கலந்துக்கப்போறோம். அவ்ளோதான்மா.”
பேசிப் பேசியே கனகவல்லியின் மனதைக் கரைத்துச் சம்மதம் வாங்கிவிட்டாள்.
“சரி! நீ போகலாம். ஆனா நைட் எந்தக் காரணத்தை வச்சும் அந்த வீட்டுல நீ தங்கக்கூடாது. புரியுதா?”
“சரிம்மா.”
கனகவல்லி சம்மதித்ததும் நிம்மதியாக இருந்தது வேதவதிக்கு. பெற்றோருக்கு விருப்பமற்ற ஒன்றைச் செய்ய அவள் எப்போதும் விரும்பியதில்லை. முதல்முறையாக வானதிக்காக அடம்பிடித்துச் சம்மதம் வாங்கியிருக்கிறாள்.
மாலையில் வானதியின் குடும்பத்தினர் விருந்தினர் மாளிகைக்கு வந்துவிடுவார்கள். அதன் பின்னர் ஏதோ பூஜை இருப்பதாக வானதி கூறியிருந்தாள். கட்டிச் செல்வதற்குப் புடவை ஒன்றை எடுத்து அயர்ன் செய்து வைத்துவிட்டாள். தான் செய்யவேண்டிய வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டால் யாழினியோடு சேர்ந்து வானதியுடன் சிறிது நேரத்தைச் செலவழிக்கலாம் என்று எண்ணியவள், மடமடவெனக் குளித்து உடை மாற்றிக்கொண்டாள்.
சரியாக அன்னையின் தையல் வகுப்புக்குப் பெண்கள் வந்ததும், தனது மடிக்கணினியை எடுத்துக்கொண்டு பின்வாயில் திண்ணைக்குப் போய்விட்டாள்.
“என்ன வேதா, உன் ஃப்ரெண்டு வீட்டுக்குப் போகலையா?” – ரோஜா என்ற பெண்மணி கிண்டலாய்க் கேட்க, மறுப்பாய்த் தலையசைத்தாள் வேதவதி.
“யாழும் ஆச்சியும் செங்கோட்டைல ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருக்காங்க. நான் மதியம் வரைக்கும் இங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு அப்புறம் அரண்மனை பக்கம் இருக்குற நதிக்கரைக்குப் போயிடுவேன். அங்க ஜிலுஜிலுனு காத்து வரும்.”
பின்னர் மதியம் வரை அந்தப் பெண்களுக்குத் தையல் வகுப்பு நடக்க, வேதவதியும் பின்வாயில் திண்ணையில் அமர்ந்து கதையின் அத்தியாயத்தைத் தட்டச்சு செய்தாள். ஆனால், முழுமனதோடு செய்ய முடியவில்லை. தையல் மெஷின்களின் சக்கரங்கள் எழுப்பும் சத்தம் அவளது கவனத்தைக் கலைத்தது. கூடவே திங்களன்று அசைன்மெண்ட் ஒன்று வேறு வகுப்பில் சமர்ப்பிக்க வேண்டும்; அதன் நினைவு வேறு அலைக்கழித்தது.
மதிய உணவுக்குப் பிறகு அன்னையிடம் சொல்லிவிட்டு, தேன்மலை அரண்மனையின் அருகே இருக்கும் கானகத்தில் ஓடும் நதிக்கரையைத் தேடி மடிக்கணினியோடு போய்விட்டாள் வேதவதி.
நதிக்கரையிலிருக்கும் பெரிய விருட்சத்தின் அடியில் அமர்ந்து, தனது கையில் இருக்கும் மடிக்கணினியில் தனது கதையின் அத்தியாயத்தைத் திருத்தித் திருப்திகரமாக அதை முடித்தாள். பின்னர் இருக்கவே இருக்கிறது அசைன்மெண்ட் தட்டச்சு செய்யும் வேலை. இணையத்திலிருந்து தகவல்களை எடுத்து அதில் சில வேண்டாதவற்றை எடிட் செய்து ஒருவழியாக அசைன்மெண்டையும் முடித்தாள் வேதவதி.
தேன்மலை அரண்மனையை ஒட்டிய கானகமும் அதில் ஓடும் நதியும் வேதவதியை வசீகரிக்கத் தவறியதே இல்லை. அழகான மாலைப்பொழுதில் கதிரவன் மலைச்சிகரங்களுக்குள் மறையும் முன்னர் தாராளமாக அள்ளி வீசிய செவ்வண்ண கதிர்களில் நதிநீரே ஆரஞ்சு நிறம் கொண்டிருந்தது. இரவு வரப்போவதற்கான அறிகுறியாக மரங்களில் குடியிருக்கும் புறாக்கள் சப்தமெழுப்பின. அவற்றைத்தொடர்ந்து எங்கிருந்தோ கானாங்கோழி ஒன்று சூரியன் மறைவதை மொத்தத் தேன்மலைக்கும் கத்தி அறிவித்தது.

கானாங்கோழியின் சத்தத்தில் வேதவதியின் விரல்கள் தட்டச்சு செய்வதை நிறுத்தின. மடிக்கணினியின் வலதுபக்க அடியோரத்தில் இருக்கும் கடிகாரம் திரையில் ஆறு மணி ஆகிறது என்று காட்டவும் பரபரப்போடு எழுந்துகொண்டாள் அவள். இந்தக் கானகத்தைத் தாண்டித் தேன்மலை அரண்மனை! அதையும் தாண்டிப் போனால்தான் அவளது வீடு இருக்கும் தெரு. எப்படியும் அரைமணி நேரத்தை இந்த நடைபயணம் விழுங்கிவிடுமெனத் தெரிந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“அசைன்மெண்டை வீட்டுல இருந்து டைப் பண்ணுனா ஆகாதா? காட்டுப்பக்கம் போனாதான் துரையம்மாக்கு டைப் பண்ண வருமோ?” – கிளம்பும்போதே வாதிட்ட அன்னையிடம் ஆறு மணிக்கு முன்னே வீட்டில் ஆஜராகிவிடுவேன் என்று சத்தியம் செய்யாதக் குறையாகச் சொல்லிவிட்டு வந்தவளுக்கு, கதையின் காட்சியைத் தட்டச்சு செய்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
அவர் தேடுவார் என்பதை விடவும் சூரியன் மறைய மறைய அமைதியான கானகம் கொடுக்கும் அமைதி அவளது நடையை வேகமாக்கியது.
“ஆள் நடமாட்டமில்லாத இடத்துல, காட்டுப்பக்கம் அந்தி சாயுறப்ப யட்சன் வருவான். அந்த நேரத்துல அங்க பொம்பளைப்புள்ளைங்க போனா அவங்களை அவன் தூக்கிட்டுப் போயிடுவான் வேதா. நீ காடு கரைனு சுத்துறப்ப கவனமா இரு.”
இதுவும் அவளது அன்னை சொன்ன எச்சரிக்கையே! ரோஜா ஏதோ சொல்லிவைத்திருந்தாள் போல. அதை நம்பிக்கொண்டு இப்போதெல்லாம் வேதவதி இந்தக் கானகத்தின் பக்கம் போகவேண்டுமெனச் சொன்னாலே அறிவுரை கூற ஆரம்பித்திருந்தார் கனகவல்லி. மதியம் அன்னை சொன்னபோது சிரித்தவளுக்கு இப்போது சின்னதாய் அச்சம் தலைநீட்டியது மனதுக்குள்.
அவளது தந்தை கடந்த வாரம் வாங்கி வந்த ‘ஐதிக்யமாலா’ என்ற நாட்டுப்புறக் கதையாடல் புத்தகங்களின் தொகுப்பு நினைவுக்கு வந்தது. அதில் குபேரனின் செல்வத்தைப் பாதுகாக்கும் யட்சன்கள், யட்சிகள் பற்றிய குறிப்பு எல்லாம் இருக்கிறதென அவர் கதை கதையாயச் சொல்ல, உறக்கம் வராமல் அதைக் கேட்டு உம் கொட்டியிருந்தாளே வேதவதி!
எல்லாவுமாய் சேர்ந்து அவளைப் படபடப்பில் ஆழ்த்திய நொடியில், அவளுக்குப் பின்னே இலைச்சருகுகளில் யாரோ நடந்து வரும் சத்தம்! கூடவே நாசியில் ஏறிய ஏழிலைப்பாலைப்பூவின் நறுமணம்! யட்சனும் யட்சியும் இருக்கும் இடத்தில் இந்தப் பூவின் நறுமணம் இருக்குமெனப் படித்திருக்கிறாள் அவள்.
வேதவதி இதயம் தாறுமாறாகத் துடிப்பதைச் சமாளித்தவளாய் மெல்லத் திரும்பினாள்.
அந்திச்சூரியன் மறைந்து மெல்லப் பரவிய இருளில் உயரமான மனிதன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். ஐதிக்யமாலாவில் யட்சனுக்குச் சொல்லப்பட்ட அதே உயரம். அதே சந்தன நிற தேகம். அதே வசீகரப்பார்வை! அலைபாய்ந்து நெற்றியில் புரளும் சுருள் சுருளான கேசம்! உடைகளில் மட்டும் தற்கால இளைஞனின் அடையாளம். யட்சனுக்கு உருமாற்றிக்கொள்ளும் சக்தி இருக்கிறதாமே!
அரண்டு போய்விட்டாள் வேதவதி. மடிக்கணினியை மார்போடு அணைத்துக்கொண்டவள் பின்னோக்கி நகர நகர, அந்த உயரமான மனிதன் அவளை நோக்கித் தனது பெரிய கால்களை எடுத்து வைத்தான். அவன் அவளை நெருங்குகையில் அவனுடைய விழிகளின் கூர்மை அதீதமாகி அவளை விழுங்குவது போல ஒரு மாயை! அவனது ஆகிருதியானத் தேகத்தின் நிழல் தன்னை மூடுவது போல் ஒரு பிரமை!

அந்நேரத்தில் வேதவதியின் மூளை விழித்துக்கொண்டது. “மக்குப்பொண்ணே! யட்சனுக்கு நிழல் கிடையாது.”
சட்டெனத் தன்னைச் சமாளித்துக்கொண்டவள் ஏதோ பேச வரும் முன்னர் அந்த ஆடவனே பேசினான்.
“இங்க பெட்ரோல் பங்க் இருக்குதா?”
அவனது கேள்வியில் அவள் திணறிப்போனாள். “பெட்ரோல் பங்க்? இங்க…”
அவள் பதற்றத்தோடு தடுமாறியதும் அவன் இறுக்கம் தளர்ந்து சிரித்தான். சற்றுத் தள்ளி கை காட்டினான்.
“அங்க என் கார் நிக்குது. ஃப்ரெண்டோட கல்யாணம்னு கேரளால இருந்து இந்த ஊருக்கு வர்றேன். கூகுள் மேப் ஊருக்குள்ள போக வழிகாட்டாம காட்டுக்குள்ள வழி காட்டிருச்சு. பெட்ரோலும் காலி. நீங்க இந்த ஊர்ப்பொண்ணுதானே? பெட்ரோல் பங்க் எங்கனு சொன்னா நல்லா இருக்கும்.”
வேதவதியை விட அவளது மூளை விழித்துக்கொண்டது. நண்பனின் திருமணத்துக்காக ஊருக்கு வந்தவன் தனது கார் நின்றதை அவனுக்குப் போன் மூலம் தெரிவிக்கலாமே?
அதையே அவனிடம் கேள்வியாய்க் கேட்கவும் சன்னப்புன்னகை அவனிடம். அவளது அகன்ற விழிகளில் தெரிந்த கவனமும் கூடுதலாய் பூசியிருந்த அப்பாவித்தனமும் அவனை ஈர்த்தன என்று தனியாய் சொல்லத் தேவையில்லை.
“கேக்கலாம்தான்! ஆனா நெட்வொர்க் கிடைக்கணுமே” – தனது ஆர்வத்தைக் குறைக்கும் குரலில் அவன் பேச, அவளும் நியாயம் உணர்ந்து பதிலளித்தாள்.
“கொஞ்சம் தள்ளி தான் பெட்ரோல் பங்க் இருக்கு.”
“உங்க கூட நடந்து வந்தா அதைக் காட்டுவிங்களா?”
“நானா? ஊர்க்காரங்க யாரும் பார்த்தாங்கனா…”
செய்வதறியாது திகைத்துத் திணறினாள் வேதவதி. அது அந்த ஆடவனுக்கு எரிச்சலூட்டியது. இந்தக் காலத்தில் இப்படி எல்லாம் பத்தாம்பசலித்தனமாகப் பேசுகிறாளே என்ற கடுப்பு. ‘நான் என்ன இவளைக் கடித்தா விழுங்கிவிடப்போகிறேன்?’
முன்கோபம் முணுக்கென எட்டிப் பார்க்க, தனது நெற்றியில் புரண்ட சிகையை மேலேற்றி கோதிக்கொண்டவனின் உடல்மொழியில் பொறுமை இல்லை.
“லுக்! நான் ஒன்னும் உன் அழகுல மயங்கி உன் கூட வரணும்னு நினைக்கல. உன்னை ஃபாலோ பண்ணியும் இங்க வரல. ஏதோ ஒரு கால்குலேசன்ல இப்பிடி போனா பெட்ரோல் பங்க் வருமாங்கிற யோசனைல வந்தேன். இங்க ஒரு மனுஷ நடமாட்டம் தெரிஞ்சது, அதான் விசாரிச்சேன். தட்ஸ் ஆல். பெட்ரோல் பங்க் எங்கன்னு தெரிஞ்சா சொல்லு. இல்லனா டைம் வேஸ்ட் பண்ணாம நான் அடுத்த வழியைப் பார்த்துப்பேன். எனக்கு நேரம் ரொம்ப முக்கியம்.”
அவனது இந்த விறைப்பானப் பேச்சு வேதவதிக்குச் சுருக்கெனத் தைத்தது. இவனைப் போய் யட்சனாக நினைத்தாயே என்று தன்னைத்தானே சபித்துக்கொண்டாள்.
“அப்ப நீங்க அடுத்த வழிய பாருங்க. எனக்கும் நேரம் முக்கியம். எங்க வீட்டுல என்னைத் தேடுவாங்க.”
அவனுக்குச் சற்றும் குறையாத அமர்த்தல் தொனியில் பதிலளித்தவள், திரும்பிப் பார்க்காமல் இடத்தைக் காலி செய்தாள். கானகமும் சாலையும் சமாந்திரமாய் ஓடும் இடத்தில் தன்னிடம் இப்படித் துச்சமாய்ப் பேசிவிட்டுச் செல்லும் பெண்ணின் திமிரான அணுகுமுறையில் சினமேற, அதை அவளிடம் காட்ட முடியாத இயலாமையை நினைத்துக் கொதித்த மனதைக் கட்டுப்படுத்தும் வழியறியாமல் தனது காரை நோக்கிச் சென்றான் அட்சரன்!
வானதி – அருள்மொழியின் நண்பன்! வேதவதியின் கதையைப் படிக்காமல் அவளது படைப்புகளை நிராகரித்தவன்! தன்னிடம் துடுக்காய்ப் பேசிய அந்தப் பெண் தான் வேதா என்று அறிந்தால் அவனது மனநிலை எப்படி இருக்கும்?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

