காகிதப் பூக்களில் காதல் வளர்த்தேன்
தூரிகைத் துளிகளில் துணையைத் தேடினேன்,
வாசிக்கக் கிடைக்கா வரமாம் காதல்!
வரம் கிடைக்க தவம் பிரதானமாம்!
யாரை நோக்கி தவமிருப்பது நான்?
-அட்சரனின் வேதா
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அட்சரனின் கறுப்பு ரேஞ்ச் ரோவர் கொச்சியின் ஃபோர்ட் கொச்சி என்ற பகுதிக்குள் நுழைந்தது.
மழைக்காலம் முடிந்திருந்தாலும் வீசிய காற்றில் ஒருவித ஈரப்பதம் இருந்தது. அந்தப் பகுதியிலிருக்கும் பழங்காலத்துப் போர்த்துக்கீசியக் கட்டிடங்களும், நவீன கட்டிடக்கலையின் சான்றாய் நிற்கும் கலைக்கூடங்களும் அவனுக்கு ஒருவித மோனநிலையை உருவாக்கின.

அவன் தேடி வந்த இடம் ‘ஸ்பெக்ட்ரம் கேலரி’ என்ற கலைக்கூடம். அதன் வாயிலில் இருக்கும் பெரிய தூங்குமூஞ்சி மரத்தினடியில் காரை நிறுத்தியவன், அந்தக் கலைக்கூடத்தை ஆற அமர தரிசித்தான்.
பின்னர் உள்ளே சென்றவனின் செவிகளில் மெல்லிய ஜாஸ் இசை தழுவியது. கூடவே அழகான ஓவியங்களின் அணிவகுப்பு. ஒரே நேரத்தில் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்து கிடைத்தது அட்சரனுக்கு.
மொபைலை எடுத்தவன் யாரைச் சந்திக்க வந்தானோ, அந்நபரின் மொபைல் எண்ணுக்கு அழைத்தான்.
“நான் கேலரிக்கு வந்துட்டேன். நீங்க எங்க இருக்குறிங்க?”
மறுமுனையில் மூன்றாவது ஹாலில் இருப்பதாகப் பதில் வரவும் அந்த ஹாலை நோக்கி நடந்தான். ஸ்பெக்ட்ரம் கேலரியின் மூன்றாவது ஹாலானது வெளிச்சமும் நிழலும் சங்கமிக்கும் விதத்தில் அழகாய் அமைந்திருக்க, அதன் சுவர்களோ பெரிய பெரிய அப்ஸ்ட்ராக்ட் பாணி ஓவியங்களைத் தாங்கியிருந்தன.
அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் என்பவை உருவங்களாக இருக்காது. கோடுகள், வடிவங்கள், நிறங்கள் மற்றும் தூரிகையின் வீச்சுகள் மூலம் ஓர் உணர்வையோ கருத்தையோ கடத்தும் ஓவிய வடிவங்கள்.
இதில் மனிதர்களோ பிற பொருட்களோ தத்ரூபமாக இருக்காது. அவை வண்ணக்கலவைகளாக மட்டுமே காட்சிப்படுத்தப்படும். இந்த ஓவியங்கள் பெரும்பாலும் வண்ணங்களின் மொழியாகவே இருக்கும். அதோடு இவை உணர்த்தும் அர்த்தங்கள் பார்வையாளரின் எண்ணவோட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.
அப்படியொரு அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்துக்கு முன்னே நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண்.
கறுப்பு நிற ரெகுலர் ஃபிட் பேண்ட், முழங்கை வரை மடித்துவிடப்பட்ட பவுடர் ப்ளூ வண்ணச் சட்டை, கழுத்தில் சிறிய வெள்ளிச் சங்கிலி, கொத்தமல்லிக் கட்டு போல இருந்த கூந்தலை க்ளட்சில் அடக்கிக் கொண்டையாக்கியிருந்தாள்.
ஓவியத்தைக் கவனித்தபடி அவளது விரல்கள் காற்றில் ஏதோ வரைந்துகொண்டிருக்க, அட்சரன் அவளை நோக்கி நடந்தான்.
“பிருந்தா”
அவனது குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள் அந்தப் பெண். பிருந்தா நாயர்.
“ஹலோ அட்சரன்? ட்ராவல் எல்லாம் நல்லபடியா இருந்துச்சா? எப்பிடி இருக்கு எங்க கேரளம்?” எனச் சினேகமாய்ப் பேசினாள். தேவையற்ற பாவனைகள் ஏதுமற்ற வெளிப்படையான பேச்சு!
“குட்” என்றவன், “ரொம்ப ஆர்வமா இந்த ஓவியத்தைப் பாத்துக்கிட்டிருந்திங்களே! ஏதாச்சும் புரியுது?” என்று ஓவியத்தைக் காட்டி வினவினான்.
பிருந்தாவின் விழிகள் ஆர்ப்பாட்டமில்லாத கடல் அலைகளாய் ஆழமாகவும் அமைதியாகவும் சிரித்தன.
“பாக்குற எல்லாத்தையும் புரிஞ்சிக்கணும்னு அவசியமில்லை அட்சரன். சில விசயங்கள் நம்ம புரிதலுக்கு அப்பாற்பட்டு சின்ன மிஸ்ட்ரியோட இருக்கும். அந்த மிஸ்ட்ரிதான் அந்த விசயத்தோட அழகு. அடையாளம்னு கூட சொல்லலாம்.”
அட்சரன் மீண்டும் அந்த ஓவியத்தைப் பார்த்தான். கறுப்பு, வெள்ளை, சாம்பல் வண்ணங்களால் தீட்டப்பட்ட கோடுகள் மட்டுமே அவனுக்குத் தெரிந்தன. ஏதோ ஒரு வடிவம். என்னவெனப் புரியாத வடிவம். ஓவியப்பிரியர்களுக்கு மட்டும் புரியுமோ என்னவோ என நினைத்துக்கொண்டான் அவன்.
“நல்லா பேசுறிங்க பிருந்தா. எனக்கு இப்பவும் இந்த ஓவியம் சொல்ல வர்ற கருத்து புரியல” – தோள்களைக் குலுக்கியவனோடு நடக்க ஆரம்பித்தாள் பிருந்தா.
“இந்த ஓவியத்துல காதல் இருக்கு. ஆனால் அதுல காதலர்கள் இல்ல. விசித்திரமான கருத்துல்ல”
அட்சரனின் இதழில் சன்னப்புன்னகை. கறுப்பும் வெள்ளையுமாய் ஓடும் கோடுகளில் அவன் எங்கிருந்து காதலைக் கண்டறிவது?
“காதல்? அதுவும் இந்தக் கோடுகள்ல? ஓவியம்னு இல்ல, எந்தக் கலைவடிவமும் சாமானியனுக்குப் புரியுற மாதிரி இல்லனா அதை ரசிக்க முடியாது. கதைகளையும் சேர்த்துதான் சொல்லுறேன்” என்றான் தலையைச் சரித்து.
பிருந்தா அதைப் புரிந்துகொண்ட விதம் வேறு!
“அட்சரன்னு ப்ரேமமொன்னும் இஷ்டமல்லே? (அட்சரனுக்குக் காதல் மேல விருப்பமில்லையோ?)”
மௌனமாய்ச் சிரிக்க மட்டும் செய்தவனுக்கு என்ன பதில் சொல்வது என்பதில் தெளிவில்லை.
“Cousins, Chaos & Cupid – இதுதான் நான் உங்களுக்கு அனுப்புன மேனுஸ்க்ரிப்ட். மலையாளத்துல ‘மழவில்லு போலே ஒரு பிரேமம்’ங்கிற டைட்டில்ல நான் எழுதுன கதை இது. ஒரு பெரிய குடும்பத்துல இருக்குற மூனு கசின்ஸ், அவங்களோட கலாட்டாவானக் காதல், கல்யாணம் இதைச் சுத்தி நகருற கதை. அதை இங்கிலீஸ்ல கே.எம் பப்ளிஷிங் ஹவுஸ்ல பப்ளிஷ் பண்ணணும்னு யோசிச்சப்ப தான் உங்க ஞாபகம் வந்துச்சு. உங்களுக்குக் கதை பிடிச்சுதுனு சொன்னிங்க. மேற்கொண்டு நான் என்ன செய்யணும்?”
பிருந்தா நிதானமாகக் கேட்க, அட்சரன் அடுத்து வரக்கூடிய நடைமுறைகளை விளக்க ஆரம்பித்தான். அவனுக்குள் இருந்த இலக்கிய முகவர் விழித்துக்கொள்ள, ஹெல்வட்டாசின் கறார் தொனியில் அவனது குரலும் கணீரென ஒலித்தது.
“கதை பிடிச்சிருக்குனு சொன்னது கதையோட மையக்கருத்து மட்டும்தான். இதை கே.எம் பப்ளிஷிங் ஹவுஸ் மாதிரி ஒரு பெரிய பதிப்பகத்துக்கு பிட்ச் (pitch) பண்ணணும்னா இன்னும் சில வேலைகள் செய்யணும்” என்றபடி கையோடு கொண்டு வந்த ஐபேடைத் திறந்தான்.

“முதல்ல ரைட்டருக்கும் ஏஜெண்டுக்குமான அக்ரிமெண்ட்ல முக்கியமானது, என் மூலமா போகப்போற உங்களோட கதை எந்தக் குறையுமில்லாத மாதிரி கச்சிதமா இருக்கணும். உங்களோட இங்கிலீஸ் லாங்வேஜ் ரொம்ப அற்புதமா இருக்கு. ஆனா மூனு கசின்களோட கேரக்டர் ஆர்க் மலையாளம் அளவுக்கு இங்கிலீஸ்ல இல்லனு இலக்கியா சொல்லுறா. அதை இன்னும் கொஞ்சம் மெருகேத்தனும்.”
பிருந்தா அவனை ஊன்றிப் பார்த்தவள், “எடிட்டிங் ஆரம்பிச்சாச்சா அட்சரன்?” என வினவ,
“இது எடிட்டிங் இல்ல பிருந்தா. மார்க்கெட்டிங் பொட்டென்சியல். இங்கிலீஸ்ல உங்க கதை வரப்போகுதுனா அது உலக அளவுல வாசகர்களை ஈர்க்கணும். கேரளத்தோட கலாச்சாரம் அவங்களுக்குப் புரியணும். அதுக்குச் சில மாறுதல்களை நாம செய்யணும்” என்றான் அவன் நிதானமாக.
“புரியுது. அடுத்து?”
“இந்த மேனுஸ்க்ரிப்டுல நாம சில திருத்தங்கள் செய்யணும் பிருந்தா. நான் சொல்லுற சில திருத்தங்கள் ஒரு ரைட்டரா உங்களுக்கு வருத்தத்தைக் குடுக்கலாம். உங்க ஈகோவை கிளறலாம். அதுக்கெல்லாம் நீங்க தயாராகிக்கணும். அந்தத் திருத்தமெல்லாம் முடிஞ்சதும் நான் ஒரு புரபோசல் ரெடி பண்ணுவேன். அதை வச்சுதான் கே.எம் பப்ளிஷிங் ஹவுஸ் கூட பேசி, உங்களுக்கான அட்வான்ஸ், ராயல்டி எல்லாத்தையும் நிர்ணயிக்கணும். கூடவே ஹெல்வட்டாசுக்கான கமிஷனையும். அதோட ஃபியூச்சர்ல உங்க கதை நெட்ஃபிளிக்ஸ் மாதிரியான ஓடிடி தளங்கள் மூலமா சீரிஸா வரப்போகுதுனாலும் அதுலயும் ஹெல்வட்டாசுக்குக் கமிஷன் உண்டு. எல்லாம் ஓகேனா நாம ஃபர்தரா ஒர்க் பண்ணலாம். என்ன சொல்லுறிங்க?”
பிருந்தா நெடிய மூச்சை எடுத்துவிட்டாள். பின்னர் அவனை நம்பிக்கையோடு பார்த்தாள்.
“நீங்க ஓப்பனா உங்களோட விதிமுறைகளைப் பத்தி சொன்னது எனக்குப் பிடிச்சிருக்கு அட்சரன். எனக்குச் சம்மதம். ஃபைனலி காதல்ல நம்பிக்கையே இல்லனு சொன்னவர் ஒரு காதல் கதைக்காக ஒர்க் பண்ணப்போறார். இது சுவாரசியமா இருக்குல்ல?”
“காதல்ல எனக்கு உடன்பாடு இல்லங்கிறது வேற. ஒரு தரமான படைப்புக்குக் குடுக்க வேண்டிய மரியாதை வேற. நான் எதிர்பாக்குற ரிசல்டை உங்க கதை குடுக்கும்னு நம்புறேன்.”
இருவரும் பேசி முடித்தார்கள். அட்சரன் போன் மூலமாக இலக்கியாவிடம் ஹெல்வட்டாசுக்கும் பிருந்தா நாயருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஷரத்துகளைச் சொல்லிவிட்டான்.
“நான் இங்க இருந்து டைரக்டா தேன்மலைக்குப் போயிடுவேன் இலக்கியா. நீயும் சஞ்சயும் பிருந்தாவோட புக் ஒர்க் எல்லாம் முடிஞ்சதும் ஃப்ளைட்ல வந்துடுங்க.”
பேசிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்தான். அதே சமயத்தில் வேதவதி அவளது வகுப்பில் சக மாணவிகளின் கேள்விக்கணைகளுக்குப் பதில் அளிக்கத் தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள்.
“உன்னோட நாவல் ஒன்னு கிண்டில்ல படிச்சேன். சூப்பரா இருந்துச்சு. நீ யாரையும் லவ் பண்ணுறியா வேதா?”
தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு.
“அவளே வாயில்லா பூச்சி. அவ போய் காதலிப்பாளா? சும்மா அவளை வம்பிழுக்காத.”
“அதில்லடி. அந்தக்கதைல லவ் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. காதலிக்காம எப்பிடி காதல் கதை எழுத முடியும்?”
சுற்றியிருந்த மாணவிகள் அனைவரும் இப்போது கேள்வி கேட்டவளின் கோணத்தை ஆமோதித்தார்கள். கதைகளில் வரும் காதலும் சரி, காதல் கணங்களும் சரி, நிதர்சனம் மீறாத கற்பனைகளே! அப்படி எண்ணித்தான் வேதவதி அவற்றை எழுதுகிறாள்.
ஆனாலும் இன்று வரை வீட்டாரிடம் தனது கதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னதேயில்லை. இவ்வளவு ஏன்? அவளது தோழியரே அவளது கதைகளைப் படித்ததில்லை.

கதை படிப்பதில் அனைவருக்கும் நாட்டம் இருக்குமென எதிர்பார்க்க முடியாதுதானே! காதல் கதைகள், காதல் சார்ந்த குடும்பக்கதைகள் எழுதுவது எல்லாம் மற்றவர்களால் கேலிக்குள்ளாக்கப்படுமோ என்ற தயக்கம் அவளுக்கு.
இதோ இப்போது ஒருத்தி கேட்டாளே, ‘யாரையும் காதலிக்கிறாயா’ என்று! அதே கேள்வியை வேறு யாரேனும் கேட்டுவிடுவார்களோ என்ற பயம். காதலை இயல்பாக ஏற்குமளவுக்கு இன்னும் அவள் பிறந்த ஊர் வளரவில்லை.
அவளது பயமும் தயக்கமும் இப்போது ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ ஆக வளர்ந்துவிட்டது. எங்கே தனது எழுத்தும் தனது நடத்தையும் கேலிக்குள்ளாக்கப்படுமோ என்ற எண்ணம் அவளுக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டது.
ஆனாலும் இந்த இம்போஸ்டர் சிண்ட்ரோம் அவளது எழுத்துக்குத் தடையாக வரவில்லை. அவளுக்குத் தேவை அவளது கற்பனையைக் கற்பனையாக மட்டுமே பார்க்கும் வாசகர் வட்டம். அது கிடைக்குமாயின் இந்த இம்போஸ்டர் சிண்ட்ரோமும் சரியாகிவிடும்தானே!
இதெல்லாம் சக மாணவிகளிடம் சொல்லிப் புரியவைக்க முடியாது எனத் தீர்மானித்தவள்,
“எனக்கு லவ்வெல்லாம் கிடையாது. எனக்கு எழுதப் பிடிக்கும். இதெல்லாம் என்னோட கற்பனை மட்டும்தான்” என்றாள் மெதுவாக.
ஆயினும் யாரும் நம்பவில்லை அவளை. ஆனாலும் அவளது கதைகளைப் பாராட்டவும் தயங்கவில்லை.
“என்னமோ ஒன்னு! நீ நல்லா எழுதுற. அடுத்தக் கதையை அமேசான் கிண்டில்ல போட்டதும் சொல்லு. நான் படிக்கணும்.”
வகுப்பு முடிந்து அனைவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். வேதவதியும் அவர்களோடு கிளம்பினாள். பேருந்தில் ஏறியதுமே மொபைலை எடுத்து இண்டர்நெட்டை ஆன் செய்தவள், தங்களது வாட்ஸ்அப் குழுவில் வந்திருந்த சாட் அனைத்தையும் படித்ததும் அதிர்ந்து போய்விட்டாள்.

அதில் வானதி அனுப்பியிருந்த செய்தி அத்தகையது. அவளது திருமண ஏற்பாட்டில் சின்னதாய் ஒரு குளறுபடி என்று குறிப்பிட்டிருந்தாள். அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைக் குழுமத்தின் வாரிசான ஆதர்ஷ் ஒரு பெண்ணைக் காதலித்துப் பிரிந்திருக்கிறான். அது வானதிக்குமே தெரியும்.
ஆனால் அவர்கள் பிரிந்த சமயத்தில் அந்தப் பெண் கருவுற்றுவிட, எத்தனையோ முறைகள் ஆதர்ஷைத் தொடர்புகொள்ள அவள் முயன்றாலும் அம்முயற்சிகள் யாவும் தடுக்கப்பட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு அவனது குடும்பத்தாரிடமிருந்து அவளுக்கு மிரட்டல்களும் வர, வேறு வழியின்றி காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறாள் அந்தப் பெண்.
இப்போது ஆதர்ஷின் நான்கு மாத வாரிசு அவள் வயிற்றில்! யாரோ கொடுத்த தைரியத்தில் காவல்துறை ஆணையரிடம் புகாரளித்துவிட்டு, அப்படியே ஆதர்ஷின் தொலைக்காட்சிக்குப் போட்டித் தொலைக்காட்சி ஒன்றில் தலைப்புச் செய்தியாகவும் அந்தப் பெண் வந்துவிட்டாள்.
தமிழக முதலமைச்சரின் வருங்கால மருமகன் ஒரு பெண்ணை ஏமாற்றியவனா? அரசியலில் ஆரம்பித்து ஊடகங்கள் வரை இதை விவாதப்பொருள் ஆக்கிவிட, வேறு வழியின்றி கடைசி நேரத்தில் மணமகனை மாற்ற வேண்டிய கட்டாயம்.
“யாருடி இப்ப மாப்பிள்ளை?” யாழினி கேட்டிருந்தாள்.
“அருள்மொழி.”
வானதியின் பதிலில் சின்னதாய் திகைத்தாள் வேதவதி. அருள்மொழி வானதியின் நெருங்கிய நண்பன் என்று அவளுக்குத் தெரியும். பெற்றோரை இழந்தவனைச் சிறுவயதிலேயே அவளது தந்தை ஒரு பாதுகாவலர் துணையோடு லண்டனுக்கு அனுப்பி வைத்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறாள். அவன் அவளது திருமணத்துக்காக லண்டனிலிருந்து திரும்பி வந்ததும் தோழியர் இருவருக்கும் தெரியும்.
கூடவே ஜெயசந்திரனுக்கு அருள்மொழியை அறவே பிடிக்காது என்பதும் தெரியும். பிடிக்காத ஒருவனை எப்படி மகளுக்கு வாழ்க்கைத்துணையாக முதலமைச்சர் ஒப்புக்கொண்டார் என்று யாழினியைப் போல வேதவதிக்கும் குழப்பமே!
திருமணம் நடப்பது உறுதி! ஆனால் மணமகன் மட்டும் மாற்றப்பட்டான் என்று சொல்லிச் சோர்வோடு அரட்டையை முடித்திருந்தாள் வானதி.
அனைத்தையும் படித்து முடித்த வேதவதிக்கு மலைப்பாக இருந்தது. நண்பனே என்றாலும் இந்த இன்ஸ்டன்ட் திருமணம் அருள்மொழிக்கும் வானதிக்கும் நிச்சயம் ஒரு தடுமாற்றத்தைக் கொடுக்கும்.
நண்பர்கள் என்ற கட்டத்தைத் தாண்டி இனி கணவன் மனைவி என்ற கட்டத்துக்குச் செல்வது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
ஏன் மேல்தட்டு இந்தியப் பெற்றோர் இத்தகைய சவாலான சூழலுக்குள் தங்களது பிள்ளைகளைத் தள்ளுகிறார்கள் என நொந்துகொண்டாள் வேதவதி.
இந்தியச் சமுதாயத்துக்கு ‘Fear of judgement’ அதிகம். ஊர் பேசும் உலகம் பேசுமென்பதற்காக அவசர முடிவுகளை எடுத்துச் சிக்கிச் சின்னாபின்னாமாவது உலகில் வேறு எங்கும் நடக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்.
நல்லவேளையாக வானதியைப் போல மேல்தட்டு வர்க்கத்தில் பிறக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் வேதவதி.
ஆனால் ‘Fear of judgment’ மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டும் சாபக்கேடு இல்லை என்பது இன்னும் சில நாட்களில் அவளுக்கு வாழ்க்கை அனுபவப்பூர்வமாக உணர்த்தப்போகிறதே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

