மைவிழிப் பார்வையில் மையல்கள் பூக்க
கைவளை ஓசையிடக் கதைகள் கோர்க்க
சின்னஞ்சிறு புன்னகை சிந்தும் கதிரே!
வண்ணத் தமிழால் வரிப்பேன் உன்னையே!
–அட்சரனின் வேதா
சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் காலை நான்கே முக்கால் மணிக்கே அந்த டியூப்ளக்ஸ் வீடு சுறுசுறுப்பாகியிருந்தது. வீட்டின் தலைவியான ராஜேஸ்வரி சமையலறையில் காபி போட்டுக்கொண்டிருக்க, அதன் நறுமணத்தில் கண் விழித்துவிட்டார் அவரது கணவரான சதானந்தன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் இயங்கி வரும் ‘ராஜி சூப்பர் மார்க்கெட்’டின் உரிமையாளரான அவர், ஏழு மணிக்கு முன்னர் கண் விழிப்பதே அத்தி பூத்தாற்போல எப்போதாவது நிகழக்கூடிய அபூர்வமான நிகழ்வு. அத்தகைய அபூர்வ நிகழ்வை நிகழ்த்தும் வல்லமை அவரது மனைவியின் கைமணத்தில் தயாராகும் வெந்நீருக்குக் கூட உண்டு என்பார் சதானந்தன். அப்படிப்பட்டவர் காபியின் நறுமணத்தை நாசியில் உணர்ந்த பிறகும் உறங்குவாரா என்ன?

“எனக்கும் ஒரு கப் காபி கிடைக்குமா ராஜி?” என்று கேட்டபடியே சமையலறை பக்கம் வந்தவருக்கு, அவரது மனைவியிடமிருந்து கிடைத்தது முறைப்பு மட்டுமே!
“எட்டு மணிக்கு முன்னாடி ஒரு துளி காபி கூட உங்க வாய்ல படக்கூடாதுனு சொல்லிருக்கேனா இல்லையா?”
கறாராய்ப் பேசிய மனைவியிடம் நைச்சியமாய் எப்படியாவது காபியை வாங்கிவிடும் ஆசையோடு நின்றவரை விலக்கிவிட்டு, சிம்னியின் வலதுபக்கம் இருந்த கேபினட்டிலிருந்து கோப்பையை எடுத்தார் ராஜேஸ்வரி.
“அச்சு இன்னைக்குக் காத்தாலயே ஏர்போர்ட் போகணும்னு சொன்னான். அவனுக்காகக் காபி போட்டேன். நீங்க வாசம் பிடிச்சு வந்துட்டீங்க. நேத்து ஆடிட்டரைப் பாத்துட்டு வர்றேன்னு வீட்டுக்குத் திரும்புனதே லேட். அவர் கூட டின்னர்ங்கிற பேருல வறட்டுச் சப்பாத்தி ஒன்னை முழுங்கிருப்பீங்க. இப்ப வெறும் வயித்துல காபி குடிச்சா வயித்துக்கும் உடம்புக்கும் கெடுதி.”
நீளமாய்ப் பிரசங்கம் செய்தவர் ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு பெரிய வாட்டர் பாட்டிலை எடுத்தார். அதில் தண்ணீரில் எலுமிச்சைத் துண்டுகள், வெள்ளரித்துண்டுகளோடு தோல் சீவப்பட்ட இஞ்சும் மிதந்தது. அதை ஒரு தம்ளரில் ஊற்றி கணவரிடம் நீட்டினார்.
“ஆல்கலைன் வாட்டர்! உடம்புக்கு ரொம்ப நல்லது. குடிங்க.”
சதானந்தன் தொங்கிப்போன முகத்தோடு தம்ளரை வாங்கிக்கொண்ட போதே, கேசுவல் ஷூவின் சத்தம் சமையலறையை நோக்கி வந்தது.
“உன் காபி ரெடி அச்சு” என்றபடி அங்கே வந்து நின்ற உயரமானவனிடம் காபி கோப்பையைக் கொடுத்தார் ராஜேஸ்வரி.
கோப்பையை வாங்கிக்கொண்டு “எப்ப தான் இந்த அச்சுவை விடுவீங்க?” என்று துளி சலிப்போடு கேட்டபடி காபியை ருசிக்க ஆரம்பித்தான் அச்சு என்ற அட்சரன்.
முப்பதைத் தொட இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. உயரத்துக்கேற்ற கம்பீரம்; அதோடு கலந்த கறாரான பாவனை. இவை எதற்கும் பொருந்தாத சுருள் சுருளான கூந்தலைச் சீராய வெட்டியிருந்தான்.

அவன் அணிந்திருந்த மிண்ட் வண்ண லினன் சட்டையும், க்ரீம் வண்ண கூர்க்கா பேண்டும் அம்சமாய் அவனது ஆகிருதியான தேகத்தைத் தழுவியிருந்தன. லினன் சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் கழற்றிவிடப்பட்டிருந்தன ஸ்டைலுக்காக. முகத்தின் ரோமங்கள் ‘3 day stubble beard’ ஆக உருமாறியிருந்தன தற்கால நாகரிகத்துக்கேற்ப.
ராஜேஸ்வரி – சதானந்தனுக்கு ஒரே மகனாய், அவர்களின் ஒட்டுமொத்த அன்புக்கும் உரிமையானவனாய் வளர்ந்து நின்றவன், தமிழ் இலக்கிய உலகத்தில் பெயர் சொல்லக்கூடிய இலக்கிய முகவராக (Literary Agent) தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருந்தான். அவனது தொழிலைப் பற்றிப் பிறகு பார்க்கலாம். இப்போது அவன் அதிகாலையில் தயாராகி நிற்பதற்கான காரணமே பிரதானம். அந்தக் காரணம் ராஜேஸ்வரியைக் கொஞ்சம் கவலைகொள்ளச் செய்திருந்தது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
“ஏர்போர்ட்டுக்குப் போறதெல்லாம் சரிதான் அச்சு. ஆனா அவனை சி.எம் வீட்டுல கொண்டு போய் விட்டதோட வீட்டுக்கு வந்து சேரு. அவங்க குடும்பப் பிரச்சனைல மூக்கை நுழைக்காத. அரசியல்வாதிங்க பொல்லாப்பு நமக்கெதுக்கு?”
மகனின் பாதுகாப்பு குறித்த கவலை ஓர் அன்னைக்கு இருப்பது நியாயம்தானே! தலையை ஆட்டி அவரது பேச்சை மறுப்பது போலத் தலையசைத்தான் அட்சரன்.
“அவன் லண்டன்ல இருந்து வர்றது யாருக்கும் தெரியாதும்மா. அங்க அவனைப் பாத்ததும் அந்த ஃபேமிலியோட ரியாக்சன் எப்படி இருக்குங்கிறதைக் கவனிச்சிட்டு அப்புறமா வருவேன்.”
குரலில் அத்தனை அழுத்தம். அந்த அழுத்தமே அவன் பிடிவாதக்காரன் என்பதைச் சொல்லாமல் சொன்னது.
“அதில்லடா…”
“அரசியல்வாதினா ரெண்டு கொம்பும் ஒரு வாலும் முளைச்ச சாத்தானா? ஏன் இவ்வளோ பயப்படுறீங்க? நாம பாத்து ஓட்டு போட்டதாலதான் அவர் இன்னைக்கு முதலமைச்சர். இல்லனா வெறும் அரசியல்வாதிதான். நான் இன்னைக்கு நேத்தா அவரைப் பாக்குறேன்?”
ராஜேஸ்வரி மீண்டும் ஏதோ சொல்லப்போனவர் சதானந்தனின் கண்பார்வைக்கு அடங்கி அமைதியானார்.
காபி கோப்பையை அவரிடம் கொடுத்த அட்சரன், “எனக்கு பிரேக்பாஸ்ட் வேண்டாம்மா. நான் நேரா ஹெல்வட்டாசுக்குப் போயிடுவேன்” என்றான்.
‘தி ஹெல்வட்டாஸ்’ – அவனும் அவனது தோழமைகளான இலக்கியா, சஞ்சய் இருவரும் சேர்ந்து நடத்தும் தனியார் இலக்கிய முகமை நிறுவனம். தமிழில் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பெரிய பதிப்பகங்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் நூல்களை அந்தப் பதிப்பகங்கள் வாயிலாக வெளியிட வைப்பதே அட்சரனின் நிறுவனத்துடைய வேலை.
இந்தியாவில் இயங்கும் தொன்மை வாய்ந்த பதிப்பகங்களின் தலைமை நிர்வாக ஆசிரியர்களுக்கு நன்கு பரிச்சயமான நிறுவனம் அவனுடையது. ஏனெனில் அந்தப் பதிப்பகங்களை எழுத்தாளர்கள் நேரடியாக அணுக முடியாது. ‘லிட்டரரி ஏஜெண்ட்’ எனப்படும் இலக்கிய முகவர்தான் எழுத்தாளரின் கதையைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் பதிப்பகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைப்பார். அதைப் பதிப்பகங்களின் நிர்வாக ஆசிரியர்கள் படித்து அவர்களுக்குப் பிடித்துப்போனால் முழுக்கதையையும் அனுப்புமாறு கேட்பார்கள். எழுத்தாளர் மற்றும் கதைகள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொறுப்பும் அட்சரனின் இலக்கிய முகமை நிறுவனத்துடையதே!
அவனது முழுநேர வேலையும் அதுதான். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அவனோடு இணைந்து பணியாற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை இருபதைத் தாண்டும். அவன் செய்கிற வேலைகளுக்கு இத்தனை சதவிகிதமெனக் கமிஷனை வாங்கிக்கொள்வான். இந்தக் கமிஷனே சில லட்சங்களில் இருக்கும் என்பதால் அவனது தொழில் லாபகரமாகவே நடந்து வருகிறது. லாபத்தின் ஒரு பகுதியை பல்வேறு வகை முதலீடுகளில் பிரித்து வைத்திருக்கிறான்.
போதாக்குறைக்குத் தந்தையின் தொழிலும் அவரது காலத்துக்குப் பிறகு அவனது உடைமை ஆகிவிடும் என்பதால், ராஜேஸ்வரியின் உறவுக்காரர்களில் அநேகம் பேருக்கும் அவனைத் தங்களது வீட்டு மருமகனாக்கிவிட வேண்டுமென்ற ஆவல் அதிகம்.
யாரிடமும் அகப்படாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துக்கொண்டிருப்பவனுக்குத் திருமணம், மனைவி, குடும்பம் பற்றியெல்லாம் எந்தத் தெளிவும் இல்லை. அவனது அன்னையும் தந்தையும் அன்றில் பறவைகளாய் வாழ்வதைக் கண்ணுற்றபோதும், அவனது அபிப்பிராயத்தில் தெளிவில்லை என்றால் அவனுக்கு எவ்வளவு தூரம் அந்தத் தலைப்புகளில் நாட்டமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
“போற இடத்துல கவனமா இரு அச்சு.”
ஆயிரம் எச்சரிக்கைகளைச் சொல்லி அட்சரனை வழியனுப்பிவைத்தார் ராஜேஸ்வரி. அவரது எச்சரிக்கைகள் அனைத்தும் அவனுக்குத் தேவையற்ற கவலையாகத் தெரியவே, வெறுமனே தலையை மட்டும் ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். அவன் சென்றதும் கணவரை முறைத்தார் ராஜேஸ்வரி.
“நான் என்ன சொன்னாலும் அதை அவன் ரொம்ப லேசா எடுத்துக்குறான். நீங்களும் கொஞ்சம் சொல்லிப் புரியவைக்கலாம்ல?”
சதானந்தன் தண்ணீரைக் குடித்து முடித்துவிட்டுப் பாட்டிலை மீண்டும் ஃப்ரிட்ஜுக்குள் வைத்தார்.
“சொன்னா கேக்குற வயசா அவனுக்கு? அவனுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வான்னு தெரிஞ்சும் ஏன் அட்வைஸ் பண்ணி அவனுக்குச் சங்கடத்தைக் குடுக்கணும்? அவன் உன் முந்தானைய பிடிச்சுக்கிட்டுச் சுத்துன குட்டிப்பையன் அச்சு இல்ல. இருபத்தேழு வயசு அட்சரன். அவனை நீ ஃப்ரீயா விடணும் ராஜி.”
“இருந்தாலும்…”
தாய் மனதுக்கெனக் கவலை இருக்கும் அல்லவா! மனைவியைச் சமாதானம் செய்து தன்னோடு அழைத்துச் சென்றார் சதானந்தன். அதே நேரத்தில் அட்சரனின் கார் வீட்டின் வளாகத்தைத் தாண்டிச் செல்லும் ஓசை இருவரது செவிகளிலும் விழுந்தது.
காரை ஓட்டியபடி அன்றைய நாளின் வேலைகளை அசை போட்டுக்கொண்டிருந்தான். இன்னும் சில மாதங்களில் சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னையில் நடைபெறவிருக்கிறது. கவிநேசன் என்ற எழுத்தாளர் தனது நூல்களைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து பிரான்சில் வெளியிடுவதற்கான வேலைகளை அவனிடம் ஒப்படைத்திருந்தார். அவரது பதிப்பாசிரியருடன் முந்தைய இரவில்தான் பேசியிருந்தான் அட்சரன்.
பிரான்சில் இருக்கும் பிரபல பதிப்பகம் ஒன்றோடு ஒப்பந்தம் போடுவது, கவிநேசனுக்கான ராயல்டி தொகையைப் பேசி முடிப்பதெனத் தலைக்கு மேல் வேலைகள் இருக்கையில், திடுமென அவனது சிறுவயது நண்பன் அருள்மொழி லண்டனிலிருந்து திரும்பி வரப்போவதாகக் கூறினான்.
“நான் வர்றது அங்க யாருக்கும் தெரியக்கூடாதுனு நினைக்குறேன் அச்சு. நீ என்னை ஏர்போர்ட்ல வந்து பிக்கப் பண்ணிக்க.”
அவன் சொன்ன ‘யாருக்கும்’மில் அவனது நலம்விரும்பியும், உறவினருமான தமிழகத்தின் முதலமைச்சரும் அடக்கம். அதுதான் ராஜேஸ்வரியின் தயக்கத்துக்குக் காரணம். அரசியல்வாதிகள் என்றாலே சாமானியர்களுக்குப் பயம் வருவது இயல்புதானே! அட்சரனுக்கு அதெல்லாம் பற்றிக் கவலையில்லை.
சிறுவயது முதலே அவனது நட்புவட்டம் மிகவும் குறுகியது. அவன், இலக்கியா, சஞ்சய், அருள்மொழி மற்றும் முதலமைச்சரின் மகள் வானதி – இவ்வளவு பேர்தான் அன்று முதல் இன்று வரை அவனது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள். அவர்களில் யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக நிற்பவன் அட்சரன்.
பதின்வயதில் லண்டனுக்கு ஒரு பாதுகாவலர் துணையுடன் அருள்மொழி அனுப்பிவைக்கப்பட்டதிலிருந்து அவனுடன் இணையவழியில் மட்டுமே உரையாட முடிந்தது நண்பர்களால். பல ஆண்டுகள் கழித்து அவன் தாயகம் திரும்புகிறான்.
“ஐ ஹேவ் அ பிளான் அச்சு” என்று பீடிகை வேறு போட்டிருக்கிறான். நிச்சயம் அவனுக்குத் தனது துணை தேவைப்படுமென மனதுக்குள் ஒரு பட்சி சொன்னது அட்சரனுக்கு.
யோசனைகளின் நீட்சியில் காரின் வேகம் அதிகமானதும் நுங்கம்பாக்கத்துக்கும் மீனம்பாக்கத்துக்குமான தூரம் குறைந்ததும் அவனது கவனத்தில் பதியவேயில்லை. அனிச்சை செயல் போல விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் கார் ஓடிக்கொண்டிருந்தது அவனது கட்டுப்பாட்டில். விமான நிலையம் வந்ததும் காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு அருள்மொழிக்காகக் காத்திருந்தான் அட்சரன்.
சரியாக ஐந்தரைக்கு ஹீத்ருவிலிருந்து சென்னை வந்து சேர்ந்த விமானத்தில் தமிழக மண்ணை மிதித்த நண்பனை, சிறுவயதின் குதூகலத்தை மீட்டவனாய் ஓடிச் சென்று தோளோடு அணைத்துக்கொண்டான்.

குரல் உடையாத, மீசை முளைக்காத வயதில் பிரிந்த நண்பர்கள் இணையத்தில் இத்தனை ஆண்டுகள் உரையாடினாலும், நேரில் சந்தித்த தருணம் அவர்களுக்குள் பழைய ஞாபகங்களை மீட்டியதால் அடுத்த சில நொடிகளுக்கு என்ன பேசுவதெனத் தெரியாமல் திணறினார்கள்.
முதலில் சுதாரித்தவன் அருள்மொழிதான்.
“ஹேய் அச்சு! லுக்கிங் ஹேண்ட்சம் மேன்” மேலும் கீழுமாக அவனை அளவிட்டபடி சொன்னான். அட்சரனிடம் சிரிக்கிறானா இல்லையா என்று கண்டறிய முடியாதபடிக்குச் சன்னப்புன்னகை.
“சார் மட்டும் என்னவாம்?” என்றவன் மேற்கொண்டு ஏதோ சொல்லும் முன்னர், அவர்களுடைய முதுகுகளுக்குப் பின்னே கேட்டது ஒரு பெண்ணின் குரல்.
“ரொம்ப கொஞ்சாதீங்கடா! பாக்குறவங்க வேற மாதிரி நினைச்சுக்கப் போறாங்க.”
அந்தக் குரல் சொன்னதன் அர்த்தம் புரிந்து சட்டென விலகிய நண்பர்கள், அங்கே அவளைச் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே நின்றவள் வானதி! மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு இருவரையும் முறைத்தவளை அட்சரன் சமாதானம் செய்ய முன்வந்தாலும் அருள்மொழி கண்டுகொள்ளாமல் நின்றான்.
“அவன் சர்ப்ரைஸ்னு சொன்னான் நதி.”
“பேசாத நீ! எப்பவுமே உனக்கு அவன்தானே உசத்தி. நேத்து பிரஸ் மீட் முடிஞ்சதும் பேசுனப்ப கூட இவன் வர்றதைப் பத்தி மூச்சு விடல. எவ்ளோ அமுக்குணியா இருந்திருக்க.”
வெடித்த வானதியின் உரத்த குரலில் அருள்மொழி சுண்டுவிரலால் காதைக் குடைய, அவள் இன்னும் கடுப்பானாள்.
“நான் பேசுறது உனக்குக் கத்துறது மாதிரி இருக்குதாடா?” என அவனிடம் அவள் பாய, “பிஹேவ் யுவர்செல்ப் வானதி” என்றான் அட்சரன் கடினக்குரலில்.
அவள் அமைதியானாள். ஆனால் ஆதங்கம் அடங்கவில்லை.
“நீ என்கிட்ட பேசாத இனிமே” முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டவள் அவர்களை விட்டு விலகி நடக்க, அருள்மொழி தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.
“இந்தியர்களுக்குச் சிவிக் சென்ஸ் கிடையாதுனு வெளிநாட்டுக்காரன் கிண்டல் பண்ணுறான். அதுல தப்பே இல்ல. அங்க போறவ அதுக்குச் சரியான உதாரணம்” விறுவிறுவென அங்கிருந்து செல்லும் வானதியைக் காட்டிச் சொன்னான் அட்சரனிடம். அவனோ நெற்றியில் ஆட்காட்டி விரலால் கீறிக்கொண்டான்.
“நாம யோசிக்குற விதமும் பொண்ணுங்க யோசிக்குற விதமும் ஒத்துப்போகாது அருள். இதுதான் ரிலேஷன்ஷிப்னாலே நான் அலறுறதுக்குக் காரணம்.”
“பொண்ணுங்க கூட மட்டும்தான் ரிலேஷன்ஷிப்ல இருக்கணுமா? காலம் மாறிடுச்சு மேன்.” அருள்மொழி கிண்டலாய் சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
“அடேய்! அவ வந்ததும் அதைத்தான் கிண்டலா சொன்னா. நீயுமா? எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே நில்லு. அப்ராட் போனதுல வேண்டாத எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்திருக்க போலயே” என்று சொல்லி அவனைத் தள்ளி நிறுத்தினான் அட்சரன்.
பல வருடங்கள் கழித்துச் சந்தித்துக்கொண்ட நண்பர்கள் உற்சாகமாய் ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி வெளியே வந்து சேர்ந்தார்கள். சரியாக அவர்கள் முன்னே காரைக் கொண்டு வந்து நிறுத்தினாள் வானதி. இரு ஆண்களும் பார்க்கும்போதே முன்பக்கத்துக் கதவைத் திறந்துவிட்டாள். அருள்மொழியிடம் பேசவில்லை அவள்.
“அவனை உக்காரச் சொல்லு அச்சு. எனக்கு டைம் இல்ல. இன்னைக்கு சென்ட்ரல் மினிஸ்டரை நான் பேட்டி எடுக்கணும்.”
“அவ்வளோ பிசினா போகச் சொல்லுடா. யார் இப்ப இவ கார்ல வர்றதா சொன்னாங்களாம்?”
ஆளுக்கு ஒரு பக்கம் பிகு செய்துகொள்ள அட்சரனின் தலை சூடானது.
“நீ கிளம்பு நதி. நான் அவனை அழைச்சிட்டு வர்றேன்.”
சட்டெனக் கும்பிட்டாள் அவள்.
“ஐயா சாமி! ரத்தக்கொதிப்புக்குப் பிறந்தவனே! எங்கப்பாக்கும் உனக்கும் ஏழாம் பொருத்தம். ஆல்ரெடி நீ அவரோட சுயசரிதைப் புத்தகத்தைப் பதிப்பகத்துக்குப் பரிந்துரை செய்யலனு உன் மேல அவருக்குச் செம கடுப்பு. இவனை வேற அவருக்குப் பிடிக்காது. ஏதாச்சும் அவர் சொல்லி வச்சார்னா வீண் பிரச்சனை. நானே இவனை அழைச்சிட்டுப் போயிடுறேன்.”

அருள்மொழியைப் பார்த்தான் அட்சரன். “என்னடா போறியா?” என்று கேட்டான்.
“என்னமோ ஆருயிர்க் காதலர்கள் மாதிரி பிஹேவ் பண்ணாதீங்கடா. உங்க புரொமான்ஸை (bromance) பாக்க கண்றாவியா இருக்கு” – வானதி.
அவ்வளவுதான்! அட்சரன் வேகமாக அருள்மொழியைப் காருக்குள் தள்ளினான். இல்லையில்லை திணித்தான்.
“போய் தொலைங்க ரெண்டு பேரும்.”
அருள்மொழி அமர்ந்ததும் கார் கிளம்ப, “உஃப்” என்று உதடு குவித்து ஊதியவன் தனது காரைக் கிளப்பினான்.
வானதியும் அருள்மொழியும் இப்படி ஒருவரை ஒருவர் கீறிக்கொள்ளாத குறையாகப் பேசுவது எதனால் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். இன்னும் சில நாட்களில் அவளுக்கு அவளது தந்தையின் பூர்வீகக் கிராமத்தில் இருக்கும் விருந்தினர் மாளிகையில் திருமணம். அட்சரனுக்கும் அவனது பெற்றோருக்கும் வானதியின் அன்னையும் தமையனும் நேரில் வந்து பத்திரிகை வைத்திருந்தார்கள்.
கண்டிப்பாகத் திருமணத்துக்கு வருவதாக உறுதியளித்திருந்தார்கள் சதானந்தனும் ராஜேஸ்வரியும். அந்தத் தேதிக்கு முன்னர் கேரளாவில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்க அட்சரனும் செல்ல வேண்டும். அங்கிருந்து திருமணத்துக்கு வருவதாக உறுதியளித்திருந்தான் வானதியிடம்.
தோழியின் திருமணத்துக்கா இன்டர்நெட் கூட சரியாகக் கிடைக்காத மலைக்கிராமத்துக்குச் செல்வதில் சுவாரசியம் எதுவுமில்லையென எண்ணியிருந்தவனுக்கு, இப்போது அருள்மொழியும் வந்துவிட்டதால் திருமணம் போரடிக்காது என்று சின்னதாய் ஒரு நம்பிக்கை.
ஆசுவாசத்தோடு காரை ஆழ்வார்ப்பேட்டையிலிருக்கும் தனது அலுவலகமான ‘தி ஹெல்வட்டாஸை’ நோக்கிச் செலுத்தினான். ஆழ்வார்ப்பேட்டையின் பரபரப்பான சி.பி.ராமசாமி சாலையில் பழைய வேப்பமரங்களின் நிழலுக்கும், நவீன கஃபேக்களின் அதிரடியான ஆக்கிரமிப்புகளுக்கும் நடுவே கறுப்பு நிறக் கண்ணாடிகளால் பளபளத்த கட்டிடத்தில் வெள்ளி நிற எழுத்துகளில் மினிமலிஸ்டிக்காக மிளிர்ந்தது ‘THE HELVETAS’.

நியூசிலாந்து நாட்டுப் பழங்குடிகளில் ஒரு குழுவான Helvetii என்பதிலிருந்து எடுக்கப்பட்ட பெயர் இது.
ஒரே ஒரு தளமும் மொட்டை மாடியில் அழகிய தோட்டமும் மட்டுமே! ஒரு பெண்ட் ஹவுஸ் போல வடிவமைக்கப்பட்ட அந்த அலுவலகம் எப்போதுமே அலுவலகத்திற்குரிய பரபரப்போடு இருந்ததில்லை. நண்பர்கள் மூவர் இணைந்து இயங்குவதால் அங்கே வாக்குவாதங்களிலும், வணிகப் பேச்சுகளிலும் கூட நட்பின் வாசம் வீசும். அது அந்த அலுவலகத்தின் சூழலை இதமாகவே வைத்திருக்கும் எப்போதும்.
காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திய அட்சரன் அலுவலகத்துக்குள் நுழைந்தான். சாம்பல் வண்ணச் சுவர்களுடன் இருபதடி உயரத்திலிருந்தது அலுவலகத்தின் கூரை. ஹால், ஸ்டூடியோ, அலுவலக அறையைப் பிரிக்கத் தடிமனான கண்ணாடிச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அலுவலகத்தின் ஒரு பக்க கண்ணாடிச் சுவரின் திரையை விலக்கிவிட்டுப் பார்த்தால், ஆழ்வார்ப்பேட்டையின் இரவு நேர அழகை அங்கிருந்தபடியே ரசிக்கலாம்.
ஏதேனும் பதிப்பகத்துடன் நல்லபடியாக டீல் முடிந்தால் மூவரும் இங்கேதான் பார்ட்டி கொண்டாடுவார்கள். கண்ணாடிச் சுவர்கள் வழியே மின்மினிப் பூச்சிகள் போலத் தெருவிளக்குகள் தெரிவது அத்தனை ரம்மியமாய் இருக்கும் பார்ப்பதற்கு.
இலக்கியம் சார்ந்த நிறுவனம் என்பதால் ஒரு பக்கச் சுவரை ஒட்டிய ரேக் முழுவதும் புத்தகங்களின் ஆக்கிரமிப்பு. அந்த அலுவலகத்தை அழகாக்குவதே புத்தகங்கள்தான் என்பான் அட்சரன்.
அவன் உள்ளே நுழைந்ததும் ஸ்டூடியோ அறையிலிருந்து எட்டிப் பார்த்தான் சஞ்சய்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

