“ஒரு பொண்ணுக்கு அவளோட ஹஸ்பண்ட் குடுக்குற பெரிய கௌரவம் அவளை அவன் எவ்ளோ மதிக்கிறான்ங்கிறதை அவளுக்குப் புரியவைக்குறது மட்டும்தான். ஆயிரம் பிரச்சினை வந்தாலும் உன் கூட இருக்குறப்ப அது எனக்கு ஒரு பொருட்டா கூட தெரியாதுனு அவங்க சொல்லுற ஒரு வார்த்தை போதும் எனக்கு. ரெண்டு குட்டி ரோஜாக்களோட ஆரம்பிச்ச எங்க தோட்டம் இன்னைக்கு நிறைய பூச்செடிகளோட ஒரு குட்டி நந்தவனமா மாறுன மாதிரி, நானும் அவரும் மட்டுமா இருந்த எங்க வாழ்க்கைல இன்னொரு குட்டி உயிர் வந்து எங்க வாழ்க்கைய இன்னும் வசந்தமா மாத்தப்போகுது. இனி நான், அவர், எங்களோட குழந்தை – இதுதான் எங்க உலகம்! இப்படிப்பட்ட ஒருத்தரோட வாழ்க்கைய பிணைச்சுக்கிட்டதுக்காக நானும், இப்படி ஒரு அப்பாவுக்குப் பிறந்ததுக்காக எங்க குழந்தையும் என்னைக்கும் பவிதரனை நினைச்சு ரொம்ப சந்தோஷமாத்தான் ஃபீல் பண்ணுவோம்”
–ஈஸ்வரி
“ஈஸ்வரி, பக்கத்துல வந்து உக்காரு பவி.”
குழலி சொல்லவும் ஈஸ்வரியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான் பவிதரன். தங்க நிற பார்டரிட்ட கருப்பு வண்ணப் புடவை அணிந்து, கழுத்தில் மாலையோடு அமர்ந்திருந்தவளின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு.

அவர்கள் முன்னே தாம்பாளத்தில் கருப்பு வண்ணக் கண்ணாடி வளையல்கள் வைக்கப்பட்டிருந்தன. கூடவே சந்தனம் குங்குமத்தோடு ஆசீர்வதிப்பதற்காக உதிரிப்பூக்களும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. ஐந்தாம் மாதத்தில் கருவுற்ற பெண்ணுக்குத் திருஷ்டி கழிப்பதற்காகக் கருப்புச் சேலையும் கருப்பு வளையலும் அணிவிப்பார்கள்.
மலர்விழியும் ஆதிராவும் மிருணாளினியோடு வந்திருந்தார்கள். இந்நிகழ்வு நடைபெறுவது வாரயிறுதியில் என்பதால் குழந்தையையும் மிருணாளினியையும் பார்ப்பதற்காக ஊருக்கு வந்திருந்த கர்ணன் அவர்களைக் காரில் அழைத்து வந்திருந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்களின் மைந்தனுக்குப் பெயர் சூட்டு விழா அந்த மாதயிறுதியில் நடக்கவிருக்கிறது. வந்ததும் அனைவரையும் பெயர் சூட்டு விழாவுக்காக அழைத்துவிட்டான் கர்ணன். தமது புத்திரச்செல்வங்களோடு புவனேந்திரனும் மகிழ்மாறனும் தவறாமல் ஆஜராகியிருந்தார்கள்.
பவிதரனின் சகோதரிகள் என்ற முறையில் மலர்விழியும் ஷண்மதியும் முதலில் ஈஸ்வரியின் கன்னத்தில் சந்தனம் பூசி வளையலை அணிவித்தார்கள். பின்னர் இளவரசி, குழலி, சிவகாமியின் முறை! ஆதிராவும் மிருணாளினியும் அடுத்தடுத்து வளையல்களை அணிவித்துவிட்டு உதிரிப்பூக்களைத் தூவினார்கள்.
திருஷ்டி கழிப்புச் சடங்கு முடிந்ததும் பவிதரன் தான் பதிவு செய்த புதிய நிறுவனத்தின் போர்டைச் சுற்றியிருந்த பாலித்தீன் கவரை அகற்றினான்.
கருப்புப் பின்னணியில் தங்க நிற எழுத்துகளில் ‘ஈஸ்வரி பில்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற பெயர் பளபளவென மின்ன, வந்திருந்த அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். முந்தைய நாள் மாலையில் போர்டானது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஈஸ்வரியிடம் அவன் பிரித்துக் காட்டவில்லை. “நாளைக்கு எல்லார் முன்னாடியும் பிரிக்கலாம்” என்று சொல்லிவிட்டான்.
“வாழ்த்துகள் பவிதரன்! பேவர் பிளாக் பதிக்குற டெண்டரும் உங்களுக்குக் கிடைச்சிருக்குனு கேள்விப்பட்டேன். இன்னும் வளரணும் நீங்க,” மனமாற வாழ்த்தினான் மகிழ்மாறன்.
“அதுமட்டுமில்ல, நம்ம கன்யாகுமரி ஹோட்டல் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு மணிபாரதி கிட்ட சப்கான்ட்ராக்ட் எடுத்திருக்கார். அது யாருக்கும் தெரியாதுல்ல?” என்று புவனேந்திரன் வினவ அனைவருக்கும் ஆச்சரியம்.
ஈஸ்வரியிடம் கூட இதைத் தெரிவிக்கவில்லை பவிதரன். அவள் முறைக்கவும், “அதுக்காகத்தான் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் செஞ்சேன். வேலை ஆரம்பிச்சதும் சொல்லலாம்னு இருந்தேன்,” எனச் சமாளிக்கப் பார்த்தான் அவன்.
கர்ணனும் மிருணாளினியும் அவனை வாழ்த்தியபோதே, “இலை போட்டுறலாமா அரசி? பிள்ளைங்க பசியா இருக்கும்,” என்றபடி தலைவாழை இலைக்கட்டுடன் வந்தார் தட்சிணாமூர்த்தி.
சிகாமணி கேட்டரிங்கில் அன்றைய தினம் காலை மற்றும் மதியவுணவுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். கேட்டரிங்கிலிருந்து சாப்பாடு கொண்டுவரப்பட்டதும் இலை போடப்பட்டது.
“எல்லாரும் ஜோடியா உக்காருங்க. சித்தப்பா, மாமா நீங்களும்தான். நான், சித்தி, இளவரசி அத்தை நாலு பேரும் பரிமாறுறோம்.”
மகிழ்மாறன் தனது மடியில் கதிர்காமனை அமர்த்திக்கொண்டு மலர்விழிக்கு அருகே அமர்ந்தான். அடுத்து புவனேந்திரனும் ஆதிராவும் அமர, தேஜஸ்வினி தந்தையின் மார்பில் சாய்ந்து மடியில் உட்கார்ந்துகொண்டாள். கர்ணனிடமிருந்து அவனது மகனை வாங்கிக்கொண்டார் சிவகாமி.
“மிருணா! நீ போய் உக்காரு! பிள்ளைய நான் பாத்துக்குறேன். பொறுமையா சாப்பிடு,” என்று சொல்லிவிட்டார்.
ஈஸ்வரி அமர்வதற்கு உதவி செய்த பவிதரன் அவளது புடவை முந்தானையை மடித்து அவளது மடியில் வைத்தான்.
“பின்னாடி பரந்து கிடந்துச்சுனா நீ எழுந்திருக்குறப்ப தெரியாம அதை மிதிச்சிடுவ,” என்ற அக்கறையான அறிவுரை வேறு! அவனும் அமர்ந்ததும் சாப்பாடு பரிமாறப்பட்டது.
அவர்கள் ஜோடிகளாய் அமர்ந்து உண்ணும் காட்சியே அத்துணை அழகாய், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வு போல மனதுக்கு நெருக்கமாய் இருந்தது அவர்களைப் பார்த்தபடி பரிமாறிய பெரியவர்களுக்கு.
“மலருக்கு நம்ம ரங்கநல்லூர் லைப்ரரியிலேயே போஸ்டிங் கிடைக்குற மாதிரி இருக்கு. ஏன்டி பொண்ணே! இன்னும் நீ சொல்லலையா உன் சினேகிதி பட்டாளத்துக்கிட்ட?”
சிவகாமி குழந்தையைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே சொல்லவும் மலர்விழியிடம் பெண்களின் பார்வை திரும்பியது.
“எதுவும் இன்னும் முடிவாகல. போஸ்டிங் கிடைச்சதும் சொல்லலாம்னு நினைச்சேன்,” என்றாள் அவள்.
“அதெல்லாம் கிடைச்சிடும்லா. கிடைச்சதும் நீ எங்க எல்லாருக்கும் ட்ரீட் வைக்கணும்,” என்று ஈஸ்வரி சொல்ல அவளும் சரியென்றாள்.
“குட்டிப்பையனுக்கு என்ன பேர் செலக்ட் பண்ணிருக்கிங்க மதினி?” அடுத்து ஆதிரா மிருணாளினியிடம் விசாரிக்க,
“நிகிலன்னு வைக்கலாம்னு இருக்கோம். நிகில்னு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கூப்பிட்டுக்கலாம்ல?” என்றாள் அவள் குதூகலமாய்.
பெயர் தேர்வை அனைவரும் பாராட்ட, கர்ணன் அத்துணை பாராட்டும் தனக்குச் சேரவேண்டியது என்றான். மிருணாளினி சொன்ன பெயர்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு இந்தப் பெயரைத் தேர்வு செய்து, இந்தப் பெயர் அழகாக இருக்கிறதென அவளை நம்பவும் வைத்தவனாயிற்றே!
“உன் பிள்ளைக்கு என்ன பேர் வைக்கப் போற ஈஸு?” மலர்விழி கேட்க,
“பொண்ணு பிறந்தா பிரகதி, பையன் பிறந்தா பிரகதீஸ்வரன் – நல்லா இருக்குதா?” என ஆர்வமாக அனைவரின் பதிலையும் எதிர்பார்த்தவளாய்க் கேட்டாள் ஈஸ்வரி.
“ரொம்ப அழகான பேர் ரெண்டுமே!” எனப் பெரியவர்களோடு இளையவர்களும் சிலாகித்தார்கள்.
“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து செலக்ட் பண்ணுன பேர் இது,” என்றார்கள் பவிதரனும் ஈஸ்வரியும்.
இவ்வாறான உரையாடல்களுடன் காலைப்பந்தி முடிந்துவிட, பெரியவர்களும் சாப்பிட்ட பிறகு அனைவரும் அவரவர் வயதினருடன் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஆண்கள் அனைவரும் பவிதரனின் புதிய தொழிலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, பெண்கள் குழாம் குடும்ப விவகாரத்தை அலசி ஆராய்ந்தார்கள்.
“மதுவையும் உன் மாமியாரையும் கூப்பிடலையா ஈஸு?” – மிருணாளினி.
“அவருக்கு விருப்பமில்ல மதினி,” என்று ஈஸ்வரி சொல்ல,
“நான் தான் கூப்பிடவேண்டாம்னு சொன்னேன் மிருணா. இன்னைக்கு அவங்க திருந்திருக்கலாம். ஆனா மலர் கல்யாணத்துல ஆரம்பிச்சு கம்பெனி பிரச்சினை வந்த நாள் வரைக்கும் அவங்க என் தம்பிய என்ன பாடு படுத்துனாங்கனு எனக்குத்தான் தெரியும். அவங்க வந்து வாழ்த்தி என் தம்பிக்கும் தம்பி பொண்டாட்டிக்கும் என்ன நல்லது நடக்கப்போகுது? இதோ நீங்க எல்லாரும் வந்திருக்குறிங்க. நீங்கதான் இவங்களுக்கு நல்லது நினைப்பிங்கடி. காலத்துக்கும் நீங்க போதும் இவங்களுக்கு,” என்றாள் ஷண்மதி ஒருவிதப் பிடிவாதத்தோடு.
சின்னப்பெண்களின் மனம் அவளது கூற்றில் உருகிவிட்டது எனலாம்.
“நாளைக்கு மதுவுக்கு வளைகாப்பு வந்துச்சுனா போகணுமேக்கா,” ஆதிரா எடுத்துச் சொல்லவும்,

“அழைப்பு வச்சா போவேன். என் தம்பியும் போவான். அதுக்கு மேல எந்த உறவும் கொண்டாட எங்களுக்கு விருப்பமில்ல ஆதி. ஏன்டி கூப்பிடலனாலும் வர்றதுதான் பாசம். எங்கம்மா வாரவாரம் முத்தாரம்மன் கோயிலுக்கு வருது. இன்னைக்குக் கருப்பு வளையல் போடுறோம்னு தெரியாமலா இருக்கும்? வரணும்னு நினைச்சா வந்திருக்கலாம். எங்க கடமைய நாங்க என்னைக்கும் செய்வோம். ஆனா அவங்க கூட எங்களுக்கு உறவு வேண்டாம். இதுதான் பவியோட நிலைப்பாடு. என் தம்பியோட முடிவை நானும் ரவியும் எப்பவும் மதிப்போம்,” என்று சொல்லிவிட்டாள்.
ஆண் பிள்ளை தலையில் எல்லா சுமைகளையும் சுமத்தி, அவனது மனநிலை, நல்லது கெட்டதைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு ஒரு துன்பமென்றால் மட்டும் அவனை இழுத்துக்கொள்ளும் குடும்பங்களை விலக்கிவிட்டு அந்த ஆண் ஒதுங்குவது தானே சிறந்தது! இது ஷண்மதியின் எண்ணம்.
அதே நேரம் பெரியவர்களின் பேச்சிலும் குடும்ப நிலவரம் தான் கருப்பொருளாய் ஓடிக்கொண்டிருந்தது.
“காத்தாலயே மதுவும் அக்காவும் கோவிலுக்கு வந்து இந்தக் கருப்பு வளையலைக் குடுத்துட்டுப்போயிட்டாங்க. மாமா குடுக்கச் சொன்னாராம். இத்தனை நடந்த அப்புறம் அவர் மனசு மாறுனதே பெருசு. நான் ஈஸு கிட்ட அவங்க வளையல் குடுத்ததைச் சொன்னேன். அவ இருக்கட்டும்னு சொல்லிட்டா. பவியும் ஷண்மதியும் கேட்டா தாம்தூம்னு குதிப்பாங்க.”
“நீர் அடிச்சு நீர் விலகாது மதினி. அது அவங்களுக்குச் சீக்கிரம் புரியும்,” என்றார் சிவகாமி. இளவரசியும் அதை ஆமோதித்தார்.
பவிதரன் மேருவோடு தனது நிறுவனத்தை அடுத்த ஆண்டு இணைக்கவிருப்பதைக் கூறினான்.
“நல்ல முடிவுதான்! உங்களுக்கும் டாக்ஸ் பெனிஃபிட் கிடைக்கும்,” என்றான் மகிழ்மாறன்.
புவனேந்திரன் அவனிடம் தனது புதிய ஹோட்டல் கட்டுமானம் பற்றிப் பேச, கர்ணன் மட்டும் அமைதியாய் அவர்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டு இருந்தான்.

மதியவுணவுக்குப் பிறகு அனைவரும் கிளம்பியபோது கர்ணன் பவிதரனிடம் வந்தான்.
“ஆல் த பெஸ்ட்! அந்தப் புள்ளைய நல்லபடியா பாத்துக்கோங்க. குழந்தை பிறந்ததும் சொல்லுங்க. நானும் மிருணாவும் சென்னைல இருந்தாலும் பாக்க வருவோம்.”
“கண்டிப்பா!”
கை குலுக்கிக்கொண்டார்கள் இருவரும்.
காரிலேறியதும் மிருணாளினி கணவனின் காதைக் கடித்தாள்.
“அப்பிடி என்ன ரகசியம் பேசுனிங்க? நல்லபடியா பாத்துக்கோங்கனு என்னமோ என் காதுல விழுந்துச்சு.”
“குழந்தை பிறந்ததும் சொல்லுப்பா நாங்க வருவோம்னு சொன்னேன்டி. இவ ஒருத்தி, எல்லாத்துக்கும் ஏலியன் மாதிரி காதைச் சிலிர்த்துக்கிட்டு ஒட்டுக் கேக்க வந்துடுவா.”
“ஏலியன் கூட குடும்பம் நடத்துற நீங்களும் ஏலியன் தான். வந்துட்டாரு என்னைய கலாய்க்குறதுக்கு. டேய் குட்டி ஏலியன்! இதெல்லாம் கவனிச்சு வச்சுக்க. நீ வளர்ந்து எனக்காக இந்தாளை வகைதொகையில்லாம வச்சு செய்யணும்.”
“பிள்ளை மனசுல வன்மத்தைப் புகுத்தாதடி.”
ஏட்டிக்குப்போட்டியான பேச்சுகளைச் சுமந்தபடி அவர்களது கார் அங்கிருந்து அம்பாசமுத்திரத்திற்குக் கிளம்ப, தொடர்ந்து ஆதிரா – புவனேந்திரன், மலர்விழி – மகிழ்மாறன் ஜோடிகளையும், அவர்களின் புத்திரச்செல்வங்களையும், சிவகாமியையும் சுமந்துகொண்டு குலவணிகர்புரத்திற்குக் கிளம்பியது.
அனைவரும் சென்றதும் ஈஸ்வரியை உடை மாற்றிக்கொள்ளச் சொன்னார் இளவரசி. தட்சிணாமூர்த்தியை அழைத்துக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.
“வென்னி வச்சிருக்கேன் ஈஸு. உடம்பைக் கழுவிட்டு நைட்டிய மாத்திக்க. பவி நீயும் கொஞ்சம் ஓய்வெடு. எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. உங்க சித்தப்பாவ பூ மார்க்கெட்டுல இருந்து கூப்பிட்டிருக்காவ. அவரு போகணும். நான் வர்றேன்.”
குழலியும் சிகாமணியும் சென்றதும் ஈஸ்வரியும் பவிதரனும் மட்டுமே அவர்களின் வீட்டில்!
அவளது பார்வை ‘ஈஸ்வரி பில்டர்ஸ்’ என்ற போர்டின் மீது அழுந்தப் பதிந்தது. அவளது கணவன் அவளுக்குக் கொடுத்திருக்கும் மாபெரும் கௌரவம் அல்லவா இந்தப் பெயர்! போர்டை விடாமல் பார்க்கத் தோன்றியது அவளுக்கு. அந்தப் போர்டு பவிதரன் அவளுக்காகச் செதுக்கிய காதல் சாசனத்துக்கு நிகரானது. விழியோரம் எட்டிப் பார்த்த கண்ணீர்த்துளியை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் தங்களது அறைக்குள் போய்விட்டாள்.
வெதுவெதுப்பான நீரில் உடலைக் கழுவி, தளர்வான நைட்டிக்கு மாறியபோது ஈஸ்வரியின் உடலும் மனமும் ஒருசேர இலேசாகி இருந்தது. அந்தி சாயும் நேரமாகியிருந்தது. அறையின் ஜன்னல் வழியே பார்த்தவளின் கண்களுக்குக் கதிரவன் தன் செங்கதிர்களைச் சுருக்கிக்கொண்டு, வானமெங்கும் மெல்லிய ஊதா நிறத்தைப் பூசிக் கொண்டிருந்த காட்சி ஓர் அழகிய ஓவியம் போலிருந்தது.
பவிதரனைத் தேடிப் பின்வாயிலுக்கு வந்தாள். அங்கே அவன் திண்ணையில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவளைப் பார்த்ததும் கை நீட்டித் தன்னோடு அமருமாறு அழைத்தான்.
அவனோடு சேர்ந்து அமர்ந்துகொண்டவளின் பார்வை, அவர்கள் இருவரும் சேர்ந்து நட்டுவைத்த ரோஜாச் செடிகளின் மீது குவிந்தது. குளிர்த்தென்றலானது தோட்டத்தின் மண்வாசனையையும் ரோஜாக்களின் நறுமணத்தையும் கலந்து அவர்களை வருடிச் சென்றது.
“செடி நல்லா வளர்ந்துடுச்சுல்ல! எவ்ளோ பூ,” ஆசையாய்ச் சொன்னவளின் விழிகளில் அத்துணை ரசனை!
மாலை நேரத்து மங்கிய வெளிச்சத்திலும் ரோஜாச் செடிகள் பூக்களையும் மொட்டுகளையும் சுமந்துகொண்டு கம்பீரமாய்த் தெரிந்தன.
சட்டெனப் பார்வை அவன் பக்கம் திரும்பியது.
“தேங்க்ஸ்!” அவளது குரல் மென்மையாய் ஒலிக்கவும் தன்னோடு சேர்த்து ஈஸ்வரியை அணைத்துக்கொண்டான் பவிதரன்.
“உன் கூட வந்த அப்புறம் எனக்குனு ஒரு அடையாளத்தை நான் உருவாக்கிக்கிட்டேன். நீ எனக்கு லக்கி சார்ம்டி சண்டைக்காரி. உன் பேர்ல நடக்கப்போற இந்தத் தொழில் கண்டிப்பா உயரத்தைத் தொடும்னு எனக்குள்ள அழுத்தமா ஒரு நம்பிக்கை.”
ஈஸ்வரி நிமிர்ந்து அவனை ஏறிட்டாள். அங்கே பவிதரனின் விழிகளில் அவள் கண்டது காதலை மட்டுமல்ல. தவம் செய்து வரம் வாங்கிய பாவனை அவனது விழிகளில்! அவனது காதல் தவத்திற்கான வரமாய் அவளே வந்து சேர்ந்த பூரிப்பு அந்த விழிகளில்!
“ஏதாச்சும் பேசுடி.”
“என்ன பேசணும்னு தெரியல. ஏதாச்சும் செஞ்சு என்னை வாயடைக்க வச்சிடுறிங்க நீங்க.” குறை சொன்னபடி அவனது மார்பில் சாய்ந்துகொண்டாள் ஈஸ்வரி.

அழகான அந்திமாலையில் அவனது மார்பில் சாய்ந்துகொண்டவளுக்கு அவனது இதயத்துடிப்பு கூட ‘ஈஸ்வரி’ என்றே ஒலிப்பதாய் ஒரு பிரமை!
அரனின் உடலில் பாதியாய் உறைந்த உமையைப் போலப் பவிதரனின் ஆகிருதிக்குள்ளும் நிறைந்திருந்தாள் ஈஸ்வரி! அவளது அகம் முழுவதும் அரனின் ரூபமாய் பவிதரன் மட்டுமே நிறைந்திருந்தான். நெஞ்சமெனும் கருவறையில் காதலெனும் வரம் கொண்டு அவன் உயிரில் கலந்திருந்தாள் அவள்!
அந்தத் தோட்டத்தையும் வீட்டையும் மெல்ல மெல்ல இரவின் இருள் கவ்வினாலும் இனி அவர்களின் வாழ்வில் என்றும் விடியல் மட்டுமே! தோட்டத்து ரோஜாக்கள் தென்றலில் அசைந்தாடின… அவர்களின் வாரிசுக்கான தாலாட்டாய்!

இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

