“காதல்ங்கிறது, எந்தப் போலித்தனமுமில்லாம, என் பலவீனம் பைத்தியக்காரத்தனம் எல்லாத்தையும் அவகிட்ட கொட்டித் தீர்த்தாலும் அவ என்னை விட்டுப் போகமாட்டானு மனசுல அழுத்தமா பதியுதே அந்த நம்பிக்கைதான்! நான் ஆம்பளைங்கிற ஈகோவைத் தூக்கிப் போட்டுட்டு ஒரு மனுசனா என்னால அவகிட்ட என் கண்ணீர், என்னோட சோகத்தைக் கொட்ட முடியுது. ஆக்சுவலி இந்தக் காதல் எனக்கு ஒரு வரம்னு நினைக்குறேன்”
-பவிதரன்
“ஏன் இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுனிங்கப்பா? அவன் நம்ம குடும்பத்துக்கு அரணா நின்னவன். அவனைப் போய் வீட்டை விட்டு அனுப்பிட்டிங்களே”

காலையிலேயே வீட்டுக்கு வந்த மூத்த மகள் ஆங்காரமாய் நியாயம் கேட்பதை ஆயாசத்துடன் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்கள் மாணிக்கவேலுவும் நிலவழகியும்.
அவர்கள் பதில் சொல்லவில்லை என்றால் என்ன? நான் இருக்கிறேனே எனக் குறுக்கே புகுந்தாள் மதுமதி.
“அவன் என் புருசனை அறைஞ்சான். உன் கண்ணு முன்னாடி அவன் ரவி மாமா கன்னத்துல அறைஞ்சா நீ இப்பிடி அவனுக்குப் பரிஞ்சு பேசுவியா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஷண்மதிக்கு வந்ததே கோபம்.
“என் புருசன் மேல தப்பிருந்தா வயசுல சின்னவன் அடிச்சாலும் அவர் வாங்கிக்கட்டும்னு நான் ஓரமாதான் நின்னிருப்பேன்டி. இங்க பாரு! உன் சொந்த விருப்பு வெறுப்பை வச்சு அப்பாக்கும் பவிக்கும் இடைல தீ மூட்டி விடாத. உன் புருசன் பேசுனது நியாயமாடி? போதாக்குறைக்கு ஈஸ்வரியைப் பத்தி தப்பா வேற பேசியிருக்கார். அதைக் கேட்டுட்டு அவன் கையைக் கட்டிட்டு நிக்கணுமா?”
“எவளோ ஒருத்திக்காக..”
“எவளா இருந்தாலும் ஒரு பொண்ணைப் பத்தி தப்பா பேச மூனாவது மனுசங்களுக்கு உரிமை கிடையாது. ஒரு காலத்துல உன்னைப் பத்தி நம்ம சொந்தக்காரங்க தாறுமாறா பேசுனப்ப உனக்காகப் பேசுனவன் பவி. அதை மறந்துட்டு நன்றிகெட்டத்தனமா பேசாத மது.”
இப்போது மதுமதி கப்சிப். அடுத்து ஷண்மதியின் பார்வை அங்கே பார்வையாளராக மட்டுமே நின்று கொண்டிருந்த சகுந்தலாவிடம் பாய்ந்தது.
“ரொம்ப நன்றித்தை. உங்க மகன் வீட்டுக்குள்ள வந்ததும் என் தம்பிய வெளிய அனுப்பிட்டாப்ல. நல்லது! இன்னொன்னையும் உங்க மகன் கிட்ட சொல்லுங்க. மாணிக்கவேலுக்குப் பிறந்தது ஒரே ஒரு பொண்ணுதான். அவரோட மூத்த மகளும் அவரைத் தலைமுழுகிட்டுப் போயிட்டானு சொல்லுங்க. ரொம்ப சந்தோசப்படுவார்”
சகுந்தலா இதை எதிர்பார்க்கவில்லை. இன்னும் மகனின் சுயரூபம் முழுவதுமாக அவர் கண் முன் வரவில்லையே! ஷண்மதி ஏதோ ஆதங்கத்தில் பேசுவதாக எண்ணி அவளுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்.
“நீ தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கம்மா. தர்ஷன் நேத்து அந்தப் பொண்ணைப் பத்தி பேசுனதை நான் நியாயப்படுத்தமாட்டேன். ஆனா குடும்பத்தைப் பிரிக்கணும்னு நினைக்குற அளவுக்கு என் மகனை நான் மோசமா வளர்க்கல”
“அஹான்!”
நம்பாமல் கேலியாய் இழுத்தவள், “என் தம்பிக்கு இடமில்லாத வீட்டுல எனக்கு மட்டும் என்ன உறவு வேண்டியதிருக்கு? என் பிள்ளை இனிமே ஆச்சி தாத்தானு இந்த வீட்டுப் பக்கம் வராது. அடியே மது! நாளை பின்ன ஏதாச்சும் பிரச்சனை வந்துச்சுனா நீயோ உன் அம்மா அப்பாவோ என் தம்பியைத் தேடிக்கிட்டு வந்துடாதிங்க. வந்தா அசிங்கப்பட்டுப் போவிங்க, சொல்லிட்டேன்”
புடவையை உதறிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் ஷண்மதி.
மூத்த மகள் என்றால் மாணிக்கவேலுவுக்குத் தனி பிரியம். அவள் இப்படி ஒரேயடியாக வெட்டிக்கொண்டு போனதில் மனிதர் கலங்கிப்போனார்.
பவிதரனை அனுப்பிய பிறகும் அவருக்கு இரவு முழுவதும் உறக்கம் இல்லைதான். ஆனால், எங்கே போய்விடப் போகிறான் என்ற அலட்சியம்.
காலையில் மைந்தன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று நிலவழகியும் நம்பினார் எனலாம். ஆனால் வந்தவளோ மூத்த மகள். வந்தவுடன் வசை பாடிவிட்டுப் போகவும் செய்தாள்.
இருவரும் கலங்கிப் போக மதுமதியோ, “அவன் கிட்ட போய் நிக்குற அளவுக்கு எனக்கு ஏன் பிரச்சனை வரப்போகுது? எனக்கு என் புருசன் இருக்காரு” என்று திமிராகச் சொல்லிவிட்டு மாமியாரைத் தன்னுடன் அழைத்துப் போய்விட்டாள்.
தனது பிறந்த வீட்டிலிருந்து கிளம்பிய ஷண்மதி நேரே போய் நின்ற இடம் சிகாமணியின் வீடு. அங்கே காலையிலேயே குழந்தைகளின் சத்தம்.
ஒரு பக்கம் மலர்விழியின் மைந்தன் கதிர்காமனைத் தன்னருகே அமர வைத்துக்கொண்டு ஆதிரா தேஜஸ்வினிக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள்.
ஷண்மதியைப் பார்த்ததும் “வாங்க அக்கா” என முகம் மலர்ந்தாள்.
“எப்பிடி இருக்குற ஆதி?” என்று விசாரித்தபடி அவளுக்கு அருகே அமர்ந்த ஷண்மதி தேஜஸ்வினியை மடியில் வைத்துக்கொண்டாள்.

“அங்க இருந்துதான் வர்றிங்களா?” ஆதிரா குறிப்பு காட்டிப் பேசவும் தலையாட்டினாள்.
“புவனும் மாறனும் பின்வாசல்ல உக்காந்திருக்காங்க. பவியண்ணா கூட ஏதோ பேசிட்டிருக்காங்க”
“மலர் எங்க?”
“அவளும் அங்கதான் இருக்குறா”
ஷண்மதிக்குப் பெருமூச்சோடு கண்ணீரும் வந்தது. ஆதிரா அவளது தொடையில் தட்டிக்கொடுத்தாள்.
“பவியண்ணாவ அப்பிடியெல்லாம் விட்டுருவோமா? மாறனுக்குத் தெரிஞ்ச கன்ஸ்ட்ரக்சன் கம்பெனில இப்ப இன்ஜினியர் தேவை. அண்ணா அங்க நாளையில இருந்து ஜாயின் பண்ணப்போறார். கொஞ்சநாள் வேலைக்குப் போயிட்டு அப்புறமா சொந்தமா கம்பெனி ஓபன் பண்ணலாம்னு இருக்குறாராம்.”
ஷண்மதிக்கு இருந்தாலும் மனம் ஆறவில்லை. இந்நேரத்தில் மெதுவாக எட்டிப் பார்த்தாள் ஈஸ்வரி.
“எல்லாரும் இங்கதான் இருக்குறிங்களா?” என்ற கேள்வியோடு வந்தவள், “நீ எப்ப வந்த ஷண்மதிக்கா?” என்க,
“நான் என்னவோ கேள்விப்பட்டேன். நீ என்ன என்னை முறை மாத்திக் கூப்பிடுற? பவிக்கும் அக்கா உனக்கும் அக்காவா?” என அந்த ரணகளத்திலும் ஈஸ்வரியைக் கேலி செய்தாள் ஷண்மதி.
“க்கும்! நான் மட்டும் ஆசை பட்டா போதுமா”
பெண்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவர்களுக்குக் காபியும் வடையும் வந்து சேர்ந்தது. குழலி அவர்களோடு அமர்ந்தவர், பேரனுக்கு உளுந்தவடையின் பொன்னிறப் பகுதியை மட்டும் பிரித்து ஊட்டிவிட்டார்.
“சித்தியும் சித்தப்பாவும் இல்லனா அவன் எங்க போயிருப்பான்?”
“எங்க வீட்டுக்குக் கையோட அழைச்சிட்டுப் போயிருப்பேன்” ஓரக்கண்ணால் பார்த்தபடி பேசினாள் ஈஸ்வரி.
ஷண்மதி திகைப்பாய் அவளை ஏறிட்டாள்.
“இது விளையாட்டு இல்ல ஈஸ்வரி. அப்பிடியெல்லாம்…”
“ப்ச்! உங்க தம்பிய பேசாதிங்க அக்… மதினி. அவர் கம்பெனில நான் வேலை பாத்தப்ப என்னைக் காதலிக்கிறதா எத்தனை தடவை ப்ரபோஸ் பண்ணுனார் தெரியுமா? உங்கம்மைக்கும் தங்கச்சி தாடகைக்கும் பயந்து நான் வேண்டாம்னு ஒதுங்குனேன். இப்ப தான் அதுங்க தொல்லை இல்லையே, வா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா உங்க தம்பி ஓவரா பிகு பண்ணுது”
அவள் பாவனையோடு சொல்ல ஆதிராவும் குழலியும் சத்தமாகச் சிரித்தார்கள்.
“சிரிக்காதிங்க. நைட் முழுக்க எங்கம்மா அப்பா கிட்ட பேசி தொண்டை காய்ஞ்சு போய் வந்திருக்கேன். எனக்கு ஒரு வழி சொல்லுங்க”
“மூர்த்தி மாமா என்ன நினைக்குறார்?” ஷண்மதி காபியை அருந்தியபடி வினவினாள்.
“அவருக்கு யோசனைதான். சட்டுனு சொன்னதும் நம்பவே முடியல அவரால. அதுவுமில்லாம உன் அம்மை எங்க வீட்டுக்கு வந்து எங்களை ரொம்ப அசிங்கமா பேசிடுச்சுக்கா… ப்ச் மதினி… இப்ப இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா அதையும் அசிங்கமா பேசுவாங்களோனு தயங்குறார். ஆனா என் விருப்பம் தான் எங்கப்பாக்கு முக்கியம்”
ஈஸ்வரி நம்பிக்கையோடு சொல்லவும் ஆதிரா ஷண்மதியிடம் அவளுக்காகப் பரிந்து பேச ஆரம்பித்தாள்.
“பவியண்ணா இப்ப இருக்குற நிலமைல அவர் ரொம்ப விரும்புற ஒருத்தி அவரோட இருக்கணும்கா. நீங்க சொன்னா அவர் கேப்பார்.”
“ஒருவேளை நீயும் எங்க குடும்பம் உங்க குடும்பத்தோட சம்பந்தம் பேச தகுதியில்லாததுனு நினைக்குறியோ?” ஈஸ்வரி விளையாட்டாகக் கேட்க, ஷண்மதி குடித்துக்கொண்டிருந்த காபி தம்ளரை அவளது புஜத்தில் வைத்துச் சூடு போட்டுவிட்டாள்.
“அம்மாடி”
ஈஸ்வரி கத்தவும், “கண்ட மேனிக்குப் பேசுன, கண்ணு முழிய நோண்டி கையில குடுத்துடுவேன் பாத்துக்க. நான் எப்பவாச்சும் அந்த மாதிரி நினைச்சிருக்கேனாடி?” என்று ஷண்மதி பற்களைக் கடிக்க,
“அப்ப எனக்கும் உன் தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வை” என்றாள் ஈஸ்வரி ஒரு கையால் காபியை அருந்தியபடியே இன்னொரு கையால் துப்பட்டாவைச் சுற்றியவளாய்!
குழலிக்கும் அது ஒன்றும் தவறான காரியமாகத் தோன்றவில்லை. என்னதான் தானும் கணவரும் பவிதரனை அன்பாய் அரவணைத்தாலும் மனைவி என்ற ஒருத்தியின் துணை கொடுக்கும் தைரியம் தனிதானே!
ஷண்மதி யோசனையில் ஆழ, ஈஸ்வரி காபியைக் காலி செய்துவிட்டுப் பின்வாசலில் மீட்டிங் போட்டுக்கொண்டிருப்பவர்களை நோக்கி விரைந்தாள்.
அவளைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் புன்னகைத்தார்கள்.
“பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துச்சுனா எனக்கு ஒரு முடிவு சொல்லுங்க எல்லாரும்”
“என்ன முடிவும்மா?” புவனேந்திரன் தெரியாதவனைப் போல வினவவும் மலங்க மலங்க விழித்தவள் பவிதரனை முறைத்தாள் கொடூரமாக.
“நீங்க இன்னும் சொல்லவேல்லையா?”
பவிதரன் தொண்டையைச் செருமினான்.
“நான் சொன்னாலும் நீ புரிஞ்சிக்க மாட்டேங்குற”
“மண்டைய உடைச்சிடுவேன்” அவள் ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரிக்கவும் அவன் கப்சிப்.
மகிழ்மாறன் இருவரையும் நோட்டம் விட்டான்.
“கல்யாணம் தானே! பண்ணிடலாம்மா” என்றான்.
ஈஸ்வரி சந்தோசத்தில் துள்ளி குதிக்காதக் குறை.
“ஆனா பவி சில கண்டிசன்ஸ் சொல்லுறாப்ல” என்று இடையில் ஒரு செக் வைத்தான்.
அதைப் பவிதரனே சொல்ல ஆரம்பித்தான்.
“நாம கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா உன் அம்மாவும் அப்பாவும் மனப்பூர்வமா சம்மதிக்கணும். அப்புறம் அன்னைக்கு ஏதோ சொன்னியே, ஆம்பளைங்க கல்யாணம்னு வந்ததும் பவுன் கணக்கு பாப்பாங்கனு. அதெல்லாம் வேண்டாம்.”
“ம்ம்..”
“கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி இந்த ஊருல ஒரு வீடு பாத்துடணும்”
“வாடகைக்கா?”
“சொந்தவீடு வாங்குற அளவுக்குப் பணம் இருக்கு. ஆனா தொழிலுக்கு வேணுமே”
“சரி”
“எந்தக் காலத்துலயும் மாணிக்கவேலுவோட சொத்துல எனக்குப் பங்கு கிடையாது. இதைப் புரிஞ்சிக்கணும். ஏன் சொல்லுறேன்னா கையில வேலை சரியா இல்லனாலும் சொத்து வருமேங்கிற எண்ணத்தை உன் பேரண்ட்ஸ் மனசுல சொந்தக்காரங்க விதைக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. இனி அந்த வீட்டுல இருந்து எனக்கு எதுவும் வேண்டாம்ங்கிற முடிவுல நான் ஸ்ட்ராங்கா இருக்குறேன்.”
அனைத்துக்கும் தலையாட்டினாள் ஈஸ்வரி.
“அப்புறம் என்ன? நாளைக்கே வேலைல ஜாயின் பண்ணுங்க. அம்மா அத்தைய வச்சு ஈஸ்வரி குடும்பத்துல பேசிடலாம். கல்யாணத்தைச் சிம்பிளா வச்சுக்கலாம். இப்ப உனக்குச் சந்தோசமாம்மா?” எனப் புவனேந்திரன் கேட்க பூவாய்ச் சிரித்தாள் அவள்.
வீடு குறித்து யோசித்தாள் மலர்விழி. அவர்களது வீட்டிலிருந்து சில அடிகள் தள்ளி ஒரு வீடு இருக்கிறது. வீட்டின் உரிமையாளனை அண்டைவீட்டார் என்ற முறையில் நன்கு தெரியும் மலர்விழியின் குடும்பத்துக்கு.
“நம்ம செந்திலண்ணன் வீடு இருக்கு. அப்பாவ வச்சு வாடகைக்குக் கேக்கச் சொல்லுவோம். ஆனா அதுக்கு முன்னாடி கல்யாணப்பேச்சு முடிவுக்கு வரணும். அதை நாங்க பாத்துக்குறோம்” என்றாள் அவள்.
பவிதரன் ஈஸ்வரியிடம் பேசினால் நல்லதெனத் தோன்றியது புவனேந்திரனுக்கு.
“நாம குழந்தைங்களோட மாமாவோட தோட்டத்துக்குப் போயிட்டுவரலாமா?” என்று சொல்லி தம்பியையும் தம்பி மனைவியையும் அங்கிருந்து நகர்த்தித் தன்னோடு அழைத்துப் போய்விட்டான்.
உள்ளே ஷண்மதியிடம் அவர்கள் பேசுவதைக் கேட்டபடி திண்ணையில் அமர்ந்தார்கள் பவிதரனும் ஈஸ்வரியும்.
எப்போதும் ஃபார்மல் சட்டை, பேண்ட்டில் பார்த்தே பழகிய ஈஸ்வரியின் விழிகளுக்கு அவனது கருப்பு வேஷ்டி வித்தியாசமாகத் தோன்றியது.
“பக்கா கிராமத்து ஆளா மாறிட்டிங்க போல” கிண்டல் செய்தாள்.
அவனும் கொஞ்சம் வெட்கப்பட்டாற்போல சிரித்தான்.
“எனக்குக் கட்டவே தெரியல. சித்தப்பா சொல்லிக் குடுத்தார்” என்றான்.
“வேஷ்டி கூட கட்டத் தெரியாதா?”
“பாக்க ஈசியா தெரியும். ஆனா அது ஈசியில்ல” என்றவன் “நேத்து வீட்டுல திட்டுனாங்களா?” என மெதுவாக வினவினான்.
ஈஸ்வரி அங்கிருந்த எலுமிச்சை மரத்தில் பார்வையை நிலைக்க விட்டாள்.
“காதலிக்கிறதை மனப்பூர்வமா ஏத்துக்குற அளவுக்கு நம்ம ஊர் இன்னும் டெவலப் ஆகல. அம்மாக்கு நான் நேத்து காலையில அழுதப்பவே கொஞ்சம் டவுட் இருந்திருக்கு. அப்பாக்கு ஷாக் தான். ரெண்டு பேரும் ரொம்ப நேரம் என் கூட பேசவேல்ல. அப்புறம் அப்பா தான் மெதுவா பேசுனார். இதுல்லாம் சரியா வருமா, நாளை பின்ன அவங்கம்மா பிரச்சனைக்கு வந்தா என்ன செய்யனு ஆயிரம் கவலை அவருக்கு. என்னை மீறி யார் அவங்களைப் பேசிட முடியும்?”
“அதானே! நீ உலகமகா சண்டைக்காரி” அவளது புஜத்தில் ஆட்காட்டிவிரலால் அழுத்தி கிண்டல் செய்தான் பவிதரன்.
ஈஸ்வரி அவன் பக்கம் திரும்பினாள்.
“உங்கம்மா உங்க தங்கச்சி, உங்க வீட்டுக்கு வந்த புண்ணியவான் மாதிரி ஆளுங்க இருக்குற உலகத்துல உங்களுக்கு இந்தச் சண்டைக்காரி துணை ரொம்ப அவசியம் முதலாளி. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு கடுப்புனு எந்தக் குணமும் இந்த உலகத்துல வாழுறதுக்கு நமக்குத் துணையா இருக்காது. தைரியம் மட்டும்தான் நம்மளை வாழவைக்கும். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். தெரியுமா?”
தனது சுபாவத்தை அவனிடம் பெருமிதமாக விவரித்தாள் அவள். பவிதரன் தலையாட்டினான். சிரிப்போடு சேர்ந்து சின்னதொரு வாட்டமும் அவனது முகத்தில்!
ஈஸ்வரி அதைக் கவனித்து அவனது கையைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினாள்.
“வேலைக்குப் போகச் சங்கடமா இருக்கா? ரொம்ப கஷ்டமா இருந்தா நீங்க போகாதிங்க. கையில இருக்குற பணத்தை வச்சு இப்பவே சின்னதா ஏதாச்சும் கான்ட்ராக்ட், சப் கான்ட்ராக்ட் கிடைக்குதானு பாருங்க. நான் வேலைக்குப் போறேன்” என்றாள் மென்மையாக.
“இப்பவே தொழில்ல இறங்க வேண்டாம்னு நினைக்குறேன். நாலு பேரை வச்சு வேலை வாங்குறவன் முதல்ல அந்த வேலைகள் எல்லாத்தையும் செய்யுற இடத்துல இருக்கணும். எல்லாத்தையும் கத்துக்கணும். நான் கத்துக்குறேன் முதல்ல. ஒரு பாட்டுல ஓஹோனு வாழ்க்கை மாறுறதுக்கு இது என்ன சூரியவம்சம் படமா? ரியாலிட்டிய நான் ஃபேஸ் பண்ணனும் ஈஸ்வரி. அப்பதான் எங்க சறுக்குவோம், எங்க மத்தவங்க நம்ம முதுகுல குத்துவாங்கங்கிற அறிவு எனக்கு வரும்.”
ஈஸ்வரி அவனைத் தலைசாய்த்துப் பார்த்தவள் “நல்லா பேசுறிங்க” என்க,
“நீ அடிக்கடி இப்பிடி சொல்லுற” என்றான் அவன் சின்னதொரு புன்னகையோடு.
பின்னர் வானத்தைப் பார்த்தவன், “நாளைக்கு முன்னாள் மேயர் வீட்டுப் பால் காய்ச்சுற பங்சன் இருக்கு. ஸ்டாஃப்ஸ் எல்லாரையும் அவங்க கூப்பிட்டிருந்தாங்க. இங்க நிலமை மாறுனது அவங்களுக்குத் தெரியாது” என்றான்.
“இனிமே அது உங்களோட கவலை கிடையாது.”
“ஆனா ஸ்டாஃப்ஸ்?”
“ஸ்டாஃப்சுக்கு மாசமானா சம்பளம் வந்தா மட்டும் போதும். அதைக் குடுக்குற முதலாளி யார்ங்கிற கவலை அவங்களுக்கு இருக்காது. இதை நீங்கதான் எனக்குச் சொன்னிங்க. இப்ப மட்டும் என்ன? விடுங்க. நீங்க அங்க இருந்தவரைக்கும் ரொம்ப மரியாதையா அவங்களை நடத்துனிங்க. ராமசாமியண்ணனையும் அந்தப் பசங்களையும் எவ்ளோ பெரிய பழில இருந்து காப்பாத்திருக்கிங்க. உங்களோட பெஸ்டை நீங்க பண்ணிட்டிங்க. இனி நடக்கப்போற எதுக்கும் நீங்க பொறுப்பாக முடியாது”
பவிதரனின் பார்வை அவளது ஒவ்வொரு சொல்லின் தாக்கத்தாலும் கனிந்தது. எந்தக் குற்றவுணர்ச்சியும் தன்னை ஆட்கொள்ளக்கூடாதென அவள் நினைப்பது அவனுக்கும் புரிந்தது.
“இப்பிடி பாத்துட்டே இருக்காம சட்டுப்புட்டுனு கல்யாணப்பேச்சை ஆரம்பிக்கச் சொல்லுங்க. இல்லனா பாத்துக்கிட்டே மட்டும்தான் இருக்கணும்”
சுடிதார் துப்பட்டாவைச் சுழற்றியபடி அவள் சொல்லவும் பவிதரனின் வதனத்தில் புன்னகை குடியேறியது. தன்னருகே அமர்ந்திருந்தவளின் தோளை வளைத்து அணைத்துத் தன்னருகே இழுத்துக்கொண்டான்.

அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிய உள்ளே இருந்து ஷண்மதியின் குரல் கேட்டது.
“நான் ஒருத்தி வந்திருக்கேன்டா. அப்புறமா கொஞ்சிக்கோங்க. இளவரசி அத்தை கிட்ட கல்யாணம் பேசி முடிக்கணும்னா என் தயவு வேணும் உங்களுக்கு”
சட்டென விலகிக்கொண்டார்கள் இருவரும். சிரிப்போடு வீட்டுக்குள்ளும் சென்றார்கள்.
ஷண்மதி சித்தியோடும் சிவகாமியோடும் சேர்ந்து இளவரசியிடம் ஈஸ்வரி – பவிதரன் திருமணம் பற்றி பேசுவதாக உறுதி கொடுத்தாள் இருவருக்கும்.
மலர்விழி வீடு பார்க்கும் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்தாள்.
மகிழ்மாறனும் புவனேந்திரனும் பவிதரனின் வேலைக்கான ஏற்பாட்டை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார்கள்.
யார் இருக்கிறார்களோ இல்லையோ உனக்கு நாங்கள் இருக்கிறோமென்ற நம்பிக்கையைப் பவிதரனுக்குக் கொடுத்தார்கள் அவர்கள் அனைவரும்.
மறுநாள் பவிதரன் கட்டிடப் பொறியியலாளனாகப் பணியில் சேர, அதே நேரம் மாணிக்கவேலு தனது மருமகன் தர்ஷனோடு முன்னாள் மேயரின் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டார்.
பவிதரன் பற்றி விசாரித்தவர்களிடம் “இனிமே என் மருமவன் தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிய பாத்துக்கப் போறாரு.” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
“உங்க ஸ்டாஃப்சையும் அழைச்சிருந்தோமே” என்று சொன்ன முன்னாள் மேயரிடம்,
“அவங்க எல்லாம் எதுக்குங்க? செய்யுற வேலைக்குச் சம்பளம் குடுக்குறோமே! அதுதான் அவங்களோட எல்லை. நமக்குச் சமமா அவங்களை வர வச்சு இங்க பந்தில உக்கார வச்சா அப்புறம் நமக்கும் அவங்களுக்கும் என்னங்க வித்தியாசம்?” என்று பதிலளித்தது மாணிக்கவேலு இல்லை, அவரது அன்பான மருமகன்.
அவனது பதிலில் முன்னாள் மேயரே கொஞ்சம் ஆடித்தான் போனார் எனலாம்.
ஒரு தலைவனுக்கும் முதலாளிக்கும் உள்ள வித்தியாசமே இந்தச் சமத்துவம் தான்.
நாம் அனைவரும் சேர்ந்து இந்த வேலையை முடிப்போம் என்று ஊழியர்களோடு தன்னைச் சமமாக நிறுத்திக்கொள்பவன் தலைவன்.
நான் சொல்லுகிறபடி நீங்கள் வேலை செய்து முடியுங்கள் என்று மேலே இருந்து கட்டளை இடுபவன் முதலாளி.
தலைமைப்பண்பை நீங்கள் முதலாளியிடம் தேட முடியாது. முதலாளிக்குத் தெரிவது எல்லாம் இலாப நஷ்டக்கணக்கு மட்டுமே!
அவனுக்கு உங்கள் மனநிலை உடல்நிலை குடும்பச்சூழல் எதைப் பற்றிய கவலையும் இருக்காது.
அரசியலில் இத்தனை ஆண்டுகள் எதிர்நீச்சல் அடிக்கும் முன்னாள் மேயருக்குத் தர்ஷனின் இந்தப் போக்கு பணம் மட்டுமே பிரதானமெனத் துடிக்கும் முதலாளி வர்க்கத்தையே நினைவுறுத்தியது.
கூடவே கொஞ்சம் ஆர்வக்கோளாறாகவும் தோன்றினான். நிச்சயம் இவனால் மாணிக்கவேலுவின் தொழிலில் ஏறுமுகம் என்பது சாத்தியமில்லை என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார்.
ஆரம்பத்தையே ஆதிக்க மனநிலையோடு தொடங்கிய தர்ஷன் இனி தனக்குத் தடையாய் எவனும் இல்லை என்ற இறுமாப்போடு மேரு பில்டர்சிலும் மாணிக்கவேலுவின் தொழில் சாம்ராஜ்ஜியத்திலும் கால் பதித்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

