இன்னிக்கு நடந்ததை என்னால நம்பவே முடியல! இப்போதான் நான் படிச்சிட்டு இருந்த “மாயக்கண்ணாடி” நாவலை முடிச்சேன். நாவல் முழுக்க, நாயகி ஆதிரா ஒரு மர்மமான கண்ணாடியைத் தேடி அலைவா. அந்தக் கண்ணாடியால அவங்க குடும்பத்தோட சாபத்தை நீங்கும்னு கதை நகரும். நானும் ரொம்ப ஆர்வமா படிச்சிட்டு இருந்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு திருப்பம், அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்க மனசு துடிச்சுக்கிட்டே இருந்துச்சு. கடைசி அத்தியாயத்துலதான் அந்த ட்விஸ்ட்! ஆதிரா தேடின மாயக்கண்ணாடி எங்கேயோ வெளியில இல்லையாம், அவளுக்குள்ளேயேதான் இருந்துச்சாம்! அதாவது, அவளோட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் அந்தக் கண்ணாடிங்கிறதை ரொம்ப அற்புதமா சொல்லி இருந்தாங்க. அடப்பாவமே, நாம வெளியில தேடுற தீர்வு நமக்குள்ளேயே இருக்குங்கிறதை எவ்வளவு அழகா புரியவச்சிருக்காங்க! இந்த நாவல் எனக்குள்ள ஒரு புது வெளிச்சத்தைப் பாய்ச்சிருச்சு. இனிமேல் எந்தப் பிரச்சனை வந்தாலும், அதுக்கானத் தீர்வை வெளிய தேடமாட்டேன்.”
-விழியின் மொழி
மண்டபத்தில் இரவு சாப்பாடு முடிந்ததுமே மதுவந்திக்கு மெஹந்தி போட ஆரம்பித்திருந்தார்கள்.
“நீங்களும் மெஹந்தி போட்டுக்கோங்கடி” என்று ஈஸ்வரியையும் மலர்விழியையும் அமர வைத்தாள் ஷண்மதி.
“வேண்டாம்கா” என்றவர்கள் பின்னர் எளிமையான டிசைனில் போட்டுக்கொண்டார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் அந்த ரூம்ல என் கூட படுத்துக்கோங்க. இந்த மகாராணிக்கு யாரும் கூட இருக்கக்கூடாதாம். ப்ரைவேசி வேணுமாம்” தங்கையைக் காட்டிக் கடுப்போடு சொல்லிவிட்டுத் தோழியர் இருவரையும் தன்னோடு அழைத்துச் சென்றவள் உறக்கம் வரும் வரை சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நாளைக்கு மலர் என்ன புடவை கட்டப்போறா?”
குழலி கனகாம்பர பூ நிறத்தில் பார்டரில் மட்டும் துளி ஜரிகை வைத்த சாஃப் சில்கைக் காட்டவும் ஷண்மதியின் முகம் கேள்விக்குறியானது.
“பொண்ணுக்குச் சகோதரி முறை வர்ற எல்லாருக்கும் ஒரே கலர்ல புடவை எடுத்தோமே. அதை மலர் கிட்ட அம்மா குடுக்கலையா?” என்று வினவ குழலிக்குக் குழப்பம்.
ஷண்மதி தாமதிக்கவில்லை. பவிதரனுக்கு அழைத்தாள்.
“டேய்! மலருக்கு வாங்குன புடவை அம்மா கிட்ட இருக்கும் அதை வாங்கிட்டு வா”
அடுத்தச் சில நிமிடங்களில் பவிதரனும் புடவை பார்சலுடன் வந்துவிட்டான்.
பிரித்துப் பார்த்த மலர்விழியின் முகம் மலர்ந்தது.

தங்க நிறத்தில் லாவண்டர் வண்ண பார்டர் வைத்த பட்டுப்புடவை! அதற்கு பொருத்தமாக லாவண்டரில் கைவேலைபாடுகள் செய்யப்பட்ட ரெடிமேட் ப்ளவுஸ்!
“இதைத் தாலிக்குப் பொன்னுருக்குனப்பவே உங்க கிட்ட குடுக்கச் சொன்னேனே சித்தி”
“தெரியல ஷண்மு”
பவிதரனுக்கு விவரம் தெரியுமே! தாங்கள் பார்த்தச் சம்பந்தத்துக்குச் சம்மதிக்காதவளுக்கு எதற்கு விலையுயர்ந்த புடவை என்று நிலவழகிதான் அதைக் குழலியிடம் கொடுக்காமல் வைத்திருந்தார். சற்று முன்னர் அவன் போய்க் கேட்டதும் அவர் முகத்தில் ஏகத்துக்கும் அதிருப்தி.
“க்கும்! கல்யாணம் உன் தங்கச்சிக்கு. அவளுக்கு இல்ல. அவ பட்டும் பவுனுமா ஜொலிக்கணும்னு என்ன அவசியம் இருக்கு?” என்றவரைக் காட்டமாக முறைத்துவிட்டுப் புடவையை வாங்கி வந்திருந்தான் அவன்.
அதையெல்லாம் சொல்லி, இதோ இப்போது இருக்கும் அழகான இனிமையான மனநிலையைக் கெடுக்கும் எண்ணமில்லை அவனுக்கு.
“ஜூவெல்ஸ் எல்லாம் நமக்குச் செட்டா வாங்கிட்டு வந்தேன்டி. எல்லாம் டெம்பிள் டிசைன். இந்தா ஈஸ்வரி இது உனக்கு வாங்குன செட். தங்கம் தோத்துடும். வியர்வை படாம பாத்துக்கோங்க. கவனம்” என்று ஷண்மதி ‘டெம்பிள் டிசைனில்’ மூவருக்காகவும் ஒன்று போல வாங்கிய தங்க முலாம் பூசிய நகை செட்களைக் காட்டினாள்.
வைர வைடூரியம் வைத்திருந்தாலும் திருமணத்திற்கு அதைப் போட்டுவர முடியுமா என்ன? என்ன ஒன்று, ஊர்க்காரர்கள் கவரிங் தானாக்கும் என்று குறை சொல்லுவார்கள்! சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்!
“நான் மலருக்கு நகை எடுத்துட்டு வந்தேனே”
குழலி சொல்ல “அதைப் பத்திரமா வைங்க சித்தி. கல்யாண வீடுகள்ல யாரையும் நம்ப முடியாது. நகைய கட்டிக் காப்பாத்துறதுக்குள்ள நமக்கு நாக்கு வெளிய வந்துடும். பெஸ்ட் இந்த கோல்ட் ப்ளேட்டட் ஜுவெல்ஸ். நாகரிகமாவும் இருக்கும்.” என்றாள் அவள்.
பவிதரனிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்குமாறு அனுப்பிவைத்துவிட்டார் குழலி.
ஷண்மதியும் மலர்விழியும் கடைசியாக மதுமதியின் அறைக்குப் போன நேரத்தில் கூட அவள் இரகசியக்குரலில் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள். இருவரையும் கண்டதும் எரிச்சலாக முகம் உயர்த்தினாள்.
“என்ன?”
“நீ மெஹந்தி வச்சதால சரியா சாப்பிடலையாம். இந்தா சாப்பிடு”
ஷண்மதி இட்லிகளைத் துண்டாக்கி சாம்பாரில் ஊற வைத்த கிண்ணத்தையும் கரண்டியையும் நீட்ட “அப்புறமா பேசுறேன்” என்று அமைதியானவளின் முகம் ஏனோ மாறியது.
கண்கள் கூட கலங்கியது போலத் தெரிந்தது மலர்விழிக்கு. இப்படி எல்லாம் எளிதில் உணர்ச்சிவசப்படமாட்டாளே என அவள் யோசிக்கும்போதே “சாரிக்கா” என்றாள் மதுமதி குரல் கம்ம.
“எதுக்கு? நீ கத்துறதும் அதுக்கு நான் உன்னை முறைக்குறதும் நமக்குள்ள புதுசா? சாப்பிடு. நாளைக்குக் காலையில ஃப்ரெஷ்சா இருக்கணும்” என்றாள் ஷண்மதி.
அடுத்து மலர்விழியை நோக்கின மதுமதியின் நயனங்கள். அவளை ஏனோ சிறுவயதிலிருந்து பிடிக்காது. ஆச்சி தாத்தாவுக்கு அவள் உயிர் என்பதால் அவர்களிடம் கூட மதுமதி நெருங்கியதில்லை. ஏனோ இப்போது அவளைப் பார்க்கும்போது கொஞ்சம் அநியாயமாக அவள் விசயத்தில் நடந்துகொண்டோமோ என்ற கேள்வி மட்டும் அவளுக்குள் பிறந்தது.
“நீ… நாளைக்கு மானிங் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்ததும் முதல்ல மேக்கப் போட்டுக்க. அக்கா நீயும்தான்.” என்றாள் அவள்.
“ஏன்டி?” ஷண்மதி சந்தேகமாக வினவ
“நீ, இவ, இவளோட ஃப்ரெண்ட் மூனு பேரும்தான் ப்ரெய்ட்ஸ் மெய்ட்ஸ் (மணப்பெண் தோழிகள்). அதனால நீங்க முதல்ல ரெடியாகுங்க. நீங்க ரெடியாகுற நேரத்துல நான் கொஞ்சம் தூங்குவேன்” என்றாள் அவள்.
“இது நல்லா இருக்கே! நீதான் கல்யாணப்பொண்ணு. உனக்கு முடிச்சதும் நேரம் இருந்தா நாங்க…”
“அக்கா ப்ளீஸ்”
இதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை ஷண்மதி. அவளது பேச்சிலும், உடல்மொழியிலும் தொனித்தக் கலக்கத்தைக் கவனிக்கவும் இல்லை இருவரும்.
அறைக்கு வந்ததும் “மது என்ன திடீர்னு நல்லவ ஆகிட்டா?” என்று ஷண்மதி கேட்க
“எங்க புவன் சார் காத்து அவ மேல வீசிருக்கும். அதான் இந்த மாற்றம்” என்றாள் ஈஸ்வரி.
“அடேங்கப்பா! அவர் அவ்ளோ நல்லவரா?” கிண்டலாகக் கேட்டபடி உறங்க தயாரானாள் அவள்.
“புவன் சார் ரொம்ப அமைதியான டைப். மலர் ஒரு தடவை சார் கிட்ட ட்ராஃபி கூட வாங்கிருக்கா”
“ஆமாக்கா! நான் யூ.ஜி படிக்குறப்ப லைப்ரரிய அதிகமா யூஸ் பண்ணுவேன். எங்க காலேஜ்ல அதுக்குத் தனியா ட்ராஃபி குடுத்துப் பாராட்டுவாங்க. மூனு வருசம் புவன் சார் கையால ட்ராஃபி வாங்குனேன். சார் ரொம்ப அமைதியான டைப்”
மூவரும் இவ்வாறு பேசிக்கொண்டே உறங்கினார்கள்.
காலையில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்ததும் தங்கள் அறைக்கு வரவழைத்து அலங்காரமும் செய்துகொண்டார்கள்.
“ப்ரெய்டுக்கு எப்ப பண்ணனும் மேடம்? புடவை ராப் பண்ணி எடுத்துட்டு வந்துட்டோம். அவங்களுக்கு பெர்ஃபெக்டா பண்ண ஒன்றரை மணி நேரம் தேவைப்படும்” என்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சொல்லவும்
“நீங்க இவளுக்குப் பாருங்க. நான் போய் மது குளிச்சு ரெடியாகிட்டாளானு பாத்துட்டு வந்துடுறேன்” என்றபடி ஷண்மதியும் மலர்விழியும் மதுமதியின் அறைக்குச் சென்றார்கள்.
அங்கே விளக்கு எரிவதைக் கதவின் கீழே தெரிந்த ஒளி கோடு மூலம் அறிந்தவர்கள் “நான் எழுந்திரிச்சப்பவே லைட் எரிஞ்சுது. இன்னுமாடி இவ குளிக்குறா?” என்று கேட்ட ஷண்மதி “டி மது!” என்று கதவைத் தட்ட வேகமாகத் தட்டலில் கதவு திறந்துகொண்டது.
“கதவை லாக் பண்ணாம என்ன பண்ணுற…” என்றபடி உள்ளே வந்தவர்கள் அறை வெறுமையாக இருக்கவும் குளியலறை கதவைத் தட்டினார்கள்.
“மது! மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்தாச்சுடி. வெளிய வா. நைட் உன்னைத் தனியா தூங்கவிட்டதை அம்மா கிட்ட சொல்லிடாத. கல்யாணப்பொண்ணைத் தனியா விட்டுட்டு என்ன வெட்டி முறிச்சனு அம்மா திட்டும். அதுக்குப் பதில் சொல்லி மாளாது”
ஷண்மதி பேசிக்கொண்டே போக, அங்கே பதில் சொல்லத்தான் ஆளில்லை.
“அக்கா” என்ற மலர்விழி குளியலறை கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருப்பதைக் காட்டினாள்.
ஷண்மதி அதைக் கவனித்ததும் அரண்டுவிட்டாள்.
“எங்கடி போனா இவ?” மெல்லிய பதற்றம் அவளைத் தொற்றிக்கொண்டது.
இருவரும் என்ன செய்யவெனப் புரியாமல் நிற்கையில் நிலவழகி அங்கே வந்தார்.
“என்னடி நீங்க கல்யாணப்பொண்ணு மாதிரி நிக்குறிங்க? மதுக்கு இந்நேரம் பாதி அலங்காரம் முடிஞ்சிருக்கணுமேனு பாக்க வந்தேன். எங்க அவ? எங்க அந்த மேக்கப் பொண்ணு?”
“ம்மா! மதுவ காணல” ஷண்மதி சொல்ல நிலவழகியின் பேச்சு நின்றது. மூச்சும் நின்றுவிடுமோ என பயந்தபடி “நல்லா பாத்திங்களா? பாத்ரூம்ல…” என்றவரின் விழியில் வெளிப்பக்கம் தாழிடப்பட்ட குளியலறை பட்டதும் நெஞ்சே விண்டுபோனது.
“என்னடி இது?” நடுங்கிய குரலில் கேட்டவர் “உன்னை, இவளை, ஈஸ்வரியை மதுக்குத் துணையா இருக்கச் சொன்னேனே. உங்களுக்குத் தெரியாம அவ எங்க போயிருப்பா?” என வினவ
“ப்ரைவேசி வேணும்னு எங்களைத் தனி ரூமுக்குப் போக சொல்லிட்டாமா” என்றாள் ஷண்மதி.
“அவ சொன்னா நீங்க கேட்டுருவிங்களா? என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டாமா??”

“ம்மா! அவளைப் பத்தி உனக்குத் தெரியுமே! நினைச்சதைச் சாதிக்கணும் அவளுக்கு. ஆனா இப்பிடி ஆகும்னு நாங்க யோசிக்கல. நாங்க எழுந்திரிச்சதும் அவ ரூமைப் பாத்தோம். லைட் எரிஞ்சுது. அவளும் முழிச்சிட்டானு நினைச்சோம். அதுக்குள்ள மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்துட்டாங்க. அவ நேத்து நைட்டே எங்களை முதல்ல போடச் சொன்னாம்மா. அந்தக் கேப்ல கொஞ்சம் உறங்கிக்கிறேன்னு சொன்னா. அதனால ஒரு மணி நேரம் எங்க மூனு பேரால எங்கயும் நகர முடியல”
ஷண்மதி சொல்ல சொல்ல நிலவழகியில் தலையில் இடிவிழாதக் குறை!
அடுத்து மதுமதி தயாரா என்று கேட்டபடி வந்து நின்றார் குழலி. அவருக்கு விவரம் தெரியவும்
“என்னடி சொல்லுறிங்க? நல்லா பாத்திங்களா? அவ நேத்து நைட் முழுக்க போனும் கையுமா இருந்தாளே! வேலை விசயமா எதுவும் போன் பேசப் போயிருக்காளானு பாருங்க. நானும் மண்டபம் முழுக்க தேடுறேன்” என்றவர் நிலவழகியிடம் தைரியமாக இருக்குமாறு சொல்லிவிட்டுப்போனார்.
மகள் மணக்கோலத்திலிருப்பதைப் பார்க்க அங்கே தம்பியுடன் வந்த மாணிக்கவேலுவையும் ‘மதுமதியைக் காணவில்லை’ என்ற செய்தி சூறாவளியாய் தாக்கியது. இடிந்து போனார் மனிதர்.
சிகாமணி உடனடியாக பவிதரனை அழைத்து விவரத்தைச் சொல்ல “பதறாதிங்கப்பா! பக்கத்துல எங்கயாச்சும் போயிருக்கலாம். நானும் சித்தப்பாவும் செக்யூரிட்டி கிட்ட விசாரிச்சிட்டு அப்பிடியே சி.சி.டி.விய செக் பண்ணிட்டு வந்துடுறோம்” என்று ஆறுதலாகப் பேசிவிட்டுச் சிகாமணியைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான்.
அந்த மணமகள் அறை வாயிலில் நின்ற ஈஸ்வரியை உள்ளே போகுமாறு கண் காட்டிவிட்டு அவன் செல்ல, அவளோ “என்னைக்கும் இல்லாத திருநாளா இந்த நெடுமறம் எதுக்குக் கண்ணு காட்டிட்டுப் போகுது?” என யோசித்தவளாக உள்ளே நுழைந்தாள்.
அங்கே நடந்ததைக் கேட்டறிந்த பிற்பாடோ அங்கிருந்த சோகம் அவளையும் தொற்றிக்கொண்டது.
ஒரு பக்கம் சிகாமணியும் பவிதரனும் அவளைத் தேட, இன்னொரு பக்கம் ஷண்மதி அவளது கணவன் ரவியிடம் விவகாரத்தை மொபைலில் கடத்திவிட்டாள்.
“நீ எதுக்கும் டென்சன் ஆகாத. என் ஃப்ரெண்ட் மூலமா பக்கத்து ஏரியால உள்ள சி.சி.டி.வி எல்லாம் செக் பண்ண சொல்லுறேன்” என்றவன் காவல்துறையில் அவனுக்கு இருக்கும் நண்பனிடம் பேசப் போய்விட்டான்,
நிலவழகியும் மாணிக்கவேலுவும் ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் உடைந்து போய் அமர்ந்திருந்தார்கள்.
நேரத்தை யாரால் கயிறு கட்டி இழுத்துவைக்க முடியும்? அது விறுவிறுவென ஓடியதில் முகூர்த்ததிற்கான நேரமும் அருகில் வந்துவிட்டது. இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே மிச்சம்!
அந்நேரத்தில் வருங்கால மருமகளைப் பார்க்க ஆவலாக வந்த சிவகாமிக்கு இவ்விபரம் தெரிவிக்கப்பட்டதும் அதிர்ந்தே போய்விட்டார் அவர்.
அவரால் எதையும் யோசிக்க முடியவில்லை. மூத்தவன் திருமணத்தை ஆவலாய் எதிர்பார்த்து அவனது அறையில் தயாராகிக் கொண்டிருந்தான். உறவுக்கார இளைஞர்கள் அவனைக் கேலி செய்வதைச் சிரிப்போடு பார்த்துவிட்டு மருமகளைத் தேடி வந்தவருக்கு உதட்டிலிருந்த சிரிப்பு காணாமல் போனது.
உடனடியாக இளையவனையும் கணவரையும் அழைத்து விபரம் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் அவர்களும் அங்கே வந்துவிட அந்த அறையின் சூழலில் இறுக்கத்தின் ஆட்சி!
“இன்னும் ஒரு மணி நேரத்துல முகூர்த்தம். இப்ப கல்யாணப்பொண்ணைக் காணும்னு சொன்னா என்ன அர்த்தம்?”
சிவகாமி பதற, நரசிம்மனோ செய்வதறியாது திகைத்தார்.
அவரது உறவினர்கள் ஏற்கெனவே மண்டபத்தில் ஆஜர்!
தொழில் வட்டாரத்து நட்புகள், அரசியல் வட்டாரத்தில் இருக்கும் நலம்விரும்பிகள் எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள். போதாக்குறைக்கு முதலமைச்சருக்கும் கல்வியமைச்சருக்கும் வேறு அழைப்பு வைத்து அவர்கள் வருவதும் நிச்சயமாகிவிட்டது.
அவர்கள் வருவதால் ஊடக ஆட்களின் நடமாட்டமும் இருந்தது.
இந்தச் சூழலில் மணப்பெண்ணைக் காணவில்லை என்றால் எத்துணை பெரிய தலைகுனிவு!
இப்படி ஒரு சம்பவம், இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் அவர் அனுபவத்தில் கண்டிடாதது. அதனால் நிலைகுலைந்து போயிருந்தார் மனிதர்.
மறுபக்கமோ கர்வமும் செருக்குமாக வலம் வந்த நிலவழகியும், மாணிக்கவேலுவும் மகள் செய்துவிட்டப்போனக் காரியத்தால் தலைகுனிந்து நின்றார்கள்.
அவமானமும், துக்கமும் ஒரு சேர அவர்களை ஆட்கொண்டிருந்தது. அவர்களது சொந்தங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் மதுமதி காணாமல் போனத் தகவல் தெரிந்துவிடும்.
இத்தனை ஆண்டு காலம் சம்பாதித்த பணத்தால் கிடைத்த மரியாதையை அவளோடு எடுத்துச் சென்றுவிட்டாளே மதுமதி. இனி அதை எப்படி மீட்கப்போகிறோம் என்ற கேள்விக்குறி!
எங்கே போனாள்? என்ன ஆனாள்? நேற்று இரவு வரை சந்தோசமாக இருந்தப் பெண்ணுக்குத் திடீரென என்னவாயிற்று?
இந்தக் கேள்விகளுக்கே விடை தெரியவில்லை.
இன்னும் புவனேந்திரனுக்கு இச்செய்தி தெரியாது. பாவம்! திருமண நேரத்தை எதிர்பார்த்து ஆயிரம் கற்பனைகளில் இருக்கிறான்.
ஷண்மதியும், மலர்விழியும் மதுமதியைத் தேடப் போன சிகாமணியும் பவிதரனும் எப்போது வருவார்கள் எனத் தவித்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சொல்லிவிட்டுப் போனக் குழலி முழு மண்டபத்தையும் அலசியும் மதுமதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தனது தவிப்பு வெளியே தெரிந்தால் உறவுக்காரர்கள் மத்தியில் என்ன ஏதென்று கேள்விகள் பறக்கும் என்பதால் இயல்பாகக் காட்டிக்கொண்டு உள்ளூர ஓடிய பதற்றத்தோடு தேடிச் சலித்துச் சோர்ந்தவராக அந்த அறைக்குள் வந்து சேர்ந்தார் குழலி.
அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்ப, ‘கிடைக்கவில்லை’ என்பது போல சோர்வாகக் கண்ணீருடன் அவர் தலையசைக்க, “ஐயோ பாவிமக இப்பிடி பண்ணிட்டுப் போயிட்டாளே!” என்று நெஞ்சிலடித்து அழ ஆரம்பித்தார் நிலவழகி.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction