“அரசியல்வாதிகளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றை குறிக்கோளாகக் கொண்டிருப்பர்”
-அரிஸ்டாட்டில்
காவல்துறை விசாரணையில் இறந்த தாணுமாலயன் மற்றும் விஜயனின் மரணமும் அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் பொறுப்பற்ற பதிலும் தமிழகமெங்கும் ஆளுங்கட்சிக்கெதிரான அலைய வீசச் செய்தது.
என்ன தான் அதன் பின்னர் தனது பதிலை மாற்றிக் கொண்டு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தாலும் முதலமைச்சர் வீரபாண்டியன் மீது சாமானிய மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டுவிட்டதென்னவோ உண்மை!
இது குறித்து கட்சிக்குள் சலசலப்பு எழுந்தாலும் வீரபாண்டியன் என்னவோ கலங்கவே இல்லை! காரணம் அடுத்த மாதம் அதாவது பிறக்கப் போகும் புது வருடத்தின் முதலாம் மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் வரவிருக்கிறது!
இன்றைக்கு அதிருப்தியில் இருப்பவர்களை அரசாங்கம் வழங்கும் ‘பொங்கல் பரிசு’ அமைதிப்படுத்திவிடும் என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் அது அரசின் நலத்திட்டத்தில் சேருமேயன்றி, தான் ஒன்றும் தனது சொந்தப் பணத்தை எடுத்து மக்களுக்கு வாரி வழங்கவில்லை என்பது வீரபாண்டியனின் அரசியல் மூளைக்கு எட்டவே இல்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அது அரசின் பணம், அதாவது அரசுக்கு வரி கட்டும் பொதுமக்களின் பணம் தானே தவிர, எந்த ஒரு அரசியல்வாதியின் சுயார்ஜித சொத்தல்ல என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாததன் அடையாளம் தான் அந்தப் பொங்கல் பரிசு பைகளில் பதிக்கப்படும் அரசியல் தலைவரின் முகங்கள்!
என்னவோ இதை எல்லாம் பார்த்தால் நாலே முக்கால் வருட ஆட்சியின் அவலங்களை மக்கள் மறந்து விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார் வீரபாண்டியன். இருப்பினும் அந்த இரட்டை மரணம் அவரது அரசியல் வாழ்க்கையில் அவரின் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போன்ற பிரம்மையை அவருக்கு அளித்துவிட்டது.
எதிர்கட்சியான த.மு.க இந்த வழக்கை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. கட்சித்தலைமை மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முக்கியப்பிரமுகர்களை அனுப்பி வைத்த செய்தி நாளேடுகளில் வெளியான போதே வீரபாண்டியனுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.
அதை தொடர்ந்து அருள்மொழியும் நேரடியாகச் சென்று மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் கூறிய கருத்தைக் கேட்டதை நேரலையாக அவனது செய்தி தொலைக்காட்சி வெளியிட வீரபாண்டியனுக்கு அச்செய்தியை முதலில் வெளியிட்டதே யூனிகார்ன் செய்தி தொலைக்காட்சி தான் என்ற தகவல் தெரியவந்தது.
இத்தனை நாட்கள் அருள்மொழியைச் சாதாரணமாக எடை போட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்த வீரபாண்டியன் செங்குட்டுவனை தனது வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் யாருமறியாவண்ணம் அழைத்து அருள்மொழி கொடுக்கும் குடைச்சல் குறித்து பொரிந்து தள்ளினார்.
“யானை காதுக்குள்ள புகுந்த எறும்பு மாதிரி பிடிச்சு ஆட்டுறான்யா… ஒன்னுக்கு ரெண்டு டிவி நெட்வொர்க்கை அவன் குடும்பத்து ஆளுங்களே நடத்துறது அவனுக்கு ரொம்ப வசதியா போச்சு… அவன் தும்முனா கூட பெரிய செய்திங்கிற மாதிரி போட்டு போட்டே அவனை பெரியாளா ஆக்கிட்டாங்க… இந்த லெட்சணத்துல புது வருசத்தன்னைக்கு நேஷ்னல் மீடியா ஹவுஸ் ஒன்னுக்கு வேற லைவ் இண்டர்வியூ குடுக்கப் போறானாம்… அங்க என்னெல்லாம் சொல்லி நம்ம கட்சி மானத்த வாங்கப் போறானோ தெரியல”
“தலைவரே இப்பிடி பேசி பேசியே சி.எம் நாற்காலில உக்காந்துடலாம்னு அந்தப் பையன் தப்புக்கணக்கு போடுறான்… நீங்க அவனை பத்தி யோசிக்காம எலெக்சன்ல கவனத்த செலுத்துங்க”
“எப்பிடிய்யா எலெக்சன் வேலைய கவனிக்கிறது? எந்த நியூஸ் சேனல் எடுத்தாலும் நல்லவிதமாவோ மோசமாவோ அருள்மொழிய பத்தி நியூஸ் வருது… பேப்பரை எடுத்தா இன்னைக்கு இந்தக் கிராமத்துல போய் மக்களை சந்திச்சு குறைகளை கேட்டு தெரிஞ்சுகிட்டார்னு பக்கம் பக்கமா எழுதுறானுங்க… போதாக்குறைக்கு ஒவ்வொரு கவர்மெண்ட் டிப்பார்ட்மெண்டுக்கும் மக்களை வச்சு மனுவா அனுப்பி தள்ளுறானுங்க அந்தக் கட்சிக்காரனுங்க… என்னென்ன வழில நமக்கு தலைவலிய உண்டாக்க முடியுமோ அத்தனையையும் செஞ்சுட்டு அவன் ஜம்முனு நேஷ்னல் மீடியால போய் உக்காந்து இங்கிலீஸ்ல பேசி நம்ம கட்சிப்பேரை நாசம் பண்ணப் போறான்… நினைச்சாலே எரிச்சலா வருதுய்யா”
பொங்கி எழுந்து பொரிந்து தள்ளி விரக்தியில் முடித்தார் வீரபாண்டியன். செங்குட்டுவன் அவரது கோபத்தைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்கையிலேயே வீரபாண்டியனின் முகம் பல்வேறு விதமான உணர்ச்சி கொந்தளிப்புக்கு இடமானது.
முடிவில் “இனியும் அமைதியா இருந்தா சரியா வராது… அவனுக்கு அரசியல்ல எதுவும் தெரியாது, கேஸ் போட்டு ஜெயில்ல தள்ளுனா பயந்து ஒதுங்கிடுவான்னு நினைச்சோம்… ஆனா கேஸை உடைச்சிட்டு ஜாமீன்ல வந்துட்டான்… சின்னப்பையன் தானேனு அலட்சியமா விட்டதுக்கு இன்னைக்கு நான் விலை குடுத்துட்டு நிக்குறேன்… இதுக்கு மேல பொறுமையா இருந்தா அவன் ஜெயிக்கிறத வேடிக்கை பாக்குறத தவிர வேற வழி இல்ல… அதனால நான் சொல்லுற மாதிரி செஞ்சு முடிச்சிடுய்யா” என்று செங்குட்டுவனிடம் தனது திட்டத்தை விளக்கினார் வீரபாண்டியன்.
செங்குட்டுவன் அனைத்தையும் கேட்டுவிட்டு “எல்லாம் சரி தான் தலைவரே! நம்ம கோட்டைக்கு வர்றப்ப தானே இதையெல்லாம் செய்யணும்… உளவுத்துறை மூலமா அடுத்து அருள்மொழி நெசவளார்களை சந்திக்கப் போறதா நியூஸ் கசிஞ்சுது… அது தான் சரியான நேரம்… வேலைய முடிக்கிறதுக்கு ஆயிரம் விசுவாசிங்க இருக்கானுங்க… காதும் காதும் வச்ச மாதிரி காரியத்த முடிச்சிடுவாங்க.. உங்களை பிடிச்ச தலைவலி இன்னையோட ஒழிஞ்சுதுனு விட்டு தள்ளுங்க” என்று உற்சாகமாக கூறவும் வீரபாண்டியனின் முகம் வன்மத்தில் ஜொலித்தது.
அவர்கள் அருள்மொழிக்கு எதிராக தீட்டிய திட்டம் எதையும் அறியாதவளாக அவனது கட்சி அலுவலகத்தில் தனது ஐ.பி.சி குழுவினருடன் அமர்ந்திருந்தாள் வானதி.
அவர்களது நிறுவனம் சார்பாக ஒரு குழு கட்சித்தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சியினரின் தேவைக்கேற்ப தேர்தல் வியூகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் ஐ.பி.சியின் வியூகங்களை கட்சியினருக்குக் கொண்டு செல்லும் வேலை இரண்டையும் கவனித்துக் கொள்வர். மற்ற மாநில தேர்தல்களிலும் இம்முறை பின்பற்றப்பட்டது.
அதற்காக தான் நிதர்சனாவைத் தலைமையாகக் கொண்ட பதினைந்து பேர் அடங்கிய குழுவினருக்கான அலுவலக அறை தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தயாராகிவிட்ட செய்தியை பெற்றுக்கொண்டு அவர்களுடன் வந்திருந்தாள் வானதி.
வந்ததும் கட்சிப்பிரமுகர்களின் விசித்திர பார்வைகளை சந்திக்க நேர்ந்தாலும் இது தங்களுக்குப் பழக்கம் தான் என்பது போல ஐ.பி.சி குழுவினர் நடந்து கொள்ள அருள்மொழியின் உதவியாளன் அவர்களை வரவேற்று உபசரித்தான்.
“சார் இன்னும் ஹாப் அண்ட் ஹவர்ல வந்துடுவார் மேம்… அகத்தியன் சார் கூட யூனிகார்ன் ஹெட் ஆபிஸ்ல சின்ன மீட்டிங்ல இருக்கார்” என்றான் அவன்.
வானதி அவன் வருவித்த காபியை அருந்தியபடியே “இந்த ரெட்டைக்குதிரை சவாரிய அவன் விடவே போறதில்ல” என்று தன்னருகே அமர்ந்திருந்த நிதர்சனாவிடம் முணுமுணுத்தாள்.
அருள்மொழியும் சொன்னது போலவே அரைமணி நேரத்தில் வந்துவிட ஐ.பி.சி குழுவினர் அவர்களுக்காக இரண்டாம் தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அலுவலகப்பகுதியை அடைந்தனர்.
அவர்களுக்குத் தேவையான அலுவலக அமைப்பு, கணினி மற்றும் தொலைபேசி இணைப்புகளில் ஆரம்பித்து ஒயிட் போர்ட்கள், மார்க்கர்கள் வரை அனைத்தும் அங்கே இருக்க வானதியின் புருவம் மெச்சுதலில் உயர்ந்தது.
அப்படியே ஐ.பி.சி தலைமை அலுவலகத்தின் வார் ரூம் மினியேச்சராக காட்சியளித்த அந்த அலுவலகப்பகுதியைக் கண்டதும் ஐ.பி.சி குழுவினருக்குக் குஷியானது.
“ஓகே கய்ஸ்! உங்களோட ஹெட் ஆபிஸ் மாதிரியே இங்கயும் உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கு… நீங்க எந்த நேரத்துல வேணும்னாலும் என்னை கான்டாக்ட் பண்ணலாம்… சப்போஸ் நான் இல்லனா சங்கர் கிட்ட கன்வே பண்ணிடுங்க… பை த வே, மிஸ் வானதி, இனிமே உங்களோட ப்ளான்ஸ் எந்த டிலேயும் இல்லாம நடக்கும்… எனி ஹவ் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்… ஷால் வீ?” என்று குழுவினரில் ஆரம்பித்து வானதியிடம் முடித்துவிட்டு அவளியிடம் அனுமதி வேண்டி நின்றான் அருள்மொழி.
அவளும் அலுவலக மரியாதையைக் கணக்கில் கொண்டு அவனுடன் அவனது அறை நோக்கி சென்றாள். உள்ளே நுழைந்தவளிடம் இருக்கையைக் காட்டி அமருமாறு கூறிவிட்டு தானும் நாற்காலியில் அமர்ந்தான் அருள்மொழி.
வானதி எதற்காக அழைத்தாய் என்று கேட்காமல் கேட்க “எலக்சன் மேனிஃபெஸ்டோ பத்தி என்ன யோசிச்சிருக்கீங்க? லாஸ்ட் வீக் எங்க கட்சிக்குழு கூடுனதுல சில ஐடியாஸ் சொன்னாங்க… அதை நோட் பண்ணிருக்கோம்.. உங்க கிட்ட எனி நியூ ஐடியாஸ் இருக்குதா?” என்று வினவ
“நம்ம வெப்சைட்டுக்கு டெய்லி பேசிஸ்ல பெட்டிஷன்ஸ் வந்து குவியுது… அதை ஒரு டீம் ஷாட் அவுட் பண்ணி லிஸ்ட் ரெடி பண்ணிட்டிருக்காங்க… அந்த லிஸ்ட் முடிஞ்சதும் நான் அதை ஃபார்வேர்ட் பண்ணிடுறேன்… பேசிக்கா மக்கள் அடுத்த ஆட்சியில எதிர்பாக்குறது சட்டம் ஒழுங்கு கரெக்டா இருக்கணும்ங்கிறது தான்… அப்புறம் விலைவாசி பத்தியும் நிறைய பேர் கவலைப்படுறாங்க… அதுல மெயினா இடம் பிடிக்குறது பஸ் டிக்கெட் ஃபேரும், பால் விலையும் தான்… இது ரெண்டோட விலை உயர்ந்துச்சுனா சாமானிய மக்கள் தான் கஷ்டப்படுவாங்க” என்றாள் வானதி.
“கட்சியாளுங்களும் இதையே தான் சொன்னாங்க… சோ இந்த ரெண்டு பாயிண்டும் ரொம்ப இம்ப்பார்ட்டெண்ட்னு புரியுது… என்னோட சைட்ல இருந்து நான் ஒரு பாயிண்ட் ஆட் பண்ணிருக்கேன்”
“என்ன பாயிண்ட்?”
“ரீசண்டா நடந்த இரட்டை மரணம் சாரி சாரி… இரட்டை கொலைல சம்பந்தப்பட்ட எல்லாரும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தப்படுவாங்க, அதுக்கு ஒரு ஆணையம் வச்சு விசாரிப்போம்ங்கிற பாயிண்டை ஆட் பண்ணிக்கப் போறேன்”
“சோ இதை நீ உன்னோட சுயலாபத்துக்கு யூஸ் பண்ணிக்க பாக்குறல்ல?”
குற்றம் சாட்டிய வானதியைப் புன்னகையுடன் பார்த்து வைத்தான் அருள்மொழி.
“அப் கோர்ஸ்… இதுல என்ன தப்பு இருக்கு? கண்டிப்பா இதுல ரூலிங் பார்ட்டியோ பெரிய தலை யாரோ கனெக்ட் ஆகிருக்காங்க… சோ என்னோட எதிரியோட பலத்தை குறைச்ச மாதிரியும் ஆச்சு, பாதிக்கப்பட்டவங்களுக்கு நியாயம் வாங்கி தந்த மாதிரியும் ஆச்சு… பை த வே, இந்த டேக்டிஸ்லாம் உன் கிட்ட கத்துக்கிட்டது தான்”
அதை கேட்டதும் வானதி கொதிப்புற்றாள். அன்றும் இப்படி தான் கூறினான். தான் செய்ததற்கும் அவன் செய்யப் போவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளதே!
“இனாஃப்… நான் செஞ்சதும் நீ செய்யுறதும் ஒன்னா? ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குடா”
அவளது ‘டா’வில் எரிச்சலுற்றவன் “என்ன வித்தியாசம் இருக்கு? நீயும் அடுத்தவங்க சாவுல என்னை அரசியல் பண்ண வச்ச… அதை இன்னைக்கு நானே பண்ணுறேன்… ஐ திங் உன்னோட ஈகோ ஹர்ட் ஆயிடுச்சு… பொலிட்டிக்கல் ஸ்ட்ராடஜில உன்னை விட நான் கொஞ்சம் முன்னேறி போயிட்டேன்னு எரிச்சல்” என்று அவளை சீண்டும் தொனியில் பதிலளித்தான்.
வானதி ஆமென்பது போல தலையசைத்தவள் “அடுத்தவங்க மரணத்த நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கணும்னு சொன்னது நானாவே இருக்கட்டும்… பட் அது என்ன மாதிரி டெத்னு உனக்கே நல்லா தெரியும் தானே… அவங்க எல்லாரும் உங்கப்பா இறந்த துக்கம் தாங்கமா சூசைட் பண்ணிக்கிட்டாங்க அருள்… அவங்களுக்குச் சாகப்போறோம்னு நல்லாவே தெரிஞ்சிருக்கும்… தான் செத்தா தன்னோட குடும்பம் என்னாகும், குழந்தைங்க என்னாவாங்கனு எதையும் யோசிக்காம குருட்டு அபிமானத்தால முட்டாள்தனமா சூசைட் பண்ணிட்டாங்க… ஆனா இப்ப இறந்த ஃபாதரும் சன்னும் அப்பிடியா இறந்தாங்க? என்கொயரி முடிஞ்சு வீட்டுக்குப் போயிடுவோம்னு நம்பித் தானே அவங்க போலீஸ் ஸ்டேசனுக்கு வந்திருப்பாங்க… அவங்கள்ல யாரும் செத்துடுவோம்னு நினைக்கல அருள்… அவங்க சட்டத்த நம்புனாங்க… சட்டம் தங்கள பாதுகாக்கும்னு நம்புனாங்க… அதே சட்டம் அவங்களை காவு வாங்க தான் கூட்டிட்டுப் போகுதுனு அவங்களுக்குத் தெரியாது… பட்டவர்த்தனமா சொல்லணும்னா அவங்க அநியாயமா செத்துருக்காங்க… அரசியல் அதிகாரத்துக்கு அடிமையா வாழ்ந்து பழக்கப்பட்டவங்க எஜமானனோட இறப்பை தாங்கிக்காம சூசைட் பண்ணிக்கிட்டதுக்கும், அரசியல் அதிகாரத்தோட கோரப்பசிக்கு பழியானவங்களுக்கும் வித்தியாசம் இருக்கு அருள்… அந்த வித்தியாசம் உனக்கு இப்ப புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்” என்று நீண்டதொரு விளக்கம் அளிக்க அருள்மொழி அமைதி காத்தான்.
வானதி அவனது அமைதியைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டவள் “இன்னொன்னும் சொல்ல ஆசைப்படுறேன்… போலீஸ் கஸ்டடில அப்பாவிங்க கொல்லப்படுறது என்னமோ இது தான் ஃபர்ஸ்ட் டைம்ங்கிற மாதிரியும் உங்க கட்சி ரூலிங் பார்ட்டியா இருந்தப்ப காந்தி வழில ஆட்சி பண்ணுன மாதிரியும் பிஹேவ் பண்ணுறத முதல்ல நிறுத்து அருள்!
இதே மாதிரி டெத்ஸ் உங்கப்பாவோட ஆட்சிக்காலத்துலயும் நடந்திருக்கு… உனக்குச் சந்தேகமா இருந்தா உன் பி.ஏவை கூப்பிட்டு விசாரிச்சிக்க… இல்லனா உன்னோட சிஸ்டர் கிட்ட கேளு” என்று கூற அருள்மொழி அவளை நம்பாமல் அலட்சியமாய் உதட்டை வளைத்தான்.
இது வானதியை சீண்டியிருக்க வேண்டும்! இதற்கு மேல் இவனிடம் பொறுமையாகப் பேசி விளக்கம் கொடுத்தால் பைத்தியக்காரியாக தன்னை எண்ணிவிடுவான் என்று எண்ணியவளாய் கடுப்புடன் எழுந்தாள்.
“போகப் போறியா? அப்பிடியே சங்கரை கூப்பிட்டு ஒரு காபி சொல்லிட்டுப் போ… நீ குடுத்த லெக்சர்ல தலை வலிக்குது” என்றபடி மொபைலை நோண்ட ஆரம்பித்தான் அருள்மொழி.
வானதிக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. கையில் வைத்திருந்த அலுவல் ரீதியான கோப்பினை அவள் கசக்கிய விதமே அவளது கோபத்தின் அளவைக் காட்ட அருள்மொழி புருவம் உயர்த்தினான்.
வானதி அவனது தலைக்கு மேல் சுவரில் படமாய் தொங்கிக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தியின் புகைப்படத்தைக் காட்டி
“இவரோட ஆட்சில எனக்கு நெருக்கமான ஒருத்தனை இதே மாதிரி போலீஸ் கஸ்டடில நான் பழி குடுத்திருக்கேன்… எங்க பக்கம் எல்லா நியாயமும் இருந்துச்சு, ஆனா நாங்க சாதாரணமான ஆளுங்களாச்சே! எங்களுக்கு நீதி கிடைக்காதுனு எனக்கு நல்லா தெரியும்… ஆனா அவன் சட்டத்த ரொம்ப நம்புனான்… போலீஸை நம்புனான்… அவங்களும் அக்யூஸ்டை அடையாளம் காட்டுனு சொல்லி அவனை ஸ்டேசனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க… அவன் நம்பிக்கையோட தான் போனான்… ஆனா மறுநாள் அவன் எனக்கு சடலமா தான் கிடைச்சான்… செத்தவன் பேர் யுவராஜ்… அவன் செத்ததுக்குக் காரணம் ரூலிங் பார்ட்டியோட முக்கியமான புள்ளி ஒருத்தர் எங்களோட லேண்டுக்காக என் பேரண்ட்சை ப்ளான் பண்ணி கொன்னதா அவன் குடுத்த கம்ப்ளைண்ட்…

அந்த ஆளுக்கெதிரா அவன் எவிடென்ஸ் கலெக்ட் பண்ணுனதை தெரிஞ்சிக்கிட்டு போலீசை வச்சே அவனை கொன்னுட்டாங்க… இதை மீடியா பார்வைக்குப் போகாம மூடி மறைக்குறதுக்குக் காரணமா இருந்தவர் அன்னைக்கு சி.எம்மா இருந்தா உன்னோட அப்பா மிஸ்டர் சுந்தரமூர்த்தி… கட்சி மானம் போகக்கூடாது, ஆட்சிப்பேருக்குக் கலங்கம் வந்துடக்கூடாதுனு என் யுவா சாவை ஹார்ட் அரெஸ்ட்னு சொல்லி மூடி மறைக்க வச்சதுக்குப் பின்னாடி இருந்தது உன் அப்பாவோட சி.எம் அதிகாரம் தான்… ஏன்னா என் யுவாவோட சாவுக்குக் காரணமான ஆள்…” என்று சொல்லி நிறுத்தியவள் ஒரு நொடி அமைதி காத்தாள்.
அந்த ஒரு நொடியில் அருள்மொழியின் வதனத்தில் ஆயிரம் உணர்ச்சிகள்! வானதி கண்களை இறுக மூடிக்கொண்டவள்
“என் யுவாவோட சாவுக்குக் காரணமான ஆள் யார்னு நீயே விசாரிச்சி கண்டுபிடி… நான் சொல்ல வர்றதுலாம் ஒன்னே ஒன்னு தான்… அரசியல்ல யாரும் நல்லவங்க இல்ல… நல்லவங்களுக்கு ஏத்த ஃபீல்ட் அரசியல் இல்லனு இங்க எல்லாருக்கும் தெரியும்…. மக்கள் நல்லவனை எதிர்பாக்கவும் இல்ல… அவங்களுக்குத் தேவை குறைஞ்சபட்ச கெட்டவரா இருக்குற தலைவர் தான்! உன்னை நாங்க அப்பிடி போர்ட்ரே பண்ண தான் விரும்புறோம்… அதை தான் செய்யுறோம்… சோ இப்ப இருக்குற வீரபாண்டியன் மட்டுமில்ல இதுக்கு முன்னாடி இருந்த சுந்தரமூர்த்தியும் அப்பழுக்கில்லாத நல்லவர்னு சொல்ல முடியாது” என்று வேகமாக உரைத்துவிட்டுக் கண்களை திறந்தாள்.
அருள்மொழியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்திருப்பதை கவனியாதவளாக மேஜையின் மீதிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்தாள்.
கோபமிகுதியால் தான் கசக்கிய கோப்பின் சுருக்கத்தை சரி செய்தவள் “இதுக்கு மேல உன் கிட்ட எதையும் சொல்ல விரும்பல… நான் கிளம்புறேன் அருள்… இனிமே எதுவா இருந்தாலும் நிதர்சனா டீம் கிட்ட சொல்லிடு… நாங்க அதை செஞ்சு முடிச்சிடுவோம்.. குட் பை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
வேகமாக நடந்து மின் தூக்கியை நோக்கி சென்றவள் கதவு திறக்கவும் உள்ளே நுழைய எத்தனித்தவள் அதிலிருந்து வெளியே வந்த ராமமூர்த்தியைக் கண்டதும் கைமுஷ்டி இறுக சிலையாய் நின்றாள்.
அவரோ அவளை அலட்சியப்பார்வை பார்த்துவிட்டு கடக்க மூடவிருந்த லிப்ட் கதவுக்கு இடையே கை வைத்து தடுத்தவள் செல்பவரை வெறித்தாள்.
“ஒண்டே யூ வில் பே ஃபார் யுவர் சின்ஸ்”
கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை உச்சரித்தவள் மின் தூக்கிக்குள் நுழைந்தாள்.
அவள் பற்ற வைத்த பொறி அருள்மொழிக்குள் மெதுமெதுவாய் தீப்பிழம்பாய் மாறி எரியும் நாளுக்காய் காத்திருந்தவளாக அங்கிருந்து வெளியேறியவளுக்கு, அவள் விலகிய அடுத்த நொடியிலிருந்தே அருள்மொழிக்குள் அந்த பொறி பற்றி எரியத் துவங்கியது தெரியவில்லை! பாவிகளுக்கும் புனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஒவ்வொரு புனிதருக்கும் பாவங்கள் அடங்கிய கடந்தகாலம் ஒன்று இருக்கும்! அதே போல ஒவ்வொரு பாவிக்கும் மனம் திருந்தி வாழும் வருங்காலம் ஒன்று காத்திருக்கும் என்பது ஆஸ்கார் வைல்டின் கருத்து! இந்தக் கருத்துக்கு விதிவிலக்கான மாந்தர்கள் எவருமில்லர்!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction