“முட்கள் மற்றும் பொல்லாதவர்களை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்களை நசுக்குவது, மற்றொன்று அவர்களிடமிருந்து விலகி இருப்பது”
-சாணக்கியர்
அருள்மொழியின் கைது தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. செய்தி தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் அவன் பேசிய வீடியோவை ஒளிபரப்பி மக்களைப் பரபரப்பாக வைத்துக் கொண்டன.
தொலைக்காட்சி சேனல்களை நடத்துபவனின் கைதை அவனது சேனல்கள் சும்மாவா விடும்? தந்தையையும் தமையனையும் இழந்து அரசியலில் அடியெடுத்து வைத்து மக்கள் மனதில் இடம்பெற ஆரம்பித்த ஒரு இளம் அரசியல் தலைவனை மாநிலத்தலைமையும் ஒன்றிய அரசும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்து தங்களது பழிவெறியைத் தீர்த்துக் கொண்டன என்று மாறி மாறி செய்திகள் ஒளிபரப்பானது.
அதே நேரம் அவன் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தமிழக முற்போக்கு கழக தலைமை அலுவலகத்தின் முன்னே கூடியிருந்த தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் அரங்கேறியது.
“எங்க தலைவருக்கு அப்புறம் கட்சி நாதியத்து போயிடும்னு தப்புக்கணக்கு போட்டவங்களுக்கு சின்னய்யாவோட அரசியல் பிரவேசம் பிடிக்கல… அதான் இப்பிடி பொய் கேஸ் போட்டு அவரை உள்ள தள்ளிட்டாங்க… அவர் மேல இருக்குற விசுவாசத்துக்காக கூடுன எங்க மேல தடியடி நடத்தி இதோ பாருங்க, இந்தாளுக்கு மண்டை உடைஞ்சு ரத்தம் வழியுது… ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக விடாம போலீஸ்காரங்க அராஜகம் பண்ணுறாங்க… இந்த நிலமை மாறணும்னா எங்க சின்னய்யா ஆட்சிக்கு வரணும்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆங்காங்கே லத்தியால் பட்ட காயங்களுடன் தங்களிடம் நீட்டப்பட்ட மைக்குகளில் பேசினர் சில தொண்டர்கள். இந்த தடியடி சம்பவம் மற்ற மாவட்டங்களில் இருக்கும் த.மு.க கட்சியினரைக் கலவரத்தில் ஈடுபட வைக்கும் முன்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு மாநில அரசின் சார்பில் காவல்துறைக்குக் கட்டளை விடுக்கப்பட்டது.
அதிலும் அருள்மொழியின் குடும்பத்திற்கு நெருக்கமான மாவட்டமான தஞ்சையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும் இரவு நேரங்களில் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காவல்துறை வாகனங்கள் ரோந்து வந்த வண்ணம் இருந்தது.
நிலமையைக் கவனித்துவிட்டு இத்தனைக்குப் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டினாள் யாழினி.
“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்த இந்தக் கைது நடவடிக்கை அருள்மொழியைத் தடுத்து நிறுத்தாது. எதிரிகளற்ற யுத்தம் அர்த்தமற்றது. இன்று அரசியல் எனும் யுத்தத்தில் வெற்றி பெற எதிரிகள் எம்மாதிரி யுக்திகளைக் கையாளுவார்கள் என்பதை அருள்மொழி கண்டுகொண்டிருப்பார். இது அவருக்கு ஒரு படிப்பினை. விரைவில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை உடைத்தெறிந்துவிட்டு மீண்டும் முழுநேர அரசியலில் அவர் இறங்குவார். அது வரை கட்சித்தொண்டர்கள் அமைதி காக்கும்படி நான் வேண்டிக்கொள்கிறேன். காலத்தின் கட்டாயத்தால் நாங்கள் எங்கள் தந்தையை இழந்துவிட்டோம். உங்கள் குடும்பங்களில் உள்ள தாய்மார்களை எண்ணி அமைதியாக இருங்கள். இல்லையெனில் இந்த ஏகாதிபத்திய மாநில அரசு தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதை நம்மால் தடுக்கவே முடியாது”
உணர்ச்சியும் ஆவேசமுமாக அவள் அளிக்கும் பேட்டியைத் தொலைக்காட்சியில் கவனித்த செங்குட்டுவன் அதை வீரபாண்டியன் காதில் போட்டுவைத்தார்.
அவரோ “அருள்மொழிய ஜெயில்ல போட்டும் இந்தப் பொண்ணுக்கு இன்னும் திமிரு அடங்கல போல… சரி விட்டுப் பிடிப்போம்… அப்பனும் தம்பியும் செத்த துக்கம் ஆறுறதுக்குள்ள இன்னொரு தம்பியும் ஜெயிலுக்குப் போனா இப்பிடி தான் மூளை கெட்டத்தனமா பேசத் தோணும்… இன்னும் நாலு மாசத்துல எலக்சன் இருக்கு… இப்ப அந்தப் பயலை உள்ள தூக்கிப் போட்டுட்டா அவனுக்கு அவ்ளோ ஈசியா ஜாமீன் கிடைக்காது… இத வச்சு அவனை எலக்சன்ல போட்டி போட விடாம தடுத்துடலாம்… கட்சித்தலைவனே ஜெயில்ல களி திங்குறப்ப மக்கள் எப்பிடி அவன் கட்சிக்காரனுங்கள நம்பி ஓட்டு போடுவாங்க?” என்று எகத்தாளத்துடன் உரைத்துவிட்டு தனது முதலமைச்சர் அலுவல்களைக் கவனிக்கத் துவங்கிவிட்டார்.
அதே நேரம் மீனாட்சி துக்கத்தில் மூழ்கிப் போனார். யாழினியும் அகத்தியனும் சேர்ந்து என்னென்னவோ சொல்லி சமாதானம் செய்தும் அவர் மனம் ஆறவில்லை.
“அருளும் என்னைய விட்டு தூரமா போயிட்டானே யாழி… ராமு தம்பி என்னென்னமோ சொல்லுறாரும்மா… இந்த கேஸ்ல அவனுக்கு ஜாமீன் கிடைக்குறதே கஷ்டம்னு அவர் சொல்லுறத கேக்குறப்ப எனக்கு பகீர்னு இருக்கு மாப்பிள்ளை… என் மகனுக்குப் பிரச்சனை பிடிச்ச இந்த அரசியல் வேண்டவே வேண்டாம்… எப்பிடியாச்சும் அவனை வெளிய கொண்டு வாங்க… அவன் பழையபடி பிசினஸையே பாத்துக்கட்டும்”
அழுது அரற்றியவரை அகத்தியனும் யாழினியும் சமாதானம் செய்து உறங்க வைத்தனர்.
அவர் உறங்கிய பிறகு கணவனும் மனைவியும் சட்ட ஆலோசகரிடம் அருள்மொழியை ஜாமீனில் எடுப்பது தொடர்பான விசயங்களைப் பேசி முடித்தனர்.
மறுநாள் விடியலில் எப்படியும் அருள்மொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்றே இருவரும் நம்பினர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட அருள்மொழிக்கு ஆதரவாக அவனது வழக்கறிஞர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். கூடவே யூனிகார்ன் குழுமத்தின் அதிகாரிகள் மற்றும் நிதித்துறையில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
அருள்மொழியிடம் மேற்கொண்ட விசாரணை இன்னும் முடிவடையாததால் ஜாமீன் வழங்கக்கூடாதென அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அவனது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவனைப் பதினான்கு நாட்கள் சிறையில் வைத்து விசாரிக்கும்படி சி.பி.ஐக்கு உத்தரவு அளித்தார் நீதிபதி.
இவ்வழக்கில் அவ்வளவு எளிதில் தனக்கு ஜாமீன் கிடைக்கப்போவதில்லை என்பது அப்போது தான் அருள்மொழிக்குப் புரிந்தது. சி.பி.ஐ அதிகாரிகளுடன் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவனிடம் அகத்தியன் அவர்களின் அனுமதியைப் பெற்ற பிறகு பேச ஆரம்பித்தான்.
“அருள் ஜஸ்ட் ஃபோர்ட்டீன் டேய்ஸ் மட்டும் பொறுத்துக்கோ… நெக்ஸ்ட் ஹியரிங்ல கண்டிப்பா ஜாமீன் கிடைச்சிடும்னு நம்ம அட்வகேட் சொல்லுறார்… அப்பிடியும் கிடைக்கலனா சுப்ரீம் கோர்ட்டுக்கு மூவ் பண்ணுவோம்… உன்னை கண்டிப்பா வெளிய கொண்டு வந்துடுவோம்”
அருள்மொழி அவனிடம் எதுவும் பேசவில்லை. மெல்லிதாய் புன்னகைத்தவன்
“இது எனக்கு அட்வான்டேஜ் தான் மாமா… புரியலயா? செய்யாத தப்புக்கு என்னை ஜெயில்ல அடைச்சாங்கனு எலக்சன் கேம்பெய்ன்ல பேசுறதுக்கு அவங்களே எனக்கு பாயிண்ட்ஸ் எடுத்துக் குடுத்துருக்காங்க… இன்னும் நாலு மாசம் தானே! என்ன ஆட்டம் வேணாலும் போடட்டும்… இந்த பிரச்சனையால மக்கள் மத்தில என் நேம் டேமேஜ் ஆகாம மட்டும் பாத்துக்கோங்க… கோடி கோடியா கொட்டிக் குடுத்து ஒரு கம்பெனிய எலக்சன் வேலை செய்யச் சொல்லிருக்கீங்களே, அவங்க கிட்ட இந்த சிச்சுவேசனை எப்பிடி நமக்கு சாதகமா அப்கமிங் எலக்சன்ல ஓட்டா மாத்தலாம்னு நீங்களும் அக்காவும் டிஸ்கஸ் பண்ணுங்க… நான் சீக்கிரம் வந்துடுவேன்” என்று அர்த்தபுஷ்டியுடன் கூறிவிட்டு அதிகாரிகள் புடைசூழ அவர்களது வாகனத்தில் அமர்ந்தான்.

அரசியல் எனும் ஆடுகளத்தில் நுழைந்த அந்த இளம் விளையாட்டு வீரனுக்கு வெற்றியை அடையாது திரும்பிச் செல்லக்கூடாது என்ற உத்வேகம் பிறந்தது. கூடவே அவனது மூளை இரண்டாயிரத்து பதினான்காம் வருடத்திற்கு காலப்பயணம் செய்து அப்போது நடந்தேறிய நிகழ்வுகளை அலசி ஆராயத் துவங்கியது.
அதே நேரம் அன்றைய தினம் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்த வானதி தனது மடிக்கணினியில் ஆவணம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தாள்.
அவை இரண்டாயிரத்து பதிமூன்று மற்றும் பதினான்காம் ஆண்டுகளில் தொழில்துறை அமைச்சராக இருந்த ராமமூர்த்தி சம்பந்தப்பட்ட ஆவணங்கள். அவரது பதவியைப் பயன்படுத்தி அவர் அடைந்த இலாபங்களை பட்டவர்த்தனமாகக் காட்டின அந்த ஆவணங்கள்.
கூடவே கெட்வெல், பீஜியன் மற்றும் ஸ்வான் என்ற மூன்று நிறுவனங்களிலிருந்து யூனிகார்ன் குழுமத்தின் பல்வேறு தொழில்களுக்கு வந்திருந்த முதலீடு குறித்த ஆவணங்களும் அதில் அடக்கம்.
அது சுந்தரமூர்த்தியின் பதவிக்காலம் என்பதால் பல்வேறு துறைகளில் அரசு அறிவித்த டெண்டர்களை குறிப்பிட்ட அந்த மூன்று நிறுவனங்களின் துணை நிறுவனங்களுக்கு வழங்கியிருந்ததும் அதற்குக் கைமாறாக பெற வேண்டிய இலஞ்ச பணத்தை அப்போது ஆதித்யனின் தலைமையின் கீழிருந்த யூனிகார்ன் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் முதலீடாக பெற்றுக்கொண்டதும் தெள்ளத்தெளிவாக அந்த ஆவணங்களின் மூலம் ருசுவானது.
இந்த ஆவணங்களை வைத்து அருள்மொழியால் வழக்கிலிருந்து தப்பிக்கமுடியாதென்றாலும் அவனுக்கு ஜாமீன் கோருவதற்கு அந்த ஆவணங்கள் உதவும். இவற்றை அவன் தரப்பு வழக்கறிஞர் திரட்டி அவனை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கெல்லாம் வருடங்கள் எடுக்கும்.
இம்முறை ஜாமீன் மறுக்கப்பட்டாலும் அடுத்தடுத்த விசாரணைகளில் அவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது. அதே நேரம் பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கு என்பதால் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட யூனிகார்ன் குழும நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இவ்வளவு நெருக்கடிகளை அவனுக்கு உண்டாக்கியது மறைந்த அவனது சகோதரனும், தனது இலாபத்திற்காக அவனுக்கு உதவியாய் இருந்த அவனது சித்தப்பா ராமமூர்த்தியும் தான்! ஆனால் மாட்டிக்கொண்டவனோ அருள்மொழி! இப்போது கூட ராமமூர்த்தி வாயைத் திறந்தால் அருள்மொழிக்கு ஜாமீன் கிடைக்கக்கூடும். ஆனால் அந்த மனிதரோ எப்போது கட்சித்தலைமை தன் கைக்கு வரும் என காத்திருந்தவர்.
அவரா கிடைத்த வாய்ப்பை விடுவார்? இப்போது அருள்மொழியை நினைத்தால் வானதிக்கே பரிதாபமாகத் தான் இருந்தது. மடிக்கணினியை அணைத்துவிட்டுத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவள் நேரே செய்தி சேனல்கள் பக்கம் திரும்பினாள்.
வழக்கம் போல ஒரு அரசியல்வாதி சிறைக்குச் சென்றால் என்னென்ன சம்பவங்கள் நடக்குமோ அவையனைத்தும் தமிழகத்தில் அரங்கேறியதை அவை வெளிச்சம் போட்டுக் காட்டின.
தொண்டர்கள் ஆவேசத்துடன் பேசினர் என்றால் மகளிரணியினர் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர். இதற்கிடையே அருள்மொழியின் கைதால் நிம்மதியுற்றதை காட்டிக்கொள்ளாது ராமமூர்த்தி பவ்வியமாகச் செய்தி சேனல்களின் திரைகளில் வந்து சென்றார்.
அவரைப் பார்க்கும் போது வானதியின் அமைதி மாயமாகி கண்களில் சிவப்பேறியது. எரிச்சலுடன் தொலைக்காட்சியை அணைத்தவள் ரிமோட்டை சோபாவில் எறிந்துவிட்டு பால்கனியை அடைந்தாள்.
காற்றாட அங்கே நின்றவளது நினைவலைகள் பின்னோக்கி பயணித்தது. அதில் வந்தவர் அவளது தந்தை மகேந்திரன்.
“மேலூர் பக்கம் நல்ல இடம் வந்திருக்குனு ரத்தினவேலு சொன்னாரு மலர்… நமக்குப் பின்னாடி நதிக்கு யூஸ் ஆகும்… வாங்கிடுவோமா?”
“நிலத்துல எதுவும் வில்லங்கம் இருக்குதானு ரத்தினம் அண்ணன் கூட போய் விசாரிங்க… அதுக்கப்புறம் பேசி முடிச்சிடலாம்” என்றவர் அவளது அன்னை மலர்விழி.
“ரத்தினம் சொன்னாருனா அது சரியா தான் இருக்கும் மலர்… எதுக்கும் உன் திருப்திக்கு விசாரிக்கேன்… ஆபிஸ்ல இன்னைக்கு மீட்டிங் இருக்கு… ஈவ்னிங் வீட்டுக்கு வர்றதுக்கு டைம் ஆகும்… நீ நதிய மீனாட்சியம்மன் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வா… பாவம் பொண்ணு, ஹாஸ்டல் ரூம்ல அடைஞ்சு கிடந்தவ ரதவீதில சுத்தி வந்தா கொஞ்சம் ரிலாக்சா ஃபீல் பண்ணுவா” என்றவரிடம்
“அந்த மகாராணி இன்னும் தூக்கத்துல இருந்து முழிக்கலயே! இப்பிடி தான் ஹாஸ்டல்லயும் தூங்குவாளோ என்னவோ?” என்று நொடித்துக் கொண்டார் மலர்விழி.
“அட கொஞ்சம் நேரம் தூங்கட்டுமே மலர்… நீ அவளுக்கு பிடிச்சதா லஞ்ச் சமைச்சுக் குடு… நான் கிளம்பட்டுமா?” என்றபடி அவர் கிளம்பவும் அவர்களின் உரையாடலை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த வானதி கொட்டாவியுடன் வெளியே வந்தாள்.
“இப்போ தான் மகாராணிக்கு விடிஞ்சுதா?” என்றபடி வரவேற்ற மலர்விழியும் “வாடா கண்ணா! காபி குடிக்கிறியா?” என்றபடி மகேந்திரனும் அவளைக் கொஞ்சியதும் இன்று நடப்பது போல வானதிக்குத் திரைப்படம் போல கண் முன் ஓடியது.
அன்று நிலத்தை வாங்க வேண்டாமென தந்தையைத் தடுத்திருந்தால் தனது குடும்பம் தப்பியிருக்குமோ?
வழக்கம் போல அந்தக் கேள்வி அவளுக்குள் உதயமாவதை வானதியால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு மட்டும் தெரியுமா அந்த நிலம் தான் அவர்களின் வாழ்வை நிர்மூலமாக்கப் போகிறதென?
அந்த நிலம் தானே அனைத்துக்கும் காரணகர்த்தா! அவளது குடும்பம் சிதைந்து சின்னாபின்னமானதற்கு காரணமும் அந்த நிலம் தான்! ஆசை ஆசையாய் மகேந்திரன் வாங்கிய அந்த நிலமே அவருக்கும் மலர்விழிக்கும் எமனாய் மாறிவிட்டது. அதன் முடிவில் அனாதையாய் நின்றவள் வானதி தான்!
அவள் இழந்தது குடும்பத்தை மட்டுமா? அவளது எதிர்காலமாய் இருந்தவனையும் அந்த நிலத்தால் தானே இழந்தாள்! இதோ ஆண்டுகள் கடந்துவிட்டது! ஆனால் பழைய நினைவுகள் கொடுத்த வலியின் வீரியம் மட்டும் கிஞ்சித்தும் குறையவில்லை.
இதற்கெல்லாம் காரணகர்த்தா மீது அவளுக்கு இருந்த வஞ்சினம் இப்போது எரிமலையாய் மாறி வெடிக்கும் சமயத்திற்காக காத்திருந்தது. வஞ்சம் தீர்ப்பதற்கான சமயத்திற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்தவள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறாள்! கண்களை இறுக மூடித் திறந்து அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டவள் மீண்டும் வீட்டினுள் நுழைந்து மடிக்கணினியில் தஞ்சம் புகுந்து கொண்டாள்.
புத்திசாலிகள் எண்ணியது ஈடேறுவதற்கு தகுந்த சந்தர்ப்பம் அமையும் வரை காத்திருப்பார்கள்! ஆனால் அதிபுத்திசாலிகளோ கிடைத்த சந்தர்ப்பத்தை தங்களுக்குத் தக்க பயன்படுத்தி எண்ணிய காரியங்களை நடத்திக் கொள்வார்கள்! இதில் வானதி இரண்டாம் ரகம்!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction