“ஹேய் அருள்! நீ, அச்சு, சஞ்சய் மூனு பேரும் சீனியர்ஸ்னு எவ்ளோ சீன் போடுவிங்க. நாங்க பிறந்தப்ப தான் கம்ப்யூட்டர் வந்துச்சுனு நீங்க சொல்லி பெருமைப்பட்டுக்காத நாளே இல்ல. ஆனா பாரு, நீங்க மூனு பேரும் 1999னா நாங்க 2002 தான். இதுக்கே நைன்ட்டீஸ் கிட்ஸ் மாதிரி நாஸ்டால்ஜியா பேசுவிங்க. ஆனா உண்மை என்ன தெரியுமா? 1997கு அப்புறம் பிறந்த எல்லாரும் ஜென் ஜி தான்”
-வானதியின் கடிதம்…
ஜஸ்டிஸ் டுடே தனது வழக்கமான பரபரப்போடு இருந்தது. எடிட்டர் இன் சீஃப் என்ற முறையில் விஷ்ணு பிரகாஷுக்குத் தினசரி பன்னிரண்டு மணி வரைக்கும் பரபரப்பான வேலைகள் இருக்கும். அவன் அதில் மூழ்கியிருந்த நேரத்தில் அவனது அறைக்கதவு தட்டப்பட்டது.
“கமின்.”
விஷ்ணு பிரகாஷின் உதவியாளர் உள்ளே வந்தவர் கருப்பு நிற உறையொன்றை நீட்டினார். அதன் மீது இந்திய உச்சநீதிமன்றத்தின் முத்திரை இருந்தது. விஷ்ணு பிரகாஷ் அதை வாங்கிப் பிரித்தான். இருபது பக்க சட்ட ஆவணம் அது. எடுத்ததுமே அது லீகல் நோட்டீஸ் என்று தெரிந்துவிட்டது அவனுக்கு.

“வானதியை வரச் சொல்லுங்க.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வானதி அவனது அலுவலக அறைக்குள் வந்து நின்றாள்.
“இதைப் படிச்சுப் பாரு.”
விஷ்ணு பிரகாஷ் கொடுத்த நோட்டீஸை வாங்கிப் படிக்க ஆரம்பித்தாள் வானதி. அனுப்பியவர்கள் பெயரில் விக்ரம் மெஹ்ராவுக்கு அடுத்து In consultation with Arulmozhi Sundaramoorthy (Barrister at Law) என்ற பெயரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
ஏதோ வழக்கு விஷயமாக இந்தியாவுக்கு வருகை தந்திருப்பதாக ஆதித்யன் சொல்லிக் கேட்டிருந்தவளுக்கு, அந்த வழக்கே தனக்கும் தான் பணியாற்றும் நிறுவனத்துக்கும் எதிரானதுதான் என்பதை அறிந்ததும் அதிராமல் என்ன செய்வாள்?
அடுத்த நொடியே நோட்டீஸை வாசிக்காமல் கிழித்தெறியும் அளவுக்கு ஆத்திரம். ஆனால் இடம் பொருள் ஏவல் அறிந்து மேற்கொண்டு வாசித்தவளுக்கு, அதிலிருந்த உள்ளடக்கத்தை வாசிக்க வாசிக்க வெறியானது.
கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தேடித் தேடி அவள் திரட்டிய ஆதாரங்களையும் தரவுகளையும் போலியானவை என்று குறிப்பிட்டிருந்தார்கள் அந்த நோட்டீஸில்.
உறக்கம், சாப்பாடு, உடல்வலி என எதையும் கருத்தில் கொள்ளாமல் குஜராத்துக்கும் சென்னைக்கும் மாறி மாறி அலைந்து அவள் திரட்டிய ஆதாரங்கள் பொய்யாம்! அதற்காக நூற்றியைம்பது கோடி நஷ்ட ஈடு, அனைத்து செய்திகளையும் அழிப்பதோடு சேர்த்து மான்கடா குழுமத்திடம் பொது மன்னிப்பு வேறு கேட்க வேண்டுமாம்.
வானதி அதிகம் யோசிக்கவில்லை. அருள்மொழியின் மொபைல் எண்ணுக்கு அழைத்தாள். அழைப்பு ஏற்கப்படவில்லை. அடுத்து அட்சரனின் மொபைலுக்கு அழைத்தாள்.
அவன் அழைப்பை ஏற்றதும், “அருள் எங்க இருக்கான் அச்சு?” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு வினவினாள்.
“அவனோட புது ஆபீஸ்ல இருப்பான். இப்பதான் டெல்லியில இருந்து வந்த அட்வகேட் கிளம்புனதா சொன்னான்.”
“புது ஆபீஸா?” “ஆமா! ஹெல்வட்டாஸ்ல இருந்து கொஞ்ச தூரம்தான். இன்னும் கொஞ்ச நாள்ல இங்க முறைப்படி ரிஜிஸ்டர் பண்ணிடலாம்னு சொல்லிட்டிருந்தான்.”
“சரி அச்சு!”

“உன் குரல் சரியில்லையே! எதுவும் பிரச்சனையா?”
அவளது குரல் மாற்றத்திலிருந்தே பிரச்சனையை கண்டுகொண்டது நட்பு. வானதி என்னவெனச் சொல்லுவாள் அவனிடம்?
இவனைப் போலத் தானே அருள்மொழியும் இருந்தான். கண்ணசைவில், உடல்மொழியில் அவளது பிரச்சனைகளைப் புரிந்துகொள்வானே? அவன் பெரிய வழக்கறிஞராகவே இருக்கட்டுமே! இந்த வழக்கில் யார் பக்கம் நியாயமெனத் தெரியாமலா வாதாட வந்திருப்பான்?
“பிரச்சனை எல்லாம் இல்ல அச்சு. அவன் ஆபீஸ் லொகேஷன் மட்டும் அனுப்பு” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் வானதி.
லீகல் நோட்டீஸை விஷ்ணு பிரகாஷிடம் திரும்பக் கொடுத்தவள், “அந்த அட்வகேட்ல ஒருத்தர் என்னோட ஃப்ரெண்ட்தான் சீஃப். இப்ப வரைக்கும் மூச்சு விடல அவன்” எனப் பொருமினாள்.
விஷ்ணு பிரகாஷ் நிதானமாக அவளை ஏறிட்டான்.
“ரிலாக்ஸ். நாம லீகல் டீம் கிட்ட பேசலாம்.”
“எந்த சிச்சுவேஷன்லயும் நாம நியூஸ் எதையும் டெலீட் பண்ணக்கூடாது சீஃப். இதுல டிஃபமேஷன் சூட் வேற. மை ஃபுட்!”

“டென்ஷன் ஆகக்கூடாது. நான் இதை மேனேஜ் பண்ணிக்குறேன். நீ கல்யாணத்துல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணு. ஓகே?”
வானதிக்கு அப்படியெல்லாம் விட்டுவிடச் சம்மதமில்லை. இருப்பினும் விஷ்ணு பிரகாஷின் சொல்லுக்கு மரியாதை அளித்துச் சம்மதித்தாள்.
“எனக்குக் கொஞ்ச நேரம் பெர்மிஷன் வேணும் சீஃப். அப்பிடியே அந்த நோட்டீஸையும் எடுத்துட்டுப் போறேன்.”
விஷ்ணு பிரகாஷின் இதழோரம் குறுஞ்சிரிப்பு முகிழ்த்தது.
“ஃப்ரெண்ட் தலையை உருட்டணுமா இப்ப?”
“அவன் தலையை உடைச்சா கூட தப்பில்லங்கிறேன். ப்ளீஸ் சீஃப்!”
“சரி போயிட்டு வா. இப்பவும் சொல்லுறேன், அவசரப்படாத. இதை விடச் சீரியஸான பிரச்சனை எல்லாம் வந்திருக்கு நமக்கு. பாத்துக்கலாம்.”
தலையாட்டிவிட்டு மடமடவென வெளியேறியவள் காரைக் கிளப்பினாள். ராஜா அண்ணாமலைபுரத்துக்கும் ஆழ்வார்ப்பேட்டைக்கும் அதிக தூரமில்லையே. கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்தானே!
வேகமாகப் காரில் வந்து சேர பத்து நிமிடமே அதிகம். மனக்கொந்தளிப்பைக் காரில் காட்டாமல் நிதானமாக வந்து சேர்ந்தாள் வானதி. அந்த இடத்தைத்தான் கூகுள் மேப் காட்டியது.
இன்னும் போர்டு எதுவும் மாட்டவில்லை. அழகான இடத்தில் அற்புதமான அலுவலகம். ஆனால் ரசிக்கும் மனநிலையில் வானதி இல்லை.
விறுவிறுவென அருள்மொழியின் அலுவலக அறைக்குள் கடுங்கோபத்துடன் நுழைந்தாள் வானதி.
கதவைத் தட்டாமல் யாரும் தனது அறைக்குள் வருவது அவனுக்குப் பிடிக்காது. மடிக்கணினியில் ஏதோ தீவிரமாகத் தட்டச்சு செய்துகொண்டிருந்தவன் அவளை எரிச்சலோடு பார்த்தான்.
வானதி கையோடு கொண்டு வந்த லீகல் நோட்டீஸை அவன் மீது விட்டெறிந்தாள்.
“என்ன இது? என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசுல?”
நோட்டீஸ் போய் சேர்ந்துவிட்டது போல! ஏளனமான உதட்டு வளைவுடன் அதை எடுத்து மேஜை மீது வைத்தான் அருள்மொழி.
எடுத்ததும் பொங்கியவளைக் கோபத்தோடு எதிர்கொள்வதை விடச் சாமர்த்தியமாகத் திருப்பியனுப்புவதே சரியெனத் தோன்றியது அவனுக்கு.
“மிஸ் வானதி! இது என் ஆபீஸ், உன் வீடு இல்ல. அப்பாயின்மெண்ட் இல்லாம இப்பிடி ஏதோ மாதிரி நுழையுறது அன்-புரொபஷனல்.”
“அன்-புரொபஷனல்? மை ஃபுட்!” என்று வெடித்தவள், “நூத்தியம்பது கோடிக்குக் கேஸ் போட்டு நோட்டீஸ் அனுப்பிருக்க. உன் மனசைத் தொட்டுச் சொல்லு, நிர்வான் ஃபாரஸ்ட்ல நடக்குற எல்லாமே சட்டப்படிதான் நடக்குதா?” என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.
மடிக்கணினியை மூடி வைத்தவன் மெதுவாக எழுந்தான். கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு அவளை நிமிர்வாக ஏறிட்டவனின் விழிகளில் நிச்சயமாகச் சினேகம் இல்லை. இவ்வளவு ஏன்? அத்துணை விலகல் பாவனை அவனது விழிகளில்!
“அங்க என்ன நடக்குதுங்கிறது மான்கடா குரூப்புக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம். அவங்க என் கிளையண்ட். நீ ஒரு பெரிய இன்ஸ்டிடியூஷனை அட்டாக் பண்ணிருக்க. நான் நினைச்சா நீ வேலை பாக்குற ஜஸ்டிஸ் டுடே சேனலையே குளோஸ் பண்ணிடுவேன்.”
கிட்டத்தட்ட வெளிப்படையான மிரட்டல்! இளக்கமற்ற பிடிவாதத்தோடு கல்லாய் இறுகி நின்றான் அருள்மொழி.
“என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு. அங்க மிருகங்களை வதைக்குறாங்க. இது உனக்கும் தெரியும். தெரிஞ்சும் நீ அவங்களுக்காக ஆஜர் ஆகப்போற. நீ இதுக்குத்தான் சட்டம் படிச்சியாடா?” கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றவனின் நெஞ்சில் ஆட்காட்டி விரலால் தொட்டுக் கோபத்தோடு கூறினாள் வானதி.

அருள்மொழி நாவினால் உட்பக்கத்துக் கன்னச்சதையை உந்தியவன், “நான் ஏன் சட்டம் படிச்சேன்னு பின்னாடி ஆராய்ச்சி பண்ணலாம். முதல்ல உனக்கு ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கணும். ஜெயசந்திரனோட மகளுக்கு இவ்ளோ நியாயபுத்தி இருக்க முடியாது. அத்தை ஹாஸ்பிட்டல்ல இருந்து தவறி உன்னை எடுத்துட்டு வந்துட்டாங்களோ?” என்றான் நக்கலாக.
வானதி முதலில் புரியாமல் விழித்தாள். வேண்டுமென்றே பேச்சை மடைமாற்றுகிறான் என்று புரிந்ததும் கோபத்தோடு ஏதோ சொல்லப்போனவளின் கையை அவன் பற்றியதும் சட்டெனத் தணிந்து போனாள்.
“கல்யாணம் ஆகப்போகுது, அதுல கான்சென்ட்ரேட் பண்ணு. எதுக்கு இதெல்லாம்? விட்டுடு.”
வானதி தனது கரத்தை அவனிடமிருந்து உருவிக்கொண்டாள். பிடிவாதமாய்ப் நிமிர்ந்தாள்.
“நான் என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். இது மாதிரி நிறைய மிரட்டல்களை நானும் ஜஸ்டிஸ் டுடேவும் பாத்துருக்கோம். எனக்கு ஒன்னு மட்டும் புரியுது. உன்னோட நெத்தில இருக்குற தழும்பு மறந்து போன ஞாபகங்களோட அடையாளம் மட்டுமில்ல, உனக்குள்ள இருந்த ஈரமும் மனுஷத்தனமும் அழிஞ்சதுக்கான அடையாளம். ஆஃப்டர் ஆல் பணத்துக்காக இவ்ளோ தூரம் கீழ இறங்கிட்டியே?”
தன்னை அவமதிக்கும் நோக்கில் பேசியவளைப் பார்த்துச் சத்தமாக நகைத்தான் அருள்மொழி. ஏதோ முட்டாளைப் பார்ப்பது போன்ற பாவனை அவனது விழிகளில்.
“பணத்தை இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டியேம்மா. பணம் தான் அதிகாரத்துக்கான முதல் படி. அதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். ஒரு காலத்துல எனக்கு பிரண்டா இருந்ததால உனக்கு ஃப்ரீயா ஒரு லீகல் அட்வைஸ் தர்றேன்” என்றவன் அவளது காதருகே குனிந்தான்.
“உனக்கு இப்ப தேவை நல்ல அட்வகேட். இல்லனா கோர்ட்ல நான் உன்னை நிர்மூலமாக்கிடுவேன். ஐ பிராமிஸ்.”
தெளிவாய் அழுத்தமாய் அவன் உதிர்த்த வார்த்தைகள், வானதிக்கு அவன் தன்னை விட்டு, தங்களது குழந்தைப்பருவ நட்பை விட்டு நெடுந்தூரம் போய்விட்டான் என்ற கசப்பான உண்மையைப் புரியவைத்துவிட்டன. அவன் பேசிவிட்டு நிமிர்ந்ததும் கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள் வானதி.
“நான் உன்னை என் ஃப்ரெண்டுனு நினைச்சேன். நீ என் கல்யாணத்துக்கு வரணும்னு ஆசைப்பட்டேன். நீ என்னைக் கோர்ட் படியேத்திப் பாக்க நினைக்குற.”
தொண்டை அடைத்துவிட்டது அவளுக்கு. அழப் பிடிக்கவில்லைதான். ஆனால் இத்துணை கடினமான வார்த்தைகளை நண்பன் என நினைத்தவன் உதிர்த்தால் எப்படி கண்ணீர் வராமல் போகும்? அருள்மொழியின் பார்வையில் எந்தத் தவிப்பும் இல்லை. மாறாகப் புறக்கணிப்பு மட்டுமே அங்கே குடியிருந்தது.
“உன் கல்யாணம், உன் ஆசை… இதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. கிளம்புறியா?” அலுவலகத்தின் கதவைக் காட்டினான் அவன்.
“கிளம்பத்தான் போறேன். நான் ஒன்னும் உன் மடியில உக்காந்து கொஞ்சிட்டுப் போக வரல. இந்தக் கேஸைப் பத்தி நினைச்சு நான் பயப்படல. நூத்தியம்பது கோடி என்ன, நூத்தியம்பது ரூபாய் கூட உன்னால நஷ்ட ஈடா வாங்கி குடுக்க முடியாது. பொது மன்னிப்பு கேக்கணுமா நான்? யார் மன்னிப்பு கேக்குறாங்கனு பாத்துடலாம்.”
“இவ்ளோ தைரியமா இருக்குறவ ஏன் என் முன்னாடி வந்து நின்னு சவால் விடுற? கோர்ட்ல என்னை ஃபேஸ் பண்ண பயமா இருக்கா?”
கிண்டலும் எகத்தாளமும் அவனது குரலில். அது வானதியை இன்னுமே எரிச்சலுக்குள்ளாக்கியது.
“நியாயத்தோட பக்கம் நிக்குறவங்க பயப்படவேண்டிய அவசியமில்ல.”
“வாட் அ டயலாக்! பேசாம நீ இந்த வேலையை விட்டுட்டு என்கூட லண்டன் வந்துடுறியா? அங்க நிறைய தியேட்டர்ஸ் இருக்கு. அதுல ஒரு தியேட்டர்ல ஜாயின் பண்ணி நடிச்சனு வையேன், லண்டன்ல இருக்குற ஆக்டர்ஸ் எல்லாரையும் நீ முழுங்கி ஏப்பம் விட்டுருவ. டயலாக் டெலிவரி, கண்ணுல எமோஷனைக் கொட்டுறதுனு பெர்பெக்ட் ஆக்ட்ரஸுக்கான எல்லா லட்சணமும் உன்கிட்ட இருக்கு.”
வானதி கோபத்தைக் கட்டுக்குள் வைத்தபடி அவனை நெருங்கியவள், “அவ்ளோ திமிரு! எங்கப்பா இந்த ஸ்டேட்டோட சி.எம். அவரை வச்சே இந்தக் கேஸை நான் உடைக்குறேன்” என்றாள்.
“உனக்கு இந்த விவகாரத்துல உதவுனா உன் அப்பா மான்கடா குரூப்போட கோபத்துக்கு ஆளாகணுமே பேப். போன மாசம் தானே தமிழ்நாட்டோட காற்றாலை மின் உற்பத்தியில அவங்களை இன்வெஸ்ட் பண்ண அழைச்சிருந்தார் உன் டாடி. புரிஞ்சிக்க., அவர் ஃபுல் டைம் பொலிடீசியன், பார்ட் டைம் அப்பா. அப்பாங்கிற பொசிஷனை விட அரசியல்வாதியா அறியப்படுறதைத்தான் அவரே விரும்புவார். உனக்கு அவர் உதவப்போறதில்ல. நீ இந்தத் தடவை பரிதாபமா தோத்துப் போவ. திஸ் இஸ் மை சேலஞ்ச்.”
வானதிக்கு நெஞ்சு கொதித்தது.
காலம் அனைவரையும் மாற்றிவிடும் என்பார்கள். அந்த மாற்றம் நேர்மறையாக அவரவர் குணத்துக்குத் தகுந்ததாக இருந்தால் யாருக்கும் கஷ்டமில்லை. ஆனால் அந்த மாற்றம் ஒருவரின் குணத்தையே ஒரேயடியாக மாற்றிவிடுமானால் அது பெரும் அனர்த்தத்திற்கான அறிகுறி.
அருள்மொழியின் மாற்றங்கள் இரண்டாம் ரகம் எனப் புரிந்து போனது அவளுக்கு. எந்த வகையிலும் அவர்களிடையே இருந்த நட்பை அவன் அங்கீகரிக்கத் தயாரில்லை. அதற்கான மரியாதையை அளிக்கவும் அவனுக்கு விருப்பமில்லை என்பது இப்போது தெளிவாகப் புரிந்து போனது.
இதற்கு மேல் பேசினால் வெறுப்பு மட்டுமே மிஞ்சும் என்பதால் பதிலடி கொடுக்காமல் கிளம்பிவிட்டாள்.
காரிலேறி அமர்ந்தவளுக்குத் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள நேரம் தேவைப்பட்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்க அவகாசம் தேவைப்பட்டது.
நட்போ காதலோ பிரிந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களைப் பற்றி எக்காலத்திலும் நமது மனதில் தவறான எண்ணங்கள் உதிக்கக்கூடாது. அவர்களைக் கரித்துக்கொட்டக் கூடாது. அப்படிச் செய்வோமானால் இத்தனை வருடங்கள் நமக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பையோ காதலையோ நாம் அவமதிப்பதாக அர்த்தம்.
அதைப் புரிந்துகொண்டவள் காரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டாள்.
அவள் போன பிற்பாடு அமைதியிழந்து தத்தளித்தான் அருள்மொழி. தனது திட்டத்தை நிறைவேற்ற அவளை வருத்துவது தவறெனப் புரிந்தது. ஆனால் இந்த வழக்கில் அவள் பெயர் வராவிட்டாலும் கூட அவன் மான்கடா குழுமத்திற்காக வாதாடுவதில் மாற்றம் வந்திருக்காது.
ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்கையில் அந்தப் பயணத்தை வலுவாக்கும் முடிவுகளை நாம் எடுக்கவேண்டும். சில நேரங்களில் அம்முடிவுகள் நமது மனசாட்சிக்கு விரோதமாகக் கூட இருக்கலாம். அப்படிப்பட்ட முடிவுகளைத்தான் சமீப நாட்களாக அருள்மொழி எடுக்கிறான். அவனுக்கு நேர்ந்த இழப்பின் வீரியம் அதிகம். அதற்கான பழிவாங்கும் படலத்தில் எந்த முடிவும் அவனுக்குத் தர்மமே. எத்தகைய காரியமும் அவனுக்கு நியாயமே!
கலங்கிய மனம் விரைவிலேயே மீண்டும் அடங்கியது. சிறிது நேரத்தில் அந்த அலுவலகத்துக்கு வருகை தந்த அகத்தியன் சொன்ன செய்தி அருள்மொழியின் வேலையை இன்னும் சுலபமாக்கியது எனலாம்.
“என்னால நம்பவே முடியல. தலைவரை நினைச்சா கஷ்டமா இருக்கு அருள். எதிர்க்கட்சிக்காரனுங்க எல்லாம் நாக்கு மேல பல்லைப் போட்டுப் பேசுவானுங்க. இந்தக் கல்யாணம் அரசியல்லயும் அவருக்கு ஒரு மைல்கல். மீடியா குடும்பத்தோட சம்பந்தம் வச்சா நல்லதுனு யோசிச்சுப் பேசுன சம்பந்தம் இது. இப்ப என்ன செய்யலாம்டா?”

“மாமா கிட்ட சொல்லிடலாம். ஆனா அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் நடக்கணும். நீங்க அதுல தலையிட வேண்டாம்ணா. உங்க அரசியல் வாழ்க்கைல சிக்கலை உண்டாக்குற மாதிரி எந்த வேலையும் இனி நீங்க செய்யக்கூடாது. எனக்கு அட்ரஸ் மட்டும் குடுங்க. மீதிய நான் பாத்துக்குறேன்.”
“அருள்! கவனம்டா. ஆதித்யனுக்காக நான் பேசுன டிடெக்டிவ் ஏஜென்சி ஆளுங்க தான் இந்த உண்மையக் கண்டுபிடிச்சது. மீடியா குடும்ப வாரிசு இப்ப அந்தப் பொண்ணைக் கொன்னுடுவேன்னு மிரட்டுறானாம். ஆள் பாக்க ஜெண்டில்மேனா இருக்குறான், ஆனா செய்யுற வேலை எல்லாம் கழிசடைத்தனம். அந்தப் பொண்ணு சொந்தமா கபே வச்சிருக்கா. இத்தனை வருஷம் தனியொருத்தியா பிசினஸ் பண்ணுறா. அவளுக்கே இந்த நிலைமைனா பாத்துக்க.”
எச்சரித்தவன் சம்பந்தப்பட்டவரின் முகவரியைக் கொடுத்தான். அருள்மொழி அதிகம் தாமதிக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபரைச் சந்திக்க நேரில் போய்விட்டான். சம்பந்தப்பட்ட பெண்ணையும் சந்தித்தான். ஒன்றரை மணி நேரப் பேச்சுவார்த்தையில் அந்தப் பெண்ணுக்குத் தன்னாலான ஆலோசனைகளையும் கொடுத்தான்.

“நீங்க தான் இதுக்கு மேல முடிவெடுக்கணும்மா. பட் இப்ப விட்டீங்கன்னா எப்பவுமே உங்களுக்கு நியாயம் கிடைக்காது. உங்களுக்கு எந்த நேரத்துல எந்த உதவி வேணும்னாலும் என்னை நீங்க தயங்காம காண்டாக்ட் பண்ணலாம். நான் சொன்னபடி செஞ்சீங்கன்னா உங்களுக்கு நியாயம் கிடைக்கும். அட்லீஸ்ட் உங்களோட ஏமாற்றத்துக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும். யோசிங்க. நீங்க ஒன்னும் அபலைப் பெண் இல்ல. படிச்சிருக்கீங்க, பிசினஸை டீல் பண்ணுறீங்க. இந்தப் பிரச்சனையை போல்டா ஹேண்டில் பண்ணுங்க.”
மறுநாள் காலையில் தனது பேச்சுக்கான பலன் தலைப்புச் செய்திகள் மூலம் கிடைத்துவிட்டது அருள்மொழிக்கு.
அந்த ஒரு செய்தி முகிலகத்தில் நிலவிய திருமணத்துக்கான குதூகலத்தைச் சுத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டது. மொத்த முகிலகமும் அதிர்ச்சியிலும் அவஸ்தையிலும் தத்தளிக்க, தனது திட்டத்திற்கான முதல் படியில் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைத்தான் அருள்மொழி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

