“கணவன் மனைவி உறவுல லவ்வை விட லாயல்டி முக்கியம்ங்கிறதை நான் சமீப நாட்கள்ல அனுபவரீதியா உணர்ந்துட்டேன் அருள். அந்த உறவுக்கு உண்மையா லாயலா இருக்குற ஆண்கள் எல்லாம் மியூசியத்துல வைக்க வேண்டிய அரிய கலைப்பொருட்கள். ஆக்சுவலி இதெல்லாம் பேர் மினிமம் தான். ஆனா அந்த பேர் மினிமம் கூட இல்லாத ஆண்கள் தான் பெரும்பான்மைங்கிற பட்சத்துல பொண்ணுங்களான எங்களுக்கு பேர் மினிமம் ஹஸ்பெண்ட் கிடைச்சதே பெரிய நிம்மதினு தோணுது அருள்”
–வானதியின் கடிதம்…
மறுநாள் அருள்மொழியும் வானதியும் மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனைக்காகச் சென்றார்கள். அந்த ஸ்கேனிலும் இதயத்துடிப்பு குறைவாக இருப்பதாகவே கூறினார் மருத்துவர். வானதிக்கும் அருள்மொழிக்கும் உடனே டி அண்ட் சி செய்வதில் விருப்பமில்லை.
கருவின் வளர்ச்சியும் தடைபடாத காரணத்தால் பத்து நாட்கள் கழித்துப் ஃபாலோ அப் ஸ்கேன் செய்யலாமெனச் சொன்ன மருத்துவர், அந்தப் பத்து நாட்களும் ஹார்மோன் மாற்றத்திற்கான ஊசிகளும் மாத்திரைகளும் வானதிக்குக் கட்டாயம் என்று சொல்லிவிட்டார்.
“இந்தப் பத்து நாள் அவங்களை டென்ஷன் ஆகாம பாத்துக்கோங்க. மருந்து மாத்திரையை விட பிரெக்னெண்ட் மதரோட மனநிலை தான் அவங்க உடம்புல சுரக்குற ஹார்மோன்ஸைக் கட்டுப்படுத்தும். கவனம்.”
மருத்துவரின் அறிவுரைப்படி பத்து நாட்களுக்கு ‘ஜஸ்டிஸ் டுடே’விற்கு விடுப்பு எடுத்துக்கொண்டாள் வானதி. அருள்மொழி அங்கிங்கு நகராமல் அவளை அருகிலிருந்து பார்த்துக்கொண்டான். லண்டனுக்குப் போய்விட்ட கயல்விழி மகளின் உடல்நிலையைப் பற்றி அறிய வீடியோ கால் செய்வார் அடிக்கடி. அவரிடம் வானதியோ அருள்மொழியோ இந்தப் பிரச்சனையைச் சொல்லவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆதித்யனின் விவகாரத்தில் அந்தப் பெண்ணுக்குச் செட்டில்மெண்ட் கொடுத்து அந்த வழக்கை ‘அவுட் ஆஃப் கோர்ட்’ பாணியில் அவனது அட்வகேட் முடித்து வைக்க ஆலோசனை கொடுக்க, அவனும் லண்டனிலிருந்து திரும்பியதும் அதைச் செய்து முடித்தான்.
சர்ச்சைகள் முடிந்தாயிற்று! அடுத்து என்ன? சொந்த வாழ்க்கையில் வந்த விரிசலை இனி சரி செய்ய முடியாது என்பது தெரியும். ஆனால் தொழில் வாழ்க்கை? தனது ஈகோவை விட்டு அருள்மொழியிடம் மேற்கொண்டு என்ன செய்யலாமென ஆலோசனை கேட்டான். அருள்மொழிக்கும் அவன் மீது தனிப்பட்ட விரோதம் ஒன்றுமில்லையே! புத்தி கெட்டு மனைவிக்கு அவன் செய்த துரோகத்தைத் தவிர வேறு எந்த வருத்தமும் ஆதித்யன் மீது அருள்மொழிக்குக் கிடையாது.
“கட்சியோட வியூக வகுப்பாளரா எப்பவும் நீங்க தொடரலாம். உங்கப்பா சேர்த்து வச்ச சொத்துல எப்பவும் வானதி உங்க பங்கை அபகரிக்கணும்னு நினைக்கமாட்டா.”
ஆதித்யனோ விரக்தியோடு உச்சு கொட்டினான்.

“இனிமே சொத்து வச்சு நான் என்ன செய்யுறது? வாழ்க்கையே போச்சு.”
அருள்மொழியின் பார்வையில் கடுமையேறியது.
“இது நீங்களா இழுத்துக்கிட்டது. வாழ்க்கைல பொண்டாட்டினு ஒருத்தி வந்துட்டானா அவளுக்கு உண்மையா இருக்கணும். ஒருவேளை ஒத்துவராதுனு தோணுச்சுனா சட்டப்படி பிரிஞ்சு பிடிச்ச மாதிரி வாழணும். அதை விட்டுட்டு அவளுக்குத் தெரியாம இன்னொரு பொண்ணோட அஃபயர் வச்சுக்குறது எவ்ளோ கேவலமான வேலை. ஏதோ நீங்க புண்ணியம் செஞ்சதால ரேகாக்காவும் ஜெயந்தனும் உங்க கண்ணு முன்னாடி இருக்குறாங்கனு சந்தோஷப்பட்டுக்கோங்க. அதுக்கு மேல நீங்க ரேகாக்கா கிட்ட எதையும் எதிர்பாக்காதிங்க.”
ஆதித்யனுக்கும் அவனது தவறு எப்போதோ புரிந்துவிட்டதுதான். அதனால் தங்கையின் உடல்நிலையைப் பற்றி மட்டும் விசாரித்துவிட்டு அவனது வேலையைப் பார்க்கப் போய்விட்டான்.
இடையே ஒரு நாள் வேதவதியும் அட்சரனும் வானதியைப் பார்க்க வந்தார்கள்.
“எனக்குச் செமய்யா போரடிக்குது அச்சு. அவங்க குடுக்குற மருந்து சாப்பிட்டா தூக்கம் தூக்கமா வருது.”
“இன்னும் மூணு நாள் தானே? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. அடுத்த ஸ்கேன்ல பிரச்சனை இல்லனு வந்துட்டா ரிலாக்ஸா இருக்கலாம்” என்றாள் வேதவதி.
“கண்டிப்பா நல்ல நியூஸ் தான் வரும். பதினோராவது நாள் புருசனும் பொண்டாட்டியும் எங்களுக்கு ட்ரீட் வைக்கணும்” என அட்வான்ஸாகச் சொல்லி வைத்தான் அட்சரன்.
பத்தாவது நாள் ஃபாலோ அப் ஸ்கேனில் இதயத்துடிப்பு சீராகியிருந்ததோடு கருவின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்க, அருள்மொழியும் வானதியும் பத்து நாள் சோதனைக்கு விடுதலை கிடைத்த நிம்மதியில் மகிழ்ந்தார்கள்.
“இனிமே டெலிவரி டேட் வரைக்கும் நீங்க தாராளமா வேலைக்குப் போகலாம். ஆனா பிபி, சுகர் மட்டும் கண்ட்ரோல்ல வச்சுக்கணும்” என்று அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தார் மருத்துவர்.
வீட்டுக்கு வந்ததும் ஸ்ரீநிதியிடம் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்கள் இருவரும். அத்தையின் முகமலர்ச்சியைக் கண்டதும் ஜெயந்தன் சிரிக்க, “என் பையன் இப்பவே உன் பொண்ணை ரிசர்வ் பண்ணிக்குறான்” என்று கிண்டல் செய்தாள் ஸ்ரீநிதி.

அட்சரன் கேட்டபடியே அன்று மாலை தாஜ் கோரமண்டலில் நண்பர் குழாமுக்கு ட்ரீட் வைத்தார்கள் வானதியும் அருள்மொழியும்.
“ஹனிமூன் போற ஐடியா இல்லயா அச்சு?” சாப்பிட்டபடியே வினவினாள் வானதி.
“ஹனியும் மூனும் ஒன்னா இருக்குறப்ப தனியா ஹனிமூன்னு ஒன்னு எதுக்கு?” அட்சரன் தன்னையும் வேதவதியையும் காட்டிச் சொல்ல, “உலகமகா உருட்டுடா இது” என்றான் சஞ்சய் கேலியாக.
“இப்ப ஒரு ரைட்டர் கூட டீல் பேசிட்டிருக்கோம். அது முடியவே இன்னும் ஒரு மாசமாகும். அதுக்கு அப்புறம் ஹனிமூன் போனா என்ன? போகலனா என்ன? வேதாக்கும் கிளாஸ் கட் ஆகும்” என்றான் அட்சரன்.
வானதியின் கண்களில் நிறைவான சிரிப்பு மலர்ந்தது. “எப்பிடி இருந்த அச்சு இப்பிடி ஆகிட்டான்” என அவள் கேலி செய்ய, இலக்கியாவும் அவளும் ஹை-ஃபை கொடுத்துக்கொண்டார்கள்.
“எதே? இது நாங்க எல்லாரும் அருளைப் பார்த்துச் சொல்ல வேண்டிய டயலாக். வானதிங்கிற பேரே ஆகாதுனு சொன்னவன் இங்க வந்ததுல இருந்து உன்னைத் தவிர வேறு யாரையும் பாக்கல” என அட்சரன் கேலி செய்ய, வானதியின் கண்கள் அருள்மொழியின் பக்கம் திரும்பின.

புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தவனின் பார்வை தீர்க்கமாய் அழுத்தமாய் அவள் மீது படிந்திருக்க, தன்னை மீறிய வெட்க முறுவலை மறைக்கத் திண்டாடினாள் வானதி. கேலியும் கிண்டலுமான பேச்சுகளோடு இரவுணவை முடித்துக்கொண்டார்கள் அனைவரும்.
காரிலேறியதும் அருள்மொழிக்கு விக்ரம் மெஹராவிடமிருந்து அழைப்பு வந்தது.
“மறுபடியும் நிர்வான் வனம் மேல பொதுநல வழக்கு ஒன்னு போட்டிருக்காங்க அருள். நீங்க இந்தத் தடவை நேரடியா இந்தக் கேஸை ஹேண்டில் பண்ணுனா நல்லா இருக்கும்னு தோணுது.”
அருள்மொழி ஜூன் மாதமே பார் கவுன்சில் தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்பதால் இனி அவனும் இந்திய நீதிமன்றங்களில் வாதாடலாம். அதனால் தான் விக்ரம் மெஹரா அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
“கேஸ் போட்டது யாரு?”
“ஜர்னலிஸ்ட் வானதி ஜெயசந்திரன்.”
அருள்மொழியின் பார்வை சட்டென அருகில் அமர்ந்திருப்பவள் மீது படிந்தது. இதழ்களில் புன்னகையின் பாய்ச்சல்!
“கண்டிப்பா இந்தக் கேஸ்ல நான் வாதாடுறேன் விக்ரம் சார்.”
அழைப்பைப் பேசி முடித்துவிட்டு காரைக் கிளப்பியவன், “கூடவே தானடி இருந்த? எப்ப பொதுநல வழக்கு போட்ட?” என கேட்க, வானதியிடம் சின்னதாய் திகைப்பு. அதன் தொடர்ச்சியாய் அவனை ஓரக்கண்ணால் அளவிட்டாள்.
“நான் அவ்ளோ சீக்கிரம் தோல்விய ஏத்துக்கமாட்டேன். மன்னிப்பு கேட்டப்ப என்ன சொன்னேன்? அடுத்தத் தடவை தகுந்த ஆதாரம் இல்லாம பேசமாட்டேன்னு சொன்னேனா இல்லையா? அவ்ளோ ஈஸியா அவங்களை விட முடியாது. நான் விடமாட்டேன்” என்றாள் அவள் உறுதியாக. அருள்மொழியிடம் கர்வசிரிப்பு.
“இந்தத் தடவையும் உனக்கு எதிரா வாதாடப்போறது நான் தான்.”
“இருந்துட்டுப் போ! அருள்மொழினா ரெண்டு கொம்பும் ஒரு வாலுமா முளைச்சிருக்கு? தோக்கடிக்கவே முடியாத ஆள்னு ஒருத்தன் இந்தப் பூமில பிறக்கவே இல்ல. உனக்கும் தோல்வியோட ருசி தெரியணும்ல” என அவனுக்குக் குறையாத கர்வத்தோடு வானதி சொல்ல, கார் அவனது ஆக்சன் லீகல் சேம்பர் நிறுவனத்தை நோக்கி விரைந்தது.
பாதை மாறுவதை வைத்தே கண்டுகொண்டாள் வானதி. “இப்ப எதுக்கு ஆபீஸ் போற?”
“விக்ரம் ஒரு ஃபைல் அனுப்பிருக்கார். அது ஆபீஸ் சிஸ்டம்ல லாகின் பண்ணிருக்குற மெயிலுக்கு தான் வரும். கான்ஃபிடன்ஷியலான கேஸ் டீடெய்ல்ஸை அந்த சிஸ்டம்ல மட்டும்தான் வச்சுப்பேன்” என்றவன், “நீ எப்பிடி? இந்தத் தடவையாச்சும் ஆதாரத்தைச் சீக்ரெட்டா வச்சுப்பியா? இல்ல லாக் போடாத போன்ல தான் வச்சுப்பியா?” என்று கிண்டலாகக் கேட்டபடி அவளது போனை எடுத்தவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள் வானதி.
“இந்தத் தடவை நீ ஜெயிக்குறதுக்கு சின்ன சான்ஸ் கூட நான் தரமாட்டேன்” என்றாள் அவள் உறுதியானக் குரலில்.
ஆக்சன் லீகல் சேம்பர் நிறுவனத்தின் முன்னே காரை நிறுத்தியவன் “லைட் ஆஃப்ல இருக்கும். கொஞ்சம் வெளிய நில்லு. எதுலயாச்சும் இடிச்சுப்ப” என்று சொல்லி உள்ளே போய் விளக்கை ஆன் செய்தான்.
வானதி உள்ளே வந்தவள் அங்கே வேலை பார்க்கும் ஊழியர்களுக்காகப் போடப்பட்டிருந்த கூடுதல் மேஜைகளைப் பார்த்தபடி அவனது அலுவலக அறைக்குள் நுழைந்தாள். அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, அருள்மொழி அவனது கணினியில் கவனமானான். பத்து நிமிடங்கள் ஆவணங்களை மின்னஞ்சலில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிப்பதற்காகச் செலவானது.
பின்னர் கணினியை ஷட்டவுன் செய்தவன் “கிளம்பலாமா?” என்றபடி மேஜையின் இழுப்பறையைத் திறந்தான். அதற்குள் இருந்த இரண்டு பொருட்களைப் பார்த்ததும் அவனது முகம் மாறியது. அந்த முகமாற்றத்தைக் கண்டுகொண்டாள் வானதி.
எழுந்து போய் பார்த்தவள் அந்த இழுப்பறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த மருந்து பாட்டில் ஒன்றையும் துப்பாக்கி ஒன்றையும் காண நேர்ந்தது. மூச்சு விட மறந்து திகைத்த விழிகளோடு நின்றாள் வானதி.
“என்னடா இது?”
அருள்மொழி உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டான். இந்த நேரத்தில் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என இரு மனதாய் யோசித்தவன் வேறு வழியின்றி சொல்லிவிட்டான்.
“ஆக்சுவலி நான் இந்தியா வர்றதுக்கு முன்னாடி என்னோட பிளானே வேற. அந்த அஞ்சு பேரைக் கொன்ன மாதிரி உன் அப்பாவையும் கொல்லணும்னு தான் திட்டம் போட்டிருந்தேன். கட்சி, குடும்பம் எல்லாத்துல இருந்தும் அவரைத் தனிமைப்படுத்திக் கொல்லுறதுதான் என்னோட திட்டம்” என்றவன் சலிப்போடு சாய்ந்தபடி இழுப்பறையை மூடினான்.
“ஏன் திட்டம் மாறுச்சு?” பதபதைப்புடன் கேட்டாள் வானதி.
அருள்மொழியின் விழிகள் அவள் மீது ஒட்டிக்கொண்டன.
“ஏன்னா நான் உன்னைப் பாத்துட்டேன். நான் அடிக்கடி சொல்லுவேனே, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு, அந்த லவ் வந்த அப்புறம் என் பிளானும் மாறிடுச்சு. சாவை விடக் கொடுமையான தண்டனையை உன் அப்பாக்குக் குடுக்கணும்னு நினைச்சேன். அதே நேரம் உன்னைப் பத்தியும் யோசிக்கணுமே. அதான் துப்பாக்கிய யூஸ் பண்ணுறதுக்கான அவசியம் வரல.”
வானதியின் முகத்தில் கவலை மேகங்கள் சூழ “அந்த மருந்து பாட்டில்…” என அவள் ஆரம்பிக்கும்போதே சட்டென எழுந்தான் அருள்மொழி.
“முடிஞ்சதைப் பேசவேண்டாம் வானதி. நீ தேவையில்லாம யோசிச்சு டென்ஷன் ஆகுறதுல எனக்கு விருப்பமில்ல” என்று கனிவாய் சொன்னவன் “வீட்டுக்குப் போகலாமா?” என்று கனிவாய் பேசியபடி அவளோடு அங்கிருந்து வெளியேறினான்.
முகிலகம் வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் வந்த நேரத்தில் ஸ்ரீநிதியும் ஜெயந்தனும் அவர்கள் அறையிலும் ஆதித்யன் அவனது அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். வானதி மாடிப்படி ஏறி சிரமப்படக் கூடாதென இருவரும் தரைத்தளத்துக்குத் தங்களது ஜாகையை மாற்றியிருந்தார்கள்.
உள்ளே வந்து இதமான வெந்நீரில் குளித்து பருத்தி நைட்டிக்கு மாறியவள் தனது மேஜையில் அமர்ந்துகொள்ள, அருள்மொழி அவள் இரவில் போடவேண்டிய மாத்திரைகளை எடுத்து வந்து கொடுத்தான். மாத்திரை சாப்பிட்ட பிறகு அவளருகே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொண்டான்.
வானதி அழகாய்ப் பூக்களால் பார்டரிட்ட ஜர்னல் பேப்பரை எடுத்து அதில் எழுத ஆரம்பித்தாள்.
“ஹாய் அருள்! ரொம்ப மாசம் கழிச்சு உனக்கு நான் லெட்டர் எழுதுறேன். கூடவே இருக்குறவனுக்கு எதுக்கு லெட்டர்னு உனக்குத் தோணலாம். ஆனா வாயால சொல்ல முடியாத உணர்வுகளை இந்த லெட்டர் மூலமா கடத்துறது எனக்கு ஈஸியான வழினு தோணுச்சு. இப்பல்லாம் அடிக்கடி நீ என்னை நினைச்சு, குழந்தையை நினைச்சு பயப்படுற. இந்தப் பத்து நாள்ல நீ என்னைப் பாசத்தோட கவனிச்சுக்கிட்ட. ஆனா அதுல பயம் இழையோடுனதை நான் கவனிச்சேன். எந்த உறவுக்குள்ள பயமும் குற்றவுணர்ச்சியும் நுழையுதோ அந்த உறவு அதோட இயல்பான அழகை இழந்துடும் அருள். நீ எனக்குப் பழைய அருளா வேணும். நீ இல்லாத பன்னிரண்டு வருசத்துல நான் மிஸ் பண்ணுன எல்லாத்தையும் இப்ப உன் மூலமா டேலி பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு. நீ ஒரு தடவை என் லெட்டருக்குப் பதில் போடமாட்டியானு நான் தூங்காம தவிச்ச நாட்கள் அதிகம். உன் விஷயத்துல இப்பவும் எப்பவும் நான் பைத்தியக்காரிதான். நீ கண்ணாடிப் பாத்திரம் மாதிரி என்னைக் கையாளணும்னு அவசியம் இல்ல. என்னைக்குமே விபத்து இல்ல அருள். இட்ஸ் அ பியூட்டிஃபுல் ஜர்னி. திருமண உறவுல நட்பு காதலா பரிணாமிச்சாலும் அங்க நட்புக்கான தேவை எப்பவும் இருக்கும். இதைப் பற்றி ஒரு குட்டிக்கதை கூட உண்டு. நட்பும் காதலும் ஒரு தோட்டத்துல சந்திச்சுதாம். நான் தான் இந்தத் தோட்டத்துல இருக்கேன்ல, இனி நீ எதுக்குனு காதல் நட்பைப் பார்த்து கிண்டலா கேட்டுச்சாம். நீ என்னைக்காவது ஒரு நாள் கண்ணீரால இந்தத் தோட்டத்தை மூழ்கடிப்ப. அந்தச் சமயத்துல இதே தோட்டத்துல சிரிப்பை விதைக்க நான் இருக்கணும்னு நட்பு மெச்சூர்டா பதில் சொல்லுச்சாம். நட்பு காதலா மாறுறதால நம்ம உறவுக்குள்ள நட்போட தேவையில்லனு நீ நினைக்குறியா?”
எழுதி முடித்தவள் அதை என்வலப்பில் வைத்து அவனிடமே நீட்டினாள்.

“கூடவே இருக்குறவனுக்கு லெட்டர் எழுதுற பாரேன்!”
கிண்டலாய்ச் சொன்னவன் அதை வாசிக்க வாசிக்க முகம் மாறி இறுதியில் அவனது முகத்தில் கனிவும் காதலும் மட்டுமே மிஞ்சுவதாய்! கடிதத்தை என்வலப்பில் வைத்துவிட்டு வானதியின் முகத்தை ஆசையாய் பார்த்தான். அவளும் தான்.
“நான் உன்னைப் பாக்கச் சொல்லலை” – வானதி.
“பன்னிரண்டு வருசம் பாக்காததுக்குச் சேர்த்து என் மனசு எப்பல்லாம் பாக்கணும்னு நினைக்குதோ அப்பல்லாம் உன்னை இமைக்காம பாப்பேன். உன்னை பாக்காம வேற யாரைப் பாக்குறது? ஐ அம் ஆல்வேய்ஸ் லாயல் டூ மை விமன்” என்றான் மந்தகாசப் புன்னகையோடு.
வானதியின் கண்களில் சின்னதாய் கர்வத்துடன் கூடிய பிரகாசம். அவன் அடிக்கடி சொல்லும் வாக்கியம் தான். ஆனால் ஏன் சொல்கிறான் என்பது இப்போது தானே புரிகிறது அவளுக்கு.
“முன்னாடி எல்லாம் நீ அடிக்கடி லாயல் டூ மை விமன்னு சொல்லுறப்ப ஏன்டா இதைச் சொல்லுறான்னு தோணும். இப்ப கண்கூடா நடந்த சம்பவங்களைப் பாத்த அப்புறம் நீ எதுக்காக அழுத்தி அழுத்தி சொன்னனு புரியுது” என்றாள் தலை சாய்த்து.
அருள்மொழி கர்வமாகச் சிரித்தவன் “நான் எல்லாம் பேர் மினிமம்னு சொன்னேனே. சொன்ன வார்த்தையை காப்பாத்துவோம் நாங்க” என்று சொல்ல அதை ஒப்புக்கொண்டாள் வானதியும்.
“நீ சிரிக்கமாட்டனா உன் கிட்ட நான் ஒன்னு சொல்லணும்.” “நீ சிரிக்கிற மாதிரி எதையும் சொல்லலைனா நான் சிரிக்கமாட்டேன்.”
வானதி கண்களை உருட்டி முறைத்தாள்.
“இந்தக் கமலஹாசன் ட்ரிக் எல்லாம் வேண்டாம். நீ சிரிக்கக் கூடாது” என்று கறாராகச் சொன்னவள் அவனது கையைப் பற்றிக்கொண்டாள்.
கண்களில் மெல்லிய பதற்றத்தோடு “ஐ.. லவ் யூ அருள்” என்று சொல்லியே விட்டாள்.
அவள் சொன்ன நொடியில் அருள்மொழியின் மனம் பனிமலையாய் குளிர்ந்து போனது. சொன்னவளுக்குத்தான் சங்கடமாய் இருந்தது.
அருள்மொழி அவள் முகம் போன போக்கைக் கண்டு சிரித்துவிட்டான்.
“சிரிக்காதனு சொன்னேன். நான் அவ்ளோ கேவலமாவா ஐ லவ் யூ சொன்னேன்?” என அவள் கடுப்பாய் வினவ,
“நீ ஐ லவ் யூனு சொன்னப்ப தொண்டைக்குள்ள ஐஸ்கிரீம் இறங்குன மாதிரி ஜில்லுனுதான் இருந்துச்சு. ஆனா இப்ப உன் முகத்துல இருக்குற ரியாக்ஷனைப் பாத்ததும் சிரிப்பு வருது. சில்! லவ் தானே? நானும் லவ் யூ. வா!” என்றவன் விறைப்பாய் நின்றவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
வானதியை உறுத்திய சங்கடத்தின் சுவடுகள் யாவும் அவனது கதகதப்பான அணைப்பில் காணாமல் போவதாய்! நட்பையும் காதலையும் அவனிடம் மட்டுமே யாசிக்கும் வானதியின் உள்ளத்தைப் புரிந்துகொண்டவனாய் அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் அருள்மொழி.
“நம்ம நட்பை இந்தக் காதல் இன்னும் பலமாக்கும் வானதி. விலகிப் போகணும்னு நினைச்சப்ப எல்லாம் இறுக்கமா இழுத்துப் பிடிச்சு நம்மளை ஒட்ட வச்சது இந்த நட்பும் காதலும்தான். உன் கிட்ட இருந்து ரெண்டும் கிடைக்குறப்ப நான் ஏன் வேண்டாம்னு சொல்லப்போறேன்? ஐ லவ் யூ வானதி.”
விழிகள் இரண்டிலும் காதலின் ஜுவாலையோடு அருள்மொழி மனதிலிருப்பதை உரைத்துவிட, வானதியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் ததும்பல்!

கலக்கங்கள் தீர்ந்து நேசத்தின் சாரல் பொழியத் தொடங்கிய அந்த ஏகாந்த இரவில் நட்பின் ஆழமும், காதலின் பிணைப்பும், பிறக்கப்போகும் புது உயிரின் வரவுமாய் ஒன்றிணைந்த உறவு இனி வரப்போகும் அவர்களது வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையும் வசந்தமாக மாற்றப்போவதாய் உணர்ந்த வானதி, அருள்மொழியின் மார்பில் புதைந்து அவனது இதயத்துடிப்பை இசையாகக் கேட்கத் தொடங்கினாள்.
இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

