“இன்னைக்கு என்னோட இண்டர்ன்ஷிப் முடிஞ்சுது அருள். நான் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசமை ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். இதுல நான் எக்ஸ்பர்ட் ஆக இன்னும் பல வருசம் ஆகலாம். கொஞ்சம் ரிஸ்கியான வேலையா இருந்தாலும் செய்யுறப்ப ரொம்ப சந்தொசமா இருக்கு”
-வானதியின் கடிதம்…
தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடியிருந்தது. ஜெயசந்திரனின் உடல்நலக்குறைவு கட்சிக்கு இன்னும் இரு ஆண்டுகளில் வரப்போகிற தேர்தலில் எந்தப் பின்னடைவையும் உருவாக்கிவிடக் கூடாதென அனைத்து முக்கிய நிர்வாகிகளும் யோசித்தார்கள்.
அந்தக் கூட்டத்தின் நோக்கமே கட்சியின் துணைத் தலைவரையும் மாநிலத்தின் துணை முதலமைச்சரையும் ஒருமனதாகத் தேர்வு செய்வதுதான். அனைவரும் வலியுறுத்தியது அருள்மொழி கட்சியின் தலைமையையும் துணை முதலமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே! ஆதித்யனின் தொகுதிக்கு வரப்போகிற பொதுத் தேர்தலில் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக அவன் நிற்பது உறுதியானதால் கட்சிப் பிரமுகர்கள் அவனைத் தலைமை பீடத்தில் அமர வைக்க விரும்பினார்கள்.
“நீங்க தலைவரோட மருமகன். சுந்தரமூர்த்தி ஐயாவோட ரத்தம். இந்தத் தலைமைப் பதவிக்கு உங்களை விட வேறு யார் தகுதியானவங்களா இருக்க முடியும்?” என்பதே அனைவரின் ஏகோபித்த மனநிலை.
ஆனால் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான தேர்வுக்கு அருள்மொழி வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அனைவரின் கருத்தையும் அமைதியாகக் கேட்ட அருள்மொழி புன்னகையோடு எழுந்து நின்றான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நீங்க எல்லாரும் என் மேல வச்சிருக்குற நம்பிக்கையை நினைக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா அரசியல்ல நான் கத்துக்குட்டி. இந்தத் தலைமைப் பதவி, துணை முதலமைச்சர் பதவிக்கான தகுதி எனக்கு இல்லங்கிறதுதான் உண்மை. கட்சியோட வெற்றிலயும் தோல்விலயும் கூடவே இருந்து முழு நேரமும் அரசியலைச் சுவாசிக்குற ஒருத்தர்தான் இந்தத் தலைமைப் பதவிக்கு முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவங்களா இருக்க முடியும். நான் முழு மனசோட கட்சியோட பொருளாளர் இராஜேந்திரனை நம்ம கட்சியோட துணைத் தலைவரா முன்மொழியுறேன். துணை முதலமைச்சர் பதவியையும் அவர் வகிக்கணும்ங்கிறது என்னோட விருப்பம். இதுக்கு மாற்றுக்கருத்து யாருக்கும் இருந்தா தாராளமா சொல்லலாம்.”
நிர்வாகிகளுக்குள் சலசலப்பு. இராஜேந்திரன் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். சுந்தரமூர்த்தி, ஜெயசந்திரனைப் போல அவருக்கும் கழகத்துக்குமான உறவு அத்துணை பலமானது. அங்கே சங்கடப்பட்டுப் போனது இராஜேந்திரனும் அவரது மைந்தன் அகத்தியனும்தான். அவர்கள் கொள்கைப் பிடிப்புக்காக அரசியலில் பயணிப்பவர்கள்; கட்சி மீதான விசுவாசம் மட்டுமே அவர்களைக் கட்சியோடு பிணைப்பதாக நம்புபவர்கள். அதனால் இராஜேந்திரன் மறுக்கவே செய்தார் முதலில்.
“சுந்தரமூர்த்தியோட மகன், ஜெயசந்திரனோட மருமகன் – இந்த உறவுமுறைகளால மட்டும் கட்சித் தலைமைக்கு நான் தகுதியானவனா ஆகிடமாட்டேன். அரசியல்ல நான் கத்துக்க வேண்டியது ஏராளம் இருக்கு. அதை கட்சியோட உறுப்பினரா இருந்து கத்துக்குறேன். எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் சொன்னதை நீங்க ஏத்துக்கணும்.”
அருள்மொழி சொன்னதையே இதர நிர்வாகிகளும் வலியுறுத்த, அந்தப் பொதுக் கூட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்து அதே கூட்டத்தில் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் இராஜேந்திரன். அவர் இதற்கு முன்னர் வகித்த பதவிக்கு இன்னொரு அனுபவம் வாய்ந்த நபரைத் தேர்வு செய்தார்கள் அனைவரும். கரகோஷத்துக்கு மத்தியில் இராஜேந்திரனுக்குப் பொன்னாடையை அணிவித்தான் அருள்மொழி.
“வாழ்த்துகள் தலைவரே!” என அவன் வாழ்த்த, இராஜேந்திரன் பதில் சொல்லவியலாமல் திக்குமுக்காடிப் போனார்.

அதே நேரம் முகிலகத்தில் ஜெயசந்திரனின் அறையில் அவர் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவரருகே அமர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ கடைசி பாக முடிவை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தார் கயல்விழி.
அருள்மொழிவர்மன் தட்டுடன் மகுடத்தைக் கையில் ஏந்திக்கொண்டான். பிறகு ஜனக் கூட்டத்தை நோக்கி கம்பீரமான குரலில் பின்வருமாறு கூறினான்:
“மக்களே! இதோ சோழ நாட்டு இளவரசர்! சிவஞான கண்டராதித்தரின் திருமகன்! செம்பியன் மாதேவியின் திருக்குமாரர்! பராந்தகச் சக்கரவர்த்தியின் மூத்த திருப்பேரன்! இதோ மதுராந்தக உத்தம சோழ தேவர்! இவருக்கே நான் மணிமகுடம் சூட்டுகிறேன்! இவரையே நீங்கள் இனிச் சோழ நாட்டுச் சக்கரவர்த்தியாகக் கருதிப் பணி புரிய வேண்டும்!”
இவ்விதம் சொல்லிக் கொண்டே, அருள்மொழிவர்மன் தம் கையிலிருந்த மணிமகுடத்தைச் சேந்தன் அமுதனுடைய சிரசில் கவிழ்ந்தான். ஒரு கணநேரம் அந்தப் பிரம்மாண்டமான ஜனக்கூட்டம் மூச்சும் விடாமல் ஸ்தம்பித்து நின்றது. அடுத்த கணத்தில் எழுந்த ஆரவாரம் எட்டுத் திக்குகளிலும் உள்ள சமுத்திரங்களின் இறைச்சலையும் அடக்கிவிட்டது.
ஜெயசந்திரன் ஏதோ சொல்ல வரவும் புத்தகத்தை வைத்தவர் “என்னங்க வேணும்?” எனக் கேட்டுத் தண்ணீரைப் புகட்டினார். மருத்துவமனையிலிருந்து ஜெயசந்திரனை டிஸ்சார்ஜ் செய்து அன்றோடு பத்து நாட்கள் கடந்திருந்தன. ஜெயசந்திரனின் பக்கவாதம் நிரந்தரமானது என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவக் குழு. மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டுமாயின் வெளிநாடு செல்லுமாறு பரிந்துரைக்கவும் செய்தார்கள்.
ஜெயசந்திரனையும் கயல்விழியையும் தன்னோடு லண்டனுக்கு அழைத்துச் செல்வதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருந்தார் தர்மலிங்கம். கயல்விழி ஜெயசந்திரனை ஒரு குழந்தை போலக் கவனித்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். வாய் பேச முடியாமல் கை கால் இழுத்துக்கொண்ட நிலையிலும் ஜெயசந்திரனைக் கண்ணீர் விட வைத்தது மனைவியின் இந்தத் தூய்மையான அன்புதான்.
அவரது கண்ணீருக்கான அர்த்தத்தைக் கயல்விழியால் புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தனை நாட்கள் கம்பீரமாக நடமாடிய மனிதர் படுக்கையில் விழுந்ததும் அதை எண்ணி மனம் நொந்து கண்ணீர் விடுவதாக ஊகித்துக்கொண்டார்.
தண்ணீரைச் சிந்தச் சிந்தக் குடித்த ஜெயசந்திரனின் கழுத்தைத் துடைத்தவர் “டிவி பாக்குறிங்களா கொஞ்ச நேரம்?” என்று கேட்க, சரியெனக் கண்ணை மட்டும் சிமிட்டினார் ஜெயசந்திரன்.
தொலைக்காட்சியைப் போட்டுச் செய்தி சேனலை வைத்தார் கயல்விழி. ஜெயசந்திரன் வேறு சேனல்களைப் பார்க்கமாட்டார்.
“இன்று நடைபெற்ற தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் கட்சியின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியுள்ளார் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திரு.இராஜேந்திரன் அவர்கள். கட்சித் தலைவரான ஜெயசந்திரனின் மருமகன் அருள்மொழி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கள அரசியலைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகச் சொல்லி அவர் இராஜேந்திரனை முன்மொழிந்த நிலையில் துணைத் தலைவர் பதவிக்கு முதல் முறையாக அந்தக் கட்சியைத் தொடங்கிய நெடுஞ்செழியன் அவர்களின் குடும்பத்தைச் சாராத ஒருவர் தேர்வாகியுள்ளார். வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கு இதன் மூலமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்.”
ஜெயசந்திரனுக்குச் செய்தியைக் கேட்கக் கேட்க மனம் எரிந்தது. வாய் திறந்து சொல்லவோ எதிர்ப்பைக் காட்டவோ முடியாத நிலை. கயல்விழிக்கு அருள்மொழியின் முடிவில் படுதிருப்தி.
“அருளும் வானதியும் வாழவேண்டியது நிறைய இருக்கு. அதுக்குள்ள அரசியல்ல அவன் இறங்கணுமானு யோசிச்சேன். பேருக்கேத்த மாதிரி முதிர்ச்சியா நடந்துக்கிட்டான் நம்ம மருமகன்.”
அருள்மொழியின் முடிவை அவனது மனைவியே எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றிரவு ‘ஜஸ்டிஸ் டுடே’விலிருந்து திரும்பியதும் அவனிடம் இதைச் சொல்லியும் விட்டாள்.
“நான் வந்த நோக்கம் நிறைவேறிடுச்சு. இனி கட்சியும் பதவியும் எனக்கு எதுக்கு? எனக்கு அரசியல் பிடிச்சிருக்கு, அதை மக்களோட மக்களா இருந்து கத்துக்க ஆசைப்படுறேன். இந்தப் பதவி எல்லாம் அதுக்குத் தடையா இருக்கும்” என்றவனை நம்பாதப் பார்வை பார்த்தாள் அவள்.
“இந்த விஷயத்துல மட்டும் ஏன் இவ்ளோ நியாயம்?”
“அதான் சொன்னேனே! நான் நினைச்சது நடந்திடுச்சு. இனி நான் குறுக்கு வழில யோசிச்சு எதுக்காக ஓடணும்?” என்றவன் “சரி எனக்கு ஒரு கேஸ் சம்பந்தமா ஒரு டீடெய்ல் தேவைப்படுது. அதை மட்டும் இன்டர்நெட்ல இருந்து எடுத்துத் தர்றியா?” என வினவினான்.
அவன் வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை வானதி எடுத்துக் கொடுக்க, அவளது கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிட்டவனாய் கனிவாய் அவளைப் பார்த்தபடி அவளருகே அமர்ந்திருந்தான். மனதில் பழிவெறி தாண்டவமாடியபோது ஒரு நிலையில் இல்லாமல் உணர்வுக் கொந்தளிப்பில் எத்தனை மனக்கசப்புகள் இருவரிடையே! ஒரு நொடி சந்தோஷத்துக்கு ஒரு நாள் முழுக்கச் சண்டையிட்ட தருணங்கள் அனேகம்!
எதிர்மறை உணர்வுகள் நமது ஆன்மாவைக் குடித்துவிடும் என்பார்கள். பழிவெறியும் அப்படிப்பட்டதுதானே! அது அடங்கிய பிறகுதான் அருள்மொழியின் மனம் ஒரு நிலைக்கு வந்தது எனலாம். அலுவலகத்திலிருந்து வந்து உடை கூட மாற்றாமல் அவனுக்காகத் தகவல்களைத் தேடிக்கொண்டிருப்பவளோடு அமைதியான நீரோடை போல ஒரு வாழ்க்கையை வாழ வேண்டுமென்ற ஆசை அவனுக்குள்! கண்ணீரும், கூச்சலுமாக இனி ஒரு மணித்துளியைக் கூட வீணாக்க அவனுக்கு விருப்பமில்லை.

“டன்” என்றபடி மடிக்கணினியை அவனிடம் கொடுத்த வானதி, “நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அவரைப் பார்த்துட்டு வந்துடுறேன்” என்றபடி எழுந்தாள். இப்போதெல்லாம் அப்பா என்று சொல்லக் கூட அவளுக்குப் பிரியமில்லை.
அதே நேரம் அவரைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை அவளால். தந்தையின் மீது ஒரு துளி போல ஒட்டியிருக்கும் பாசத்தை அருள்மொழியும் தப்பாக எண்ணவில்லை.
“மெதுவா போ! நான் ஃபேஸ்வாஷ் பண்ணுனப்ப தண்ணி கொஞ்சம் சிந்திடுச்சு. வழுக்கிடாம கவனமா போ.”
வானதியும் ஜெயசந்திரனைப் பார்க்கப் போனாள். அப்போதுதான் அவருக்கு இரவுணவை ஊட்டியிருந்தார் கயல்விழி. வாயை அவ்வளவாக அசைக்க முடியாது என்பதால் பொறுமையாக உணவை மசித்துக் கொடுத்திருந்தார். மகளைப் பார்த்ததும் ஜெயசந்திரனின் நிலைகுத்திய விழிகளில் மெல்லிய கண்ணீர்ப்படலம்.
“நீ இன்னும் தூங்கலையா வானும்மா? டின்னர் சாப்பிட்டியா இல்லையா?” என்ற அன்னையிடம் சாப்பிடுவதாகச் சொன்னவள் தந்தையிடம் பார்வையால் மட்டுமே பேசிக்கொண்டாள். ஏதோ மகள் ஒரேயடியாக வெறுக்கவில்லை என்ற திருப்தி ஜெயசந்திரனுக்கு.
இப்படியே நாட்கள் கடந்தது. ஜெயசந்திரனிடம் வாங்கிய ஒப்புதலின் அடிப்படையில் ஆளுநரால் துணை முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது இராஜேந்திரனுக்கு. அதற்கு அடுத்த நாள் தர்மலிங்கத்தோடு கயல்விழியும் ஜெயசந்திரனும் விமானம் ஏறத் தயாராக இருந்தார்கள்.
பிரைவேட் ஜெட்தான் ஆதித்யன் ஏற்பாடு செய்திருந்தான். தர்மலிங்கத்தோடு அன்னை தந்தைக்குத் துணையாக அவனும் லண்டன் கிளம்பியிருந்தான். சில நாட்கள் அவர்களோடு தங்கிவிட்டு இந்தியா திரும்புவதாக ஏற்பாடு. விமானத்தில் ஏறும் முன்னர் ஜெயசந்திரனிடம் குனிந்து இரகசியக் குரலில் பேசினான் அருள்மொழி.
“சந்தோஷமா லண்டனுக்குப் போங்க மாமா. பன்னிரண்டு வருஷம் சொந்த மண்ணை விட்டு விலகி இருந்து நான் அனுபவிச்ச சிறைவாசத்தோட தனிமையை இனி நீங்களும் அனுபவிங்க. இங்க இனி எல்லாம் என்னோட கண்ட்ரோல்தான்.”
வானதி அப்போதும் தந்தையிடம் பேசவில்லை. அவர்கள் விமானம் ஏறியதும் வீட்டுக்குத் திரும்பினார்கள் அருள்மொழியும் வானதியும். அங்கே ஜெயந்தனோடு விளையாடிக்கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி.
வந்ததும் அவளிடம் விவாகரத்து முடிவைத் திரும்பப் பெற்றதற்கான காரணத்தை வினவினாள் வானதி. ஆம்! விவாகரத்து வேண்டாமென முடிவு செய்திருந்தாள் ஸ்ரீநிதி. ஆதித்யன் அச்செய்தியை விமான நிலையத்தில் அருள்மொழியிடம் கூறியிருந்தான்.
“எதுக்காக இந்த முடிவு அண்ணி? அவன் செஞ்ச காரியம் மன்னிக்கக் கூடியதா?”
ஸ்ரீநிதி பெருமூச்சு விட்டாள். பின்னர் வாஞ்சையோடு அவளைப் பார்த்தாள்.
“எனக்கு இந்த வீடும் நீங்க எல்லாரும் குடுக்குற பாதுகாப்பை வேறு எந்த இடமும் எந்த மனுஷங்களும் குடுக்கமாட்டாங்க வானும்மா. என் பிறந்த வீட்டிலேயே எனக்கு இடம் இல்லனு சொல்லிட்டாங்க. இங்க இருந்து போகமாட்டேன்னு தான் சொன்னேன். உன் அண்ணன் கூட வாழுவேன்னு சொல்லலையே! இதே வீட்டுல நாங்க தனியா வாழ முடியும்னு நம்புறேன். எல்லாத்துக்கும் மேல என் மகன் அப்பா பாசத்துக்கு ஏங்கிடக்கூடாது வானும்மா. அத்தை மாமா பாட்டி தாத்தானு எல்லாரோட உறவும் பாசமும் அவனுக்கு வேணும்.”
“அண்ணனை டிவோர்ஸ் பண்ணுனாலும் இதெல்லாம் கிடைக்குமே அண்ணி.”
“கிடைக்கும்! ஆனா நீங்க எல்லாரும் என்னை விட்டுத் தூரமா போயிடுவீங்கனு பயமா இருக்கு.”
“இந்தக் காலத்துல போய்…”
வானதி ஏதோ சொல்ல வர அருள்மொழி அவளைக் கையமர்த்தினான்.
“ஒவ்வொருத்தரோட மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் வானதி. ரேகாக்கா இங்க இருக்கணும்னா இருக்கட்டும். அவங்க முடிவுதான் இதுல ஃபைனல்” என்று சொல்லிவிட்டான் அவன்.
“தேங்க்ஸ் அருள்! என்னைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு.”
நன்றியுணர்ச்சியோடு சொன்னவள் “உனக்கு ஜூஸ் போட்டு ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன் வானும்மா. மறக்காம குடிச்சிடு. கொஞ்ச நேரம் வெளிய எடுத்து வச்சிட்டு அப்புறமா குடி” என்று சொல்ல, வானதி தலையாட்டினாள்.
அவர்களது அறைக்கு வந்ததும் தனது ஆதங்கத்தைக் கொட்டிவிட்டாள் வானதி.
“ஆதர்ஷ், அப்பா, அண்ணான்னு ஒருத்தர் கூட தன்னோட பார்ட்னருக்கு லாயலா இல்ல. சீட்டிங் என்ன சாதனையா? இல்ல, அதுதான் ஆம்பளைத்தனமா? அண்ணி எப்பிடி சகிச்சுக்குறாங்கனு புரியல.”
அருள்மொழி அவளைப் பொறுமையாக சோஃபாவில் அமர வைத்தான்.
“ஸ்ரீநிதி அண்ணி ஒன்னும் உன் அண்ணன் கூட வாழ விரும்பலையே! அவங்க டிவோர்ஸ் பண்ண விரும்பல. உலகத்தோட பார்வைக்கு ஆதித்யனோட பொண்டாட்டியா இருக்குறது தனக்கான பாதுகாப்புனு நினைக்குறாங்க. எல்லாராலயும் துணிச்சலா உறவை முறிச்சிக்க முடியாது வானதி. சிலரோட சூழலை நாம புரிஞ்சிக்க முடியாது.” நிதானமாக எடுத்துரைத்தவனின் முகம் ஒரு நொடி கறுத்துப்போனது.
“அப்பிடி பார்த்தா உன் அப்பா விவகாரத்துல பிரணதி அத்தையோட தப்பும் இருக்குல்ல. அவருக்குக் குடும்பம் இருக்குனு அத்தைக்குத் தெரிஞ்சும் கல்யாணம் ஆன ஒருத்தர் கூட அஃபயர் வச்சுக்கிட்டதை எப்பிடி நியாயப்படுத்துறது? என் அத்தைனு வந்ததும் நானும் கொஞ்சம் ஓரவஞ்சனையா தான் நடந்துக்கிட்டேன். உன் அப்பா அளவுக்கு அவங்களும் இந்த அஃபயர் விவகாரத்துல ஈக்குவலான குற்றவாளிதான்.”
“அதுக்காக அவங்களுக்கு இவ்ளோ பெரிய தண்டனை கிடைச்சிருக்க வேண்டாம்ல” எனப் பெருமூச்சுவிட்டாள் வானதி. கூடவே “நாம எல்லாரும் நமக்குப் பிடிச்சவங்க தப்பு பண்ணுனா அவ்ளோ சீக்கிரம் நம்பமாட்டோம். ஏதோ ஒரு அதிசயம் நடந்து அவங்க தப்பு பண்ணலனு இந்த உலகம் சொல்லிடாதானு ஏங்குவோம். ஆதங்கப்படுவோம். இது ஓரவஞ்சனைதான். ஆனா பாசத்துக்கும் அன்புக்கும் நியாய தர்மம் கிடையாதுல்ல அருள்” என்றாள் அவள் கண்கள் பனிக்க.
அவளை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் அருள்மொழி. “இனிமே இதைப் பத்தி நாம பேசிக்க வேண்டாம். நீ கண் கலங்குறது எனக்குப் பிடிக்கல” மெதுவாய் முணுமுணுத்தான் அவன்.
அவனது கரம் வானதியின் வயிற்றில் படிந்தது. முதல் ட்ரைமஸ்டருக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க இன்னும் சில நாட்களே பாக்கி இருந்தது. அவனது மனம் மற்ற அனைத்தையும் மறந்து வாரிசிடம் தஞ்சமடைந்தது.
அருள்மொழியும் வானதியும் ஆவலாய் மகப்பேறு மருத்துவரிடம் மாதாந்திர சோதனைக்குச் சென்ற இடத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் படங்களை ஆவலாய் பார்த்தான் அவன். மருத்துவர் கொஞ்சம் யோசனையோடு பேச்சை ஆரம்பித்தார்.
“மிஸஸ் அருள்மொழி! கருவோட Fetal Heart Rate ரொம்ப கம்மியா இருக்கு. இது தொடர்ந்தா உங்களுக்கு மிஸ்கேரேஜ் ஆகுறதுக்கான வாய்ப்பு அதிகம். உங்க பிபி லெவல், சுகர் லெவல் குழந்தையைப் பாதிச்சிருக்கலாம்னு தோணுது. பிபியை கண்ட்ரோல்ல வைங்கனு நான் அட்வைஸ் பண்ணுனேன். நீங்க அதைக் கவனிக்கலையா?”
அருள்மொழியும் வானதியும் அதிர்ந்து போய்விட்டார்கள். கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் வானதியின் மனதை அத்துணை தூரம் பாதித்திருந்தன.
“அப்ப… என்ன செய்யலாம்?” தடுமாறியபடியே பயத்தோடு வினவினாள் மருத்துவரிடம்.
“நாளைக்கு மறுபடி ஸ்கேன் எடுக்கலாம். அதுல Normal Cardiac Activity தெரிஞ்சு இதயத்துடிப்பும் நார்மல் ஆச்சுனா பிரச்சனை இல்ல. இல்லனா டி.என்.சி பண்ணுறதைத் தவிர வேறு வழியில்லை.”
பதறிப்போனாள் வானதி. பன்னிரண்டு வாரக் கருவுக்கு வலிக்குமே என்ற பயம் அவளுக்கு. அருள்மொழியோ சிலையாய் சமைந்துவிட்டான். இருவரும் மருத்துவமனையிலிருந்து முகிலகத்துக்குக் கிளம்பினார்கள். ஸ்ரீநிதி சோனோகிராபி புகைப்படங்களை ஆர்வமாய்ப் பார்த்தபடி அருள்மொழியிடம் பேச, வானதி அவர்களது அறைக்குப் போய்விட்டாள்.
மருத்துவர் சொன்னதை ஸ்ரீநிதியிடம் கூறினான் அருள்மொழி.
“நான் வானதியைக் கொஞ்சம் கவனிச்சிருக்கணும்கா. மத்த விஷயத்துல பிஸியாகி அவ கிட்டவும் கத்தி என்னாலயே பல நேரம் அவளுக்கு பிபி இஷ்யூ வந்திருக்கும்.”
“நாளைக்கு ஸ்கேன் எடுக்கச் சொல்லிருக்காங்கல்ல அருள். மனசைத் தளரவிடாத.”
ஸ்ரீநிதி என்ன தான் ஆறுதலும் தைரியமும் சொன்னாலும் அருள்மொழியின் மனம் பயத்தால் கலங்கியிருந்தது. பதபதைத்த நெஞ்சும் கலங்கிய கண்களுமாய் தங்களது அறைக்குள் வந்தவன், அங்கே நிதானமாய் அமர்ந்திருந்த வானதியைப் பார்த்ததும் உடைந்து போனான்.
“அருள்…” என்றபடி எழுந்தவளை வேக எட்டுகளுடன் நெருங்கியவன் இறுக அணைத்துக்கொண்டான். அவனது தாடை அவளது தோள்பட்டையில் பதிய, கண்ணீர் பெருகியது இழப்பை எண்ணி.
“சாரி! ஐ அம் ரியலி சாரி. நான் ஜெயிச்சிட்டேன்னு நினைச்ச இடத்துலயே வாழ்க்கை என்னைத் தோற்கடிச்சிடுச்சுனு தோணுது. எந்தச் சம்பந்தமும் இல்லாம உன்னையும் வேதனைப்படுத்திடுச்சு. நான் உன் கிட்ட நிறைய தடவை கடுமையா பேசிருக்கேன். குழந்தையை வச்சு இடைத்தேர்தல்ல போட்டி போட உன் அப்பாவை மிரட்டுவேன்னு சொன்னேனே. என்னால தான் நீ அதிக தடவை கத்தி சண்டை போட்டு உன் நிம்மதியை இழந்திருக்க. சாரி வானதி.”
அவன் உள்ளுக்குள் நொறுங்கிக்கொண்டிருப்பதை அறிந்தவளோ முதுகைத் தடவிக்கொடுத்தாள். பேசும் சூழலில் அவளும் இல்லை. ஆனால் ஒரேயடியாக அவனைத் தூற்றி விரட்டும் எண்ணமும் இல்லை. அப்படி செய்தால் அவள் மகாபாவி ஆகிவிடுவாள்.
“மறந்துடு அருள்! இதைத் தவிர நான் என்ன சொல்லுறது?” என்றவளை இன்னும் இறுக அணைத்துக்கொண்டான் அருள்மொழி.

“Revenge often costs a life. அது எப்பவும் நிறைவைக் குடுத்துடாதுனு நீ அடிக்கடி சொல்லுவ. இப்ப புரியுதுடி.”
“அருள்! இன்னும் எதுவும் முடிவாகல. நாளைக்கு ஸ்கேன் எடுத்துட்டா தெரிஞ்சிடும். அப்பிடி பார்த்தா நானும் தான் குழந்தையைப் பத்தி கவலைப்படாம என்னென்னமோ செஞ்சிட்டேன். எதுவா இருந்தாலும் நாம ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். தைரியமா இரு.”
அன்றைய இரவில் அருள்மொழியின் திமிரும் கர்வமும் கண்ணீராய்க் கரைந்துவிட, பன்னிரண்டு வயது அருள்மொழியாகப் பெற்றோரை இழந்தது போலக் குழந்தையையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் உறைந்து போனான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

