தன்னைத் தொட வந்த தந்தையைத் தள்ளி நிற்குமாறு கண்களால் எச்சரித்தவள் “எதை விபத்துனு சொல்லுறீங்க? உங்க மேல உயிரையே வச்சிருக்குற என் அம்மாவை ஏமாத்திட்டு பிரணதி சித்தி கூட அஃபயர்ல இருந்து அவங்க உங்க குழந்தையை வயித்துல சுமந்தாங்களே, அதுவா விபத்து? அசிங்கமா இல்ல இப்பிடி சொல்லுறதுக்கு? நீங்க செஞ்ச கொலைகள் பொறாமை காரணமா மட்டுமில்ல, உங்களோட கேவலமான நடத்தை வெளிய தெரிஞ்சிடக்கூடாதுங்கிற காரணத்துக்காகவும் தான். கடைசில உங்களை மட்டுமே உலகம்னு நினைச்ச என் அம்மா தான் பைத்தியக்காரி. அம்மாவுக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா அவங்க உயிரையே விட்டுருவாங்க. ஏன் யாருக்குமே நீங்க உண்மையா இல்ல?” என்று அழுகையோடு முடிக்க, அருள்மொழிக்கோ அவள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதே பதற்றத்தைக் கொடுப்பதாய்.
“முடிஞ்சதைப் பேசாத வானதி. நீ இப்ப மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது” என்றான் அவன் கண்களில் கவலையோடு.
ஜெயசந்திரன் முழுவதுமாகச் செயலிழந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும். சிறந்த தந்தை, அன்பான கணவர், ஆளுமை மிக்க தலைவர் என அவர் அணிந்திருந்த அத்துணை முகமூடிகளும் கிழிந்து போய்விட்டனவே!
“என்னைப் பேச விடு. எத்தனை நாள் இவருக்குச் சப்போர்ட் பண்ணி உன்னை நான் திட்டிருப்பேன்? இவரைப் பத்தி ஒவ்வொருத்தரும் சொன்னப்ப என்னை நானே ஏமாத்திக்கிட்டு உன் கிட்ட எரிஞ்சு விழுந்து என்னெல்லாம் செஞ்சேன் நான்? இந்தக் காட்சிய நான் பாக்கலனா இப்பவும் நான் இவரைத்தான் நம்பிருப்பேன். இந்த வேதனை, மன உளைச்சல் இதுக்கெல்லாம் தகுதியானவ நான். இந்த வலி, மன உளைச்சலை நீ பன்னிரண்டு வருஷமா உனக்குள்ள அனுபவிச்சிட்டிருந்திருக்க. யாருமில்லாம தனியா உன்னை ஜெயில் கைதி மாதிரி லண்டன்ல வச்சிருந்தார்ல.” என்றவள் தந்தையின் பக்கம் திரும்பினாள்.
“என் வயித்துல ரெண்டு மாச கரு வளருது. இதே மாதிரி தானே பிரணதி சித்தியும் ரெண்டு மாசம் கர்ப்பமா இருந்திருப்பாங்க. இப்ப வர்றப்ப பெருவிரல் எதுலயோ இடிச்சதே அவ்ளோ வலி. வீட்டோட சேர்ந்து உடம்பும் எரிஞ்சப்ப அவங்க மூணு பேருக்கும் எவ்ளோ வேதனையா இருந்திருக்கும்? பெரிய பாவம் இதெல்லாம். இந்தப் பாவம் என்னையும் அண்ணனையும் எப்பிடி நிம்மதியா வாழவிடும்?”
கோபமும் வேதனையுமாகக் கேட்டவள் அழுது அரற்றியது, அன்றைய தினத்தின் அதிர்ச்சியும் சேர்ந்து மயங்கி விழ அருள்மொழி பயந்துவிட்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வானதி!”
அவன் அவளை நெருங்கும் முன்னர் ஜெயசந்திரனின் துப்பாக்கி முனை அவனது நெஞ்சில் படிந்தது.
“என் மக மனசை எப்பிடி மாத்தணும்னு எனக்குத் தெரியும்டா. நீ உயிரோட இருக்கக்கூடாது. செத்துப் போ.”
துவேஷத்தோடு சொன்னவர் விசையை அழுத்தும் முன்னர் அவரது கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டான் அருள்மொழி. அவர் சுதாரிப்பதற்குள் தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து அதிவேகமாகச் சிரிஞ்ச் ஒன்றை எடுத்து அவரது கழுத்து நரம்பில் குத்தினான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்துவிட்ட இந்தச் செயலால் ஜெயசந்திரன் அதிர்ந்து தனது கழுத்தைப் பிடித்துச் சிரிஞ்சை எடுத்தார்.
அதை தரையில் வீசியவர் ஆத்திரத்தோடு “என்னடா விஷ ஊசியா? என்னைக் கொன்னுட்டு நீ இங்க இருந்து உயிரோட போயிடுவியா? என் கமாண்டோஸோட துப்பாக்கி உன்னைச் சல்லடை ஆக்கிடும்” என்று வீரவசனம் பேசும்போதே ஜெயசந்திரனின் முகம் சிவக்க ஆரம்பித்தது.
மூச்சு திணறியது. அவரது இதயம் மார்புக் கூட்டிற்குள் ஒரு காட்டுக் குதிரையைப் போல எகிறிக் குதித்தது.

பதறியபடி சோஃபாவில் சரிந்தார். அவரால் இடது கையை உயர்த்த முடியவில்லை. வாய் ஒரு பக்கமாகக் கோணலாகத் திரும்பியது. கண்கள் நிலைகுத்தி நின்றன. அருள்மொழி கோபத்தோடு அவரைப் பார்த்தவன் சிரிஞ்சை மீண்டும் தனது பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியவனாய் வானதியைக் கைகளில் அள்ளிக்கொண்டான்.
வேகமாக வெளியே வந்தவன் கமாண்டோக்களில் ஒருவரிடம் “என் ஒய்ப் மயங்கி விழுந்ததைப் பார்த்து சி.எம்முக்கு அதிர்ச்சில ஸ்ட்ரோக் வந்த மாதிரி ஆகிடுச்சு. எமர்ஜென்சி” என்று பதறுவது போல நடிக்க, அவர்களும் ஜெயசந்திரனைக் காக்க ஓடினார்கள்.
சிறிது நேரத்தில் தந்தையும் மகளும் ஒரே மருத்துவமனையில் தனித்தனி பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டார்கள். வானதிக்கு இரத்த அழுத்த உயர்வால் வந்த மயக்கம் என மருத்துவர் தெரிவிக்க, ஜெயசந்திரனின் நிலையோ மோசம்.
தகவலறிந்து அலறியடித்து ஆதித்யனோடு ஓடி வந்த கயல்விழிக்கு மகளைப் பார்ப்பதா கணவரின் நிலையை எண்ணி வருந்துவதா எனத் தெரியவில்லை.
ஜெயசந்திரனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் “சாரி, அவருக்குப் பயங்கரமான ஸ்ட்ரோக். பிபி இருநூற்று இருபதுக்கு மேல போயிருக்கு. கோபத்தாலயோ இல்ல ஏதோ ஒரு அதிர்ச்சியாலயோ இப்பிடி நடந்திருக்கலாம். இனி அவர் வாழ்நாள் முழுக்க யார்கிட்டயும் பேச முடியாது, நகரவும் முடியாது. பராலிசிஸால் அவரோட உடல் முடங்கிடுச்சு” என்று சொல்லிவிட கயல்விழி கதறியழத் தொடங்கினார்.
அருள்மொழிக்கோ மனதுக்குள் ஆழ்ந்த அமைதி. இத்தனை நாட்கள் எரிந்து கொண்டிருந்த பழிவெறி எனும் தீ மெதுவாய் அணையத் தொடங்கியது. எப்போதுமே அவனது நாசிக்குள் வீசிக்கொண்டிருக்கும் தீயில் மனித உடல் கருகும் நெடி முற்றிலுமாக மறைந்து போனது போல ஒரு பிரமை.
அவன் போட்ட ஊசியில் இருந்த ரசாயனம் இதயத்துடிப்பை அதிகரிக்கும் திறனுள்ளது. அதீத பயத்தில், பதற்றத்தில் இருப்பவருக்கு ஸ்ட்ரோக் வருவது போல அந்த ரசாயனத்தைச் செலுத்தி ஒரே இடத்தில் முடக்கிவிடலாமென இணையத்தில் தேடிக் கண்டறிந்திருந்தான். அந்த ரசாயனம் வெகு விரைவில் மெட்டபாலிசத்தில் வினையாற்றும் என்பதால் மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க இயலாதாம்!
தனது குடும்பத்தைத் தீக்கிரையாக்கிய ஐவரை டார்க் வெப் (Dark web) மூலம் புரொஃபஷனல் அசாஸின் ஒருவன் மூலமாக எந்தத் தடயமுமில்லாமல் தீர்த்துக் கட்டியது போல, ஜெயசந்திரனையும் செய்திருந்தால் கூட அவனுக்கு இத்துணை ஆத்ம திருப்தி கிடைத்திருக்காது. ஏனெனில் ஜெயசந்திரன் போன்ற கொடூரர்களுக்கு மரணம் ஒருவகையில் விடுதலையைக் கொடுத்துவிடும். இந்த மாதிரி குரூர எண்ணம் கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் செயல்பட முடியாமல் ஒவ்வொன்றுக்கும் அடுத்தவரை எதிர்பார்த்து இருப்பது தான் அவர்களுக்குச் சிறந்த தண்டனையாக இருக்கும்.
அந்த வகையில் பக்கவாதம் வந்து உடல் செயலிழந்து ஒரு இடத்தில் முடங்கிக் கிடப்பது ஜெயசந்திரனுக்கு அருள்மொழி கொடுத்திருக்கும் நரக தண்டனை. அந்த நேரத்தில் ஆத்ம ரூபமாய் இருக்கும் தனது பெற்றோரும் அத்தையும் மனம் குளிர்ந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டான் அவன்.
அவனது பார்வை கயல்விழிக்குத் துணையாய் அமர்ந்திருந்த ஆதித்யன் மீது படிந்தது. அவனுக்குத் தந்தை மீது அலாதி பாசம்.
“நீங்க அத்தையைப் பார்த்துக்கோங்க. நான் வானதிக்கு என்னாச்சுனு பார்த்துட்டு வந்துடுறேன்” அவனிடம் சொல்லிவிட்டு வானதியைப் பார்க்கச் சென்றான் அருள்மொழி.
வானதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு இரத்த அழுத்தம் சீராக இருக்குமாறு கவனித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அவள் கண் விழித்ததும் தந்தையைப் பற்றி விசாரித்தாள்.
“நீ மயங்கி விழுந்ததும் உனக்கு என்னவோ ஏதோனு பதறிட்டார். அதுல பிபி ஏகத்துக்கும் எகிறி ஸ்ட்ரோக் வந்து பராலிசிஸால அவர் உடம்பே முடங்கிடுச்சு வானதி. இனி கடைசி வரை யாராவது ஒருத்தரோட உதவில தான் அவர் வாழ முடியும்.”
“அம்மா… அம்மா கிட்ட சொல்லிட்டியா பிரணதி சித்தி விவகாரத்தை?”
கண்ணீருடன் வினவினாள் அவள். அருள்மொழி அவளது முகத்தைக் கைகளால் ஏந்தியவன் இல்லையென மறுப்பாய்த் தலையசைத்தான்.
“அத்தை தாங்க மாட்டாங்க வானதி. அவங்களுக்காச்சும் அவர் நல்லவரா இருந்துட்டுப் போகட்டும்.”
வானதியின் விழிகள் கண்ணீர் ததும்ப அவனை யாசிப்பது போலப் பார்த்தன.
“என்னாலயும் தாங்க முடியல அருள்” வாய் விட்டுச் சொன்னவள் அழவும் அவளை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் அருள்மொழி.

அவள் விம்மி அழ அழ அவனது கண்களும் கலங்கத் தொடங்கின. பன்னிரண்டு ஆண்டு கால அழுத்தம் மொத்தமாய் வெடித்துக் கண்ணீராய் சிதறியது.
எப்படியோ வானதியைத் தேற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றவன், இராஜேந்திரன் மூலமாக ஜெயசந்திரனின் உடல்நிலை மோசமான விவகாரத்தைக் கட்சியினரிடம் பக்குவமாக எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டான்.
ஊடகங்கள் ஒரு பக்கம் செய்திகளைப் போட்டுத் தள்ள, தொண்டர்கள் ஜெயசந்திரனின் உடல்நிலை சீரடைய வேண்டுதல்கள், நேர்த்திக்கடன்கள் என ஒரு பக்கம் கடவுளிடம் வேண்டுகோள் வைத்தார்கள்.
கட்சி விவகாரத்தை இராஜேந்திரனிடம் ஒப்படைத்த பிறகு தர்மலிங்கத்தின் மொபைலுக்கு அழைத்து அவரால் சென்னைக்கு வரமுடியுமா என விசாரித்தான் அருள்மொழி.
“தலைவரைப் பாக்க நான் வராம இருப்பேனா?” என்றவர் சொன்னபடியே இரண்டு நாட்களில் சென்னையில் ஆஜரானார். அவரையும் இராஜேந்திரனையும் கட்சி அலுவலகத்துக்கு அழைத்துப் போய்ப் பேசினான் அருள்மொழி.
“அவரால மாநில நிர்வாகத்தைப் பாத்துக்க முடியாது மாமா. அவரை அப்பிடியே விட்டுடவும் முடியாது. இங்க உள்ளதை விட லண்டன்ல அட்வான்ஸ் ட்ரீட்மெண்ட் எல்லாம் இருக்கு. தர்மா மாமா மூலமா அவரை லண்டனுக்கு அனுப்பி வச்சிடலாம்னு நினைக்குறேன். அவர் குணமாகுற வரைக்கும் அங்கயே இருக்கட்டும். அத்தையையும் உதவிக்கு அனுப்பிவச்சிடலாம்.”
இராஜேந்திரனுக்கும் அதுவே சரியெனப் பட்டது.
“எல்லாம் சரி தம்பி. ஆனா முதலமைச்சர் இல்லாத மாநிலம் என்னாகுறது? எதிர்க்கட்சி வேற எப்ப எப்பனு இருக்கானுவப்பா. தலைவர் சிகிச்சைக்குப் போறதுக்கு முன்னாடி இந்தப் பிரச்சனையை பத்திப் பேசி முடிக்கணும். இடைத்தேர்தல் வேற இருக்கு” என்றார் அவர்.
சிறிது நேரம் கழித்து எதையோ யோசித்தவராக “இந்த நிமிஷம் நம்ம கட்சியோட ஒவ்வொரு தொண்டனும் மலை போல நம்புறது உன்னைத் தான் தம்பி. தலைமைய ஏத்து ஆளில்லாத கட்சியா நம்ம கட்சி ஆகிடக்கூடாது. நீ கொஞ்சம் யோசி” என்றார் அவர்.
அருள்மொழி எந்தவித உணர்ச்சிகளும் இல்லாத முகத்தினனாய் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

