“இண்டர்ன்ஷிப்ல முதல் ஸ்டைஃபண்ட் வாங்கிருக்கேன் நான். உடனே சஞ்சய்யும் அச்சுவும் ட்ரீட் கேக்குறானுங்க. இலக்கியாவும்தான். ஆக்சுவலி நாங்க அடிக்கடி ட்ரீட் கேக்குறதே அந்தச் சமயத்துல எல்லாரும் ஒன்னா உக்காந்து பழைய மாதிரி ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுக்குதான். ஒவ்வொரு ட்ரீட்லயும் நாங்க உன்னை மிஸ் பண்ணுவோம் அருள்”
-வானதியின் கடிதம்…
ஆதித்யன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டான். அவனது அட்வகேட் மூலமாக நீதிமன்றத்தையும் அணுகியிருந்தான். அதே நேரம் ஸ்ரீநிதியின் வீட்டினரோ அவளைப் பொறுத்துப் போகுமாறு அறிவுரை கூறினார்கள். இது யாருமே எதிர்பாராத நிகழ்வு.
ஆதித்யனின் சங்காத்தமே வேண்டாமென ஜெயந்தனுடன் பிறந்தகம் சென்றவள், தோற்றுப்போனவளாய் மீண்டும் முகிலகத்தை அடைந்தாள். அவளது நொறுங்கிய தோற்றம் அனைவரையும் உலுக்கிவிட்டது. அருள்மொழிதான் அவளைத் தெளிவாகச் சிந்திக்குமாறு ஊக்கினான் எனலாம்.
“இன்னும் லீகலா உங்களுக்குள்ள எந்த செப்பரேஷனும் ஆகாதப்ப இந்த வீட்டுல இருக்குறதுக்கான முழு உரிமையும் உங்களுக்கும் ஜெயந்தனுக்கும் இருக்கு. டிவோர்ஸ் முடிவுல ஸ்ட்ராங்கா இருக்குறிங்கல்ல. உங்களுக்கான அலிமோனியை வாங்கிட்டுக் கௌரவமா இங்க இருந்து போங்க. யார் தயவும் உங்களுக்குத் தேவைப்படாது”
ஸ்ரீநிதிக்கும் அதுவே சரியெனப்பட, அவளும் ஜெயந்தனும் முகிலகத்தில் தனியறையில் வாசம் செய்யத் தொடங்கினார்கள். அதற்கு ஜெயசந்திரனோ கயல்விழியோ மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு மகன் செய்த அனர்த்தத்தால் பேரனை இழந்துவிடுவோமோ என்ற பயம் ஸ்ரீநிதி மீண்டும் முகிலகம் வந்ததும் மட்டுப்பட்டது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இந்நிலையில் அட்சரனுக்கும் வேதவதிக்கும் முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தார்கள் அவனது பெற்றோர். அவசரகதியில் வேண்டாவெறுப்பாக நடந்த திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குள் புரிதல் முகிழ்த்திருந்தது. எண்ணற்ற கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் அவர்கள் காதலிக்கவும் செய்ய, முறைப்படி திருமணம் செய்துகொள்ள எண்ணினார்கள்.
வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்கு வானதியும் அருள்மொழியும் அவளது பெற்றோர் சகிதம் போய் வாழ்த்தினார்கள். அட்சரனின் வீட்டில் திருமண விருந்துக்கான ஆயத்தங்கள் நடைபெறுகையில் ஜெயசந்திரனுக்கு உளவுத்துறை ஐ.ஜியிடமிருந்து இரகசிய மொபைல் அழைப்பு வந்தது.
சமீப நாட்களாக அருள்மொழியின் செயல்பாடுகள் அவருக்கு உவப்பாக இல்லாததால் அவனைப் பற்றியும் அவனுக்கு உதவுபவர்கள் பற்றியும் விசாரிக்கச் சொல்லியிருந்தார். அந்த விசாரணையில் தெரிய வந்த உண்மைகளைப் பற்றிப் பேச அழைத்தார் உளவுத்துறை ஐ.ஜி.
அட்சரனின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு அவர் கிளம்பிய சில நிமிடங்களில் வானதிக்கும் ஒரு மொபைல் அழைப்பு வந்தது.
“நான் பிரியங்கா பேசுறேன்மா. பார்த்தி அப்ராட்ல இருந்து வந்துட்டார். இன்னைக்கு உன்னை மீட் பண்ண வரச் சொன்னார்.”
பார்த்திபன் தான் தென்காசி தனியார் மருத்துவமனையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அருள்மொழிக்குச் சிகிச்சையளித்த மருத்துவர். அவன் கொடுத்த பட்டியலில் அவரது பெயரும் அவரது மனைவியின் பெயரும் அடக்கம். அவரது மனைவி ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது கூடுதல் தகவல். வானதி எப்படியோ முட்டி மோதி அவர்களைச் சந்திக்க முயன்றபோது வெளிநாடு சென்றிருந்தார் பார்த்திபன். அவர் திரும்பி வந்துவிட்டதாகப் பிரியங்கா சொல்லவும் அருள்மொழியிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப எத்தனிக்கிறாள் வானதி.
“இவ்ளோ அவசரமா எங்க போற? நானும் வர்றேன்.”
“என்னோட வேலை சம்பந்தமா போறேன். அங்க நீ எதுக்கு?”
“நீ பேய் வேகத்துல கார் ஓட்டுறடி. அதான் எனக்கு உன்னைத் தனியா அனுப்ப பயமா இருக்கு” என்றான் அருள்மொழி நெற்றியைத் தடவியவனாக.

“ஐ ப்ராமிஸ்! ஸ்பீடா போகமாட்டேன்” என்றவளை அதற்கு மேல் அவனும் தடுக்கவில்லை.
மதுரவாயல் அருகே மருத்துவர் பார்த்திபனின் வீடு. அங்கே காரை ஓட்டிக்கொண்டு போனவளைக் கணவனும் மனைவியும் சங்கடமானப் புன்னகையோடு வரவேற்றார்கள். வானதி அதிக நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டாள்.
“பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க ட்ரீட்மெண்ட் குடுத்த அருள் இப்ப என் ஹஸ்பெண்ட். அவனோட குடும்பத்தை அழிச்சவங்களை ஒழிச்சுக் கட்டணும்ங்கிற வெறியோட இருக்கான். அவன் குடுத்த லிஸ்ட்ல இருக்குற எல்லார் கிட்டவும் அப்ப என்ன நடந்துச்சுனு விசாரிச்சுப் பாத்துட்டேன். எல்லாரோட கைகளும் ஒருத்தரை மட்டும்தான் குற்றவாளினு காட்டுது. அவர் என் அப்பா. என்னால அதை ஏத்துக்கவே முடியல. என் அப்பா என்னோட ஹீரோ. அவர் அரசியல்வாதி. அரசியல்வாதிக்கான எல்லா குறுக்கு வேலையும் அவர் செஞ்சிருக்கார் அதை நான் எப்பவும் மறுக்கமாட்டேன். ஆனா சொந்த நண்பனையே கொல்லுறது… என்னால இதைத்தான் நம்ப முடியல. ப்ளீஸ்! உங்களுக்குத் தெரிஞ்ச உண்மையை சொல்லுங்க.”

பார்த்திபனும் பிரியங்காவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். பார்த்திபன் தயக்கத்தோடு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைச் சொல்லவும் ஆரம்பித்தார்.
“அந்தப் பையனுக்குச் சிவியரான இன்ஜூரி. ஸ்கல்ல பயங்கரமான அடி. அவனுக்கு மெமரி திரும்பும்னு எங்க யாருக்கும் நம்பிக்கை இல்ல. அவனைப் பாக்க வந்த ஒரே ஒரு விசிட்டர் உங்கப்பா மட்டும்தான். ஐ.சி.யூல அவனுக்கு அனஸ்தீசியா குடுத்திருந்தோம். ஒருவேளை அவனுக்கு நினைவு திரும்புச்சுனா சந்தேகமே வராதபடி பொட்டாசியம் குளோரைடை இன்ஜெக்ட் பண்ணிக் கொல்லச் சொன்னார் உங்கப்பா ஜெயசந்திரன்.”
வானதிக்கு மனதோரமாய் இருந்த சின்ன நம்பிக்கையும் சிதைந்து போனது அந்த இடத்தில்தான். அதோடு விட்டிருந்தால் கூட அவளுக்கு வலித்திருக்காது. அடுத்து பிரியங்கா சொன்ன மாபெரும் உண்மை ஒரேயடியாக அவளை உடைத்துப் போட்டது.
“நான் அதே ஹாஸ்பிட்டல்ல கைனகாலஜிஸ்டா ஒர்க் பண்ணிட்டிருந்தேன். இந்தச் சம்பவம் நடக்குறதுக்குப் பதினைந்து நாளுக்கு முன்னாடி உங்கப்பா….”
வானதியிடம் பிரியங்கா உண்மையைச் சொல்லி முடித்தபோது தன்னைச் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதே அவளுக்குப் பெரும் சவாலாய் இருந்தது. சாலையில் கார் சென்றபோது எதிரில் வரும் வாகனங்களைக் கவனிக்கும் அளவுக்குக் கூட அவளுக்குத் தெளிவான மனமில்லை.
அதே சமயத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் உளவுத்துறை ஐ.ஜி ஜெயசந்திரனிடம் அவருக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் சொல்லி முடித்தார்.
“இங்க வந்ததுல இருந்து அவருக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்யுறது உங்க வலது கையா இருக்குற இராஜேந்திரனோட மகன் அகத்தியன்.”
“நீங்க போகலாம்.”
சல்யூட் வைத்துவிட்டு ஐ.ஜி வெளியேறினார்.

ஜெயசந்திரன் முகம் கறுக்க வெறியேறிப் போய் அமர்ந்திருந்தார். லண்டனிலிருந்து திரும்பியது முதல் இப்போது நடந்த சம்பவம் வரை கணக்கிட்டுப் பார்த்தால் அருள்மொழிக்குப் பழைய ஞாபகங்கள் திரும்பியிருக்க வேண்டும். சாமர்த்தியமாகச் சூழலைப் பயன்படுத்தித் தனது குடும்பத்திற்குள்ளும் கட்சிக்குள்ளும் நுழைந்துவிட்டவனை வேரோடு சாய்க்கும் வெறி அவருக்கு.
கோபத்தோடு முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து கிளம்பியவர் காரில் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் கட்சி அலுவலகம் நோக்கிச் செல்லுமாறு ஓட்டுனரிடம் கூறிவிட்டு இராஜேந்திரனின் மொபைலுக்கு அழைத்தார்.
“கட்சி ஆபிஸ்ல யாரும் இருக்கக்கூடாதுண்ணா. எல்லாரையும் போகச் சொல்லிடுங்க.”
இராஜேந்திரன் எப்போதும் ஜெயசந்திரனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவராயிற்றே! அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டார். அடுத்து ஜெயசந்திரன் அழைத்தது என்னவோ அருள்மொழியின் எண்ணுக்குத்தான்.
“உங்க கிட்ட இடைத்தேர்தல் பத்திப் பேசணும். கட்சி ஆபிசுக்கு வந்துடுங்க மருமகனே.”
அருள்மொழி அந்நேரத்தில் அவனது அலுவலகத்தில் முக்கியமான வழக்கு ஒன்றின் ஆவணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜெயசந்திரன் இடைத்தேர்தல் குறித்துப் பேசவேண்டுமென்றதும் வெற்றிப் புன்னகையோடு கிளம்ப ஆயத்தமானான் அவன். சரியாகக் கார் சாவியை அவன் எடுத்த சமயத்தில் அகத்தியனிடமிருந்து மொபைல் அழைப்பு.
“தலைவர் உன்னை கட்சி ஆபிசுக்கு வரச் சொன்னாராடா??” என எடுத்ததும் வினவினான் அவன். கட்சி விஷயமாக அவன் புதுடெல்லி சென்றிருந்தான்.
“ஆமாண்ணா! இடைத்தேர்தல் பத்திப் பேசணும்னு வரச் சொன்னார்.”
“போகாத அருள். அங்க ஏதோ சரியில்லனு அப்பா சொன்னார்டா. அப்பாவைக் கூட அங்க இருக்கவேண்டாம்னு தலைவர் அனுப்பிவச்சிட்டார். கட்சி ஆபிஸ்ல ஒரு ஈ காக்கா கூட இல்ல. அவரோட பாதுகாப்புக்குனு வர்ற கமாண்டோஸைக் கூட தள்ளியே நிறுத்தி வச்சிருக்காராம். அவர் உளவுத்துறை ஐ.ஜி கிட்ட பேசுனதா கட்சில ஒருத்தர் எனக்குத் தகவல் சொன்னார். ஏதோ நடந்திருக்கு அருள். போகாத.”
அகத்தியனின் குரலில் அத்துணை பதற்றம்! பரபரப்பு! அருள்மொழியின் கண்களில் பழிவெறியின் பளபளப்பு ஏறியது.
“ஓஹ்! ஒருவேளை அந்தாளுக்கு என்னைப் பத்தி எல்லா விஷயமும் தெரிய வந்திருக்கலாம். அப்ப கண்டிப்பா அந்தாள் கிட்ட நான் பேசணும்ணா.”
“முட்டாள் மாதிரி பண்ணாத அருள். சுந்தரமூர்த்தி ஐயாவுக்கு நடந்தது…”
“சுந்தரமூர்த்தியோட முதுகுல குத்துனவன் அந்தாளு. என் அப்பாவை நேருக்கு நேரா நின்னு அடிச்சுக் கொல்ல அவனுக்குத் திராணி இல்ல. என்னை அந்த ஆளால எதுவும் பண்ண முடியாதுண்ணா. நான் போறேன். இன்னைக்கு நானா அவனானு பாத்துடுவோம்.”
“அருள் வேண்டாம்டா!…” என அகத்தியன் கத்துவதைப் பொருட்படுத்தாமல் அழைப்பைத் துண்டித்தவன் மேஜையருகே சென்றான். மேஜையில் இழுப்பறையிலிருந்து எதையோ எடுத்துத் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்தவன் கார்ச் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் ஜெயசந்திரனின் கட்சி அலுவலகத்திற்கு.
அருள்மொழி தனது எச்சரிக்கையைக் கேட்கவில்லை என்றதும் அகத்தியன் அடுத்த நொடியே வானதியை மொபைலில் தொடர்பு கொண்டான்.
“இங்க பாரும்மா! தலைவருக்கும் அருளுக்கும் ஏதோ பிரச்சனை வரப்போகுது. நீ உடனே கட்சி ஆபிசுக்குப் போ. உன்னைத் தவிர வேற யாராலயும் அவங்களைக் கண்ட்ரோல் பண்ண முடியாதும்மா. சீக்கிரமா அங்க போ. எங்கப்பாவை கமாண்டோஸ் யாரும் கட்சி ஆபீஸை நெருங்க விடமாட்டாங்க.”
வானதிக்கோ பார்த்திபனும் பிரியங்காவும் சொன்ன உண்மைகளால் உண்டான அதிர்ச்சியும், இப்போது அகத்தியன் சொன்ன செய்தியால் உண்டான பயமும் சேர்ந்துகொள்ள இரத்த அழுத்தம் அதீதமாய் உயரக் காரின் வேகத்தை அதிகமாக்கினாள் அவள்.
கட்சி அலுவலகத்தில் அருள்மொழிக்காக வெஞ்சினத்துடன் காத்திருந்தார் ஜெயசந்திரன். அந்த அலுவலக அறையில் புகைப்படமாய்த் தொங்கிய கட்சியின் முக்கியப் பிரமுகர்களில் தனது தந்தையின் புகைப்படத்தைப் பார்த்ததும் ஒட்டுமொத்தக் கோபமும் காலஞ்சென்ற தந்தையின் மீது சென்றது.
“நீங்க மட்டும் ஒழுங்கா கட்சியோட தலைமைய என் கிட்ட குடுத்திருந்தா இந்நேரம் சுந்தரமூர்த்தி உயிரோட இருந்திருப்பான். எல்லாம் உங்களால வந்துச்சு” என்றவர் ஏதோ நினைவில் வரவும் “இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல. அப்பன் போன இடத்துக்கே மகனையும் அனுப்பி வச்சிடுறேன்” என்றார் குரூரப் புன்னகையோடு. அவரது வேஷ்டி மடிப்பில் இடுப்பில் உறங்கிக் கொண்டிருந்த துப்பாக்கியைக் கை வருடியது.
அருள்மொழியும் அங்கே வந்து சேர்ந்தான். காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு கட்சி அலுவலகத்தில் இருக்கும் ஜெயசந்திரனின் அறைக்குள் நுழைந்தான் அவன். அவனைக் கண்டதும் வஞ்சப் புன்னகை ஜெயசந்திரனின் இதழ்களில்.
“வாங்க மருமகனே! உக்காருங்க”
சோஃபாவில் சரிந்து அமர்ந்திருந்தவர் அவனுக்கு இன்னொரு சோஃபாவைக் காட்ட அருள்மொழியும் அமர்ந்தான்.
“இடைத்தேர்தல் பத்திப் பேசணும்னு சொன்னீங்களே.”
அருள்மொழி ஆரம்பிக்கவும் மறுப்பாய்த் தலையசைத்தார் ஜெயசந்திரன்.
“ஆதித்யனோட தொகுதில உங்களை நிக்க வைக்கலாம்னு தான் யோசிச்சேன் மருமகனே. ஆனா உங்களை நிக்க வச்சாலும் மறுபடி அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வைக்கணும். தேவையில்லாம மக்களோட வரிப்பணம் ஏன் ரெண்டு இடைத்தேர்தல்ல வேஸ்ட் ஆகணும்? அதான் என் முடிவை மாத்திக்கிட்டேன்” என்றார் திமிரான சிரிப்போடு.
அருள்மொழி அமைதியாய் இருக்கவும் அவன் பக்கம் குனிந்தவர் “என் பொண்டாட்டி சொன்னாளேனு இரக்கம் பாத்து உன்னை லண்டனுக்கு அனுப்பி வச்சது எவ்ளோ பெரிய தப்பு. உன்னை ஹாஸ்பிட்டல்ல வச்சே முடிச்சிருக்கணும். சனியன் இவனுக்கு ஞாபகமா வரப்போகுதுனு கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டேன். அந்த அலட்சியத்துக்கு விலை, நீ என் குடும்பத்துலயும் கட்சியிலயும் நுழைஞ்சிட்ட. அப்பா, அம்மானு யாருமே இல்லாம நீ மட்டும் ஏன் இங்க வாழணும்? சுந்தரமூர்த்தி கூட சேர்ந்து சொர்க்கத்தை அனுபவி” என்றபடி வேகமாய் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக் குறிவைக்கப் பார்க்கச் சரியாக அந்நேரத்தில் ஓடோடி வந்தாள் வானதி.

“வேண்டாம்பா” என்றபடி அருள்மொழிக்கும் அவருக்கும் இடையே தடுப்புச் சுவராய் நின்றவளின் கால் பெருவிரலில் நகம் பெயர்ந்து இரத்தம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. பதற்றத்தில் ஓடி வந்தவள் எதிலேயோ கால் பலமாக இடித்து விழுந்துவிட்டாள்.
“தள்ளு வானதி! உன் அப்பன் இப்ப தெளிவா இல்ல” என அவளை அப்புறப்படுத்த முயன்றான் அருள்மொழி.
ஜெயசந்திரனும் நீட்டிய துப்பாக்கியை இறக்கவில்லை.
“துப்பாக்கியைக் கீழ போடுங்க. எத்தனை உயிரை எடுப்பீங்க இன்னும்?” கண்ணீரோடு கத்தினாள் அவள்.
“வானும்மா உனக்கு நடந்தது எதுவும் தெரியாது. இவன்…”
“எனக்கு எல்லாம் தெரியும். இவனோட ஞாபகமறதி பொய்ங்கிறதுல ஆரம்பிச்சு பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி சுந்தர் மாமாவும் மீனா அத்தையும் எப்பிடி இறந்தாங்கங்கிற வரைக்கும் எல்லாம் தெரியும். இங்க, இந்த ரூமுக்குள்ள வர்ற வரைக்கும் கூட நான் உங்களை முழுசா வெறுக்கலப்பா. ஆனா நீங்க என் புருசனையே துப்பாக்கி முனைல நிறுத்துனதைப் பார்த்த அப்புறமும் உங்க சார்பா யோசிச்சா நான் எல்லாம் மனுஷியே இல்ல. துப்பாக்கியைக் கீழ இறக்குங்க.”

ஜெயசந்திரன் அதிர்ந்தவராய் துப்பாக்கியை இறக்கினார்.
“ஏன்பா இப்பிடி செஞ்சீங்க? சுந்தர் மாமா உங்களுக்குப் போட்டியா இருந்தார்னு அவரை, அவரோட குடும்பத்தை அழிக்க நினைச்சீங்க. ஆனா பிரணதி சித்திய ஏன்பா…”
சொல்ல முடியாமல் அழத் தொடங்கினாள் வானதி. அருள்மொழி தாடை இறுகிக் கைமுஷ்டி எல்லாம் கடினமானது அந்த இடத்தில்தான். ஜெயசந்திரன் உருகுலைந்ததும் அந்த இடத்தில்தான். மகளுக்கு ஹீரோவாக இருந்த தந்தையின் சுயரூபம் முழுவதுமாக வெளியே வந்துவிட்டதே! இனி அவராலும் என்ன செய்ய முடியும்?
“வானும்மா… அது ஒரு விபத்தும்மா.”
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

