“வாட்ஸ்அப்ல குரூப் ஒன்னு ஸ்டார்ட் பண்ணிருக்கோம் அருள். அதுல சஞ்சய் மொக்கை ஸ்டிக்கர்ஸ் போட்டுச் சாகடிக்குறான். அச்சு எப்பவும் போல அவனுக்குப் பிடிச்ச இங்கிலீஷ் நாவல்ஸ்ல இருந்து கோட்ஸ் ஷேர் பண்ணுறான். நானும் இலக்கியாவும் அவங்களை ரோஸ்ட் பண்ணுறதுல பிஸி. நீ ஏன் அந்தக் குரூப்ல ஜாயின் பண்ணக்கூடாது? ரொம்ப பேசலனாலும் ஹாய் ஹலோ இப்பிடியாச்சும் சொல்லலாம்ல?”
–வானதியின் கடிதம்…
அருள்மொழியும் வானதியும் குடும்பத்தினரோடு சென்னைக்கு வந்துவிட்டார்கள். அவனுக்கு மான்கடா குழும வழக்கின் ஹியரிங் இன்னும் பதினைந்து நாட்களில்! அதற்கான வேலைகள் இருக்கின்றன. வானதிக்கும் பெரிதாய் தேன்மலையில் நாட்களைக் கழிக்க விருப்பமில்லை.
அவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் அட்சரனின் தந்தையிடமிருந்து ஜெயசந்திரனுக்கு ஒரு மொபைல் அழைப்பு வந்தது.
“அதெல்லாம் பண்ணிடலாம் ஆனந்த். நான் எதுக்கு இருக்குறேன்? குற்றாலம் காலேஜ்ல டி.சி வாங்கணும். நான் பாத்துக்குறேன். உங்க மருமகளுக்குக் காலேஜ்ல சீட் கிடைச்சிடுச்சுனு நினைச்சுக்கோங்க.”
தந்தை மொபைலில் பேசுவதைக் கேட்டபடி காபி குடித்தவள், பேசி முடித்ததும் என்னவென வினவினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வேதா பொண்ணு சென்னைல பி.ஜிய கன்டினியூ பண்ணப்போறாளாம். குற்றாலம் பராசக்தில டி.சி வாங்கிட்டு அப்பிடியே லயோலால சேர்த்துவிடணும்னு ஆனந்துக்கு ஐடியா. அதுக்குத்தான் கால் பண்ணுனார்.”
வேதவதிக்காக அட்சரனின் பெற்றோர் யோசிப்பதில் அவளுக்கு மிக்க மகிழ்ச்சியே.
“கொஞ்சம் சீக்கிரமா பண்ணுங்கப்பா. வேதா காலேஜுக்கு லீவ் போட அவ்ளோ யோசிப்பா” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு மாடிப்படியேறியவள், அறைக்குள் நுழைந்ததும் கண்ணில் பட்ட காட்சி அருள்மொழி அவளது மொபைலைக் கையில் வைத்திருந்த காட்சிதான்.

கடுப்போடு அவனிடமிருந்து மொபைலைப் பிடுங்கியவள், “என் மொபைலை எதுக்கு எடுத்துப் பாக்குற நீ?” என்று சீறினாள்.
“ரொம்ப நேரமா கால் வந்துச்சு. யார் நம்பர்னு பாத்தேன்” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டான் அவன்.
துண்டிக்கப்பட்ட அழைப்பில் அவளுடன் பணியாற்றும் குணாவின் எண் இருந்தது. அவசரமாக வாட்ஸ்அப்பைப் பார்த்தவள், அதில் வந்திருந்த ஐவரின் தெளிவான புகைப்படங்களைப் பார்த்ததும் சிலையாகிப் போனாள்.
“பாப்பா! சுந்தரண்ணே வீட்டுக்குள்ள இருக்காவளா?”
“என்னல சின்னப்பிள்ளை கிட்ட பேசிக்கிட்டு. நேரா போய் வேலைய முடிப்போம்.”
“நம்ம தலைவரு மவ. மரியாதையா பேசு.”
அடக்கிய அந்த நபர் மீண்டும் பன்னிரண்டு வயது வானதியிடம், புதிதாய் கட்டப்பட்ட வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா என வினவினார். அருள்மொழி யாரேனும் விசாரித்தால் சொல்லாதே என்று எச்சரித்தது நினைவில் வந்ததும் அமைதியாய் நின்றாள் வானதி.
“அட சொல்லு பாப்பா! சுந்தரண்ணே வீட்டு விசேஷத்துக்கு வர முடியல, அதான் மொய் கவர் குடுத்துட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்.”
பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட மொய் கவரை அந்நபர் காட்டவும் வானதியின் முகம் சீரானது.
சுந்தரமூர்த்தியின் வீட்டுப் புதுமனை புகுவிழாவுக்கு வரத் தவறியதால், மாலையில் மொய் கவரோடு வந்திருக்கிறார்கள் என்று எண்ணிவிட்டாள். ஏனெனில் அவர்கள் பக்கத்தில் இது வழக்கமாக நடப்பதுதான். ஒரு வீட்டில் நடக்கும் நற்காரியங்களுக்கு வர முடியாமல் போனால் ஊர்க்காரர்கள் அன்றைய தினத்தில் வேறு நேரங்களில் வந்து மொய்யைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். இந்த ஐவரும் அப்படி வந்தவர்கள் என்று எண்ணிவிட்டாள் வானதி.
“மாமா, அத்தை, சித்தி எல்லாரும் வீட்டுல தான் இருக்காங்க. அருள் மட்டும் நிலவறைக்குள்ள ஒளிஞ்சிருக்கான். ஹைட் அண்ட் சீக் விளையாடப்போறானாம்.”
“அப்பிடியா பாப்பா? சரிம்மா! உன் அப்பா உன்னைத் தேடுனாவ. நீ போ.”
தன்னைப் போகுமாறு சொன்னவர்கள் வீட்டை நோக்கி முன்னேறுவதைப் பார்த்தபடி அலட்டிக்கொள்ளாமல் தோப்புவீட்டை நோக்கி நடந்த வானதி, காலப்பயணம் செய்து இரண்டாயிரத்து இருபத்து ஆறில் வந்து நின்றாள் அருள்மொழியின் மனைவியாக. பழைய நினைவுகளின் ஆதிக்கத்தில் கண்ணீர் அவளது கன்னங்களில் கோடாய் வழிந்திருந்தது.
அருள்மொழி அவளது அதிர்ந்த தோற்றத்தையும் கண்ணீரையும் கண்டவன், “வானதி! ஹேய்! என்னாச்சு?” என்று உலுக்கியதில் அவள் கையிலிருந்த மொபைல் தரையில் விழுந்தது. அதை எடுக்கக் கூடச் செய்யாமல் சிலையாய் நின்றாள் அவள்.
அருள்மொழி மொபைலின் தொடுதிரையை நிதானமாகப் பார்த்துவிட்டு எழுந்தான். திறந்திருந்த அறைக்கதவைத் தாழிட்டுவிட்டு வானதியிடம் வந்தான்.
குனிந்து அவளது கன்னத்திலிருந்து கண்ணீரைத் துடைத்தவன், “விசாரிக்கச் சொன்னியா என்ன? நான் தான் தெளிவா சொன்னேனே, என் குடும்பத்தைக் கொன்னவங்களோட முடிவை பாக்கப் போனேன்னு. என் வார்த்தைல நம்பிக்கை இல்லையா உனக்கு?” என்று கேட்க,
“இவங்க… என்கிட்ட மாமாக்கு மொய் கவர் குடுக்கணும்னு கேட்டாங்க… அதான் நான்… நம்ம ஊர்ப்பழக்கம் அதானேனு” என்று திணறியவள் பின்னர் நிதானமானாள்.
“இவங்களை நீ அன்னைக்குப் பாத்தியா? அவங்க முகம் மட்டும் உனக்கு எப்பிடி மறக்கல?”
“அடி வாங்குனவனுக்கு அடிச்சவன் முகம் மறக்குமா? தலைவரோட மவ மட்டும் சொல்லலைனா வீட்டுல யாரும் இல்லனு நினைச்சு ஏமாந்திருப்போம்னு சொல்லி சொல்லி அடிச்சானுங்க. இந்த மொட்டைத்தலையன் அடிச்சதுல வந்த தழும்பு இது. எனக்கு எதுவுமே மறக்கலனு சொன்னேனே. நீ அதை மறந்துட்டியா?”
இப்போது வானதி நிஜமாகவே குழம்பிப்போனாள். அவனுக்கு நடந்த விபத்து, அதன் பின்னரான மறதி, பிறகு ஞாபகம் திரும்பியது என்று சொன்ன கதைகள் யாவும் இப்போது குழப்பமாகத் தோற்றமளித்தன.
“உனக்குத் தலைல அடிப்பட்டதுல எல்லா ஞாபகமும் மறந்து போச்சுல்ல. அப்புறம் டாக்டர்ஸோட முயற்சில ஃப்ரெண்ட்ஸைப் பத்தி மட்டும் ஞாபகம் வந்துச்சுனு சொன்ன. என்னைப் பத்தின ஞாபகம் வந்தாலும் இல்லனு பன்னிரண்டு வருஷம் பொய் சொல்லி ஏமாத்துன. அப்புறம் எப்பிடி?”
“உண்மை என்ன தெரியுமா? எனக்குத் தலையில அடிபட்டதுல எந்த ஞாபகமும் மறந்து போகல. எல்லாமே மறந்துடுச்சுனு ஹாஸ்பிட்டல்ல நான் சொன்னது பொய். எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்குனு சொல்லிருந்தா ஹாஸ்பிட்டல்ல வச்சே என் உயிரும் போயிருக்கும். அப்புறம் எப்பிடி என் குடும்பத்தைச் சீரழிச்சவனை நான் பழிவாங்குறது? ஒரே பொய்யை அழுத்தமா சொல்லி எல்லாரையும் நான் நம்ப வச்சேன். அவ்ளோ தான்.”
“அப்ப இந்த அஞ்சு பேரோட மரணம்?” “நான் தான் காரணம். வேற எதுவும் என்னால சொல்ல முடியாது. நீ ஜெயசந்திரனோட மகளாச்சே. என் பேச்சை ரெக்கார்ட் பண்ணி போலீஸ்ல குடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.”
“எதுக்கு என்கிட்ட இப்ப வெளிப்படையா சொன்ன? இதையும் வழக்கம் போல மறைச்சிருக்க வேண்டியதுதானே யூ ப்ளடி மர்டரர்?”
சீற்றமாய் கேள்வி பிறந்தது அவளிடம். அருள்மொழிக்கோ சிரிப்புதான் வந்தது.
“தேன்மலைல ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் என்னைப் பத்தி சில விஷயங்களை நீ தெரிஞ்சிக்கணும்னு நானே நினைச்சதால மட்டும்தான் உனக்கு இந்த விவரங்கள் தெரிய வந்துச்சு வானதி. தேன்மலைல நீ ரூமுக்கு வெளியே நின்னதை நான் கவனிக்காம அகத்தியன் அண்ணா கிட்ட பேசுனேன்னு நினைச்சியா? குடிச்சிட்டு உளறுனது மட்டும்தான் நான் தெரியாம செஞ்ச காரியம்.”
ஏளனமாகச் சொன்னவன் விழியகல ஏறிட்ட வானதிக்கு அப்போதுதான் வேண்டுமென்றே தனது காதில் விழுமாறு அகத்தியனிடம் பேசியிருக்கிறான் என்பதே புரிந்தது.
‘எவ்வளவு பெரிய பொய்! எவ்வளவு அழுத்தமான நடிப்பு! பன்னிரண்டு வருடங்கள் இவன் மீது அன்பு வைத்த அனைவரையும் இவன் முட்டாளாக்கி இருக்கிறான். அதில் இவனுக்கு வருத்தமுமில்லை. இனியும் இவனிடம் பழைய அருள்மொழியை நான் எதிர்பார்த்தால் என்னை விட பைத்தியம் வேறு யாரும் இல்லை.’
“நீ சுந்தர் மாமாவோட பையனானு டவுட்டா இருக்கு” என்றாள் மனதில் அவனைப் பற்றி எழுந்த எண்ணங்களின் கசப்போடு. அருள்மொழி பெருமூச்சை விட்டான்.
“சுந்தரமூர்த்தி மாதிரி எறும்புக்குக் கூட கேடு நினைக்காத நல்லவனுக்குச் சொர்க்கத்துல ஒரு இடமும், சென்னைல ஒரு சிலையும் வேணும்னா கிடைக்கும். ஆனா இந்தப் பூமில ரொம்ப நாள் வாழுற கொடுப்பினை கிடைக்காது. உன் அப்பன் ஜெயசந்திரனை மாதிரி எந்தப் பாவத்துக்கும் அஞ்சாதவனா இருந்தா மட்டும் தான் இந்த உலகத்துல பொழைக்க முடியும். என் சொந்தங்களை இழந்து நான் கத்துக்கிட்ட பாடம் இது” என்றான்.
வானதி கண்களை இறுக மூடித் திறந்தாள். ‘அருள்மொழி’ எனும் பண்டோரா பாக்ஸ் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளை உள்ளே ஒளித்து வைத்திருக்கிறதோ என்ற ஆயாசம் அவளுக்கு. அதை எல்லாம் தாண்டி இவனது இந்தப் பழிவெறியால் தனது வாழ்க்கை கேலிக்கூத்தாக்கப்படுவதில் அவளுக்கு உடன்பாடு இல்லை.
“வெல்! நீ பழைய அருள்மொழி இல்ல. சோ நானும் உன்கிட்ட பழைய வானதி மாதிரி நடந்துக்கணும்னு அவசியமில்ல.”
தீர்மானமாய் ஒலித்த வானதியின் குரலில் அருள்மொழியின் கண்கள் இடுங்கின. கண்ணீரற்ற அவளது விழிகளில் உறுதியும் எச்சரிக்கையும் தெரிந்தன.
“நீ என்னை உண்மையாவே எதுக்காகக் கல்யாணம் பண்ணிக்கிட்டனு தெரியல. என் தரப்பு நியாயத்தை நான் சொல்லிட்டேன். உன் பார்வைல அது பெரிய தப்புதான். அதுக்கான தண்டனையா உன்னோட புறக்கணிப்பை பன்னிரண்டு வருஷம் நான் அனுபவிச்சிட்டேன். அந்த சேப்டர் குளோஸ் ஆயாச்சு. இப்ப நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அதுவும் நீ வம்படியா என்னைக் கல்யாணம் பண்ணிருக்க. அப்ப நீ இந்த உறவை மதிச்சுத்தான் ஆகணும். என்கூட வாழ்ந்துதான் ஆகணும். எனக்கு உறவுகளை அவமதிக்குறது, முறிச்சுக்குறதுல எப்பவுமே விருப்பம் கிடையாது. ஆனா இந்த உறவைக் காரணமா வச்சு பழசைப் பேசி நீ என்னைத் தொடர்ந்து ஹர்ட் பண்ணலாம்னு கனவு கண்டா, சீக்கிரம் கனவுல இருந்து முழிச்சுக்க. சின்ன அவமரியாதையைக்கூட இனி நான் பொறுத்துக்குறதா இல்ல. நீ என்னை இனி பிரண்டா ட்ரீட் பண்ணமாட்டனு தெரிஞ்சதால, இஷ்டத்துக்கு நீ என்னை ஹர்ட் பண்ண உன்னை நான் அனுமதிக்கப் போறதில்ல. நீ ஒரு ஸ்டெப் தப்பா வச்சாலும் இந்த உறவைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேன். ஞாபகம் வச்சுக்க.”
எச்சரித்தவள் குளியலறையை நோக்கி நகர எத்தனிக்க, “எனக்கு டைம் ஆகுது. நான் குளிக்கணும்” என்று அவளை முந்தப் பார்த்தான் அருள்மொழி.

வானதி அவனைத் தள்ளிவிட்டு குளியலறை நிலையில் கை வைத்து மறித்தவள், “அவ்ளோ அவசரப்படுறவன் என் போனை உளவு பாத்த நேரத்துல குளிச்சிருக்கணும். இப்ப என் டர்ன். வெயிட் பண்ணுடா” என்று அவனைக் கடுப்பாக்கிவிட்டுக் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
அருள்மொழி குளியலறை கதவை உதைத்துவிட்டு அவளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
அன்றைய காலையே கலவரமானப் பிறகு மனதை வெகு சிரமப்பட்டு ஒருநிலைப்படுத்திவிட்டு வேலையில் ஆழ்ந்தான் அருள்மொழி.
மான்கடா குழுமத்திற்கான வழக்கு தொடர்பாக விக்ரம் மெஹ்ராவுடன் வீடியோ கான்பரன்ஸில் உரையாடியவன், வானதிக்கு மின்னஞ்சலில் வந்த வீடியோ குறித்துக் குறிப்பிட்டான்.
“அந்த வீடியோவை ஸ்ட்ராங்கான எவிடென்ஸா புரொசீட் பண்ணுவாங்க விக்ரம். நான் அதை லண்டன் லேபுக்கு அனுப்பிருக்கேன். அது உண்மையா இல்ல சி.ஜி, ஏ.ஐ மாதிரி வேலையானு செக் பண்ணனும்.”
“இதே மாதிரி உங்க ஒய்பும் நினைக்கமாட்டாங்கனு என்ன நிச்சயம் அருள்?” விக்ரம் மெஹ்ரா சரியான கேள்வியைத் தான் கேட்டிருந்தார். அருள்மொழி ஏளனச்சிரிப்பொன்றை உதிர்த்தான்.

“டெக்னாலஜில இந்தியாவை ஐரோப்பாவும் சைனாவும் எப்பவோ முந்தியாச்சு. அவங்க ஏ.ஐ வச்சு என்னென்னமோ செய்யுறப்ப இங்க ஏ.ஐ வச்சு ஜோசியம் பாத்துட்டிருக்காங்க. இதான் இன்னைக்கு டெக்னாலஜியை இந்தியா யூஸ் பண்ணுற அழகு. நான் அனுப்பிருக்குற லேப் லண்டன்ல இருக்குற ஒரு சீனாக்காரரோடது. லண்டன்ல நிறைய கேஸ்ல அவங்க லேப் ரிப்போர்ட்டால தீர்ப்பு மாறியிருக்கு. சோ எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்பிடியே வானதி அதை ஒரிஜினல்னு நிரூபிக்கப் பாத்தாலும் ஐ ஹேவ் மை ஓன் வேஸ். அந்த நிரஞ்சன் ஷெட்டி பத்தி அவங்ககிட்ட தகவல் கேட்டு வைங்க. அவனோட போன் கால்ஸை ஒட்டுக் கேக்குறாங்கனு சொன்னான். சம்திங் ஃபிஷி” என்றான் அவன்.
“கண்டிப்பா அருள். நிர்வான் வனம் பத்தி விசாரிக்கச் சிறப்பு புலனாய்வு குழு போட்டாங்கல்ல, அவங்க ரிப்போர்ட்டும் இந்த ஜட்ஜ்மெண்ட்ல முக்கியப் பங்கு வகிக்கும். அவங்க ரிப்போர்ட் நமக்குச் சாதகமாதான் வரும் அருள். இருந்தாலும் டெக்னிக்கலா அந்த எவிடென்ஸ் கை குடுக்குமாங்கிற சந்தேகம். அதான் கேட்டேன்” என்றார் விக்ரம் மெஹ்ரா தண்மையாய்.
அவரிடம் பேசி முடித்து நாற்காலியில் சாய்ந்து கொண்டவனுக்கு வழக்கு, ஆதாரம் இதையெல்லாம் தாண்டி வானதி காலையில் கொடுத்த எச்சரிக்கையே அவனுக்கு நினைவுக்கு வந்தது. இத்தனை நாட்கள் ஒரு வார்த்தை அவனிடமிருந்து பழையபடி வந்துவிடாதா என ஏக்கமாய் பார்த்த வானதி இல்லை அவள். பாதி உண்மைக்கே இந்த நிலை என்றால் முழு உண்மையும் தெரிய வந்தால் தன்னை வீட்டுக்குள் கூட அனுமதிக்கமாட்டாள் போல.
உறவுக்குரிய மரியாதையைக் கொடுக்காவிட்டால் முறித்துவிடுவேன் என்ற எச்சரிக்கை அவனைப் பயமுறுத்தவில்லை. அவன் சட்டத்துறையில் மூழ்கி முத்தெடுத்தவன். உறவை முறிப்பதற்கான காரணங்களில் ஒன்று கூட வானதியிடம் இல்லை என்றால் பரஸ்பர பிரிவு ஒன்றே வழியென அவன் அறிவான். அந்தப் பரஸ்பர பிரிவுக்கு அவன் சம்மதிக்க வேண்டுமே!
அதோடு அவனது விரோதம் ஜெயசந்திரன் மீது. அவரை நெருங்கவும் அவரது நம்பிக்கையைச் சம்பாதிக்கவும் வானதி அவனுக்கு ஒரு கருவி. கூடவே அவள் மீது அவனுக்கும் ஈர்ப்பு உண்டு. அவ்வப்போது அவனை மீறி பெற்றோரை இழந்த கணம் நினைவுக்கு வந்தால் அவளைக் காயப்படுத்துவது ஆதங்கத்தின் விளைவேயொழிய அது பழிவாங்கும் எண்ணத்தால் வரவில்லை.
அனைத்தையும் ஒதுக்கிவைத்தால் அருள்மொழி என்பவன் சுந்தரமூர்த்தியின் மைந்தன். அவனது தந்தை தாயாரை மரியாதையாய் வாழ வைத்த விதத்தை உடனிருந்து பார்த்தே வளர்ந்தவன். அவனால் மனைவியை அவமானப்படுத்த முடியாது என்பதே வெளிப்படையான உண்மை.
“கல்யாணம் பண்ணிட்டல்ல, அப்ப நீ வாழ்ந்துதான் ஆகணும்” என்ற தொனியில் எச்சரித்தவளை எண்ணி இப்போது சிரிப்பு முகிழ்த்தது அவனிடம்.
அன்றைய இரவில் அவன் அறைக்கு வந்தபோது நீதிமன்ற நோட்டீஸுடன் அமர்ந்திருந்தாள் வானதி. கண்களில் தீப்பற்றி எரியாத குறை.
“ஓஹ்! கோர்ட் நோட்டீஸ் வந்துடுச்சா? அனேகமா இதுதான் ஃபைனல் ஹியரிங்கா இருக்கும். இதுலயே தீர்ப்பு வந்துடும். சிறப்பு புலனாய்வு குழு ரிப்போர்ட் வர்ற நாள்ல உனக்குக் கோர்ட்ல ஆஜராக நோட்டீஸ் வந்திருக்குனா பெருசா ஏதோ ஆதாரம் வச்சிருப்ப போலயே” கிண்டலாய் சொல்லிவிட்டுச் சட்டையின் மேல்பட்டனைக் கழற்றினான் அருள்மொழி.

“இது ஃபைனல் ஹியரிங்னு நீ எப்பிடி தீர்மானிப்ப? நீ அட்வகேட் தான், ஜட்ஜ் இல்ல” என்றாள் வானதி எரிச்சலோடு.
அருள்மொழி டீசர்ட்டுக்கு மாறியபடியே, “உனக்கு மன்னிப்பு கேக்க தெரியுமா? நான் வேணும்னா உனக்கு ஸ்க்ரிப்ட் எழுதி தரட்டுமா? ஏன்னா தீர்ப்பு வந்ததும் நீ டிவி சேனல்ல பொதுமன்னிப்பு கேக்க வேண்டியதா இருக்கும்” என்று வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றினான்.
வானதி சோஃபாவிலிருந்து எழுந்து வெளியே போக எத்தனிக்க, அவளது கையைப் பற்றித் தடுத்து நிறுத்தினான் அருள்மொழி. “என்கிட்ட பேச பாயிண்ட் இல்லனா நைஸா இடத்தைக் காலி பண்ணுறல்ல. பொழைச்சுப் போ. காலையில நீ என்னமோ வார்ன் பண்ணுனியே, என்ன அது?”
“அதுக்குள்ள மறந்து போச்சா? அதுசரி! நீ மறதி மன்னன் ஆச்சே” குத்தலாய் சொல்லிவிட்டு விலக எத்தனித்தாள் வானதி.

அருள்மொழி அவளது கையை விடுத்து இடையோடு இழுத்து அணைத்துக் கொண்டவன், “நீ சொன்னதோட மீனிங் ரொம்ப சீரியஸானது. நான் அதை சீரியஸா தான் பாக்குறேன். கல்யாணம் பண்ணிட்ட, அப்ப நீ என்கூட வாழ்ந்துதான் ஆகணும்னு சொன்ன. ஆம் ஐ ரைட்?” என வினவினான்.
“ஆமா! இந்தச் சத்தம் போடுறது, சபதம் போடுறது, ஹர்ட் பண்ணுறது எல்லாம் இனிமே என்கிட்ட வேலைக்கு ஆகாது” என்றாள் அவள் கறாராக.
“சீரியஸ்லி? சரி! நான் உன் வார்னிங்கை சீரியஸா ஏத்துக்குறேன். எப்பிடி பாத்தாலும் எனக்கும் உன் மேல கொஞ்சம் அட்ராக்சன் இருக்கு” என்று அசுவாரசியமாகச் சொன்னவனின் பேச்சில் அவள் வாயைப் பிளக்காத குறை.
அருள்மொழி பொய் சொல்லுகிறான் என்றே எண்ணிவிட்டாள் வானதி. இதுவும் தன்னை எரிச்சலூட்ட அவன் கையாளும் வழிகளில் ஒன்று என்றே தோன்றியது அவளுக்கு.
“சாரி! நீ சொல்லுற இந்தப் பொய்யையும் நான் கவுண்ட் பண்ண மறந்துட்டேன்” என்றாள் அலட்சியமாக.
அருள்மொழி அவளைப் புருவச்சுருக்கத்தோடு பார்த்தவன் சத்தமாக நகைத்தபடி விடுவித்தான்.
“என் பொய்யை மட்டுமே கேட்டுப் பழகுன உன் மனசு இப்ப நான் உண்மையச் சொன்னாலும் சந்தேகப்படுது. நிஜமா எனக்கு உன் மேல இன்ட்ரெஸ்ட் இருக்கு வானதி.”
“இன்ட்ரெஸ்ட் இருக்கப்போய்தான் என் லெட்டர் ஒன்னைக் கூட படிக்காம தீயில போட்டியோ?”
“அப்ப இல்ல. ஏர்போர்ட்ல உன்னை பன்னிரண்டு வருஷத்துக்கு அப்புறம் பாத்தேன்ல, அந்த நிமிஷத்துல இருந்து எனக்கு உன் மேல ஒரு அட்ராக்ஷன். இத்தனை நாள்ல உன்கிட்ட நான் அதை நிறைய தடவை வெளிப்படையா காட்டிருக்கேன். நீ தத்தி மாதிரி புரிஞ்சிக்கலனா நான் என்ன செய்யுறது?”
“நான் தத்தியா? டேய்! என்னைக் கொலைகாரினு லேபிள் பண்ணிட்டு வாய்கூசாம அட்ராக்ஷன்னு இப்ப உருட்டுற. மூணு வேளையும் சாப்பாட்டுக்குப் பதிலா பொய்யையும் புரட்டையும் சாப்பிடுவியோ?” சிடுசிடுத்தாள் வானதி.
வேண்டுமென்றே தன்னை முட்டாள் ஆக்கவும் எரிச்சல்படுத்தவும் பேசுகிறான் என்று உறுதியே செய்துவிட்டாள் அவள்.
“ஓஹ்! நீ அப்பிடி வர்றியா?” என்றவன் மீண்டும் அவளது கழுத்தை வளைக்கப் போக, அவனது கையில் நச்சென அடித்துத் தட்டி விட்டாள் வானதி.
“எதுவா இருந்தாலும் எதிர்ல நின்னு பேசு. நீதானே இதையும் சொன்ன?”
“ஒரு வரி கூட மறக்கல?”
“ஒரு ‘க்’ ‘ங்’ கூட மறக்கல. மறக்குற மாதிரியான வார்த்தையை நீ பேசல.”
“அது கோபம். வேற டிபார்ட்மெண்ட்.”
“என்னை ட்ரம்ப் கார்டுனு சொன்னியே? அதுவுமா?”
“நிஜமா நீ ட்ரம்ப் கார்டுதான். இந்த ஃபேமிலிக்குள்ள நான் ஒரு மெம்பர் ஆகுறதுக்கு உதவுன டிரம்ப் கார்டு. ஆனா உன்னைக் கல்யாணம் பண்ணணும்ங்கிற எண்ணம் எனக்குத் திடீர்னு வந்ததுதான். அதுக்குக் காரணம் உன் மேல வந்த அட்ராக்ஷன். சோ உன்னைக் கல்யாணம் பண்ணுனது இந்த ரெண்டு காரணங்களுக்காகத்தான். அந்த அட்ராக்ஷனை லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு கூட சொல்லலாம்.”
சிரிக்காமல் அவன் சொன்ன விதத்தில் வானதி மெய்யாகவே மருண்டு போய்விட்டாள். பின்னர் அவளது முகம் அஷ்டகோணலானது.
“லவ்வா? சீ! தள்ளிப் போ” அவனைத் தள்ளிவிட்டவள், அருள்மொழி சிரிப்போடு தூரம் போய் நின்றதும் மீண்டுமொரு எச்சரிக்கையை விடுத்தாள்.
“உன் பொய்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது. ஒரு நாள் இதுக்கெல்லாம் சேர்த்து நான் பதிலடி குடுப்பேன்.” அருள்மொழி அசிரத்தையாக உச்சு கொட்டினான்.
“நீதான் கல்யாணம் ஆயாச்சு, இனிமே நாம வாழ்ந்துதான் ஆகணும்னு காலைல சொன்ன. காதலே இல்லாம எப்பிடி வாழமுடியும்டி?”
“அந்தக் காதல் கூட உன்னோட ஹிடன் மோட்டிவோட ஒரு பாகமா இருக்குமோனு சந்தேகம் வருது. உன் திருவாய்ல இருந்து காதல் கண்றாவிங்கிற வார்த்தை இனிமே வராத மாதிரி பாத்துக்க. எனக்கு அன்-ஈஸியா இருக்கு. சைக்!” என்றவள் அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

