வேதவதி திரும்பாததால் அட்சரனிடம் அதே வேலையைச் சொல்லியனுப்பிய கயல்விழி மகளருகே வந்து அமர்ந்தார்.
“கையைக் காட்டு” என ஆசையாக வாங்கிப் பார்த்தார்.
“நீ மெஹந்தி வச்சுக்கலையாம்மா?”
“எனக்கும் ரமா மதினிக்கும் நிறைய வேலை இருக்கு வானும்மா. இதெல்லாம் சின்னப் பசங்க நீங்க என்ஜாய் பண்ணனும். எனக்கு எதுக்கு?”
“அப்பிடி என்ன வேலை? அண்ணா தான் எல்லா வேலையையும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி கிட்ட குடுத்துட்டானே?”
“அதுக்குனு அப்பிடியே விட்டுடமுடியுமா? ராஜா குடும்பத்துக் கல்யாணமா இருந்தாலும் சொந்தபந்தம் ஆயிரம் குறை கண்டுபிடிக்கும். நாம அப்பப்ப சாப்பிட்டீங்களா, இங்க சௌகரியமா இருக்கானு விசாரிக்கலனா அது குறையா தெரியும்.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அன்னையும் மகளும் பேசிக்கொண்டிருக்க, அங்கே வந்த ரமா கயல்விழியைக்கையோடு அழைத்துச் சென்றுவிட்டார்.
சங்கீத்தின் இசையும் மெஹந்தியின் நறுமணமும் அடங்கிய பிறகு இரவு விருந்தும் அதைத் தொடர்ந்த ஓய்வும் ஜெயவிலாசத்தின் விருந்தினர்களை ஆட்கொண்டது. வானதி லெஹங்காவிலிருந்து புடவைக்கு மாறியிருந்தாள். கல்யாணப்பெண் புடவையில் இருக்கவேண்டுமென ரமாவின் கட்டளை.
இலக்கியா இரவுடைக்கு மாறி கூந்தலைக் கொண்டையிட்ட தருணத்தில் அறைக்கதவு தட்டப்பட்டது. திறந்தால் ரமா நின்றுகொண்டிருந்தார்.
“அருள் எங்க? நான் நாலு தடவை கால் பண்ணிட்டேன். ஆளையே காணுமே” பரிதவிப்பு அவரது குரலில்.
“நான் கால் பண்ணி பாக்குறேன்.”
அவரை அமைதியாக்கிவிட்டு அருள்மொழியின் மொபைல் எண்ணுக்கு அழைத்தாள் வானதி. பேச்சிலர் பார்ட்டி என்றானே! இந்நேரத்தில் அது முடிந்திருக்க வேண்டும். இந்த அம்மாவிடம் பேச்சிலர் பார்ட்டியைப் பற்றிக் கூறவும் முடியாது.
“என்ன போன் போகலையா? அவன் எங்க இருக்குறான்னு கூட உனக்குத் தெரியாதா?” சிடுசிடுத்தவரை ஆதங்கத்தோடு பார்த்தாள் வானதி.
அருள்மொழியின் பெரியம்மாவாகப் போய்விட்டார். அதனால் அமைதி காக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.
“நான் கால் பண்ணி பாக்குறேன் ஆன்ட்டி.”
“ஆன்ட்டியா? இங்க பாரு! உனக்கு மாமியார் இல்லங்கிறதுக்காக இஷ்டத்துக்கு இருக்கலாம்னு நினைக்காத. அத்தைனு கூப்பிட்டுப் பழகு.”
“சரிங்க அத்தை.”
கடுப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவள் சொல்ல, ரமா தலையிலடித்தபடி அவளது அறையிலிருந்து கிளம்பினார்.
“ஆன்ட்டியாம் ஆன்ட்டி! இவங்கப்பா தமிழ்நாட்டுக்குத்தானே சி.எம். தமிழே வராதவளாட்டம் பேசுறா. எல்லாம் அருளைச் சொல்லணும். ஊர்ல இல்லாத அழகினு இவளைப் போய் கல்யாணம் பண்ணிக்க நினைக்குறானே.”
புலம்பிக்கொண்டே போனவரின் குரல் அவள் காதில் தெளிவாக விழுந்தது.
இவ்வளவு நேரம் வானதி வெடித்துத் தீர்த்துவிடாமல் அவளது கையைப் பற்றிக்கொண்டிருந்த இலக்கியா, “என்னடி இந்தம்மா இப்பிடி கடுவன்பூனை மாதிரி இருக்கு?” என்று சொல்ல,
“க்கும்! உன் நண்பர் மட்டும் அப்பிடியே புன்னகை மன்னன் பாரு! இதே ஜீன் தான் அங்கயும்” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள் வானதி.
“இந்தத் தடியனுங்க மூணு பேரும் பேச்சிலர் பார்ட்டினு தானே சொன்னானுங்க. அட்லீஸ்ட் போன் கால் அட்டெண்ட் பண்ணிருந்தா இந்த அம்மா இங்க வந்து டான்ஸ் ஆடிட்டுப் போகுமா?” என்றவள் பேச்சிலர் பார்ட்டி கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த தளத்திற்கு விரைந்தாள். துணைக்கு இலக்கியாவும்.
இருவரும் அந்தப் பெரிய அறையை அடைந்தபோது அத்துணை நிசப்தம் அறைக்குள். நண்பர்கள் மூவரும் மூலைக்கொன்றாய் விழுந்து கிடந்தார்கள். வானதி கடுஞ்சினத்துடன் அவர்களைத் தோழியரிடம் காட்டினாள்.
“பெரிய கல்லு ஒன்னை எடுத்து அப்பிடியே மூணு பேர் தலையிலயும் போடணும் போல இருக்கு. இதுதான் லிமிட்டா? சைக்.”
விறுவிறுவெனப் போனவள் முதலில் போய் உசுப்பியது அட்சரனை.
“அச்சு! டேய் அச்சு! முழிச்சுப் பாரு எருமை” கன்னத்தில் பட்பட்டென அடித்தும் உணர்வின்றி அவன் ஆழ்ந்த மயக்கத்தில் அல்லவா கிடந்தான். அவனைத் தரையிலேயே படுக்க வைத்துவிட்டு அருள்மொழியிடம் வந்தாள். அதற்குள் இலக்கியா சஞ்சயை எழுப்ப முயன்று தோற்றாள்.
“இவனுங்க ரெண்டு பேரும் இங்கயே கிடக்கட்டும். அருளை மட்டும் அவன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் படுக்க வச்சிடலாம்” என்றாள் அவள். வானதி தாமதிக்காமல் ஆதித்யனின் எண்ணுக்கு அழைத்தாள்.
“அண்ணா! நீ உடனே செகண்ட் புளோருக்கு வாயேன். என்னனு கேக்காம வந்துடு ப்ளீஸ்.”
ஆதித்யனும் அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கே ஆஜரானான். அவனிடமும் கொஞ்சம் தள்ளாட்டம் தெரிந்தது. அதை அறிந்ததும் வானதிக்கு வந்ததே கோபம்.
“நீயுமா? நீ என்ன பேச்சிலரா? குடும்பஸ்தன் தானே? எதுக்குக் குடிச்ச?” என்று அவனிடம் சீற,
“பேச்சிலர் பார்ட்டினா பேச்சிலர் கலந்துக்குற பார்ட்டி இல்ல. பேச்சிலர் குடுக்குற பார்ட்டி” என வியாக்கியானம் பேசினான் ஆதித்யன்.
“இதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைப்போமா?”
“சூப்பர் ஐடியா.”
“அடப்போடா.”
அண்ணனையும் திட்டியவள், அவனிடம் அருள்மொழியை அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கொண்டு போய் விடுமாறு கேட்டுக்கொண்டாள். ஆதித்யனும் அவனது அறையில் அருள்மொழியைப் படுக்க வைத்தவன், “கதவை லாக் பண்ணிட்டுப் போ நதி. குட் நைட்” என்று விடைபெற, வானதி தலையிலடித்துக்கொண்டு அருள்மொழியின் காலணிகளைக் கழற்றினாள்.
கண் மூடிக் கிடந்தவன் அவளது கரம் பட்டதும் சட்டென அரைகுறை தெளிவோடு எழுந்து அமர்ந்தான். அவன் திடுமென எழுந்ததும் வானதிக்கே அதிர்ச்சி தான். தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தவனை முறைத்து வைத்தாள்.
“என்னடா லுக்கு? அறிவில்ல? லண்டன்ல பாரீஸ்டர்னு பெருமை பீத்துனா மட்டும் பத்தாது. பிஹேவியர்ல அது தெரியணும். மொடாக்குடியன் மாதிரி குடிச்சிருக்க.”
அருள்மொழி பதில் சொல்லாமல் சிரிக்கவும் ஆச்சரியம். ‘குடிபோதையிலாவது சிரிக்கிறானே’ என்று எண்ணிக்கொண்டாள்.
“சரி தூங்கு! காலையில கண் முழிச்சதும் லெமன் ஜூஸ் குடி. இல்லனா ஹேங் ஓவர்ல என் கழுத்துக்குப் பதிலா ஐயர் கழுத்துல தாலி கட்டிடப்போற.”
வேண்டுமென்றே அவனைக் கிண்டல் செய்துவிட்டு அவள் கிளம்ப எத்தனிக்க, அடுத்த நொடி அவளது கரம் அவனது வசம். சட்டென அமரவும் வைத்தான் மெத்தையில்.
“ஏய்!” மிரட்டியவளை உதட்டில் கை வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினான் அவன்.

“இங்க பாரு! எனக்குக் கண்ணு தெரியலனா கூட உன் கழுத்துல சரியா தாலி கட்டுவேன். டோன்ட் வொரி” என்று சொல்லிவிட்டு அவளது மோவாயைக் கொஞ்சுவது போலப் பிடித்தவனின் இதழ்களில் மந்தகாசப் புன்னகை!
வானதியின் இவ்வளவு நேர கோபமும் கடுப்பும் கற்பூரமாய் மறைந்தது அந்நொடியில்.
“நீ மல்லிப்பூ வச்சிருக்கியா? உனக்குப் பூ வச்சா தலை வலிக்கும்ல?”
சிறுவயது ஞாபகத்தில் அருள்மொழி வினவியதும் வானதியும் சிரித்துவிட்டாள்.
“அது சின்ன வயசுல. இப்ப எல்லாம் தலையில பூந்தோட்டத்தையே வச்சாலும் எனக்கு வலிக்குறதில்ல.”
அவன் புன்சிரிப்போடு அவளைப் பார்த்தான். கண்கள் இமைக்காமல் அவள் முகத்தின் மீதே நிலைத்தப் பார்வை அது.
“நீ ரொம்ப அழகா இருக்க வானதி.”
“ஹூம்! சின்ன வயசுலயும் இப்பிடி சொல்லித்தான் என்னைக் கிண்டல் பண்ணுவ. போடா” அவனது தோளில் கை வைத்துத் தள்ளப் பார்த்தாள் வானதி.
அருள்மொழி மறுப்பாய்த் தலையசைத்தவன், “அதூஊஊ வேற. கியூட்டான அழகு. இந்த அழகு வேற” என்றவன், கண்கள் சொருக மீண்டும் படுக்கையில் விழுந்தான்.
பெருமூச்சுவிட்டபடி எழுந்தவளின் முகத்தில் மெய்யான மணப்பெண் களை அப்போதுதான் உதயமானது. ஆனால் அடுத்த நொடியே மல்லிகைப்பூவைப் பற்றி அவன் குறிப்பிட்டது அவளுக்குப் பொறி தட்டவே, படுத்திருந்தவனை எழுப்பி உலுக்கினாள்.
“அருள்! எனக்கு மல்லிப்பூ வச்சா தலை வலிக்கும்னு உனக்கு எப்பிடி தெரியும்? என்னைப் பாருடா.” கன்னத்தில் தட்டி அவள் கேட்கவும்,

“எனக்குத் தெரியாம இருக்குமாஆஆ? உனக்கு மல்லிப்பூ பிடிக்காது… சீ ஃபுட் பிடிக்காது… காலிஃபிளவரைப் பாத்தாலே ஆகாது. சின்ன வயசுல உனக்கு டான்சில் பிராப்ளம் இருந்ததால ஜூஸ்ல கூட ஐஸ் போடாம தான் குடிப்ப. எனக்கு எல்லாமே தெரியும் வானதி.” பெருமையாய்ப் பட்டியலிட்டான் போதையில்.
“எப்பிடி? எப்பிடி தெரியும்?” பரபரப்புடன் அவனது சட்டை காலரைப் பிடித்து வினவினாள் வானதி.
அருள்மொழி போதை தெறிக்கும் விழிகளோடு அவளை நோக்கினான்.
“எனக்குத் தெரியாம வேற யாருக்குத் தெரியும்? அத்தை உன்னை… குழந்தையா ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்குக் கொண்டு வந்தாங்கல்ல, அப்ப உன் உள்ளங்கால்ல திருஷ்டி பொட்டு வச்சு விட்டது யாரு? நான் தான். உன் சம்பந்தப்பட்ட எதுவும் எனக்கு மறக்காது வானதி.”
அவன் பெருமைப்பட, வானதியின் கண்களில் இருந்த அலைக்கழிப்பு அடங்கி அங்கே அமைதியும் நிறைவும் குடிகொண்டது. அடுத்த நொடியே இத்தனை வருடங்கள் அவள் அடைந்த மனவுளைச்சல் எல்லாம் சேர்ந்து அழுத்தியதில் விம்மி அழ ஆரம்பித்தாள்.
“என்ன்னாஆச்சு வானதி? ஏன் அழற?” அவளது கன்னத்தைப் பற்றியவனிடம்,
“நீ என்னை மறக்கலையா அப்ப?” என்று அழுகையினூடே வினவினாள் வானதி.
“இல்ல. எப்பவும் என்னால உன்னை மறக்க முடியாது… நான்… நான் உன்னை ஹர்ட் பண்ணிருக்கே…ன்ல… அதுக்கு சாரி.” குழறிய வார்த்தைகளுடன் மீண்டும் படுக்கையில் சரிந்தான் அருள்மொழி.
வானதி அவனை நேராகப் படுக்க வைத்தவள், அறைக்கதவை மூடிவிட்டுத் தனது அறைக்குள் வந்து சேர்ந்தாள். அவளது அழுகையைப் பார்த்து விசாரிக்க வந்த இலக்கியாவிடம் எதுவும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்துகொண்டவள், உகுத்த கண்ணீரில் வானதிக்குள் இருந்த ஆதங்கம் எல்லாம் கழிவதாய்!
குளியலறை கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், “அருள் என்னை மறக்கல. அவனால என்னை மறக்கவே முடியாது” என்று அழுகையும் சிரிப்புமாகச் சொல்லிக்கொண்டாள்.

மறுநாள் காலையில் முகூர்த்தம்! அழுதுகொண்டே இருந்தால் முகமும் கண்களும் வீங்கிவிடுமென்பதால் முகத்தைக் கழுவிக்கொண்டாள் வானதி.
கழுவிய முகத்தைத் துடைத்துக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், “பன்னிரண்டு வருஷம் என்னை ஞாபகமில்லனு ஒதுக்கி வச்சல்ல! நாளைக்குத் தாலி மட்டும் ஏறட்டும். இனிமே நீ என்னை என்ன சொல்லி விலக்குறனு நானும் பாக்குறேன்” என்று சூளுரைத்துக் கொண்டாள்.
ஒரு நபரின் ஞாபகங்கள்தான் நமது வாழ்க்கையில் அந்நபரின் பிரசன்னம். அவையே அழிவது எத்துணை பெரிய துரதிர்ஷ்டம்? இத்தனை நாட்கள் தன்னைத் துரதிர்ஷ்டசாலியாய் எண்ணிக் கலங்கியவளுக்கு இன்று அந்தத் தண்டனையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைத்துவிட்டது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

