நீ லண்டன் கிளம்புனதும் எனக்கு நிஜமாவே ‘Major FOMO’ (Fear of Missing Out) வந்துடுச்சு. நீ இல்லாம ஸ்கூல் கிரவுண்ட் அப்படியே வெறிச்சோடிப் போச்சு. சஞ்சய் இப்ப அந்த ‘டிராகூன்‘ பேப்லேட் மேட்ச்ல தோத்துட்டே இருக்கான். உன்னை ரொம்ப மிஸ் பண்றோம்! நீதான் நம்ம கேங்கோட தி ஓஜி லீடர்”
-வானதியின் கடிதம்…
சற்று முன்னர் அட்சரனுக்கும் ஜெயசந்திரனுக்கும் நடந்த வாக்குவாதத்தை அவன் விளக்க, அதைக் கேட்டபடி கீழ்த்தளத்திற்கு அவனோடு வந்தான் அருள்மொழி.
தேர்தலுக்கு முன்னர் தனது சுயசரிதையைப் புத்தகமாகப் போடுவதற்கு அவனை அணுகியிருக்கிறார் அந்த மனிதர். அருள்மொழிக்கு அவர் மீதிருக்கும் கசப்புணர்வை அறிந்தவன் என்பதால் அட்சரன் மறுத்திருக்கிறான். அருள்மொழிக்குமே அவன் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான். சரியாக வராதென ஒரேயடியாக மறுத்துவிட்டான் அவன்.
கீழ்த்தளத்தில் பாதுகாப்புக்கு வந்தவர்களைப் பார்த்தபடி வராண்டாவில் அமர்ந்திருந்தார்கள் இருவரும். அட்சரன் சிகரெட் புகையை இழுக்க, அருள்மொழிக்கோ சில மணி நேரங்களுக்கு முன்னர் வேதவதிக்கும் அட்சரனுக்குமான தருணம் நினைவுக்கு வந்தது.

“நான் இன்னைக்கு ஒரு விஷயத்தைக் கவனிச்சேன் அச்சு.” நண்பன் பீடிகை போடவும், என்னவென்பது போலப் புருவங்களை உயர்த்தினான். “அந்தப் பொண்ணு வேதாவைப் பாத்ததும் நீ ஸ்தம்பிச்சு நின்னியே. அதைத்தான் சொல்லுறேன்.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ப்ச்! அருள்…” என்றவன் இன்னொரு பஃப் இழுக்கப் போக, அதற்குள் சிகரெட்டை வாங்கித் தூர எறிந்தான் அருள்மொழி.
அட்சரன் புருவங்களை உயர்த்தவும், “ஒரு பஃப் ஓவர். இதுக்கு மேல நோ ஸ்மோக்கிங்” என்றான் அவன் கண்டிப்பான குரலில்.
“அராஜகத்துக்கு இன்னொரு பேரு இருந்துச்சுனா அது அருள்மொழினுதான் இருக்கும்”
சிகரெட் பறிபோன புகைச்சலோடு சொன்னான் அட்சரன்.
“எப்பிடி? இரத்தக் கொதிப்புக்கு இன்னொரு பேரு அட்சரன்னு இருக்குதே, அதை மாதிரியா?” என்று அவனது காலை வாரினான் அருள்மொழி.
அருள்மொழியின் இலகுவானப் பேச்சில் அவன் மனநிலையை அறிந்துகொண்ட அட்சரன், மெதுவாக வானதியைப் பற்றிய பேச்சை எடுத்தான்.
“இன்னைல இருந்து மூனாவது நாள் நீயும் வானதியும் இந்நேரம் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப் ஆகிருப்பிங்க அருள்.”
“ஏன்டா அந்த ஆக்சிடெண்டை இப்பவே ஞாபகப்படுத்துற?”
“ஆக்சிடெண்ட்னு சொல்லுறவன் ஏன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்ச?”
மர்மப் புன்னகை பூத்தானேயொழிய, வாய் திறந்து காரணத்தைச் சொல்லாமல் அடம்பிடித்தான் விடாக்கண்டனான அருள்மொழி.
“என்கிட்ட சொன்னா என்ன குறைஞ்சிடும்?”
“நீ நேரா வானதிகிட்ட சொல்லுவ. அவ கல்யாணத்தை நிறுத்திடுவா.”
அட்சரன் குழம்பியதே இந்த இடத்தில்தான். ‘இவனுக்கு வானதியை மணமுடிக்க விருப்பமில்லை. அதே நேரம் இந்தக் கல்யாணமும் நடக்க வேண்டுமென்ற பிடிவாதம். என்னதான் ஓடுகிறது அருள்மொழியின் மூளைக்குள்?’
“ரொம்ப யோசிக்காத. நடக்கப்போற எல்லாத்துக்கும் நீ சாட்சியா இருப்ப. அதுவும் என் பக்கத்துல இருப்ப. அதனால இப்பவே வானதிங்கிறவ நமக்கு எதிர்ல நிக்குறானு யோசிக்கப் பழகு.”
அட்சரன் சலித்துக்கொண்டான். சிறுவயதில் லண்டன் செல்லும் முன்னர் நடந்த நிகழ்வொன்று அவனது நினைவுக்கு வந்தது. அப்போது அருள்மொழிக்குத் தலையில் காயத்திற்குக் கட்டு போட்டிருந்தார்கள். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறுவனுக்குக் கட்டைப் பிரிக்கவில்லை. நல்ல ஓய்விலிருக்க வேண்டுமென மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
முகிலகத்தின் மாடியறையில் அவன் தனிமையில் இருப்பான். அவனுக்கு யாரையும் அப்போது நினைவில்லை. அருள்மொழிக்கு நினைவு திரும்பவேண்டுமென்றால் அவனுடன் சம்பந்தப்பட்டவர்களை அவன் அடிக்கடி பார்த்துப் பேசிப் பழகவேண்டுமென மூளை நரம்பியல் நிபுணர் அறிவுறுத்தியிருந்தார்.
அதனாலேயே சஞ்சயும் அட்சரனும் இலக்கியாவை அழைத்துக்கொண்டு அடிக்கடி முகிலகத்திற்கு வருவார்கள். அது அவர்களுக்குக் கோடை விடுமுறை காலம் வேறு! எனவே சென்னையில்தான் இருந்தார்கள் மூவரும். அவர்களோடு சில நேரம் அவன் பேசுவான். சில நேரம் மௌனமாக அமர்ந்திருப்பான். ஒருவழியாக அவனுக்கு மூன்று நண்பர்களின் நினைவும் வந்துவிட்டது.
“இது ரொம்ப நல்ல முன்னேற்றம். மத்தவங்களும் அடிக்கடி அருள் கூட கம்யூனிகேட் பண்ணுங்க. சீக்கிரம் அவனுக்கு எல்லாரைப் பத்திய ஞாபகங்கள் வந்துடும்” என்று மருத்துவர் சொல்லியிருந்ததால், வானதிக்கு அவனோடு பேசிப் பார்க்கும் எண்ணம்.
அவளைப் பார்த்தபோதெல்லாம் அவன் கோபப்பட்டதால் ஒதுங்கியிருந்தாள். மருத்துவர் சொன்னதால் ஒரு நப்பாசையோடு அவனது அறைக்குள் எட்டிப் பார்த்தவள், அவன் சுவரை வெறித்தபடி அமர்ந்திருக்கவும் உள்ளே நுழைந்தாள். அட்சரன் வெளியே நிற்பதாகச் சொல்லிவிட்டான்.
அருள்மொழிக்குத் தலையில் காயம் என்பதால் காயம் ஆறும் வரை முடி வளரக்கூடாதென மழித்து வைத்திருந்தார்கள். ஒடுங்கிச் சோகமாய் அமர்ந்திருந்தவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது இருவருக்கும்.
“அருள் உனக்குத் தலை வலிக்குதா?” என்றபடி முழுத் தலையையும் சுற்றிப் போடப்பட்ட பேண்டேஜில் கை வைக்க வந்த வானதியைக் கோபத்தோடு பிடித்துத் தள்ளினான் பதினைந்து வயதுச் சிறுவனான அருள்மொழி.
அவன் தள்ளிய வேகத்தில் தரையில் போய் விழுந்த பன்னிரண்டு வயது வானதிக்கு அவனது கோபமும் புறக்கணிப்பும் கொடுத்த வலியை விட, அதிக வலியில்லை விழுந்தபோது உண்டான வேதனை.
அழுதபடியே எழுந்தவளை வெறுப்போடு பார்த்தவன், “ஏய் அடிக்கடி ஏன் இந்த ரூமுக்கு வர்ற? என் முன்னாடி நிக்காத. வெளிய போ” என்று கத்தினான் பெருங்குரலெடுத்து.
அவனது சத்தத்தில் வேகமாக அறைக்குள் வந்த பதினைந்து வயது அட்சரன், அழுதுகொண்டிருந்த வானதியையும் கோபத்தில் கொந்தளித்த அருள்மொழியையும் வருத்தத்தோடு பார்த்தான்.
“அருள்! கத்தாதடா.”
“அச்சு இவளை வெளிய போகச் சொல்லு. இவளைப் பாத்தாலே எனக்குக் கோவம் வருது. இவ யாருடா?” என்றபடி அவளைத் தாக்குவதற்கு மேஜை மீதிருந்த அலங்கார யானை பொம்மையை எடுத்தவனைத் தடுத்தான் அட்சரன்.

“நான் கூட்டிட்டுப் போறேன் அவளை. நீ ரெஸ்ட் எடு” என்று அவனைத் தடுத்தபடி யானைப் பொம்மையைப் பிடுங்க முயன்றான். வானதி அப்போது சிறுபெண். அவளால் என்ன செய்துவிட முடியும்? அழுதபடியே நின்றாள் இக்காட்சியைப் பார்த்தபடி.
அந்தச் சம்பவம் அட்சரனின் கண்ணுக்குள்ளே நிற்கிறது இப்போது வரை. அதன் பின்னர் அருள்மொழிக்கு யார் யார் என்னென்ன உறவுமுறை என மருத்துவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போதும் ஜெயசந்திரனையும் வானதியையும் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை.
சில மாதங்கள் ஆகியும் அருள்மொழிக்குத் தனது பெற்றோர் மற்றும் நட்புகளைத் தாண்டி யாரையும் ஞாபகம் வராமல் போய்விட, ஜெயசந்திரனும் நன்கு யோசித்து அவனைத் தர்மலிங்கத்தோடு லண்டனுக்கு அனுப்பிவைத்துவிட்டார்.
“ஒன்னு மட்டும் கேட்டுக்கோங்க. அந்த ஜெயசந்திரனையும் வானதியையும் எப்பவுமே இனி எனக்குப் பிடிக்காது. ஏன்னு தெரியல. அவங்களைப் பிடிக்கல” என்று சொல்லிவிட்டுத்தான் அவன் விமானம் ஏறினான்.
அப்போதிருந்தே அட்சரனுக்கும் ஜெயசந்திரனைப் பிடிக்காது. ஆனால் வானதி அவனது தோழியாயிற்றே! அவளை அவனால் வெறுக்க முடியவில்லை. அருள்மொழியின் இப்போதைய மனநிலை அட்சரனுக்கு ஒரு பயத்தைக் கொடுத்தது. இதே மனநிலையில் திருமணம் செய்தால் அது இவனுக்கும் நல்லதில்லை; வானதிக்கும் அது கெடுதலே!
“எப்பவுமே நதி உனக்கு எதிர்ல நிக்கமாட்டா. இனி வாழ்க்கை முழுக்க அவ உன் கூடவே உன் கையைப் பிடிச்சிட்டு நிப்பா” என்றான் நிகழ்காலத்திற்குத் திரும்பிய அட்சரன்.
அருள்மொழியிடமிருந்து பெருமூச்சே வந்தது. அவனுக்கு வானதியைப் பற்றிய பேச்சில் நேரம் கழிவதில் விருப்பமில்லை. வேதவதியை மின்னஞ்சல் அனுப்புமாறு அட்சரன் வலியுறுத்தியதைக் குறிப்பிட்டு உரையாடலின் திசையை மாற்றினான். அதில் போன ஜாலி மூட் திரும்ப வந்தது. பின்னர் அதிக நேரமாகிவிட்டதால் உறங்கக் கிளம்பினான்.
அறைக்கு வந்தவன் மடிக்கணினியை ஆன் செய்துவிட்டுப் படுக்கையில் அமர்ந்தான். முக்கியமான ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வாசித்தவனின் புருவங்கள் சுழித்துக்கொண்டன.
“நாளைக்கு நான் அந்த லொகேஷனுக்குத்தான் போகப்போறேன். ஐ வில் ஷேர் த எக்சாட் லொகேஷன். உங்க வேலை ஈஸியாகிடும்.”

மின்னஞ்சலை அனுப்பியபோது அவனது இரு கரங்களும் முஷ்டியாய் இறுகியிருந்தன.
பின்னர் படுத்தவனுக்கு வானதியோடு இலகுவாய்க் கழிந்த உரையாடல்களில் தன் மனம் தனது நோக்கத்தை விட்டுத் திசை மாறுகிறதோ என்ற கவலை பிறந்தது. திருமணம் என்ற பெயரில் அவளைப் பயன்படுத்திக் கொள்வதும் சரியல்ல என்பது அவனுக்குள் ஒளிந்திருக்கும் மனசாட்சியின் முணுமுணுப்பு.
“எல்லாத்துக்கும் ஆரம்பப்புள்ளி அவ தான். அவளை எப்பிடி விடமுடியும்? நான் தப்பு பண்ணல” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் அருள்மொழி.
மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்திருந்த உறவுக்காரர்களோடு திருமலைக் கோயிலுக்குக் கிளம்பினார்கள் கயல்விழியும் ரமாவும்.
“கல்யாணம் நல்லபடியா நடந்தா படியேறி வந்து முருகனைக் கும்பிடுறேன்னு வேண்டுதல் வச்சிருக்கேன் மதினி” என்று அவர் சொல்லவும் ரமாவும் கிளம்பிவிட்டார்.
வானதியைத் தவிர அனைவரும் அவரோடு சென்றுவிடத் தனியே இருக்கப் போரடித்தது அவளுக்கு. துணைக்கு இலக்கியா மட்டும் இல்லை என்றால் அவள் நிலைமை அந்தோ பரிதாபமாகியிருக்கும்.
“வேதாக்குக் காலேஜ் இருக்கு. யாழுக்கு ரேஷன் கடைல வேலை. அவங்க சாயங்காலம் தான் வருவாங்க” என்று சோகமாய் சொன்னவளிடம்,
“நாளைக்கு ஈவ்னிங் டிரஸ் கோட் மெஹந்தி கிரீன். அவங்ககிட்ட சொல்லிட்டியா?” என்று ஞாபகப்படுத்தினாள் இலக்கியா.
“அச்சோ! மறந்துட்டேனே!”
உடனடியாக வாட்ஸ்அப் குழுமத்தில் அன்று மாலை மெஹந்தி நிகழ்விற்காக வரும்போது மெஹந்தி பச்சை நிறத்தில் உடையணிந்து வருமாறு தோழிகளுக்குச் செய்தி அனுப்பினாள்.
பின்னர் மெஹந்தி டிசைனைத் தேர்வு செய்வது, தனது அலுவலக நண்பர்களும் விஷ்ணு பிரசாத்தும் எப்போது வருவார்கள் என விசாரிப்பது, மெஹந்திக்கான லெஹங்காவைப் பார்ப்பதுமாகப் பொழுது போனது வானதிக்கு.
மாலையில் வேதவதி வந்துவிட்டாள். அவளிடம் அட்சரனுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டாயா என வானதி கேட்கும்போதே அங்கே அவன் வந்துவிட்டான். அவளிடம் தனியே பேசவேண்டுமென அவன் குறிப்பிடவும் இலக்கியாவும் வானதியும் ஒருவரையொருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக்கொண்டார்கள்.
வேதவதியும் தயக்கத்தோடு தொடர, “அவன் கூப்பிட்டதும் இந்தப் பொண்ணு பூனைக்குட்டி மாதிரி பின்னாடியே போகுது. அது கொஞ்சம் பயந்த சுபாவம்னதும் அச்சு ஓவரா மிரட்டுறான்” என அங்கலாய்த்தாள் இலக்கியா. வானதி மட்டும் விஷமப் புன்னகை பூத்தாள்.
“நான் அவங்க ஜோடி பொருத்தத்தைக் கவனிச்சேன். நல்லா இருக்குல்ல.”

“ஏன் இந்த கொலைவெறி? சாதுவான பொண்ணுக்கு அச்சுவா? ஷப்பா! எனக்கே அவ மேல பரிதாபம் வருது போ” என்றவள், “நதி! இன்னைக்கு அருள் சுந்தரபாண்டியபுரம் போயிட்டு வந்திருக்கான். அச்சு, அவன், சஞ்சய் மூணு பேரும் போனாங்க. உன்கிட்ட சொன்னானா?” என்று வினவினாள்.
“என்கிட்ட அவன் சொல்லல. அச்சுவும் சஞ்சயும் குற்றாலம் போறதா தான் சொன்னாங்க இலக்கியா. எப்ப பிளானை மாத்துனாங்க? அங்க ஏன் போனாங்க?” என்று குழம்பிப் போனாள்.
சரியாக அந்நேரத்தில் கையில் ஒரு ஜிமிக்கியுடன் உள்ளே வந்தாள் வேதவதி.
“இந்த ஜிமிக்கிய நான் நேத்து தொலைச்சிட்டேன். அதான் அவங்க குடுத்துட்டுப் போறாங்க” என்றாள் அப்பாவியாய்.
இலக்கியாவும் வானதியும் “ஓஹ்! அவங்களா?” என்று கிண்டலாய்க் கேட்க,
“அவங்க என்னை விட எல்டர்ல” எனச் சொல்லிச் சமாளித்தாள் வேதவதி. அவளை இருவருமாய் சேர்ந்து கேலி செய்ய சிறிது நேரத்தில் அங்கே வந்த யாழினியும் அவர்களோடு இணைந்துகொண்டாள்.
மாலையில் அட்சரனின் குடும்பத்தினரோடு சஞ்சய் மற்றும் இலக்கியாவின் பெற்றோரும் ஜெயவிலாசத்திற்கு வருகை தந்துவிட, நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு கெட் டுகெதர் ஏற்பாடானது போல மாளிகையே அரட்டை கச்சேரியில் நனைந்தது.
மறுநாள் மெஹந்தி மற்றும் சங்கீத்திற்கான ஏற்பாடுகள் ஜெயவிலாசத்தில் ஜரூராக நடந்திருந்தன. மெஹந்தி போடும்போது அமர்வதற்காக வீட்டின் முன்னே அலங்காரப் பந்தல் போட்டிருந்தார்கள். வண்ண வண்ண துணிகளால் ஆன பந்தலைப் பூக்களும், ஃபேரி விளக்குகளும் அலங்கரிக்க, அழகான வேலைப்பாட்டுடன் கூடிய இருக்கை ஒன்றில் வானதியை அமர வைத்துக் கைக்கு மருதாணியிட்டார்கள்.
பிரபல ஆடை வடிவமைப்பாளரின் கைவண்ணத்தில் உருவான பாசிப்பயறு வண்ண லெஹங்கா, குந்தன் வேலைப்பாடுகள் கொண்ட நகைகளில் வானதி தேவதையாக ஜொலித்தாள். உறவுக்கார இளைஞர்கள் இளைஞிகள் எல்லாம் மெஹந்தியோடு சங்கீத்திற்கும் நடனமாட, பொழுது இளமைக்கே உரிய புத்துணர்வோடு நகர்ந்தது.
அந்த நேரத்தில் அருள்மொழி அவளருகே வந்து அமர்ந்தான். ஐவரி வண்ண ஷெர்வானி அவனுக்குக் கூடுதல் கம்பீரத்தைக் கொடுத்திருந்தது.
“மெஹந்தி வச்சிட்டாங்களா?” என்றபடி அவளது உள்ளங்கையை விரித்துப் பார்த்தவன், அதில் தனது பெயர் எழுதியிருப்பதைக் கண்டதும் விகசித்த முகத்தோடு அவளை ஏறிட்டான்.
“ரொம்ப அழகா இருக்கு இந்த டிசைன்” என்றான் மனதார.

“என் கையில வச்சதால தான் அது அழகா தெரியுது” அமர்த்தலாகச் சொன்னாள்.
“நீ அழகு தான்! அதுக்காக அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டாம்” என்றவன், “நான் உன்கிட்ட பெர்மிஷன் கேக்க வந்தேன்” என்றான் விஷமப் புன்னகையோடு.
“எதுக்கு?” “அச்சு, சஞ்சய் கூட சேர்ந்து நம்ம ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் பேச்சிலர் பார்ட்டி கேட்டாங்க.
சோ…” வானதி கண்களைக் குறுக்கி அவனைப் பார்த்தாள்.
“என்ன பண்ணுவிங்க அந்த பார்ட்டில?”
“இதோ இந்த மாதிரி டான்ஸ், அப்புறம் கொஞ்சமா டிரிங்க்ஸ்.” “சீரியஸ்லி?”
“நான் நினைச்சா என் இஷ்டத்துக்குக் குடிக்கலாம். உன்கிட்ட வந்து பெர்மிஷன் கேக்குறேன்னா என்ன அர்த்தம்?”
“நீ குடிக்குறதைக் கூட ஃப்ளெக்ஸ் (Flex) பண்ணுறனு அர்த்தம்”
வானதி சட்டென சொல்லிவிட, அருள்மொழி புருவத்தை ஆட்காட்டி விரலால் கீறினான்.
“சரி! உனக்குப் பிடிக்கலனா நான் போகல” என்றவன் கைகளைக் கட்டிக்கொண்டு மேடையில் நடனமாடுபவர்களைப் பார்க்க ஆரம்பித்தான். வானதிக்கு அவன் தன்னிடம் அனுமதி கேட்டதே சந்தோஷம்தான். இப்போது தனது தயக்கத்தால் போகமாட்டேன் என்றதும் இன்னும் கூடுதல் சந்தோஷம்.
“நான் சொன்னா நீ கேப்பியா?” ஆர்வம் துளிர்விடக் கேட்டாள் அவள்.
அருள்மொழி ‘இதெல்லாம் ஒரு கேள்வியா’ என்ற ரீதியில் திரும்பிப் பார்த்தான் அவளை.
“நீ சொல்லுறதைக் கேக்காம வேற யார் சொல்லுறதை நான் கேக்கணும்னு நினைக்குற? நான் சுந்தரமூர்த்தியோட மகன். அவர் தன்னோட ஒய்பை எப்பிடி நடத்துவார்னு பாத்து வளர்ந்தவன்.”
“மாமா அத்தையை கோர்ட்டுக்கு இழுத்தாரா என்ன? எனக்கு ஞாபகம் இல்ல. அதனால கேட்டேன்” வேண்டுமென்றே சீண்டினாள் அருள்மொழியை.
“அது என்னோட வேலை. என் கிளையண்டுக்காக நான் யாரை வேணும்னாலும் எதிர்த்து வாதாடுவேன். அதுதான் என்னோட தொழில்தர்மம். இப்ப நான் போகட்டுமா? வேண்டாமா?”
வானதி உதட்டைச் சுழித்து யோசித்தவள், “ம்ம்! உன்னைப் பாத்தாலும் பாவமா இருக்கு. போ. என்ஜாய் பண்ணு” என்று சொல்ல,
“தேங்க்ஸ்” என்றவன் கண் சிமிட்டிவிட்டு அங்கிருந்து செல்ல, வானதியின் மனதில்தான் ஆயிரம் எண்ணங்கள்!
எப்போதும் போல அவளால் அருள்மொழியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் அவளது மனம் அவனை இழக்க விரும்பவில்லை. பன்னிரண்டு ஆண்டுகள்! உயிர் நண்பனாய் பழகியவனின் புறக்கணிப்பைச் சுமந்த மனதிற்கு அவனிடம் மீண்டும் ஆத்மார்த்தமாய்ப் பழகும் ஆவல்! என்றென்றைக்குமான இந்தப் பந்தத்தில் அவனுடன் இணைந்துவிட்டால் பன்னிரண்டு ஆண்டுகால வலியைச் சமன் செய்துவிடலாம் என்ற நப்பாசை.
அவள் யோசனையில் கரைந்தபோது அவளருகே வந்து அமர்ந்து தோளில் சாய்ந்துகொண்டாள் வேதவதி. இருவரும் சங்கீத்தில் நடனமாடியவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் கயல்விழி வேதவதியிடம் எதையோ எடுத்துவரச் சொன்னார் வானதியின் அறையிலிருந்து.
அவள் சென்று சில நிமிடங்கள் கழித்து மொத்த மாளிகையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூச்சலும் குழப்பமுமாய்ச் சில நொடிகள் குழப்பத்தில் நகர, இன்வெர்ட்டர் உறுமலோடு வெளிச்சமும் வந்து சேர்ந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

