“இந்தப் பக்கம் ஓரமா கொத்தி விடுய்யா. தண்ணி நிக்க மாட்டேங்குது”
ரத்தினவேலு மண்வெட்டியோடு நின்ற சரவணனிடம் மாமரத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையைக் காட்டி மண்ணைச் சரி செய்யுமாறு கூறிக்கொண்டிருந்தார்.

அவன் வேர்க்க விறுவிறுக்க தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்தபடியே சமையல்கட்டின் தோட்டத்தை நோக்கி இருக்கும் வாயிற்படியில் அமர்ந்து பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள் தேவயானி.
சுற்றிலும் இருந்த எலுமிச்சை மரங்களில் பூத்திருந்த மலர்களிலிருந்து மிதந்து வந்த சிட்ரஸ் மணம் அவளது நாசிக்குள் நுழைந்து புத்துணர்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தது.
ஆழ்ந்து அதைச் சுவாசித்தவள் கண்கள் மலர “நம்ம வீடு ரொம்ப அழகு அத்தை” என்றாள் ரசனையோடு.
சமையல் மேடையில் மிக்சியில் மருதாணி அரைத்துக்கொண்டிருந்த கனகவல்லி மருமகளின் புகழ்ச்சியைக் கேட்டுச் சிரித்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எதுக்குச் சிரிக்குறிங்க? இவ்ளோ மரம் செடி கொடியோட இயற்கையான காத்து வீசுற மாதிரி இந்த ஊருல எந்த வீடு இருக்கு? எனக்கு நம்ம வீடு ரொம்ப பிடிக்கக் காரணமே இந்தத் தோட்டம்தான்”
“இதே வீட்டைக் காட்டுக்குள்ள பாழடைஞ்ச கட்டிடம் இருக்குற மாதிரி தோணுதுனு எகத்தாளமா பேசுனவங்களும் இருக்காங்களே தேவாம்மா”
நெடிய பெருமூச்சொன்றை வெளியிட்டவாறு சொன்ன கனகவல்லியின் குரலில் ஆதங்கம் தொனித்தது.
‘அது யார்? சுற்றிலும் அழகான தோட்டம், பறவைகளின் ‘கீச் கீச்’ ஒலியுடனான விடியல், குளுமையான காற்றுடன் நிழலையும் வழங்கும் விருட்சங்கள் அடங்கிய அழகிய வீட்டை யாரால் இவ்வாறு எள்ளி நகையாட முடிந்தது?’
தேவயானி மனதுக்குள் நொந்துகொண்ட தருணத்தில் அந்நபர் யாரென்பதையும் கூறினார் கனகவல்லி.
“பவித்ராவோட அம்மைதான். வெடுக் வெடுக்குனு பேசுனா பாரு. எனக்கு ஆற்றாமை அடங்கவே மாசக்கணக்காச்சு தேவாம்மா. நம்ம வீடு முன்னாடி ஓடு போட்ட மண் வீடு தானே? உன் மாமா பிறந்து வளர்ந்த வீடு. சரவணன் தவழ்ந்த வீடு. அதைப் போய் பாழடைஞ்ச வீடுனு சொல்லிட்டாளேனு நான் கண்ணீர் விடாத நாளேயில்ல. அந்த நேரத்துல சுவருல விரிச்சல் விழுந்து இருந்துச்சு. மழை பெஞ்சா ஒழுகும். ஆனா கடவுள் எங்களுக்குனு குடுத்த கூரை இது. அதைக் கேலியா பேச யாருக்கு உரிமை இருக்கு? கெட்டதுலயும் நல்லது ஒன்னு நடந்துச்சு. வீட்டையும் நம்ம பொருளாதார நிலமையையும் கேவலமா பேசுனதாலயே சரவணன் முழு மூச்சா வீடு கட்டுற முடிவுல இறங்குனான். அவனும் உன் மாமாவும் இந்த வீடு கட்ட நிறைய உழைச்சிருக்காங்கம்மா. சித்தாள் கூலி குறையும்னு கல் சுமக்குறது, மண் சுமக்குறதுனு ரெண்டு பேரும் செஞ்ச வேலை நிறைய. அதோட பலன் தான் இன்னைக்கு நிக்குற கான்க்ரீட் வீடு”
வீடு கட்டிய பிரலாபங்களைச் சொல்லி மருமகளைப் போரடித்துவிட்டோமே என்ற அசட்டுச்சிரிப்பு கனகவல்லியின் முகத்தில்! அதற்காகப் பேச்சை நிறுத்திவிடவில்லை.
“வீட்டைக் கட்டுறப்ப ஒரு மரத்தைக் கூட வெட்டக்கூடாதுனு பிடிவாதமா இருந்தான் சரவணன். இந்த மரம் எல்லாம் அவனை மாதிரியே எங்களுக்குப் பிள்ளைங்கதான். நாளைக்கு எங்க காலத்துக்கு அப்புறம் நீ இதையெல்லாம் வெட்டவிடமாட்டங்கிறதை உன் பேச்சுலயே புரிஞ்சிக்கிட்டேன் தேவாம்மா”
மாமியார் நீளமாகப் பேசியதில் ஒரு புறம் தேவயானிக்குச் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பவித்ராவின் அம்மாவை வீட்டுக்கு வரவழைக்கும்படி அவர்களுக்குள் நெருக்கமான உறவு இருந்திருக்கிறதே என்ற அங்கலாய்ப்பும் எழுந்தது.
ஞாயிறு மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு பெரியவர்கள் கண்ணயர, கையில் மருதாணி வைத்தபடியே பவித்ராவின் அன்னை ஏன் இங்கே வந்தார் எனக் கணவனிடம் மெதுவாக வினவினாள்.
“இப்ப எதுக்குத் திடீர்னு இந்தக் கேள்வி?” மனைவியின் கையைப் பார்த்தபடி வினவினான் சரவணன்.

“அத்தை இன்னைக்குப் பேச்சுவாக்குல பவித்ராவோட அம்மா நம்ம வீட்டைக் கிண்டல் பண்ணுனதா சொன்னாங்க. அப்ப நீங்க எங்க இருந்திங்க? அவங்க பேசுற வரைக்கும் நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்திங்களா? காதலியோட அம்மாவை எதிர்த்துப் பேசப் பிடிக்காம ஒதுங்கி நின்னிங்களா?”
படபடவெனத் தனது மனதிலிருக்கும் ஆதங்கத்தைக் கேள்விகளாக மாற்றி அவனிடம் கொட்டித் தீர்த்தாள் தேவயானி.
“அப்ப நான் இருந்த சூழல் என்னை அமைதியா நிக்க வச்சுடுச்சு”
“அப்பிடி என்ன சூழல்?”
“அவங்கம்மாவும் அப்பாவும் இங்க வந்தது அவங்களோட பொண்ணைத் தொந்தரவு பண்ணக்கூடாதுனு சொல்லுறதுக்காக”
“புரியல. நீங்க தானே மாமாவ வச்சு கல்யாணப்பேச்சு எடுத்ததா சொன்னிங்க. அப்ப சம்மதிச்ச பவித்ராவோட அப்பா திடீர்னு ஏன் தொந்தரவு பண்ணாதனு எச்சரிக்க வந்தார்?”
தேவயானியிடம் அவன் இன்னும் முழுமையாகத் தனது காதல் பொய்த்துப்போன கதையைச் சொல்லிவிடவில்லையே! அவன் தயங்கவும் அவளது விழிகளில் வெம்மை ஏறியது.
“என் கிட்ட எதையும் மறைக்குறிங்களா?” காட்டமாக வினவினாள்.
“நானும் பவித்ராவும் ரெண்டு தடவை பிரிஞ்சோம் தேவா”
இப்போதும் தேவயானிக்கு அவன் சொல்ல வருவது புரியவில்லை.
“உன் கிட்ட நான் முதல் பிரிவைப் பத்தி விளக்கமா சொல்லலை”
“ஏன்?”
“அதுல என்னோட தப்பும் இருக்கு தேவா. நீ என்னைத் தப்பானவனா, சந்தேகப்பிராணியா பாக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அதனால அதை உன் கிட்ட இருந்து மறைச்சிட்டேன்”
தேவயானியின் அடிவயிற்றில் சின்னதாக ஒரு கலக்கம். அது கலகமாக மூண்டு அவளது நெஞ்சை அடைக்க ஆரம்பிக்க, சரவணனும் அவன் மறைத்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
சரவணன் இப்போது வைத்திருக்கும் கடையில்தான் முன்னர் ஊழியனாக வேலை பார்த்து வந்தான். அப்போது கல்லூரிக்குச் செல்வதற்காக அந்த வழியே வந்து போகும் பவித்ரா அவனது பார்வையில் விழுந்தாள். அடக்கமாக, அமைதியாக, பாதையைத் தவிர வேறெங்கும் பார்வையைத் திருப்பாத பவித்ராவை அவனுக்குப் பிடித்திருந்தது.
மெதுவாக அவனது இதயத்தில் காதல் முளைத்தது. ஒரு நாள் பவித்ராவிடம் அதைச் சொல்லியும் விட்டான். அவளோ தயங்கினாள். தனது பெற்றோருக்கு இதெல்லாம் பிடிக்காது என்றாள்.
“நீ ஏன் அதை நினைச்சுப் பயப்படுற? நீ காலேஜ் முடிச்சதும் சொந்தக்காரங்க மூலமா உங்க வீட்டுல பொண்ணு இருக்குறதா கேள்விப்பட்டு வந்த மாதிரி எங்கப்பாவை வச்சு பேசி நம்ம கல்யாணத்தை அரேஞ்ச்ட் மேரேஜ் மாதிரி நடத்திக் காட்டுறேன்” என்று சரவணன் சொன்னதும் அவளும் அவனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.
இருவரும் இன்ஸ்டாகிராமில் உரையாடிக்கொள்வார்கள். கல்லூரிக்குச் செல்லும் போதும், திரும்பி வரும் போதும் அவனது கடையைக் கடைக்கண்ணால் பார்த்தபடியே செல்வாள் பவித்ரா.
இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பறந்தபோது பவித்ராவின் அண்ணன் விக்னேஷ் சரவணனுக்குத் தோழனானான். அவர்கள் வீட்டில் இருக்கும் வீட்டுபயோகப் பொருட்களில் எதுவும் பிரச்சனை என்றால் வீட்டுக்கே சென்று பார்த்துக் கொடுப்பான் சரவணன். கனகவல்லியால் மாவு அரைக்க முடியாத நாட்களில் பவித்ராவின் அன்னையிடம் காசு கொடுத்து மாவு வாங்கிச் செல்வான் அவன்.
பவித்ராவின் குடும்பநிலை எப்படிப்பட்டது என அவனுக்குத் தெரிய வந்தது அந்நாட்களில்தான். பவித்ராவின் தந்தை சிதம்பரம் உழைப்பாளி. ஆனால் குடித்தே பணத்தைக் காலி செய்பவர். அவளது அன்னை முல்லை இட்லி மாவு அரைத்துக் கொடுத்து அந்த வருமானத்தை வைத்து இரு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
“நான் படிச்சு கவர்மெண்ட் வேலைக்குப் போய் எங்கம்மாவ நல்லபடியா பாத்துக்கணும்” என்பாள் பவித்ரா.
“எங்கம்மாவுக்கு எப்பவும் தலைகுனிவை உண்டாக்கிடக்கூடாது. காதலிக்குறது எல்லாம் தெரிஞ்சா அவங்க வளர்ப்பு தப்பாகிட்டதா நினைப்பாங்க. அதனாலதான் நம்ம காதலை மறைச்சு அரேஞ்ச்ட் மேரேஜ் மாதிரி அவங்களுக்கு தோண வச்சு உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்குறேன்” என்று கூட அவள் கூறியதுண்டு.
அப்போதெல்லாம் ‘எவ்வளவு நல்ல பெண் இவள்’ என்ற எண்ணம் சரவணனுக்குள் பெருமிதத்தை உருவாக்கும்.
இந்நிலையில்தான் திடுமென அவனுக்கும் பவித்ராவுக்குமான உறவில் விலகல் வர ஆரம்பித்தது. பவித்ரா ஆன்லைனில் இருந்தாலும் சரவணனுடன் பேசாமல் தவிர்த்தாள். காரணம் என்னவென அவனும் யோசித்துப் பார்த்துவிட்டான். புரியவில்லை என்றதும் அவளிடமே கேட்டான்.
“நீ பன்னிரண்டு மணி வரைக்கும் ஆன்லைன்ல இருக்க. ஆனா என் கிட்ட பேசுறதில்ல. என்ன நடக்குது?”

“நீங்க என்னைச் சந்தேகப்படுறிங்களா? நான் ஆன்லைன்ல இருந்தா உங்க கூட மட்டும் பேசணும்னு ரூல் எதுவும் இருக்கா?”
கோபத்தில் கொந்தளித்தாள் அவள். இப்படியே சில நாட்கள் கழிந்தன. திடீரென அன்பாய் பேசுவதும், திடீரென விலகிப்போவதுமாகச் சரவணனை அவள் திரிசங்கு சொர்க்கத்தில் சரவணனைக் குடியேற்றியிருந்தாள். காரணம் கேட்டாலோ ‘அன்னைக்குத் தெரியாமல் காதலிப்பதால் திடீர் திடீரெனத் தனக்கு குற்றவுணர்ச்சி அதிகமாகிவிடுகிறதெனச்’ சொன்னாள்.
பவித்ரா தன்னைக் காதலிக்கிறாளா அல்லது நேரப்போக்குக்குத் தன்னிடம் பழகுகிறாளா என்ற ஐயம் சரவணனுக்கு வந்துவிட்டது. அப்போது பவித்ரா இன்னொரு வாலிபனோடு இன்ஸ்டாகிராமில் பேசுவது அவளது ஒன்றுவிட்டத் தங்கை வாயிலாகச் சரவணனுக்குத் தெரியவந்தது. சரவணன் கொதித்துப்போனான். அந்த வாலிபனும் பக்கத்து ஊர்க்காரனே.
அவனது நடவடிக்கை சரியில்லையென ஆவுடையப்பன் ஒருமுறை கூறியிருந்தார். அதைச் சொல்லி பவித்ராவை எச்சரித்தான் சரவணன். அவள் கேட்டால்தானே!
இது சம்பந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் கூட வந்தது. முடிவில் சரவணன் ‘சந்தேகப்பிராணி’ என்ற பட்டத்தை வாங்கி கட்டிக்கொண்டதுதான் மிச்சம். இந்தக் கருத்துவேறுபாட்டால் முற்றிலும் சரவணனைத் தவிர்த்தாள் பவித்ரா. இன்ஸ்டாகிராமில், வாட்சப்பில் அவனது எண்ணை முடக்கினாள்.
எல்லாம் முடிந்ததென அவன் ஓய்ந்திருக்கையில் ஒருநாள் அவளாக வந்து மன்னிப்பு வேண்டினாள். இனி அந்த வாலிபன் தன் பின்னே வந்தால் அவனைத் திட்டுவதாகக் கூறினாள்.
சரவணனைப் போல அன்பான ஒருவனைச் சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக இழக்கும் எண்ணமில்லை என்று சொல்லி சமாதானம் செய்தாள்.
தங்களது வருங்காலம் குறித்த அனைத்து திட்டங்களையும் பவித்ராவிடம் அவன் கூறியிருந்தான். அவளது பெற்றோரைத் தனது பெற்றோர் போல பார்த்துக்கொள்வதாக வாக்களித்திருந்தான்.
‘கடினமாக உழைத்துப் பணத்தைச் சேமித்து வைக்கும் பொறுப்பானச் சரவணனா? இன்ஸ்டாகிராமில் வார்த்தை ஜாலத்தால் மயக்கும் வேலையில்லாத வாலிபனா?’
கொஞ்சம் கோபப்பட்டாலும், கட்டுப்படுத்தினாலும் சரவணனே சிறந்தவன் என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. பின்னர் என்ன? இருவரிடமும் இருந்த விலகல் மறைந்து காதலின் ஆதிக்கம் ஆரம்பித்த்து.
இந்நிலையில்தான் ஒருநாள் பவித்ராவோடு பாபநாசம் சென்றபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் எந்தவித செட்டிங்சையும் மாற்றாமல் பதிவிட்டுவிட்டான் சரவணன்.
அவனது கெட்டநேரம், இன்ஸ்டாகிராமில் சரவணனைப் பின்தொடர்ந்த விக்னேஷ் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டான். பவித்ராவின் குடும்பத்திற்கு அவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்தது.
அந்த நேரத்தில்தான் பவித்ரா சரவணனை நோகடிக்கும் விதமாகப் பொய்யொன்றை தனது பெற்றோரிடம் கூறினாள்.
“நான் அவனைக் காதலிக்கல. அவன்தான் என் பின்னாடி சுத்துனான். காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துனான். நான் காலேஜ் போறப்ப என்னை வழிமறிச்சு பிரச்சனை பண்ணுனான். நான் பாபநாசத்துக்கு அவன் கூட போகலனா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டுனான். பயந்து அவன் கூட போனேன். இந்தப் போட்டோவ கூட அவன் வற்புறுத்தி எடுத்துட்டான்”
பெற்றோருக்குப் பயந்து அவள் பொய் சொல்லிவிட அவளது பெற்றோரும் சரவணனின் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். சிதம்பரம் அமைதியாக இருந்தாலும் முல்லை தாம்தூமெனக் குதித்தார்.
“என் அக்கா மகன் போலீஸ். உங்க மகன் இப்பிடியே தொந்தரவு பண்ணுனா போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுப்பேன். பொட்டப்புள்ளைய பெத்துட்டோமேனு அமைதியா இருக்குறேன்”
“இங்க பாரு தம்பி! முதல்ல உங்க வீடு சரியா இருக்கா? எப்ப சுவர் இடிஞ்சு தலையில விழுமோனு பயமா இருக்கு. இப்பிடி ஒரு வீட்டுக்கு என் பிள்ளைய எப்பிடி கல்யாணம் பண்ணி அனுப்புவேன்? காட்டுக்குள்ள இருக்குற பாழடைஞ்ச கட்டிடம் மாதிரி ஒரு வீடு. நீ எங்க வீட்டுக்கு வந்திருக்கல்ல. அந்தக் காலத்து கட்டைக்குத்து வீடு. அந்த வீட்டுல மகாராணியா வாழ்ந்த என் மவ இந்த வீட்டுக்கு வந்து வாழுவாளா? உனக்கு ஒரு அக்காவோ தங்கச்சியோ இருந்தா உன்னை மாதிரி ஒருத்தனுக்கு நீ கட்டிவைப்பியா?”
முல்லை பேசிக்கொண்டே போக, சிதம்பரம் அவரை அமைதியாக்கிவிட்டு ரத்தினவேலுவிடம் பெண்ணைப் பெற்ற தனது நிலையைக் கூறினார்.
அப்போதுதான் சரவணன் வாயைத் திறந்தான். காதலியாக இருந்தவள் தன்னைப் பெண்கள் பின்னே சுற்றும் பொறுக்கியைப் போல சித்தரித்த விதம் அவனது தன்மானத்தைச் சீண்டிவிட்டது.
தானும் பவித்ராவும் எடுத்த புகைப்படங்களைக் காட்டி “நானும் அவளும் மனப்பூர்வமா காதலிச்சோம். அதுக்கு ஆதாரம் இந்த போட்டோக்கள்ல இருக்கு. ரெண்டு பேரும் காதலிச்சும் அவ என்னைப் பொம்பளை பொறுக்கி மாதிரி சித்தரிச்சிருக்கா உங்க கிட்ட. இதுக்கு மேல உங்க பொண்ணை நான் தொந்தரவு பண்ணமாட்டேன். நான் அந்தளவுக்குத் தரமில்லாத பொறுக்கி இல்ல. நீங்க போகலாம்” என்று சொல்லிவிட்டான்.
பவித்ராவுக்கும் தனது அண்ணன் மகனுக்கும் மணமுடிக்கப் போகிறோமென பெருமை பீற்றிவிட்டு முல்லையும் சிதம்பரத்தோடு கிளம்பினார்.
அதுதான் பவித்ராவுக்கும் சரவணனுக்குமான முதல் பிரிவு. மணமாகப் போகிறவளைத் தொந்தரவு செய்யும் விருப்பமில்லாமல் ஒதுங்கினான் சரவணன். ஆனால் முல்லையின் இழிவானப் பேச்சை மறக்கவில்லை அவன்.
கடினமாக உழைத்தான். வீட்டைத் தந்தையோடு சேர்ந்து கட்டினான். ஊழியனாக வேலை பார்த்த கடையை உரிமையாளரிடமிருந்து வாங்கி சொந்தமாக நடத்த ஆரம்பித்தான். அனைத்தையும் அவன் சொல்லி முடித்ததும் தேவயானிக்கு ஆயாசமாக இருந்தது.
“முதல் தடவை உங்க காதல் பிரிஞ்சதுக்கு நீங்க காரணமில்ல. பவித்ரா உங்களைச் சித்தரிச்ச மாதிரி நீங்க சந்தேகப் பிராணியும் இல்லங்க. உங்க உறவு பிரியக் காரணம் பணக்காரனுக்கு மகளைக் கல்யாணம் பண்ணிக் குடுக்கணும்னு நினைச்ச பவித்ராவோட அம்மா. பெத்தவங்க தன்னைத் தப்பா நினைச்சுடக்கூடாதுனு பொய் சொன்ன பவித்ராவோட சுயநலம். இதுல உங்களோட தப்பு என்ன இருக்கு? நீங்க பாதிக்கப்பட்ட நபரா தெரியுறிங்க என் கண்ணுக்கு”

சரவணனின் மனதிலிருந்த பெரும் பாரம் இறங்கிவிட்டது.
“நான் பவித்ரா கிட்ட கண்டிப்பா இருந்ததை வச்சு, எங்க நீ என்னைச் சந்தேகப்பிராணினு சொல்லிடுவியோனு பயந்துட்டேன் தேவா” கலக்கம் அவனது குரலில். இன்னொரு முறை தன்னை நேசிக்கும் பெண்ணின் வாயால் அந்த வார்த்தையைக் கேட்கும் திடமில்லை அவனுக்கு.
“என் சரவணனை நான் ஏன் தப்பா நினைக்கப் போறேன்?”
விரல்களில் ஒட்டியிருந்த மருதாணிக்கலவையை அவனது நாசியில் தேய்த்தபடி குறும்பாக வினவி அவனைச் சிரிக்க வைத்தாள் தேவயானி.
‘முதல் முறை பிரிந்தபோது அனுபவித்த இரணத்தை மறந்து பவித்ராவுக்குச் சரவணன் அளித்த இரண்டாம் வாய்ப்பைத் தடுமாறும் குணத்தால் இழந்து துரோகம் செய்தவள் அவளே! அவளைப் போன்ற பெண்கள் எல்லாம் எக்காலத்திலும் திருந்தமாட்டார்கள்! பெற்ற பெண் மீது தவறு இருந்தும் தவறே செய்யாத ஆண் மீது பழி போடும் முல்லை போன்ற பெண்களும் மாறமாட்டார்கள். இதில் சரவணனின் தவறு எதுவும் இல்லை’ என்று எண்ணிக்கொண்ட தேவயானிக்குச் சகப்பெண்ணாகக் கூட பவித்ராவை மதிக்கத் தோன்றவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

