கனகவல்லி காலையில் கண் விழிக்கும்போதே துணி ஏதோ தீயில் கறுகும் வாடை அவரது நாசியைத் தீண்டியது.
நதியூர் கிராமம் என்பதால் வீடுகளில் சேரும் குப்பையை அவ்வபோது மக்கள் வீட்டின் பின்வாயிலில் போட்டு எரிப்பது வாடிக்கை. அப்படி எரிக்கும்போது சில நேரங்களில் அருகிலிருக்கும் கருவேல மரங்களில் தீப்பற்றிவிடும்.
இதெல்லாம் அரிதினும் அரிதாய் நடந்தாலும் அதிகாலையில் தீ எரியும் நெடி வந்ததும் பக்கத்துவீட்டில் யாரும் குப்பையைக் கொளுத்தி அது தங்கள் வீட்டுக்கு மரங்களுக்குப் பரவிவிட்டால் என்னாகுமோ என்ற பயத்தில் அடித்துப் பிடித்து எழுந்து பின்வாயிலுக்குப் போய் பார்த்தவர் அங்கே கண்ட காட்சியில் திகைத்துப் போனார்.
விடிந்தும் விடியாத நேரத்தில் புதுப்பெண்ணான அவரது மருமகள் தேவயானி அங்கே ஒரு ஓரமாய் எதையோ தீ எரித்துக்கொண்டிருந்தாள்.
“அம்மாடி தேவா!”
மாமியார் அழைத்ததும் பதற்றமேயில்லாமல் திரும்பினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஏன் இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சிங்க அத்தை? நேத்து முழுக்க நீங்க ரெஸ்டே எடுக்கல. போய் தூங்குங்க”
கனகவல்லி மருமகளிடம் வந்தவர் “ஏன் காலங்காத்தால குப்பைய கொளுத்திட்டிருக்க?” என்று வினவ
“தேவையில்லாத குப்பைய எதுக்கு அத்தை வீட்டுல வச்சிருக்கணும்? மனசும் வீடும் சுத்தமா இருக்கணும்னா தேவையில்லாததை அப்பப்ப கழிச்சிடணும்” என்றாள் தேவயானி.
எரிந்து கொண்டிருந்த குப்பையில் ‘பட் பட்’ என்ற சத்தம் வரவும் பதறிப்போய் மருமகளின் கையைப் பற்றி தள்ளி அழைத்து வந்தார் அவர். அவரது பார்வையில் அந்தக் குப்பையில் எரிந்து கொண்டிருந்த உடைகளும், பாதி எரிந்து போன ஸ்மார்ட் வாட்சின் கை ஸ்ட்ராபும் பட்டுவிட்டன.
மருமகளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தார்.
“ஏன் அப்பிடி பாக்குறிங்க அத்தை?”
பெருமூச்சு விட்டவர் “என் மவனைப் பிடிச்ச பீடை இந்தக் குப்பையோட சேர்ந்து எரியுறதா நினைச்சுக்கிட்டேன். மனசுல இருந்த பெரிய பாரம் இறங்கிடுச்சும்மா” என்றார் மருமகளின் கையை ஆதரவாகப் பற்றியவாறு.

தேவயானி பளிச்செனப் புன்னகைத்தாள்.
‘ஆக, மாமியாருக்கும் அந்தப் பவித்ராவைப் பிடிக்காது’
“இங்க பாருங்கத்தை. இனிமே உங்க மகனோட வாழ்க்கையில எந்தக் கஷ்டமும், கஷ்டத்தைக் குடுக்குற நபரும் வரமாட்டாங்க. அப்பிடி வந்தாங்கனா அவங்களை எப்பிடி விரட்டி விடணும்னு எனக்கு நல்லா தெரியும். நிம்மதியா போய் ரெஸ்ட் எடுங்க. ஏழு மணிக்கு நானே வந்து எழுப்புற வரைக்கும் நீங்க எழுந்திருச்சு எந்த வேலையும் பாக்கக்கூடாது”
உரிமையாய்க் கட்டளையிட்டு அவரை உறங்க அனுப்பி வைத்தவள் கண் முன்னே ஜ்வாலையோடு எரியும் நெருப்பைப் பார்த்தபடி நின்றாள்.
‘சரவணன் யாரை வேண்டுமானாலும் காதலித்திருக்கலாம். இது போல பரிசுபொருட்களை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் இன்று அவனுக்கு உரிமைக்காரி நானே. என்னைத் தாண்டி யாரும் அவனிடம் நெருங்க நான் அனுமதியேன்’
நெருப்பின் முன்னே நின்று சத்தியப்பிரமாணம் எடுக்காதக் குறை மட்டுமே!
கனகவல்லியின் நாசியைத் தீண்டிய தீயில் துணி எரியும் நெடி அவரது மைந்தனை மட்டும் விட்டு வைத்திருக்குமா என்ன? தேவயானி நிற்கும் இடத்திற்கு சில அடிகள் தொலைவிலிருக்கும் படுக்கையறையின் கதவு திறந்தது.
இருமிக்கொண்டே “என்ன பண்ணுற தேவா?” என்று கேட்டபடியே படிகளில் இறங்கி வந்தான் சரவணன்.
“உங்களோட கடந்தகால கசப்பை எரிக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன்”
மனைவியின் பதிலில் அனிச்சையாகப் புன்னகை உதயமானது அவனது உதடுகளில். அவள் எதை எரித்திருப்பாள் என்பது புரிந்தது.
யாருக்கு அதையெல்லாம் அவன் பரிசளித்தானோ அவளையே அவன் மறந்து ஆண்டு கணக்காகிறது என்பதைச் சொன்னாலும் இப்போது தேவையானிக்குப் புரியாது என்பதால் அமைதியாய் அவளருகே போய் நின்றான்.
“இப்ப சந்தோசமா இருக்கா?”
அவனைப் பார்த்தவள் போலியாக முறைத்தாள்.
“இதை நான் கேக்கணும். இப்ப நீங்க நிம்மதியா இருக்குறிங்களா?”
“ரொம்ப”
தலை சாய்த்துச் சொன்னவன் “எரிஞ்சு முடிச்சதும் மறக்காம தண்ணி ஊத்திடணும். இல்லனா தீக்கங்கு தணலா கிடக்கும். யாரும் தெரியாம மிதிச்சிடக்கூடாதுல்ல” என்றான் அக்கறையுடன்.
“அதை நான் பாத்துக்குறேன். நீங்க போய் தூங்குங்க”
“என் பொண்டாட்டிய இங்க விட்டுட்டு நான் மட்டும் ரூமுல தூங்குனா நல்லாவா இருக்கும்?”
“கூட இருந்தா மட்டும் அப்பிடியே கொஞ்சிடுவிங்க” கீழ்க்கண்ணால் பார்த்தபடி ஆதங்கப்பட்டாள் தேவயானி.
அவளது மோவாயைத் தொட்டு நிமிர்த்தியவன் “நமக்கு ஒரு பாப்பா வர்ற வரைக்கும் உன்னைத் தானே நான் கொஞ்சியாகணும்” என்றதும் ஆதங்கம் குறைந்து நாணம் குடியேறியது அவளது வதனத்தில்.
“அப்ப பாப்பா வந்ததும் என்னைக் கொஞ்சமாட்டிங்களா? நான் இல்லாம பாப்பா வந்துடுமா?”
சரவணன் என்ன சொன்னாலும் அதில் ஒரு பாயிண்டை எடுத்து வாதிட அவளுக்குப் பிடித்தது. தனது அசட்டுத்தனமானக் கேள்விகளுக்கும், சிறுபிள்ளைத்தனமான ஆதங்கத்துக்கும் அவன் சமாதானக்கொடி தூக்குவது சுவாரசியமாக இருந்தது.
“அங்க உக்காந்து பேசலாமா?” படுக்கையறைக்குச் செல்லும் உயரமான படிக்கட்டுகளைக் காட்டிக் கேட்டான் சரவணன்.
இருவரும் அங்கே போய் அமர்ந்தார்கள். அந்தப் படிக்கட்டின் மீது நிலா வெளிச்சம் விழாதபடி எலுமிச்சை மரமொன்றின் கிளை மறைத்திருந்தது.
அதன் இலைகளினூடே தெரிந்த இடைவெளியில் கிழக்கு வானில் வெளிச்சம் பரவுவதைப் பார்த்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள். சரவணன் மேல்படியில் அமர்ந்திருக்க அவனுக்கு அடுத்த கீழ்ப்படியில் அமர்ந்திருந்தாள் தேவயானி.
அவளது தலையில் தனது மோவாயைப் பதித்துக்கொண்டவன் தனது பெரிய கரங்களால் அவளைத் தோளோடு சேர்த்து மொத்தமாக வளைத்துக்கொண்டான்.

“நான் பெரிய வலிய கடந்து வந்திருக்கேன் தேவா. மறுபடியும் அதே வலிய அனுபவிக்கக்கூடாதுனு எவ்ளோ கவனமா இருக்குறேனோ அதை விட கோடி மடங்கு கவனமா அந்த வலிய என் பொண்டாட்டிக்குக் குடுத்துடக்கூடாதுனு உறுதியா இருப்பேன். என்னால நீ எப்பவும் காயப்படக்கூடாது. காயப்பட மாட்ட. அதுக்கு நான் கேரண்டி”
தேவயானி சட்டென நிமிர்ந்து பார்த்தாள். சரவணனின் மோவாய் பிடிமானம் இழந்ததால் முகம் சட்டெனத் தாழ, இருவரது நாசிகளும் முட்டிக்கொண்டன. தேவயானி அதிகம் யோசிக்கவில்லை.
அவளது உதட்டுக்கு நேராய் இருந்த அவனது மோவாயில் முத்தமிட்டாள் மென்மையாக. இது அவன் சில நொடிகளுக்கு முன்னர் கொடுத்த உறுதிபாட்டுக்கானப் பரிசு. சரவணன் பேச்சிழந்து போக மீண்டும் அழுத்தமாக முத்தமிட்டாள்.
“என்னடி இது?” அவன் அடைந்த தடுமாற்றத்தை அவனது குரல் நாண்களும் அடைந்திருக்குமோ!
“உஷ்! நான் புண்ணியம் தேடிக்குறேன்” கண்களை உருட்டி அழகாய் மிரட்டினாள் அவனது மனைவி.
“புண்ணியமா? எப்பிடி முத்தம் குடுத்தா?” வரம்பு மீறத் துடித்த விரல்களால் அவளது கழுத்தை வருடியபடியே கேட்டான் அவன்.
“ஆமா! புருசனுக்குச் சின்னதா சேவை பண்ணி அவன் சந்தோசப்பட்டாலும் கோடிப்புண்ணியமாம். நீங்க கேள்விப்பட்டதில்லையா?”
“இதெல்லாம் கேள்விப்பட்டிருந்தா நான் ஏன் விடிஞ்சும் விடியாமலும் இப்பிடி படிக்கட்டுல உன் கூட உக்காந்து பேசிட்டிருக்கப்போறேன்?”
“பேசிக்கிட்டு மட்டும்தான் இருக்குறிங்களா?” கழுத்தை வருடிய விரல்களைக் கீழ்க்கண்ணால் காட்டி தேவயானி கேட்கவும் சரவணன் சிரித்தான்.
இப்படியே மோனநிலையில் நிமிடங்கள் கழிந்தன. சதிபதி இருவரும் சேர்ந்து எரிந்து போன குப்பையின் மிச்சங்களில் தண்ணீரை ஊற்றிவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்றார்கள்.
சரவணனை உறங்குமாறு பணித்துவிட்டுக் குளித்து முடித்து உடலுக்கு இதமாகக் காட்டன் புடவை ஒன்றை அணிந்துகொண்டாள் தேவயானி.
குருவிகள் கத்தும் சத்தம் கீதமாக ஒலிக்க வாசலைத் தெளித்துக் கோலமிட்டவள் பால்காரர் வரவும் பால் வாங்கினாள்.
“எம்மா மருமவளே! முதல் நாள்லயே உன்னை உன் மாமியார் ஓவரா வேலை வாங்குது போலயே?” விளையாட்டாகப் பேசிவிட்டு அடுத்த வீட்டுக்குப் பால் ஊற்ற சைக்கிளை மிதித்தார் பால்காரர்.
சமையலறைக்குப் போய் தனக்கு மட்டும் முதலில் காபி போட்டு எடுத்துக்கொண்டாள். மற்றவர்கள் விழித்ததும் அவர்களுக்குச் சுடசுட போட்டுக் கொடுக்கலாம் என்ற எண்ணம்.
காபியை அருந்தியபடியே பின்வாயில் தோட்டத்தில் சின்னதாக நடைபயிற்சி செய்தாள். ஏக்கர் கணக்கில் எல்லாம் நிலமில்லை. ஆனால் இருக்கிற இடத்தில் காய்கறி, கீரை, பூச்செடிகள், விருட்சம் என வளர்த்து சோலையாய் ஆக்கியிருந்தார்கள் ரத்தினவேலுவும் கனகவல்லியும்.
செம்பருத்தியில் தேன்சிட்டு தேன் அருந்த முட்டி மோதுவதை ரசித்தவள் என்ன சமைக்கலாமென யோசித்தபடி சமையலறைக்குள் நுழைந்தபோது கனகவல்லியும் வந்துவிட்டார்.
“காபி போடட்டுமா அத்தை?”
“இப்ப தான் தைராய்டு மாத்திரை போட்டேன் தேவா. இன்னும் கொஞ்சநேரம் ஆகட்டும்”
“காலையில என்ன சமைக்கலாம்?”
“ரவை இருக்கு. உப்புமா பண்ணிடலாம். நீ எனக்குப் பல்லாரி, பச்சை மிளகா நறுக்கி குடு. வேற எந்த வேலையும் செய்யவேண்டாம். சரவணன் முழிச்சதும் உங்க வீட்டுக்கு மறுவீடு போகணும்”
“ப்ச்! எங்க வீடு என்ன அமெரிக்காவுலயா இருக்கு?”
தேவயானி திருமணம் நிச்சயமானதுமே கனகவல்லியிடம் நன்றாகப் பேசி நெருக்கமாகிவிட்டாள். அவர்களிடையே இந்த மாதிரியான கேலிப்பேச்சுகள் வாடிக்கையாக நடப்பதுதான்.
“அதனால என்ன? எந்த வீட்டுலயும் புது மருமவ இப்பிடி எழுந்திருச்சி வேலை செய்யமாட்டா”
“எனக்குப் போரடிக்குதுல்ல”
பேசியபடியே உப்புமாவுக்கான ஆயத்தங்களைச் செய்தார்கள் இருவரும். பின்னர் கனகவல்லி காலையுணவைத் தயாரிக்க, வீட்டிலிருக்கும் உறவினர்களுக்குக் காபி போடும் வேலையைக் கவனித்தாள் தேவயானி.
வந்தவர்களுக்குக் கனகவல்லியும் அவளும் சகஜமாகப் பேசுவதே ஆச்சரியமாக இருந்தது.
“கனகுக்கு மாமியார்ங்கிறதே மறந்துடுச்சு போல”
கனகவல்லியின் உடன்பிறந்த அக்கா இவ்வாறு முணுமுணுத்ததோடு மட்டுமன்றி அவரிடமே போய் வேப்பிலை அடிக்கும் பணியை ஆரம்பித்தார்.
“உன் மருமவளைப் பாத்தா காரியக்காரியா தெரியுறா. நீ அவ கிட்ட பல்லைக் காட்டிக்கிட்டு இருக்க? அவ ஒன்னும் உன் மவ இல்ல. மருமவளை எல்லாம் முதல்லயே வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். இல்லனா ‘பொண்ணைப் பெத்தவ பஞ்சு மெத்தையில, பையனைப் பெத்தவ வெளித்திண்ணைல’ங்கிற கதையா ஆகிடும்”
கனகவல்லி எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் மிக்சியில் சட்னியை அரைத்துக்கொண்டிருந்தார்.
“ஏ கனகு! காதுல விழுதா இல்லையா?”
காபியை உறிஞ்சியபடி அந்தப் பெண்மணி சுருதியேற்ற, அதற்கெல்லாம் அசைவாரா கனகவல்லி! சட்னி ஜாரை எடுத்து சமையல் மேடை மீது வைத்தவர் நிதானமாகத் தமக்கையை ஏறிட்டார்.

“கல்யாணமான புதுசுல என் மாமியா என்னை எப்பிடி நடத்துனாவளோ அப்பிடித்தானே என் மருமவளை நான் நடத்த முடியும்? எங்கத்தை என் மேல உசுரா இருப்பாவ. என்ன சமைச்சாலும் சுடசுட தட்டுல போட்டுக் குடுப்பாவ. என் மருமவளையும் நான் அப்படித்தான் பாத்துப்பேன். எனக்குப் பொட்டப்புள்ளை இல்லயேக்கா. அவதானே எனக்கு மவ”
இதைக் கேட்டுவிட்டு அவரது தமக்கை அலட்சியமாக ஏதோ சொல்ல, சமையலறை வாயிலில் நின்ற தேவயானிக்கு மாமியாரின் அன்பில் மனம் நெகிழ்ந்து போனது.
அதே நெகிழ்ச்சியோடு சரவணனுடன் தனது பிறந்த வீட்டுக்கு மறுவீடு கிளம்பினாள் அவள். அவளது மனதில் இருக்கும் தெளிவும், நெகிழ்ச்சியும் சரவணனின் மனதிலும் இருந்தது. தனது அன்னையிடம் அவள் நெருக்கம் என்பது முன்பே தெரியும். ஆனால் அவளும் தனது பெற்றோரும் இயல்பாக உரையாடும் காட்சியை நேரில் கண்டதும் நிம்மதியாக இருந்தது.
பெரும்பான்மை ஆண்களுக்குத் திருமணத்திற்கு பிறகு மனைவி தன் குடும்பத்தோடு ஒட்டாமல் போய்விடுவாளோ என்ற பயம் இருக்கும். அந்தப் பயத்துக்கு அவசியமில்லாமல் செய்துவிட்டாளே தேவயானி. பின்னர் சரவணனின் மனம் நிம்மதியடையாமல் இருக்குமா என்ன?
ஆனால் ஒரு ஓரத்தில் அவனுக்கு எதுவோ ஒன்று உறுத்தியது. தனது வாழ்வில் நடந்த அனர்த்தத்தை முழுவதுமாக அவன் தேவயானியிடம் சொல்லிவிடவில்லை. ஒருவேளை அந்தக் குற்றவுணர்ச்சிதான் தனக்கு உறுத்தலை உண்டாக்குகிறதோ என்று யோசித்தான் அவன்.
இருவரும் பைக்கில் சென்றபோது தேவயானி பேசிக்கொண்டே வர அவளது பேச்சுக்கு ‘உம்’ கூட கொட்டாமல் தீவிரச் சிந்தனையோடு சாலையில் கண் பதித்திருந்தான் அவன். தேவயானி அவனது இடுப்பில் கிள்ளியதும் “அவுச்” என்று கத்தினான்.

“மலை மேல இருக்குற பெருமாள் கோயிலுக்குப் போவோமானு ஆயிரம் தடவை கத்திட்டேன். உங்க கவனம் எங்க இருக்கு?” அதட்டலாய்க் கேட்டு அவனது காது மடலைத் திருகினாள் அவள்.
“ஆ! வலிக்குது”
போலியாய் அவன் நடிக்க, அவள் மீண்டும் திருக, இந்த விளையாட்டில் மனதில் உதயமான உறுத்தல் அடங்கியது கூட தெரியவில்லை சரவணனுக்கு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

