வீட்டுக்குள் நுழையும் போதே வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும் பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார். அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை.
மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின் குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால் அவரிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. எப்போதுமே நீ நலமா நான் நலம் என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு தான் அவர்களின் உறவின் நிலை இருந்தது.
விஜயலெட்சுமி இரு சகோதரிகளிடமும் “நான் நம்ம குடும்ப ஜோஸியரைத் தான் பார்த்திட்டு வந்தேன் பத்மா. இந்த மாசத்துல நல்ல நாள் இருக்கிறதால கல்யாணத்துக்கு முகூர்த்தநாள் குறிச்சுக் குடுத்திட்டார். நிச்சயத்தை இன்னையில இருந்து இரண்டு வாரத்துல குறிச்சு குடுத்திருக்கார். மைதிலி நீயும் பாருடி. நோக்கும், உன் ஆத்துக்காரருக்கும் இந்த தேதிகள் வசதிப்படுமானு பார்த்து சொல்லுடிம்மா. என்ன இருந்தாலும் மாப்பிள்ளையோட சித்தி இல்லையோ?” என்று அவரையும் இழுத்து வைத்து அவர் குறித்துக் கொடுத்த தேதிகளைக் காட்ட இரு சகோதரிகளுக்கும் அந்த தேதிகளில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
பத்மாவதி “மன்னி! அப்பாவும் அம்மாவும் தூங்கிண்டிருக்கா! நீங்க கொஞ்சம் பொறுத்தேள்னா அவா ரெண்டு பேரும் முழிச்சிப்பா. வீட்டோட பெரியவா கிட்ட கேட்டிண்டு மத்த விஷயங்களை முடிவு பண்ணுனா உசிதம்” என்று கடமை தவறாத மருமகளாகச் சொல்ல விஜயலெட்சுமியும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் அதோடு விட்டுவிட்டால் அவர் விஜயலெட்சுமி இல்லையே!
கிருஷ்ணஜாட்சி, ரகுநந்தன் விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தவர் மைதிலி இங்கே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதால் அவரைப் பார்த்தவர்
“மைதிலி வெயில்ல வந்தது நேக்கு நாக்கு வரள்றது! நீ எனக்கு ஒரு லெமன் புளிஞ்சு எடுத்திண்டு வர்றியா?” என்றுக் கேட்க மைதிலியும் இதற்கு மேல் இவர்களுடன் இருந்தால் இவர்கள் பேசும் தேவையற்றப் பேச்சுக்களும் தன் காதில் விழும் என்பதால் ஆளை விடுங்கடா சாமி என்று கிச்சன் கிங்டம்மிற்குள் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்ளச் சென்று விட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர் சென்றுவிட்டாரா என்று ஹாலின் நடுவில் நின்று உறுதி செய்துவிட்டு பத்மாவதியின் அருகில் அமர்ந்த விஜயலெட்சுமி அவரது பாணியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல பேச்சை ஆரம்பித்தார்.
“ஏன் பத்மா உங்காத்துக்கு ஒரே நேரத்துல ரெண்டு மருமகள்கள் வரப் போறாள் போல?” என்று வத்தி வைக்க
பத்மாவதி குழம்பியவராய் “ரெண்டு மருமாளா? என்ன பேசறேள் மன்னி? நேக்கு விளங்கல” என்றுச் சொல்லிவிட்டு அண்ணன் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
விஜயலெட்சுமி சமையலறையை நோட்டமிட்டவாறே “உன் நாத்தனார் அழகுச்சிலையா ஒன்னை பெத்து விட்டுருக்காளே அதுவும், நம்ம நந்தனும் அடிக்கடி ஒன்னா பேசிண்டிருக்கறதை நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கேன்டிமா. தீபாவளி அன்னைக்கு தோட்டத்துல ரொம்ப நேரம் ஏதோ பேசி சிரிச்சிண்டிருந்தா. இன்னைக்கு டிராபிக்ல நம்ம நந்தனோட பைக் என் கார் கிட்ட தான் நின்னுண்டிருந்தது. அவன் பின்னாடி ஒரு பொண்ணு அவனோட ஏதோ சிரிச்சு சிரிச்சு பேசிண்டிருந்தா. நானும் யாருடா அதுனு பாத்தா கடைசில அது மதுரவாணியோட மூத்தப் பொண்ணு, அதான் அந்த கிருஷ்ணா” என்றுச் சொல்ல பத்மாவதிக்கு தலையில் இடி விழுந்தது போலவாயிற்று.
அவரது அதிர்ந்த முகத்தோற்றத்தைப் பார்த்த விஜயலெட்சுமி “நான் அவா ரெண்டு பேரும் பழகறதை தப்பா நெனைச்சிண்டு உன்னண்ட சொல்லலைடி பத்மா! ஏன்னா மதுரவாணி இந்தாத்தோட பொண்ணு. என்ன தான் அவ ஓடிப் போய் இந்தாத்துக்கு அவமானத்தைத் தேடிக் குடுத்திருந்தாலும் அது பழைய கதையோன்னோ. வருஷமும் இருபதுக்கு மேல ஆச்சு. நீயும் அந்த குழந்தேள் முகத்தைப் பார்த்து பழசை எல்லாம் மறந்து அந்த கிருஷ்ணஜாட்சியை உன் மருமகளா ஏத்துக்க தயாரியோட்டியோனு…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பத்மாவதி கை உயர்த்தி அவர் பேசுவதை நிறுத்துமாறு சைகை காட்ட நாத்தனாரின் முகத்தில் இருந்த அனலில் பேச்சை நிறுத்தி அமைதியானார் அவர்.
பத்மாவதி கடுஞ்சினத்துடன் “என்ன பேசறேள்னு புரிஞ்சு தான் பேசறேளா மன்னி? நான் செத்தாலும் அந்த மதுரவாணியோட பொண்ணு இந்த ஆத்து மருமகளா வர நான் ஒத்துக்க மாட்டேன். அருமையா என் பிள்ளைங்க ரெண்டு பேரையும் நான் வளர்த்தது அவளோட பொண்ணுங்களுக்காகவா? அப்பிடி மட்டும் ஒன்னு நடந்தது வையுங்கோ நீங்க இந்த பத்மாவதியை உயிரோட பார்க்க மாட்டேள். ஏதோ பெத்தவா இல்லாத குழந்தேள்னு ரெண்டையும் விட்டு வச்சேனே தவிர அவா என்னைக்குமே எனக்கு ஆகாதவா தான் மன்னி” என்றுச் சொல்ல
விஜயலெட்சுமி “அது என்னவோ வாஸ்தவம்டி பத்மா. ஆனா நான் என்ன சொல்ல வர்றேன்னா..” என்றுப் பேசிக் கொண்டிருந்தவர் மைதிலி ஜூஸ் தம்ளருடன் வரவே பேச்சை நிறுத்திவிட்டு அவரிடமிருந்து தம்ளரை வாங்கிக் கொண்டார்.
மைதிலி மீண்டும் உள்ளே செல்லவே பத்மாவதியிடம் “நான் என்ன சொல்ல வர்றேனா நம்ம நந்தனை அந்தப் பொண்ணை விட்டு விலக்கி வைக்கணும். அவன் இருக்கிற திசைநாமத்துக்கே அவ வரக் கூடாது” என்றுச் சொல்லிவிட்டு ஜூசை குடிக்கத் தொடங்கினார்.
பத்மாவதியும் தீவிர முகபாவத்துடன் “அதுல்லாம் சரி மன்னி! ஆனா எப்பிடி அவாளை விலக்கி வைக்கறது?” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “சித்தம்மா” என்று அழைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் நீரஜாட்சி.
அவளைக் கண்டதுமே விஜயலெட்சுமியின் மூளை கிரிமினல் வேலையை ஆரம்பித்தது. அவர்கள் இருவரையும் முறைத்தவாறே வந்தவளிடம் “ஏன்டிம்மா நீரஜா பாட்டி கிட்ட மட்டும் தான் பேசுவியோ? இங்க குத்துக்கல்லாட்டம் ரெண்டு பேர் உக்காந்திண்டிருக்கோமே எங்களண்ட பேசுனா ஆகாதா?” என்று குத்தலாகவே பேச்சை ஆரம்பித்தார் அவளிடம்.
அவளோ இவரைப் பார்த்து “என்ன பண்ணுறது பெரியம்மா? எனக்கு கல்லு, மண்ணோட பாஷை தெரியாதே! அதுவுமில்லாம இக்னோர் நெகட்டிவிட்டிங்கிறது என்னோட பாலிஸி! அதுக்கு ஏத்த மாதிரி நான் எதிர்மறையான மனுசங்க கிட்ட இருந்து விலகி நின்னுக்கிறேன்” என்றுச் சொல்லி ஒரு ஏளனமான உதட்டுவளைவுடன் பத்மாவதியைப் பார்த்துவிட்டு ஹாலின் வலதுபுறத்தை நோக்கி “சித்தம்மா” என்றுக் கத்த மைதிலி சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.
“என்னடி வந்ததும் வராததுமா உன் சித்தம்மாவை ஏலம் விட்டுண்டிருக்க? என்ன விஷயம்” என்க
அவளோ கண்ணைச் சிமிட்டியபடி “அதெல்லாம் சித்தம்மா கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்லுவேனாக்கும்” என்க சீதாலெட்சுமியும் தூக்கம் கலைந்து ஹாலுக்கு வந்துவிட்டார்.
“ஏன்டி இப்போ சித்தம்மாக்காக எந்த ராஜகுமாரனை அழைச்சிண்டு வந்திருக்கேனு இந்த கூப்பாடு?” என்று கேலியாக கேட்க அவரைப் பார்த்து உதட்டை வளைத்த நீரஜாட்சி
“உனக்கு என்னோட பட்டுவே ஓவர். இதுல வேற ராஜகுமாரன் கேக்குதாக்கும்? சித்து திஸ் டூ மச். கொள்ளுப்பேரனை கொஞ்ச வேண்டிய வயசுல உனக்கு ராஜகுமாரன் கேக்குதோ?” என்றுச் சொன்னபடியே ஹாலின் சோஃபாவில் கைப்பிடித்தபடி அழைத்துச் சென்று அவரை அமர வைத்துவிட்டு வழக்கம் போல அவரது காலடியில் அமர்ந்து கொண்டாள்.
ஆவலுடன் தன் கையிலிருக்கும் ஃபோல்டரிலிருந்த விசிட்டிங் கார்டை எடுத்து சீதாலெட்சுமியிடம் காட்டியவள் “இது சென்னையிலயே ரொம்ப ஃபேமஸான எக்ஸ்போர்ட் கம்பெனியோடது. இங்கே நான் நாளைக்கு நான் இண்டர்வியூவுக்கு போகப் போறேனே!” என்றுச் சொல்ல பத்மாவதிக்கும் இவள் பிழைத்துக் கொள்வாள் என்ற எண்ணம்.
நீரஜாட்சி “இண்டர்வியூங்கிறது சும்மா ஃபார்மாலிட்டிக்கு தான். எங்க காலேஜ் சீனியர் அக்கவுண்டண்டோட ரிலேட்டிவ் லேடி தான் அங்க ஃபினான்ஸ் செக்சனுக்கு சீஃப். சோ நான் செலக்ட் ஆன மாதிரி தான். எனக்கு மட்டும் இந்த வேலை கிடச்சதுனா..” என்று அவள் சொல்லும் போதே வீட்டின் காம்பவுண்டுக்குள் கார் வரும் சத்தமும், ராயல் என்ஃபீல்டின் சத்தமும் ஒரே நேரத்தில் கேட்க அனைவரின் கவனும் வாயிலை நோக்கித் திரும்பியது.
காரிலிருந்து இறங்கிய ஹர்சவர்தன் வீட்டை நோக்கி நடைபோட அவனுக்கு எதிரே கிருஷ்ணஜாட்சியுடன் வந்து இறங்கினான் ரகுநந்தன். இருவரையும் ஏறிட்டவன் இறுகிய முகத்துடன் வீட்டினுள் செல்ல அவனைத் தொடர்ந்து இருவரும் அவள் செய்த கேக்கைப் பற்றி பேசியபடியே வீட்டினுள் வர அவர்களின் பேச்சு அந்த வீட்டில் நால்வருக்கு அந்தக் காட்சி மனதில் புகைச்சலை உண்டு பண்ணியது.
அதில் ஒருவன் ஹர்சவர்தன். மீதமுள்ள மூவர் விஜயலெட்சுமி, பத்மாவதி கடைசியாக நீரஜாட்சி. அவளுக்கு என்றுமே ரகுநந்தனிடம் நம்பிக்கையோ நல்லெண்ணமோ இல்லை.
அவனுடன் கிருஷ்ணஜாட்சி பேசிக் கொண்டு வருவதைக் கண்டதும் மனதிற்குள் “இந்த கிருஷ்ணாக்கு புத்தியே இல்லை. இவன் கூட என்ன பேச்சு?” என்று அவள் பல்லைக் கடித்த காட்சி விஜயலெட்சுமியின் கண்ணில் பட அதை பத்மாவதியிடம் சுட்டிக் காட்டியவர் அவரது அறைக்கு அழைத்துச் சென்றார் மெதுவாக.
“பத்மா! இந்த சின்னப்பொண்ணுக்கு நம்மாத்து மனுஷா யாரையும் ஆகாதோன்னோ! நேக்கு ஒரு ஐடியா தோண்றது” என்று தனது திட்டத்தை விவரிக்க பத்மாவதி
“திட்டம் என்னவோ நன்னா தான் இருக்கு மன்னி. ஆனா இந்த நீரஜா ஜெகஜால கில்லாடி. நம்ம சொல்லறதை அவ கேட்டுப்பாளா?” என்று வினவ விஜயலெட்சுமி
“அதுல்லாம் கேப்பாடி! அவ அக்கானா அவளுக்கு உயிர்” என்க அவருமே அதை ஒத்துக் கொண்டார்.
இருவரும் ஹாலுக்கு வந்த போது அங்கே பட்டாபிராமனும், சீதாலெட்சுமியும் அமர்ந்திருக்க சீதாலெட்சுமியின் காலடியில் அமர்ந்திருந்த நீரஜாட்சியும், அவளுக்குப் போட்டியாக பட்டாபிராமனின் மடியில் தலைச்சாய்த்திருந்த ரகுநந்தனும் அவர்களை கிண்டல் செய்து சிரித்து கொண்டிருந்த வேங்கடநாதன், கோதண்டராமன் கிருஷ்ணஜாட்சியிடம் அதைக் காட்டிக் கேலி செய்து கொண்டிருந்தனர்.
விஜயலெட்சுமி பத்மாவதியின் காதில் “நான் சொன்னேனோல்லியோ? உன் இளைய பையனுக்கும் அந்த நீரஜாவுக்கும் சுத்தமா ஆகாது. நம்ம திட்டம் கண்டிப்பா ஜெயிக்கும்னு நேக்கு பூரண நம்பிக்கை இருக்கு” என்க ரகுநந்தனைப் பார்த்து முகம் சுழித்த நீரஜாட்சி அவருடைய நம்பிக்கையை இன்னும் அதிகரித்தாள்.
அதன் பின் விஜயலெட்சுமி வீட்டின் பெரியவர்களிடம் வணக்கம் சொல்லிவிட்டு வந்த விஷயத்தையும் சொல்ல அனைவருக்குமே இதில் ஆனந்தம் தான். கிருஷ்ணஜாட்சி கோதண்டராமனுடன் அமர்ந்திருந்த ஹர்சவர்தனிடம் “அம்மாஞ்சி கங்கிராட்ஸ்” என்றுச் சிரித்த முகமாகச் சொல்ல அவனுக்கோ எனக்கு இப்பொது திருமணம் வேண்டாம் என்று வாய்விட்டுக் கத்த வேண்டும் போல் ஆங்காரம் வந்தது.
ஆனால் மகிழ்ச்சியில் பூரித்த தாயின் முகம் கண்ணில் படவே அந்த வார்த்தைகள் அவன் தொண்டை குழியிலேயே சமாதி ஆகிவிட அவனும் சிரமத்துடன் புன்னகைக்க பத்மாவதி அவனுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.
“என் ராஜா! இன்னைக்கு நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா ஹர்சா?” என்று அவனைப் பார்த்தவரின் கண்ணில் சந்தோசக்கண்ணீர் மினுமினுக்க ஹர்சவர்தனுக்கு அதற்கு மேல் வேறு எதுவும் தேவை இல்லை என்றே தோன்ற அவனும் சிரித்த முகத்துடன் இருந்து கொண்டான்.
அதன் பின் ஒருவர் மாற்றி ஒருவராக அவனுக்கு வாழ்த்து சொல்ல நீரஜாட்சி இன்னும் சீதாலெட்சுமியிடம் அமர்ந்திருப்பதை அறிந்த கிருஷ்ணஜாட்சி அவளிடம் வந்து “நீரு அம்மாஞ்சிக்கு கங்கிராட்ஸ் சொல்லிட்டு வா” என்றுச் சொல்ல அவள் முகத்தைச் சுருக்கி கொண்டு மறுத்தாள். கிருஷ்ணஜாட்சி கண்ணை உருட்டி மிரட்ட வேறு வழியின்றி கடமைக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லிவிட்டு வந்தாள்.
அதன் பின் சீதாலெட்சுமியிடம் சொல்லிவிட்டு அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றவளை பத்மாவதியிடம் விஜயலெட்சுமி சுட்டிக்காட்ட அவர் தான் இனி பார்த்துக் கொள்வதாகக் கூறி அவளைத் தொடர்ந்துச் சென்றார்.
நீரஜாட்சி நீருற்றைத் தாண்டும் முன்னரே “நீரஜா கொஞ்சம் நில்லுடிம்மா” என்ற பத்மாவதியின் குரல் கேட்க அதை மதிக்காமல் எப்போதும் போல செல்ல விழைந்தவளை அவரது கரம் அழுத்தமாய் பற்றித் தடுக்க நீரஜாட்சியால் அதற்கு மேல் நகர இயலவில்லை.

இறுகிய முகத்துடன் அவரை நோக்கி திரும்பியவளை அவர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
என்னவென்று ஏறிட்டவளை “உன்னைப் பார்த்தா சரியா இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி உன் அப்பாவை பார்த்த மாதிரியே இருக்குடி நேக்கு. அதே கோவம், அதே பிடிவாதம், அதே வைராக்கியம். சும்மா சொல்லக் கூடாது. மதிவாணனோட வாரிசுங்கிறதை ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கற” என்று பத்மாவதி புகழ அவளோ தன் தந்தையின் பெயரைக் கேட்டதும் சிறிது அமைதியானாள்.
அவரிடமிருந்து கையை உருவிக் கொண்டவள் “எங்க அப்பாவை புகழ்ந்தது போதும் மாமி. என்ன விஷயம்னு சொல்லுங்க. எனக்கு நிறைய உருப்படியான வேலைகள் இருக்கு. நாளைக்கு வேற இண்டர்வியூ. அதுக்கு பிரிப்பேர் ஆகணும்” என்க
அவரோ “போகாத இண்டர்வியூவுக்கு ஏன்டிம்மா பிரிப்பேர் ஆகணும்?” என்றுப் புன்னகை விரிய சொல்லிவிட்டு அதற்கு அவளின் அதிர்ச்சியை ரசித்தார்.
நீரஜாட்சி கடுப்புடன் “இங்க பாருங்க மாமி! நான் ஒன்னும் கிருஷ்ணா இல்ல. நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுறதுக்கு. என் கிட்ட பேசறதுக்கு முன்னாடி கொஞ்சம் நிதானிச்சு பேசுறது உங்களுக்கு நல்லது” என்றுச் சொல்லிவிட்டு கோபம் மின்னும் விழிகளுடன் அவரை எரிக்கத் தொடங்கினாள்.
பத்மாவதியோ “அதையே தான்டிம்மா நானும் சொல்லறேன்! நீ கிருஷ்ணஜாட்சி மாதிரி இல்ல. நோக்கு வைராக்கியம் ஜாஸ்தி. அதனால தான் உன்னால இன்னும் என்னையோ, என் பசங்களையோ ஏத்துக்க முடியல. ஆனா உன் அக்கா மதுரவாணியை மாதிரி! அவளால ஈஸியா எங்காத்துப்பசங்களோட பழக முடியறதுலயே அது தெரியறது. ஆனா என்ன பழக மட்டும் தான் செய்யறாளா இல்ல இந்த ஸ்ரீனிவாசவிலாசத்துல நிரந்தரமா தங்கிடலாம்னு எதுவும் திட்டத்தோட இருக்கலானு யாருக்கு தெரியும்?” என்று வஞ்சகத்துடன் உரைக்க நீரஜாட்சி பொறுக்க முடியாமல் கத்திவிட்டாள்.
“போதும் மாமி! ரொம்ப பேசிட்டிங்க. கிருஷ்ணாவுக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட் ஜாஸ்தி. உங்காத்துல போய் அவ நிரந்தரமா தங்க பிளான் போடுறானு சொல்லுறிங்களே, எதை ஆதாரமா வச்சு என் கிருஷ்ணாவை பத்தி இப்பிடி அவதூறா பேசிறிங்க?” என்றுச் சீறியவளை அவளுக்குச் சிறிதும் குறையாத சீற்றத்துடன் எதிர்கொண்டார் பத்மாவதி.
“உன்னோட அக்கா என் நந்தனோட சிரிச்சு சிரிச்சு பேசிண்டு சுத்தறானு எனக்கு தகவல் வந்துச்சு. நன்னா கேட்டுக்கோடிம்மா! உன் அக்காவை என்னைக்குமே நான் என்னோட மருமகளா ஏத்துக்க மாட்டேன். இப்பிடி என் பையன் பின்னாடி பல்லை இழிச்சிண்டு போக வேண்டாம்னு உன் அக்கா கிட்ட நீயே சொன்னாலும் அவ கேக்க மாட்டாடி” என்க
நீரஜாட்சி கடுங்கோபத்துடன் அவரை விரல் நீட்டி எச்சரித்து “மரியாதையா பேசுங்க மாமி! இவ்ளோ நேரம் நான் உறவுமுறையை நினைச்சும், உங்க வயசை நினைச்சும் அமைதியா இருக்கேன். அதை என்னோட பலகீனம்னு நினைச்சு பேசாதிங்க. என் கிருஷ்ணா ஒன்னும் உங்க பையன் பின்னாடி சுத்தலை. அவன் தான் அத்தங்கா அத்தங்கானு அவ பின்னாடி சுத்திட்டிருக்கான். நான் அதைப் பத்தி கிருஷ்ணா கிட்ட கேட்டதுக்கு கூட அவ அம்மாஞ்சி எனக்கு நல்ல ஃப்ரெண்டுனு சொன்னாளே தவிர அவ மனசுல உங்க பையன் மேல நீங்க நினைக்கிற மாதிரி எந்த எண்ணமும் இல்லை. இவ்ளோ ஏன் இந்த உலகத்தோட கடைசி ஆம்பளை உங்க நந்தன் தான்னு ஒரு நிலைமை வந்தா கூட என் அக்கா அவனை திரும்பிக் கூடப் பார்க்க மாட்டா” என்றுச் சொல்ல பத்மாவதி சிரித்தார்.
“அக்கா மேல அவ்ளோ அக்கறை இருக்குதா நோக்கு? அப்போ இதையும் கேட்டுக்கோ! என்னோட நந்தன் மனசை கிருஷ்ணஜாட்சியோட அழகு தான் கலைச்சிருக்கு, அவ அப்பிராணினே வச்சுப்போம். ஆனா என் பையன் அவ்ளோ ஈஸியா பிடிச்சவாளா விட்டுக்குடுக்க மாட்டான். அவளே விலகிப் போனாலும் என்னோட நந்தன் அவளை விட்டு விலக மாட்டான். அதே நேரம் உன்னோட அக்கா இந்த ஆத்தோட மருமகளா வந்தாலும் என்னால அவளை மனப்பூர்வமா ஏத்துக்க முடியாது” என்று தீர்மானமாகச் சொல்ல நீரஜாட்சி கோபத்தை அடக்கியபடி இனி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
“அதனால நோக்கு கொஞ்சமாச்சும் உன் அக்கா மேல அக்கறை இருந்தா என் நந்தனும் உன் அக்காவும் நெருங்காம கவனிக்கிற வேலையை செய். உன் கண் மறைச்சு கூட அவா ரெண்டு பேரும் பழகிடக் கூடாது” என்று அவர் கூற
நீரஜாட்சி கடுப்புடன் “என் கிருஷ்ணாவை நான் பார்த்துப்பேன். ஆனா உங்க மகனை என்ன செய்யுறதா உத்தேசம்? வேணும்னா நான் அவனோட பாடிகார்டா இருந்து 24 ஹவர்ஸும் அவன் கிருஷ்ணாவை சந்திக்கிறானா இல்லையானு அவனை கண்காணிச்சிட்டே இருக்கவா?” என்று கேட்டுவிட்டு முகத்தைச் சுழித்துக் கொண்டாள்.
பத்மாவதி “அதுல்லாம் தேவை இல்ல. நீ அவனோட கம்பெனில வேலைக்குச் சேர்ந்துடு. அதுவும் 24 மணி நேரமும் அவன் கூடவே இருக்கற மாதிரி தான். ஆபிஸ் நேரத்துல அவன் எங்கே போறான் வர்றானு உன்னாலயும் ஈஸியா தெரிஞ்சிக்க முடியும். அவன் உன் அக்காவை சந்திக்கவோ பேசவோ முயற்சி பண்ணுனா அதை உன்னால தடுக்கவும் முடியும்” என்று பொறுமையாய் தன் திட்டத்தைக் கூற நீரஜாட்சி இவ்வளவு நாட்கள் தனக்கு வேலை கிடைத்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கண்டுவைத்திருந்த கனவுகள் அனைத்தும் அவளைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தன.
ஆனால் அந்த ரகுநந்தனால் தன்னுடைய அக்காவின் நடத்தை கேலிக்குரியதாக ஆகக் கூடாதென்றால் அவள் பத்மாவதியின் திட்டத்துக்கு உடன் பட்டே ஆகவேண்டும். கனத்த மனதுடன் “சரி மாமி! நான் உங்க சின்ன மகனோட கம்பெனியிலயே ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றுச் சொல்ல பத்மாவதிக்கோ தன் தலை மீது யாரோ கூடை பூக்களை தூவுவது போன்ற உணர்வு.
மகிழ்ச்சியுடன் “இது போதும்டிம்மா! நான் உன்னை முழுசா நம்புறேன். நீயாச்சும் இத்தனை நாள் உங்களை கவனிச்சுகிட்ட மாமா வீட்டுக்கு உண்மையா இருக்கியே” என்றுச் சொன்னபடி அவளது நாடியைப் பிடித்து முத்தமிட்டுவிட்டுச் சென்றார்.
செல்லும் போதே விஜயலெட்சுமியின் “பத்மா! அந்த சின்னவளுக்கு நம்ம நந்தனை ஆகவே ஆகாது. கிருஷ்ணஜாட்சியையும் நந்துவையும் பிரிக்கணும்னா அது அவளாலே மட்டுமே முடியும். நீயோ நானோ சொன்னா கேக்கறவன் இல்ல உன் இளையப்பிள்ளை. அதனால தான் சொல்லுறேன் இந்த நீரஜாவை நம்ம கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனியில ஜோலிக்குச் சேர சொல்லு. அதுக்கு அப்புறம் அவ கண்ணுக்கு தப்பி நந்து எப்படி கிருஷ்ணஜாட்சியைச் சந்திப்பான்?” என்ற வார்த்தைகள் நினைவில் தோன்ற “திட்டம் போடறதில மன்னியை அடிச்சிக்க முடியாது” என்று சிலாகித்த வண்ணம் வீட்டுக்குள் சென்றார்.
நீரஜாட்சியோ வேலைக்குச் சென்ற பிறகாவது இந்த அவுட் ஹவுஸ் வாசத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என்று நம்பியிருந்தவள் அந்த நம்பிக்கை சிதைந்த சோகத்தில் அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றாள்.
ஆனால் இவர்களின் பேச்சை ரகுநந்தன் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்ததை அவர்களில் ஒருவர் கூற அறியவில்லை. அன்னையின் தேவையற்ற பயம் அவனுக்கு அடக்கமாட்டாத சிரிப்பையே கொடுத்தது. அதே நேரம் கிருஷ்ணஜாட்சியிடம் இருந்து தன்னை விலக்கி வைக்கிறேன் என்று நீரஜாட்சியுடன் தான் நெருக்கமாவதற்கான வழியைக் காண்பித்துச் சென்ற அன்னை அவன் கண்களுக்கு தெய்வமாகவே காட்சியளித்தார்.
ரகுநந்தன் “டேய் நந்து பெரிய அத்தங்கா சொன்ன மாதிரி இந்த குயினுக்கு செக் வைக்க வேண்டிய நேரம் வந்துடுத்துடா. இதுல மெயின் காயினே பெரிய அத்தங்கா தான். தெரிஞ்சோ தெரியாமலோ என் காதலுக்கு உதவியிருக்கா. இனி அவா பேரைச் சொல்லியே இந்த நீரஜாட்சியை நம்ம வழிக்கு சுலபமா கொண்டு வந்துடலாம் போல” என்று சந்தோசத்தில் துள்ளிக் குதித்தபடியே வீட்டை நோக்கி நடைப்போட்டான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

