நீரஜாட்சியை அமர்த்திக் கொண்டு கற்பனையில் மிதந்தபடி சென்றவனின் பைக் என்னவோ சாலையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் சொந்தக்காரன் தான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். பைக்கை ஓட்டியபடியே “ஏன் நீரு கன்சாலிடேட்டட் மார்க் ஷீட், புரொவிஷனல் சர்டிஃபிகேட் வாங்க ஏன் இவ்ளோ ஆர்வமா போற? எப்பிடியும் மன்த் ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட் பண்ணுவாங்களே? மெதுவா வாங்கிக்க கூடாதா?”என்று வாயை விட
அவன் பின்னே கடமையே என்று அமர்ந்து வந்த நீரஜாட்சி “எவ்ளோ சீக்கிரம் அதை கையில வாங்குறேனோ அவ்ளொ சீக்கிரமா நான் ஜாப்கு போயிடுவேன். அதனால தான் இவ்ளோ ஆர்வமா போயிட்டிருக்கேன்” என்க
அவனோ சாதாரணமாக “அவ்ளோ சீக்கிரமா ஜாப்கு போய் நீ என்ன பண்ண போற?” என்று கேட்டு வைக்க
அவள் “நிறைய பண்ண வேண்டியது இருக்கு. அதுல முதல் விஷயம் எனக்கு நியூ ஜாப் கிடைச்சு முதல் மாசம் சம்பளம் வாங்குனதும் அவுட் ஹவுஸை காலி பண்ணிட்டு என்னோட ஆபிஸ் இருக்கிற ஏரியால ஒரு வீட்டை வாடகைக்குப் பார்த்துட்டு நானும் கிருஷ்ணாவும் போயிடணும். மத்தது எல்லாம் அதுக்கு அப்புறம் தான்” என்றுச் சொல்லி ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தவனின் காதைப் பிடித்து திருகி பூலோகத்துக்கு அழைத்து வந்தாள்.
அதைக் கேட்டதும் ரகுநந்தனின் மனதில் ஒரு மின்னல் வெட்டி இடியுடன் கூடிய கனமழை பெய்ய ஆரம்பிக்க அங்கே வெள்ளம் வருவதற்குள் நீரஜாட்சியின் கல்லூரி வந்துவிட்டது. அவளை உள்ளே இறக்கிவிட்டவனிடம் “கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் சீக்கிரமா வாங்கிட்டு வந்துடுவேன்” என்க
அவனோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் “அவுட் ஹவுஸை விட்டுப் போகணும்னு என்ன அவசியம் இருக்கு?” என்று கேட்டு அவளின் உஷ்ணப்பார்வையை வாங்கிக் கட்டிக் கொண்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவனை முறைத்தபடி கல்லூரி படிகளில் ஏறியவள் நேரே அலுவலகத்தினுள் சென்று அவர்கள் காட்டிய குறிப்பேடுகளில் கையெழுத்திட்டு விட்டுத் திரும்ப அவர்கள் கல்லூரி அலுவலகத்தின் சீனியர் அக்கவுண்டெண்ட் அவளை அழைத்தார்.
புன்னகையுடன் வந்து நின்றவளிடம் ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்து “இந்த கம்பெனியில என்னோட ரிலேட்டிவ் லேடி தான் ஃபினான்ஸ் டிபார்ட்மெண்டோட ஹெட். இவங்க கன்சர்ன்ல இப்போ ஃபினான்ஸ் செக்சனுக்கு டிரெயினிஸை செலக்ட் பண்ணுறாங்க. இது உனக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்மா” என்க அவள் மகிழ்ச்சியுடன் “தேங்க்யூ சோ மச் சார். நான் டுமாரோ போய் பார்க்கிறேன்” என்றுச் சொல்லிவிட்டுத் துள்ளலுடன் வெளியே வந்தாள்.
நேரே பார்க்கிங்கிக்குப் போனவளுக்கு கவிதாவிடம் இருந்து போன் வர “கவி நான் சர்டிஃபிகேட்ஸ் வாங்கிட்டேன்டி. ஹான்! நானா, நான் அந்த வீணாப்போனவன் கூட தான் வந்திருக்கேன்டி….அஹான்! அவன் பக்கத்துலயே இருந்தாலும் நான் இப்பிடி தான் பேசுவேன் போவியா…..ஓகேடி…இல்ல இல்ல டுமோரோ நான் ஒரு கன்சர்ன்கு போறேன்….தேங்க்ஸ்டி….ம்ம்..பை” என்று அவளிடம் பெசிவிட்டுப் போனை வைத்தவள் ரகுநந்தன் நின்ற இடத்தை நோக்கி வர அங்கே அவன் பைக்கை நிறுத்திவிட்டு கூலர்ஸுடன் நிற்க அவனுக்கு எதிரே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர் சில மாணவிகள்.
நீரஜாட்சி திரும்பி அவனைப் பார்க்க அவனோ அந்தப் பெண்களின் பார்வையை அறியாதவனாய் போனை நோண்டிக் கொண்டிருக்க மனதிற்குள் “இவன் இவ்ளோ நல்லவானா நீரு?”என்று தனக்குள் பேசிக் கொண்டபடி அவன் அருகில் வந்து நின்றாள்.
கையைக் கட்டிக் கொண்டு அவனைக் குறுகுறுவென்று பார்க்க அவனுக்கோ அத்தைமகளின் இந்த கொக்கிப் போட்டு இழுக்கும் பார்வையில் துளியளவும் ரசனை இல்லை என்பது நன்றாகத் தெரிய “எதுக்கு இப்போ இப்பிடி பார்க்கிறானு தெரியலயே ரகு. இந்தப் பார்வைக்கு அவ டிக்ஸ்னரியில என்ன அர்த்தம்னு புரியலயே. சரி எதுக்கும் சிரிச்சு வைப்போம்” என்றவாறு அவளைப் பார்த்துச் சிரிக்க அவள் அதற்கு எந்த ரியாக்சனும் இல்லாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள்.
பின்னர் மெதுவாக “நான் போறதுக்கு முன்னாடி அவுட் ஹவுஸை விட்டு ஏன் போகணும்னு நீ கேட்டில்ல? அது ஒன்னும் இல்ல அம்மாஞ்சி! அங்கே இருந்தா எவ்ளோ டிரை பண்ணுனாலும் நெகட்டிவ் எனர்ஜி தாக்குது. அதான் போகணும்னு முடிவு பண்ணிட்டோம்” என்றுச் சொல்ல
ரகுநந்தன் “நீ கொஞ்சமாச்சும் தாத்தா பாட்டியைப் பத்தி நெனைச்சு பார்த்தியா நீரு? அவா ரெண்டு பேருக்கும் நீனா உயிர் தெரியுமா?” என்க
அவள் தோளைக் குலுக்கிவிட்டு “தெரியுமே! அதான் நாங்க போகிறப்போ சித்துவையும், பட்டுவையும் எங்க கூடவே கூட்டிட்டுப் போயிடுவோம். அந்த வீட்டையும், அவுட் ஹவுஸையும் நீ, உங்க அம்மா, உங்க அண்ணா மூனு பேருமா சேர்ந்து ராஜ்ஜியம் கட்டி ஆளுங்க” என்றுச் சொல்லிவிட்டு அவன் பின்னே பைக்கில் அமர்ந்தாள்.
ரகுநந்தன் தாத்தா பாட்டியையும் அழைத்துச் சென்று விடுவோம் என்பதில் கடுப்பானவன் ஏதோ சொல்லப் போக அதற்குள் அவன் போன் அழைக்கவே அதை எடுத்து காதில் வைத்தான்.
“சொல்லுடா அண்ணா” என்றவனிடம் ஹர்சவர்தன் உடனே ஹோட்டலுக்கு வருமாறும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச வேண்டும் என்றும் சொல்ல அவன் சரியென்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
அவன் பின்னே அமர்ந்திருந்தவளிடம் “கொஞ்சம் இறங்கிக்கறியா?” என்க அவள் “ஏன்? என்னாச்சு?” என்று கேட்கவும் “ஒன்னுமில்ல! ஹர்சா என்னை ஹோட்டலுக்கு வரச் சொல்லுறான். சோ நீ என்ன பண்ணுற ஒரு ஆட்டோவோ கால் டாக்சியோ பிடிச்சு போயிடு” என்றுச் சொல்லிவிட்டு சாவியைத் திருக நீரஜாட்சி கடுப்புடன் கீழே இறங்கினாள்.
“உன்னை எல்லாம் நம்பி வந்தா நடுரோட்டுல தான் நிக்கணும்” என்று அவள் வழக்கம் போல அவனை அர்ச்சிக்கத் தொடங்க அவன் ஏற்கெனவே அவளது பேச்சில் எரிச்சலில் இருந்தவன் அது அதிகரிக்கவே அவனும் பதிலுக்குக் கத்த ஆரம்பித்தான்.
“ஆமாடி! நீ அப்பிடியே என்னை நம்பி அமெரிக்காவுக்கு வந்துட்ட. நான் உன்னை பாஷை தெரியாத ஊருல விட்டுட்டு ஓடுறேன் பாரு” என்றுக் கத்த
அவள் “என்ன சொன்ன ‘டி’யா?” என்று முறைக்க
அவனும் சளைக்காமல் “ஆமாடி! நீ பொண்ணு தானே! நீ மட்டும் வார்த்தைக்கு வார்த்தை ‘டா’ போட்டுக் கூப்பிடறச்ச நாங்க மட்டும் உன்னை கண்ணே, கண்மணியேனு கொஞ்சணுமா? அப்பிடி தான் சொல்லுவேன்” என்று பதிலளிக்க
அவள் சுற்றி முற்றி எதையோ தேட அவன் அதைக் கண்டுகொண்டவனாக “என்ன தேடுற? கல் எதாச்சும் கிடைக்குமானு தேடுறியோ? என் அத்தை பொண்ணை பெத்துக்க சொன்னா பொறுக்கியை பெத்து விட்டுருக்காங்க! எப்போ யாரை கல்லால அடிக்கலாம்னு சுத்திட்டு இருக்கு இது” என்று நக்கலாகச் சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுவிட நீரஜாட்சி பல்லைக் கடித்தபடி “நீ இப்போ தப்பிச்சிட்டடா! ஆனா திரும்பி வீட்டுக்கு தானே வரணும். அங்கே நீ செத்தடா” என்றுச் சொல்லி காலை உதைத்துவிட்டு ஆட்டோவைத் தேடிச் சென்றாள்.
அவள் நல்ல நேரம் ஆட்டோவும் உடனே கிடைக்க உர்ரென்று முகத்தை வைத்திருந்தவள் கையில் வைத்திருக்கும் ஃபோல்டரில் இருக்கும் அந்த விசிட்டிங் கார்டைப் பார்த்ததும் இதனால் தன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று எண்ணிப் புன்னகைத்தாள்.
அதே நேரம் ஹர்சவர்தன் ஹோட்டலில் இருக்க அவனைத் தேடிச் சென்ற ரகுநந்தனுக்கு அண்ணனிடம் இருந்து ஒரு நல்லச் செய்தி கிடைத்தது. அது அவனது கனவுக்கான முதல் படி என்று சொன்னால் கூட மிகையாகாது.
ஹர்சவர்தன் அவர்கள் ஹோட்டல்களில் இரண்டை மட்டும் ரெசிடென்ஸியல் ஹோட்டலாக மாற்றலாம் என்ற எண்ணத்தில் இருந்தவன் இதைப் பற்றி அந்த தொழிலில் இருப்பவர்களிடன் தீர விசாரித்தப் பிறகு தன்னுடைய எண்ணத்தை தந்தையிடமும், சித்தப்பாவிடமும் கூற அவர்களும் இந்த முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.
அதைப் பற்றி பேசுவதற்கு தான் அவன் ரகுநந்தனை அழைத்திருந்தான். ரகுநந்தன் வந்ததும் அவனை அமரச் சொல்லி எதிர்காலத் திட்டங்களை விளக்கியவன் இரண்டு ஹோட்டல்களையும் ரெசிடென்ஸியல் ஹோட்டல்களாக விரிவுப்படுத்துவதற்கான பில்டிங் காண்ட்ராக்டை அவர்களின் கன்ஸ்ட்ரெக்சன் நிறுவனமான ஸ்ரீநிவாஸா கன்ஸ்ட்ரெக்சன் பிரைவேட் லிமிட்டெட்டுக்கு கொடுக்கலாம் என்று நினைப்பதாகக் கூறவும் ரகுநந்தனுக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.
இன்னும் அதில் அவன் முறைப்படி பதவி ஏற்கவில்லை தான். ஆனால் லண்டனில் இருக்கும் போதே அதனுடைய நடப்பு செயல்பாடுகள், கடந்தகால புராஜெக்ட்களைப் பற்றிய விவரங்களை சித்தப்பா மூலம் தெரிந்துகொண்டிருந்தவன் அவர்களின் கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு இந்த கான்ட்ராக்ட் கிடைத்தால் அதில் நல்ல இலாபம் ஈட்ட முடியும் என்பதால் உற்சாகத்துடன் அதற்கு சம்மதித்தான்.
இந்த கான்ட்ராக்ட் மூலம் கிடைக்கும் இலாபம் என்னவோ வலது கையிலிருந்து இடது கைக்கு பணம் பரிமாறப்படுவதைப் போல தான் என்றாலும் இது அவர்களின் கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு புது இரத்தம் பாய்ச்சுவதைப் போல இருக்கும் என்பதில் அவனுக்குச் சிறிதும் ஐயமில்லை. இப்போது கம்பெனி வளர்ச்சிக்காக அவன் வங்கிக்கடனுக்கு ஏற்பாடு செய்தாலும் அதற்கு அவன் வட்டி கட்டியே தீர வேண்டும். அதற்கு பதிலாக ஹோட்டலின் மூலம் பணம் கிடைத்தால் அது வருமானம் என்ற கணக்கில் வந்துவிடும் என்ற ஹர்சவர்தனின் கணக்கு அவனுக்கு மிகவும் சரியாகத் தோன்றியது.
இந்த டீலுக்கான பேப்பர்களை தயார் செய்ய கம்பெனி ஊழியர்களை ஏவும் அதிகாரம் இப்போதைக்கு தனக்கு இல்லாததால் ரகுநந்தன் தந்தைக்குப் போன் செய்து முதலில் ஒரு போர்ட் மீட்டிங் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அதற்கான ஏற்பாடுகளை ஆடிட்டருடன் சேர்ந்து தான் கவனித்துக் கொள்வதாக அவர் கூறவே இன்னும் இரண்டு வாரத்தில் மற்ற விஷயங்களைப் பேசிக் கொள்ளலாம் என்று அண்ணனும் தம்பியும் முடிவு செய்தனர்.
இருவரும் பேசிக் கொண்டே மதியவுணவுக்காக வீட்டுக்குக் கிளம்பி வெளியே வர அதே நேரத்தில் கிருஷ்ணஜாட்சி அவர்களின் பேக்கரிக்குச் செல்வதற்காக வெளியே வந்தவள் அவர்களின் பேக்கரி விரிவாக்கத்துக்காக வங்கிக்கடன் தொடர்பாக கரோலினுடன் பேசிக் கொண்டு வந்தவள் தனக்கு எதிரே வந்த ஹர்சவர்தனை கவனிக்காமல் அவன் மீது மோதிக் கொண்டு கீழே விழப் போக ஹர்சவர்தன் அதற்குள் சுதாரித்து அவளைப் பூக்குவியலாய் தனது கரங்களில் தாங்கிக் கொண்டான்.
கிருஷ்ணஜாட்சியோ தான் கீழே விழுந்து விடுவோம் என்று எண்ணி கண்ணை இறுக்கமாக மூடிக் கொள்ள ஹர்சவர்தன் அவளின் விழி மூடி நிற்கும் தோற்றத்தை ரசிக்கத் தொடங்கினான். கருநிற வானவில் புருவங்கள் சுழித்திருக்க, அவளின் அழகிய நீண்ட நயனங்கள் பயத்தில் இறுக்கமாய் மூடியிருக்க அவனது பார்வை அடுத்து அவள் செவ்விதழ்களில் நிலைத்தது. முகத்தின் குறுக்கே விழுந்த சுருண்ட முடிக்கற்றை ஒன்று அவளின் உதட்டில் பட்டு விளையாட அதை மெதுவாக விலக்கிவிட்டவனின் கைவிரல் ஒரு நொடி அவளின் செவ்விதழை வருடிவிட்டுச் செல்ல கிருஷ்ணஜாட்சிக்கும் ஏதோ உள்ளே குறுகுறுவென்ற உணர்வு எழுந்து அவளது அழகிய விழிகளை மலர்த்தி அவனை நோக்கினாள்.
புறவுலகை மறந்து அவர்கள் வேண்டுமானால் நிற்கலாம், ஆனால் அண்ணனைத் தொடர்ந்து வந்த ரகுநந்தன் அப்படி நிற்க முடியாதல்லவா! எனவே ஒரு கடமை தவறாத கரடித்தம்பியாக தொண்டையைக் கனைத்து அவர்களை மீண்டும் ஹோட்டலிற்கு அழைத்து வரும் கடமையைச் செவ்வனே செய்துவைக்க இருவரும் அவனது தொண்டைச்செறுமல் சத்தத்தில் திடுக்கிட்டு விலகினர்.
அவர்களைக் கையைக் கட்டிக் கொண்டு கிண்டலாகப் பார்த்தவன் அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காக கிருஷ்ணஜாட்சியிடம் “அத்தங்கா இட்ஸ் டூ பேட்! போயும் போயும் அவன் கையிலயா விழுவ? அவன் கமிட்டட் பாய். இங்கே ஒரு சிங்கிள் சிங்கம் உனக்காக காத்திருக்குங்கிறதை மறந்திட்டியோ?” என்றுச் சொல்ல அவனது கேலியை உணர்ந்த கிருஷ்ணஜாட்சி சிரிக்க ஹர்சவர்தனோ தன்னைஏறிட்டுக் கூட பார்க்காதவள் தம்பியிடம் சகஜமாகப் பேசி சிரிப்பதைக் கண்டு திகைத்தான்.
ரகுநந்தன் அவளிடம் “அத்தங்கா நீ உன்னோட வீரபாகு பேக்கரிக்கு தானே போற? வா நான் உன்னை டிராப் பண்ணிடுறேன்” என்றுச் சொல்ல கிருஷ்ணஜாட்சியும் மறுப்பு சொல்லாமல் தலையாட்ட ஹர்சவர்தன் சிலையாய் சமைந்து நிற்க ரகுநந்தன் அவனிடம் “டேய் அண்ணா! நீ வீட்டுக்கு கிளம்புடா. நான் இவாளோட பேக்கரி வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்றுச் சொல்ல அவன் மனதுக்குள் பொறுமிக் கொண்டே இருவருக்கும் விடையளித்தான்.
ரகுநந்தன் காரியத்தோடு தான் கிருஷ்ணஜாட்சியை பேக்கரியில் டிராப் செய்வதாகக் கூறி தன்னோடு அழைத்து பைக்கில் அழைத்துச் சென்றான். போகும் போதே “அத்தங்கா நீ எனக்கு ஆல்ரெடி ஒரு அட்வைஸ் குடுத்தல்ல! இப்போ எனக்கு அகெய்ன் உன்னோட அட்வைஸ் தேவைப்படுது” என்க அவளும் “சொல்லுங்க அம்மாஞ்சி” என்று ஆர்வமாய் கேட்டாள்.
அவன் பெருமூச்சுடன் “நீ சொன்னல்ல பிடிவாதக்காரங்களோட அன்பை ஜெயிக்கணும்னா ரொம்ப கஷ்டப்படணும்னு. ஆனா எவ்ளோ தூரத்துக்கு அதுக்காக பணிஞ்சுப் போகணும்? ஐ மீன் சில பேர் இருப்பா கெஞ்சினா மிஞ்சுற ரகம்னு! அவாளை எப்பிடி சமாளிக்கறது?” என்று கேட்டு வைக்க
அவளும் உற்சாகமாக “அம்மாஞ்சி! ரொம்ப கெஞ்சுனா காரியம் ஆகாது. சில இடத்துல நம்மளும் நம்ம கெத்தை காட்டணும். நமக்கு பிடிச்சவா நம்ம கையை விட்டுப் போயிடக் கூடாதுனா நம்ம தான் அதுக்கு அரண் போட்டுத் தடுக்கணும்” என்றுச் சொல்ல
அவனோ “சத்தியமா புரியல அத்தங்கா. நீ கொஞ்சம் விலாவரியா சொல்லுறியா?” என்று பரிதாபமாக பக்கவாட்டுக் கண்ணாடியில் அவளது முகத்தைப் பார்க்க கிருஷ்ணஜாட்சி சத்தம் போட்டுச் சிரித்தாள்.
பின்னர் சிரிப்பை அடக்கிக் கொண்டு “அம்மாஞ்சி! செஸ் விளையாடிருக்கிங்களா? அதுல ரொம்ப பவர்ஃபுல்லானது குயின் தான். அதை கன்ட்ரோல் பண்ணுறது கஷ்டம். பிகாஸ் அது அது ஹரிஜாண்டல், வெர்டிக்கல்னு எல்லா சைட்லயும் நகரும். பட் அதுக்கு செக் வச்சிட்டா கிட்டத்தட்ட கேம்ல நம்ம ஒரு ஸ்ட்ராங் பொஸிசனுக்கு வந்துடலாம். அதே மாதிரி தான் ரொம்ப பிடிவாதமா அடம்பிடிக்கறவங்களுக்கு மூவ் ஆக முடியாத அளவுக்கு ஒரு செக் வச்சா போதும். அவங்க நம்ம போட்ட அந்த அரணை தாண்டி போகவே முடியாது. அந்த சைக்கிள் கேப்ல நம்ம அவங்க மனசை மாத்திடணும்” என்று அறிவுரையை அள்ளி வழங்க ரகுநந்தனுக்கு நீரஜாட்சியை அவளது பிடிவாதத்திலிருந்து வெளிவரவைக்கும் டெக்னிக் பிடிப்பட்டு போனது.
அதற்குள் சிக்னல் போடப்பட ரகுநந்தன் பைக்கை நிறுத்திவிட்டு கிருஷ்ணஜாட்சிக்கு நன்றி கூற அவர்களின் கலகலப்பான பேச்சை யார் பார்க்கக் கூடாதோ அவர் பார்த்துவிட்டார். அது வேறு யாருமல்ல, பத்மாவதியின் செல்ல விஜி மன்னி தான்.
அவர்கள் பைக் நிற்கும் இடத்துக்கு பக்கவாட்டில் தான் பத்மாவதியின் காரும் நின்றது. அவர் நிச்சயதார்த்தத்துக்கு ஜோஸியர் நாள் குறித்துக் கொடுத்துவிட்டதை நாத்தனாரிடம் நேரில் தெரிவிக்கப் போய்க் கொண்டிருந்தவர் சிக்னலில் ரகுநந்தனின் பைக்கையும், அதில் அவனுடன் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணஜாட்சியையும் பார்த்துவிட அவர்களோ இதை அறியாமல் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
விஜயலெட்சுமி மனதுக்குள் “மதுரவாணியோட பொண்ணை ஹர்சாவுக்கு முடிச்சிடுவாளோங்கிற பயத்துல நாம ஒன்னு பண்ணுனா பகவான் பிரச்சனையை வேற ரூபத்துல கொண்டு வராறே! இந்த நந்தனுக்கு ஏன் தான் புத்தி இப்பிடி போறது? அப்பிடி என்ன லோகத்துல இல்லாத அழகி இந்த கிருஷ்ணஜாட்சினு இவ கூட சுத்திண்டு இருக்கான்? முதல்ல இதை பத்மா காதுல போட்டு இவா ரெண்டு பேரையும் கொஞ்சம் விலக்கி வைக்கணும். இல்லனா நாளைக்கு இவ இளைய மருமாளா அந்த ஆத்துக்குப் போய்டுவா” என்று கருவியபடி சிக்னல் விழுந்ததும் காரை எடுக்கச் சொன்னார்.
மற்ற மூவரின் நிலை இவ்வாறு இருக்க நீரஜாட்சி கல்லூரியிலிருந்து கிளம்பியவளுக்கு கவிதா போன் செய்து அவளின் அம்மா நீரஜாட்சியை வீட்டுக்கு அழைப்பதாகக் கூற அவளால் அதை மறுக்க முடியவில்லை. மகளைப் பிரிந்து இருந்த இத்தனை ஆண்டுகளில் மகளுக்கு தோழியாக, உறுதுணையாக இருந்த நீரஜாட்சியை கவிதாவின் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். அன்று அவருக்கு விடுமுறை என்பதால் அவளை தங்களது வீட்டுக்கு மதியவுணவுக்கு அழைத்திருந்ததால் நீரஜாட்சியும் சீதாலெட்சுமிக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட்டு நேரே கவிதாவின் வீட்டுக்குச் சென்றவள் அதன் பின் மாலையில் தான் வீடு திரும்பப் போகிறாள்.
அதே நேரம் கிருஷ்ணஜாட்சியுடன் சென்ற ரகுநந்தன் அவள் ஃபாண்டெண்டில் உருவன் செய்வதைப் பார்த்தவன் கன்னத்தில் கைவைத்தபடி அதில் இலயித்தவன் அங்கிருந்து இன்னும் கிளம்பாமல் கரோலினுக்கும், அவளுக்கும் வேண்டியவற்றை எடுத்துக் கொடுத்துக் கொண்டு அங்கேயே மாலை வரை தங்கிவிட்டான்.
இவர்கள் இருவரும் ஜோடியாக சிரித்து பேசியபடி சென்றதைக் கண்டு மனம் வெதும்பிப் போன ஹர்சவர்தனோ மைதிலிக்குப் போன் செய்து தான் மதியவுணவுக்கு வீட்டுக்கு வரவில்லை தனக்கு மீட்டிங் இருக்கிறது என்றுப் பொய் சொல்லிவிட்டு அவனது அலுவலக அறையில் தஞ்சமடைந்தான் மாலை வரை. இவ்வாறு அன்றைய நாளின் மாலை அவர்கள் நால்வருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அதிர்ச்சியைத் தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்தது
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

