காலையில் எழும்போதே ராகவிற்கு அன்று சோம்பலாக இருந்தது. வழக்கமாக இந்நேரம் எழுந்து உடற்பயிற்சியை முடித்திருப்பான் அவன். ஆனால் இன்றைக்கு எழுந்திருப்பதே தாமதமாகி விட்டிருந்தது. அவனது கண்கள் அடுத்து சென்றது அவன் மொபைல் மீது தான். இரவில் அவன் அனுப்பிய ‘குட் நைட்’டுக்கு அவந்திகாவிடமிருந்து பதில் வராததால் காத்திருந்து காத்திருந்து களைப்பில் உறங்கியும் விட்டிருந்தான் அவன்.
அதனால் தான் காலையில் எழுந்ததும் அவளிடமிருந்து செய்தி எதுவும் உண்டா என்று வாட்சப்பை ஆராய ஆரம்பித்தான். அவந்திகாவிடமிருந்து பதிலுக்கு ஒரு குட் நைட் வந்திருந்தது, அதுவும் இரவு இரண்டு மணிக்கு. அதைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம். வழக்கமாக இவ்வளவு நேரம் விழித்திருப்பவள் அல்ல அவள். நேற்று ஏன் தாமதமாகியிருக்கும் என்று யோசித்தபடி ஒரு ‘குட் மார்னிங்கை’ தட்டி விட்டான் அவன்.
அதன் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் போனும் கையுமாகச் சுற்றியவன் இடையிடையே நாலைந்து முறை அவளுக்கு அழைத்தும் விட்டான். ஆனால் அவந்திகாவிடமிருந்து பதிலில்லை. அவனது ஜான்சி ராணிக்கு என்னவாகியிருக்கக் கூடுமென்ற யோசனை மூளையைத் துளைக்க ஹாலின் சோபாவில் பொத்தென்று சரிந்தான் அவன்.
சில நிமிடங்கள் இப்படியே கரைய அவந்திகாவின் தொலைபேசி அழைப்பை அவனுக்குக் கடத்தியது அவனது மொபைல் நெட்ஒர்க். அழைப்பை அவசரமாக ஏற்றவன்
“ஹலோ அவந்திகா! ஆர் யூ ஓகே? ஏன் லேட் நைட் வரைக்கும் முழிச்சிருந்த? காலையில என்னோட காலைக் கூட அட்டெண்ட் பண்ணலையே! என்னாச்சு?” என்று எடுத்ததும் பதற ஆரம்பித்தான்.
அவனது பதற்றம் அவளுக்குள் குற்றவுணர்வை உண்டாக்க “ராகவ் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை… எனக்கு உன் கூடப் பேசணும் போல இருக்கு ராகவ்… நான் உன்னைப் பார்க்கணும்” என்றவளின் குரல் அவனுக்குள் ஏதோ இனம்புரியாத உணர்வு எழவே போனை வைத்தவன் விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறியவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அடுத்த சிலமணித்துளிகளில் அவந்திகாவின் வீட்டின் முன் நின்றது ராகவின் கார். காரிலிருந்து இறங்கியவன் கேட்டைத் திறந்துகொண்டு வரும்போதே வராண்டாவில் மனிபிளாண்ட் அருகே நின்று காபி அருந்திக் கொண்டிருந்தவள் அவன் கண்களில் பட்டாள். அவளைக் கண்டதும் இரவு முழுவதும் சரியாக உறங்காததை அவளது முகத்திலிருந்தே அறிந்து கொண்டான் அவன்.
அவனைக் கண்டதும் சோர்வடைந்திருந்த விழிகளில் மின்னல் பாய்ந்ததை தூரத்திலிருந்தும் அவனால் உணர முடிந்தது. வேகமாக நடைபோட்டு அவளை அடைந்தவன் “என்னாச்சு ஜான்சி ராணியோட ஃபேஸ் இப்பிடி வாடிப் போயிடுச்சு? எனி பிராப்ளம்?” என்று கேட்டவனைத் தயக்கத்துடன் பார்த்தவள் என்ன சொல்லுவதென்று புரியாமல் விழிக்க, ராகவ் அவளது முகபாவத்திலிருந்தே அவள் மனதை எதுவோ ஒன்று குழப்புகிறது என்பதைத் தெரிந்து கொண்டான்.
அவளது கரங்களைப் பற்றிக் கொண்டவன் “எதையோ யோசிச்சு நீ கன்பியூஸ் ஆகுறனு மட்டும் புரியுது… ஆனா அது என்னனு உன் மனசுக்குள்ள புகுந்து பார்க்கிற அளவுக்கு எனக்கு அறிவில்லை ஜான்சிராணி… நீ சொன்னா தானே எனக்குப் புரியும்” என்று கேட்டவனிடம் தலைகுனிந்தபடியே பேச ஆரம்பித்தாள் அவந்திகா.
“நேத்து நம்ம பேசிட்டுக் கீழே போனப்போ தியா என் கிட்ட வந்து தனியா பேசுனா ராகவ்” என்றவள் அன்றைய நிகழ்வை விளக்கத் தொடங்கினாள்.
முந்தைய தினம் ராகவுடன் பேசிவிட்டுத் தோழியர்களுடனும் வருங்காலப்புகுந்த வீட்டாருடனும் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தவளிடம் வந்த தியா அவளுடன் தனியாகப் பேசவேண்டுமென்று சொல்ல முதலில் அவந்திகா முகம் சுளித்தாலும் பின்னர் அவள் என்ன தான் சொல்ல வருகிறாள் என்று கேட்போமே என்ற ஆர்வம் உந்தி தள்ள அவளுடன் சென்றாள்.
எப்படியும் அவள் சொல்வதைத் தான் பொருட்டாகக் கூட மதிக்கப்போவதில்லை. இருந்தாலும் கேட்டுவைப்போமே என்ற பாவனையுடன் கையைக் கட்டிக்கொண்டு அவள் பேசுவதற்காகக் காத்திருந்தாள் அவந்திகா.
“நீ ரொம்ப ஹார்ட்ஒர்க்கர்னு கேள்விப்பட்டேன்… வீணா ஆன்ட்டி சொன்னாங்க… ஆனா ஹார்டா ஒர்க் பண்ணுற எல்லாருமே ஜெயிக்கிறதில்லையே… சில பேரு ஜெயிக்கலையேனு சோர்ந்து போயிடுவாங்க… ஆனா உன்னை மாதிரி சில பேரு அடுத்தவங்களோட நேம் அண்ட் ஃபேமை யூஸ் பண்ணி ஜெயிக்க நினைப்பாங்க… வாவ்! நீ ஜெயிச்சிட்ட அவந்திகா… ஆனா உன்னோட சொந்த உழைப்பால இல்லை… ராகவோட ஃபியான்ஸிங்கிற இந்தத் தகுதியால தான்… நீ ஒரு சாதாரண பொண்ணா இருந்திருந்தா விஹானோட வெயிட்டிங் ரூம் வரைக்கும் தான் உன்னால போயிருக்க முடியும்… ஆனா அந்தக் கம்பெனியோட கார்பரேட் ஈவெண்ட்ஸ் எல்லாமே உன்னோட கன்ட்ரோலுக்கு வந்திருக்குனா அதுக்குக் காரணம் ராகவ் மட்டும் தான்… அவனை யூஸ் பண்ணிக்கிட்டு நீ உன்னோட கன்சர்னை வளர்க்கிற அவ்ளோ தான்… சிம்பிளா சொல்லப்போனா சன் டியூவும், விஹானும் வேற வேற இல்லை… ஒன்னு ராகவோட ஹார்ட் ஒர்க்கால வளர்ந்த நிறுவனம், இன்னொன்னு அவனோட நேம் அண்ட் ஃபேமால வளரப்போற நிறுவனம்… நீங்க மூனுபேரும் பெருமைப்பட்டுக்கிறதுக்கு ஒன்னுமே இல்லை… உங்க கன்சர்னோட வளர்ச்சிக்கு நீங்க கபூர் ஃபேமிலியை யூஸ் பண்ணிக்கிறிங்க” என்று எள்ளி நகையாடிவிட்டு அங்கிருந்து நகர எத்தனித்தாள் அவள்.
இந்தச் சில நாட்களில் அவளுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருந்தது எங்கே அடித்தால் அவந்திகாவுக்கு வலிக்குமென்று. சன் டியூவில் எல்லாமே தாங்கள் தான் என்ற அவந்திகாவின் பெருமிதத்தை உடைக்க விரும்பியவள் ராகவின் கம்பெனிக்கும் அவர்களின் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிக் கேலி செய்தாள்.
எப்படியும் இதனால் அவந்திகா இந்த ஒப்பந்தத்தை வேண்டாமென்பாள், இதனால் அவந்திகாவுக்கும் ராகவிற்குமிடையே கருத்து வேறுபாடுகள் எழுமென்பது அவளது நப்பாசை. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கடவுள் அங்கே பிரதியுஷாவை அனுப்பிவைத்துவிட்டார்.
அவளும் ரித்திமாவும் அவந்திகாவைத் தேடி வந்தவர்கள் தியாவின் கிண்டலும் கேலியுமான பேச்சைக் கேட்டு வெகுண்டுவிட்டனர். ஆனால் அவளைப் போலவே முகத்தில் அதைக் காட்டிக்கொள்ளாமல் இருவரையும் அணுகினர்.
“நீங்க இங்கே என்ன பண்ணுறிங்க தியா?” என்று கேட்டபடியே வந்த பிரதியுஷாவை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. எனவே சில நொடிகள் தடுமாறியவள் பின்னர் சமாளித்துக் கொண்டாள்.
“சும்மா அவந்திகா கூடப் பேசலாம்னு வந்தேன்… வேற ஒன்னும் இல்லையே” என்றவளை நம்பாதப்பார்வை பார்த்தனர் இருவரும்.
“இஸிண்ட்? நீங்க பேசுன விஷயத்தைக் கேட்டா சும்மா பேசுற மாதிரி தெரியலையே! மனசுல எதையோ வச்சுக்கிட்டு பேசுற மாதிரில்லா இருக்கு?” என்றாள் பிரதியுஷா சட்டென்று.
அதற்கு தியா பதிலளித்து மலுப்புவதற்குள் முந்திக் கொண்ட ரித்திமா “ஏங்க நீங்க உங்களோட வாழ்க்கையில இது வரைக்கும் எதுக்காகவும் யாரையும் டிபெண்ட் பண்ணி இருந்ததே இல்லையா? நீங்க போடுற ட்ரஸுக்காக, சாப்பிடுற சாப்பாட்டுக்காகனு எல்லா விஷயத்துக்கும் தெரிஞ்சோ தெரியாமலோ யாரையாவது சார்த்து தான் இருந்தாகணும்… அதனால நீங்க எங்களோட கன்சர்னைப் பத்தி கவலைப்பாடாதிங்க… அதைப் பார்த்துக்க நாங்க மூனு பேரு இருக்கோம்” என்றாள் அழுத்தமானக் குரலுடன்.
தியாவுக்கு அவமானத்தில் முகம் சுண்டிப்போக, பிரதியுஷா “நீங்க அடிக்கடி ஒரு விஷயத்தை மறந்து போயிடுறிங்க… நீங்க இந்த வீட்டோட கெஸ்ட் மட்டும் தான்… ஆனா நானும் ஹனிபீயும் இந்த வீட்டோட மருமகளாச்சே! சோ கெஸ்ட் மாதிரி பிஹேவ் பண்ணுனா உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது… அதிகமா பேசாதிங்க… அப்பிடி பேசுனா கெஸ்டா கூட இனி இங்கே வர முடியாமப் போகலாம்” என்று எச்சரித்துவிட்டு நீ போகலாம் என்பது போல கையைக் கட்டிக்கொண்டு நிற்க, அவள் அங்கிருந்து செல்லவும் பிரதியுஷா அவந்திகாவை அழைத்துக் கொண்டு, ரித்திமாவுடன் ஹாலுக்குத் திரும்பினாள்.
அதன் பின்னர் பிரதியுஷாவும் ரித்திமாவும் சேர்ந்து அவந்திகாவுக்கு அவள் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதே என்று அறிவுறுத்தினாலும் அவளால் அப்படி இருக்க இயலவில்லை. அந்த விசயமோ தியாவின் வார்த்தைகளோ அவளது மனதை விட்டு அகலவில்லை.
இதே போல மற்றவர்களும் நினைத்துவிட்டால் தங்களது இத்தனை வருட உழைப்பு கேலிப்பொருளாகி விடுமே என்ற ஆதங்கம் அவளை இரவு முழுவதும் உறங்கவிடவில்லை. இப்போது ராகவிடம் இதைச் சொன்னபிறகு அவளுக்கு மனபாரம் குறைந்தது போல இருந்தது.
ராகவ் இவையனைத்தையும் பொறுமையாகக் கேட்டவன் பெருமூச்சை விட்டபடி “ஹ்ம்.. சரி இப்போ என்ன முடிவு பண்ணிருக்க? கான்ட்ராக்டை டெர்மினேட் பண்ணிடுவோமா?” என்று குத்தலாகக் கேட்கவும் அவளை அறியாமல் அவந்திகாவின் தலை ஆமென்பதற்கு அடையாளமாய் அசைய, ராகவின் முகம் கடுக்க ஆரம்பித்தது.
“நீ என்ன நினைச்சிட்டிருக்க அவந்திகா? யாரோ ஒருத்தி போற போக்குல சொன்ன ஒரு வார்த்தைக்காக நான் ஏன் கான்ட்ராக்டை டெர்மினேட் பண்ணனும்? அறிவில்லாம பேசாதே… மத்தவங்களோட ஒபீனியனுக்கு ஒரு லெவலுக்கு மேல இம்பார்டென்ஸ் குடுக்க மாட்டேனு அன்னைக்கு கௌசிம்மா கிட்ட பேசுனவளா நீ?”
“அது வேற; இது வேற ராகவ்” என்றவளின் முகத்துக்கு நேராக ஆட்காட்டிவிரலை நீட்டியவன்
“ஷட் அப்! நான் கான்ட்ராக்டை யாருக்காகவும் எதுக்காகவும் டெர்மினேட் பண்ணுறதா இல்லை… இனிமே இதைப் பத்தி என் கிட்ட பேசாதே… டு யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று கேட்டவனுக்கு சரியென்று தலையாட்டினாள் அவந்திகா.
அதே நேரம் அம்புஜா மனிபிளாண்டுக்குத் தண்ணீர் ஊற்ற வந்தவர் அங்கே அவந்திகாவுடன் பேசிக்கொண்டிருந்த ராகவைக் கண்டதும் “அட ராகவ்! ஏன்பா இங்கேயே நிக்கிற? உள்ளே வா” என்று உற்சாகமாக வரவேற்றவர், அங்கே காபி கப்புடன் நின்று கொண்டிருந்த அவந்திகாவிடம்
“ஏய் வாயாடி! வீட்டுக்கு வந்த பையனை வெளியே நிப்பாட்டி வச்சா பேசுவ? என்ன பொண்ணோ போ! இதான் அப்போ அப்போ கௌசி உன்னைத் திட்டி வைக்கிறா” என்று அவந்திகாவைச் சீண்டிவிட அதற்கு மேல் அவளால் அமைதி காக்க முடியவில்லை.
“லுக் அம்பு! நான் ஒன்னும் இவனை வாசல்ல நிக்க சொல்லலை… நாங்க கொஞ்சம் பெர்சனலா பேசிட்டிருந்தோம்… அதுக்குள்ள நீ டிஸ்டர்ப் பண்ண வந்துட்ட” என்று சொல்லி நொடித்துக் கொள்ள
“அவ கிடக்குறா கிரானி! எடுத்ததுக்கெல்லாம் வினோதமா பேசி வைப்பா… அவளைக் கண்டுக்காதிங்க” என்று சொல்லி அம்புஜாவை கரம் பற்றி அழைத்துச் சென்றான் ராகவ்.
அப்புறம் என்ன! வராதவன் வந்தது போல வீடே களை கட்டிவிட்டது. யாருமே அவந்திகாவைக் கண்டுகொள்ளவில்லை. அர்ஜூனிலிருந்து ரகுவரன் வரை யாருமே அவளைப் பொருட்படுத்தாது ராகவைச் சீராட்ட ஆரம்பிக்க “ஆரம்பிச்சாச்சா? அவன் வீடு ஸ்டார் பிளஸ்னா, இந்த வீடு விஜய் டீவி… ரெண்டுமே ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை” என்று மனதிற்குள் கலாய்த்தாலும் தன் குடும்பத்துடன் அவன் ஒன்றி விட்டது அவளுக்கும் பார்க்கச் சந்தோசமாக இருந்தது.
ராகவ் அவந்திகாவின் குடும்பத்தினரின் விருந்தோம்பலில் நனைந்து கொண்டிருந்த அதே நேரம் அவனது சகோதரன் கிஷோர் ரித்திமாவின் வீட்டில் அவளது பெற்றோரிடம் தனது காதலைத் தெரிவித்துக் கொண்டிருந்தான்.
வாசந்தியும் ரவீந்தரும் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழிக்க அவன் “நீங்க என்ன யோசிக்கிறிங்கனு புரியுது… ஆனா எனக்கு வேற வழி தெரியலை ஆன்ட்டி… உங்க பொண்ணுக்கு எப்பிடியும் நீங்க மேரேஜ் பண்ணித்தானே வைக்கப் போறிங்க? அந்த மாப்பிள்ளையா நான் இருக்க ஆசைப்படுறேன்… உங்க பொண்ணை நான் நல்லபடியா பார்த்துப்பேனு டயலாக்லாம் பேச மாட்டேன்… அவளைப் பார்த்துக்க அவளுக்கு நல்லாவே தெரியும்… நான் என்னோட வாழ்க்கையை அவ கூட ஷேர் பண்ணிக்க விரும்புறேன் அங்கிள்” என்று பேசி இருவரையும் கரைக்க ஆரம்பித்தான்.
“அங்கே அவ தனியா இருக்கப்போறதில்லையே! உஷா பாபி இருக்காங்க… இன்னும் கொஞ்சநாள்ல அவந்திகாவும் வந்துடுவா… சோ அவங்களோட ஃப்ரெண்ட்ஷிப்பும் புரஃபசனும் எந்தப் பிரச்சனையும் இல்லாம கண்டினியூ ஆகும்… நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தேன் ஆன்ட்டி” என்று பொறுமையாகப் பேசியவனை அவர்களுக்கும் பிடித்துப் போய்விட்டது.
ஆனால் தாங்கள் மட்டுமே முடிவெடுக்கும் விஷயமல்ல அது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் அவசரப்படாமல் பெரியவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு தங்கள் முடிவைச் சொல்கிறோம் என்று கிஷோரிடம் கூறிவிட்டனர் வாசந்தியும் ரவீந்தரும். ரித்திமா அந்நேரம் பார்த்து வீட்டில் இல்லாததால் கிஷோர் செய்து வைத்த இந்த அரும்பெரும் காரியம் அவளுக்குத் தெரியாமல் போய்விட்டது.
அங்கே அவந்திகாவின் வீட்டில் விருந்தோம்பல் முடிந்ததும் ராகவ் கிளம்ப எத்தனிக்க அவந்திகா அவனை வழியனுப்பி விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அவனோடு கிளம்பினாள்.
அவன் பேசாமல் செல்லவே ஓடிச்சென்று அவன் கரங்களைப் பற்றியபடி தோளில் சாய்ந்து கொண்டவள் “சாரி ராகவ்! இனிமே யாரோட பேச்சையும் நான் மைண்ட் பண்ணிக்க மாட்டேன்… கான்ட்ராக்டை டெர்மினேட் பண்ணனும்னு கனவுல கூட நினைக்க மாட்டேன்… கொஞ்சம் சிரியேன்… பிளீஸ்” என்று செல்லமாக கெஞ்ச ராகவ் அதற்கு செவி சாய்க்கவில்லை.
“ரொம்ப பண்ணாதேடா! சிரிக்காம இருந்தா உன் முகத்தை யாராலயும் பார்க்க முடியாது… ஏதோ சிரிச்சா கொஞ்சம் அழகா தெரியிறியேனு கேட்டா நீ ஓவரா சீன் போடுற… நீ ஒன்னும் சிரிக்க வேண்டாம் போ” என்று நொடித்துக் கொள்ளவும் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தான் ராகவ்.
அதைக் கண்டதும் அவளது முகத்திலும் சிரிப்பு பொங்க ஆரம்பித்தது. அவனது கன்னத்தைச் செல்லமாகப் பிடித்து இழுத்தவாறு
“இப்போ எவ்ளோ கியூட்டா இருக்க… இப்பிடி சிரிச்சுக்கிட்டே இரு ராகவ்” என்றவளின் கன்னத்தைப் பற்றிக்கொண்டவன்
“அதே மாதிரி நீயும் இப்பிடியே இரு ஜான்சி ராணி… தேவையில்லாதவங்க பேச்சைக் காதுல போட்டுக்காதே… எல்லாம் சரி… உனக்காக நான் அவ்ளோ தூரத்துல இருந்து வந்திருக்கேன்…உன் குழப்பத்தைத் தீர்த்து வச்சிருக்கேன்.. சோ ஒன் ஹக் பிளீஸ்” என்று சொல்லி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் அவளது ராகவ்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


