“உலகம் பட்டு மெத்தைகளில் முதலிரவைத் தேடியபோது, அவன் எனக்கான உலகத்தை வெறும் புல்வெளியிலும், காட்டுப்பூக்களின் நடுவிலும் அத்தனை பிரம்மாண்டமாக அமைத்துக் கொடுத்தான். அவனது இந்த அழகிய முரண்கள்தான் என் ஆகப்பெரும் போதை!”
-வெண்பா
வீட்டுக்கு வந்த மருமகளுக்கும் மகனுக்கும் திருஷ்டி கழித்தார் குந்தவை. அவரது மனதில் இன்னுமே வெண்பா மீது நம்பிக்கை வரவில்லை. அவளால் தனது மைந்தனின் வாழ்க்கை சிறக்குமா என்ற கலக்கம் இப்போதும் இருந்தது.
அனைவரும் மண்டபத்திலேயே இரவுணவை முடித்துக்கொண்டார்கள் என்பதால் மேற்கொண்டு ஆகவேண்டிய சடங்குக்கான ஏற்பாடுகளை ஒரு பக்கம் செய்துகொண்டிருந்தார்கள் உறவுக்காரப் பெண்மணிகள்.
வெண்பாவுக்குத் திருமண வரவேற்பில் அணிந்திருந்த கனத்த கவுனை எப்போதடா மாற்றுவோம் என்றிருந்தது. நல்லவேளையாகத் துர்கா ஒரு மென்பட்டுடன் வந்து சேர்ந்தாள். கூடவே புவனாவும்.
இருவரும் அவர்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டபடி வெண்பாவிடம் வந்து நின்றார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
புவனா அவளது சிகையலங்காரத்தைக் கலைக்க மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பெண்ணை வரச் சொன்னாள்.
“நாம ரிமூவ் பண்ணுனோம்னா ஏடாகூடமா எதையும் செஞ்சு புதுப்பொண்ணுக்குத் தலைவலிச்சுடப் போகுது” என்று சொன்னவளின் கரிசனம் வெண்பாவின் மனதைத் தொடுவதாய்!
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பெண்ணும் வந்து அவளது சிகையலங்காரத்தைக் கலைத்துவிட்டார்.
“மேம் ஹேர்ஸ்ப்ரே போக ஷாம்பூ போட்டுக் குளிச்சிடுங்க” என்று சொல்லிவிட்டு அவர் போக
“நீ குளிச்சிட்டு வாடி. வந்ததும் புடவை மாத்திக்கலாம்” என்றாள் துர்கா.
வெண்பாவுக்கு வரவேற்பின் களைப்பே இன்னும் தீரவில்லை. சரியாய் அந்நேரத்தில் புவனாவின் மொபைல் அடித்தது. தொடுதிரையில் ‘நேத்ரன்’ என வர அதை அவளும் பார்த்துவிட்டாள்.
புவனா அழைப்பை ஏற்றவள் குறுஞ்சிரிப்போடு “சரிடா! நாங்க ஒண்ணும் உன் பொண்டாட்டியத் தவிக்கவிட்டுட மாட்டோம்” என்று கிண்டலாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
“என்னாச்சு மதினி?” – வெண்பா.
“உன்னைப் பச்சைத் தண்ணியில குளிக்க வச்சுடக் கூடாதாம். உனக்கு ஹேர் ரொம்ப அடர்த்தியா இருக்குறதால ஜலதோஷம் பிடிச்சுக்குமாம். ஹீட்டர் போட்டுக் குளிக்கச் சொன்னான். ஹேர்வாஷ்கூட பண்ணவேண்டாமாம்”
புவனா சொல்லவும் துர்காவின் வதனத்தில் பெருமிதச் சிரிப்பு மலர்ந்தது என்றால் வெண்பாவோ மனம் நெகிழ்ந்துபோனாள்.
“ஹேர்வாஷ் பண்ணலனா இந்த ஹேர்ஸ்ப்ரேவால முடி ஹார்டா ஆன மாதிரி இருக்கும் மதினி. நான் பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டாள்.
ஆனால் அவன் சொன்னது போலச் சுடுநீரில் குளிக்கவும் தவறவில்லை. குளித்து முடித்து ஹீட்டரில் கூந்தலை உலர்த்திவிட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டாள்.
புவனா அவளது கூந்தலைத் தளர்வாகப் பின்னி மல்லிகைச்சரத்தைச் சூடிவிட்டாள்.
“அழகா இருக்கடி” என்று அவளது மோவாயைக் கிள்ளி முத்தமிட்டுத் திருஷ்டிப் பொட்டு வைத்துவிட்டாள் துர்கா.
“இதுக்கு மேல லேட் பண்ணுனா நேத்ரனோட சாபம் எல்லாம் நம்ம தலையிலதான் விடியும். வா துர்கா! இவளை அவன் ரூம்ல கொண்டுபோய் விட்டுட்டு நம்மளும் கொஞ்சம் கண்ணயருவோம். காத்தால மறுவீட்டு வேலை இருக்கு”
நல்லவேளையாக ஹாலில் யாருமில்லை. அனைவருக்கும் திருமண நிகழ்வில் ஓடியாடிய களைப்பு, தூங்கச் சென்றுவிட்டார்கள்.
புவனாவும் துர்காவும் பேசிக்கொண்டே அவளை நேத்ரனின் அறையிலும் கொண்டுபோய் விட்டார்கள். கதவைத் திறந்து உள்ளே சென்றவளுக்கோ அங்கிருந்த அலங்காரத்தைப் பார்த்ததும் மனம் பரபரத்தது.
ஆனால் சம்பிரதாயத்துக்கு மாறாய் இலகு உடையில் அமர்ந்திருந்த நேத்ரனைப் பார்த்ததும் மனதில் ஓர் ஏமாற்றம்!
‘சீ கள்ளி! ஆசையைப் பாரு! ஒண்ணு டென்ஷனா இரு. இல்லனா டிஸப்பாயிண்ட் ஆகு. அதென்ன ரெண்டுங்கெட்டானா இருக்க?’ என்று அவளைக் கிண்டல் செய்தது மனம்.
நேத்ரன் அவளைக் கிண்டலாகப் பார்த்தபடி எழுந்தான்.
“டீச்சரம்மாவ மறுபடி ஜவுளிக்கடை பொம்மையா மாத்திட்டாங்களா?” என்றபடி அவளருகே வந்தவன் கூந்தலைத் தொட்டுப் பார்த்தான். என்னதான் ஹீட்டரில் உலர்த்தினாலும் கொஞ்சமாய் ஈரம் மிச்சமிருந்தது.
“ஹேர்வாஷ் பண்ணாதனு சொன்னேன்ல. சொல்லுற பேச்சைக் கேக்கவே கூடாதுனு சபதம் எடுத்திருக்க போல. இதுல பின்னிப் பூ வேற வச்சாச்சு”
“ஹேர்வாஷ் பண்ணலனா ஹேர்ஸ்ப்ரேயோட ஸ்மெல் இருந்துக்கிட்டே இருக்கும். முடியும் ஹார்டா இருக்குற மாதிரி தோணும் நேத்ரன். அதான் ஷாம்பூ போட்டு அலசிட்டேன்” என்றாள் அவள்.
ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் இதைச் சொல்லும்போது எவ்வித வெட்கமோ நாணமோ அவளைப் பீடிக்கவில்லை. உள்ளே வந்தபோதிருந்த பரபரப்புகூடப் பறந்துபோயிருந்தது.
காரணம் அவளது கணவன். அவன் அவளை இலகுவாக உணரவைத்தான். அதுதான் உண்மை!
“முதல்ல அந்தப் பின்னலை அவிழ்த்து லூஸ் போனிடெயிலா மாத்திக்க. முழநீளத்துக்குப் பூ வேற” என்றவன் கொண்டையூசியை நீக்கியதும் மல்லிகைச்சரம் அவனது கைக்கு மாறியது. அதை டீபாயின் மேல் வைத்தான்.
வெண்பாவும் கூந்தலை அவிழ்த்தவள் அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது தன்னுடைய பொருட்கள் யாவும் இருப்பதைப் பார்த்துவிட்டு அதிலிருந்து ஒரு சாட்டின் ஸ்க்ரன்சியை எடுத்துப் போனிடெயில் போட்டுக்கொண்டாள்.
நேத்ரன் பெருமூச்சு விட்டபடியே மீண்டும் அந்த அறையின் அலங்காரத்தைப் பார்த்தான்.
“இட்ஸ் டூ போரிங்ல” என்று அதைக் காட்டிச் சொல்லவும்
“நல்லாதானே இருக்கு? இன்ஃபேக்ட் பழைய படத்துல வர்ற முதல்ராத்திரி மாதிரி இல்லாம மினிமலிஸ்டா ட்ரெண்டியா செட் பண்ணிருக்காங்க. இதுவே உங்களுக்குப் போரிங்கா?” எனக் கிண்டல் செய்தாள் வெண்பா.
நேத்ரனின் கண்களில் மெல்லிய பிரகாசம் எட்டிப்பார்த்தது.
“நல்லாதான் இருக்கு. ஆனா எனக்கு இதை ரசிக்க மூட் இல்ல. போரடிக்குது” என்றான்.
அவன் பொய் சொல்லவில்லை என அவனது விழிகளே வெண்பாவுக்குச் சொல்லிவிட அவளிடமோ திகைப்பின் அலைகள்.
“ஃபர்ஸ்ட் நைட்ல போரடிக்குதுனு சொன்ன ஒரே ஆள் நீங்களாதான் இருப்பீங்க. இதுல அவசர அவசரமா கல்யாணம் வேற. எவ்ளோ முரண் உங்ககிட்ட?” எனக் கைகளைக் கட்டியபடி தலைசரித்து வினவியவளிடம் ஏமாற்றத்தின் மிச்சம்.
நேத்ரன் அவளது மனநிலையைப் புரிந்துகொண்டான். மெய்யாகவே இப்போது காதலில் களிக்கும் மனநிலையில் அவன் இல்லை. இன்னுமே தங்களுக்குள் வீசுகிற முரண்பாட்டின் வெப்ப அலைகள் அடங்காதது போல அவனுக்குத் தோன்றியது.
‘கல்யாணம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்பதில் அவனுக்கு உடன்பாடில்லாதபோதும் அவசரமாய் வெண்பாவைக் கரம்பிடிக்கக் காரணம் இனியொரு முறை எந்தக் கருத்துவேறுபாடும் தன்னையும் அவளையும் விலகச் செய்துவிடக் கூடாது என்ற தீர்மானத்தில்தான்.
சொல்லப்போனால் இந்தத் திருமணம் அவர்களது உறவைக் காப்பாற்ற அவன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. கார்னர் செய்து கல்யாணம் பண்ணியது போல ஒரு குறுகுறுப்பு அவனுக்குள்.
அவன் வெண்பாவிடம் இரு விரல்களைக் காட்டினான்.
“ரெண்டுல ஒண்ணைத் தொடு”
“எதுக்கு?”
“தொடு டீச்சரம்மா!”
“என்னனு சொன்னாதான் தொடுவேன்” என்று முரண்டுபிடித்தவளை ஒரு விரலைத் தொடவைத்தவன் உற்சாகமாய்ச் சிரித்தான்.
“சரி! இந்தப் புடவையைக் கழட்டிட்டு…”
“வாட்?” என்று அவள் எகிறவும்
“உடனே கொதிக்காத திருமதி நேத்ரன். இந்தப் புடவையைக் கழட்டிட்டு கேஷுவலா வேற ட்ரெஸ் போட்டுக்கனு சொல்ல வந்தேன்.” என்று சொல்லி வாயை அடைத்தான்.
“எதுக்கு?”
“பெரியவங்க சொன்னா கேக்கணும் வெண்பா. போய் ட்ரெஸ் மாத்திக்க”
அவனது நடவடிக்கை கொடுத்த புதிரை விடுவிக்க இயலாதவள் இறுதியாக உடையை மாற்றிக்கொண்டாள். எதற்காக உடை மாற்றச் சொன்னான் என்று தெரியவில்லை. ஆனாலும் உறங்குவதற்கு ஏதுவாய் மாம்பழ மஞ்சளும், ஊதா நிறமும் கோடுகளாய்ப் பாயும் ஓவர்சைஸ் டீஷர்ட்டும் கொஞ்சம் லூசான காட்டன் பேன்ட்டும் அணிந்துகொண்டாள்.
நேத்ரன் ஏற்கெனவே அணிந்திருந்த வெண்ணிற டீஷர்ட் மீது ஆகாய நீல வண்ணத்தில் ஒரு காட்டன் சட்டையை அணிந்தபடியே “போகலாமா?” என்று கேட்கவும் ஆச்சரியம் அவளுக்கு.
“எங்க? அதுவும் இந்த நேரத்துல?” என்றவளின் விழிகள் சுவரில் மாட்டியிருந்த குக்கூ கடிகாரத்தை நோட்டமிட்டன. மணி சரியாக ஒன்பதே முக்கால்.
“நீதானே லாங் ட்ரைவ் அண்ட் நைட் அவுட்ங்கிற விரலைத் தொட்ட”
அவன் இலகுவாகச் சொல்லிவிட்டுக் கார்ச்சாவியை எடுக்கவும் மெய்யாகவே வெண்பாவுக்குத் தொண்டையை அடைத்த உணர்வு.
“நேத்ரன்! விளையாடாதீங்க” என்றவளிடம்
“ப்ச்! இதுல யார் விளையாடுவாங்க? நான் உன்கிட்ட ரெண்டு விரலை நீட்டுனேன். ஒரு விரல் – நல்லா தூங்குவோம், இன்னொரு விரல் – லாங் டிரைவ் அண்ட் நைட் அவுட். போகலாமா?” என்றபடி அவளது புஜத்தைத் தனது கரத்தால் வளைத்தபடி இழுத்தான்.
“எம்.எல்.ஏவுக்குனு தனி புரோட்டோகால் கிடையாதா? இஷ்டத்துக்கு ஊர் சுத்தலாம்னு சொல்லுறீங்க” என அவனது பதவியைக் காரணம் காட்டி அவள் நிற்கவும்
“பொண்டாட்டிகூட அவுட்டிங் போகக் கூடாதுனு எந்தப் புரோட்டோகாலும் கிடையாது எனக்கு. சாக்குபோக்கு சொல்லாம கிளம்பு டீச்சரம்மா” என இழுத்துப்போய்விட்டான்.
அறையைப் பூட்டியபோதும் அவனோடு மாடிப்படிகளில் ஸ்னீக்கர்களின் சத்தம் எழாமல் நடந்தபோதும் பதபதைப்புதான் உள்ளுக்குள்.
வீட்டின் சாவி அவனிடம் இருந்ததால் யாருடைய உறக்கமும் பாதிக்காத வண்ணம் வெளியேவும் வந்துவிட்டார்கள்.
“எங்க வீட்டுல எல்லாம் பத்து மணிக்கு மேல வெளித்திண்ணையில உக்காரக்கூட விடமாட்டாங்க. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்”
“ஆனா உன் புருஷன் ஸ்ட்ரிக்ட் இல்ல டீச்சரம்மா”
கார்க்கதவைத் திறந்துவிட்டபடி சொன்னான் நேத்ரன். வெண்பாவும் உள்ளே அமர அவன் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்ததும் கார் பறந்தது.
இரவில் ஆளற்ற, வாகனங்கள் குறைந்த சாலையில் செல்வது ஒரு புது அனுபவமாய்!
“நாம எப்ப வீட்டுக்கு வருவோம்?” எனக் கேட்டாள் மெதுவாய்.
“போறப்பவே வர்றதைப் பத்தி பேசுவியா நீ?”
“மார்னிங் மறுவீடு…”
“உஷ்! மறுபடியும் சொந்தக்காரங்க, சடங்கு சம்பிரதாயம், கிண்டல் பேச்சுனு ரொட்டீன் புதுக்கல்யாண ஜோடியா இருக்காம நாம கொஞ்சம் வித்தியாசமா இருப்போமே!”
“ஆனாலும்…”
“சைலண்ட்”
அவன் அதட்டியதும் வெண்பா கப்சிப்.
திருநெல்வேலியின் நகரத்து வெளிச்சமும் இரைச்சலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்க, கார் அடர்ந்த இருள் சூழ்ந்த தென்காசி நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது.
ஏசியின் மெல்லிய சிலுசிலுப்பும், இருளின் நிசப்தமும் காருக்குள் ஒரு மாய உலகத்தை உருவாக்கியிருந்தன. விண்டோ சீட்டில் தலையைச் சாய்த்து வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்த வெண்பா, இடையிடையே ஓரக்கண்ணால் ஸ்டீயரிங் பிடித்திருந்த நேத்ரனை ரசிக்கத் தவறவில்லை. அழகான முதலிரவைப் புறந்தள்ளிவிட்டு, மனைவியைக் கடத்திக்கொண்டு லாங் ட்ரைவ் போகும் இவனை என்னவென்று சொல்வது?
அவசரமாக நடந்த திருமணம், அதைத் தொடர்ந்த சின்னச் சின்ன மன உளைச்சல்கள் என அத்தனை நாட்களின் தவிப்பும் இப்போது இந்த இரவின் வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து காற்றில் பறந்துகொண்டிருந்தது.
கார் ஆலங்குளம், தென்காசியைத் தாண்டிச் சுந்தரபாண்டியபுரம் கிராமத்தின் உள்புறச் சாலைக்குள் நுழைந்தது. மணி பத்தரை நெருங்கியிருந்தது. ஆள் அரவமே இல்லாத மண் பாதையில் டயர்கள் உரசும் சத்தம் மட்டுமே இரவின் நிசப்தத்தைக் கிழித்தது.
சட்டென ஒரு வளைவில் காரை நிறுத்திய நேத்ரன், இன்ஜினை அணைக்காமல் ஹெட்லைட்டை மட்டும் ‘ஹை பீமில்’ (High beam) மாற்றிவிட்டான்.
பகலில் மட்டுமே பார்த்துப் பழகிய ஒரு பேரழகு, அந்த நள்ளிரவில் முகப்பு விளக்கின் அதீத வெளிச்சத்தில் மாயாஜாலம்போல வெண்பாவின் கண்களுக்கு விருந்தானது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருளை விலக்கிப் பூத்துக் குலுங்கிய சூரியகாந்தி மற்றும் செண்டுமல்லி மலர்கள் மட்டுமே நிறைந்திருந்த வயல்வெளி! காற்றில் அந்த மஞ்சள் பூக்கள் தாளம் தப்பாமல் மென்மையாகத் தலையசைத்துக்கொண்டிருந்தன.
காரிலிருந்து இறங்கினார்கள் இருவரும். தான் நிற்குமிடத்தின் அழகில் மெய்மறந்து போனாள் வெண்பா.
“வாவ்…”
வெண்பாவின் இதழ்கள் தன்னிச்சையாக உச்சரிக்க, அவளது அந்த ஒற்றைச் சொல்லுக்காகவே காத்திருந்தவனைப் போல மெதுவாய் பின்னடைந்த நேத்ரன் வண்டியின் இன்ஜினை நிறுத்திவிட்டு, முகப்பு விளக்குகளையும் ஒட்டுமொத்தமாக அணைத்தான். மறுகணம் அந்த இடமே கும்மிருட்டில் மூழ்கியது.
“நேத்ரன்! என்ன பண்ணுறீங்க? ஏன் லைட் ஆஃப் பண்ணீங்க? எனக்கு இருட்டைப் பாத்தா பயமா இருக்கு” என்று வெண்பா லேசான பதற்றத்துடன் கேட்கக் கார்க்கதவை சாத்திவிட்டு வந்தவன் அவளது கையைப் பற்றிக்கொண்டான்.
இருளில் அவளைத் தன் பக்கம் இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்தவன், “பயப்படாத. கொஞ்சம் மேல பாரு டீச்சரம்மா,” என்றான் அவளது காதருகே குனிந்து, அத்தனை மெல்லிய, இதமான குரலில்.
அவனது மூச்சுக்காற்று அவளது கழுத்தை உரச, ஒருவிதச் சிலிர்ப்போடு விண்டோ கண்ணாடியை இறக்கிவிட்டு அண்ணாந்து பார்த்தாள் வெண்பா.
நகரத்தின் எந்த வெளிச்ச மாசும் இல்லாத அந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் வானம், இருளைப் போர்த்திக்கொண்டு பல லட்சம் நட்சத்திரங்களால் தகதகவென மின்னிக்கொண்டிருந்தது. பார்வையின் இருள் பழகப் பழக, பட்டொளி வீசிய நிலவின் வெளிச்சத்தோடு வானத்து நட்சத்திரங்களின் ஒளியிலேயே கீழே இருந்த அந்த மஞ்சள் பூக்களும் இப்போது இயற்கையான அழகோடு தெரிந்தன.
சுற்றிலும் வண்டுகளின் ரீங்காரம்! மலையிலிருந்து வீசும் இதமான, சில்லென்ற குளிர்காற்று அவளது முகத்தை வருடிச் செல்ல, அவளது பயம் முழுவதும் விலகி ஒரு பரவசம் தொற்றிக்கொண்டது.
“இப்ப சொல்லு! இந்த இடம் போரிங்கா இருக்கா?” என்று நேத்ரன் அவளது காதருகே கிசுகிசுத்தான்.
“ஓ மை காட்! நேத்ரன்! திஸ் இஸ்… திஸ் இஸ் ஜஸ்ட் மேஜிக்கல்! எப்பிடி இந்த மாதிரி ஒரு இடம் உங்களுக்குத் தெரியும்?” ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றிருந்தாள் வெண்பா.
“இது நம்ம தோட்டம்தான்,” என்று சிரித்தவன், வண்டியின் மீது சாய்ந்து அவளையும் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“எனக்குச் செயற்கையான எதுவும் பிடிக்காது வெண்பா. அந்த முதலிரவு செட்டப், ரொட்டீன் புதுப்பொண்ணா நீ சேலையும் பூவுமா வந்து நின்ன விதம் எல்லாம் பயங்கரமான கிரிஞ்ச். இது நமக்கான முதல் ராத்திரி. இதை நாம எந்த விதமான சடங்குக்கும் ஆட்படாம நமக்குப் பிடிச்ச விதமா ரசிக்க முதல்ல அந்த இடம் நம்மளை இயல்பா இருக்க விடணும். அங்க கிடைக்காத இயல்பான ஆசுவாசம் இங்க வெட்டவெளியில நிலவொளியில உன் கையைப் பிடிச்சு நிக்குறப்ப கிடைக்குது. ஃபர்ஸ்ட் நைட் இஸ் நாட் அபவுட் செக்ஸ் அண்ட் ஃபிசிக்கல் இன்டிமஸி. என்னை நானாவும் உன்னை நீயாவும் நாம உளப்பூர்வமா ஏத்துக்குற தருணம் அது,” என்றபடி அவளது விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக்கொண்டான்.
“சமீப நாட்கள்ல நமக்குள்ள நிறைய முரண்பாடுகள், ஈகோ, கோபம்னு ஏகப்பட்ட புயல் அடிச்சுடுச்சு. எல்லாத்தையும் தாண்டி, இன்னைக்கு நீ அதிகாரப்பூர்வமா என் பொண்டாட்டியா என் பக்கத்துல உக்காந்திருக்க. எனக்கு இப்ப அந்த சென்ட்ரலைஸ்ட் ஏசியும், பட்டு மெத்தையும் தேவையில்ல. எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாத இந்த அமைதி, உன்னைத் தவிர வேற எதுவும் என் கண்ணுக்குத் தெரியாத இந்த இருட்டு, இந்த இயற்கையோட ஆசீர்வாதம். இது போதும் எனக்கு!” அவனது காந்தக் குரலில் காதலும் அதீத ஏக்கமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தன.
வெண்பாவின் கண்கள் பனித்தன. வாழ்க்கையை நியாயங்களாலும் தர்க்கங்களாலும் மட்டுமே அளந்து பழகியவள் அவள். அவனது அதிரடியான முடிவுக்குள், தன் மீதான அவனது நேசம் இத்தனை ஆழமாக, ஒரு கவிஞனின் மென்மையோடு ஒளிந்திருப்பதை அவளது அகம் முழுமையாக உணர்ந்த தருணம் அது. தாமதிக்காமல் அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் வெண்பா.
“யூ ஆர் இம்பாசிபிள் நேத்ரன். ரொம்ப வித்தியாசமானவரும்கூட. எல்லாரும் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஹோட்டல்ல ரூம் புக் பண்ணலாமா, ரிசார்ட்ல புக் பண்ணலாமானு நீங்க நட்சத்திரத்தையும் பூவையும் தேடிக் கூட்டிட்டு வந்திருக்கீங்க”
“அவ்ளோதானா? ப்ச்! இதெல்லாம் உன் மனசைத் தொடவே இல்லையா கல்நெஞ்சக்கார டீச்சரம்மா?” என்று தலைசரித்து அவன் வினவ வெண்பா அவனது ஆகாயநீல வண்ண மேற்சட்டையின் காலரைப் பிடித்து இழுத்து அவனது முகத்தைத் தன்னருகே குனியவைத்தாள்.
“வேற என்ன சொல்ல முடியும் நான்? ஐ லவ் யூவைத் தவிர” என்று கண்களை விரித்து அழகாய்ச் சொல்ல அதைவிடப் பேரின்பம் நேத்ரனுக்கு வேறேதும் இல்லை அந்நொடியில்.
“ஐ லவ் யூ டூ டீச்சரம்மா”
அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்ட நேத்ரன் கரம் பற்றி மலர்க்கூட்டத்தினிடையே அழைத்துப்போனான்.
ஓரிடத்தில் குட்டையாய்க் காட்டுச்செடிகள் பூக்களுடன் நிறைந்து படர்ந்திருக்கப் புல்வெளி மெத்தென்று விரிந்தது. அங்கே அமர்ந்தவன் அவளையும் அமரச்சொன்னான்.
உட்கார்ந்ததும் கைகளால் புல்வெளியையும் தனது முழங்கை உயரத்தில் இருந்த காட்டுச்செடிகளின் மலர்களையும் வருடியவள் “இதுலயே படுத்துக்கிட்டா நல்லா இருக்கும் போல” என்க நேத்ரன் மறுபேச்சின்றி புல்வெளியில் படுத்து வானத்தைப் பார்க்க ஆரம்பித்தான். கூடவே அவனது நிலவையும்.
வெண்பாவும் அவனருகே அவனைப் பார்த்தபடி தலையை உயர்த்திப் படுத்தவள் “இந்த அழகான நைட் அவுட்டுக்கு தேங்க்ஸ் நேத்ரன். அதுவும் உங்களை விட்டுப்போக அடம்பிடிச்ச எனக்கு இது அதீதம்” என்று சொல்ல நேத்ரனின் கண்கள் அவளையே படம்பிடித்தன.

“உன்னைப் போக விடாம தடுக்க செக் வச்சதுக்குச் சின்ன பரிகாரம்னு நினைச்சுக்க டீச்சரம்மா. கண்டிப்பா அந்த நேரம் உனக்குத் திணறலா இருந்திருக்கும். அப்பாவோட கண்டிப்பை மீற முடியாம தலையாட்டிருப்ப. உன்னை அப்பிடி வலுக்கட்டாயமா இழுத்துப் பிடிக்குறது எனக்கும் கஷ்டமாதான் இருந்துச்சு. அந்த மனநிலை நமக்குள்ள தொடரவே கூடாது. அதுக்காகத்தான் இந்த நைட் அவுட். ஒரு குட்டி வேண்டுகோளும். இன்னொரு தடவை நீ என்னை எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ண வச்சிடாத. புரியுதுல்ல?”
“ம்ம்” என்றவள் அவனது மார்பில் தலை வைத்துப் படுத்துக்கொள்ள அந்தப் பிரம்மாண்டமான நட்சத்திர வானமும், இருளில் ஒளிரும் அந்த மஞ்சள் பூக்களும், இரவின் குளிரும் அந்த இரு இதயங்களின் உன்னதமான காதலுக்குச் சாட்சியாக அழகாய்க் காட்சி கொடுத்தன!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


