கபூர் பேலஸ்..
வழக்கமான உற்சாகத்துடன் இருந்த அந்த வீட்டில் இன்றைக்கு சந்தோசம் இரட்டிப்பாக பொங்கி வழிந்தது. வீட்டின் மூத்தவாரிசுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளையவன் மணமேடை ஏறத் தயாராக இருந்த தருணத்தில் வருங்கால மருமகளின் ஜாதகம் காரணமாகத் திருமணம் தள்ளிப்போடப்பட்டிருக்க, மூன்றாவது வாரிசான கிஷோர் தனது மனவிருப்பத்தை ஏற்கெனவே பெரியவர்களிடம் இலைமறை காயாக எடுத்துரைத்திருந்தவன் கையோடு காதலியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றுவிட்ட வெற்றிக்களிப்புடன் ஹாலில் கையைக் கட்டிக்கொண்டபடி நின்றிருக்க அவன் நின்ற திசைக்கு எதிர்த்திசையில் அவனை நோக்கியவண்ணம் நின்றிருந்தாள் ரித்திமா.
கூடவே அவளது பெற்றோரும் வீணா மற்றும் நிரஞ்சன் தம்பதியினருடன் அமர்ந்திருக்க, சுமித்ரா நடுநாயகமாக இருந்தவர் வாசந்தியிடம்
“எங்களுக்கு இந்தச் சம்பந்தத்துல எந்தப் பிரச்சனையும் இல்லைம்மா… உங்க பொண்ணு பொறுப்பானவ, அதே நேரம் தன்னடக்கம் உள்ள பொண்ணு வேற. எங்க வீட்டுப்பையனும் சரியானவளைத் தான் தேர்ந்தெடுத்திருப்பான்னு நான் நம்புறேன்… ஆனா கல்யாணத்துக்கு நீங்களும், நானும், கிஷோரும் மட்டும் சம்மதிச்சா பத்தாது.. கல்யாணப்பொண்ணுக்கும் பரிபூரணச் சம்மதம் வேணும்ல” என்று சொல்லிவிட்டு ரித்திமாவைப் பார்க்க
“தாதி! இதுல நான் சொல்லுறதுக்கு எதுவும் இல்லை…. அப்பா அம்மாக்கு ஓகேனா எனக்கும் நோ பிராப்ளம்” என்று ஒற்றைவார்த்தையில் இருகுடும்பத்தினரின் மனதையும் குளிரவைத்துவிட்டாள். அதோடு கிஷோரின் மனதையும் தான்.
“அப்புறம் என்ன? கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்?” என்று கேட்ட சுமித்ராவைத் தயக்கத்துடன் நோக்கினர் வாசந்தியும், ரவீந்தரும். அவர்களின் தயக்கத்துக்கான காரணத்தைப் புரிந்து கொண்ட வீணா
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“மா! ராகவ் இருக்கிறப்போ கிஷோருக்கு எப்பிடி இப்போவே கல்யாணம் வைக்க முடியும்? மூத்தவனுக்கு முடிஞ்சா தானே இளையவனுக்குப் பண்ண முடியும்” என்று நிலமையை விளக்க
மாமியாரின் அருகில் தமக்கையுடன் அமர்ந்திருந்த ராதிகா “அதுல என்ன இருக்கு வீணா? ராகவுக்கு இப்போ மேரேஜ் பண்ணி வைக்க முடியாத சூழல்… அதுக்குனு எல்லாம் கூடிவந்த பிறகும் கிஷோரோட கல்யாணத்தை ஏன் தள்ளிப் போடணும்?” என்று ராகவைப் பெற்றவராகத் தனது கருத்தைக் கூற, அச்சமயம் பார்த்து ராகவ், அவந்திகா, பிரதியுஷா மற்றும் வருண் பார்ட்டி ஹாலை பார்வையிடச் சென்றவர்கள் வீடு திரும்பினர்.
கல்யாணப்பேச்சுவார்த்தை ஜரூராக நடைபெறுவதைக் கேட்டுவிட்டு “என்னோட நேம் இங்கே அடிபடுதே! என்ன விஷயம்டா?” என்று வினவியபடி கிஷோரின் முதுகில் செல்லமாக அடித்தான் ராகவ்.
பிரியா தங்கை மகனிடம் “கிஷோருக்கும் ரித்திமாவுக்கும் மேரேஜ் பண்ணுறதைப் பத்தி தான் பேசிட்டிருக்கோம்டா… உன் சித்தி என்ன சொல்லவர்றானா மூத்தவன் நீ இருக்கிறப்போ இளையவனுக்கு எப்பிடி கல்யாணம் பண்ணி வைக்கமுடியும்னு கேக்கிறாங்க” என்று விஷயத்தைச் சொல்ல
“அதனால என்ன? எங்களோட மேரேஜ்கு இன்னும் ஃபைவ் மன்த்ஸ் இருக்கு.. அது வரைக்கும் ஏன் கிஷோர் வெயிட் பண்ணனும்?” என்று தனக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துவிட்டான் ராகவ்.
கிஷோர் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்றவன் சகோதரனைக் கட்டியணைத்துக் கொள்ள, “டேய் சந்தோசத்துல நீ அவனை ஜூஸ் பிழிஞ்சிடுவ போல… விடுடா அவனை” என்று கேலி செய்தபடி இரு சகோதரர்களையும் பிரித்துவிட்டான் வருண்.
அதோடு “இன்னைக்கு ஈவினிங் பார்ட்டில நம்ம இவங்களோட மேரேஜ் நியூஸைப் பிரஸ் பீபிள்கு அனவுன்ஸ் பண்ணிட்டா என்ன? அப்பிடியே நம்ம எம்ப்ளாயிஸ்கும் சொல்லிடலாம்” என்று கூறவும்
“சூப்பர் வருண்! இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு அர்னால்ட் வேணும்கிறது… எவ்ளோ அருமையான ஐடியாவைக் குடுத்திருக்க நீ?” என்று தன்னைப் புகழ்ந்த அவந்திகாவுக்கு அவன் ஹைஃபை கொடுத்தான் வருண்.
இளையவர்களின் யோசனைகள் அனைத்துமே பெரியவர்களின் ஒப்புதலைப் பெற்றுவிடவே அந்த நல்லச்செய்தியைத் தானே முதலில் மைதிலிக்குச் சொல்லவேண்டும் என்று பிரதியுஷா அவளது அன்னைக்குப் போன் செய்யப் போய்விட்டாள். அவந்திகாவும் அப்படியே கௌசல்யாவுக்கும் ரகுவரனுக்கும் செய்தியைத் தெரிவித்துவிக்கச் சென்றுவிட்டாள்!
ராகவும் வருணும் ஒரு பக்கம் ஒதுங்கிவிட பெரியவர்கள் அனைவரும் அவர்கள் வயதுக்கே உரித்தான சில விஷயங்களைப் பற்றி வாதிட ஆரம்பித்தனர். ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் நகர்ந்துவிட தனித்துவிடப்பட்டனர் கிஷோரும் ரித்திமாவும்.
நல்லவேளையாக அமர், பிந்து, நேகா மூவரும் இல்லை என்று எண்ணி திருப்திப்பட்டுக் கொண்டான். அவர்கள் மட்டும் இருந்தால் இப்போது தானும் ரித்திமாவும் தனித்துவிடப்பட்டிருப்போமோ என்னவோ என்று எண்ணியபடி பெரியப்பாக்களுடன் வெளியே சென்றிருக்கும் சகோதர சகோதரிகள் வீடு திரும்பும் முன்னர் தன் மனக்கிடக்கையை ரித்திமாவிடம் சொல்லிவிடவேண்டும் என்ற ஆர்வம் உந்தி தள்ள அவளை அணுகினான் கிஷோர்.
“கார்டன் பக்கமா போலாமா ரித்தி? உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவன் சொன்னதுமே தலையசைத்துவிட்டு அவனுடன் கிளம்பிவிட்டாள் அவள். தோட்டத்துக்குச் சென்றவர்கள் அமைதியாக அங்கே இருந்த செடிகொடிகளில் பார்வையை ஓடவிட்டனர் சில நிமிடங்களுக்கு.
பின்னர் கிஷோரே பேச்சை ஆரம்பித்தான்.
“ரித்தி! உனக்கு இந்தக் கல்யாணத்துல நிஜமாவே சம்மதமா?
“ஆமா! ஏன் திடீர்னு இப்பிடி ஒரு கேள்வியைக் கேக்குற கிஷோர்?”
“அது… நீ என்னை லவ் பண்ணலைனு சொன்னே… பட் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியே… அதனால தான் கேக்கிறேன்”
“லவ் பண்ணுனா தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லணுமா? எனக்கு யார் மேலேயும் பெருசா ஈடுபாடு வந்ததில்லை கிஷோர்… அதோட எனக்கு நல்லாவே தெரியும், என்னைக்காச்சும் ஒரு நாள் எனக்கும் கல்யாணம் ஆகும்னு… அப்போ அப்பாவும் அம்மாவும் யாரை காட்டுறாங்களோ அவங்களை மேரேஜ் பண்ணிக்கனும்னு என் மைண்டை நான் எப்போவோ செட் பண்ணிட்டேன்… அதைத் தான் நான் இப்போ பண்ணிட்டிருக்கேன்… ஆனா நான் நினைச்சுப் பார்க்காதது ஒன்னே ஒன்னு தான்… என்னை ஒருத்தன் விரும்பி கல்யாணம் பண்ணிப்பாங்கிறது… இது ஒரு மாதிரி மனசுக்கு ஹேப்பியா இருக்குடா… இதுக்காகவே இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்”
“அஹான்! இன்னும் என்ன ரீசன் இருக்கு மிஸ் இந்தியா?”
“நம்பர் ஒன் இது தான்… நம்மளைப் பிடிச்சவங்க நம்ம லைஃப் பார்ட்னரா வந்தா வாழ்க்கை ரொம்ப சந்தோசமா போகும்… அப்புறம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான், உஷா, ஹனிபி மூனு பேரும் இங்கேயும் ஒன்னா இருப்போம்.. எங்களை யாராலையும் பிரிக்க முடியாது… அப்புறம் இன்னொரு காரணமும் இருக்கு… எப்பிடி ராகவும் வருணும் அவங்கவங்க லைஃப் பார்ட்னர்ஸோட புரஃபசன்ல தலையிடலையோ அதே மாதிரி தான் நீயும் இருப்பே… அதனால உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு டபுள் ஓகே” என்று சொல்லிவிட்டுச் சம்மதமாய்ப் புன்னகைத்தவளின் கரத்தைப் பற்றிக் கொண்டான் கிஷோர்.
“நீ என்னை லவ் பண்ணலைனு நல்லாவே தெரியும் ரித்தி… சோ வாட்? கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கை முழுக்க காதலிப்போம்… அந்தக் காதலுக்குப் பிரிவே கிடையாது.. ரொம்ப தேங்க்ஸ்… என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே சொன்னதுக்கு” என்று உருகிப் போய்ப் பேச ரித்திமாவுக்கு மனதினுள் இளந்தென்றல் சுகமாய் வீசத் தொடங்கியது.
இருந்தாலும் அவனைச் சீண்டுவதற்காக “உலத்துலயே கல்யாணத்துக்குச் சம்மதிச்சதுக்காக வருங்காலப்பொண்டாட்டிக்கு தேங்க்ஸ் சொன்னவன் நீயா மட்டும் தான் இருப்பே கிஷோர்” என்று கேலி செய்தவள் “இன்னைக்கு ஈவினிங் பார்ட்டிக்கு நீ என்ன டிரஸ் வியர் பண்ணப்போற?” என்று உரிமையுடன் பேச ஆரம்பிக்க, அந்நிமிடமே அவர்களுக்குள் வாழ்நாள் முழுமைக்குமான இணைபிரியா பந்தம் ஆரம்பித்துவிட்டது.
***********
ஹோட்டல் மெரிடியன்…
அழகிய பொன்மாலை பொழுது சரிய ஆரம்பித்து இனிய இரவிற்கு அடையாளமாய் வானில் நிலவு எட்டிப் பார்க்க, அதைச் சூழுந்திருந்த விண்மீன்களுக்குப் போட்டியாக ஹோட்டலின் பார்ட்டி ஹாலில் செய்யப்பட்டிருந்த விளக்குகலான அலங்காரம் கண்ணைச் சிமிட்டியது.
கோட் சூட் அணிந்த மனிதர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருக்க மெல்லிசை பின்னணியில் அவர்களுக்கு பழச்சாறுடன், குளிர்பானங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. விஹானின் கிளையண்டுகள் மற்றும் தலைமை அலுவலக ஊழியர்களுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தப் பார்ட்டியில் ராகவ் ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை சிறப்பூதியமாக அறிவித்துவிட்டு இது அவர்களின் கடின உழைப்புக்கு விஹான் தரும் சிறிய பரிசு என்று அறிவிக்கவும் கரகோசம் காதைப் பிளந்தது.
இதை அறிவித்தவனின் விழிகள் வெள்ளை நிறச் சுடிதார் மேனியைப் கடல்நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில் அமைந்த துப்பட்டா தழுவியிருக்க, துப்பட்டாவின் வண்ணத்தில் காதில் பெரிய கம்மல்கள் அசைந்தாட சிரித்தபடி கூந்தலைச் சரிசெய்து கொண்டிருந்த அவந்திகாவின் மீதே நிலைத்திருந்தன.
வர்ஷா, மாதவன் மற்றும் லாராவுடன் சேர்ந்து எதையோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவளின் காதில் அமர் எதையோ சொல்ல அதற்கு அவள் கண்ணை விரித்து மூன்று விரல்களால் அபிநயம் காட்டுவதைப் பார்த்ததும் இவர்கள் ஏதோ குட்டிக்கலாட்டா செய்யப்போகிறார்கள் என்று ராகவிற்கு புரிந்துவிட்டது.
அவந்திகா அந்த மூவரிடமும் சற்று நேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு அமருடன் செல்ல, அதற்குள் ராகவ் தனது பிறந்தவீட்டாரும் புகுந்தவீட்டாரும்(?) அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்றான்.
வீட்டின் மூன்று பெண்மணிகளும் அவரவர் சம்பந்திவீட்டாருடன் அமர்ந்து பார்ட்டியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர். கிஷோர் ரித்திமாவிடம் தனது தங்கைகளைக் காட்டி ஏதோ சொல்ல அவள் அதற்கு கலீரென்று நகைப்பதைக் கண்டவன் இன்னொரு புறம் வருணும் பிரதியுஷாவும் கண்களால் கவிதை பேசுவதைக் கண்டதும் நமட்டுச் சிரிப்புடன் தனக்கான இடத்தைத் தேடிச் சென்றான்.
இரு வீட்டுப்பெரியவர்களும் நடக்கவிருக்கிற நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். மோகன் ரகுவரனிடம் “இங்க பாருங்க ரகு! உங்க பொண்ணு தான் எங்க வீட்டோட ஸ்ட்ரெஸ் பஸ்டர்… அவ கொஞ்சநேரம் வந்துட்டுப் போனாலே மனசுக்குச் சந்தோசமா இருக்குனா பார்த்துக்கோங்க.. அவளைப் பார்த்ததுக்கு அப்புறம் தான் என் பையனுக்கு அடிக்கடி சிரிப்புலாம் வருது… இல்லைனா சிரிப்புக்கு என்ன ஸ்பெல்லிங்னு கேப்பான் அவன்” என்று சொல்ல அங்கே சிரிப்பலை எழுந்தது.
அதே நேரம் பிரியாவும் குணாலும் மைதிலி மற்றும் ராஜ்வர்தனுடன் ரன்வீருக்கு எப்போது திருமணம் என்று அடுத்த திருமணத்துக்கு அடிபோட்டுக் கொண்டிருந்தனர். அவனுக்குக் கல்யாணிதேவி அவர்களின் சொந்த ஊரில் பெண் பார்த்து வருவதாகச் சொல்லவே குணால்
“நான் நம்ம நேகாவை ரன்வீருக்கு பேசலாமானு நினைச்சேன்.. அது சரி! நம்ம போடுற கணக்கு எல்லாமே ஆண்டவனோட கணக்குக்கு முன்னாடி எதுவுமே இல்லை ராஜ்… எங்க வீட்டுக்கு வந்திருக்கிற மருமகள்களே அதுக்கு சாட்சி” என்று சொல்ல அதை மற்ற மூவரும் ஆமோதித்தனர்.
இதையெல்லாம் கவனித்தபடியே பார்ட்டி ஹாலில் நின்று கொண்டிருந்தவன் வீணா கூட வாசந்தியுடன் புன்னகையுடன் பேசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனான். நிரஞ்சனைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர் எப்போதுமே உற்சாகத்தின் பிறப்பிடம். அவரோடு ரவீந்தரும் சேர்ந்துகொள்ள அவர்கள் அமர்ந்திருந்த மேஜையிலும் கலகலப்புக்குப் பஞ்சமில்லை.
பின்னர் தனக்கான இடத்தைத் தேடியவனுக்கு சுமித்ரா, அம்புஜா மற்றும் அர்ஜூன் தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்திருப்பது கண்ணில் பட அவர்களுடன் சேர்ந்து கொண்டான் ராகவ்.
“சாம் உனக்கு போர் அடிக்குதாடா?” என்றபடி தனது ஐந்து வயது மைத்துனனை மடியிலமர்த்திக் கொண்டான் ராகவ். அமருடன் அவந்திகா ஏதோ சதித்திட்டம் தீட்டிவிட்டு வர அதற்கு உடந்தையாக அவர்கள் இருவருடன் உள்ளே வந்து கொண்டிருந்தனர் நேகாவும் பிந்துவும்.
அவர்களை நோட்டம் விட்டபடியே முதியப்பெண்மணிகளுடன் பேசிக்கொண்டிருந்தவன் அவந்திகாவும் அவர்களுடனே வந்து அமர்ந்து கொள்ளவும் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடியே “சாம்! உன் கிட்ட ரொம்ப நாளா ஒன்னு சொல்லணும்னு நினைச்சிட்டிருந்தேன்.. என்னனு கண்டுபிடி பார்ப்போம்” என்று சொல்ல அவந்திகாவுடன் சேர்ந்து அந்த இரண்டு முதியப்பெண்மணிகளுக்குமே அவன் என்ன சொல்லப்போகிறான் என்று ஆர்வத்துடன் அவனை உற்றுக் கவனிக்க
“ஐ லவ் யூடா சாம்” என்று சொல்லிவிட்டு அழுத்தமாய் அர்ஜூனின் கன்னத்தில் முத்தமிட்டு அவந்திகாவைத் திகைக்கச் செய்தான் ராகவ்.
“அஜ்ஜூவுக்கு ஐ லவ் யூவா?” என்று கண்களை விரித்தவளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டபடியே முதியபெண்மணிகளிடம் திரும்பியவன் “தாதி! கிரானி! மை டியர் யங் லேடிஸ்! ஐ லவ் போத் ஆஃப் யூ” என்று சொல்லவே அவந்திகாவின் முகத்தில் கடுகை அள்ளிப் போட்டால் அது வெடித்துவிடும். அவ்வளவு கோபம், கடுகடுப்பு.
“ஏன்டா இங்க ஒருத்தி பண்ணுனா லவ் மேரேஜ் தான் பண்ணுவேனு சபதம் எடுத்துட்டுச் சுத்துறேன்… என் கிட்ட ஒரு வாட்டி கூட ஐ லவ் யூ சொன்னது கிடையாது… ஆனா இந்த அரை டிக்கெட் கிட்டவும், அந்த ஓல்ட் லேடிஸ் கிட்டவும் ஐ லவ் யூ ஆறா பாயுது… இருடா உன்னை அப்புறமா வச்சிக்கிறேன்” என்று மனதிற்குள் அவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு பற்களை நறநறவென்று கடித்துத் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் அவந்திகா.
“பார்த்துப் பல்லைக் கடி ஜான்சி ராணி! பொக்கைவாயா போய்ட்டேனா உன்னை நான் திரும்பிக் கூட பார்க்கமாட்டேனாக்கும்” என்று சொல்லி அவளை இன்னும் எரிச்சலூட்டி சந்தோசப்பட்டுக் கொண்டான் அந்த நல்லவன்.
அப்போது மேடையில் தோன்றிய அமர் “ஹலோ லேடிஸ் அண்ட் ஜெண்டில்மென்! அட்டென்சன் ப்ளீஸ்” என்று சொல்ல அனைவரது கவனமும் மேடைப்பக்கம் திரும்பியது.
அமர் கிஷோருக்கும் ரித்திமாவுக்கும் கூடியவிரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்தான். அந்த ஹாலில் கூடியிருந்த அனைவருக்குமே இந்த நல்ல செய்தியைக் கேட்டதில் மகிழ்ச்சி. முக்கியமாக குடும்பத்தினரின் முகத்தில் தெரிந்த பூரிப்பு எல்லாமுமாய்ச் சேர்ந்து அந்த நிகழ்வு அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது. அனைவரும் கரகோசத்துடன் அத்தகவலை வரவேற்க குடும்பத்தினர் அனைவரும் ராகவையும் அவந்திகாவையும் தேட அவர்கள் அங்கிருந்து மாயமாகியிருந்தனர் எப்போதோ.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


