அவந்திகாவும் ரித்திமாவும் ஏறத்தாழ விஹானின் பார்ட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தனர். பட்டியலில் இடம்பெற்ற டீலர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஹாலின் அலங்காரம் பார்ட்டிக்கு முந்தைய நாள் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்ததால் அது மட்டும் தான் பாக்கி. இந்நிலையில் ராகவ் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே பார்ட்டியில் கலந்துகொள்வர் என்று கடைநேரத்தில் சொல்லிவிட்டதால் ஏற்பாடுகளில் சிற்சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று.
இந்த ஏற்பாடுகளின் போது அவந்திகா அடிக்கடி ராகவைச் சந்திக்க விஹானுக்கு வருவது வாடிக்கை ஆனதால் மாதவனும் வர்ஷாவும் அவளது மனதுக்கு நெருங்கியவர்களாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். என்ன தகவல் வேண்டுமானாலும் இருவரும் கேட்ட நிமிடத்தில் கொண்டு வந்து கொடுத்துவிடுவர். அதே நேரம் அவள் அந்த அலுவலகத்துக்கு வேலை விஷயமாகச் செல்வது கூட நல்லதுக்கு தான் என்று எண்ணிக்கொண்டனர் பெரியவர்கள் அனைவருமே.
இவ்வாறிருக்கையில் பிரதியுஷாவும் வருணும் தேனிலவை முடித்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். அதன் பின்னர் பிரதியுஷா வழக்கம் போல சன் டியூவுக்குச் செல்ல ஆரம்பித்துவிட அவளது புகுந்தவீட்டாரோ வருணோ இதற்கு மறுப்பு சொல்லவில்லை. இது பிரதியுஷாவுக்கு மட்டுமல்ல, அவந்திகாவுக்குமே நிம்மதியைக் கொடுத்தது.
பிரதியுஷா இந்தியா திரும்பியதும் மைதிலியும் ராஜ்வர்தனும் மகனையும் மருமகளையும் ஒரு நாள் விருந்துக்கு அழைத்திருந்தனர். அதோடு வாசந்தி, ரவீந்தர் குடும்பத்தினரும் கௌசல்யா, ரகுவரனும் கூடவே தத்தம் வீடுகளில் விருந்தளித்துச் சந்தோசப்பட்டுக்கொண்டனர்.
மூன்று பெண்களையும் வேறு வேறு என்று பிரித்துப் பார்த்ததில்லை அவர்கள். எனவே தத்தம் பெண்களுக்குத் திருமணம் முடிந்தால் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அவையனைத்தையும் பிரதியுஷாவுக்கும் செய்து அழகு பார்த்துக்கொண்டனர் அவர்கள்.
விருந்துபசாரங்கள் எல்லாம் ஒரு வாரகாலத்தை எடுத்துக்கொள்ள அவை முடிந்ததும் கல்யாணிதேவியும் ராஜஸ்தானுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். அவரை விமானநிலையத்தில் விட்டுவிட்டு அன்று சனிக்கிழமை என்பதாலும் பெரிதாக வேலை இல்லாததாலும் பிரதியுஷா அவளுக்காகவும் ரித்திமாவுக்காகவும் வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்திருந்த சில பொருட்களைக் கொடுப்பதற்காக அழைத்திருந்ததாலும் இருவரும் கபூர் பேலசை நோக்கிச் சென்றிருந்தனர்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வருங்கால மருமகளுக்கு வரவேற்பெல்லாம் பிரமாதம் தான். ஆனால் அங்கே இருந்த தியாவைக் கண்டதும் அவந்திகாவின் முகம் சுண்டிவிட்டது. இவள் இங்கே என்ன செய்கிறாள் என்ற எரிச்சலை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மறைக்க அவள் சிரமப்பட்டுவிட்டாள் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் மோகன், குணால் மற்றும் நிரஞ்சனின் வழக்கமான கலாட்டாப் பேச்சுக்களில் கவனம் கலைந்து தியாவைக் கண்டுகொள்ளவில்லை அவந்திகா. ஆனால் அவள் இன்னும் பழைய எண்ணங்களுடனே அவந்திகாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் இன்னுமே ராகவை முழுவதுமாக மறக்க இயலவில்லை. அவந்திகாவின் கலீரென்ற நகைப்புச்சத்தத்தில் ராகவின் கவனம் அவள் புறம் திரும்புவதை ஒரு வித எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பார்ட்டி வேலை எப்பிடி போகுதும்மா? வேலை எல்லாம் முடிஞ்சுதா?” என்ற நிரஞ்சனிடம்
“முடிஞ்சுது அங்கிள்… இன்னும் டெகரேசன் மட்டும் தான் பேலன்ஸ்… அதை இன்னும் டூ டேய்ஸ் கழிச்சு பார்த்துக்கலாம்னு விட்டுட்டோம்” என்று பதிலளித்தாள் ரித்திமா.
அவந்திகாவோ பிரதியுஷா வாங்கி வந்திருந்த பொருட்களில் கண்ணைப் பதித்து அதைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். ராகவின் பார்வை அவளை வட்டமிடுவதை அசூசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தியா.
யாருமே அவளைக் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு ஏன், வீணா கூட கிஷோரின் பேச்சைக் கேட்டு ரித்திமாவுடன் தான் உரையாடிக் கொண்டிருந்தாரே தவிர அண்ணன் மகளைக் கண்டுகொள்ளவில்லை. அவரது வருங்கால மருமகளைப் பற்றி மகன் ஆஹோ ஓஹோவென்று புகழ்ந்து தள்ளியிருந்ததில் அவளிடம் பேசுவதிலும் அவளது குடும்பத்தினரைப் பற்றிக் கேட்பதிலும் கவனமானார் வீணா.
பிரியா அனைவருக்கும் தேநீர் கொண்டுவருமாறு வேலையாளிடம் சொல்லிவிட்டு அவர்களின் உரையாடலில் கலந்து கொண்டார். அவந்திகா அனைவரும் தேநீர் அருந்தியதும் கோப்பைகளை வாங்கி டிரேயில் அடுக்கியவள் அதைச் சமையலறையில் வைத்துவிட்டு வர எழுந்திருக்க
“அவந்திகாவுக்கு இன்னும் அந்த மிடில்கிளாஸ் பழக்கவழக்கம் போகலை போல இருக்கே ஆன்ட்டி… ராகவோட ஒய்பா இருக்கப்போறவ இப்பிடி சர்வெண்ட்ஸ் செய்ய வேண்டிய வேலையைச் செய்யுறாளே” என்று அறியாப்பிள்ளை போலக் கேட்டுவிட்டு அவந்திகாவை இகழ்ச்சியாகப் பார்த்துவைத்தாள் தியா.
அவந்திகா டிரேயுடன் எழுந்தவள் “நம்மளோட வேலையை நம்மளே செஞ்சிக்கிறதுல எந்த அசிங்கமும் இல்லை… இந்த டிரேயைக் கொண்டு போய் வைக்கிற வேலை கூடச் செய்யத் தெரியாம என் சித்தி என்னை வளர்க்கலை… அப்புறம் இன்னொரு விஷயம், நான் ஒன்னும் பிறக்கிறப்போவே ராகவோட ஒய்ப் ஆகணும்னு வரம் வாங்கிட்டுப் பிறக்கலை… எனக்கு அவனோட கல்யாணம் ஆகப்போகுதுங்கிற ஒரே காரணத்துக்காக என்னோட பழக்கவழக்கத்தையெல்லாம் என்னால மாத்திக்க முடியாது” என்று அழுத்தமானக் குரலில் உரைத்துவிட்டுச் சமையலறையை நோக்கிச் சென்றாள் அவள்.
அவள் பதிலடி கொடுத்து சிலநொடிகளுக்கு அந்த ஹாலில் முழு அமைதி, குண்டூசி விழுந்தாலும் கேட்டுவிடும் போல. அதை உடைத்தது சுமித்ராவின் குரல்.
“அம்மாடி தியா! அவந்திகா கிட்ட வாய் குடுத்து மீள முடியாதும்மா… இனிமே இப்பிடி தேவையில்லாம பேசி வைக்காதே… வீணா உன் அண்ணன் மகளுக்குக் கொஞ்சம் சொல்லி வை” என்று தியாவுக்கு ஒரு குட்டு வைத்தவர் என்றைக்கு இருந்தாலும் நீ என் மருமகளின் அண்ணன் மகள் மட்டும் தான் என்பதை அவளுக்குப் புரியவைத்துவிட்டார். தியா அவர் சொன்ன அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தலை குனிந்தாலும் மனதுக்குள் பொருமித் தீர்த்தாள்.
அதற்குள் சமையலறையில் இருந்து ஹாலுக்கு வந்த அவந்திகாவை ராகவ் பார்ட்டி விஷயமாகப் பேச வேண்டும் என்று தனது அறைக்கு வருமாறு குடும்பத்தினர் முன்னிலையில் அழைக்க, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், இவன் கட்டாயமாக தியாவைப் பற்றி தான் பேசப் போகிறான் என்று.
ஆனால் அவந்திகாவோ என்ன இவன் மொத்தக்குடும்பமும் இங்கிருக்க அவனது அறைக்கே தன்னை அழைக்கிறான் என்று எரிச்சலுற்றாள். இப்போது மட்டும் சித்தி இங்கிருந்திருக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு கௌசல்யாவின் ராகவ் புராணம் காதுக்குள் அப்போதும் வந்து போனது.
ராகவ் அருகில் சென்றவள் “ஏன்டா ரூமுக்கு வரணும்? இங்கேயே சொல்லு” என்றாள் மற்றவருக்குக் கேட்காத சீறும் குரலில்.
ராகவ் தலையை மறுப்பாக ஆட்டியவன் “இப்போ நீயா வர்றியா? இல்லை நானே தூக்கிட்டுப் போகட்டுமா?” என்று கேட்க
“வாட் த ஹெல்? எல்லாரும் இருக்கிறப்போ இப்பிடி பேச உனக்கு வெக்கமாயில்ல?” என்று குடும்பத்தாரைக் கண் காட்டி அவனிடம் மீண்டும் சீற
“இதுக்கு எதுக்கு வெக்கப்படணும்? என் ஃபியான்ஸியை நான் தூக்கிட்டுப் போகப்போறேன்… பை த வே என் ஃபேமிலி எதுவும் நினைச்சுப்பாங்களோனு யோசிச்சு ஃபீல் பண்ணுனா அது தேவையில்லைனு நான் சொல்லுவேன்!” என்று கேலியாகச் சொல்ல
அவந்திகா “உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா டெய்லியும் ஸ்டார் பிளஸ் சீரியல் தான் போல” என்று புலம்பியபடி அவனைத் தொடர்ந்தாள் அவள்.
குடும்பத்தினர் அதைக் கண்டும் காணாது விட்டுவிட தியா தான் வயிறு எரிந்து போய்விட்டாள்.
அதே நேரம் ராகவ் தனது அறை இருக்கும் தளத்தின் பால்கனிக்கு அவந்திகாவை அழைத்துச் சென்றவன் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
“நீ தேவையில்லாம் தியாவோட பேச்சுக்கு பதிலடி குடுத்து அவளைப் பெரிய ஆளாக்க டிரை பண்ணாதே… அவ ஏதோ பொறாமையில பேசுறா… லீவ் ஹெர்” என்றவனிடம்
“என்னால அப்பிடில்லாம் விட முடியாது ராகவ். என்னை இன்சல்ட் பண்ணுனவங்களுக்கு நான் பதிலடி குடுக்கத் தான் செய்வேன்… அப்பிடி நான் ரிப்ளை பண்ணலைனா அவந்திகா கையாலாகதவனு ஒரு இமேஜ் என் மேலே வந்துடும்.. இவ என்ன சொன்னாலும் சைலண்டா போயிடுவானு நினைச்சுப்பாங்க… அப்பிடி அமைதியா இருந்து கையாலாகதவனு பேர் வாங்குறதுக்குப் பதிலா அவங்க முகத்துக்கு நேரா பதிலடி குடுத்து திமிரு பிடிச்சவங்கிற பேரையே வாங்கிக்கிறேன் ராகவ்” என்று பிடிவாதமாக உரைத்துவிட்டாள் அவந்திகா.
“எல்லா இடத்துலயும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டா இருக்கக்கூடாது அவந்திகா… அதோட விளைவு மோசமா இருக்கும்” என்று அக்கறையுடனே எச்சரித்தான் ராகவ்.
“இட்ஸ் ஓகே! எனக்கு வளைஞ்சு குடுக்கிற பழக்கம் இல்லை ராகவ்… அப்பிடி இருந்தா தான் நல்ல பொண்ணுனு பேர் கிடைக்கும்னா அது எனக்குத் தேவையே இல்லை… நான் யாருனு என் ஃபேமிலிக்குத் தெரியும்.. என் ஃப்ரெண்ட்சுக்குத் தெரியும்.. உனக்கும் தெரியும்… இது தவிர மூனாவது மனுசங்களைப் பத்தி நான் யோசிக்க விரும்பலை… இதுல என் ஃபேமிலினு சொன்னது உன்னோட ஃபேமிலியையும் சேர்த்து தான்” என்று சொல்லிவிட்டு நிமிர்வாகவே நின்று கொண்டாள்.
ராகவ் அவளது கூந்தலைச் செல்லமாகக் கலைத்துவிட்டவன் “எப்பிடி எப்பிடி? ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் அதுக்கு அப்புறம் தான் நானா? உன்னை என்ன பண்ணுறது? நான் எப்பிடி அந்த லிஸ்ட்ல ஃபர்ஸ்ட் வர்றது? ம்ம்” என்று குறும்பாகச் சொன்னபடி அவளைத் தன்னை நோக்கி இழுக்க அடுத்த நொடி அவனது கைப்பிடிக்குள் இருந்தாள் அவந்திகா.
கண்கள் விரிய அவனைப் பார்த்த அந்நொடி அவனது இதழில் அவளை மயக்கும் மோகனப்புன்னகை பூத்தது. அவளது கரங்கள் தானாக அவனது கன்னத்தைப் பற்றிக் கொள்ள
“நீ சிரிச்சா எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? இந்தச் சிரிப்புக்காகவே உன்னை மேரேஜ் பண்ணிக்கலாம் போல” என்று ஆசையுடன் கூற
ராகவ் “இஸிண்ட்? ஆக்சுவலா இந்த மாதிரி சீன்ல பசங்க தானே பொண்ணுங்களோட அழகைப் புகழ்ந்து பேசணும்?” என்று புருவம் உயர்த்த
“க்கும்! அது தான் என் விஷயத்துல நடக்காதே! ஷேரி கட்டியிருந்தா கூட நீ இப்போ கொஞ்சம் போல பொண்ணாட்டம் இருக்கேனு செம மொக்கையா ஒரு காம்ப்ளிமெண்ட் குடுப்ப… ஆனா இது லாங் டாப்பா போயிடுச்சே” என்று உதட்டைப் பிதுக்கினாள் அவள்.
“உனக்கு உச்சி குளிரணும்னு என்னால பொய் சொல்ல முடியாதே ஜான்சி ராணி.. பை த வே உன் கிட்ட எனக்குப் பிடிச்சது உன்னோட ஏகே47 மாதிரியான வார்த்தைகள் தான்… எதிர்ல யாரு நின்னாலும் டோண்ட் கேர்… சுட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருக்கும்” என்று துப்பாக்கி போன்று கைவிரல்களைக் கோர்த்துச் சுடுவது போல பாவனைக் காட்டிவனைப் பார்த்து சிரித்தாள் அவள்.
“நீ ஃபீல் பண்ணிச் சொல்லுறதைப் பார்த்தா உனக்கு சேதாரம் அதிகம் போல?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள் அவந்திகா.
“அஃப் கோர்ஸ்… காயமும் பயங்கரம் ஜான்சி ராணி… உனக்கு எங்கே அதுலாம் புரியப் போகுது?”
“அஹான்! எங்கே சார் காயம்?” என்று தலையைச் சரித்தவளின் கரத்தைப் பற்றிக் கொண்டவன்
“இங்கே” என்று சொன்னபடி தனது நெஞ்சில் வைத்துக் கொண்டான்.
“உன்னைப் பார்த்தப்போ முதல் அடி விழுந்தது இங்கே தான்… அது இன்னும் வலிச்சிட்டே தான் இருக்கு… ஆனா ஒவ்வொரு தடவை வலிக்கிறப்போவும் அவ்ளோ சுகமா இருக்கு” என்று சொன்னவனின் கண்ணில் அவந்திகா கண்டது நூறு சதவீதம் அவள் மீதுள்ள அவனது எல்லையற்ற காதலைத் தான். ஆனால் அவள் அதைச் சொன்னால் ஒத்துக்கொள்ளக் கூடியவனா அவன்!
அந்த எண்ணத்துடன் எதிரில் நிற்பவனின் கண்ணில் தெரியும் காதல் கொடுத்த கர்வம் முகத்தில் மின்ன “அஹான்! இவ்ளோ நாள் புன்னகை மன்னனா இருந்தவன் இன்னைக்குக் காதல் மன்னனா மாறிட்டே போல… பட் மிஸ்டர் காதல்மன்னன்! உங்க ஹார்ட்டைக் கொஞ்சம் செக் பண்ணுங்க… அடிக்கடி ஹார்ட்ல பெயின் வர்றது நல்லதுக்கு இல்லை” என்று அமர்த்தலாக மொழிந்தாள் அவந்திகா.
அதைக் கேட்டுப் புன்னகைத்த ராகவ் “அதுல்லாம் ஒன்னும் வேண்டாம்… ஜஸ்ட் ஒன் ஹக்… எல்லா வலியும் பறந்து போயிடுமாம்… இது என் டாக்டரோட அட்வைஸ்” என்று குறும்பாகப் பதிலளித்து விட்டு அவளை அளவற்றக் காதலுடன் அணைத்துக் கொள்ள, தன்னவன் அவனென்று அக்கணம் புரிபடவே, எவ்வித தயக்கமும் தடையுமின்றி அவனுள் புதையுண்டாள் அவந்திகா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


