“என் காயங்களைப் பற்றியோ, என் தவிப்பைப் பற்றியோ கொஞ்சமும் யோசிக்காத மூர்க்கன் அவன். ஆனால், அவன் தந்த அந்த வலியில்கூட என்னை அடிமையாக்கும் ஒரு விவரிக்க முடியாத போதை கலந்திருந்ததுதான் ஆகப்பெரிய முரண்.”
-வெண்பா
“அப்பா எங்கம்மா?” மனதுக்குள்ள உழன்ற சந்தேகத்தோடு தந்தையைத் தேடிய வெண்பாவை ஏமாற்றம் கப்பிய விழிகளோடு பார்த்தார் உமையாள். ராஜவிலாசத்தில் அவர் கண் முன்னே நடந்த நிகழ்வுகளும் கணவர் சொன்ன சமாச்சாரமும் அவரது மனதை வருத்தப் போதுமானதாய்!
“அப்பா திண்ணைல உக்காந்து யார்கிட்டவோ கல்யாண வேலைகளைப் பத்திப் பேசிட்டிருக்காங்க. நீ போய் ட்ரெஸ் மாத்திக்க” என்று மகளை அவளது அறைக்கு அனுப்பிவைத்தவர் முன்வாயில் திண்ணைக்குச் சென்றார்.
“ஆமா! இன்னும் பத்து நாள்தான் இருக்கு. ஆனா மருமகனோட குடும்பம் இதுக்கு மேல நாளைக் கடத்தவேண்டாம்னு பாக்குறாங்க”
சந்தோஷமாய் பேச வேண்டிய திருமண விவகாரத்தைச் சலிப்போடும் சோர்வோடும் அவர் பேசுவதே உமையாளுக்கு உறுத்தலாய்! செண்பகராமன் பேசி முடிக்கட்டுமெனக் காத்திருந்தவர் அவர் திரும்பியதும் பெருமூச்சு விட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வெண்பா எங்க? இப்பவே பேசிட்டா சரியா இருக்கும் உமா” என செண்பகராமன் சொன்னபோது அவரது குரல் கறார் தொனிக்குத் தாவியிருந்தது, உமையாளுக்கும் தலையாட்டுவதே போதுமானதாய் இருந்தது.
“அவ ரூமுக்குப் போயிருக்கா. நீங்க கொஞ்சம் பொறுமையா எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பா”
“எனக்கு அப்பிடித் தோணல உமா. விஷயம் இவ்ளோ தூரம் போயிருக்குனா என்ன அர்த்தம்? பெத்தவங்கனு நாம எதுக்கு இருக்குறோம்?” என உஷ்ணமான மனிதர் மகளின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் நுழைந்தார்.
“நீங்க கேட்டுமா அவர் சொல்லல? நான் போய்ப் பேசமுடியாது, நீங்க ஹேமாவோட கிளாஸ் டீச்சர்ங்கிறதாலதான் அவங்க வீட்டுக்குப் போகச் சொன்னேன் அமுதாக்கா”
மொபைலில் பேசியவண்ணம் இருந்த மகளை அதிருப்தியுடன் பார்த்தவண்ணம் இருந்தார் செண்பகராமன். தந்தையைக் கவனிக்காமல் மொபைலில் பேசியபடி வீட்டின் பின்வாயில் தோட்டத்தை நோக்கிச் சென்றாள் வெண்பா.
“நான் எவ்ளோவோ பொறுமையாக் கேட்டுப் பாத்துட்டேன் வெண்பா. ஹேமாவோட அப்பா வாயைத் திறக்கல. எல்லாத்தையும் எம்.எல்.ஏ சார் பாத்துப்பார்னு சொல்லுறார். ரொம்பப் பயந்துபோயிருக்காங்க. சில விஷயம் வெளிய தெரியக் கூடாது, பொம்பளைப் பிள்ளை வாழ்க்கையாச்சேனு டயலாக் வேற பேசுறார் வெண்பா”
அன்று காலையில்தான் அமுதாவிடம் பேசியிருந்தாள் வெண்பா. நேத்ரனிடமிருந்து ஒரு வார்த்தையைக்கூடப் பிடுங்க முடியாதென ஆன பிறகு ஹேமாவிடம் நேரடியாகப் பேசுவதே சரியெனத் தோன்றியது. ஆனால் அவள் ஒன்றும் ஹேமாவின் வகுப்பாசிரியை இல்லையே! எனவேதான் அமுதாவிடம் சொல்லி ஹேமாவின் குடும்பத்தாரிடம் நடந்த உண்மை என்னவென்பதை விசாரிக்கச் சொல்லியிருந்தாள்.
அமுதாவிடம் ஹேமாவின் தந்தை எந்தப் பதிலையும் சொல்லாமல் சமாளிக்க அதற்குப் பயமெனப் பெயர் சூட்டிவிட்டாள் அவள்.
“அவங்களும் என்ன பண்ணுவாங்க? பாவம்” என வெண்பா பேசும்போதே பின்னால் யாரோ வரும் அரவம் கேட்டது.
சட்டெனத் திரும்பியவள் அங்கே தந்தை நிற்கவும் “அப்புறமா பேசுறேன்கா” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
செண்பகராமனின் முகத்தில் தெரிந்த அதிருப்தியை அவளது விழிகள் படித்துவிட்டன.
“என்னப்பா?” மெதுவாக வினவினாள்.
அவர் சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.
“உனக்கும் மாப்பிள்ளைக்கும் கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டோம். இன்னும் பத்து நாள்ல முகூர்த்தம். நாளைக்கு முகூர்த்தப் புடவை எடுக்க துர்காவும் பெரிய சம்பந்தியும் வருவாங்க. எல்லாருமா போய் ஜவுளி எடுத்துடுங்க. கல்யாணத்துக்கு அப்புறம் ஸ்கூல்ல வேலைக்குப் போகணுமா வேண்டாமாங்கிறதை நீயும் மாப்பிள்ளையும் பேசி முடிவெடுத்துக்கோங்க.”
கடகடவென ஒப்பித்தவர் ‘என் கடமை முடிந்தது’ என்பது போலக் கிளம்ப எத்தனிக்கவும் “ஒரு நிமிஷம்பா” என்றாள் வெண்பா.
அவளுக்கு அவர் சொன்ன செய்தியை ஜீரணிக்கவே நேரம் தேவைப்பட்டது. திருமணத் தேதியை ஜூலை, ஆகஸ்டில்தானே குறிப்பார்கள் என்று நேத்ரன் கூறினான். அதற்குள் அவசரமாகத் தேதி குறித்து ஏற்பாடு நடக்கிறது என்றால் அவன்தான் ஏதோ செய்துள்ளான்.
“அப்பா, இப்ப இந்தக் கல்யாணத்துக்கு அவசரப்படணுமா?” எனத் தயங்கியபடிக் கேட்டாள் அவள்.
செண்பகராமன் அப்போதே பொறுமையிழந்தாற்போலத் தெரிந்தது. ஆனால் தனது எரிச்சலைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டவராய் “உனக்குப் பிடிச்ச மாப்பிள்ளைகூடத்தானே கல்யாணம் நடக்கப்போகுது? அப்ப ஏன் தயங்குற?” எனக் கேட்டார்.
அதில் தடுமாறியவள் வெண்பாதான்! ஆனால் இனியும் தடுமாறித் தயங்கி நிற்பதால் பிரயோஜனமில்லை எனப் புரிந்துகொண்டவள் திடமாய் நிமிர்ந்தாள்.
“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லப்பா. கல்யாணப் பேச்சை முறிச்சிடுங்க”
அடுத்த நொடி செண்பகராமனின் கரம் அவளது கன்னத்தில் இறங்கியது பளாரென. கணவர் பின்வாயிலுக்குச் சென்று வெகுநேரமாயிற்றே என்று தேடிவந்த உமையாளின் கண்கள் இக்காட்சியைக் கண்டதும் அதிர்ந்துபோயின.
செண்பகராமன் கண்டிப்பான தந்தைதான். ஆனால் பிள்ளைகளிடம் கை ஓங்குபவரில்லை. அவரையே நிதானமிழக்கச் செய்துவிட்ட சூழலைச் சபித்த உமையாளால் அதன் சூத்திரதாரியான மகள் மீது ஆதங்கப்பட மட்டுமே முடிந்ததுதான் சோகம்.
வெண்பா கண்ணீரோடு நிற்கவும் செண்பகராமன் மகளிடம் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தார். இத்தனை ஆண்டுகளில் அவள் தந்தையிடம் கேட்காத குரல் இது. பழகாத தொனி இது.
“என்ன நினைச்சிட்டிருக்க நீ? உனக்கு விருப்பம்னு சொன்னதாலதானே அந்தத் தம்பிகூட உன்னை லாங் ட்ரைவ் போக அனுமதிச்சேன். போதாக்குறைக்கு சென்னையில சின்னதுரை மகளோட ரிசப்ஷன்ல ஜோடியா நின்னிருக்கீங்க ரெண்டு பேரும். நம்ம சொந்தக்காரங்க எல்லாம் பாத்துட்டு என்கிட்ட ஜோடிப் பொருத்தம் அபாரம்னு சொல்லி மாய்ஞ்சுபோனானுங்க. இப்ப கல்யாணத்தை நிறுத்துனா அவங்க மத்தியில எனக்கு எவ்ளோ பெரிய தலையிறக்கம்னு நீ யோசிக்கமாட்டியா?”
வெண்பா கன்னத்தைத் தாங்கிப் பிடித்தபடியே “இப்ப நடந்த பிரச்சனையில நேத்ரன் கொஞ்சம்கூட நியாயமா நடந்துக்கலப்பா. அவர் ஒரு அரசியல்வாதினு…” என்று சொல்லிக்கொண்டே போக
“அவர் அரசியல்வாதினு தெரிஞ்சுதானே கல்யாணம் பேசுனோம். அவர் எதையும் ஒளிச்சு மறைச்சு செய்யலையே! முதல்ல அரசியல்வாதினாலே மோசமானவன்னு நினைக்குறதை நிறுத்து. நம்ம கண்ணுக்கு நேரா தெரியுற ரோடு கூட சில இடத்துல வளைஞ்சு நெளிஞ்சுதான் போகும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்னு ஏத்துக்கப் பழகு” என்று கர்ஜித்தார் மனிதர்.
வெண்பாவுக்கு இதற்கு மேல் பேச்சு வருமா என்ன? அப்படி என்றால் நேத்ரன் நேற்று குறிப்பிட்டது இதைப்பற்றித்தான். தனது பிடிவாதத்தை உடைக்க அவன் நேரடியாகத் தந்தையிடம் பேசியிருக்கிறான். சாமர்த்தியசாலிதான்! நினைக்கும்போதே மனமெல்லாம் கசந்தது. அவனது சாமர்த்தியப் புத்தி செயல்பட்டது அவளது முடிவுக்கு எதிராக அல்லவா!
கண்டிப்பும் கனிவுமாய் இருக்கும் தந்தையை மூளைச்சலவை செய்து தன்னிடம் கை நீட்டும் அளவுக்குக் கொண்டுவந்துவிட்டானே என்ற ஆதங்கம் அவளுக்கு அன்றைய நாள் முழுவதும் இருந்தது.
இரவில் அவனிடமிருந்து வாட்ஸ்அப்பில் செய்தி வருமெனக் காத்திருந்தாள். ஆனால் வழக்கமாய் வரும் இரவு வணக்கம்கூட வரவில்லை. வீட்டின் சூழல் பற்றி யாரேனும் அவனிடம் சொல்லியிருக்கலாம் என நினைத்தவள் மறுநாள் துர்காவும் அங்கயற்கண்ணியும் திருமணத்துக்கான ஆடைகள் வாங்க அழைக்க வரவும் அமைதியாகக் கிளம்பினாள்.
உடன் வந்த குந்தவை அதிகமாகப் பேசவில்லை அவளிடம். அவளிடம் மட்டும்தான் அமைதி. மற்றபடி உமையாளிடமோ செண்பகராமனிடமோ எந்த முகச்சுழிப்பையும் காட்டவில்லை. அந்த வகையில் குந்தவைதான் ஒரு பெரிய மனுஷியென நிரூபித்துவிட்டார்.
துர்காவுக்கு முகூர்த்தப் புடவை எடுத்த அதே ஆரெம்கேவிதான். ஆனால் அப்போதிருந்த கொண்டாட்ட மனநிலை இப்போது இல்லை வெண்பாவுக்கு. அப்போது அவளுக்குத் துணையாய் இருந்த நேத்ரனும் அங்கே இல்லை.
‘தன் மனம் அவனைத் தேடுகிறதா? அப்படி என்றால் அவன் மீதான தனது வருத்தம் போலியானதா? அல்லது அது நீர்த்துவிட்டதா? என்ன கோபம் இருந்தாலும் நேத்ரன் தன்னிடம் பேசுவான் என்று நினைத்தோமே!’
தனக்குள் மருகியவள் உடை தேர்வு அனைத்தையும் பெண்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டாள். நேரே ஃபுட் கோர்ட்டுக்குப் போய்ப் பழச்சாறு ஒன்றை வாங்கியவள் அதை வேண்டாவெறுப்பாக அருந்திக்கொண்டிருந்தபோது பழக்கப்பட்ட பெர்ஃபியூம் நறுமணம் ஒன்றை அவளது நாசி கண்டுகொண்டது.
‘நேத்ரன்!’ அவளது மூளை உணர்ந்த அதே நேரம் அவள் முன்னே பிரசன்னமானான் நேத்ரன். அவனைப் பார்த்ததும் அவளையறியாது விழிகளில் மலர்ச்சி!
“ஹலோ டீச்சரம்மா!” என்று கையசைத்தவன் “வெயில்ல வந்தது தொண்டை காய்ஞ்சுபோச்சு.” என்று சொன்னவனாய் அவளது கையிலிருந்த பழச்சாறு கோப்பையை வாங்கித் தானும் அருந்தத் தொடங்கினான்.
வெண்பா அவனோடு சாதாரணமாய் உரையாடத் தயாரானவள் தனக்கும் அவனுக்குமான உரசல் ஞாபகம் வரவும் கப்சிப்பாகிப்போனாள்.
‘இவன் சாவி கொடுத்ததால் என் தந்தை என்னை அடித்துவிட்டார்’
இவ்வளவு நேரம் மறந்த விவகாரத்தை மூளை நினைவுபடுத்திக்கொண்டது. உடனே முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவன் குடித்துக்கொண்டிருந்த பழச்சாறு கோப்பையைப் பிடுங்கிக்கொண்டாள்.
நேத்ரன் ஏமாற்றத்தோடு “ஹேய்” என்க
“சொந்தக் காசுல வாங்கிக் குடிங்க” என்று கடுப்பாக மொழிந்துவிட்டு மிச்சமிருந்ததைத் தானே அருந்தத் தொடங்கினாள் வெண்பா.
நேத்ரன் அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. அவள் தன்னிடம் இன்னும் அதீதமாய்க் கோபப்படுவாள் என்று எதிர்பார்த்துதான் இங்கே வந்திருந்தான். இது அவன் எதிர்பார்த்ததைவிடக் குறைவான கோபமே!
“மாமா ரொம்பத் திட்டிட்டார் போலயே” என்றபடி கேலியாய் அவளைப் பார்த்தான்.
உடனே சுறுசுறுவெனக் கோபம் உச்சந்தலைக்கு ஏறியது வெண்பாவுக்கு.
“ரொம்ப கரெக்டா காய் நகர்த்திட்டதா நினைப்போ?” எனக் காய்ந்தாள் அவனிடம். அவன் அலட்டலில்லாமல் தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.
“நான்தான் சொன்னேனே! என்னை இப்பிடி எல்லாம் செய்யவச்சது உன்னோட பிடிவாதம்தான். நீ திட்டு, சண்டை போடு, ரெண்டு அறைகூட அறைஞ்சுக்க. ஆனா அதெல்லாம் என்கூட இருந்து பண்ணு. சும்மா கல்யாணத்தை நிறுத்திடுங்கனு பிடிவாதம் பிடிக்காத. இந்தக் கருத்துவேறுபாடு நம்ம லவ்வைவிடப் பெருசா தெரியுதா உனக்கு?”
அவன் அழுத்தமாய் வினவியதும் வெண்பாவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவளுக்கு அவன் மீதான காதல் எப்போதுமே உயர்வுதான். அதை இழப்பது அவளுக்கும் பெரும்வலிதான். ஆனால் அதைத் தாண்டி அவள் உறவை முறிக்கிறாள் என்றால் பிரச்சனையின் தீவிரம் என்னவென நேத்ரன்தானே புரிந்துகொள்ள வேண்டும் என்று யோசித்தாள்.
அவன் புரிந்துகொண்டானோ இல்லையோ, அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் விட்டுவிட்டான் என்ற வருத்தம் அவளுக்கு. இப்போது காதலைக் குறிப்பிடவும் பதில் பேசத் தெரியவில்லை.
நேத்ரனிடம் சன்னப் புன்னகை! என்ன பேசுவதெனத் தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி நின்றவள் அவனது மனதில் அவள் மீது உருவான சலிப்பைப் போக்கிவிட ஆட்காட்டி விரலால் அவளது வதனத்தை வருடினான்.
“என்னால எப்பவும் உன்னை விட்டுக்குடுக்க முடியாது. நான் அரசியல்வாதிங்கிற ஒரு காரணம் எந்த வகையிலயும் நமக்குள்ள கசப்பை உருவாக்காது. இப்ப நீ யோசிக்குற பிரச்சனைக்கான தீர்வு உன்கிட்டதான் இருக்கு. என்னால என் வேலை சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் உன்கிட்ட ஷேர் பண்ண முடியாது. அதுக்கு நிர்வாகரீதியா அரசியல்ரீதியா நிறைய காரணங்கள், விதிகள் இருக்கு. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், எப்பவும் நான் ஒருதலைப்பட்சமா அநியாயமா நடந்துக்கமாட்டேன். அந்த வகையில நீ என்னை நம்பலாம்”
சொல்லும்போதே நம்பத்தான் தோன்றியது அவளுக்கு. பிடிவாதம் உருகிப்போகக் கண்களும் கலங்கிப்போயின.
“உங்கம்மாவோட புது மருமகளைக் கல்யாணம் பண்ணிக்கலாமே. அவளும் அழகாத்தான் இருந்தா” என்றாள் வேறெங்கோ திரும்பிக் கண்ணீரைத் துடைத்தவளாய்.
நேத்ரன் அவளைக் கேலி செய்யும் விதமாய் நகைத்தவன் தோளோடு அணைத்துக்கொண்டான்.
“அம்மாவோட மருமகளை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு டீச்சர்மாதான் வேணும்”
இலகுவாய் விளையாட்டாய்ச் சொல்வது போலத் தெரிந்தாலும் இந்த வாக்கியங்களை உச்சரிக்கையில் நேத்ரனின் கண்களில் தெரிந்த பிடிவாதத்தைப் புரிந்துகொண்டாள் வெண்பா.
ஒரேயடியாய் ஹேமாவை மறந்துபோனாள் என்று சொல்ல முடியாது. ஆனால் தங்களது காதலுக்கு அநியாயம் செய்ய விரும்பாதவளாய் அவனோடு சேர்ந்து முகூர்த்தப் புடவையைத் தேர்வு செய்தாள்.
மனதோரம் அங்குமிங்குமாய் உருண்டுகொண்டிருந்த உறுத்தலைத் தடுக்க முடியாமல் தடுமாறவும் செய்தாள். கூடவே குந்தவையின் பார்வையில் தெரிந்த விலகல் இனி தனக்கும் அவருக்குமான உறவு பழையபடி இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்தியது வெண்பாவுக்கு.
பத்து நாட்கள் பரபரப்பாய், பரவசமாய், கொஞ்சம் போல மனச்சலிப்போடு கடக்க இருவீட்டாரும் திருமண ஏற்பாட்டை ஜரூராய் செய்து முடித்தார்கள்.
துர்கா – புகழேந்தியின் திருமணம் நடந்த அதே மண்டபம்! ஆனால் அவர்களது திருமணத்தை விட அதிக உறவுக்காரக் கூட்டம், அரசியல் தலைகள், தொழில் வட்டாரத்து நட்புகள் என மண்டபம் திணறிப்போனது.
பத்து நாட்களில் தொகுதி வேலைகளில் மும்முரமாய் இருந்தவனுக்கும் அவளோடு பேச நேரம் வாய்க்கவில்லை. திருமணத்துக்காக முதலமைச்சரிடம் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வைத்திருந்தார்கள் நேத்ரனும் ராஜவேலுவும்.
அவரது வருகையால் பாதுகாப்புக் கெடுபிடி அதிகமாக இருந்தது மண்டபத்தில்.
மகள் மருமகனோடு மணமேடையில் அமர்ந்திருப்பதை சொல்லவொண்ணா மகிழ்ச்சியோடு பார்த்தபடி நின்ற செண்பகராமனுக்குப் பெரும் தலைகுனிவு தவிர்க்கப்பட்ட நிம்மதியும் வராமல் இல்லை.
மார்த்தாண்டனின் அறிவுரையால் குந்தவையும் இயல்பாகத் திருமணத்தில் காணப்பட உமையாளுக்கு அதுவே பெரும் ஆசுவாசமாய்!
முகூர்த்த நேரம் வந்துவிட மாங்கல்யத்தை நேத்ரனிடம் நீட்டினார் ஐயர். அதை வாங்கிக்கொண்டவன் வெண்பாவைப் பார்க்க அவளிடமோ மணப்பெண்ணுக்கே உரித்தான அந்த நேரத்துப் பதற்றம் தெரிவதாய்!
“என்னைப் பாரு டீச்சரம்மா!” என்று அவன் அழுத்தமாய் சொல்லவும் பார்வையை அவனிடம் நிலைத்தவள் அவனது கரத்தால் மாங்கல்யம் ஏறி மூன்று முடிச்சுகள் விழும்வரை பார்வையை விலக்கவில்லையே.
நேத்ரன் அவளைத் தோளோடு அணைத்து நெற்றியில் குங்குமம் வைத்துவிடப் பெரியதொரு அரவணைப்பில்தான் அடங்கிப்போனதாய் உணர்ந்தாள் வெண்பா.
அவனது விரல் கோர்த்து அக்னியை வலம்வந்தபோதும் கால் விரலில் மெட்டியை வாங்கிக்கொண்டபோதும் எவ்விதப் பதற்றமுமில்லை அவளிடம்.
முதலமைச்சரின் வருகையின்போது அவனது கரத்தை இறுகப்பற்றிக்கொண்டவள் அங்கே மின்னிய கேமராவின் ஃப்ளாஷ்களில் ஜோடியாய் ஜொலித்தாள். நினைத்ததை நடத்திக் காட்டிய பெருமிதத்தில் அவளோடு இணைந்து நின்ற நேத்ரனின் வதனம் தனியொரு கர்வத்தைச் சுமந்திருந்தது.

செண்பகராமன் – உமையாளைப் போல எழிலனும் ஹேமாவும் கூட வெண்பாவின் கழுத்தில் தாலியேறிய நொடியில்தான் ஆசுவாசமுற்றார்கள் எனலாம்.
எவ்வித களேபரமும் இல்லாமல் நேத்ரன் – வெண்பாவின் திருமணம் வெகுவிமரிசையாய் முடிந்தது. அங்கே நிலவிய சுமூகமான சூழல் வாழ்நாளெங்கும் நிலவப்போகிற அமைதியைப் பிரதிபலிக்கிறதா என்ன!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


