விஹான் டெலிகாம் மதியநேர வெயிலின் வெம்மையைத் தீர்க்க இலவசமாகக் குளிர்காற்றை வழங்கிக் கொண்டிருந்தது ஏசியின் வாயிலாக. வரவேற்பு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள் அவந்திகா.
“மேம்! எம்.டி இப்போ மீட்டிங்ல இருக்கார்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிளீஸ்” என்று வரவேற்பு பெண் அழாதக் குறையாகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவந்திகாவிடம்.
அவளோ அதைக் காதில் போட்டுக்கொள்வதைப் போல தெரியவில்லை. அவள் இங்கே வந்து ஒருமணி நேரத்தைக் கடந்துவிட்டது. அவள் இழுத்துப் பிடித்துவைத்திருந்த பொறுமையும் காற்றோடு கரைந்துவிட்டது. இதற்கு மேல் பொறுமை காப்பதற்கு அவள் ஒன்றும் பூமாதேவி இல்லையே. அதனால் தான் ராகவின் மீட்டிங் எப்பொழுது முடிவடையும் என்று அந்த வரவேற்பறை பெண்ணை தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்.
அவளும் சளைக்காமல் அவந்திகாவைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள் தான். ஆனால் அவந்திகாவுக்கு இதற்கு மேல் காத்திருக்க அவகாசமில்லை.
அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு மீட்டிங் ஹால் இருக்கும் தளத்துக்குச் செல்ல மின் தூக்கியை நோக்கி விரைந்தாள். இரண்டாவது தளத்தின் பொத்தானை அழுத்திவிட்டு நின்றவள் சில கணங்களில் கதவு திறக்கவும் வெளியேறி மீட்டிங் ஹால் இருக்கும் இடத்தை அடைந்தாள்.
கதவு தாளிடப்பட்டிருக்கவே யோசிக்காது உள்ளே சென்றவளை அங்கே அமர்ந்திருந்தவர்களின் பார்வை துளைக்க ஆரம்பிக்கவும் ராகவின் கவனம் அவள் புறம் திரும்பியது. இவள் இங்கு இந்நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்ற யோசனையுடன் மீட்டிங் நடக்குமிடத்துக்கு இப்படி திடுதிடுப்பென்று வந்து நின்றவளைக் கண்டு எரிச்சலும் சேர்ந்து வந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதே எரிச்சலுடன் “எக்ஸ்யூஸ் மீ ஜென்டில்மென்” என்று சொல்லிவிட்டு அவனது இருக்கையிலிருந்து எழுந்து அவளிடம் வந்தவன் கரத்தைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றான்.
“அறிவில்லையா உனக்கு? மீட்டிங் ஹாலுக்குள்ள இப்பிடி தான் பெர்மிசன் இல்லாம வருவியா?”
“நான் உன்னோட ஆபிஸுக்கு வந்து ஒன் ஹவருக்கு மேல ஆகுது… நீ இப்போ வருவ அப்போ வருவனு காத்திருந்து சலிச்சுப் போச்சு ராகவ்… எனக்கு உன் கிட்ட சில இம்பார்டெண்ட் விஷயங்கள் பேசணும்”
“லிசன்! இப்போ நானே நினைச்சாலும் உன் கூட பேசுறளவுக்கு எனக்கு டைம் இல்லை… நான் ஈவினிங் உன்னோட ஆபிஸுக்கே வந்து பேசுறேன்.. ஓகே.. ப்ளீஸ் இம்பார்ட்டெண்ட் பாயிண்ட்ஸ் டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கேன், ஐ ஹேவ் டு கோ” என்று அவன் பொறுமையாக விளக்கவே அவந்திகாவுக்கும் கோபம் அடங்கி அவனது நிலை புரிந்தது.
“ம்ம்.. நான் கிளம்புறேன்.. பட் ஈவினிங் நீ மறந்துடாம வந்துடு ராகவ்.. நான் வெயிட் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த தளத்திலிருந்த மின் தூக்கியை நோக்கிச் சென்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் மீட்டிங்கில் கலந்து கொள்ளச் சென்றவனுக்கு அடுத்த நிமிடமே அவந்திகா மறந்து போய்விட்டாள்.
வேலையில் மூழ்கியவனுக்கு மாலை வரை ஓய்வில்லை. ஏழு மணிக்கு மேல் வீடு திரும்பியவன் டிசர்ட்டை மாற்றிவிட்டுச் சாவகாசமாகப் போனை எடுத்துப் பார்க்க அதில் அவந்திகாவிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள். அதைப் பார்த்ததும் தான் அவள் தனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னதே அவன் புத்தியில் உறைத்தது.
காரை எடுத்துக் கொண்டு அவள் அலுவலகத்துக்குச் சென்றவனை அந்த அலுவலகத்தில் எரிந்து கொண்டிருந்த குழல்விளக்கு கண் சிமிட்டி வரவேற்க, பதற்றத்துடன் உள்ளே சென்றவனின் கண்ணில் பட்டாள் அலுவலக அறையில் லேப்டாப்புடன் அமர்ந்திருந்த அவந்திகா. அவன் உள்ளே வந்த அரவம் கேட்டுத் திரும்பியவள்
“என்ன சார் மீட்டிங் இப்போ தான் முடிஞ்சுதா?” என்று கேட்கும் போதே அதில் எவ்வளவு கோபம் மறைந்திருந்தது என்பதை ஊகித்துவிட்டான் ராகவ்.
“ஆக்சுவலி மீட்டிங் மதியமே முடிஞ்சிடுச்சு… நான் இங்கே வர்றேனு சொன்னதை மறந்துட்டேன் அவந்திகா”
இது தான் ராகவ். தான் தவறு செய்தாலும் பொய் சொல்லி சமாளிக்க முயலாதவன். அவனது அக்குணம் எப்போதும் அவந்திகாவுக்குப் பிடித்தமானதே. ஆனால் இம்முறை அவளுக்கு இக்குணத்தை எண்ணி உவப்பாக இல்லை.
இவன் வருவான் என்று ஒருத்தி மதியத்திலிருந்து காத்திருந்தால் இவன் சாவகாசமாக இரவில் வந்துவிட்டு ‘மறந்துவிட்டேன்’ என்று வேறு சொல்கிறான்!
கடுப்புடன் லேப்டாப்பின் திரையை மூடிவைத்தவள் “ஓகே… நான் நம்ம என்கேஜ்மெண்டை பிரேக் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு ராகவின் முகத்தைப் பார்க்க அங்கே எந்த உணர்ச்சிக்கும் இடமில்லை என்ற அறிவிப்பு இருந்தது.
லேப்டாப்பை அவளது பேக்கில் வைத்தபடியே “நீ உன்னோட எக்ஸ் ஃபியான்ஸியையே கல்யாணம் பண்ணிக்கோ” என்றவள் அவளது விரலில் அவன் அணிவித்த மோதிரத்தைப் பகீரத பிரயத்தனம் செய்து கழற்ற ஆரம்பித்தாள்.
ஒரு வழியாக மோதிரம் கழண்டு கொள்ள அதை ராகவின் கையில் திணித்துவிட்டு
“ஐ டோண்ட் வான் டு பி அ கோல்ட் டிக்கர்… நான் ஒரு சாதாரண மனுசனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்புறேன்.. என்னால உன்னையும் உன் ஃபேமிலியையும் பார்த்தா இயல்பா இருக்க முடியுறதில்லை… நீங்க ரொம்ப பெரியவங்க… உங்களோட ஸ்டேட்டஸ், லைஃப் ஸ்டைல் எல்லாமே வேற… அதுக்கும் எனக்கும் எப்போவுமே ஒத்துவராது… அதுவுமில்லாம நடந்த ஒரு சின்ன பிரச்சனைக்குப் பிராயச்சித்தமா என்னை நீ கல்யாணம் பண்ணுனா நீ பெரிய மனுசனா ஆயிடுவ, ஆனா நான் கடைசி வரைக்கும் குற்றவுணர்ச்சியோட வாழணும்… எனக்கு அப்பிடிப்பட்ட வாழ்க்கை வேண்டாம்” என்று மூச்சுவிடாமல் ஒப்பித்துவிட்டு வெளியேற முயல அவளைக் கரம் பற்றி நிறுத்தினான் ராகவ்.
“உன்னை கோல்ட் டிக்கர்னு சொல்லுறதுக்கு யாருக்குத் தைரியம் வந்துச்சு? நீ அப்பிடிப்பட்டவளா இருந்திருந்தா நான் உன்னைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன் அவந்திகா… அப்புறம் கட்டாயத்துக்காக மட்டும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணலை” என்று சொல்லிவிட்டு அவள் அருகில் வரவும் அன்று போல இன்றும் அவந்திகாவுக்கு உள்ளுக்குள் மத்தாப்பூச்சிதறல்கள் ஆரம்பித்தது.
என்ன சொல்கிறான் இவன்? தன்னைக் கட்டாயத்துக்காக வேறு வழியின்றி தானே இவன் திருமணம் செய்யப்போகிறான்.
இப்போது அப்படியில்லை என்றால் ஒருவேளை அவனுக்குத் தன் மீது காதல் வந்துவிட்டதோ என்று எண்ணமிடும் போதே “க்கும்! இவன் அப்பிடியே காதலிச்சிட்டாலும்… நான் ஒருத்தி இருக்கேனா இல்லையானே இவனுக்கு நினைவு இருக்காது.. இதுல காதல் மட்டும் தான் குறைச்சல்” என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாலும் அந்த நெடியவனின் அருகாமை அவளுக்குள் ஒரு வித அமைதியின்மையைத் தோற்றுவிக்கத் தான் செய்தது.
ராகவ் அவள் அருகில் வந்தவன் அவளது முகத்தைக் கையில் ஏந்தியவன் “எனக்கு உன்னைப் பிடிக்கும்… உன்னோட இம்மெச்சூரிட்டி, இம்பெர்பெக்சன், பிடிவாதம் எல்லாமே எனக்குப் பிடிக்கும்… நீ யாருக்காகவும் உன்னை மாத்திக்க வேண்டாம்… இந்தக் கொஞ்சநாள்ல நிறைய விஷயம் நடந்திருக்கும்.. அது உன்னோட மனசை ரொம்பவே பாதிச்சிருக்கும்… பட் வீ ஹேவ் டு அக்செப்ட் தட்… நமக்கு என்கேஜ்மெண்ட் முடிஞ்சாச்சு… இன்னும் கொஞ்சநாள்ல கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.. இதை யாராலயும் மாத்த முடியாது” என்று சொல்லிவிட்டு தனது கையிலிருந்த மோதிரத்தை அவளது விரலில் மீண்டும் போட்டுவிட்டான்.
“எப்பிடி நீ நீயா இருக்கியோ அதே போல நான் நானா இருக்க ஆசைப்படுறேன்… எனக்கு இப்போவும் காதல் மேல நம்பிக்கை வரலை… என்னால பக்கம் பக்கமா சினிமா மாதிரி டயலாக்லாம் பேச முடியாது… சோ இன்னொரு தடவை இந்த ரிங்கை கழட்டிடாதே… அப்புறம் என்னோட எக்ஸ் ஃபியான்ஸியைப் பத்தி சொல்லுறதுக்கு எதுவும் இல்லை.. ஷீ இஸ் அ தேர்ட் பெர்சன்… நமக்குள்ள எப்போவுமே அவ வரமாட்டா” என்று இவ்வளவு தான் விஷயம் என்று முடித்துவிட்டான் ராகவ்.
அவனது வழக்கமான அழுத்தம் கலந்த கட்டளையிடும் பாணியில் தான் பேசினான். ஆனால் இன்று முதல் முறையாக அவன் வாயிலிருந்து ‘உன்னை எனக்குப் பிடிக்கும்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அவளுக்குள் இருந்த கோபம் விலகித் தான் போனது. ஒரு சராசரி இளம்பெண்ணாய் ஒரு ஆடவனுக்குத் தன்னைப் பிடிக்கிறது என்று கேள்விப்பட்டதும் சந்தோசமும் மிரட்சியுமாய் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் வைரமுத்து சொன்னது போல ஏதோ ஒன்று உருளுவது போன்ற உணர்வு அவளுக்கு.
“இருந்தாலும் நான் லவ் மேரேஜ் தான் பண்ணிக்கனும்னு இருக்கேன்” என்றவளின் குரலில் இப்போது கோபம் விடைபெற்றிருக்க அவனைக் குறைசொல்லும் பாவனை மட்டுமே மீதமிருந்தது.
ராகவ் “டோண்ட் ஒரி ஜான்சிராணி! நான் தான் லவ் பண்ண மாட்டேனு சொன்னேன்… நீ தாராளமா என்னை லவ் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டவும்
அவந்திகா “அஹான்! எதுவுமே கிவ் அண்ட் டேக் பாலிசி தான்… இவரு ஒரு செங்கல்லை கூட நகர்த்த மாட்டாரு… நான் மட்டும் வீடே கட்டணுமாம்… போடா” என்று தலையைச் சிலுப்பிக் கொண்டவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி அலுவலக அறையிலிருந்து அவளுடன் வெளியேறினான் ராகவ்.
இருவரும் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு வெளியேறவும் அவந்திகா “ஓகே பை! நான் பஸ் ஸ்டாண்டுக்குப் போறேன்.. சீக்கிரமா வீடு போய் சேரு… இல்லைனா உன் பாட்டி கண்ணாடியை மூக்குல போட்டுட்டு ஒரு லுக் விடுமே, அதை ஃபேஸ் பண்ணுற தர்மசங்கடம் வந்துடப் போகுது” என்று சுமித்ராவின் அக்மார்க் மூக்குக்கண்ணாடி பார்வையைக் குறிப்பிடவும் ராகவ் ஆச்சரியப்பட்டான்.
இத்தனை நாட்கள் தனது குடும்பத்தினரை அவள் தவிர்ப்பதை அவன் நன்கு அறிவான். பாட்டி கொஞ்சம் கண்டிப்பு தான். ஆனால் அன்னையோ பெரியன்னையோ பிரியமாய் அழைத்தால் கூட ஒரு லிட்டர் விளக்கெண்ணெய்யை ஒரே மடக்கில் குடித்தவளைப் போல முகத்தை வைத்தபடி அவர்களிடம் சென்று பேசுவாள் அவந்திகா.
அவள் இந்தளவுக்குத் தன் குடும்பத்தினரை உற்று கவனிப்பாள் என்பதே அவனுக்குப் புதிய செய்தி தான். அவந்திகா பேருந்தில் செல்கிறேன் என்று சொன்னது அதன் பின்னர் தான் அவனுக்கு உறைத்தது..
“நானே உன்னை டிராப் பண்ணுறேன் ஜான்சிராணி!” என்று சொன்னதோடு அதற்கு மேல் பேச வாய்ப்பளிக்காமல் காருடன் நின்றவனிடம் அவளும் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை.
காரில் அவந்திகா அமரவும் ராகவ் காரை எடுத்தவன் சாலையில் செலுத்திக்கொண்டே
“அப்புறம் தியா என்ன சொன்னா?” என்று கேட்டவனிடம்
“நான் கோல்ட் டிக்கராம்… உன்னை மடக்கப் பார்க்கிறேனாம்… அடுத்தவங்களுக்குச் சொந்தமானவனா இருந்தாலும் பணக்காரன்னதும் நானும் என் ஃபேமிலியும் உன் பின்னாடியே வந்துட்டோமாம்.. ப்ளா ப்ளா ப்ளா” என்று சொல்லிவிட்டுத் தோளைக் குலுக்கிக் கொண்டாள் சாதாரணமாக.
“அவளை நீ சும்மாவா விட்ட?”
“சே சே! போய் உன் எக்ஸோட கன்னத்தைப் பாரு… அவந்திகாவோட கைவண்ணம் அதுல தெரியும்”
“வாட்? டிட் யூ ஸ்லாப் ஹெர்?”
“ஒய் நாட்? அவ என்னைப் பத்தி அவ்ளோ சீப்பா பேசுவா… நான் கேட்டுட்டு சும்மா இருக்கணுமா? நான் அவ்ளோ நல்லவ இல்லை ராகவ்… சொல்லப் போனா நான் ரொம்ப மோசமான பொண்ணாக்கும்… எனக்கு மத்தவங்க என்ன குடுக்கிறாங்களோ அதை டபிளா திருப்பிக் குடுத்திடுவேன்”
“ஓகே! பை த வே, தியா பேசுன எதுவும் உன் மனசைக் கஷ்டப்படுத்திருந்தா…” என்றவனை இடைவெட்டியவள்
“கஷ்டப்படுத்திச்சு… பட் நான் அவளோட கன்னத்தைக் கஷ்டப்படுத்திட்டேன் ராகவ்.. சோ ரெண்டுக்கும் சரியா போச்சு” என்று சொல்லிவிட்டு அவனைப் போல கண்ணைச் சிமிட்டியவளைப் பார்த்து புன்னகைத்தான் ராகவ்.
அவனது அந்த ஒற்றைப்புன்னகை தான் அவந்திகாவை மயக்கும் மாயச்சுழல். அதில் சிக்கிவிட்டால் மீள்வது கடினம் என்று மூளை எச்சரிக்கும் முன்னரே மனம் அவனது சிரிப்பில் இலயிக்கத் தொடங்கிவிட்டது. இனி மூளையின் சிக்னல்கள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விடும்.
தலையை உலுக்கித் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டவளுக்கு இன்னும் அவனது மோகனப்புன்னகையின் மாயம் மிச்சமிருப்பதாய் தோன்ற ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க ராகவோ அந்நேரம் சாலையில் கண்ணைப் பதித்திருந்தான்.
சாதாரண டிசர்ட்டிலும் கூட ஆள் பார்க்கும்படி அம்சமாகத் தான் இருக்கிறான் என்று எண்ணிக்கொண்டபடியே அவளை அறியாமல் அவனையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள்.
இலகுவான உடையில் கூட பாந்தமாக இருக்கும் அவன் எங்கே, எப்போதும் இற்றுப்போன ஜீன்சிலும் தொளதொள டிசர்ட்டிலும் எண்ணெய் என்றால் என்னவென்று கேட்கும் தலைமுடியுடன் சுற்றும் தான் எங்கே!
இனிமேல் கொஞ்சம் தோற்றத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமென எண்ணும்போதே “அட! நானா இப்பிடி யாரோ ஒருத்தனோட என்னைக் கம்பேர் பண்ணிப் பார்க்கிறேன்? என்னோட அப்பியரன்ஸ்ல கூட சேஞ்ச் வேணும்னு யோசிக்கிறேன்? இட்ஸ் அ மிராக்கிள்” என்று வாய்க்குள் முணுமுணுத்தவளின் சத்தம் காரில் ஓடிய மியூசிக் பிளேயரின் உபயத்தால் ராகவின் செவியை எட்டவில்லை.
செல்லமாகத் தனது தலையில் குட்டிக்கொண்டவள் சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
ஏழு மணிக்கு முன்னர் யாரேனும் அவளிடம் ராகவுடன் நீ காரில் பயணம் செய்வாய் என்று சொல்லியிருந்தால் கூட அவள் நம்பியிருக்க மாட்டாள். இன்றோடு நீயும் வேண்டாம், உன் உறவும் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தவள் எவ்வாறு இப்படி மாறிப் போனாள் என்பது அவந்திகாவே அறியாத மர்மம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


