அன்றைக்கு அவந்திகாவிடம் பேசிச் சமாதானம் செய்த ராகவ் வீட்டுக்குத் திரும்பியதும் செய்த முதல் வேலை வீணாவிடம் தியாவைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்தது தான். அவனுக்கும் வீணாவின் மேல் பெரிதாகப் பாசம் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் வயதில் பெரியவர் என்ற மரியாதையில் தான் அவர் சொன்னதற்காக அவரது அண்ணன் மகளை மணக்கச் சம்மதித்தான்.
இரு குடும்பத்தினரும் சிறிது காலம் கழித்து நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கையில் தியாவின் பழக்கவழக்கங்கள் பல ராகவிற்குப் பிடிக்காமல் போனது. முக்கியமாக இருபத்து நான்கு மணிநேரமும் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க அவனால் முடியாது போனது. அதோடு மட்டுமல்லாது வீணாகப் பரிசு என்று சொல்லிக் கொண்டு தாயாருக்கும் பாட்டிக்கும் அவள் இழுத்துவைக்கும் செலவுகள் அவனுக்குத் துளியும் பிடிக்காது போகவே நேரடியாகவே தியாவிடம்
“உனக்கும் எனக்கும் செட் ஆகாது தியா… நம்ம ரிலேசன்ஷிப் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே முடிச்சிக்கிறது தான் பெட்டர்” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டான்.
இது சுமித்ராவுக்கும் தெரியும். குடும்பத்தினரிடம் இது குறித்து அவர் இப்போதைக்கு வாயைத் திறக்க வேண்டாமென ராகவ் கட்டளையிடவே அவர் வாய் மூடி மௌனியானார். எனவே அவந்திகாவைக் காதலிப்பதாக ராகவ் சொல்லும் வரையிலும் அவனது குடும்பத்தார் அவன் இன்னும் தியாவைத் தான் திருமணம் செய்யக் காத்திருக்கிறான் என்றே எண்ணிக் கொண்டிருந்தனர்.
விஷயம் வெளிப்பட்டதும் முதலில் முரண்டு பிடித்த வீணா அவரது கணவர் நிரஞ்சனின் கண்டிப்பான தொலைபேசி பேச்சுக்களின் மூலம் நியாயத்தைப் புரிந்து கொண்டார். எனவே சகோதரனிடம் இந்தச் சம்பந்தம் சரிபடாது என்று விளக்கிவிட்டார்.
ஆனால் தியா என்பவளின் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் கோபத்தீயை அணைக்க வீணாவும் தியாவின் தந்தையும் மறந்து விட்டிருந்தனர். அதன் விளைவே அவள் அவந்திகாவைச் சந்தித்து வாய்ச்சவடால் அடித்ததும், அவந்திகா அவளைக் கன்னத்தில் அறைந்ததும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இவ்வளவுக்குப் பிறகும் ராகவ் பொறுமை காத்தான் என்றால் அது வீணா தனது சித்தியாகப் போய்விட்டாரே என்ற ஒரே காரணத்துக்காகத் தான். அதை அவரும் புரிந்துகொண்டு அன்று இரவே சகோதரனிடம் அவரது மகளின் லெட்சணத்தைப் பற்றி சொல்லிக் கடிந்துகொண்டார்.
தியாவின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவன் அடுத்து செய்த காரியம் அவந்திகாவை தனது குடும்பத்தினரிடம் கொஞ்சமாவது நெருங்கச் செய்வது தான். அதற்கு அவன் பிரதியுஷாவின் உதவியையே நாடினான். அவளைப் போனில் தொடர்பு கொண்டவன்
“கல்யாணத்தையும் என்கேஜ்மெண்ட் மாதிரியே சிம்பிளா ரெண்டு ஃபேமிலி மட்டுமே கலந்துக்கிற மாதிரி வச்சுக்கலாம்னு தாதி சொல்லிட்டாங்க… சோ உங்க கன்சர்னே வெட்டிங்குக்கு தேவையான பிரிப்பரேசனை செய்யலாம்னு எனக்கு ஒரு ஐடியா… அதோட அவந்திகாவும் என் ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட குளோஸ் ஆக இது ஒரு சான்ஸா இருக்கும்” என்று சொல்லவே பிரதியுஷா மறுக்காமல் ஒத்துக்கொண்டாள்.
ராகவிற்குச் சமீப காலங்களில் பிரதியுஷாவின் மீது இருந்த கசப்புணர்வு கொஞ்சம் நீர்த்துப் போயிருந்தது என்று தான் சொல்லவேண்டும். அது மட்டுமன்றி அண்ணி என்பவள் அன்னைக்குச் சமமானவள் என்பதால் அவளிடம் குற்றம் குறை கண்டுபிடிப்பது சரியில்லை என்று தெளிந்துவிட்டான் ராகவ். எனவே இப்பொழுதெல்லாம் பிரதியுஷாவை அலட்சியமாகவோ மரியாதைக்குறைவாகவோ நடத்துவதில்லை. என்ன இருந்தாலும் அவனது பிரியத்துக்குரிய வருண் பய்யாவின் மனம் நிறைந்த காதலியாயிற்றே அவள்!
அதே நேரம் இத்தனை நாட்கள் ராகவ் கட்டாயத்தின் பெயரில் அவந்திகாவைத் திருமணம் செய்கிறானே என்று யோசித்திருந்தவளுக்கு இப்போது அவந்திகா மீதான அவனது அக்கறை தியா பற்றிய தகவலை வருண் மூலம் கேட்டதிலிருந்து புரிந்துவிட்டிருந்தது. எப்படியோ அவந்திகாவும் அவனும் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் போதுமென்பதே அவளது இப்போதைய எண்ணம்.
எனவே அவந்திகாவிடம் “ஹனிபி நீயும் ரித்தியும் தான் என் கல்யாணத்தோட ஒவ்வொரு ஈவெண்டையும் பிளான் பண்ணனும்.. இது ஒன்னும் கிராண்ட் வெட்டிங் இல்லை தான்.. சொல்லப் போனா கல்யாணத்துக்கு முன்னாடி ஹல்தி, மெஹந்தி மட்டும் தான் நடக்கப் போகுது… பட் நீங்க அதையும் எளிகண்டா பண்ணனும்… இந்த மேரேஜ் என் வாழ்க்கையில மறக்க முடியாத நிகழ்வா இருக்கணும்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள் அவள்.
இதனால் அவந்திகாவும் ரித்திமாவும் அடிக்கடி ராகவின் கபூர் பேலசுக்குச் செல்லவேண்டியதிருந்தது. இருவருக்குமே தோழியின் திருமண வேலையைச் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை தான். ஆனால் அதில் சில அசவுகரியங்களும் இருந்தன இருவருக்கும்.
அவந்திகாவுக்கு ராகவின் குடும்பத்தினரைப் பார்த்துப் பேசுவது என்றாலே ஒரு வித சங்கடம் சூழ்ந்து விடும். ஒவ்வொரு விஷயத்துக்கும் அவள் அங்கே செல்லும் போதும் அந்த வீட்டின் பிரம்மாண்டமோ அல்லது வீட்டினரின் நடவடிக்கையோ எதுவோ ஒன்று அவளை அங்கே இருக்கும் போதெல்லாம் சங்கடத்தில் ஆழ்த்தியது.
தினமும் அவள் வருகைக்காகக் காத்திருக்கும் மூன்று மாமியார்களோடு அவளோடு அரட்டை அடிக்கச் சந்தர்ப்பம் அமையுமா என்று எதிர்பார்க்கும் மாமனார்களும் அவளை இன்னுமே சங்கடத்தில் ஆழ்த்திவிடுவர். இவர்களுக்கு அவர்கள் மகனது திருமணம் குறித்து எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும் என்று எண்ணும் போதே அவளுக்குச் சொத்தென்று போய்விடும்.
அது போக நேகாவும் பிந்துவும் வார்த்தைக்கு நூறு ‘பாபி’யைச் சொல்லி வைப்பார்கள். அவ்வபோது ராகவைச் சந்திக்க நேரிடும். அவர்கள் சந்திக்கும் தருணங்கள் யாவும் ஒரு சில புன்னகையுடன் கடந்துவிடும்.
அவந்திகாவின் அடுத்தப் பிரச்சனை நாள் கிழமை பாராது அந்த வீட்டில் சமைக்கப்படும் அசைவம். அவள் சுத்தச் சைவம். ஆனால் அவளது புகுந்த வீட்டினருக்குக் கட்டாயம் சமையலில் சிக்கன் இருந்தே ஆக வேண்டும். அது இல்லாவிட்டால் சாப்பிட்டது போலவே இல்லையென்று சுமித்ரா குறைபடுவார்.
எனவே பெரும்பாலான சமயங்களில் காலையுணவை வீட்டில் முடித்துவிட்டே கிளம்புவாள் அவள். வழக்கம் போல இன்றும் கையோடு ஒரு பேக்கில் தண்ணீர் பாட்டிலைச் சுமந்து செல்ல அது சுமித்ராவின் கண்ணில் பட்டு அவரிடம் மாட்டிக்கொண்டாள் அவந்திகா.
“உனக்கு எங்களைப் பார்த்தா எப்பிடி தெரியுது? எங்க வீட்டுல தண்ணி கூட குடிக்க மாட்டேனு சபதம் போட்டிருக்கியா?” என்று அவரது பேரன் வழக்கமாகப் பேசும் வசனத்தைச் சுமித்ரா ஆரம்பிக்கவே அவந்திகாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
உங்கள் வீட்டில் அசைவம் சமைக்கிறீர்கள், எனவே சாப்பிட ஒரு மாதிரியாக இருக்கிறது என்றா கூறமுடியும்? அது அநாகரிகம்; அவளுக்காக அன்புடன் காத்திருப்பவர்களுக்கு அவள் செய்யும் அவமரியாதையும் கூட.
“இல்லை தாதி! எனக்கு தண்ணி மாறுச்சுனா ஜலதோஷம் பிடிச்சுக்கும். அதான் எங்கே போனாலும் வாட்டர் பாட்டிலோட போய் பழகிட்டேன்”
“அஹான்! காட்டுக்குள்ள இருபத்தோரு நாள் இருந்தியே… அப்போ எந்தத் தண்ணியைக் குடிச்சம்மா?”
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தபோது அர்ஜூன் சிக்கன் லாலிபாப் சாப்பிடும் போது தான் கிண்டல் செய்த பொன்னான தருணங்கள் எல்லாம் கெக்கெலி கொட்டிச் சிரித்தது போல இருந்தது அவந்திகாவுக்கு.
நல்லவேளையாக ராகவ் ஆபத்பாந்தவனாய் வந்து அவளைக் காத்துவிட்டான். தனக்கு கண்ணால் நன்றி சொன்னவளைப் பார்த்துப் புருவம் உயர்த்தி மெச்சியவாறு தனது அறையை நோக்கிச் சென்றுவிட்டான் அவன்.
அன்று ஞாயிறு என்பதால் அவனது குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலயே இருந்ததால் வீடு நிரம்பி வழிந்தது. அந்த வீட்டுக்கே உண்டான கலகலப்பான பேச்சுச்சத்தங்களும், சுமித்ராவின் மகன்களின் அரட்டைக்கச்சேரியும் ஒரு புறம் இருக்க திருமணநிகழ்வின் தித்திப்பும் சேர்ந்து அந்தச் சூழ்நிலை ரசிக்கும் படியாக இருக்கவே அவந்திகாவுக்கு முன்பிருந்த விலகல் இப்போது இல்லை.
தனக்கு வேண்டியவற்றை மாமியார்களிடம் கேட்டு வாங்குமளவுக்கு முன்னேறியிருந்தாள். மாமனார்களின் கேலிக்குப் பதிலளித்தபடி, பிந்து நேகாவுடன் உற்சாகமாக அவர்களின் ஆடை அணிகலன்கள் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தனர் அவந்திகாவும் ரித்திமாவும்.
அப்போது திருமண அழைப்பிதழ் பற்றிய பேச்சை எடுத்த அவந்திகா சுமித்ராவிடம் டிசைனைக் காட்டி அவரது கருத்தைக் கேட்க அவர் திருப்தியுடன்
“நல்லா இருக்கும்மா! ஆனா எதுக்கும் பசங்க கிட்ட கேட்டிடு… அவங்க தான் இப்போ உள்ள மாதிரி ஏதேதோ பேசிட்டிருந்தாங்க” என்று தனது பேரக்குழந்தைகளிடம்(?) கேட்டுக்கொள்ளுமாறு கூறிவிட அவந்திகா ரித்திமாவுடன் வளவளத்துக் கொண்டிருந்த நேகா பிந்துவிடம் வந்தாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் இந்த டிசைன் ஓகேவா? நிறைய பேரைக் கூப்பிடப் போறதில்லை தான்… பட் டிசைன் யூனிக்கா இருக்கணும்ல”
“பாபி! நேத்து நைட் நாங்க எல்லாருமா சேர்ந்து ஒரு டிசைனை ஃபைனலைஸ் பண்ணி வச்சிருந்தோம்… அது கொஞ்சம் வித்தியாசமா அழகா இருந்துச்சு… ராகவ் பய்யாவோட லேப்ல நான் அதை இன்னும் கொஞ்சம் மாடிஃபை பண்ணி வச்சிருக்கேன்… நீங்க பய்யா கிட்ட கேட்டுக்கிறிங்களா? அவரோட ரூம் செகண்ட் ஃப்ளோர்ல ரைட் சைட் டர்ன் பண்ணுனதும் இருக்கும்” என்ற நேகாவின் கூற்றை ஏற்றவள் படியேறினாள்.
இரண்டாவது தளமே நாலு குடும்பங்களுக்குப் போதும் போல என்று எண்ணியபடி அதன் வலப்பக்கம் திரும்பியவள் மூடியிருந்த கதவில் கைவைக்கவும் கதவு திறந்து கொண்டது. உள்ளே சென்றவளை சோபாவும் குட்டி டீபாயும் வரவேற்க அதற்கு அடுத்து இன்னொரு அறை தெரியவே “இது என்னடா ரூமுக்குள்ள ரூம்?” என்று எண்ணியபடி உள்ளே முன்னேறினாள்.
அது அலுவலக அறை போலும். ஒரு மேஜையும் லேப்டாப்பும் அவளைப் பார்த்துச் சிரிக்க அங்கே பெயரளவுக்கு இரண்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அடுத்தும் அறை நீளவே அவந்திகா வெறுத்துப் போய்விட்டாள்.
அடுத்த அறையில் அவளைப் பெரிய டிவியும் சில புத்தகங்களைக் கொண்ட அலமாரியும் வரவேற்றது. அவளை மேலும் எரிச்சலடையச் செய்யாமல் தடுத்தது அங்கிருந்த புத்தகங்களே! எல்லாமே மேலாண்மை மற்றும் நிர்வாகம் குறித்தவை.
அவற்றைப் பார்த்தபடி உள்ளே நுழைந்தவளுக்கு அந்தக் கடல் போன்ற படுக்கையறையின் வெறுமை கண்ணை உறுத்தியது.
“ஏழு கடல் ஏழு மலை தாண்டி இவன் இருக்கிற இடத்துக்கு வந்திருக்கேன்… இந்த மைதாமாவு எங்கே போய் தொலைஞ்சான்?” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி அந்த அறையைச் சுற்று சுற்றி வந்தவளின் பின்னே திடீரென்று கதவு திறக்கும் அரவம் கேட்டு அவள் திரும்பிப் பார்க்க அங்கே அப்போது தான் குளித்துவிட்டு டவலுடன் திரும்பிய ராகவ் அவளது கண்ணில் பட்டுவிட்டான்.
“ஐயோ பெருமாளே!” என்று தன்னை மீறி கத்திவிட்டு அவனுக்கு முதுகு காட்டியபடி அங்கிருந்து வெளியேறும் அவசரத்தில் கால்மிதி வழுக்கிக் கீழே விழப்போக எப்போதும் போல அவளைத் தன் கரங்களில் தாங்கிக் கொண்டான் ராகவ்.
அவந்திகா கண்களை மூடிக்கொண்டவள் மெதுவாகத் திறக்க அவளை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தபடி தலையில் ஈரம் சொட்ட நின்றவனின் முகம் அவளுக்கு மிக மிக அருகில். உள்ளுக்குள் தடதடக்க ஆரம்பித்த இரயிலோசையைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றவளின் வார்த்தைகள் பயத்தில் தந்தியடிக்கத் தொடங்கியது.
“சாரி…ரா… ராகவ்…நா…நான்…நீ… உன் கிட்ட” என்று உளறியவளின் வார்த்தைகள் அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க பக்கென்று சிரித்தவன் அவளை நேராக நிறுத்தினான்.
அவந்திகா அவனைப் பார்க்க வெட்கியவளாய் முகம் சிவக்க அதை ரசனையுடன் பார்த்தவன் “என்னாச்சு ஜான்சிராணி? எப்போவுமே எக்ஸ்பிரஸ் ஸ்பீட்ல பேசுவ… இன்னைக்கு என்ன வைப்ரசன் மோடுக்கும் சைலன்ட் மோடுக்கும் ஜம்ப் பண்ணிக்கிட்டிருக்க?” என்று சற்று முன்னர் அவள் தந்தியடித்ததைச் சொல்லிக் கலாய்க்கவே அவந்திகாவுக்கு வெட்கம் எல்லாம் பறந்து இப்போது அவனுக்குப் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்று நாக்கு துறுதுறுத்தது.
இருந்தும் அவன் புறம் திரும்பாமல் முகம் திருப்பியவள் “நான் எப்பிடியோ இருந்துட்டுப் போறேன்டா… நீ ஏன் இந்தக் கோலத்துல நிக்கிற? ஆம்பளையா அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணமாட்டியா நீ?” என்று முகத்தைச் சுளித்தபடி படபடக்க
ராகவ் தனக்கு முதுகு காட்டி நிற்பவளைக் கண்டு சிரித்தவாறே வார்ட்ரோபை நோக்கிச் சென்றவன் ஒரு டிசர்ட்டை எடுத்து மாற்றியபடியே “இது என்னோட ரூம் ஜான்சிராணி… இங்கே நான் எப்பிடி வேணும்னாலும் இருப்பேன்… பெர்மிசன் இல்லாம உள்ளே வந்தது நீ தான்” என்று அமர்த்தலாக மொழிய
“உன் ரூம் தான்! நான் ஒத்துக்கிறேன்… அதுக்குனு கவர்ச்சி நடிகை மாதிரியா டிரஸ் போட்டுட்டு சுத்துவ? சை” என்றவளின் பேச்சில் அவனால் சிரிப்பை அடக்க இயலவில்லை.
அவந்திகா இதற்கு மேல் இங்கே நின்றால் இவன் தன்னை காமெடி பீஸாக்கிவிடுவான் என்று எண்ணியவள் அங்கிருந்து வெளியேறி டிவி இருக்கும் அறையில் சென்று அமர்ந்து கொண்டாள். ராகவ் உடை மாற்றிவிட்டு அங்கே வந்தவன் சாதாரணமாக அவளருகில் வந்து அமர்ந்து தோளோடு சேர்த்து அணைத்தபடி டிவியை ஓட விடவும் அவந்திகா அதிர்ந்துவிட்டாள்.
இவன் இவ்வளவு பக்கத்தில் அமர்ந்ததே தவறு, இதில் தோளில் வேறு கைபோடுகிறானே என்ற எரிச்சலுடன் அவனை முறைக்கவே, ராகவ் இதைக் கண்டுகொள்ளாதவனாய் “அப்புறம் ஜான்சிராணி என்னோட ரூமுக்கு வரவேண்டியளவுக்கு உனக்கு என்ன எமர்ஜென்சி?” என்று கேட்டபடி டிவியைப் பார்க்க ஆரம்பித்தான். அவனது அருகாமையில் விதிர்விதிர்த்தவள் அவன் முகத்தைப் பார்க்க எப்போதும் போல அதிலிருக்கும் உணர்வுகளைப் படிக்க அவளது மூளைக்குத் தெரியவில்லை. அந்த உணர்வுகளைப் படிக்க ஒருவேளை மனதைப் பயன்படுத்தியிருந்தால் அவளுக்குப் புரிந்திருக்குமோ என்னவோ!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


