“அவனிடம் காதலின் மென்மை இல்லை, பசியெடுத்த காட்டுத்தீயின் மூர்க்கம் மட்டுமே இருந்தது. அவனது பிடிக்குள் சிக்கிய பின், அதில் எரிந்து சாம்பலாவதைத் தவிர எனக்கான வேறு தேர்வுகள் அங்கு மீதமிருக்கவில்லை.”
-வெண்பா
ராஜவேலுவோடு அமர்ந்திருந்தான் நேத்ரன். கூடவே மார்த்தாண்டனும் புகழேந்தியும். நால்வரின் முகங்களிலும் பெரியதொரு ஆசுவாசத்தின் அடையாளம்.
நேத்ரன் ஒரு பொறுப்புக்கு வந்ததும் அவன் சந்தித்த முதல் பிரச்சனையைச் சாதுரியமாகச் சமாளித்த தகவல் கட்சித் தலைமைக்குப் போயிருக்க அங்கிருந்து அவனுக்குப் பாராட்டு மழை. அது ஒன்றே ராஜவேலுவை இறுமாப்பில் ஆழ்த்தப் போதுமானதாய்!
கட்சித் தலைமையிடம் பேசிவிட்டுத் தம்பியின் மகனின் தோளில் தட்டிக்கொடுத்தார் மனிதர். அவனைத் தனது அரசியல் வாரிசாகத் தேர்வு செய்ததில் கிஞ்சித்தும் தவறில்லை என்ற கர்வம் குடியேறியது அவரிடம்.
“அந்தப் பொண்ணு வீட்டுல இப்ப எந்தப் பிரச்சனையும் இல்லதானே?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இல்ல ராஜூப்பா. அவங்ககிட்ட நிலைமையை எடுத்துச் சொல்லிட்டேன். போக்ஸோ எல்லாம் போட்டா முருகனோட வாழ்க்கை நாசமாகிடும். எப்பிடியோ அவனை இந்தப் பிரச்சனையில இருந்து காப்பாத்திட்டேன். அதுவே எனக்குப் பெரிய நிம்மதி.” என்று பெருமூச்சுவிட்டான் நேத்ரன்.
அவனருகே அமர்ந்திருந்த புகழேந்தி இளையவனைத் தோளோடு அணைத்துக்கொண்டான். தன்னைச் சார்ந்தோரையும், தான் நேசிப்பவர்களையும் இன்னலில் சிக்கவிடாதவன் அவனெனப் புகழேந்திக்குத் தனியொரு பெருமிதம்.
“சரி! பிரச்சனை முடிஞ்சாச்சுனா தாலி கோர்த்துப் பிரிக்குற நாளைக் குறிச்சிடுவோமா?” என்றபடி அங்கே வந்தார் அங்கயற்கண்ணி.
புகழேந்தியும் துர்காவும் தேனிலவு முடித்துத் திரும்பியதும் தாலி கோர்த்துப் பிரிக்கும் நிகழ்வை வைத்துக்கொள்ளலாமென முன்னரே இரு வீட்டாரும் பேசியதுதான். இடையே இந்தப் பிரச்சனை வந்துவிட்டதே! நல்லவேளையாக வந்த வேகத்தில் அணைந்தும் போனது.
அங்கயற்கண்ணியின் விருப்பத்துக்குச் செவிசாய்த்தார்கள் நால்வரும். நேத்ரன் மட்டும் எழுந்தான் சோஃபாவிலிருந்து.
“எனக்குக் கொஞ்சம் தூங்கணும் ராஜூப்பா. நைட் முழுக்க தூக்கமில்ல. ஃப்ளைட்ல இருந்து இறங்குனதும் கமிஷனர் ஆபிஸ் போனதுல இருந்து ரெஸ்டே இல்ல” என்றான் அவன்.
“சரிடா சின்னவனே! நீ போய் ரெஸ்ட் எடு.”
தனது அறைக்கு வந்ததும் அங்கே வைத்துவிட்டுப் போன மொபைலின் தொடுதிரையில் துண்டிக்கப்பட்ட இணைப்புகளாய்த் தெரிந்தது வெண்பாவின் பெயர். நேத்ரன் நெற்றியைத் தடவிக்கொண்டான்.
இரவு உறக்கம் இல்லாததால் தலைவலித்தது. கூடவே உடற்சோர்வும். தூத்துக்குடி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து கிளம்பியபோதே வெண்பாவின் முகம் சரியில்லை. உடனே பேசினால் ஏதேனும் வார்த்தைப் பிரயோகம் தவறாகலாமென எண்ணியே பேசாமல் விட்டிருந்தான் இவ்வளவு நேரம்.
இதோ அவளே பேசத் தயாராய் இருக்கையில் ஏன் தயங்கவேண்டும், முடிந்தவரையில் சுமூகமாகப் பேசி நிலைமையைப் புரியவைத்துவிட வேண்டுமெனத் தீர்மானித்தவன் அவளது மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.
கையிலேயே மொபைலை வைத்திருந்தாள் போல. அழைப்பு உடனே ஏற்கப்பட்டது.
“சொல்லு டீச்சரம்மா!”
“இன்னைக்கு என்ன நடந்துச்சு கமிஷனர் ஆபிஸ்ல?” என்றவளின் குரலில் அத்துணை உஷ்ணம்!
“உஃப்! உனக்குத் தெரியாதா? முருகன் மேல எந்தத் தப்பும் இல்ல. உண்மையான அக்யூஸ்ட்களை போலீஸ் முழு வீச்சுல தேட ஆரம்பிச்சிருக்காங்க. உங்க போராட்டத்துக்கான தீர்வு கிடைச்சிடுச்சு.”
“அப்பிடியா? எனக்கு அப்பிடித் தோணலையே நேத்ரன். நீங்க வர்ற வரைக்கும் அந்தப் பையனை அரெஸ்ட் பண்ணியே ஆகணும்னு துடிச்ச ஹேமாவோட பேரண்ட்ஸ் நீங்க வந்து தனியாக் கூப்பிட்டுப் பேசுனதும் ஏன் நிலைப்பாட்டை மாத்திக்கிட்டாங்க? என்ன பண்ணுறீங்க நீங்க? உங்களுக்கு வேண்டுனவன்ங்கிறதால அந்தப் பையனைத் தப்பிக்க வைக்கப் பாக்குறீங்களா?”
வெண்பா நேரடியாகக் கேட்டுவிடவும் நேத்ரன் நெற்றியை மீண்டும் தடவிக்கொண்டான்.
“லிசன் டீச்சரம்மா! சும்மா ஒண்ணும் அவங்க மாத்திப் பேசல. டாக்டரோட ரிப்போர்ட்படி அந்தப் பொண்ணைப் பலவந்தப்படுத்துனது முருகன் இல்ல. டி.என்.ஏ ரிப்போர்ட் எல்லாம் அவனோட மேட்ச் ஆகல. அதனாலதான் அவங்க முருகனோட தரப்பைப் புரிஞ்சிக்கிட்டாங்க”
“அந்த ரிப்போர்ட் உண்மையானதாத்தான் இருக்கணும்னு என்ன அவசியம்?” என அவள் கேட்டதும் அவனுக்கும் கோபம் வந்துவிட்டது.
“இசிட்? அப்ப அந்தப் பொண்ணு ஹேமா சொன்னது உண்மையாத்தான் இருக்கணும்னு என்ன அவசியம்?” என அவனும் கேட்டுவிட்டான்.
மறுமுனையில் வெண்பாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் நேரும்போதெல்லாம் ஆண்கள் கூட்டம் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கிக் கல் வீசுவதைப் பார்த்துச் சலித்தவளுக்கு நேத்ரனும் அதையே செய்யவும் கோபம்.
“விக்டிம் ஷேம் பண்ணுறீங்க நேத்ரன்” என்றாள் இறுகிய குரலில்.
“நீயும் அதைத்தான் பண்ண முயற்சிக்குற வெண்பா. ஏன்னா முருகனும் இந்தச் சம்பவத்துல விக்டிம்தான்” என்றான் அழுத்தமாக.
“அவன் அக்யூஸ்ட். மைனர் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுன பீடோஃபைல் அவன்” எனக் கோபத்தில் கத்திவிட்டாள் வெண்பா.
“ஏய்!….”
அதைவிடக் கோபத்தில் கர்ஜித்த நேத்ரனின் குரலின் தாக்கத்தால் மறுமுனையில் அவளது முகம் வெளிற “… நேத்ரன்…” எனத் திணறித் தனது பேச்சைத் தொடர முயன்றாள்.
“நீ இனிமே ஒரு வார்த்தை பேசக் கூடாது. நீ முருகனை முன்ன பின்ன பாத்திருக்கியா? அந்தப் பையனை டீனேஜ்ல இருந்து எனக்குத் தெரியும். அவன் என்ன செஞ்சான்னு உன் ஸ்டூடண்ட்கிட்ட போய்க் கேளு. அவங்கப்பாகிட்ட கேளு. வீணா முருகனைத் தப்பா புரொஜக்ட் பண்ணாத. பீடோஃபைல் மை ஃபுட். அதுக்கு அர்த்தம்கூடத் தெரியாதுடி அவனுக்கு. அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கு. அவன் பேர் கெட்டுப்போச்சுனா அந்தக் குடும்பமும் நாசமாப் போயிடும்.”
“அப்ப ஹேமா பேர் கெட்டுப் போகலாமா?”
“முளைச்சு மூணு இலை விடுறதுக்குள்ள அவளுக்கு என்ன காதல் வேண்டியது கிடக்கு?”
“மறுபடியும் நீங்க விக்டிம் ஷேம் பண்ணுறீங்க. காதலிக்குறது ஒண்ணும் கொலைக்குத்தம் இல்ல. ஆனா காதலிச்சவளை நாலு பேர்கூடச் சேர்ந்து பங்கு போட்டுக்கிறது அசிங்கம். அதைச் செஞ்சவனைத்தான் நீங்க தப்பிக்க வச்சிருக்கீங்க. உங்க கட்சியில இருந்து இந்தப் பிரச்சனையைச் சுமூகமா முடிக்கச் சொன்னதும் கிடைச்சது சாக்குனு அவன் மேல தப்பே இல்லனு ப்ளேட்டை மாத்திட்டீங்க. நீங்க குடுத்த ப்ரஷராலதான் அவனை அரெஸ்ட் பண்ணாம காலங்கடத்திருக்காங்க போலீஸ். இனியும் அரெஸ்ட் பண்ணவே மாட்டாங்க. கடைசியில நீங்களும் ஒரு அரசியல்வாதினு நிரூபிச்சிட்டீங்க நேத்ரன்.” என முடித்தபோது வெண்பாவின் குரலில் அவளே தவிர்க்க நினைத்தாலும் போகாமல் வந்து ஒட்டிக்கொண்டது ஏமாற்றத்தின் கசப்பு.
நேத்ரனுக்கு எப்போதோ பொறுமை காற்றில் பறந்த நிலை. இனி எங்கிருந்து அவன் தண்மையாகப் பேசுவது?
“நான் அரசியல்வாதி இல்லனு எப்ப உன்கிட்ட சொன்னேன்? இதுக்கு முன்னாடிவரை எப்பிடியோ இனிமே நான் முழுநேர அரசியல்வாதி. உனக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ இதை நீ ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்” என ஆணையிடும் குரலில் அவன் சொல்லவும் வெண்பாவுக்குச் சுர்ரென்று ஏறியது கோபம்.
“அப்பிடி ஏத்துக்கணும்னு எனக்கு எந்தத் தலையெழுத்தும் இல்ல நேத்ரன். ஒருவேளை நாம கல்யாணம் பண்ணிக்கப் போறதை மனசுல வச்சு நீங்க இந்த வார்த்தையைச் சொல்லியிருந்தா, திருத்திக்கோங்க. ஏன்னா நமக்குள்ள இனி எந்த உறவும் இல்ல. நம்ம கல்யாணம் நடக்கப்போறதில்ல. எனக்கு அதுல விருப்பமில்ல”
ஆம்! தான் தவறு என நினைப்பதைச் செய்யும் நபர் எவ்வளவு பிடித்தவராக இருந்தாலும் அவரை ஒதுக்கிவிடுவது அவளது சுபாவம்! அந்தோ பரிதாபம், நேத்ரனும் அதில் விதிவிலக்கில்லை என்பதைத் தனது சொற்களால் அழுத்தம் திருத்தமாக அவனிடமே சொல்லிவிட்டாள்.
ஆனால் அவனது இயல்பு என்னவென அவளுக்குத் தெரியாது அல்லவா! பிடித்தவரை எந்தக் காலத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காத பிடிவாதக்காரன் அவன். பிடித்தமோ விருப்பமோ அதில் உறுதியாய் இருப்பான். அவனிடம் போய் இனி நமக்குள் உறவில்லை என்று சொன்னால் வாயை மூடிக்கொள்வானா என்ன?
சும்மாவே அவனுக்கு அன்று மனநிலை போராட்டமாக இருந்தது. இப்போதோ வெண்பாவின் சொற்கள் அவனுக்குள் இருந்த கோபத்தை இன்னும் கிளறிவிட நாடி நரம்பு முழுவதும் ஆக்கிரமித்தது என்னவோ மூர்க்கத்தனமான கோபமும் பிடிவாதமும் மட்டுமே!
“நம்மளோட காதலும் கல்யாணமும் மியூச்சுவலா பேசி உருவான உறவு. அதை நீ ஒருத்தி நினைச்சா உடைச்சிட முடியாது வெண்பா. நம்ம கல்யாணம் நடக்கும். உன்னோட அறிவுக்கெட்டத்தனத்தால ரெண்டு வீட்டு மனுஷங்களோட மனசைக் கஷ்டப்படுத்தாத.”
“எனக்கு உங்களை மாதிரி கரப்ட்டட் பொலிட்டீஷியனை புருஷனா ஏத்துக்கப் பிடிக்கல நேத்ரன்”
“இட்ஸ் டூ லேட் பேபி! அத்தனை பேர் முன்னாடி சபையில தட்டு மாத்தி நேத்ரனுக்கு வெண்பாதான்னு முடிவு பண்ணுனதுக்கு அப்புறம் உன்னோட மூட் ஸ்விங்ஸுக்காக எல்லாம் கல்யாணத்தை நிறுத்த முடியாது. டூ யூ கெட் இட்?”
மறுமுனையில் வெண்பா மறுப்பு சொல்ல எத்தனிக்கும்போதே இங்கே நேத்ரனின் அறையில் எதுவோ தரையில் விழுந்து உடையும் சத்தம். அழைப்பைப் பேசி முடிக்காமல் சட்டெனத் திரும்பியவன் அங்கே காபிக் கோப்பை உடைந்து கிடப்பதையும் அதனருகே அன்னை கண்ணீரோடு நிற்பதையும் காண நேர்ந்தது.
“ம்மா!” என்று அவன் மொபைலோடு அருகில் வரவும்
“வெண்பாதானே?” என்று கண்ணீரோடு வினவினார் குந்தவை.
“ம்ம்”
அடுத்த நொடி மொபைல் அவரது கைக்குப் போனது. வெண்பா இணைப்பில்தான் இருந்தாள். குந்தவையால் தன் மகனை ஒருத்தி நிராகரித்தாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உற்றார் உறவினர் முன்னிலையில் தட்டு மாற்றி உறுதி செய்த உறவை அவள் உடைக்கிறாள் என்றால் எத்துணை அலட்சியம்? எத்துணை திண்ணக்கம்?
‘என் மகன் எந்த விதத்தில் குறைந்துபோனான்?’
ஆண்பிள்ளையைப் பெற்ற அன்னைக்கே உரித்தான செருக்கு ஏறியது அவரிடம்.
“உனக்கு என்ன வேணும்னு பாத்துப் பாத்துச் செஞ்சதால நீ என் மகனை ரொம்பக் குறைச்சு எடை போட்டுட்ட. நீ நினைச்சா உன் பின்னாடி வர்றதுக்கும் வெறுத்தா ஓடிப்போறதுக்கும் என் பிள்ளை என்ன நீ வச்ச வேலைக்காரனா? நீ என்ன கல்யாணப் பேச்சை முறிக்குறது? நான் பேசுறேன் உன் அம்மைக்கிட்ட. பொம்பளைப் பிள்ளைய வளர்த்த லட்சணம் இதுதானானு நறுக்குனு நாலு கேள்வி கேக்குறேன்”
“எங்கம்மாவப் பத்திப் பேசாதீங்கத்தை”
“அத்தையா? யாரு யாருக்கு அத்தை? என் மகனே வேண்டாமாம், நான் என்னடி உனக்கு அத்தை? என் மகனுக்குப் பொண்ணு குடுக்க ஆயிரம் பேர் கியூல நிக்குறாங்க. ரெண்டு குடும்பமும் பேசுன அதே நாள்ல உன்னைவிட அழகியா, மரியாதை தெரிஞ்சவளா முக்கியமா என் மகனோட அருமை தெரிஞ்சவளை நான் எனக்கு மருமகளா ஆக்கிக் காட்டுறேன்”
அன்னையின் சபதம், வெண்பாவின் பிடிவாதம் இரண்டுமே தேவையற்றதாகப் பட்டது நேத்ரனுக்கு. குந்தவை அழைப்பைத் துண்டித்துவிட்டு மொபைலை அவனிடம் கொடுத்தார்.
“டீச்சரம்மா டீச்சரம்மானு விழுந்து விழுந்து அன்பு காட்டுனல்ல, அவ அதுக்கேத்த நன்றியைக் காட்டுறா. நான் இப்பவே அங்கயற்கண்ணி அக்காவோட மதினி பொண்ணை உனக்குப் பேசி முடிக்குறேன். இந்த வெண்பாவ உனக்குப் பேசுனதால அவங்களுக்கு நம்ம மேல நிறைய வருத்தம். அதைப் போக்கிடலாம், இவளுக்காக நம்ம குடும்பத்து உறவுக்காரங்க மனசை நாம ஏன் கஷ்டப்படுத்தணும்?”
“அதெல்லாம் வேண்டாம்மா”
“நான் உன் அம்மா. உன்னை ஒருத்தி வேண்டாம்னு சொன்னா அது உன்னைவிட எனக்கு அசிங்கம். அவளை மறந்துடு”
கட்டளை போலச் சொல்லிவிட்டு மொபைலை அவன் கையில் திணித்த குந்தவை அங்கிருந்து போய்விட நேத்ரனின் தலைவலி இன்னும் அதீதமானது.
சரியாய் அந்நேரத்தில் வாட்ஸ்அப்பில் வெண்பாவிடமிருந்து செய்தி வந்தது.
“நான் உங்க நம்பரை டெலீட் பண்ணிடுறேன். நீங்களும் என் நம்பரை டெலீட் பண்ணிடுங்க. அப்பிடியே என்னையும் மறந்துடுங்க”
அதற்குப் பதிலளிக்கும் முன்னர் அவனை ப்ளாக் செய்துவிட்டு எண்ணையும் அழித்திருந்தாள் வெண்பா. அந்தச் செயல்தான் நேத்ரனை நிதானமிழக்க வைத்தது.
ஒரு முடிவோடு தனது அறையை விட்டு வெளியேறியவன் ஹாலுக்கு வந்தபோது அங்கே அங்கயற்கண்ணியிடம் பிடிவாதமான குரலில் பேசிய அன்னையைப் பார்த்துவிட்டு வெளியேறினான்.
காரைக் கிளப்பியவன் நேரே போய் நின்ற இடம் ரங்கநல்லூரில் வெண்பாவின் வீடு. அவனை அந்நேரத்தில் அங்கே எதிர்பார்க்காத வெண்பாவின் குடும்பத்தார் மனம் நிறைய வரவேற்றார்கள்.
“தம்பிக்கு ஒரே அலைச்சல் போல. ரெஸ்ட் எடுத்திருக்கலாமே?” வாஞ்சையாய்ச் சொன்ன ஹேமாவிடம் சென்னையிலிருந்து வெண்பாவுக்கு வாங்கி வந்த பரிசைக் கொடுக்க வந்திருப்பதாகச் சொல்லவும் பெரியவர்களோடு இளையவர்களின் முகமும் பிரகாசித்தது.
“வெண்பா பின்னாடி தோட்டத்து ஊஞ்சல்ல உக்காந்திருக்கா. ரொம்ப நேரமா அங்கதான் இருக்கா. போய்ப் பாருங்க. உங்களுக்குக் காபி?”
“வேண்டாம்கா. நான் வந்துடுறேன்” என்றபடி பின்வாசலை நோக்கிச் சென்றவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தார் செண்பகராமன். ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது அவருக்கு.
அதே நேரம் பின்வாயில் தோட்டத்துக்கு வந்தவனோ மாமரத்தின் கிளையில் தொங்கிய மூங்கில் ஊஞ்சலையும் அதில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த வெண்பாவையும் பார்த்துப் பொறுமையிழந்து தனது பின்னந்தலையைத் தடவிக்கொண்டான்.
அவனது வருகையை அவனுக்கு முன்னரே அவனுடைய பெர்ஃபியூம் காண்பித்துக்கொடுத்துவிட பரபரப்போடு ஊஞ்சலில் இருந்து தரையில் இறங்கியவள் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்தாள்.
நேத்ரன் அவளருகே வந்தவன் “நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசுனதையும் அனுப்புன மெசேஜையும் நான் மறந்துட்டேன். நீயும் மறந்துடு. கல்யாணத்துக்கு ரெடியாகு” என்றான் முடிந்தவரை பொறுமையாய்!
வெண்பாவின் சிரமோ மறுப்பாய் அசைந்தது.
“நான் சொன்னா சொன்னதுதான். எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டமில்ல. எந்த உரிமையில வந்து நின்னு என்கிட்ட ஆர்டர் போடுறீங்க நீங்க?”
நேத்ரன் தனது ஆட்காட்டிவிரலால் நெற்றியைக் கீறிக்கொண்டான்.
“ம்ம்! சில நேரங்கள்ல உரிமையை டெமான்ஸ்ட்ரேட் பண்ணிக் காட்ட வேண்டிய கட்டாயம் வந்துடுதுல்ல”

இலகுவான குரலில் பேசியபடி அவளை நெருங்கியவன் வெண்பாவின் கண்களில் தெரிந்த மறுப்பில் இன்னும் சீண்டப்பட்டுச் சட்டென ஒரு கரத்தால் அவளது கன்னத்தையும் மறுகரத்தால் அவளது பின்னந்தலையையும் பற்றித் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டான்.
என்னவென அவள் யோசிக்கும் முன்னரே அவனது உதடுகள் அவளது இதழ்களை மூடிக்கொண்டன. அங்குமிங்கும் விலக முடியாத வண்ணம் இரு கரங்களாலும் அவளைத் தன்னோடு இறுக்கிகொண்டவன் ‘வெண்பாவுக்குக் காயமுண்டாகுமே, அவளுக்கு மூச்சுத் திணறுமே’ என்றெல்லாம் யோசிக்கவில்லை.
‘உரிமையில்லை என்று உரிமைப்பட்டவளே உளறும்போது எனது உரிமையை அங்கே நிலைநாட்டுவதுதானே முக்கியம்’
வெண்பாவும் அவனைத் தள்ள முயற்சித்துத் தோற்றுப்போய்ச் சோர்வடைய வன்மையாய் ஆரம்பித்த முத்தம் மென்முத்தமாய் மாறியது. அப்போதும் அவளது கன்னத்தைப் பற்றிய கையையும் பின்னந்தலையைத் தன்னோடு சேர்த்து அழுத்திய கையையும் விலக்கவில்லை அவன்.
பின்னர் என்ன தோன்றியதோ, எங்கோ காலப்பயணம் மேற்கொண்டு மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தவளைப் போல அதிர்ந்து கலங்கிப்போனவளின் உதடுகளை விட்டுத் தன் உதடுகளை விலக்கிக்கொண்டான் நேத்ரன். ஆனால் இன்னும் அவளது வதனத்தின் கட்டுப்பாடு அவனது இரு கரங்களில்தான்!
இருவருக்கும் மூச்சு வாங்கியது. வெண்பாவுக்கு மட்டும் கூடுதலாய்க் கண்கள் கலங்கி உதடுகள் சிவந்து கீழுதட்டின் ஓரமாய்ச் சின்னதாய் ஒரு காயம்!
நேத்ரன் சீற்றமாய் வந்த மூச்சைக் கட்டுப்படுத்திக்கொண்டவன் “ஐ லவ் யூ! யூ டூ லவ் மீ! சின்னச் சின்ன மனக்கசப்புக்காக நீ இவ்ளோ டேன்ட்ரம் காட்டுனா நானும் இப்பிடித்தான் நடந்துக்க வேண்டியதா இருக்கும். ஐ நெவர் ரெக்ரட் ஃபார் திஸ்” என்று சொல்லி அவளது உதடுகளைச் சுட்டிக்காட்டினான்.
வெண்பா எதுவும் பேசவில்லை! அவளது கண்கள் கலங்கின. கண்ணீர்க்கோடு கன்னத்தில் வழியவும் சட்டெனக் கரங்களை விலக்கினான் அவன்.
“சொன்ன தேதியில கல்யாணம் நடக்கும். நீ மிஸஸ் நேத்ரனா ராஜவிலாசத்துக்குள்ள வருவ. இதை உன் மனசுல பதிய வச்சுக்க.” என்றவன் மூங்கில் ஊஞ்சலில் கிடந்த அவளது மொபைலை எடுத்து அவளது வலதுகைப் பெருவிரல் ரேகையை அழுத்தித் திறந்தான்.
தனது மொபைல் எண்ணை அதில் மீண்டும் பதிவேற்றிவிட்டு அவளிடமே கொடுத்தவன் திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாய்ச் சென்றுவிட அதிர்ச்சியில் பைத்தியம் பிடிக்காத குறையாய்ச் சிலையாகிப்போனாள் வெண்பா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


