“பொறுப்பான கேடரை நாம புரொபசனா செலக்ட் பண்ணுறப்ப ஆட்டோமேட்டிக்கா நம்மளோட பொறுப்பு அதிகமாகிடும்… அந்தக் கேடருக்கான அதிகாரம் நமக்குக் கிடைக்கும்… நம்மளால அடுத்தவங்களை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணவும் முடியும்… இது எல்லாம் சேர்ந்து நமக்கு நம்பிக்கையைக் குடுக்கும்… எந்தச் சிச்சுவேசனையும் என்னால ஹேண்டில் பண்ண முடியுங்கிற தைரியம் வரும்… முக்கியமா யாரை நினைச்சும் எதை நினைச்சும் பயம் வராது… என்ன ஒன்னு, இந்த பெர்ஷனாலிட்டிய டெவலப் பண்ணிக்கிறப்ப நமக்குள்ள இருக்குற எம்பதி காணாம போயிடும்… அதனால மத்தவங்களோட பார்வைல நம்ம கல்நெஞ்சக்காரங்களா தெரிய ஆரம்பிப்போம்”
-ராகவர்தன்
“நியூ இயர் செலிப்ரேசன் நேரத்துல எந்த அசம்பாவிதமும் நடந்துடக்கூடாது… சிட்டியோட சென்சிடிவான க்ரவுட் கூடுற இடங்களான நானூத்து இருபத்தைஞ்சு இடங்கள்ல வெஹிகிள் இன்ஸ்பெக்சன் டீம் ரெடியா இருக்கணும்… முக்கியமா கிண்டி, அடையாறு, தரமணி, மதுரவாயல் பைபாஸ், ஜி.எஸ்.டி ரோட் பகுதிகள்ல டூவீலர் ரேஸ் நடக்குதானு கண்காணிக்க பேட்ரோல் டீம்கு ஆர்டர் போட்டுடுங்க… அது மட்டுமில்லாம மக்கள் அதிகமா கூடுற இடத்துல ஆம்புலன்ஸ் மெடிக்கல் டீமோட தயார்நிலையில இருக்கணும்… அவங்க கூட மொபைல் சர்வைலன்ஸ் டீமும் இருக்கணும்… முக்கியமா ஆன்டி நர்காடிக்ஸ் இன்டெலிஜென்ஸ் யூனிட் ரொம்ப விழிப்பா இருக்கணும்… சிட்டில இருக்குற பப், ஹோட்டல்ஸ்ல நியூ இயர் பார்ட்டிகள்ல ட்ரக் நடமாட்டம் இருக்கலாம்னு உளவுத்துறையில இருந்து தகவல் வந்திருக்கு”
பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து சரக காவல் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் காவல் ஆணையர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இன்னும் ஒரு வாரத்தில் புது வருடம் பிறக்கப்போகிறது. வருடத்தின் இறுதி நாள் இரவில் ஆரம்பித்து புத்தாண்டு வரை மக்கள் எவ்வளவு சந்தோசமாக ஓரிடத்தில் கூடுகிறார்களோ அங்கே உற்சாகத்துக்குக் குறைவில்லாதது போல பிரச்சனைகளுக்கும், குற்றங்களுக்கும், விபத்துகளுக்கும் பஞ்சமிருக்காது.
அதனால் சென்னை மாநகர காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதற்கானக் கலந்தாலோசனை கூட்டம் தான் இப்போது நடைபெறுகிறது.
கூட்டத்தில் ராகவர்தனும் கலந்து கொண்டிருந்தான்.
பெருநகர காவல் ஆணையர் கூறிய அனைத்து நடவடிக்கைகளும் துரிதகதியில் எடுக்கப்படவேண்டும் என்ற ஆணையோடு ‘ஆன்டி நர்காடிக்ஸ் இன்டெலிஜென்ஸ் யூனிட்டின்’ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டார்கள்.
அதில் ராகவர்தனும் ஒருவன்.
காவல் ஆணையர் அவனிடம் முக்கியமானத் தகவல்களைச் சொல்லிக்கொண்டிருந்தபோது அவனுடைய சொந்த உபயோகத்துக்கான மொபைல் சிணுங்கியது.
தொடுதிரையில் ‘அனு’ என்ற பெயர் வந்து போனது.
‘இவளிடம் என் மொபைல் எண் எப்படி?’
க்ஷண நேரத்தில் அந்தச் சிந்தனை வராமலில்லை.
அவசரமாக அழைப்பைத் துண்டித்தவன் ‘சைலண்ட் மோடில்’ போட்டுவிட்டுக் காவல் ஆணையரிடம் பேச ஆரம்பித்தான்.
மீண்டும் மீண்டும் அழைப்பு வருவதற்கு அடையாளமாக அவனுடைய மொபைலின் தொடுதிரை ஒளிர்ந்து அடங்கியது.
காவல் ஆணையரின் பார்வை அவனது மொபைல் பக்கம் செல்லவும் சங்கடமாக உணர்ந்தான் ராகவர்தன்.
“முக்கியமான காலா இருக்கப் போகுது… பேசிட்டு வாங்க ராகவ்”
அவர் இத்தனை இலகுவாகத் தன்னை அழைத்துத் தண்மையாகச் சொன்னது சங்கடத்தைப் போக்கினாலும் வேலை நேரத்தில் வேறு விசயம் பேசுவதில் ராகவர்தனுக்கு உடன்பாடு இல்லை.
“நோ ப்ராப்ளம் சார்… நீங்க சொல்லுங்க”
சென்னை மாநகரத்தில் போதைப்பொருள் பயன்பாடும், விற்பனையும் அதிகமாகிவிட்டதைக் கவலையுடன் கூறியவர் “சோசியல் மீடியால சென்னை சிட்டி போலீஸை அவ்ளோ மட்டமா கலாய்க்குறாங்க… போதாக்குறைக்குப் போன மாசம் வேற ஒரு லேடி போதைல டிராஃபிக் ஆபிசரை மோசமான வார்த்தையில திட்டுன வீடியோ வைரல் ஆச்சு… இவ்ளோ ஏன்? நம்ம ‘க்ரேட்டர் சிட்டி போலீஸ்’ ஃபேஸ்புக் பேஜோட பதிவுகள்லயே போதைப்பொருள் நடமாட்டம் பத்தி நிறைய பேர் கமெண்ட் பண்ணிருக்காங்க… அதை அடிப்படையா வச்சு, ரீசண்டா நடந்த இன்ஸ்பெக்சன் கிடைச்ச தகவல்களை அனலைஸ் பண்ணி ரிப்போர்ட் தயார் பண்ணிருக்காங்க… அதுல உள்ள ப்ளேசஸ்கு எல்லாம் கண்டிப்பா உங்க டீம் ரெய்ட் போகணும்”
“ஓ.கே சார்”
காவல் ஆணையரிடம் பேசிவிட்டு மீட்டிங் முடிந்ததும் வெளியேறியவன் காவல் வாகனத்தில் ஏறியதும் செய்த முதல் காரியம் அனுக்ரஹாவின் எண்ணுக்கு அழைத்ததே!
அழைப்பு ஏற்கப்பட்டதும் “ராகவ்…” என்று அவள் ஆரம்பிக்கும்போதே
“எனக்கு வேலை நேரத்துல பெர்ஷனல் கால் பேசுறது பிடிக்காது… ஒரு தடவை கால் அட்டெண்ட் பண்ணலனா மறுபடி மறுபடி கால் பண்ணக்கூடாதுனு தெரியாதா? டோண்ட் யூ ஹேவ் எனி மேனர்ஸ்?” என்று இறுகியக் குரலில் உரைத்தவன் மறுமுனையில் உள்ளவள் பதில் பேசும் முன்னர் அழைப்பைத் துண்டிக்கவும் செய்தான்.
அதோடு அவன் அனுக்ரஹாவை மறந்தும் போனான் வேலை பிசியில்.
ஒரு பக்கம் கண்மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கான கால அவகாசம் வாங்கி காவல்துறை கட்டுப்பாட்டில் விசாரணை நடந்து கொண்டிருந்தது.
இன்னொரு பக்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்ட புதிய பொறுப்புக்கான வேலை காத்திருந்தது. எனவே அன்றைய நாள் முழுவதும் அவன் அதில் கவனம் செலுத்தியே ஆகவேண்டிய சூழல்.
அதே நேரம் முதல் மொபைல் அழைப்பிலேயே அவனது கடுகடு பேச்சால் எரிச்சலுற்ற அனுக்ரஹா எக்காரணத்தைக் கொண்டும் ராகவர்தனிடம் பேசவே மாட்டேன் என்று சபதம் ஏற்காதக் குறை!
“ஓவரா பண்ணாத அனு… நமக்கு ஒர்க்கிங் ஹவர்ஸ் எட்டு மணி நேரம்… ஆனா போலீசுக்கு அப்பிடி இல்ல… அந்த டென்சன்ல ஏ.சி.பி கொஞ்சம் எக்ஸ்ட்ராவா பேசிட்டாப்ல… இதுக்காக அவர் கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசமாட்டேன்னு சொல்லுறது நல்லா இல்ல… அவரோட சூழ்நிலை என்னவோ?”
பிரபாவதி சொன்ன சமாதானங்கள் எதுவும் அனுக்ரஹாவிடம் எடுபடவில்லை.
அவளுக்கும் அடுத்தடுத்த வேலைகள் காத்திருக்கின்றன. இருப்பினும் வாழ்க்கையைப் பற்றிய விவகாரம் என்பதால் ராகவர்தனிடம் தாமதிக்காமல் பேச விழைந்தாள்.
இத்தனைக்கும் அன்று காலையில் தான் அவளும் அவளுடைய தோழமைகளும் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களுக்குச் சோர்வு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அலுவலகத்துக்கும் வந்துவிட்டார்கள்.
“என்னமோ இவன் தான் டோட்டல் சிட்டியைத் தலையில தாங்குற நினைப்பு… ஒரு போன் காலுக்கே இப்பிடி கடிக்குறான் ஹிட்லர்”
மனதுக்குள் முணுமுணுத்தவள் விஜயிடம் விற்பனை பற்றிய தரவு ஒன்றை வாங்குவதற்காகப் போய்விட்டாள்.
அன்றைய தினம் முழுவதும் அவரவர் வேலையில் இருவரும் பிசியாகிவிட்டார்கள்.
‘ரெடி டூ ஈட் வெரைட்டி ரைஸ்கள்’ தயாரிப்பை ஆரம்பிப்பது குறித்து முகுந்தனிடம் ஆலோசித்தாள்.
ஏற்கெனவே தயாரான ‘ரெடி டூ ஈட் பிசிபேளாபாத்’ ஆன்லைன் வழியாக மட்டுமின்றி சூப்பர் மார்க்கெட்கள், செயின் ஸ்டோர்களிலும் விற்பனைக்குக் கிடைக்குமாறு செய்வது குறித்து குழுவாகச் சேர்ந்து கலந்தாலோசித்தார்கள்.
சென்னையிலிருக்கும் முதன்மையான சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் ‘மெல்டிங் பாட்’ தயாரிப்புகளை விளம்பரப்படுத்த தாங்களே சென்றால் நன்றாக இருக்கும் என்றாள் ரீவா.
புதுமையான சந்தைப்படுத்துதல் முறைகளைப் பயன்படுத்திப் பார்ப்பதில் தயக்கம் காட்டவேண்டாம் என்றாள்.
அதற்காக சூப்பர் மார்க்கெட்கள், செயின் ஸ்டோர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் பட்டியல் தயாரானது.
அவற்றின் உரிமையாளர்களுடன் முகுந்தன் பேசிய பிற்பாடு ரீவாவின் தலைமையில் ஒரு குழு அந்தந்த இடங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் தயாரிப்பைப் பற்றிய விவரங்களைச் சொல்லி வாங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடலாமென்று முடிவு செய்தார்கள்.
“யார்லாம் வர்றிங்க?” என்று ரீவா கேட்க
“நான் வரலப்பா… ட்ராவல்ல செம டயர்ட்… ஐ நீட் ரெஸ்ட்” என்று முன்ஜாமீன் வாங்கினான் ஷாம்.
“நீ வரலையா அனு?” – ரீவா.
“அவ கொஞ்சம் கன்ஃபியூசன்ல இருக்கா ரீவ்… நான் வர்றேன்” – இது பிரபாவதி.
“என்ன கன்ஃபியூசன்?”
ஆளாளுக்குக் கேட்க முகுந்தனுக்கே அது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவல்!
பிரபாவதி சொல்லட்டுமா என்று கண் ஜாடையில் கேட்க தலையிலடித்துக்கொண்ட அனுக்ரஹா “சொல்லி தொல” என்றதும் மடமடவென ராகவர்தன் – அனுக்ரஹா பற்றி தாங்கள் கண்டறிந்த கேட்டறிந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.
அவள் பேசியதைக் கேட்டு முடித்த பிற்பாடு அனைவரும் மலைப்புடன் அனுக்ரஹாவைப் பார்த்தார்கள்.
“அந்தாளு எங்களை சட்டியில போட்டு வறுக்காத குறையா விசாரிச்சாரே… அப்பவாச்சும் சொல்லிருக்கலாமே?” மனம் பொறுக்காமல் கேட்டான் விஜய்.
“ஹேய்! நான் தான் சொன்னேன்ல… அந்த மருதாணி ஜோக் எல்லாம் யாரோ ஒரு பொண்ணு கிட்ட அடிக்கக்கூடியதா? யாராச்சும் நான் சொன்னதை நம்புனிங்களா?” ரீவா சொல்ல
“உன்னை நம்பாதது தப்பு தான் ரீவ்… இவளைப் பாரேன்… இப்பவும் அவர் கூட பேசமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குறா”
பேச்சு தொழிலைத் தாண்டி எங்கோ போய்க்கொண்டிருந்தாலும் முகுந்தன் அவர்களைக் கண்டிக்கவில்லை. முதலாளி – தொழிலாளி என்ற பேதம் எல்லாம் இல்லாம குழுவாக இணைந்து வேலை பார்க்கும் இடம் அது என்பதால் அவனுமே அனுக்ரஹாவுக்கு அறிவுரை கொடுத்தான்.
“ரிலேசன்ஷிப்ல ஈகோ நுழைஞ்சா நல்லது இல்ல அனு”
“அது இல்லண்ணா… ஐ காண்ட் ஹேண்டில் திஸ் கன்ஃபியூசன்… என்னடா உன் மனசுல இருக்குனு ராகவ் கிட்ட கேட்டுட்டா என் தலையில இருக்குற பாரம் இறங்கும்… அதுக்குத் தான் கால் பண்ணுனேன்… வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை இல்லாம என்னைத் தாளிச்சு எடுத்துட்டான் அந்த ஹிட்லர்… கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதவன்”
முகுந்தனின் பார்வை கனிந்தது. அனுக்ரஹாவைத் தங்கையாகக் கருதுபவன் அவன். அவளது பேச்சு சிறுபிள்ளையின் பிடிவாதத்தை நினைவுறுத்தியது. சிறுபிள்ளையின் பிடிவாதத்தால் யாருக்கும் நட்டமில்லை. அனுக்ரஹாவின் பிடிவாதம் அவளுக்கு அமையவிருக்கும் நல்வாழ்வைக் கேள்விக்குறியாக்கலாம் அல்லவா!
“ஒர்க் டைட்டா இருக்கப்ப எங்கம்மா கால் பண்ணுனாலே நான் கத்துவேன் அனு… அது டென்சன்ல கத்துறது… அதுக்காக அம்மாவ எனக்குப் பிடிக்கலனு ஆகுமா? உரிமை இருக்குற இடத்துல தான் கோச்சுக்க முடியும்” என்றான் அவளுக்குப் புரியவைக்கும் விதத்தில்.
“அப்பிடியா சொல்லுறிங்க?” என்று யோசித்தவள் “சரி! அப்ப உரிமை இருக்குற இடத்துல பிடிவாதத்தையும் காட்டலாம்ல?” என்கவும்
“இது தேறாதுண்ணா… இவளாச்சு அந்த போலீஸ் ஆச்சு… இங்க பாரு அனு, ஈகோவ வச்சு இடியாப்பம் கூட அவிக்க முடியாது… ஆனா விட்டுக் குடுத்தா விருந்தே சாப்பிடலாம்” என்று சொல்லி கண் சிமிட்டினாள் பிரபாவதி.
“அட்வைஸ்ங்கிற பேர்ல நீ ரொம்ப க்ரிஞ்ச் பண்ணுற பிரபா”
உச்சு கொட்டியவாறு அவள் அங்கிருந்து போய்விட மொத்த குழுவும் பிரபாவதியிடம் வேறு என்னவெல்லாம் இலஞ்சியில் நடந்ததென்ற விசாரணையில் இறங்கினார்கள்.
அதே நேரத்தில் ‘ஆன்டி நர்காடிக்ஸ் இண்டெலிஜென்ஸ் யூனிட்டின்’ அதிகாரிகள் அனைவரும் நகரத்தில் எங்கெங்கு போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமுள்ளது? இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகிக்கப்படுபவர்கள் யாரெல்லாம்? என்பதைப் பற்றி தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“இது சம்பந்தமா இந்த வருசம் மட்டும் ரெண்டாயிரத்து நூத்து பதினேழு கேஸ் ரிஜிஸ்டர் ஆகிருக்கு… இது சம்பந்தமா ரெண்டு ஆப்ரிக்கன் டீலர்ஸ் மேல சந்தேகம் இருக்கு… அதோட ரெண்டு என்.சி.பி ஆபிசர்ஸும் சஸ்பெக்ட் லிஸ்டுல இருக்காங்க… இவங்களோட டார்கெட் பெரிய பெரிய ஹோட்டல்ஸ், பப் மட்டும் கிடையாது… சாமானிய மக்களுக்கு நெருக்கமான நிறைய இடங்கள்ல இவங்க போதைப்பொருளை விற்பனை பண்ணுறதா நம்பத்தகுந்த சோர்ஸ் ஒன்னுல இருந்து தகவல் கிடைச்சிருக்கு”
ராகவர்தன் மூத்த அதிகாரி சொன்னதை நிதானமாகக் கேட்டவன் “அப்ப நியூ இயர் ஈவ்கு முன்னாடி நம்ம ரெய்டை ஆரம்பிக்கணும்… முக்கியமா நீங்க சொன்ன இடங்கள்ல” என்றதும் ஆம் என்றார் அவர்.
“சின்ன சின்ன பெட்லர்ஸ் யாரெல்லாம்னு லிஸ்ட் இருக்குல்ல… அவங்களை எல்லாம் கஸ்டடில எடுத்து விசாரிச்சா டீலர்ஸ் பத்தி நமக்கு எவிடென்ஸ் கிடைக்கும்”
அந்த மீட்டிங்கில் மறுநாள் எங்கெல்லாம் சோதனை நடத்தவேண்டுமென்ற முடிவும் எடுக்கப்பட்டது.
ராகவர்தன் எல்லா அலுவல்களையும் முடித்துவிட்டு அவனது வீட்டுக்குத் திரும்பியபோது நேரம் பன்னிரண்டைத் தொட்டிருந்தது.
அந்நேரத்தில் விஷ்ணுவர்தனிடமிருந்து அழைப்பு வரவும் இப்போது ஏன் அழைக்கிறான் என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்றான் அவன்.
“அனு உனக்குக் கால் பண்ணுனப்ப ஹார்சா பேசுனியாமே… ஏன்டா இப்பிடி பண்ணுற?”
ஆதங்கத்துடன் கேட்ட தமையனிடம் தனது பணிச்சுமையைக் கூறியவன் “எனக்கு எப்பவுமே ஒர்க் ஹவர்ஸ்ல கால் பண்ணுறது பிடிக்காது விச்சு… ஒரு தடவை கால் அட்டெண்ட் பண்ணலனதுமே அவ விட்டிருக்கலாம்… மறுபடி மறுபடி கால் பண்ணுனா எரிச்சல் வராதா?” என்று வினவியபடியே இரவுணவுக்காக மொபைல் செயலியில் ஆர்டர் போட்டான்.
“நீ அவளை நல்லா குழப்பி விட்டுட்டுப் போயிருக்க… போதாக்குறைக்கு அம்மா வேற அவங்க பங்குக்கு உனக்கு வேற பொண்ணு பாக்கப் போறதா சொல்லிருக்காங்க… அதைப் பத்தி பேச தான் அனு கால் பண்ணுனா.. நீ அவளைத் திட்டுனதால அவ இன்னும் குழம்பித் தான் போயிருக்கா”
“நியூ இயர் வரைக்கும் நான் ரொம்ப பிசிண்ணா… பட் அதுக்குள்ள அனு கிட்ட பேசிடுவேன்… நீ எங்களை நினைச்சு மண்டைய உடைச்சுக்காத… மதினியையும் பிறக்கப்போற குழந்தையையும் பத்தி மட்டும் யோசி”
ராகவர்தன் இவ்வாறு சொன்னதும் விஷ்ணுவர்தன் அரைமனதாக அழைப்பைத் துண்டித்தான்.
அவனிடம் பேசியதும் ராகவர்தன் செய்த முதல் காரியம் அனுக்ரஹாவின் வாட்சப்புக்குத் தகவல் அனுப்பியதே!
“இன்னைக்குக் கொஞ்சம் பிசி… வீக்கெண்ட் பேசலாம்”
தான் அவளைக் கடிந்து கொண்டதற்கான மன்னிப்பு எதையும் தாங்காத அந்தச் செய்தி ராகவர்தனுக்கு வித்தியாசமாகப் படவில்லை. ஒற்றை டிக்குடன் இருந்த செய்தி அவள் உறங்கியிருப்பாள் என்பதை உணர்த்த அவனும் உணவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


