சொந்த வேர்கள் என்னைப் புரியாமல் தூக்கி எறிந்தபோது, ஓர் அன்னையைப் போல் என்னை அரவணைத்தது இந்தச் சென்னை மாநகரம். இரக்கமற்றவள் என்று என்னைப் பழிக்கும் உறவுகளுக்குத் தெரியாது, என் கண்ணீரைத் துடைத்த இந்தச் சாலைகளே என் நிரந்தர முகவரியென்று!
-நியதி
பால்கனியின் இரும்புக் கிரில்களைத் தாண்டி நுழைந்த வேப்பமரக் கிளையில் இரவின் பனி ஈரமாய்ச் சொட்டிக்கொண்டிருக்க, ஓரமாய் இருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் அவள்.
வேப்பமரக் கிளையில் அமர்ந்து காகம் ஒன்று கரைய, முகத்தில் இருக்கும் தண்ணீரை உள்ளங்கையால் வழித்தபடி அதைப் பார்த்தவள் “குட் மார்னிங் மிஸ் ப்ளாக்! புள்ளை குட்டி எல்லாம் முழிச்சாச்சா?” என்று இலகுவாய் அதனிடம் பேச்சுவார்த்தை நடத்த அதுவும் விடாமல் கரைந்தது.
கிரில்லைப் பிடித்தபடியே “இன்னைக்கு எனக்கு ஆஃபீஸ்ல லாஸ்ட் டே. நாளையில இருந்து நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி. நாம ஃப்ரீயா பேசிக்கலாம். எனக்கும் உன்னையும் ப்ரீத்தியையும் விட்டாப் பேச்சுத்துணைக்கு யார் இருக்காங்க சொல்லு” என அவள் சொல்லும்போது வார்த்தைகளில் முன்பிருந்த உற்சாகம் குன்றிப்போக, சரியாய் அந்நொடியில் பின்னே இருந்து முதுகில் ஓர் அடி விழவும் முகத்தைச் சுருக்கிக்கொண்டு திரும்பினாள்.
அவள் நியதி. இருபத்திரண்டு வயது அழகிய நங்கை. அவள் சொன்னபடியே தற்போது பணியாற்றிக்கொண்டிருந்த ஆடிட்டர் அலுவலகத்தில் அன்றுதான் அவளுக்குக் கடைசி நாள். ஆம்! அவளது சி.ஏ ஆர்டிக்கிள்ஷிப்பின் இறுதி நாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளை அடித்தவளின் முகத்தில் சின்னதாய்க் கோபம். அவள்தான் ப்ரீத்தி. அவளும் நியதியும் ஒரே ஆடிட்டர் அலுவலகத்தில் ஒரே நாளில் ஆர்டிக்கிள்ஷிப்பிற்காகப் பணியிலமர்ந்தவர்கள். ப்ரீத்திக்குக் கோயம்புத்தூர். நியதியோ தென்காசி அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்தவள். பணியிலமர்ந்த அன்றே இருவருக்கும் அலைவரிசை ஒத்துப்போகத் தனது ஹாஸ்டலில் அவளையும் தங்க அழைத்துப்போய்விட்டாள் நியதி.
ஆர்டிக்கிள்ஷிப்பின் முதல் வருடம் முழுவதையும் ஹாஸ்டல் அறையில் கழித்தவர்கள் இரண்டாமாண்டில் குடியேறினார்கள் இந்த அப்பார்ட்மெண்டில். இருவரும் வாடகை, மளிகை, இதரச் செலவுகளைச் சரிசமமாகப் பகிர்ந்துகொள்வார்கள். நட்பாய் ஆரம்பித்த சினேகிதத்தின் முடிவில் இருவரும் உடன்பிறவாச் சகோதரிகளாய்ப் பரிணமித்திருந்தார்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில்!
இருவருக்குமே இன்றுதான் இறுதிப் பணிநாள் அலுவலகத்தில். இருவரும் சி.ஏ இன்டர்மீடியட்டில் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். எனவே நியதி சோககீதம் இசைத்தது போல வேலைக்குப் பற்றாக்குறை எல்லாம் இருக்காது.
ஆனால் ப்ரீத்தி நியதியை அடித்தது இதற்காக இல்லை.
“அது என்ன பேச்சுத்துணைக்கு யாருமில்லனு சொல்லுறது? யாருமில்லாமதான் நீ பூமிக்கு வந்தியாக்கும்? வைராக்கியம், கௌரவம்னு ஒண்ணத்துக்கும் ஆகாத வார்த்தைகளைப் பிடிச்சுக்கிட்டு நீ வீம்பா இருந்தா இப்பிடித்தான் காக்கா குருவிகிட்ட பேசிக் நாளை கழிக்கணும்” என்றாள் ப்ரீத்தி ஆற்றாமையோடு.
நியதியின் கண்களில் சின்னதாய் ஒரு வலி. வந்த நொடியில் அது விடைபெறவும் செய்தது. உதடுகளை இழுத்துப் புன்னகைத்தவள்
“காக்கை குருவி எங்கள் ஜாதினு பாரதியே சொல்லியிருக்கார் ப்ரீ. மனுஷங்களைவிட காக்காவும் குருவியும் நம்பத்தகுந்த ஜீவராசிக்ள்தான். எந்தக் காக்காவும் தன்னோட குஞ்சுகளுக்குள்ள பேதம் பாக்காது. மனுஷங்க அப்பிடி இல்ல ப்ரீ. இப்பிடிப்பட்ட மனுஷங்க மூலமா பூமிக்கு வந்ததுக்குப் பதிலா நான் வைஃபை, ப்ளூடூத் மூலமா பிறந்திருக்கலாம்” என்று பெருமூச்சோடு முடிக்கவும் ப்ரீத்தி அவளது சிகையைக் கோதினாள்.
“காலம் எல்லாரையும் மாத்தியிருக்கும் நியதி. காலவோட்டத்துல எல்லாரும் மாறணும்ங்கிறதுதான் வாழ்க்கையோட நியதி. நியதினு பேரை வச்சுக்கிட்டு நீ இதைப் புரிஞ்சிக்கலனா எப்பிடி?”
நியதி உடனே தனது இரு காதுகளையும் ஆட்காட்டி விரல்களால் மூடிக்கொண்டாள்.
“நான் எந்த அட்வைஸையும் எதையும் கேக்கமாட்டேன் ராஜமாதா. இன்னைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். உன் அட்வைஸைத் தூக்கி தூரப்போடு”
அப்படியே சொன்னபடி அந்த இரண்டு படுக்கையறைகள் கொண்ட மேல்தளத்து வீட்டில் இருக்கும் தனது அறைக்குள் போய்விட்டாள் நியதி.
ப்ரீத்திதான் அவளை ஆதங்கத்தோடு பார்த்தபடி நின்றாள். சற்று முன்னர்தான் அவளது அன்னை அழைத்திருந்தார். மகளுக்கு ஆர்டிக்கிள்ஷிப்பில் இறுதி நாள் என்பதால் வாழ்த்தியவர் சென்னையிலேயே இருக்கவேண்டுமென அவசியமில்லை என்று சொல்லிவிட்டார்.
“நம்ம கோயம்புத்தூர்ல நிறைய கம்பெனிஸ் இருக்கு ப்ரீத்தி. நீ இங்க வந்துடு. சிங்காநல்லூர்ல கிருஷ்ணா காலனி பக்கம் ஒரு கொரியன் ஸ்கின்கேர் கம்பெனியோட இந்தியன் ஆஃபீஸ்ல சி.ஏ இன்டர்மீடியட் முடிச்சவங்களுக்கு ஜாப் இருக்குனு உங்கப்பா பேசிட்டிருந்தார். நீயும் உன் ஃப்ரெண்டும் இங்க வந்துடுங்க.”
அம்மா, அப்பா என அனைவரும் தனக்காக யோசிப்பது போல நியதிக்காக யோசிக்க யாரேனும் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இந்தப் பிடிவாதக்காரி எதற்கும் ஒத்துவரமாட்டாள்! அவ்வளவு கௌரவம் பார்ப்பாள்!
“ஹூம்! முருகா! இந்தப் பொண்ணோட ரத்தத்துல வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், பிளேட்லெட்ஸுக்கு மத்தியில அபரிமிதமா ஓடுற கௌரவத்தை நீதான் ஃபில்டர் பண்ணி அவ உடம்புல இருந்து வெளியேத்தணும். எவ்ளோ நாள் இப்படியே அவ வாழ்க்கை தனியாப் போறது?”
தனது இஷ்டதெய்வமான தமிழ்க்கடவுளிடம் அறிவியலுக்குப் புறம்பான வேண்டுதல் ஒன்றை வைத்துவிட்டுக் குளிக்கப் போய்விட்டாள் ப்ரீத்தி.
யாருக்காக வேண்டுதல் வைத்தாளோ அவள் இன்னும் குளிக்கவில்லை. அறைக்குள் வந்ததும் மர அலமாரியில் உடைகளுக்கு மத்தியில் வைத்திருந்த ஆண்ட்ராய்டு மொபைலை உயிர்ப்பித்து ஏதேனும் துண்டிக்கப்பட்ட அழைப்புகள் வந்துள்ளனவா எனப் பரிசோதித்துக்கொண்டிருந்தாள்.
வழக்கம் போல ஒன்றும் வரவில்லை. இது இன்று நேற்றைய நிலையா என்ன? ஈராண்டுகளாக அவள் எதிர்பார்ப்பதும் பின்னர் மனம் சோர்ந்து தன்னைத்தானே தேற்றுவதுமாய் நாட்கள்தானே பறக்கின்றன.
“அவங்க உன்னை ஒரேயடியா உதறிட்டாங்க. நீ எப்பவும் அவங்களுக்கு முக்கியமில்ல. புதுசா வந்தவளுக்காக உன்னை ஒதுக்கிவச்சவங்களுக்கு நீ ஒருத்தி இருக்குற ஞாபகம்கூட வருமோ வராதோ? ஏன் உன்னை நீயே ஏமாத்திக்கிற? டெய்லி டோஸேஜ் ஆஃப் டிஸப்பாயின்மெண்ட் முடிஞ்சுதுனா குளிச்சு ஆஃபீஸுக்கு ரெடியாகு”
மனசாட்சி அவளுக்கு ஆறுதல் சொல்லவும் எழுந்தவள் மொபைல் போனை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு அன்று அணியவேண்டிய உடைகளை மட்டும் வெளியே எடுத்துவைத்தாள்.
அவள் குளிக்கும்போது தண்ணீரோடு சில துளிக் கண்ணீரும் போனதை யார் அறிவார்? வழக்கமாய் அரங்கேறும் காட்சிகள் இவை. அவளை வீம்பு பிடித்தவள், வைராக்கியம் காப்பவள் என்று சொல்லும் ப்ரீத்திக்குக் கூட இதெல்லாம் தெரியாது.
மளமளவெனக் குளித்துக் கருப்பு வண்ண டீஷர்ட், டெனிம், டஸ்டி பிங்க் நிறத்தில் பேக்பேக் அணிந்து கூந்தலை உலர்த்திக் க்ளட்ச் க்ளிப் ஒன்றில் ஹாஃப் அப் ஹேர்ஸ்டைலில் ஆயத்தமானாள்.
பேக்பேக்கில் வழக்கம் போல இடம்பெறும் சில பல புத்தகங்களும் அடக்கம். அவள் புத்தகங்களின் காதலி. புனைவு, அபுனைவு என எதைக் கொடுத்தாலும் படிப்பாள்.
இருவருக்கும் சேர்த்து எளிய காலையுணவாக ஓட்ஸ் கஞ்சியைப் பழத்துண்டுகளுடன் தயார் செய்துவைத்திருந்தாள் ப்ரீத்தி. அதை இருவரும் இணைந்து சாப்பிட்டு முடித்தார்கள்.
அவர்கள் தங்கியிருக்கும் அந்த அப்பார்ட்மெண்ட் அமைந்திருக்கும் தி.நகரிலிருந்து அவர்கள் வேலை செய்யும் ‘ஆர்.கே விஸ்வநாத் அண்ட் கோ’ இருபது நிமிட ஸ்கூட்டி பயணம்தான்.
ஸ்கூட்டியை நிறுத்த எல்லாம் அங்கே இடமிருக்காது. அப்பார்ட்மெண்ட் வளாகத்துக்கு வெளியேதான் நிறுத்தவேண்டும். இருவரும் பொடிநடையாக நடந்து ஸ்கூட்டி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை அடைந்தார்கள்.

அந்த ஸ்கூட்டியின் உரிமையாளினி என்னவோ ப்ரீத்திதான். மகள் சென்னையில் பேருந்திலும் ஆட்டோவிலும் சென்று சிரமப்படக்கூடாதென அவளது பெற்றோர் வாங்கிக் கொடுத்திருந்த ஸ்கூட்டி அது. ஆனால் அது நியதிக்குத்தான் மிகவும் நெருக்கம்.
‘படிக்காதவன்’ படத்தில் டாக்சியை ‘லட்சுமி’ என சூப்பர் ஸ்டார் கொஞ்சுவாரே, அதே போல அந்த ஸ்கூட்டியை ‘பிங்கி’ என்று கொஞ்சுவாள் அவள். இப்போதும் அவள்தான் ஸ்கூட்டியைக் கிளப்பப் பின்னே உட்கார்ந்துகொண்டாள் ப்ரீத்தி.
சென்னை டிராஃபிக்கில் நீந்தி, ‘ஆர்.கே. விஸ்வநாத் & கோ’ அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள் இரு பெண்களும். அந்த அலுவலகம் எப்பொழுதுமே தனக்கென ஒரு தனித்துவமான உலகத்தைக் கொண்டிருக்கும்.
சுவர்களை ஒட்டி நிற்கும் பழுப்பு நிற மர அலமாரிகள் முழுவதும், வருஷக் கணக்கில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் தடிமனான ஜி.எஸ்.டி மற்றும் இன்கம் டாக்ஸ் ஃபைல்கள் ஒரு கோட்டையின் சுவர்களைப் போலக் காட்சியளிக்கும். இடைவிடாமல் காகிதங்களை உமிழும் பிரிண்டர்களின் சத்தமும், லேப்டாப் மற்றும் கணினியின் கீபோர்டுகளில் விரல்கள் நடனமாடும் தாளமும் அங்கு எந்நேரமும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஒருபக்கம் பழமை மாறாத அக்கவுண்ட்ஸ் நோட்டுகளின் வாசனையோடு, மறுபக்கம் சுடச்சுட நுரைக்க ஆற்றப்பட்ட ஃபில்டர் காபியின் மணத்துடனான ரூம் ஃப்ரெஷ்னரின் சுகந்தமும் கலந்த அந்த மிதமான ஏசி காற்றில் ஒருவித உழைப்பின் தீவிரம் எப்போதுமே ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடம்தான் கடந்த இரண்டு வருடங்களாக அவளுக்கு இரண்டாவது வீடாகவே மாறியிருந்தது.
ஆனால் இன்று அங்கே வழக்கமான ஜி.எஸ்.டி ஃபைலிங், டாலி, பேலன்ஸ் ஷீட், கார்ப்பரேட் ரிப்போர்ட்டுகள் என டென்ஷன்கள் ஏதுமில்லை. மாறாக, நியதிக்கும் ப்ரீத்திக்கும் பிரியாவிடை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் சிறிய அளவில் நடந்துகொண்டிருந்தன.
அறுபது வயதைக் கடந்த ஆடிட்டர் விஸ்வநாத் முகத்தில் கனிவான புன்னகையோடு இருவரையும் அழைத்தார்.
“கங்க்ராட்ஸ்மா… ரெண்டு பேரும் இன்டர்மீடியட் கிளியர் பண்ணி, இன்னையோட ஆர்ட்டிகிள்ஷிப்பையும் சக்சஸ்ஃபுல்லா முடிச்சிட்டீங்க.” என்றவர், நியதியைத் தனியாகப் பார்த்து,
“நியதி… நீ ஊர்ல இருந்து தனியா வந்து, எந்தச் சப்போர்ட்டும் இல்லாம, இவ்ளோ டெடிகேட்டடா படிச்சு பாஸ் பண்ணியிருக்க. உன்னோட இந்தத் தைரியமும் உழைப்பும் உன்னைக் கார்ப்பரேட் வேர்ல்டுல பெரிய இடத்துக்குக் கொண்டுபோகும். ஆல் தி பெஸ்ட்!” என்று வாழ்த்தி, விலையுயர்ந்த பேனா ஒன்றை நினைவுப் பரிசாகக் கொடுத்தார்.
“ஃபைனல் முடிச்சு ஆடிட்டர் ஆனதும் நீ போடுற முதல் பச்சை இங்க் கையெழுத்தை இந்தப் பேனாவால போடணும்” என்று அவர் சொல்ல அவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.
இரண்டு ஆண்டுகளில் தொழில் நுணுக்கங்கள் அனைத்தையும் பொறுமையாய்க் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு, எந்த ஒளிவுமறைவுமின்றி அதைக் கற்றுக்கொடுத்த குரு அவர்தானே! அவர் கொடுத்த பரிசை நன்றியோடு வாங்கிக்கொண்டாள் நியதி.
அலுவலகத்தின் சக ஊழியர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நியதியின் கண்கள் அவர்களின் சின்னச் சின்ன அன்புச் செய்கையில் லேசாகக் கலங்கின. தனியாய்ச் சென்னைக்கு வந்து நின்றவளுக்கு, இந்த அலுவலக மனிதர்கள்தான் கடந்த இரண்டு வருடங்களாகக் குடும்பமாக இருந்திருக்கிறார்கள்.
அவளது சோகம், சிரிப்பு, கண்ணீர், பூரிப்பு என ஒவ்வொன்றையும் இவர்களிடம்தான் அவள் பகிர்ந்திருக்கிறாள். மனம் முழுவதும் இங்கிருந்து பிரியப்போகிறோம் என்ற வேதனை ஒரு பக்கம் வாட்டியது.
“ரொம்ப தேங்க்ஸ் சார். இந்த ரெண்டு வருஷம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் என் வாழ்க்கையில நான் சேர்த்த உண்மையான சொத்து” என்றாள் மனப்பூர்வமாக.
“சார்கிட்ட பேசிட்டே ட்ரீட்டை மறந்துடாத. சென்டிமெண்ட் தனி ட்ராக். ட்ரீட் தனி ட்ராக்”
சக ஊழியர்களின் கிண்டல் பேச்சிலும் சின்னச் சின்ன வேலைகளிலும் பொழுது சிறுத்தை வேகத்தில் பறந்தது.
மாலை நேரம். அலுவலக நண்பர்கள் கார்த்திக், ரம்யா மற்றும் ப்ரீத்தியோடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ட்ரெண்டியான ‘தி ப்ரூ ரூம்’ கஃபேவுக்குள் நுழைந்தாள் நியதி. இன்டர்மீடியட் முடித்ததற்கான ட்ரீட்டை அவளும் ப்ரீத்தியும் இணைந்து கொடுப்பதாக ஏற்பாடு. அந்த ஜென் ஜி கூட்டம் எந்தளவுக்குப் படிப்பில் கெட்டியோ அந்தளவுக்குக் கொண்டாட்டத்திலும் திளைப்பார்கள்.
பப் கல்ச்சருக்குள் இன்னும் தாவாதவர்களுக்குக் கஃபேக்களும், நூலகங்களும், சென்னையின் அழகான புராதானக் கட்டிடங்களை நடந்தே சென்று பார்வையிடும் ‘ஹெரிடேஜ் வாக்’ என்ற நடைபயணங்களும்தான் கொண்டாட்டத்தை இனிமையாக்கும் அற்புதமான வழிகள்!
“மச்சி… இன்னைக்கு நியதி, ப்ரீத்தியோட பர்ஸ் காலி! மெனு கார்டுல வலது பக்கம் இருக்குற ரேட்டைப் பார்க்காம, இடது பக்கம் இருக்குற ஐட்டத்தை மட்டும் பார்த்து ஆர்டர் பண்ணுங்கடா…” என்று ஸ்ரீராம் கலாய்க்க,
“டேய், நாங்க பரம ஏழைகள்டா. ஆர்ட்டிகிள்ஷிப் ஸ்டைபண்டை நம்பி வாழ்றவங்க. அடுத்த மாசம் அதுவும் வராது. பார்த்துப் பதமா ஆர்டர் பண்ணுங்க சாமிகளா. எக்குத்தப்பா பில்லை ஏத்திடாதீங்க!” என்று நியதி சொல்ல
“அடச்சீ! பஞ்சப்பாட்டு பாடாத. ரெண்டு சப்ஜெக்ட்ல எக்ஸெம்ப்ஷன் வாங்கிட்டு ஐயோ அம்மானு ஒரே கதறல்”
ஸ்ரீராம் கேலி செய்யும்போதே பீட்சா, ஒயிட் சாஸ் பாஸ்தா, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் என மேசை நிரம்பியது.
“இப்பல்லாம் கார்ப்பரேட்ல இன்டர்மீடியட் முடிச்சவங்களுக்கே பேக்கேஜ் சும்மா அள்ளிக் கொடுக்குறாங்க நியதி. நீயும் ப்ரீத்தியும் ஈஸியா செட்டில் ஆகிடுவீங்க. ஆனா பெரிய ஆளானதும் எங்களை மறந்துடாதீங்கடே…” என்றாள் ரம்யா, ஸ்ட்ராவால் மோஜிட்டோவை உறிஞ்சியபடியே.
“அடப்பாவிகளா! வந்த முதல் வருஷம் நீங்க எல்லாம் செஞ்ச கலாட்டாவுக்கு உங்களை வாழ்க்கையில எங்களால மறக்க முடியுமா? எங்க முதல் மாச சம்பளத்துல கண்டிப்பா உங்களுக்குத் தாஜ்ல ட்ரீட் இருக்கு! என்ன சொல்லுற ப்ரீ?” என்றாள் நியதி உற்சாகமாக.
“பின்ன? அக்கவுண்ட் காலியாகுற வரைக்கும் ட்ரீட் வைப்போம். ஆனா அதுக்கு நீங்க எல்லாரும் கோவை வரணும். நானும் நியதியும் கோவை போகலாம்னு ஒரு ஐடியா வச்சிருக்கோம்.”
அவர்களின் அரட்டையும், சிரிப்பும், ஒருவரையொருவர் சீண்டிக்கொள்ளும் வார்த்தைப் பரிமாற்றங்களும் அந்த மாலையை அதீத உற்சாகத்தோடு இளமைத் துள்ளலோடு அழகாக்கியிருந்தன.
இரவு ஒன்பது மணி. அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அப்பார்ட்மெண்டிற்குத் திரும்பினார்கள் நியதியும் ப்ரீத்தியும்.
அறைக்குச் செல்லாமல், நேராக மொட்டை மாடிக்குச் சென்றாள் நியதி. இரவு நேரச் சென்னை அத்துணை அழகு. ஏனோ அவளுக்கு இந்தச் சிங்காரச் சென்னை மீது பிரேமை அதிகம்.
பசுங்களிமண்ணாய் வந்தவளை அழகான டெரகோட்டா சிலையாய்ப் பக்குவப்படுத்தி உருவம் கொடுத்தது இந்தச் சென்னைதானே! அழகான நட்பையும், அர்ப்பணிப்போடு கூடிய தோழமைகளையும், அரவணைப்போடு கூடிய குருவையும் அவளுக்குக் கொடுத்தது இந்தச் சென்னைதானே!
பெருமூச்சோடு வானத்தை அண்ணாந்து பார்த்தாள் நியதி. முழு நிலவு ஒளிரத் தொடங்கியிருந்தது. கீழ்ப்புறம் ஜி.என். செட்டி சாலையின் வாகன இரைச்சல்கள் கேட்டுக்கொண்டிருக்க, மாடியில் நிலவின் வெளிச்சம் அவளது முகத்தில் விழுந்து, அவளது கண்களின் ஆழத்தில் உறைந்திருந்த அந்தப் பெரிய வெற்றிடத்தைக் காட்டியது.
இன்று அவள் சாதித்திருக்கிறாள். தனி ஆளாக நின்று, யாரையும் சாராமல் தனது உழைப்பை மட்டும் நம்பி ஒரு கடுமையான படிப்பை அமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், இந்த வெற்றியைக் கொண்டாட, “நியதி சாதிச்சிட்டா” என்று சொல்லிப் பெருமைப்பட அவளுக்காக யாரும் இல்லையே என்ற வலி, ஒரு கணம் அவளது தொண்டையை இறுக்கியது.
“இன்னைக்கு நீ வேண்டாம்னு உதறிட்டுப் போற எல்லாத்துக்காகவும் ஒரு நாள் நீ ஏங்குவ பாரு” வன்மத்துடன் அவளை நோக்கி வார்த்தைகளை உதிர்த்தவளை நியதியின் மனம் கசப்போடு நினைவுறுத்திக்கொண்டது.
‘நீ தீர்க்கதரிசிதான். நீ சொன்ன அளவுக்கு இல்லை என்றாலும் எனக்கான மனிதர்களுக்காக நான் ஏங்குகிறேன். அவர்களை நான் எந்த அளவுக்கு விலக்கி வைக்கிறேனோ, எந்தளவுக்கு அவர்களைத் தொடர்புகொள்ளப் பிடிக்காமல் வைராக்கியம் காக்கிறேனோ அந்தளவுக்கு அவர்கள் ஏன் என்னைத் தொடர்புகொண்டு பேசவில்லை என விசனப்படுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாய் என்னை ஒரு பொருட்டாய் எண்ணாமல் பண்டமாற்று வணிகத்துக்கு உட்படுத்தியவர்களையும் தாண்டி எனக்குள் சுருக் சுருக்கென்று ஒரு குற்றவுணர்ச்சி முள்ளாய்த் தைக்கிறது. அதை நான் என்னதான் செய்வது?’
சில நேரங்களில் இப்படித் தனிமையில் வந்து விச்சிராந்தியாய்த் தனக்குத்தானே மானசீகமாய்ப் புலம்பினால், தனக்குள் இயலாமையை ஏற்படுத்தும் அழுத்தம் குறைவதாய்த் தோன்றும் நியதிக்கு.
அந்த அழுத்தம் குறைந்த மறுநொடியே வழக்கம் போல நிதர்சனம் அவளைக் கொக்கிபோட்டு இழுத்துவிடும். இதோ இப்போது ப்ரீத்தியின் ரூபத்தில் வந்து நிற்பது போல.
“நீ என்கூடக் கோவை வந்துடுறியா? அங்க நிறைய வேக்கன்ஸி இருக்கு நியதி. அம்மாகூட உன்னை அங்க வரச் சொன்னாங்க”
நியதியின் முகத்தில் விரக்தியான முறுவல்! உடனே சம்மதிக்கவும் தோன்றவில்லை. தன்னை யாரும் பச்சாதாபத்தோடு பார்ப்பதை அவள் விரும்புவதில்லை.
“இல்ல ப்ரீ! எனக்கும் சென்னைக்கும் ஒரு பாண்டிங் இருக்கு. நான் இங்கயே இருந்துடுறேன்” என்றாள் மென்மையாய்.
“புரியுது நியதி. ஆனா இப்பிடியே எத்தனை நாள் இருப்ப? திடீர்னு ஒரு நாள் உடம்பு முடியலனா யார் உனக்குத் துணையா இருப்பாங்க? ஒழுங்கா என்கூடக் கோவைக்கு வா. நாளைக்கு மதுரிமாவோட கல்யாணம். கல்யாணத்தையும் ரிசப்ஷனையும் அட்டெண்ட் பண்ணுன கையோட நாம கோவைக்குக் கிளம்புறோம். டாட்”
“ப்ரீ! அது சரியா வராது.”
“ஏன்? எங்கம்மா உன்னை நல்லாப் பாத்துப்பாங்க நியதி”
“நான் இல்லனு சொன்னேனா? என்னை வேண்டாத சுமை மாதிரி நடத்துன ஆளுங்க மத்தியில நீ, அம்மா எல்லாம் ஏஞ்சல்ஸ். ஆனா நான் தனியா இருக்கவும் பழகிக்கணும்ல ப்ரீ. நாம யாருக்கு எதைப் பரிசாக் குடுக்குறோமோ அதை நாமளும் கொஞ்சம் அனுபவிச்சுப் பாக்கணும். அன்பைக் குடுத்தா அன்பை அனுபவிக்கலாம். தனிமையக் குடுத்தவ நான். அதை நான் அனுபவிக்குறதுதான் சரி. பொயட்டிக் ஜஸ்டிஸ் மாதிரி”
“புரியுது. ஆனா ஒண்ணு, ஒரு நாள் இந்தத் தனிமை திகட்டும். அப்ப நீ தயங்காம கோவைக்கு வந்துடணும். சரி! இப்ப தூங்கலாமா? வெதர்மேன் இன்னும் ரெண்டு நாளுக்கு விடாம மழை பெய்யும்னு சொல்லிருக்கார். மதுரிமா சின்ன வயசுல ஊறவச்ச அரிசி தின்னுருப்பா போல. அவ கல்யாணத்துக்கு அடைமழை பெய்யப்போகுதுனு வானிலை அறிக்கை வருது பாரு”
சலித்த குரலில் ப்ரீத்தி சொல்லவும் சிரிப்பு வந்துவிட்டது நியதிக்கு. அவளது தோளில் அடித்தபடி படியிறங்கிப் போனவளுக்கு அதன் பின்னர் நித்திராதேவியுடனான சந்திப்பில் இரவு இனிமையாக நகர ஆரம்பித்தது.
வைராக்கியம், ஆற்றாமை, குற்றவுணர்ச்சி எனப் பல்வேறு முரண்பட்ட உணர்வுகளின் கலவையாய் இருப்பவளை இயல்புக்குக் கொண்டுவரப்போகும் மந்திரத் தருணம் வெகு அருகில் என்று ஜன்னலோரம் வந்து கதை சொல்லிவிட்டுப் போனது அவள் சற்று முன்னர் ரசித்த வெண்ணிலவு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


