கேரளாவில் பதினான்கு மாவட்டங்களில் சாத்தான் வழிபாட்டு குழுவினர் தங்களுக்கென சர்ச்களை நிர்மாணித்துள்ளதாக ராஜிவ் சிவசங்கர் கூறுகிறார். இத்தகைய சர்ச்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட வீடுகளிலும் அப்பார்ட்மெண்ட்களிலும் செயல்படுகின்றன. இவர்கள் ‘சாத்தான் சேவா’ என்ற நிகழ்வை செய்கிறார்கள். அந்நிகழ்வின் போது சாத்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குவார், எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவைப்பார் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயலுகிறார்கள். அதிலும் தொழில் நொடிந்த பிசினஸ்மேன்கள் தான் இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்களின் இலக்கு என்கிறார் ராஜிவ். சாத்தான் வழிபாட்டு கும்பல் நடத்துகிற ப்ளாக் மாஸில் கலந்துகொள்ள ஒரு நபருக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்கள் பற்றிய எச்சரிக்கை கேரளாவின் கத்தோலிக்க தேவாலயங்களில் அடிக்கடி விடுக்கப்பட்டது. கூடவே நம்பிக்கை என்ற பெயரில் சாத்தான் வழிபாடு மற்றும் அதிலுள்ள மூடப்பழக்க்கவழக்கங்களைப் பரப்புகிற நபர்கள் யாராயினும் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டார்கள். ‘சாத்தான் சேவா’வைத் தடுக்கக்கூடிய சட்டங்கள், அப்பெயரைச் சொல்லிக்கொண்டு நடக்கும் குற்றங்களை விசாரிக்கக்கூடிய சட்டங்கள் கேரளாவில் இயற்றப்பட வேண்டுமென ராஜிவ் சிவசங்கர் குறிப்பிட்டார்.
-From Internet
சாந்திவனம்…
இனியா மற்றும் முருகையாவுக்கு முறைப்படி செய்ய வேண்டிய இறுதிகாரியங்களை ஒரு தந்தையாகவும், மகனாகவும் செய்து முடித்திருந்தார் கலிங்கராஜன். இனியா மற்றும் முருகையாவின் புகைப்படங்களுக்கு பூமாலை போட்டு ஊதுவத்திகள் வாசம் வீசிக்கொண்டிருந்தன.
புகைப்படங்களுக்கு முன்னே விரிக்கப்பட்டிருந்த இலையில் அவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்கள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இறுதி காரியத்தைச் செய்து முடித்த கையோடு வந்திருந்த புரோகிதருக்கு தானம், பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் கலிங்கராஜன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர் இதன்யா, முரளிதரன், மார்த்தாண்டன், மகேந்திரன் நால்வரையும் வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தார். கூடவே நிஷாந்தையும் சாவித்ரியையும் மூபினாவையும் அழைத்திருந்தாள் கிளாரா.
அவர்கள் எல்லாம் ஓரமாக அமர்ந்து நடந்தவற்றை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நிஷாந்த் தன்னை மீறி கசிந்த கண்களை துடைத்துக்கொண்டபடி அமர்ந்திருந்தான்.
பூஜை முடிந்ததும் மெதுவாக எழுந்தவன் கையோடு கொண்டு வந்த பாலிதீன் கவரிலிருந்து தொடுக்கப்பட்ட ராமபாணப்பூச்சரைத்தை எடுத்தான். கண்ணீரோடு எழுந்து போய் அதை இனியாவின் புகைப்படத்திற்கு போட்டுவிட்டான்.
வழிந்த கண்ணீரைத் துடைத்தவன் புகைப்படத்தை விட்டு எழுந்திருக்க மனமின்றி அப்படியே அதன் முன்னே மடிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தான்
அக்காட்சியைக் கண்ட போது தன்னை மீறி கலங்கிய விழிகளைத் துடைத்துக்கொண்டார் சாவித்திரி. இப்படி தான் தேவசேனாவை இழந்தபோது ஏகலைவனும் கண் கலங்கினான் என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தவர் அதே துயரத்தை என் மகனுக்கும் கொடுத்துவிட்டானே என முதன் முதலாக மகனின் நிலையை எண்ணி வருந்தி தம்பியின் செய்கையை நொந்துகொண்டார்.
கலிங்கராஜனுக்கும் கிளாராவுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவனைத் தான் தன் மகளைக் காதலிக்கத் தகுதியானவன் இல்லை என்று சொன்னோம்! இறந்த பிறகு மகளுக்காக கதறுபவன் எத்துணை காதலை அவள் மீது வைத்திருப்பான்! அவள் மட்டும் உயிருடன் இருந்து இவனை மணந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக அவளை வைத்திருந்திருப்பான்?
காலங்கடந்த ஞானம்! மகளுக்கும் இவனுக்கும் காதலிக்க இது சரியான வயதில்லை, காலம் வரும் வரை காத்திருங்கள் என்று அறிவுறுத்தி பக்குவமாக நடந்து கொண்டிருந்தால் இந்நேரம் மகள் உயிருடன் இருந்திருப்பாளோ? கலிங்கராஜனின் சிந்தனை இது!
மனிதர்களின் இயல்பே இதுதான்! இருக்கும் வரை நெருங்கியவர்களின் மனவுணர்வை நாம் புரிந்துகொள்வதே இல்லை. அவர்கள் மறைந்த பிறகே இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாமென வெறுங்கையில் முழம் போடுவோம்!
முபீனா இதன்யாவின் அருகே அமர்ந்திருந்தாள். இனியாவின் இழப்பிலிருந்து அவள் மீண்டுவிட்டாள் தான். ஆனால் நிஷாந்தின் அழுகை அவளுக்குப் பழைய விசயங்கள் ஒவ்வொன்றையும் நினைவுறுத்தியது.
பொதுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண் பெறுவோமென போட்டி போட்டு படித்தது, இருவரும் ஒன்றாக கல்லூரிக்குப் போகலாமென திட்டமிட்டிருந்தது என அனைத்தும் நினைவுக்கு வர வர அவளது கண்களும் கலங்கின.
அழக்கூடாதென இதன்யா அவளது கையை அழுத்தியதும் அமைதியானாள் அச்சிறுபெண்.
ஒருவழியாக இறுதி காரியங்கள் முடிவடைந்ததும் அனைவருக்கும் தன் கையால் சாப்பாடு பரிமாறினார்கள் கலிங்கராஜனும் கிளாராவும்.
சாப்பிட்டு முடித்ததும் கிளாரா இதன்யாவிடம் தனிமையில் பேச வந்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்… நீங்க மட்டும் இந்தக் கேஸை ரீ-ஓப்பன் பண்ணலனா என் குடும்பம் எனக்குத் திரும்ப கிடைச்சிருக்காது… உங்களை நான் அன்னைக்குக் கோவமா பேசுனதுக்கு மன்னிச்சிடுங்க”
கரம் கூப்பியவளை புன்னகையோடு பார்த்தாள் இதன்யா.
“உங்க குழந்தைங்களை பத்திரமா பாத்துக்கோங்க” அவ்வளவு தான்! அதற்குமேல் பேசவில்லை.
ஆனால் கலிங்கராஜனிடம் மட்டும் சோபியாவை மறந்துவிடாதீர்கள் என்று வலியுறுத்த மறக்கவில்லை அவள்.
“இனியாவுக்குச் செய்யவேண்டிய எல்லாத்தையும் அந்தச் சின்னப்பொண்ணுக்கு செய்யுங்க சார்… அம்மா அப்பா இல்லாம இந்த சொசைட்டில அவ சர்வைவ் ஆகுறது கஷ்டம்… இந்த மாதிரி பசங்க தான் வழிமாறி போவாங்க… நீங்க அவளுக்குக் கார்டியனா இருப்பிங்கனு நம்புறேன்… நானும் டைம் கிடைக்குறப்ப அவளைப் பாக்க வருவேன்… ஏன்னா ஹாஸ்டல் மதர் கிட்ட சோபியா இனிமே என்னோட பொறுப்புனு சொல்லிருக்கேன்”
“அந்தப் பொண்ணுக்கு நான் செய்ய நினைச்ச பாவத்துக்கு இது மட்டும் தான் பரிகாரமா இருக்க முடியும் மேடம்… கண்டிப்பா நான் அவளுக்கு நல்ல கார்டியனா இருந்து பாத்துப்பேன்… என்னை நீங்க நம்பலாம்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் மார்த்தாண்டன் மட்டும் இனியா – முருகையாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
“உங்க வேலைக்கு எதுவும் ஆகாது… உங்களை மாதிரி நல்ல அதிகாரிங்க இல்லனா என்னை மாதிரி சாமானியனுக்குப் போலீசு மேல உள்ள நம்பிக்கையே போயிடும்… உங்களை வேலைய விட்டு தூக்கணும்னு நினைக்குறவங்க மனசை பொன்மலை முருகன் மாத்துவான்… நீங்க உங்க கையால எங்க சின்னம்மாவ கொன்னவனை கைது பண்ணுவிங்க… நம்பிக்கையா இருங்க… நான் போயிட்டு வர்றேன்”
துறைரீதியான விசாரணை நடந்தபோது தனக்கு நம்பிக்கை அளித்த முதியவர் போய் வருகிறேன் என்று சொன்னபடி ஒரேயடியாக போய்விட்டார். அவர் இல்லை என்றாலும் அவரது நம்பிக்கை காப்பாற்றப்பட்டது.
“உங்க சின்னம்மாக்கு நாங்க நியாயம் வாங்கி தந்துட்டோம் பெரியவரே! இப்ப உங்களுக்குச் சந்தோசமா?” என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டார் மார்த்தாண்டன்.
எல்லாம் முடிந்து அவர்கள் கிளம்ப வேண்டிய தருணத்தில் மிச்செல் ஓடி வந்து இதன்யாவைக் கட்டியணைத்தாள்.
“நீங்க சென்னைக்குப் போனாலும் என்னை மறக்க மாட்டிங்க தானே?”
“அது எப்பிடி உன்னை, ஜென்னிய, நித்திய மறப்பேன்? என் நம்பர் இருக்குல்ல… உனக்குத் தோணுறப்ப கால் பண்ணு… நம்ம பேசலாம்… நல்லா படிக்கணும்… உன் அம்மா அப்பாக்கு நல்ல பொண்ணா இருக்கணும்… நான் கிளம்பட்டுமா?”
அவளிடம் விடைபெற்றாள் இதன்யா. முரளிதரன், மார்த்தாண்டன், மகேந்திரனும் அவளோடு விடைபெற்றார்கள்.
“அப்ப நாங்களும் கிளம்புறோம்”
சாவித்திரி சுருக்கமாகச் சொல்ல “போயிட்டு வாங்கம்மா” என்று கரம் கூப்பினார் கலிங்கராஜன்.
முபீனாவைத் தன்னோடு அழைத்துச் சென்றாள் இதன்யா.
ரசூல் பாய் வீட்டில் அவளை விட்டுவிட்டு கிளம்ப எத்தனித்தவளின் கரத்தில் ரோஷ்மில்க் நிரம்பிய தம்ளர் திணிக்கப்பட்டது.
“வெயிலுக்கு இதமா இருக்கும்… பாதாம் பிசின், சப்ஜா எல்லாம் போட்டிருக்கேன்… குடிச்சுட்டுத் தான் நீங்க போகணும்” என்று அஸ்மத் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார்.
அடிக்கிற வெயிலுக்கு ரோஷ்மில்க் இதமாகத் தான் இருந்தது. குடித்து முடித்து அவர்களிடமும் விடைபெற்றாள் இதன்யா.
“ஞாயித்துகிழமை உங்களுக்கு ஃப்ளைட்னு முபீ வாப்பா சொன்னாங்க… அவங்களே உங்களை கார்ல கொண்டு போய் தூத்துக்குடில விட்டுடுவாங்க”
இதன்யா பொடிநடையாக நடந்து போலீஸ் குவாட்டர்சை நோக்கி சென்ற போது ராக்கி பேருந்துக்காக காத்திருப்பது கண்ணில் பட்டது.
“எங்க போற ராக்கி?” என்றவளிடம்
“பத்ராவ பாக்க போறேன்” என்றான் அவன்.
“பத்ரா திருவனந்தபுரம் ஜூக்குப் போயிட்டானே”
“அங்க தான் போறேன் மேடம்.. அங்க இருக்குற ஆபிசர் ஒருத்தர் கிட்ட மகேந்திரன் சார் பேசி பெர்மிசன் வாங்கி குடுத்தாங்க… எனக்குனு வேற யார் இருக்காங்க? அவன் மட்டும் தானே இருக்கான்… அதான் அடிக்கடி போய் பாத்துக்கலாம்னு”
ராக்கியைப் பார்க்கையில் பரிதாபம் பிறந்தது இதன்யாவுக்கு. அண்ணன் செய்த குற்றங்களுக்கு வருங்காலத்தில் இவனைக் கூட ஊரார் சந்தேகக்கண்ணோடு பார்ப்பார்கள்! அதை எதிர்கொள்ளும் தைரியத்தை காலம் இவனுக்குக் கொடுக்கட்டும்!
“இந்த உலகம் ரொம்ப பெருசு ராக்கி… இங்க யாரையும் கடவுள் தனியா விடுறது இல்ல… உனக்கான உறவு வருங்காலத்துல உன்னைத் தேடி வரும்… அதுவரைக்கும் தைரியமா வாழ கத்துக்க… உன் படிப்பும், உன் தைரியமும் தான் என்னைக்கும் உனக்குத் துணையா நிக்கும்… அப்புறம் இப்ப நீ எங்க தங்கியிருக்க?”
“முருகையா தாத்தா வீட்டுல வாடகைக்குத் தங்கிருக்கேன் மேடம்… ஃபாதர் இல்ல… புதுசா வரப்போற ஃபாதர் என்னை சர்ச் கான்வென்ட்ல தங்கவிடுவாரோ என்னவோனு கலிங்கராஜன் சார் கிட்ட உதவி பண்ணுங்கனு கேட்டேன்… அவர் தான் முருகையா தாத்தா வீட்டுல தங்கிக்க சொன்னார்… வாடகை வேண்டாம்னு சொன்னார்… சும்மா தங்கிக்க எனக்குப் பிடிக்கல… நான் தான் சம்பாதிக்கப்போறேன்ல”
நம்பிக்கையாய் சொன்னவனிடம் பேசிவிட்டு போலீஸ் குவாட்டர்சுக்கு வந்த இதன்யாவை அதன் பின்னர் ப்ராணேஷின் மொபைல் அழைப்புகளும் மயூரியின் மொபைல் அழைப்புகளும் தங்கள் வசம் ஈர்த்துக்கொண்டன.
“நாளைக்கு கமல் சார் எனக்கு ஆப்பிள் ட்ரீல ட்ரீட் வைக்குறார்மா… அதுக்குப் போயிட்டு வந்து தான் பேக்கிங்கை ஆரம்பிக்கணும்”
இதன்யா மயூரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நிஷாந்தின் வீட்டில் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது.
ஏகலைவன் சொன்னபடி நிஷாந்தின் பெயருக்கு அவனது சொத்துக்கள், தொழிலை மாற்றுவது பற்றி பேசுவதற்காக வழக்கறிஞர் மனுவேந்தன் வந்திருந்தார்.
அவர் சொத்து பற்றிய பேச்சை ஆரம்பித்ததும் நிஷாந்தின் முகம் மாறிப்போனது.
“யாருக்கு வேணும் அந்தாளோட சொத்து? என் இனியாவை கொன்னு என்னோட வாழ்க்கைய அழிச்சிட்டுச் சொத்தைக் குடுத்துட்டா சரியா போயிடுமா? அடுத்து என்னனு தெரியாம மூளை குழம்பி நிக்குறேன் நான்.. இந்த நேரத்துல நீங்க வேற என்னை எரிச்சல்படுத்தாதிங்க சார்… எனக்கு யாரோட சொத்தும் வேண்டாம்” என கோபத்தில் கத்தினான் அவன்.
சாவித்திரி அவனை அமைதிப்படுத்த எடுத்த முயற்சிகள் யாவும் வீணாயின.
மனுவேந்தன் நிலமையை அவனுக்குப் புரியவைக்க முயன்றார்.
“இங்க பாருப்பா… உன் காதலியோட இழப்பு குடுத்த வருத்தத்துல இப்ப நீ பேசுற… இந்த இழப்போட தீவிரம் குறையுறப்ப நீ மறுத்தது எவ்ளோ பெரிய விசயம்னு புரியும்… அப்ப நீ வருத்தப்படக்கூடாதுனு தான் ஏகலைவன் சார் யோசிச்சு இந்தச் சொத்தோட பொறுப்பை உன் கிட்ட எப்ப ஒப்படைக்கணும்னு தெளிவா எழுதிருக்கார்… உன்னோட இருபத்து ஐந்தாவது வயசுல தான் இந்த சொத்தும் தொழிலும் உன் கைக்கு வரும்… அது வரைக்கும் ஒரு வெல்விஷரா இருந்து நானும், ஆடிட்டர் சாரும் மத்த போர்ட் ஆப் டைரக்டர்சும் சக்கரவர்த்தி குரூப்சை கவனிச்சுப்போம்… உனக்கு உலகம் புரியல தம்பி… இந்த உலகத்துல நீ சர்வைவ் ஆகி வாழணும்னா காசு வேணும்… அந்தக் காசு உன் கிட்ட இருந்துச்சுனா உன்னால எதை வேணாலும் செய்ய முடியும்… பணம் தான் வாழ்க்கைனு நான் சொல்லமாட்டேன்… ஆனா பணம் இல்லாம வாழமுடியாது… இதை நீ புரிஞ்சிக்கிட்டுத் தான் ஆகணும்… உன் கிட்ட இப்ப ஒப்படைக்கப்போறது சக்கரவர்த்தி குரூப்ல இருக்குற ஏகலைவன் சாரோட ஷேர்ஸ் மட்டும் தான்… சார் கிரிமினல் அஃபென்ஸ்ல அரெஸ்ட் ஆனதால அவரால இனிமே கம்பெனியோட சேர்மனா தொடர முடியாது… அவரோட ஷேர்சை உனக்கு மாற்றித் தர்றது மூலமா நீ சக்கரவர்த்தி குரூப்ல நிறைய ஷேர் வச்சிருக்குற டைரக்டரா அப்பாயிண்ட் பண்ணப்படுவ… நீ கை காட்டுற ஆள் சேர்மன் ஆவாங்க… அவங்க வேலையில தில்லு முல்லு செய்யாம பாத்துக்க நானும் ஆடிட்டர் சாரும் இருக்குறோம்… நீ ஓ.கே சொன்னா மட்டும் போதும்”
மனுவேந்தன் இவ்வளவு தூரம் சொன்னதும் நிஷாந்த் தன் தாயாரின் முகத்தைப் பார்த்தான்.
“ஒப்புக்கொள்” என்று சொல்லாமல் சொன்னது சாவித்திரியின் வதனம்.
தனக்காக இத்தனை நாட்கள் ஓடிய கால்களுக்கும், உழைத்த கரங்களுக்கும் ஓய்வளிக்க விரும்பினான் நிஷாந்த். அன்னையின் வேண்டுகோளுக்காக சக்கரவர்த்தி குழுமத்தில் ஏகலைவனுக்கு இருக்கும் பங்குகளை பெற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்தான்.
மனுவேந்தன் மகிழ்ச்சியுடன் கிளம்பியதும் மகனிடம் வந்தார் சாவித்திரி.
“சில காயங்களைக் காலம் ஆத்தும்… சில காயங்களை போதை ஆத்தும்… உழைப்பை விட சிறந்த போதை வேற எதுவுமில்லனு உங்கப்பா அடிக்கடி சொல்லுவார் நிஷாந்த்… நீ உழைக்க ஆரம்பி… அது குடுக்குற போதையில இனியா மரணம் குடுத்த காயத்தோட வேதனை குறையும்… காலப்போக்குல அந்தக் காயமும் ஆறும்… அம்மா சொன்னா கேப்பல்ல?”
“கேப்பேன்மா” ஏகலைவனின் இடத்துக்குத் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள உழைக்கத் தயாரானான் நிஷாந்த்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

