உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஆண்களை விட பெண்கள் ஏன் சமூக விரோத செயல்களிலும், குற்ற செயல்களிலும் குறைவாக ஈடுபடுகின்றனர் என்பதை பற்றி ஆராய்வது சுவாரசியமாக இருக்கக்கூடும் என்கிறார் அன்னா சான்ஸ் கார்சியா. இந்தக் காரணங்களைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் அரைகுறையாக நின்று போயிருந்தாலும் சமீபத்தில் ஃப்ரான்சில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் சாத்தியமான பதிலொன்று கிடைத்திருக்கிறது. சைக்கோபதி என்ற உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நட்புணர்வின்மை, ஜடத்தன்மை ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட ஆண்களிடம் இந்த உணர்வு குறைவு. அதே போல வன்முறை மற்றும் சமூக விரோத செயல்களை செய்யும் மோசமான நடத்தை போன்றவற்றை பெண்கள் ஆண்களைவிட குறைந்த சதவிகிதத்தில் வெளிப்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
-An article from BBC
பொன்மலை காவல்நிலையம்…
நேரம் போக போக ரோஷண் தனியே புலம்புவது அதிகரித்தது. ரைட்டரும் கான்ஸ்டபிளும் அவனை அமைதியாக இருக்கும்படி மிரட்டிப் பார்த்தார்கள்.
“டேய் சும்மா இருக்கமாட்ட? அந்தப் பொண்ணைக் கொலை பண்ணுன குற்றவுணர்ச்சில பினாத்துறியா? நாளைக்கு டெஸ்ட் ரிசல்ட் வந்துடும்… அதுக்கு அப்புறம் இருக்கு உனக்கு” என்ற கான்ஸ்டபிள் லாக்கப் கம்பியில் லத்தியால் அடிக்க ரோஷணின் கவனம் அவரிடம் திரும்பியது.
இன்னும் அவனது வியர்வை நிற்கவில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சார்! உள்ள இனியா நிக்குறா… அவ கிட்ட சொல்லுங்க, நான் அவளைக் கொலை பண்ணல… அவளைக் கொன்னது சாத்தான்… அது இப்ப என்னையும் சாகச் சொல்லிருக்கு… என்னை நம்புங்க சார்” என்று கதறினான் அவன்.
“போதும்டா உன் நடிப்பு… ஒழுங்கா உள்ள போய் உக்காரு… இன்ஸ்பெக்டர் வந்ததும் உன்னைக் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிப்பாரு”
கான்ஸ்டபிள் அங்கிருந்து போய்விட ரோஷண் யாருமற்ற லாக்கப்பை சுற்றி சுற்றி பார்த்தான்.
திடீரென அவனது காதில் “உன் நேரம் முடிஞ்சு போச்சு… நீ கிளம்பு” என்று யாரோ கர்ணகொடூரமாகக் கத்தினார்கள்.
போதாக்குறைக்கு இனியா வேறு குரூரமாகச் சிரித்து “வா என் கூட வந்துடு” என்று இரு கைகளையும் நீட்டினாள்.
ரோஷணின் கண்கள் மாத்திரை கவரைத் தேடியது. லாக்கப்பின் ஒரு ஓரமாய் போய் கிடந்தது அது. ஓடிப்போய் அதை எடுத்தவன் அதற்குள் இருந்து கட்டைவிரல் அளவே உள்ள ஹாக்ஷா ப்ளேடு ஒன்றை எடுத்தான்.
“அதை வச்சு உன் மணிக்கட்டு நரம்பை அறுத்துடு”
கொடூரமான குரல் காதில் சொன்னதும் “சரி இப்பவே செய்யுறேன்” என்றான் ரோஷண்.
கண்களில் கொடூரம் மின்ன “என் உயிரைச் சாத்தானுக்காக அர்ப்பணிக்குறதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு” என்று சொல்லிவிட்டுப் பைத்தியக்காரனைப் போல சிரித்தான் அவன்.
அவன் கையிலிருந்த ஹாக்ஷா ப்ளேடு துண்டு மணிக்கட்டு நரம்பை முத்தமிட்டது. மென்முத்தத்தில் கோடாய் தெரிந்த உதிரம் அதன் வன்மையான முத்தத்தில் ஊற்றெடுத்து வழிய நரம்பு அறுந்து வேதனை உயிர்போன போது கூட சைக்கோத்தனமாகச் சிரித்தான் ரோஷண்.
“என்னை ஏத்துக்க சாத்தான்” என்றபடி இரு கரங்களையும் விரித்தான் அவன்.
ஒரு கரத்திலிருந்து இரத்தம் வழியும்போது “யோவ் அந்தப் பைத்தியக்காரன் கையை அறுத்துக்கிட்டான்யா” என்ற ஏட்டின் குரல் கேட்டது.
காவலர்கள் பதறிக்கொண்டு லாக்கப்பைத் திறந்துகொண்டு உள்ளே வர “நான் இனியாவ கொலை பண்ணல… சாத்… தான்” என்று ஒருவிரலை எதிரிலிருந்த சுவரை நோக்கி நீட்டியபடி மயங்கிப்போனான் ரோஷண்.
முதலுதவிப்பெட்டியிலிருந்து பஞ்சு துணி எல்லாம் எடுத்து வந்து அவனது மணிக்கட்டு இரத்தத்தை நிறுத்த முயன்றபடி மருத்துவமனைக்கு அவனை ஜீப்பில் ஏற்றினார்கள்.
மருத்துவமனை அருகில் தான். அரசு மருத்துவமனை என்பதால் காவல்துறை சீருடையைக் கண்டதும் தாமதிக்காமல் ரோஷணை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்கள்.
சில நிமிடங்கள் பரபரப்பில் ஓட மார்த்தாண்டனும் மகேந்திரனும் பதற்றத்தோடு அங்கே ஓடிவந்தார்கள். வந்தவர்கள் ரைட்டரிடம் என்னவென வினவ அவரும் நடந்த அனைத்தையும் சொன்னார்.
“அவன் கையை அறுக்குற வரைக்கும் நீங்க என்னய்யா பண்ணிக்கிட்டிருந்திங்க?” என மகேந்திரன் எரிந்து விழும் போது மருத்துவர் வெளியே வந்தார்.
“டாக்டர் அந்த அக்யூஸ்ட்?”
“ஹெவி ப்ளட் லாஸ்… எங்களால காப்பாத்த முடியல”
மார்த்தாண்டனுக்கு இப்போது என்ன செய்வதென ஓடவில்லை.
நாளை உண்மையைக் கண்டறியும் சோதனையின் முடிவு தெரிந்துவிடும் என்ற நிலையில் இப்படி இவன் மரணித்தான் என்றால் என்ன அர்த்தம்?
இவனுக்கு மாட்டிக்கொள்வோமென்ற அச்சம் இருந்திருக்கிறது தானே அர்த்தம்!
காவல் நிலையத்தில் கைதி மரணமடைந்தால் அது அவரது வேலைக்கு ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.
மகேந்திரன் வாயிலாக இச்செய்தி கமலேஷை சென்றடைந்தது. ஆணையரோடு வந்தவர் என்ன நடந்ததென விசாரித்தார். ரோஷண் அடைபட்டிருந்த லாக்கப்பில் கண்டெடுக்கப்பட்ட மாத்திரைப்பட்டியும் ஹாக்ஷா ப்ளேடும் அவனது தற்கொலைக்குச் சாட்சிகளாயின.
அவனது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் முன்னர் ராக்கிக்குத் தகவல் அனுப்பப்பட்டது. ஓடோடி வந்தவன் தமையனின் சடலத்தைப் பார்த்ததும் கதறியழ ஆரம்பித்தான்.
“அம்மா போன மாதிரி நீயும் என்னை விட்டுட்டு போயிட்டியேண்ணா… நீயும் நார்மலா இருந்திருந்தா ஃபாதர் சொல்லுற மாதிரி நம்ம வாழ்க்கை சந்தோசமா இருந்திருக்குமே”
அவனிடம் கையொப்பம் வாங்கிய பிறகு ரோஷணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இச்செய்தி முருகையா வாயிலாக ஊரெங்கும் பரவியது. கலிங்கராஜனின் காதுகளுக்கு இச்செய்தி வந்தடைந்தபோது அவரது மனம் நிம்மதியுற்றது. கிளாராவோ மனதை அறுத்துக்கொண்டிருந்த கவலையைத் தலைமுழுகினாள்.
அவன் வாயைத் திறந்தால் ஊரில் மரியாதையோடு நடமாட முடியாது என கர்வத்தோடு சொன்னானே! இன்று அவனே இல்லாமல் போய்விட்டான் என அமைதியாய் இனியாவின் சடலத்தை ஏகலைவன் தங்களுக்குப் பெற்றுத் தரும் தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
ஆற்றுவார் தேற்றுவாரின்றி கதறிய ராக்கிக்குத் துணையாக பாதிரியார் பவுல் அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டார்.
முருகையா எத்தனை முறை அழைத்தும் கிளம்ப மறுத்துவிட்டார்.
“அந்தப் பயலை பத்தி தெரிஞ்சும் நீங்க இருக்கணுமா ஃபாதர்?” என்றார் ஆதங்கத்துடன்.
“நான் இங்க இருக்குறது ரோஷணுக்காக இல்ல… எப்ப அவன் கர்த்தரை மறுதலிச்சிட்டுச் சாத்தான் பக்கம் போனானோ அப்பவே என்னைப் பொறுத்தவரைக்கும் அவன் இறந்துட்டான்… என் அளவுக்கு ராக்கிக்குப் பக்குவம் இல்ல முருகையா… இப்பவும் அண்ணா அண்ணானு அவனையே நினைச்சு அழுறான்… பாவம், சின்னப்பையன்… துணையா யாரும் இல்லனு அவன் தப்பான முடிவு எதையும் எடுத்துடக்கூடாதுல்ல?”
பாதிரியார் பவுலின் பேச்சிலிருந்த நியாயம் புரிந்து முருகையா அவருக்கும் ராக்கிக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் தன் வீட்டுக்குக் கிளம்பினார்.
அவர் கிளம்பி சிறிது நேரத்தில் ராக்கியைச் சாப்பிட வைத்த பவுல் “நீ அழுது உன் உடம்பைக் கெடுத்துக்காத ராக்கி” என்றார் ஆதுரத்துடன்.
அவன் கண்ணைத் துடைத்துக்கொண்டான்.
“என்னால கடைசியா ஒரு தடவை என் அண்ணனை பாக்க முடியலையே ஃபாதர்… நான் மருந்து கொண்டு வருவேன்னு சொல்லியிருந்தேன்… அதுக்கு முன்னாடி யாரோ நான் அனுப்புனதா சொல்லி அண்ணனுக்கு மாத்திரையைக் குடுத்திருக்காங்க… அந்த மாத்திரை ஹெவிடோஸ்… சில குறிப்பிட்ட சூழல்ல மட்டும் தான் அதை சாப்பிடணும்னு அண்ணனுக்குக் கவுன்சலிங் குடுத்த டாக்டர் சொன்னாங்க…. அதை சாப்பிட்டா படுத்து ரெஸ்ட் எடுக்கனும், இல்லனா புத்தி எங்கங்கயோ போயிடும்னு வார்னிங் கூட குடுத்தாங்க… அந்தாளு மாத்திரைய மாத்துனதோட ஹாக்ஷா ப்ளேடையும் குடுத்துட்டுப் போயிருக்கான்… யோசிக்க யோசிக்க ஏதோ சதி மாதிரி தோணுது ஃபாதர்”
பாதிரியார் பவுல் பொறுமையாக அவனது பேச்சைக் கேட்டார்.
“அடாப்சி முடிஞ்சதும் எல்லாம் வெட்டவெளிச்சமாயிடும்… டோண்ட் வொரி ராக்கி”
ஆறுதல் சொல்லி அவனைத் தன்னோடு வீட்டுக்கு அழைத்துச் சென்றவர் மறுநாள் காலையில் ராக்கியோடு மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.
பிரேத பரிசோதனை முடிந்து ராக்கியிடம் ரோஷணின் உடல் கொடுக்கப்பட்டது. அவனது மரணத்திற்கான காரணம் தற்கொலை என்று குறிப்பிடப்பட்டிருந்தது அறிக்கையில்.
ராக்கி சொன்னது போல மன அழுத்தத்திற்கான ஹெவி டோஸ் மாத்திரையை உண்டதால் அவனுக்கு ‘ஹலூசினேசன்’ உருவாகியிருக்கலாம் என்றார் மருத்துவர். லாக்கப்பிற்குள் இனியா இருப்பதாக ரோஷண் சொன்னதாக கான்ஸ்டபிளும் ரைட்டரும் கூறியிருந்தனர்.
எல்லாம் மாயத்தோற்றம் என்றவர் இனி மார்த்தாண்டனின் வேலைக்குத் தான் ஆபத்து என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அவரது அதிகாரத்திற்குட்பட்ட காவல்நிலையத்தில் அவருடைய கஷ்டடியில் இருந்த குற்றவாளி ஒருவன் தற்கொலை செய்திருக்கிறான். அதுவும் கடுமையான மனச்சிதைவுக்கு ஆளானவனாக. இதற்கெல்லாம் தன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படுமோ என யோசித்து நொந்து போனவருக்கு இனி இனியாவின் வழக்கின் நிலை என்ன என்பது புரியாத புதிரானது.
ராக்கியும் பாதிரியாரும் ரோஷணின் பிணத்தை பொன்மலைக்குக் கொண்டு போய் தகனம் செய்யலாமென நினைத்திருக்க ஊர் எல்லையில் கலிங்கராஜன் தலைமையில் ரோஷணின் சடலம் ஊருக்குள் வரக்கூடாதென பொன்மலைவாசிகள் மறித்து நின்றார்கள்.
“அவன் எப்பிடிப்பட்டவனாவும் இருந்திருக்கலாம்… ஆனா இப்ப அவன் உயிரோட இல்ல… தயவு செஞ்சு வழிய விடுங்க” என்று பாதிரியார் கெஞ்சியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

ராக்கியின் கண்ணீரும் அவர்களுக்கு இளக்கம் உண்டாக்கவில்லை.
“இந்தக் கொலைகாரப்பாவியால என் மக செத்துப்போயிருக்கா ஃபாதர்… இன்னும் அவ சடலத்தைக் குடுக்கமாட்டோம்னு சொல்லி போலீஸ் பிடிவாதம் பிடிக்காங்க…. என் பொண்ணு ஒரு ஈ எறும்புக்குக் கூட துரோகம் நினைக்காதவ… அவளுக்கு இந்த நிலமை வரக் காரணமானவனுக்கு மட்டும் ஈமக்கிரியை சரியானபடி நடக்கணுமா?” என்று கொதித்தெழுந்தார் கலிங்கராஜன்.
பாதிரியார் பவுல் ரசூல் பாயையும் ஏகலைவனையும் மத்தியஸ்தம் பேச அழைத்தார்.
இருவருமே ரோஷணின் சடலத்தை ஊருக்குள் கொண்டு வருவது சரியல்ல என்று தான் கூறினர். மருத்துவமனை அருகே இருக்கும் மின்மயானத்தில் அவனுக்கு அந்திமக்கிரியை செய்து எரிப்பதே சிறந்தது என்றார்கள் இருவரும்.
“அவனே போய்ட்டான் ஃபாதர்… இதுக்கு மேல நம்ம ஏன் ஆர்கியூ பண்ணனும்? பாயும் சாரும் சொல்லுற மாதிரி செஞ்சிடுவோம்” என்று ராக்கியே நொந்து போய் கூறிவிட ரோஷணின் உடல் மருத்துவமனைக்கு அருகேயுள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது,
முந்தைய நாள் வரை தான் கொலையாளி இல்லை என்று சொன்னதையே சொல்லி காவல் நிலையத்திலுள்ள அனைவரையும் எரிச்சலூட்டியவன் பிடி சாம்பலாக மாறிப்போனான்.
மெய்யான தலைவலி ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கையில் மார்த்தாண்டனும் மகேந்திரனும் அதையறியாதவர்களாக ரோஷணிடம் நடத்தப்பட்ட உண்மையைக் கண்டறியும் சோதனையின் முடிவை அறிய எஸ்.பியைச் சந்திக்கக் கிளம்பினார்கள்.
எஸ்.பி.கங்காதரன் சென்ட்ரல் ஃபாரன்சிக் சயின்ஸ் லேபரட்டரியின் சென்னைப்பிரிவு அதிகாரிகள் தங்களிடம் தாக்கல் செய்த அறிக்கையை முழுவதுமாக வாசித்துவிட்டு அதிருப்தியோடு மார்த்தாண்டனிடம் நீட்டினார்.
மார்த்தாண்டன் முழுமையான நம்பிக்கையோடு அந்த அறிக்கையை வாங்கி படித்தவர் அதில் சொல்லப்பட்ட முடிவைப் படித்ததும் அதிர்ந்து போனார்.
ஏனெனில் உண்மையைக் கண்டறியும் சோதனை இரண்டிலும் ரோஷண் சொன்ன எதுவுமே பொய்யில்லை என முடிவு வந்திருந்தது. அவன் இனியாவைக் கொலை செய்திருக்க அந்தச் சோதனையின் அடிப்படையில் எவ்வித வாய்ப்புமில்லை என அறுதியிட்டுக் கூறியிருந்தனர் அதிகாரிகள்.
கொலை செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவன் ஏன் திடீரென தற்கொலை முடிவுக்கு வந்தான் என்பதே இப்போது மார்த்தாண்டனை சிக்கலுக்குள்ளாக்கிய கேள்வி.
“ஒரு விசாரணை கைதிக்கு வெளிய இருந்து சாப்பாடு, மருந்து வர்றப்ப சோதிச்சு அனுப்ப வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரியோட கடமை.. நீங்க அந்தக் கடமைய செய்யல மார்த்தாண்டன்… இது வரைக்கும் இந்தக் கேஸ்ல நீங்க சந்தேகப்பட்ட ரோஷண் எந்தத் தப்பும் செய்யாதவன்னு ப்ரூவ் ஆகியிருக்கு… இப்ப நம்ம டிப்பார்ட்மெண்ட் ரோஷணோட மரணத்துக்காக விசாரணை கமிசன் வச்சா உங்க மேல ஆக்சன் எடுக்க வேண்டிய தர்மசங்கடமான சூழல் கூட வரலாம்… எதுக்கும் நீங்க உங்களைத் தயாராக்கிக்கோங்க மார்த்தாண்டன்”
எஸ்.பி தனது முடிவைச் சொன்னதும் மார்த்தாண்டனோடு மகேந்திரனும் சோகம் கப்பிய வதனத்தோடு அங்கிருந்து வெளியேறினார்.
வேலை பற்றிய கவலை ஒருபுறம் இருந்தாலும் மார்த்தாண்டனின் மனதை அரித்துக்கொண்டதென்னவோ இனியாவின் வழக்கில் யார் குற்றவாளி என்ற கேள்வியே! கையில் சிக்கிய ஒருவனும் தவறு செய்யாதவன் ஆகிவிட எங்கே மறைந்திருக்கிறான் அந்தக் குற்றவாளி என்றெண்ணி தவித்துப்போனார் அவர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

